உலகம்: கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் கருகிய கருணை ஒரு கழுகுப்பார்வை - டாக்டர் S. வரதராஜ்

graphic உலக உருண்டையைச் சுற்றி கொரோனா

               “ஊரடங்கு பிறப்பிக்கப் படுவதற்கு முந்தைய ஒரு நாளில், நான் என் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குத் தொடர்வண்டி வழியாகப் பயணப்பட்டேன்என்னோடு பயணித்த சக பயணி ஒருவர்திடீரென இப்படிக் கூறினார். ‘"தொடர்வண்டியிலிருந்து இறங்குவதற்காக அதன் கதவுகளைத் திறப்பதற்கான பொத்தானைக் கையினால் நான் தொட்டு அழுத்தமாட்டேன்’.  அவர் அப்படிக் கூறியது என்னைச் சற்று சிந்திக்க வைத்ததுஇவர்கள் கொரோனா நோய் பீதியால்தான் இப்படிப் பேசுகிறார்கள் என்பது எனக்கும் தெரியும். நான் என்ன  மற்றவர்களைப் போலவா இருக்கிறேன்எதையும் தொடக்கூடாது, எதையும் தொட முடியாது என்ற ஒரு உலகத்தை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை”. லண்டனைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி ஒருவர் BBC நாளிதழுக்காகப் பேசியதன் ஒரு பகுதி இது.

       மேலும் அவர் இப்படிக் கூறுகிறார். “கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், London வாட்டர்லூ (Waterloo)  நிலையத்தில் இறங்கிய உடனே, பயணச்சீட்டு வழங்கும் கருவியிலே எனது பயண அட்டையை சொருகும் இடத்தை  தொட்டுப் பார்த்துத் தானே என்னால் தெரிந்துகொள்ள முடியும்?  அது இருக்கட்டும்.  அங்கே இருக்கும் சுழலும் மின் படிக்கட்டுகளை  பயன்படுத்தும்பொழுது, அந்தப் படிக்கட்டுகள் மேலே செல்கின்றனவா? அல்லது கீழே செல்கின்றனவா? என்பதை அந்தப் படிக்கட்டுகளின் பக்கவாட்டு கைப்பிடியைப் பிடித்து உணராமல் என்னால் எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? அதுமட்டுமா?  தொடர்வண்டியில் ஏறும் போதும், இறங்கும் போதும் கதவுகள் எவ்வளவு அகலத்திற்கு திறந்திருக்கின்றன என்பதை தொட்டுப் பார்த்து தானே என்னால் உணர முடியும்?” என்று கேட்கிறார் இவர்.

       இன்னும் இவர் கேள்விகள் நீள்கின்றன. இத்தகைய நேரங்களில், பார்வையற்றவனாகிய நான்  ஒரு கழிவறையை எப்படிக் கண்டறிவது? அந்தக் கழிவறையைப் பயன்படுத்திய பிறகு hand wash அல்லது hand sanitizer  போன்ற பொருட்கள் இருக்கும் இடத்தை எப்படித் தேடிக் கண்டுபிடிப்பது?  என்றெல்லாம் என் மனம் சிந்தித்துக் கொண்டிருக்க,  என்னைப் போன்ற மற்ற பார்வையற்றவர்கள் இன்னும் என்னென்ன சிக்கல்களைச் சந்தித்து வருகிறார்களோ? என்றும் சிந்தித்துக் குழம்பிப் போகிறேன்”. இவ்வாறு முடிகிறது இவரது பேச்சு.

       பார்வையற்றோர் உலகின் பல நாடுகளில் பல மூலைமுடுக்குகளில், பட்டித் தொட்டிகளிலெல்லாம் பரவியிருக்கிறார்களே.  எல்லா நாடுகளிலும் எல்லா பார்வையற்றோருக்கும் எல்லா வசதி வாய்ப்புகளும் கிடைத்து விடுகின்றனவா என்ன?  பொருளாதாரத்திலும் மற்ற துறைகளிலும் வளர்ந்த பெரிய நாடுகளிலேயே பார்வையற்றோர் இப்படிப் புலம்பும் போது,  இந்தியாவில் உள்ள பார்வையற்றவர்களுக்குச் செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்துப் பேசுவதற்கு வார்த்தைகள் இல்லை. ஏனெனில்,  இங்கு சொல்லிக்கொள்ளும்  அளவுக்கு வசதிகளும் இல்லை வாய்ப்புகளும் இல்லை.  ஆனால் இவர்களுக்கு எல்லாவற்றையும் செய்து தர வேண்டிய சட்டங்கள் இருக்கின்றனவே! என்று நீங்கள் கூறலாம்.  இத்தகைய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டாலும் முறையாக நடைமுறைப் படுத்தப்படாததால் நமக்கு எட்டாக்கனியாக தான் இன்றுவரை இருந்து வருகின்றன.

