கவிதை: ரண களத்திலும்….. - ராசுமகன்

கொரோனாவின் கோரத் தாண்டவத்தால்,
கொலை கொலையாய் கொலை செய்யப்பட்டுக்
கொண்டிருக்கின்றனர் மக்கள்!

ஊரடங்கு உத்தரவால்,
ஊரே உறங்கிக் கொண்டிருக்கிறது!
ஆம்புலன்ஸின் அலறல்கள்,
சாலைகளை ஆக்கிரமித்திருக்கின்றன!
காவலர்களின் கால்தடங்கள்,
சிறிய தெருக்களிலும் தெரிகின்றன!
graphic முகக்கவசம் அணிந்தபடி காதல் ஜோடி கட்டி அணைத்தபடி நிற்கின்றனர்

மறுபுறம்....

மண்ணும், மரங்களும் மகிழ்ந்திருக்கின்றன!
வானும், வண்ணக் கடல்களும்
விண்மீன்களோடும், வண்ண மீன்களோடும்
வாய்விட்டுச் சிரிக்கின்றன!
புள்ளினங்களும் புலிகளும் பல்லிளிக்கின்றன!

இவற்றையெல்லாம் பார்த்துப்
பரவசப்பட நினைத்தாலும்,
பாரதம் எங்களை பணி செய்ய அழைக்கிறது!

அலுவலகம் சென்றால்….

கீபோர்டுகளும், மவுசுகளும்
சானிடைசர்களின் வாசத்தில் லயித்திருக்கின்றன!
பேப்பர்களும், பேனாக்களும்
பகுதி நேரமே பணியாற்ற பணிகின்றன!

கோப்புகளும், தேநீர் கோப்பைகளும்
அவற்றின் நீண்ட உறக்கத்திற்கு நடுவே
தொந்தரவு செய்யப்படுகின்றன!
அலறித் துடித்த தொலைபேசிகள்
ஆசுவாசப்பட்டுக் கொண்டிருக்கின்றன!

ஏசிக்கள் இல்லாமலேயே
சர்வர்கள் குளிர்ந்திருக்கின்றன!
மின்வெட்டே இல்லாத போதும் சில
மானிட்டர்கள் மாய்ந்து கிடக்கின்றன!

வீட்டிற்கு வந்தால்…..

சமைப்பதும், சாப்பிடுவதுமே
பிரதானமாகிவிட்டது!
துவைப்பதும், தூங்குவதும்
பகுதிநேரப் பணியானது!

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இல்லாமல்
பொழுதுகள் போய்க்கொண்டிருக்கின்றன!
ஹாட்ஸ்டாரும் யூடியூபும்
ஓடி ஓடி ஓய்ந்துவிட்டன!

வீடியோ கேம்களின் அலறல்
வீட்டை நிறைத்திருக்கிறது!
நம்மூர் தாயம் லூடோவாகி லூசாக்கிவிட்டது!
வீடியோ கேம்களில்,
கொரோனாவை விட அதிகம் பேரைக்
கொடூரமாய் கொன்று குவித்தாயிற்று!

பணப்புழக்கம் தடைபடாமலிருக்க
பணியாற்றிக் கொண்டிருப்பவனிடம்
பணப்புழக்கம் இல்லை!

இந்த மாத செலவுக் கணக்கால்
பொருளாதார கனவுகளெல்லாம்
செல்லரித்து விட்டாயிற்று!
ஏற்கெனவே உறவுகளையும், ஊரையும் விட்டு
வெகுதூரம் பயணித்தாயிற்று!

கோடையின் வெக்கையும், வெறுமையுமாய்
நகர்கிறது நாட்கள்!

இவை எதுவும் அறியாமல்,
ஊரடங்கின் உத்தரவுகளை மதியாமல்,
அரசின் அறிவுரைகளை ஏற்காமல்,
கவலைகளையும், காவலையும் கடந்து,
இந்தக் களரியிலும் காதல் செய்ய அழைக்கிறது,
உன் நினைவுகள்!

தொடர்புக்கு: saravananbestintheworld@gmail.com

6 கருத்துகள்:

  1. நீண்ட நாளைக்குப் பிறகு தலை தெரிகிறது என்று பார்த்தால், அப்போதும் நினைவுகள் எங்கோ எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கிறதே.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. அன்றாடம் எதையோ செய்கிறோம் ஆனால் அதில் மனம் லயிக்கவில்லை என்பதை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட கவிதை அருமை. வாழ்த்துக்கள் உங்களுக்கு

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா7 மே, 2020 அன்று 7:18 AM

    அழகான நினைவுகள்

    பதிலளிநீக்கு