அரசியலில் நாம்-10: முனைவர் கு. முருகானந்தன் - ரா. பாலகணேசன்


graphic மக்கள் அதிகாரம்’ அமைப்பின் சின்னம்

சென்ற இதழில் வாசகர்களை இத்தொடரின் வழியாகச் சந்திக்க இயலவில்லை என்பதில் வருத்தம்தான். ஆனாலும், சென்ற இதழ் கொரோனா காலத்தில் பார்வையற்றவகளின் நிலையை விளக்கிய மிக முக்கியமான ஆவணமாகத் திகழ்ந்ததில் பெருமகிழ்ச்சி.
இந்த இதழில்மக்கள் அதிகாரம்அமைப்பில் பணியாற்றிய பேராசிரியர் முருகானந்தன் அவர்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.
பேரா. முருகானந்தன் தற்போது கள்ளக்குறிச்சியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியில் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். ‘பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவைஎன்ற அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர். (பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவை குறித்து தொடரின் இன்னொரு பகுதியில் பார்ப்போம்.)) இவர் நம் இதழைத் தொடர்ந்து படித்துக்கொண்டிருப்பவர்களுக்குத் தனது கட்டுரைகளின் வழியே ஏற்கெனவே அறிமுகமானவர்தான்.

அறிமுகம்
கரூர் அருகில் உள்ள வெள்ளியணை என்ற ஊஇன் அருகே இருக்கும் வலியாம்புதூர் இவரது சொந்த ஊர். அந்த ஊருக்குள்ளும் கூட தனது வீடு இல்லை என்றும், தனியாக ஒரு தோட்டத்திற்குள் தனது வீடு இருப்பதாகவும் குறிப்பிடுகிறார் முருகானந்தன். பள்ளிக்கல்வியை கரூர் அன்பாலயம் பள்ளியில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் படித்து முடித்திருக்கிறார். இளங்கலை ஆங்கிலம் சென்னை மாநிலக் கல்லூரியிலும், முதுகலை ஆங்கிலமும் முனைவர் பட்ட ஆய்வும் புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்திலும் பயின்றிருக்கிறார்.

அரசியல் ஆர்வம்
ஆதார ஆசிரியர்கள் கணேசன் மற்றும் ராஜசேகர் ஆகியோர் தமது பார்வையற்ற மானவர்களுக்கு செய்தித்தாள்களைப் படித்துக் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். பளியில் இவரது தமிழாசிரியர் அறிவழகன் வழியாகப் பெரியார் கொள்கைகள் இவரது செவிகளுக்குள் வந்து சேர்ந்தன. மேலும் அன்பாலயத்தில் படித்த பார்வையற்றவர்களுக்கான ஆதார ஆசிரியராகப் (resource teacher)) பணியாற்றிய திரு. கா. செல்வம் அவர்கள் செய்தித் தாள்களை வாசித்து, சில விவாதங்களைத் தொடங்கிவைத்திருக்கிறார். இவை தான் தனது அரசியல் அறிவின் முதல்படி என்கிறார் முருகானந்தன்.
ஆனாலும், இவை வெறும் தகவல்களாகவே தனக்குத் தோன்றின என்கிறார். கலைஞர் கருணாநிதியின் மீது தனக்குக் கொஞ்சம் ஈர்ப்பு இருந்ததாகவும் தெரிவிக்கிறார்.
 ஒருவேளை தான் பார்வை உள்ளவராக இருந்திருந்தால், இத்தகைய அரசியலை அறிந்துகொள்ளும் வாய்ப்பே தனக்குக் கிட்டியிருக்காது என்றும், கிராமத்துப் பள்ளியில் படித்துவிட்டு ஏதோ ஒரு தொழிலுக்குச் சென்றிருப்பேன் என்றும் இவர் குறிப்பிடுகிறார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் படித்துக்கொண்டிருந்தபோது இந்திய மாணவர் சங்கம் (SFI) மூலமாக மாக்சியச் சிந்தனை தனக்குள் ஊட்டப்பட்டதாகத் தெரிவிக்கிறார். தொடர்ந்து மாக்சிய நூல்களை நிறைய படித்திருக்கிறார்.
அடுத்து பெரியாரிய நூல்களுக்கு வந்த இவர், முதுகலை படிக்கும்போது திராவிடர் விடுதலைக் கழகத்தோடு தொடர்பு ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார். புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள தி..வி. நூலகத்தில் பல முக்கியமான நூல்களைப் படித்த நாட்களை நினைவுகூர்கிறார்.
2009-இல் ஈழப் போர் உச்சத்தில் இருந்தபோது அது தொடர்பான சில கவன ஈர்ப்புப் போராட்டங்களை ஒருங்கிணைத்திருக்கிறார். அச்சமயம் சீமான் பேசிய தமிழ் தேசியம் மீதும் தனது கவனம் குவிந்ததாகக் குறிப்பிடுகிறார்.
ஆய்வுப் பணியின் போதுதான் மக்கள் அதிகாரத்தை வந்தடைந்திருக்கிறார். அவர்களதுஅசுரகானம்பாடல் தொகுப்பை  இவரது ஆய்வு நெறியாளர் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து இயக்கத்தினருடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்ட இவர், பல்கலைக் கழகத்தில் ஆய்வு மாணவராக இருந்துகொண்டே செயல்பட்டிருக்கிறார்.