       சஜித் அலி ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க பார்வையற்ற நபர். அதிலும் வணிகம் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபடுபவர். லண்டனைச் சேர்ந்த இவர் ஷாப்பிங் சென்றபோது, தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை BBC-யிடம் இப்படிப் பகிர்ந்துகொள்கிறார்.. "சூப்பர் மார்க்கெட்டுக்கு ஒருமுறை சென்று வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.  ஒரு கையில் ஒரு வாரத்திற்குத் தேவையான பொருட்களைத் தூக்கிக்கொண்டு, மறுகையில் வெண்கோலைப் பிடித்தவாறு  ஒரே நேர்கோட்டில் நடப்பது என்பது மிகவும் சவாலான காரியமாகத் தான் இருக்கிறது.
graphic வெண்கோலை பிடித்திருக்கும் கை

ஒரு பல்பொருள் அங்காடிக்குச் சென்று எனக்கு வேண்டிய பொருட்களை எடுத்துத் தருமாறு அந்தக் கடைக்காரர்களிடம் நான் கேட்டபோது,  அங்கிருந்த அனைவரும் உங்களுக்கு உதவத்தான் விரும்புகிறோம். ஆனால் தற்போதைக்கு உங்களுக்கு எங்களால் எந்த உதவியும் செய்ய முடியாதுஎன்று கூறிவிட்டனர்.  இந்தப் பதில் நான் எதிர்பார்த்ததுதான் என்றாலும்,  எனக்கு வேண்டிய பொருட்களைச் சேகரித்துக்கொள்ள வேறு வழி தெரியாமல் அங்கேயே நின்றுகொண்டிருந்தேன். பிறகு அவர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. அவர்களாகவே முன்வந்து எனக்கு வேண்டிய பொருட்களை எடுத்துக் கொடுத்தார்கள். அதுவும் சுமார் 10 நிமிடக்  காத்திருப்புக்குப் பிறகுதான்.

       லங்காஷைர் என்ற பகுதியைச் சேர்ந்த ரியானா பார்கின்ஸன் என்ற 22 வயது மதிக்கத்தக்க பார்வையற்ற பெண்  தனக்கான சுதந்திரத்தை எப்பொழுதுமே மதிப்பவள். அவள் தன் அனுபவத்தைக் கூறும்பொழுது,  இங்கே எண்ணிலடங்காத பிரதான சாலைகள் உள்ளன. ஆனால், அவற்றை கடப்பதற்கான கடவு சாலைகள் (crouse road) தான் இல்லை. இதனாலேயே இங்கு உள்ள கடைகளுக்கு என்னால் தனியாக செல்ல இயலாது.  நான் கடந்த முறை இங்கு வந்தபோது, என் தந்தை என்னை அழைத்து வந்தார்.  ஆனால் இப்பொழுது அவரை அழைத்து வந்தால் என் தாயின் பாதுகாப்புக் கேள்விக் குறியாகிவிடும் என்று கூறுகிறார். குற்றவியல் படிப்பிலும் சமூகவியல் துறையிலும் பட்டங்களைப் பெற்றிருக்கும் இந்தப் பெண்மணி தனது சுய சார்பை உயிர்மூச்சாக கருதுபவர்.  அவரையே இப்படித் தனிமைப்படுத்திப் புலம்ப வைத்துவிட்டது இந்த வைரஸ்.  அவரது புலம்பல் இதோடு நிற்கவில்லை.

