இதழின் ஆசிரியர் கொரோனா குறித்து ஏதாவது எழுதித் தாருங்கள் என்று கேட்டபோது எதுவுமே தோன்றாத நிலையில் குழப்பத்தோடு அமர்ந்திருந்தேன். திடிரென என் மொபைலில் ஒரு பாடலைக் கேட்க நேர்ந்தது. அதில்...
பூங்காற்றே நில்லு! நீ விலகியே நில்லு! பூமேனி பிரிந்தால், நீ தழுவியே செல்லு!^ என்ற வரிகள் எனக்குள் ஒரு காதல் மின்சாரத்தைப் பாய்ச்சத் தவறவில்லை.
ஆஹா! என்ன வரிகள் இவை. காதலின் ஆழத்தை எவ்வளவு அழகாக கூறியிருக்கிறார் கவிஞர்.
காற்றை நிற்கச் சொல்லும் சக்தி காதலுக்கு மட்டுமே உண்டு. அப்படிச் சொல்ல வைக்கும் உரிமை கவிகளுக்கே சொந்தமானது.
ஆம், நானும் சற்றுக்
கொரோனாவைக் காதலிப்பது என முடிவு செய்ததன் விளைவே இக்கட்டுரை. என்ன கொரோனாவுடன் காதலா!
என்று நீங்கள் வியப்பது எனக்குக் கேட்கிறது.
என் காதலின் காரணங்களைக் கூறுகிறேன் பின்பாயினும் எங்களைப் பிரிக்காதிருங்கள்..
அவன் உலகின் ராஜா, சீன தேசத்தவனாகிலும் உலக அழகிகளும், அழகன்களையும் அவன் வழிப் பற்ற மறுப்பதில்லை.
விழியில் விழுந்து, தொண்டை வழி நகர்ந்து நுரையீரல் கவரும் கள்வன் அவன்.
அவனுக்கு ஏற்ற தாழ்வுகள் இல்லை.
ஆண், பெண் பேதம் இல்லை. நல்லவர், தீயவர் பார்ப்பதில்லை. முதலாளி, தொழிலாளி வேறுபாடுகள் இல்லை.
யாவரும் தம் மக்கள்
என்று எண்ணுபவன். எங்கும் அவனது ராஜ்ஜியம்.
காதல் என்றும் சித்திரவதை தான்.
எப்படி தெரியுமா? அதில் சுயநலம் அதிகம் இருக்கும். தனக்கானவர் என்ற உரிமை சற்றுத் தூக்கலாகவே பிரதிபலிக்கும்.
அப்படியெனில் என்னவன் மட்டும் விதிவிலக்கா என்ன?
தனக்கானவர்களைத் தேடும் ஊர்வளத்தில் மனிதர்களை
வாரிக்கொண்டான், தன் மார்பில் ஏந்தி கொண்டான், சிக்கியவர் அவனை உணர்ந்தால் விலகி பிழைக்க வழி உண்டு. அடம் பிடித்து ஆர்பாட்டம் செய்வோரை அவன் ஆசிட் ஊற்றி எரித்தே விடுவான்.
எந்திரன் படத்தில் வருவதைப் போல தன்னைத் தானே உருவாக்கிக் கொள்வான் (புதிய கொரோனாக்கள்). பின் உடல் உறுப்புகளை அடைத்து, தன் செயல்களைத் துவங்கி உடல் உறுப்புகளின் செயல்களை நிறுத்துவான். சர்வாதிகாரி.
சளைக்காமல் இயங்கும் சர்வத்தின் அதிகாரி அவன்.
அவனுக்குள் தேடல் உண்டு;
ஊடல் உண்டு; கூடலும் உண்டு.
மற்றவரை அச்சப்படுத்தியே தன்னை உச்சம் அடைய செய்தவன்.
தனக்குப் பிடித்தவளை,
பிற ஆண்கள் தொடுவதை எந்த காதலனும் விரும்புவதில்லை. ‘விலகி நில்!’ என்ற தாரக மந்திரத்தை நமக்குத் தாரை வார்த்து ஒரு புதிய கலாச்சாரத்தைக் கற்றும் கொடுத்தான்.
அவனது ஊர்வளம் மரண ஓலங்களாய் மாறின. அசராத அரக்கன் அவன், இன்னும் தனக்கானவரைத்
தேடி வாரிக்கொள்ள இதோ!
உலகம் சுற்றுகிறான். அப்பப்பா! இந்த ஆண் ஜென்மங்களுக்குத் தான் எத்தனை..! எத்தனை..! பேராசை.
ஒற்றை உறவோடு அவர்கள் நிற்பதில்லையே!
குடும்பத்திற்குள் இனக்கமானவர்களைத் தனித்திருக்க வைத்தான்.
தடம் புரண்டு தனித்திருந்தவர்களை ஒரே கூட்டிற்குள் அடைத்தும் வைத்தான்.
ஆளும் திறம் கொண்ட அவனை அலட்சியப்படுத்தினால் அக்கினி போல் எழுந்து நிற்பான். மரண பயத்தைக் காட்டிச் செல்வான். தன் சுவடை அங்கு விட்டுச் செல்வான்.