மக்கள் அதிகாரம்
இது ஒரு மாக்ஸிய, லெனினிய அமைப்பு. புரட்சியே மக்களை நல்வாழ்விற்கு இட்டுச் செல்லும் என்று கருதும் இவ்வமைப்பு மக்களை முதலில் புரட்சிக்குத் தயார்படுத்தவேண்டும், அதற்கான விழிப்புணர்வை அவர்களுக்கு ஊட்டிட வேண்டும் என்ற நோக்கத்தில் இயங்கும் மக்கள் திரள் அமைப்பு இது. புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புரட்சிகர ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம், அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் முதலியவை இவ்வமைப்பின் சார்பு அமைப்புகள்.

மக்கள் அதிகாரத்தில் முருகானந்தன்
2011-இலிருந்து மக்கள் அதிகாரத்தோடு நேரடித் தொடர்பை ஏற்படுத்தியிருக்கிறார் முருகானந்தன். பல்கலைக் கழக மாணவர்களுக்கான பல பிரச்சனைகளில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அப்போராட்டங்களில் முருகானந்தன் அவர்களின் பங்கு முக்கியமானது. 2014-இல் தில்லை கோவில் தீட்சிதர்களுக்கே சொந்தம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, தில்லை கோவில் மீட்பு மாநாடு இவ்வமைப்பின் சார்பில் நடத்தப்பட்டது. இதற்கான நிதி திரட்டலிலும், ஆதரவு திரட்டியதிலும் இவர் பங்கேற்றிருக்கிறார். 2015-இல் மொழிப்போர் தியாகிகளுக்கான பொன்விழா நிகழ்வை புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் ஒருங்கிணைத்திருக்கிறார்.
graphic மொழிப்போர் தியாகிகள் நினைவேந்தலில் முருகானந்தன்

தமிழகத்தின் பல பகுதிகளுக்குச் சென்று அமைப்பின் கொள்கைகளை வலியுறுத்திப் பேசியிருக்கிறார். குறிப்பாக, சென்னை IIT-யின் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தில் உஐயாற்றிய நிகழ்வு டெகான் க்ரானிகல் இதழில் படமாக வெளியானதைக் குறிப்பிடுகிறார்.
உலகத் தொழிலாளர் மாநாடு ஒன்றில் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் தொழிலாளர்களின் நிலையைக் குறித்துப் பேசும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்திருக்கிறது. தவிர்க்க இயலாக் காரணங்களால் அம்மாநாட்டிற்குச் செல்லமுடியவில்லை என்கிறார்.
போராட்டங்களில் கலந்துகொள்வது, ஒருங்கிணைப்பது, போராட்டங்களுக்கான துண்டறிக்கைகளைத் தயாரிப்பது, பல இடங்களில் நடைபெறும் கூட்டங்களில் அமைப்பின் கருத்துகளை உரையாற்றுவது என்று இவர் பணிகள் நீள்கின்றன.
புதிய ஜனநாயகம்என்ற அமைப்பின் இதழுக்காக இவர் சில ஆங்கிலக் கட்டுரைகளை மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார். வினவு தளத்தில் முழுநேர ஊழியராகப் பணியாற்றத் தனக்கு வாய்ப்பு வந்ததாகவும், தனது சூழல் காரணமாக அதை ஏற்கமுடியவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

