அனுபவம்: அந்தகக்கவிப் பேரவையின் இணையவெளிக் கூட்டம் - சேதுபாண்டி

        அந்தகக்கவிப் பேரவை ன்ற பார்வையற்றவர்களால் ஆன இலக்கிய அமைப்பு 28.08.2016 முதல் ஒவ்வொரு மாதமும் இலக்கியக் கூட்டங்கள் நடத்திவருகிறது.  இடையிடையே இயற்கைச சீற்றத்தாலும், தவிர்க்க முடியாத காரணங்களாலும் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன. சில நேரங்களில் ரத்துச் செய்யவும் வேண்டியிருந்தது.
        கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி நடைபெற வேண்டிய கூட்டம் கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் நடத்த இயலாமல் போனது. அதனைத் தொடர்ந்து மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தச சூழலில் ஏப்ரல் 5ஆம் தேதி வாட்ஸப் குழு மூலம் கூட்டத்தை நடத்தலாம் என்று சிந்தித்துக்கொண்டிருந்தோம்.
        எதேச்சையாக பேராசிரியர். முனைவர். முருகானந்தன் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தது, பேரவையின் கூட்டத்தை வாட்ஸப் அல்லது ஸ்கைப்பில் வைக்கலாமா என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறோம் சார் என்று கூறினேன். உடனே அவர் நல்லது சார். இடைவிடாது நடத்திவிட எண்ணும் பேரவையின் முயற்சிக்கு வாழ்த்துகள் என்று கூறி, தற்போது ஜூம் (zoom) என்ற க்லௌட் மீட்டிங் பெரிய அளவில் பயன்பாட்டில் வளர்ந்து வருகிறது சார். நீங்கள் வேண்டுமென்றால் அதனை முயற்சித்துப் பாருங்கள் என்று கூறி அதன் சிறப்புகளையும் எடுத்துரைத்தார்.
        நண்பரின் பரிந்துரைப்படி செயலியைச் செல்பேசியிலும், கணினியிலும் நிறுவினேன். அந்தகக்கவிப் பேரவையின் நிறுவன உறுப்பினர்களோடு இதன் சிறப்பம்சம் குறித்து கலந்துரையாடப்பட்டது. பொதுவாக புதிய தொழில்நுட்பத்திற்குள் செல்வதற்கு முன் எழும் அச்சம், தயக்கம் சிலரிடையே வந்து சென்றது. கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற நோக்கம் அனைவரையும் ஆற்றுப்படுத்திச் செயலியில் செயல்பட செய்தது. ஜூம் கணக்கில் உள்நுழைவதிலும், பயன்படுத்துவதிலும் சிறு சிறு சிக்கல்கள் வந்து சென்றது. தொடர் முயற்சியால் மாதிரி கூட்டங்கள் நடத்தி பார்த்தோம். மட்டற்ற மகிழ்ச்சி மேலோங்கியது. தொடர்ந்து நடத்தப்பட்ட மாதிரி கூட்டங்கள் சிறு சிறு ஐயங்களைத் தெளிவுபடுத்தியது.

பேரவையின் 42ஆம் கூட்டம்
graphic பிரேயிலில் அந்தகக்கவி என எழுதப்பட்டிருக்கும் அந்தகக்கவி பேரவையின் சின்னம்

