ஒவ்வொரு இலக்கியத்திற்கும் இலக்கணம் உண்டு. திரைப்படப் பாடல்களை ஆங்கிலத்தில் Lyric என்ற சொல்லால் அழைப்பர். Lyric என்ற சொல்லுக்குத் தன்னுணர்ச்சிப் பாடல் என்பது பொருளாகும். உள்ளத்து உணர்வுகளை உடல் வழியே வெளிப்படுத்தும் மெய்ப்பாடுகள் போல கவிஞன் உள்ளத்து உணர்வுகளையும், கதையோட்டத்தினையும் அடிப்படையாகக் கொண்டு கதைமாந்தர்கள் வெளிப்படுத்தும் ஒரு முறையான உணர்வே தன்னுணர்ச்சி எனப்படும்.
தமிழ்த் திரையுலகம் தோன்றி சற்றொப்ப அரை நூற்றாண்டுக்குப் பிறகு திரையிசைக் கவிஞராகவும், படைப்பாளியாகவும் உலகுக்குத் தன்னை அறிமுகம் செய்தவர் வைரமுத்து தமிழ் இலக்கண இலக்கியங்களை நன்கு ஆய்ந்து கற்றுத் தெளிந்தமையால் அவற்றைப் புறந்தள்ளிப் பாடல்களையும் இலக்கியங்களையும் அவரால் படைக்க இயல்வதில்லை எனலாம்.
1980
மார்ச் 10 தன் மனைவியைப் பிரசவத்திற்காக மருத்துவ மனையில் அனுமதித்துவிட்டுத் தன்
அலுவலகம் திரும்பியவருக்கு ஒரு நல்ல செய்தி காத்திருந்தது. சென்னையில் உள்ள
அட்லாண்டிக் ஹோட்டலுக்கு அவரை வரவழைத்தது அந்தச் செய்தி! பாரதிராஜாவையும், இளையராஜாவையும் ஒரு சேரக் கண்டதை அவர் கண்கள் நம்ப
மறுத்தன. இசை ஞானியிடம் அவர் அறிமுகம் செய்யப்படுகிறார், இளையராஜாவோ தயக்கத்துடன்
ஒரு மெட்டினைத் தனது ஆர்மோனியத்தில் வாசிக்கிறார். உடனடியாக
‘பொன்மாலைப் பொழுது
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்’
என வார்த்தைகள் வந்து விழுகின்றன!.
இப்படித்தான் தொடங்குகிறது கள்ளிக்காட்டில் பிறந்த வைரமுத்து என்ற இளைஞனின் 40
ஆண்டுப் பயணம். அவர்தம் மனைவிக்கும் அவர் இயற்றிய பாடலுக்கும் பல்லவி ஒன்றே. அதன் பிறகு
சுமார் ஆறு ஆண்டுகளுக்கு இசை ஞானி தனக்குக் கிடைத்த வைரத்தையும், முத்தையும்
கொண்டு திரைப்பாட்டுலகைக் கட்டி ஆண்ட செய்தி அனைவரும் அறிந்ததே.
‘எந்த தேவதையாலும் அவன் ஆசீர்வதிக்கப்பட்டதில்லை ஆனால் ஆயிரம் சாத்தான்களால்
சபிக்கப்பட்டிருக்கிறான்’ என்று தனது சுய சரிதையைத் தொடங்குகிறார் வைரமுத்து. ‘இரு மடங்கு உழைத்துப் பாருங்கள் ஈராண்டின்
பலனை ஓராண்டில் காண்பீர்கள்’ என்று அவர்
அடிக்கடி சொல்வதுண்டு. அவ்வாறு வாழ்ந்தும் காட்டியவர் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
கடந்து
வந்த 40 ஆண்டுகளில் 8000 பாடல்கள், 39 நூல்கள், 7 தேசிய விருதுகள், 6 தமிழக அரசு விருதுகள்,
சாகித்திய அகாடமி விருது, இலக்கியச் சிந்தனை விருது, பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருது உள்ளிட்டவை தனது
உழைப்பிற்காகக் கிடைத்த பெருமைகளென்று அவர் ஒருபோதும்
கருதியதில்லை. இவையெல்லாம் தமிழுக்குக் கிடைத்த அங்கீகாரம் என்றே சொல்லி வந்திருக்கின்றார்.
இதுவரை
தான் வாழ்ந்த 65 ஆண்டுகளில் 130 ஆண்டுகளுக்கான உழைப்பை நிறைத்திருக்கின்ற இந்தக் கருப்பு மனிதனின் நெருப்புச் சரித்திரத்தைத் தெரிந்துகொள்ள 66 ஆண்டுகள் பின்னோக்கிப்
பழைய மதுரை மாவட்டத்திற்குச் செல்ல வேண்டும்.