CSGAB போராட்டத்தில் பு.மா..மு
2015-இல் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் & பட்டதாரிகள் சங்கம் (CSGAB) நடத்திய போராட்டத்தை இவர் வழியாகக் கேள்விப்பட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் தோழர்களோடு களத்திற்கு உடனடியாக வந்து கலந்துகொண்டார். தங்கள் இயக்கத்தின் ஆதரவைப் போராட்டக்குழுவிடம் தெரிவித்தார். மேலும், பு.மா..மு சார்பில் போராட்டத்திற்கான ஆதரவு அறிக்கை அவர்களதுவினவுஇணய தளத்தில் வெளியானது.
உண்ணாநிலைப் போராட்டத்தை ஆதரித்த  பு.மமா..மு தோழர்கள் பார்வையற்ற பட்டதாரிகள் && மாணவர்கள் கை்து செய்யப்பட்டபோது தன்னார்வளர்களாக மீண்டும் களத்திற்கு வந்தனர். பார்வை மாற்றுத்திறனாளிகளின் அனுமதியின்றி அவர்களைக் காவல் துறை புகைப்படம் எடுப்பதைச் சண்டையிட்டுத் தடுத்தனர். கைது செய்யப்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குத் தங்களால் இயன்ற உதவிகளை வழங்கினர்.