       "பெரும்பாலும் எனக்கான பொருட்களைத் தொலைபேசி வழியாகவே தெரிவு செய்து விடுவது எனது வழக்கம்.  பொருட்களைத் தெரிவுசெய்த சில மணித்துளிகளிலேயே அவை என் வீடு தேடி வந்துவிடும். ஆனால் இப்பொழுது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.  சில ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, பொருட்களை அவர்கள் வீடு கொண்டு சேர்ப்பதற்காக பிரத்யேகமாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறவும் செய்கிறார்கள்.  ஆனால் சுட்டுரையில் என்னை தொடர்பு கொண்ட பல பார்வையற்ற நண்பர்களோ,  அப்படிப்பட்ட எந்த ஒரு பிரத்தியேக நேர ஒதுக்கீட்டையும்  எவ்வளவு தேடியும் தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று குறைபட்டுக் கொள்கின்றனர். இத்தகைய காரணங்களினால் இப்போதைய சூழ்நிலையில் என் பெற்றோரோடு சென்று தங்க நானும் நிர்பந்திக்கப்பட்டுள்ளேன். கிடைத்த பொருட்களையெல்லாம் எப்படியாவது, எங்கிருந்தாவது வாங்கி மூட்டை கட்டிக்கொண்டு ஓடும்  நெருக்கடி மிகுந்த ஜன சந்தடிகளுக்கு இடையே, பார்வையற்றவர்கள் தனித்துச் சென்று shopping  செய்வதைக் குறைந்தது அடுத்த ஆறு மாதங்களுக்கு நினைத்துக்கூடப் பார்க்க முடியாது எனக் கருதுகிறேன்" என்கிறார் ரியானா.

       Royal national institute for the blind  என்ற அமைப்பு இங்கிலாந்து நாட்டில்  பார்வையற்றோருக்கான அடிப்படை வாழ்வியல் தேவைகள் மற்றும் தொழில்நுட்பம் குறித்த பணிகளிலும், அது சார்ந்த ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது.  மேற்குறிப்பிடப்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து அந்த அமைப்பின் நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் கூறும்பொழுது, "பல குறைபார்வை உடையவர்களும், முழுவதுமாக பார்வைத்திறன் இழந்தவர்களும் தற்போதைய சூழலில் தாங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை எங்களுக்குத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.  நாங்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு இவற்றை எடுத்துச் சென்றுள்ளோம்.  அவர்களும் இத்தகைய குறைகள் மிக விரைவில் களையப்படும் என்கின்றனர்என்று நம்பிகை தெரிவிக்கின்றனர்..

       பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஊனமுற்றவர்களும், முதியவர்களும் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு, பேரிடர் மற்றும் நோய்த்தொற்றுக் காலங்களில் இவர்களுக்குத் தேவைப்படுகின்ற தனிக்கவனம் மற்றும் கூடுதலாக ஏற்படுத்தித் தர வேண்டிய வசதி வாய்ப்புகள் குறித்த விவாதமும் நடைபெற்றதாக நமக்குச் செய்திகள் வருகின்றன.

       நம்முடைய கவனத்தை  உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா பக்கம் சற்றுத் திருப்புவோம். அமெரிக்காவில் லாங் ஐலேண்ட் (Long island)) என்ற பகுதியில் அமைந்துள்ளது ஒரு ஊனமுற்றோருக்கான காப்பகம்.  இந்தக் காப்பகத்தில் பலவகையான உடல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள்  தங்கவைக்கப் பட்டுள்ளனர். இங்குள்ள 46 மாற்றுத்திறனாளிகளில் 37 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

       மென்ஹாட்டன் (Manhattan)  என்ற இடத்தில் உள்ள மற்றொரு விடுதியில் நோய்த்தொற்றுத் தீவிரமடைந்துள்ளதால், அவசர ஊர்திகள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன. இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ், group homes என்று அழைக்கப்படுகின்ற பலவகைப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்கியிருக்கும் விடுதிகளில்  இந்த வைரஸ் தனது கோரத்தாண்டவத்தை அரங்கேற்றியுள்ளது என்கிறது.  நியூயார்க் மாகாணத்தில்  உள்ள ஊனமுற்றோருக்கான விடுதிகளில் தங்கவைக்கப்பட்டிருந்த 1,40,000நபர்களில் 1,05,000பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். என்று இந்த நாளேடு தெரிவிக்கிறது.  சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் குரூப் ஹோம்ஸ் எனப்படுகின்ற குழு விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ள ஊனமுற்றோர் பொதுமக்களைக் காட்டிலும் அதிக பாதிப்புக்கு உள்ளாகவும், அதிக மரணங்களைச் சந்திக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறுகிறது.  மற்றொரு மிகப்பெரிய வளர்ந்த நாடான பிரான்சிலும் கூட இதே நிலைதான் நீடிக்கிறது.

       அமெரிக்காவின் ஒரு ஊனமுற்றோருக்கான விடுதியின் காப்பாளர் கூறும்பொழுது, "எங்களுடன் இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட பார்வையற்றவர் ஒருவர் இருக்கிறார், அவர் என்னைக் கண்டவுடனேயே கட்டித்தழுவ விரும்புகிறார்.  இவர்களால் அங்குமிங்கும் நடக்காமல் இருக்கவோ, பொருட்களைத் தொடாமல் இருக்கவோ இயலாது.  இவர்களோடு பணியாற்றுகின்ற எங்களுக்குப் பார்வையற்றோர் பின்பற்றவேண்டிய சமூக இடைவெளி குறித்த புரிதலை ஏற்படுத்துவது சற்றுச் சிரமமாகவே இருக்கிறது" எனக் கூறுகிறார்.

