கவிதை: கொரோனா - பா. மோகன்

graphic  கொரோனா

அன்பை உலகில் வளர்த்தது கொரோனா!
துன்பப் புயலால் சுருட்டியது கொரோனா!
ஆற்றலின் அவசியத்தை அறிவித்த கொரோனா!
கூற்றுவனாய் வந்த வைரசே கொரோனா!

இயல்பாய் வாழ்ந்த மனித சமூகத்தைப்
புயலென வாரிச் சுருட்டிய கொரோனா!
ஈகை உணர்வை ஊட்டிய கொரோனா!
பாகை முன்னூற் றறுபதும் கொரோனா!

உணர்வினை அழித்துத் திணரச் செய்யும்
குணத்தினால் மனிதனை வருந்தச் செய்யும்
கொத்துக் கொத்தாய் அறுப்போம் பயிர்களைக்
கொரோனா அறுப்பது மனித உயிர்களை

ஊக்கம் கொண்டு எதிர்த்திடும் உலகம்
தாக்கம் நீங்கி வென்றிடும் திலகம்
எந்த மருந்தும் இதற்கு இல்லை
சொந்தத் தனிமையே தவிர்த்திடும் எல்லை

யாவர்க்கும் தனிமை என்பதை எள்ளிய
ஜீவர்க்கே அன்றி யாவர்க்கும் கொள்ளியே
ஏகமாய் தோன்றி, வேகமாய் பரவி,
தாகமாய் உயிரைக் குடித்திடும் கொரோனா!

ஏகாந்தம் ஒன்றே நோயை வெல்ல
ஏற்ற வழியென கண்டோர் சொல்ல
நாகமாய் சீரும் கொரோனாவைக் கொல்ல
தாகமாய்த் தனித்திரு அதனை வெல்ல

ஐயம், அச்சம், அறியாமை விலக்கிடு!
கையைக் கழுவிடு! தொலைவைக் கடைப்பிடி!
முன்னோர் காட்டிய ஆசார நெறியைப்
பின்பற்றி உடைத்திடு கொரோனா வலையை

கன்றைக் காத்திடும் பசுவைப் போல
மன்பதைக் காக்கும் மருத்துவர் குழுவும்,
அரசின் அம்சமாய்க் காப்புப் பணியைச்
சிரமேற் கொண்ட காவலர் சமூகமும்,
மக்களின் உயிர்களைக் காத்திடும் விதமாய்
அக்கறை உள்ள ஆளும் வர்க்கமும்
தக்கதாய் தந்த நெறியினைப் பற்றி
ஒன்றாய் நின்றால் உலகிற்கே வெற்றி!

தனிமையைத் தந்த தமிழ்ப்புத் தாண்டே
நனிபெரும் துன்ப மலையாம் கொரோனா
பனிபோல் விலகிட நோயற்ற வாழ்வும்,
இனிமையும், இதமும் தந்திடு வாயே!

(கவிஞர் பா. மோகன்
 வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர்)
தொடர்புக்கு: mohantamilma@gmail.com

3 கருத்துகள்:

  1. இத்தகைய நெருக்கடி காலம் தந்த படிப்பினைகளை வார்த்தைகளில் உதிர்த்தபடி வடித்த உங்களின் கவிதை அருமை!

    பதிலளிநீக்கு
  2. ஆளும் வர்க்கம் தந்திருக்கும் அல்லது தந்துகொண்டிருக்கும் நெறிதான் நம்மை குழப்புகிறது உடன்பிறப்பே..

    பதிலளிநீக்கு
  3. புதுமுகக் கவிஞராக தங்களது அறிமுகம் இந்த இதழுக்குக் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது அன்பரே! தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்!
    By Celin X.

    பதிலளிநீக்கு