இவரிடம் முன்வைத்த சில கேள்விகளும் பதில்களும்
கேள்வி: கம்யூனிஸ்ட் இயக்கங்கள் நிறைய இருக்கின்றன. இந்த அமைப்பில் நீங்கள் சேரக் காரணம்?
: மண்ணுக்கேற்ற மாக்ஸியம்தான். இந்த அமைப்பினர்தான் இங்கிருக்கும் சாதிப் பிரச்சனையைத் தெளிவாக அணுகுகிறார்கள். பெரியார், அம்பேத்கர் முதலிய உள்ளூர் தலைவர்களைக் குறித்து அதிகம் பேசும் கம்யூனிச அமைப்பு இதுதான். தாழ்த்தப்பட்டோருக்கு ஒரு சிக்கல் என்றால் அவர்களுக்கு எதிர்நிலைச் சாதியில் இருப்பவர்களையும் அழைத்து அம்மக்களுக்கு ஆதரவாகப் போராட வைப்பதுதான் இவ்வமைப்பின் சிறப்பு.
பொதுவாக, தமிழகம் தாண்டிய இந்தியாவின் பிற பகுதிகளில் கம்யூனிஸ்டுகளுக்கும் தலித்திய ஆ்தரவாளர்களுக்கும் இடையே முரண்பாடு இருந்துகொண்டே இருக்கும். ‘கம்யூனிஸ்டுகள் சாதி வேறுபாடு குறித்துப் பேச மறுக்கிறார்கள்என்பது அவர்கள் குற்றச்சாட்டு. அதில் உண்மை இருக்கிறது. ஆனால், கம்யூனிச அமைப்புகளில் சாதி முதலிய உள்ளூர் பிரச்சனைகளை மிகத் தீவிரமாகப்  பேசும் அமைப்புமக்கள் அதிகாரம்’. அதனால் இதில் இணைந்தேன். தமிழகத்தில் இத்தகைய குற்றச்சாட்டு குறைந்திருப்பதற்கு ஏற்கெனவே பெரியார் இங்கு தன் பிரச்சார வலிமையால் மக்களின் மனதைப் பண்படுத்தியதும் காரணம் என நினைக்கிறேன்.  
கே: அமைப்பில் இயங்குவதில் பார்வை மாற்றுத்திறனாளியாக சிக்கல்களைச் சந்தித்திருக்கிறீர்களா’?
: நிறைய. இந்த அமைப்பு ஒரு மக்கள் திரள் அமைப்பு. பல விதமான மக்களைச் சந்தித்து அவர்களை அரசியல்்படுத்துவதுதான் இவ்வமைப்பின் நோக்கம். நாம் மக்களைச் சந்திப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. நாம் தனியாகச் சென்று மக்களைச் சந்திப்பதில் சிரமமில்லை; அவர்களை நம் கொள்கையின் பக்கம் வென்றெடுப்பது சிரமமானது. அதனால் என் தட்டச்சு செய்யும் திறனைப் புரிந்துகொண்ட அமைப்பினர் எனக்குப் பல தட்டச்சுப் பணிகளை வழங்கினர்.
பார்வையற்றவனாக நான் இருப்பதால், பலராலும் எளிதாக அடையாளம் காணப்பட வாய்ப்பு உள்ளது. அதனால் பல சிக்கல்கள் வரலாம் என்பதால் ஆய்வு மாணவர் என்ற பெயரிலேயே நான் பல கூட்டங்களில் பேசியிருக்கிறேன்.
கே: இப்படி பல கூட்டங்களில் கலந்துகொண்ட காலத்தில் அமைப்பினர் உங்களை எப்படி அணுகினர்?
: அதில் ஒன்றும் சிரமமில்லை. கூட்டங்களுக்கு ஏற்கெனவே எனக்கு அறிமுகமான தோழர்களோடுதான் பெரும்பாலும் செல்வேன். அப்படி யாரும் வரவில்லை என்றாலும், புதிய தோழர்கள் என் பிரச்சனைகளைப் புரிந்துகொண்டனர்; இயல்பாக உதவினர். எனக்கான தேவைகள் இவை என்று அவர்கள் சிந்தித்து அறிந்துகொண்டனர் என்று கூறுவதைக் காட்டிலும், அவர்கள் அக்கறையோடு என்னை அணுகினர் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். தோழர்கள் அனைவரும் உழைப்பாளர்கள் என்பதால் இது இயல்பாக நிகழக்கூடியதுதான்.
இன்னும் நான் தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால், நான் கூட்டங்களில் உரையாற்றச் சென்ற பல இடங்களில் முறையான கழிப்பறை வசதி கூட இருக்காது. கூட்டம் முடிந்த பிறகு  அங்கேயே தங்கவேண்டிய சூழலும் ஏற்பட்டதுண்டு. அத்தகைய தருணங்களிலும் தோழர்கள் எனக்கு இயல்பாக உதவினர்.
கே: வேறு பார்வை மாற்றுத்திறனாளிகளை அமைப்பிற்குள் கொண்டுவர முடிந்ததா?
: சென்னை தியாகராயர் கல்லூரி பேராசிரியர் U. மகேந்திரன் என்னோடு பல போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார். திருவாரூர் மத்திய பல்கலைக் கழகப் பேராசிரியர் பூபதி கருத்தியல் ரீதியாக நெருக்கமாக இருக்கிறார். இப்படிச் சிலரைச் சொல்லலாம்.
கே: தேர்தல் அரசியலில் ஈடுபடும் கம்யூனிஸ்ட் கட்சிகளை நீங்கள் போலி கம்யூனிஸ்டுகள் என்கிறீர்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இயங்கிய பேராசிரியர் சுகுமாரன் அவர்களிடம் இத்தொடரிலேயே இது பற்றி கேட்டபோது, ‘அவர்கள் வன்முறையில் நம்பிக்கை கொண்டவர்கள்என்று உங்கள் அமைப்பு குறித்து கூறினார். அது குறித்து உங்கள் கருத்து….