        அறிவித்தபடி ேரவையின் 42-ஆவது கூட்டம் 05.04.2020 ஞாயிற்றுக் கிழமை காலை தொடங்க இருந்த நிலையில், பேரவையின் தலைவரான, தமிழ் விரிவுரையாளர். பிரதீப் அவர்கள், கூட்டம் நடைபெறும்பொழுது செல் பேசியில் அழைப்பு வந்தால் என்ன செய்வது?” என்ற ஐயத்தை எழுப்பினார். இந்தச சிக்கல் குறித்து ஏற்கனவே அழைப்பு நிறுத்தம் (call barring) செய்து வைத்திடலாம் என்று கலந்துரையாடலில் குறிப்பிடப்பட்டது. ஆனால் அதனைச் செயல்படுத்திப் பார்க்கவில்லை. எனவே தலைவரின் நினைவூட்டலைத் தொடர்ந்து பேராசிரியர் முருகானந்தன் அவர்களைத் தொடர்புகொண்டு செய்தியைத் தெரிவித்தேன். அவர் உடனே செல்பேசியில் அழைப்பு நிறுத்தம் செய்வது எப்படி என்ற வழிமுறைகளைக் குரல் பதிவு செய்து வாட்ஸப் மூலம் அனுப்பினார். அதனை உடனே பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பகிர்ந்துவிட்டு கூட்டத்திற்கான அழைப்புப் பகிரப்பட்டது.
        பங்கேற்பாளர்கள் அழைப்பிற்கான தொடுப்பினைச் சொடுக்கியோ அல்லது கூட்டத்திற்கான எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்தோ கூட்டத்தில் இணையலாம். இந்த நிலையில் பங்கேற்பாளர்கள் கூட்டத்திற்கான ஜூம் அரங்கில் இணையும் பொழுது வ்வொருவரது பெயரும் அவர் காத்திருப்பு அறையில் இருக்கிறார் என்றும் அறிவிப்பு வந்தது. பங்கேற்பாளர்களின் குரல் கேட்டதும் ஆவலோடு வரவேற்க காத்திருந்த எனக்கு மிகுந்த குழப்பம் ஏற்பட்டது. காரணம் நாங்கள் மாதிரி கூட்டம் நடத்திய போது காத்திருப்பு அறை (Waiting room) என்ற சிறப்பு அம்சம் இல்லாமல் இருந்தது. ஜூமின் எல்லா இடத்திலும் தேடினேன். ஓரிடத்தில் அட்மிட் ஆல் என்ற  ஆப்ஷன் வந்தது. உடனே எண்டர் தட்டினேன் அனைவரது குரலையும் ஜூம் அரங்கில் கேட்க முடிந்தது. அப்பாடா! என்ற பெருமூச்சுடன் நிம்மதியானேன்.
        ஏற்பட்ட சிரமத்தை அரங்கில் பகிர்ந்த போது முருகானந்தன் ஐயா நேற்றே இந்த அப்டேட் வந்துவிட்டதே! நீங்கள் பார்க்கவில்லயா?’ என்று கேட்டார். அப்போதுதான் நினைவிற்கு வந்தது ஜூம் மென்பொருளை ஓப்பன் செய்யும்போது you have new update என்ற அறிவிப்பு வந்ததும் வழக்கம் போல் update later என்ற ஆப்ஷனைத் தெரிவு செய்து உள்ளே வந்ததும். ஆனாலும், இன்று காலை சிறிது நேரம் ஜூம் செயலி செயல்படாமல் நின்றுவிட்டது. அப்போது மறுதுவக்கியதில் (restart) து புதுப்பிக்கப்பட்டிருக்கவேண்டும்.
        கூட்டம் வெற்றிகரமாக 10.45 மணி அளவில் தொடங்கியது. ஆளுமை அறிவோம், நூல் அறிமுகம், தமிழ்ச்சுவை, ஆய்வுக்கட்டுரை பகிர்வு அதன் மீதான விவாதம் என்ற முறையில் கூட்டம் வழக்கம் போல் நடைபெற்றது. பேரவையின் அனைத்துக் கூட்டங்களும் ஒலிப்பதிவு செய்யப்படும் என்பதால் ஜூமின் சிறப்பு அம்சங்களுள் ஒன்றான ஒலிப்பதிவு செய்யும் ஆப்ஷன் மூலமாக கூட்டம் முழுமையும் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. ஆடியோ, வீடியோ  இரண்டும் ஒருசேர பதிவு செய்யப்படுவது கூடுதல் சிறப்பு. நாங்கள் பயன்படுத்தியது ஜூமின் அடிப்படைத் திட்டம் என்பதால் இதில் நாற்பது  நிமிடத்திற்கு ஒரு முறை கூட்டம் துண்டிக்கப்பட்டுவிடும். எனவே கூட்டத்திற்கான அழைப்பை மீண்டும் பகிர்ந்து பங்கேற்பாளர்கள்  இணைந்தவுடன் கூட்டத்தை நடத்த வேண்டி இருந்தது. இதனால் கூட்டத்திற்கான அழைப்பை நானும் முருகானந்தன் வர்களும் மாற்றி மாற்றி  பகிர்ந்து கூட்டத்தை நடத்தினோம்.
        இணைய வழியில் கூட்டம் நடத்தப்பட்டதால் பேரவைக்கு நேரடி அறிமுகமில்லாத தொலைதூர நண்பர்களும் பங்கேற்று சிறப்பித்தனர். அனைவருடைய ஒத்துழைப்பாலும் இணையவழி கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.
        எந்தச சூழலிலும் பார்வையற்ற சமூகம் தன் நிலையில் இருந்து ஒரு படி முன்னேறிச செல்லத தவறுவதில்லை. இந்தக் கொரோனாவின் கோரத் தாண்டவத்திலும் பல நிலைகளில் முன்னெடுப்புகளை மேற்கொண்டு முன்னேறிச செல்லும் பார்வையற்றோர் தொழில்நுட்பத்திலும் மற்றவருக்கு இணையாக வளர்ந்து வருகிறோம் என்பதற்கு இந்த ஜூம் கூட்டம் சிறு சான்றாகிறது.