       இவையெல்லாம் ஒரு புறமிருக்க, இந்தியாவின் நிலையோ வேறு மாதிரியாக இருக்கிறது.  ஒருபுறம் மேலைநாடுகளில் உயிர்பலி கொத்துக்கொத்தாக விழுந்து கொண்டிருக்க, இந்தியாவிலோ வைரஸின் கொடிய பிடியை விட வறுமையின் கொடிய பிடியில் சிக்குண்டு, பல லட்சக்கணக்கான ஊனமுற்றோர் அரசின் உதவிகள் கிடைக்கப் பெறாமல், அணுவணுவாகச் செத்து மடிகின்றனர்.  இந்த இக்கட்டான நேரத்தில் கைவிடப்பட்ட பார்வைமாற்றுத்திறனாளி வியாபாரிகளையும் மற்ற சிறு, குறு தொழில் செய்பவர்களையும் அரவணைத்து ஆறுதல் கூறி, அவர்களுக்குத் தேவையான பொருள் உதவிகளையும் செய்துவருகிற பல்வேறு சங்கங்களையும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் நாம் தலைவணங்கி வாழ்த்துவோம்.

(கட்டுரையாளர் டில்லி பல்கலைக் கழகத்தின் பகத்சிங் கல்லூரியில் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார்).
தொடர்புக்கு: varadhu.gift@gmail.com

4 கருத்துகள்:

  1. வெளி நாடுகளில் இருக்கக்கூடிய பார்வையற்றவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறித்த உங்களின் கழுகுப்பார்வை சிந்திக்கத் தூண்டியது. வாழ்த்துக்கள் உங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு!
    அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் நிலவும் மற்றொரு மிக முக்கியமான பிரச்சனை வேண்டிலேட்டர்களை யாருக்குக் கொடுப்பது என்பது. அங்குள்ள மருத்துவர்கள் கனத்த இதயத்தோடு தமது இக்கட்டான நிலையினை விவரிக்கின்றனர். ஒரு மருத்துவமனையில் 200 வெண்டிலேட்டர்கள் இருந்தால், 2000 அல்லது அதற்கும் அதிகமான எண்ணிக்கையில் COVID19 நோயாளிகள் கடுமையான சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில், மருத்துவர்கள் யாருக்கு சுவாசக் கருவிகளைப் பொருத்துவது என்பதை முடிவு செய்ய வேண்டும். அப்போது முதியோர், உயிர்பிழைக்க வாய்ப்பில்லாதவர்கள் என பலரை அவர்கள் சுவாசக் கருவி பொறுத்தாமல் விட்டுவிட நேர்கிறது. இந்த முடிவுகளில் கறுப்பினத்தவர், ஊனமுற்றோர் என விளிம்புநிலை நோயாளிகள் பெருமளவில் கைவிட பட வாய்ப்புள்ளது என பல்வேறு ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நல்ல வேலையாக அப்படியொரு நிலை இந்தியாவில் ஏற்படவில்லை, ஏற்பட்டால் இங்கு கைவிடப்படுவோர் பட்டியல் மிக நீண்டதாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்!

    பதிலளிநீக்கு
  3. உலகில் எந்த மூலைக்குப் போனாலும், பார்வையற்றவரின் நிலை ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது என்பதை உணர்த்தியது உங்களின் கட்டுரை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. வளர்ந்த நாடுகளில் மாற்றுத்திரணாளிகள் குறிப்பாக பார்வையற்ற மக்கள் மிகவும் சௌகரியமாக வாழ்வதாக பலர் சிலாகித்து பேசுவதை நான் கேட்டிருக்கின்றேன். ஆணாள் இதுப்போன்ற சூழளில் இந்தியாவில் இருக்கும் நாம் நெரைய அசௌகரியங்களை சந்தித்தாளும். அரசைத் தவிர தன்னார்வலர்களின் உதவிகளால் கொஞ்சம் பாதுகாப்பாகவே இருப்பதாக உனர முடிகின்றது. குறிப்பாக தமிழகத்தில் கருனை கடல் இண்ணும் வற்றவில்லை போலும்

    பதிலளிநீக்கு