: நானும் அதைப் படித்தேன். அப்படியெல்லாம் கூறிவிட முடியாது. கம்யூனிசத்தின் அடிப்படைக் கருத்தே புரட்சிதான். தொழிலாளிகள் ஆளவேண்டும் என்றவுடன் முதலாளிகள் உடனே இடம் தந்துவிடமாட்டார்கள். அதற்காகப் புரட்சி என்றால் நான்கைந்து பேர் துப்பாக்கி தூக்கி எதிரியைத் தாக்குவது அல்ல. அது மக்கள் திரளின் புரிதலோடு மேற்கொள்ளப்படுவது. அதற்காக மக்கள் பயிற்றுவிக்கப்படவேண்டும். அவர்கள் தங்கள் வாழ்க்கை குறித்து அறிந்திருக்கவேண்டும். இது குறித்த விழிப்புணர்வைத் தான் மக்கள் அதிகாரம் தொடர்ந்து வழங்கிக்கொண்டிருக்கிறது.
போலி கம்யூனிஸ்டுகள் என்று நாங்கள் அவர்களைக் குறிப்பிடக் காரணம், அவர்கள் தேர்தலில் பங்கேற்கிறார்கள் என்பதற்காக மட்டுமல்ல. அவர்கள் இன்னும் சாதி முதலிய உளூர் விஷயங்களைத் தீவிரமாகப் பேசுவதில்லை. உள்ளூர் தலைவர்களை அங்கீகரிப்பதில்லை. தமிழ்நாட்டில் இருந்துகொண்டு ரஷ்யாவையும், சீனாவையும் பற்றி மட்டும் பேசிக்கொண்டிருந்தால் நாம் அந்நியப்பட்டுவிடுவோம். மக்கள் அதிகாரத்தைப் போல உளூர் விஷயங்களையும், உள்ளூர் தலைவர்களையும் பேசிய பிற கம்யூனிஸ்ட் இயக்கம் இல்லை என்றுதான் நான் கருதுகிறேன்.
கே: கம்யூனிஸ்டுகளைப் பற்றி மற்றவர்கள் கூறும் முக்கியப் பிரச்சனை, சில வார்த்தைகளை வைத்துக்கொண்டு அவர்கள் சண்டையிட்டுக் கொள்வார்கள் என்பது. மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் வேறுபாடிலிருந்து தற்போது உங்கள் அமைப்பிலிருந்து தோழர் மருதையன் அவர்கள் விலகக் காரணமாக இருப்பது வரை பல பிரச்சனைகளுக்குக் காரணம்  சில வார்த்தைகள் தான். அது சரிதானா?
: கம்யூனிஸ்டுகளுக்கு வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை. அவை நடைமுறை்ச் செயல்பாடுகளுக்கான வழிகாட்டி. அவர்களுக்குக் கோட்பாடுகள் முக்கியம்; அதை வடிவமைக்கும் வார்த்தைகள் மிகவும் முக்கியம். ஒவ்வொரு வார்த்தைக்கும் மிகப்பெரிய விவாதங்கள் நடைபெறும். குறிப்பாக, தற்போது மக்கள் அதிகாரம் பயன்படுத்திவரும்காவி பாசிச பயங்கரவாதம்என்ற தொடர் பல விவாதங்களுக்குப் பிறகே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும்.
ஆனால், பொதுவான பார்வையில் வார்த்தை வேறுபாடுகளுகாகக் கம்யூனி்ச அமைப்புகள் பிரிந்து கிடக்க வேண்டுமா என்றே பார்க்கப்படுகிறது.  எங்கள் தொழிலாளர் அமைப்பு பொதுவான பல பிரச்சனைகளில் பிற கம்யூனிச அமைப்புகளோடு இணைந்தே போராடியிருக்கிறது. அதில் நாங்கள் தயக்கம் காட்டியதில்லை.
கே: நீங்கள் அத்தகைய விவாதங்களில் பங்கேற்றிருக்கிறீர்களா?
: நிறைய விவாதங்களில் பங்கேற்றிருக்கிறேன்.
கே: அதற்கு நிறைய படித்தாகவேண்டுமே! எப்படிப் படித்தீர்கள்?
: ஆங்கிலத்தில் மாக்ஸியம் தொடர்பான நிறைய நூல்கள் இணையத்தில் கிடைக்கின்றன. தமிழில்தான் படிப்பது கடினம். குறிப்பாக, மக்கள் அதிகாரத்தின் வெளியீடுகளை மற்ற தோழர்கள் உதவியோடுதான் படித்தாகவேண்டும்.
கே:  உங்கள் அரசியல் செயல்பாட்டின்போது எதிர்ப்பு ஏதாவது சந்தித்திருக்கிறீர்களா?
: 2012-இல் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பிற்கு எதிராகத் துண்டறிக்கை வெளியிட்ட பிறகு சக மாணவர் ஒருவர் அதைக் கடுமையாக எதிர்த்தார். பிறகு பேசிப் பேசி புரியவைத்து ஓரிரு ஆண்டுகளில் அவரும் எங்கள் அமைப்பின் கொள்கைகளைப் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டார்.
கே: “20 வயது ஆகிவிட்டால் ஒன்று காதலிக்கவேண்டும்; இல்லையென்றால், கம்யூனிஸ்ட் ஆகிவிடவேண்டும்என்று எங்கேயோ படித்திருக்கிறேன். நீங்கள் இரண்டையுமே மேற்கொண்டிருக்கிறீர்கள். எப்படி?
: லௌகீகமும் பௌதீகமும் இணைந்து வருவது கடினம்தான். என் மனைவிக்கு அப்போதிருந்தே  என் போர்க் குணத்தின் நியாயங்கள் புரிந்தன. எங்களுக்குள் இது தொடர்பாக சண்டை வந்ததில்லை. எதிர்காலம் குறித்த சிறு அச்சம் இருந்திருக்கும். அவ்வளவுதான்.
கே: தற்போது  மக்கள் அதிகாரத்தில் உங்கள் பங்கு என்ன?
: தற்போது என் பங்கு வெகுவாகக் குறைந்துவிட்டது. என் வாழ்க்கைச் சூழல் காரணமாக என்னால் முன்பு போல இவ்வமைப்பில் வேகமா்கச் செயல்பட முடியவில்லை. இவ்வமைப்பில் இருக்கும் போதாமையையும் இப்போது கொஞ்சம் உணரத் தொடங்கியிருக்கிறேன். உள்ளிருந்தே அதைச் சரிசெய்வதற்கான கட்டமைப்பும் இவ்வமைப்பில் இருக்கிறது என்று நான் அறிவேன்.