ஜூம் சிறப்பம்சங்கள்
*செல்பேசி கணினி இரண்டிலும் பயன்படுத்தலாம்.
*பேசிக் ப்லானில் 100 நபர்கள் வரை கூடலாம்.
*பேசிக் ப்லானில் 40 நிமிடத்திற்கு ஒரு முறை கூட்டத்தைப் புதிதாகத் தொடங்க வேண்டும்.
*ஆடியோ, வீடியோ எவ்வகையிலும் கூட்டத்தை நடத்தலாம்.
*ஆடியோ, வீடியோ எவ்வகையில் கூட்டம் நடத்தப்படுகிறதோ அதனை அப்படியே பதிவு செய்யலாம்.
* powerpoint வழங்குவது எளிது.
*ஆடியோ, விடியோ போன்றவற்றை பங்கேற்பாளர்களுக்கு திரையிட்டுக் காட்டும் வசதி உள்ளது.
*அரட்டை வசதி உள்ளது.
*பார்வையற்றோர் ஜூமின் அனைத்து வசதிகளையும் எளிமையாக பயன்படுத்த இயலும்.

ஜூம் எளிய பயன்பாடு குறித்து பார்வையற்றோர் மேலும் அறிந்துகொள்ள
https://mosen.org/zoom/ என்ற வலைத்தளத்தைப் பார்க்கவும்.

ஜூமைப் பதிவிறக்க:
ஆண்டிராயடு: https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings

(கட்டுரையாளர் இந்தியன் வங்கியில் பணியாற்றிவருகிறார். இவரது வலைப்பக்கம் www.sethupandi.blogspot.in)
தொடர்புக்கு: pandiyaraj18@gmail.com

4 கருத்துகள்:

  1. ZOOM மென்பொருளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பல்வேறு ஐயங்களும் கேள்விகளும் எழுப்பப்பட்டு வந்தன. ஆனால் நமக்கு பாதுகாப்பு அம்ஸங்களைக் காட்டிலும் எளிய அணுகல் தன்மையே அவசியம் தேவைப்படுகிறது. அந்த விதத்தில் நாம் தெரிவுசெய்ய அதிக வழிகள் இருப்பதில்லை. ஆனால் தற்போது Zoom செயலியின் பாதுகாப்புக் குறைபாடுகள் சரிசெய்யப்பட்டுவிட்டன என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் GOOGLE MEET போன்ற மாற்று அணுகத்தக்க மென்பொருள்களையும் நாம் சோதித்துப் பார்க்கலாம். எப்படியாயினும் பார்வையற்றோர் தொழில்நுட்ப யுகத்தில் தமக்கான இடத்தை நிறுவ முடியும் என்பதில் ஐயமில்லை!

    பதிலளிநீக்கு
  2. அந்தகக்கவி பேரவையின் கூட்டம் நடத்தப்பட்ட விதத்தை விரிவாக விளக்கிய தோடு மற்றும் அன்றி பார்வையற்றவர் தொழில்நுட்பத்தின் மீது கொண்டிருக்கக்கூடிய அளப்பரிய ஈடுபாட்டையும் விளக்குவதாக அமைந்திருக்கிறது உங்களின் இந்த பதிவு
    அதற்காக பாராட்டுக்கள் உங்களுக்கு

    பதிலளிநீக்கு
  3. உலகிலேயே தமிழ் இலக்கியக் கூட்டத்தை முதன்முதலாக ஜூமில் நடத்திய பெருமைக்குச் சொந்தக்காரர்கள் அந்தகக்கவிப் பேரவையினர். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. பார்வையற்ற மக்களுக்கு புதிய புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் தங்களுக்கு பெரும்பங்கு இருக்கிரது சார்.

    பதிலளிநீக்கு