டாஸ்மாக் கடைகளை மூட எத்தனை எத்தனை போராட்டங்கள்,
அரசியல் மௌனங்கள், அப்படியிருக்க
எவருக்குமே கட்டுப்படாத குடிமகன்களைக் கூட மௌனியாய் வந்து மாற்றிவிட்டானே! இந்தச் சூட்சமம் யாருக்குத் தெரியும். மூடப்படாத ஆலயங்கலாக இருந்த டாஸ்மாக்களையும் கூட மூட வைத்த மூளைக்காரன் அவன். அவனுக்கு நிகர் அவனே!
எந்த அரசியல் தலைவர்களையும் அழைக்காமலே தனக்காய் ஓடி வந்து உழைக்க வைத்த கெட்டிகாரன்.
என் காதலுக்குச் சொந்தக்காரன்.
கடவுளின் குழந்தைகளாம் வெள்ளை நிறத்து மக்கள், அவர்களைக்
கூட கருப்பர்களிடம் மண்டி போட வைத்துச், சமத்துவம் கற்றுத் தந்த சமத்துவ வாதி அவன்.
சாதிகள் மறந்து, மதங்கள் கடந்து, மனிதத்தைத் தட்டி எழுப்பிய மண்ணின் மைந்தன். சாதிகள் அற்ற சமூதாயத்தை மூன்றே மாதத்தில் உருவாக்கிய சாதனையாளன்.
உழைப்பின் மகத்துவத்தை உலகம் அறியச் செய்தான். கோலோச்சியவர் கூட குப்பை மேட்டில் என்ற தத்துவத்தை
அலட்டிக்கொள்ளாமல் அசத்தலாய் உணர்த்தியவன்.
கை குலுக்கி, கட்டிப்பிடித்து அன்பு காட்டிப், பின் me too என்று புலம்புவதைத் தவிர். இரு கரம் கூப்பி வணக்கம் எனச் சொல். என்ற போதனையைப் பசுமரத்தாணி போல் பதியச் செய்து,
ஈகை தான் என்றும்
உவகை தரும் என ஓதிய மகா வைரஸ் கொரோனா.
வாழ்க்கையின் அனைத்துத் தத்துவங்களையும் மரணம் என்ற ஒற்றை வார்த்தையில் அடக்கி மந்திரமாக நம் அனைவரையும்
உச்சரிக்க வைத்து, ‘வாழ்க்கை வாழ்வதற்கே. அதில் கட்டுப்பாடுகள் தேவை. தனிமனித ஒழுக்கம் அவசியம். தனிமனித சுதந்திரம் பிறரைப் பாதிக்கக் கூடாது’ என உணர வைத்த அவன்; சேமிப்பின் அவசியம்,
சுகாதாரத்தின் சுவாரசியம் என அனைத்தையும் கற்றுக்கொடுத்து வியந்துகிடக்கும் நம்மைக் கண்டு விலகி நின்று நகைக்கிறான்.
“இயற்கையை நேசி,
பிற உயிர்களைப் பாதுகாத்திடு,
மீண்டும் பழமைக்குச் செல்,
முதியோரைக் காப்பாற்று” எனச் சொல்லிச் சொல்லி அலுத்துப் போன அவனுக்கு இன்னும் உண்மை காதல் கிட்டவில்லை போலும்..
மேலும் விரைகிறான் உலகச் சுற்றுப்பயணத்தில். ஒற்றைக் காதலிலும் அவன் தேடல் தீரவில்லை. இலட்சம் மரணங்கள் கூட அவன் தாகத்தை ஏனோ தணிக்கவில்லை.
இதோ!
விரைகிறான். வியக்கிறேன்.
அறிவியலின் பல அம்சங்களையும், அபாயங்களையும் அறியச் செய்து புறப்படுகிறான் புயலாக
..
இதோ! என்னையும் தேடுகிறான் உயிரில் கலந்து உறவாட. அவன் என்னை நெருங்கும் வரை, இதோ நான் அவனை கடந்து போக முயல்கிறேன்.
என்னை அவன் மறந்து போக விழைகிறேன்,
இங்கிருந்து மறைந்து போக யாசிக்கிறேன்.
மனதில் அவன் நினைவுகளோடு.
நினைவில் அவன் மீதான காதலோடு!
(கட்டுரையாளர் தஞ்சை பார்வைக் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்).
தொடர்புக்கு:
மேலோட்டமாகவும் முரண்பாடுகளுடன் எழுதப்பட்டிருந்தாலும் சில நல்ல சிந்தனைகள் உங்களின் கட்டுரை அமைந்திருக்கிறது வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குOod
நீக்குகொரோனாவுடனான காதலைச் சொல்கிறேன் பிறகேனும் பிரிக்காது இருங்கள் எனத் துவக்கத்தில் சொல்லிவிட்டு இறுதியில் உங்கள் காதல் கொரோணா கண்டு பயந்து ஓடி ஒளிவது உங்களுக்கே முரண்பாடாக தோன்றவில்லையா?
பதிலளிநீக்குகட்டுரையின் உள்ளே தந்திருக்கும் ஆக்கபூர்வ சிந்தனைகளுக்கான களமாய் காதலை வைத்த்உத் தடுமாறியது ஏனோ? ஓ! காதல் என்றாலே தடுமாற்றம் தானோ?
பதிலளிநீக்குஉங்களுக்கு ஆன்கள்மீது ஏன் இவ்வலவு வன்மம். எல்லா ஆன்களும் கெட்டவன் கிடையாது. அதேப்போன்று எள்ளா பென்களும் உத்தமிகளும் கிடையாது.
பதிலளிநீக்கு