இவரைத் தொடர்புகொள்ள: send2kmn@gmail.com

வாசகர்களே!
உங்களுக்குத் தெரிந்த பார்வை மாற்றுத்திறனாளி அரசியலாளர்களை எங்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். அவர்கள் தேர்தல் அரசியலிலோ, கொள்கை அரசியலிலோ ஈடுபாடு கொண்டவராக இருக்கவேண்டும். களப்பணி ஆற்றியவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் உங்களுக்குத் தெரியும் என்றால், 9894335053 என்ற எனது தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொள்ளுங்கள். ஆவணப்படுத்துவோம்.

தொடர்புக்கு: balaganesan2285@gmail.com


7 கருத்துகள்:

  1. எனக்கு அரசியல் சார்ந்து எண்ணற்ற புரிதல்களை ஏற்படுத்திய அண்ணன் முருகானந்தன் அவர்களை பேட்டி கண்ட விதம் மிகவும் பொருத்தமானது. அரசியல் மட்டுமல்ல தனக்குத் தெரிந்த அத்தனை செய்திகளையும் எப்படியாவது தகுந்த அல்லது அணுகுகிற மக்களுக்கு கொண்டு சேர்க்க இவர் தயங்கியதே இல்லை. மொழிப்பெயர்ப்பு ஆற்றலும், எழுத்தாற்றலும், பலதரப்பட்ட அரசியல் புரிதல்களும் இவரிடம் இருக்கக்கூடிய ஆகச்சிறந்த சிறப்புகள். இவரின் எழுத்துக்களாலும் செயல்பாட்டால் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் குறிப்பிடத்தக்க அளவில் மிகச்சிறந்த புரட்சிகர மாற்றங்களை ஏற்ப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் எனக்கு வழி காட்ட வில்லை என்றால் இன்று நான் முனைவர் மகேந்திரன் ஆக இருந்திருக்க வாய்ப்பே இல்லை, அல்லது அது தாமதப்பட்டு இருக்கலாம். சிறந்ததொரு பேட்டியை எடுத்து இருக்கிற பாலகணேசன் சார் அவருக்கும் வாழ்த்துக்கள். எதிர்காலத்தில் அளப்பரிய சாதனைகள் புரிந்து தவிர்க்கமுடியாத சிந்தனையாளராக இருக்கப் போகிற அண்ணன் முருகானந்தன் அவர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. திரு. முருகானந்தம் இப்படி ஒரு பின்னணியைக் கொண்டவர் என்ற தகவல் எனக்குப் புதிது. பேட்டி சிறப்பு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. பேராசிரியர் முருகானந்தம் பற்றி அறியாத பல தகவல்களை அறிந்துகொல்ல முடிந்தது இந்த பேட்டியின்வாயிலாக. நேர்கானல் செய்து நேர்த்தியாக வார்த்து கட்டூறையாக்கி தந்த உங்கலுக்கு பாறாட்டுகளும், நன்றிகளும்.

    பதிலளிநீக்கு
  4. பால கணேசன் ஐயா அவர்கள் வழங்கியிருந்த நேர்காணல் உபயோகமாக இருந்தது பல கருத்துக்களை தெரிந்துகொள்ள முடிந்தது அரசியலில் பார்வை மாற்று திறனாளிகளின் ஈடுபடும்போது எதிர்கொள்கின்ற சிக்கல்கள் குறித்து சிந்திக்க ஒரு வாய்ப்பாக இந்த கட்டுரை அமைந்திருந்தது பொது வாழ்க்கையில் யார் ஈடுபட்டாலும் சில நேரங்களில் ஆபத்துகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் ஆனால் நமக்கு அந்த ஆபத்துக்கள் கொஞ்சம் அதிகம் என்றே தோன்றுகிறது என்றாலும் ஆபத்திற்கு அஞ்சினால் புகழ் பெற முடியாது என்பதையும் தெளிவாக உணர்த்தியது சாதிய பிரச்சனைகள் எப்படியெல்லாம் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கு இந்த கட்டுரையும் ஒரு சான்று சிறப்பு

    பதிலளிநீக்கு
  5. ஜெயராமன் தஞ்சாவூர்6 ஜூன், 2020 அன்று 11:50 PM

    Editing, பேட்டி அருமை

    பேராசிரியர் திரு முருகானந்தம்
    அவர்களின் அரசியல் பின்னணி

    ஆச்சரியம் ஊட்டுகிறது.

    பேட்டி கண்ட திரு பாலகணேசன்

    அவர்களிடம் ஒரு பத்திரிகையாளருக்கு இருக்கவேண்டிய

    அனைத்து அம்சங்களையும் காண முடிகிறது புலப்படுத்த பட வேண்டிய கருத்துக்களை வெளிக்கொணர கூடிய அருமையான கேள்விகள்,

    அவைகளுக்கேற்ற பதில்கற் அருமை அருமை!

    சட்டமன்றத்திலும், பாராளுமறத்திலும்
    இடம் பிடித்தால்தான் பார்வை மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையில் விடிவு காலம் உண்டு.

    இருவருக்கும் என் பாராட்டுக்களையும்;
    நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும்
    தெரிவித்துக்கொள்கிறேன்.
    , Edit box, உங்கள் கருத்தை உள்ளிடுக...

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்திய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. என்னை பேட்டி கண்டு கட்டுரையாக்கி வெளியிட்டுள்ள பாலகணேசன் சாருக்கு நன்றி, நிதானம், முதிர்ச்சி,, தொழில்முறை செயல்நேர்த்தி என பல சிறப்பம்ஸங்கள் கொண்ட சிறந்த இதழியலாளர் அவர்!
    இதனை வெளியிட்டுள்ள விரள்மொழியர் இதலின் ஆசிரியர் குழுவுக்கும் எனது நன்றி!
    கருத்துத் தெரிவித்துள்ள நண்பர்கள் மகேந்திரன், சரவண மணிகண்டன் என அனைவருக்கும் நன்றிகள்!
    மகேந்திரன் வெகு அதிகமாகவே என்னைக் குறித்து மிகைப் படுத்தி கூறியுள்ளார், உங்களின் அன்புக்கும் தோழமைக்கும் நன்றி மகேந்திரன்!
    பிற பார்வையுள்ள நண்பர்களோடு பசையை எடுத்துக்கொண்டு போஸ்டர் ஒட்ட பல்கலைக்கழகத்தில் திரிந்தது, உழைப்பாளர்களின் அன்றாட வாழ்வியல் குறித்த அனுபவம், எல்லா விதமான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டுமென்ற முதிர்ச்சி என பல்வேறு கள மற்றும் கருத்தியல் அனுபவங்களைப் பெறுவதற்கு இந்த அரசியல் இயக்கச் செயல்பாடுகள் வழிவகுத்தன. மிகுந்த கவனத்தோடு இக்கட்டுரையை வார்த்துள்ள பாலகணேசன் சாருக்கு மீண்டும் நன்றி!
    முருகானந்தன்.

    பதிலளிநீக்கு