தென்
மாவட்டங்களின் தண்ணீர்த் தேவையைக் கருதி தற்போதுள்ள தேனி மாவட்டத்தில் உள்ள 14
கிராமங்களை உள்ளடக்கி வைகை அணை கட்டப்பட்டதால் அந்தக் கிராமங்களில் ஒன்றான
மெட்டூரில் பிறந்த சிறுவன் வைரமுத்துவை கைபிடித்துக் கூட்டிவந்த தனது தாயின் நினைவை
‘வைகையில ஊர் முழுக
வல்லூரும்
சேர்ந்தழுக,
கைப்பிடியாக்
கூட்டி வந்து
கரசேத்து விட்டவளே’
என்று தனது கவிதை ஒன்றில் குறிப்பிடுகிறார்
வைரமுத்து.
பெரியகுளத்திற்கு
அருகில் உள்ள வடுகபட்டிக்குப் புலம் பெயர்ந்த வைரமுத்துவின் சிறு வயது வாழ்க்கை
வறுமையிலேயே வாடியது. ஆனால் திராவிட இயக்கத்தின் மீதான ஈர்ப்பும், கவிதையின்மீது கொண்ட காதலும் அவரது வறுமையை மறக்கத்
தற்காலிகத் தீனியாய் அமைந்ததென்றால் அது மிகையில்லை. தனது 14ஆம் வயதிலேயே வெண்பா என்னும் மரபுக்கவிதையில் விளையாடத் தொடங்கிவிட்டார். அப்போது தமிழகத்தை ஆக்கிரமித்திருந்த
இந்திப் பாடல்களைக் கேட்டு அந்த மெட்டுகளுக்கெல்லாம் தமிழில் வரிகளை எழுதி, எழுதி மெட்டிற்குப் பாட்டெழுதும் செப்படி வித்தையை அந்தச் சிறிய பருவத்திலேயே கற்றுத் தேர்ந்து கொண்டதுதான் இன்றுவரை எழுதிய 8000 பாடல்களுக்கு வித்தாக அமைந்தன. படிப்பிலும் படுசுட்டி. அதனால்தான் பள்ளி
இறுதியாண்டுத் தேர்வில் மாவட்டத்திலேயே முதலிடம் பெறமுடிந்தது.
உயர்கல்வி
பயில சென்னை வந்தது, தான் காதலித்த பெண்ணைக் கரம் பற்றியது, தொடக்க கால
வறுமையிலும் செம்மையாக வாழ்ந்ததெல்லாம் அனைவரும் அறிந்ததே.
இசை
ஞானி இளையராஜாவுடன் சுமார்5 6 ஆண்டுகளில் சில நூறு பாடல்களோடு பயணித்த வைரமுத்து
இருவருக்கும் இடையே நேர்ந்த கருத்து வேறுபாட்டால் பிரிந்தது காலம் செய்த பிழை.
அவர்கள் இன்னும் இணையாமல் இருப்பது கலையுலகம் செய்த பிழை. எனினும் இளையராஜா,
வைரமுத்து கூட்டணியில் வெளிவந்த அனைத்துப் பாடல்களுமே நல்முத்துகளே.
ராஜ
பார்வை திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அந்திமழை பொழிகிறது’ பாடலில் ‘இந்திரன் தோட்டத்து முந்திரியே மன்மத நாட்டுக்கு
மந்திரியே நெஞ்சு பொறு கொஞ்சம் இரு தாவணி விசிறிகள் வீசுகிறேன் மன்மத அம்புகள்
தைத்த இடங்களில் சந்தனமாய் எனைப் பூசுகிறேன்’ என்ற வரிகள் ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டன.
‘மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் சிவக்கும், எரிமலை
எப்படிப் பொறுக்கும்’ போன்ற பாடல்கள் சோம்பிக் கிடக்கும் இளைஞர்களைத் தட்டி எழுப்பும் தன்மை வாய்ந்தன.
‘அடுக்களைத் துடைப்பதும் படுக்கையை விரிப்பதும் அது பெண்ணின்
தொழில் இல்லையே’ என்ற வரிகளின் வாயிலாக புதுமைப் பெண்களைப் புரட்சிப் பெண்களாகக் காணவிரும்புகிறார் கவிஞர்.
‘மயக்கம் என்பது மாத்திரையா?
மரணம்
போகும் யாத்திரையா?
விளக்கு
இருந்தும் இருட்டறையா?
விடிந்த
பின்னும் நித்திரையா?
வரம்பு
கடந்து நரம்பு தளர்ந்து
வயதைத்
தொலைத்து வாழுவதா?’ என்று போதைக்கு எதிராகத் தனது வலுவான கண்டனத்தைப் பதிவு செய்கிறார்.
சிகரம்
திரைப்படத்தில் இடம்பெறுள்ள ‘அகரம் இப்போ சிகரம்
ஆச்சு’ என்ற பாடலில் ‘இன்றென்பது உண்மையே நம்பிக்கை உங்கள் கையிலே, நம்பிக்கையே நல்லது
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது’ என்ற கவிஞரின்
வரிகள் தன்னம்பிக்கையினை ஊட்டுகின்றன.
ஒரு கூட்டுக்கிளியாக, ஊரத் தெரிஞ்சிக்கிட்டேன்- படிக்காதவன்,
அழகான புள்ளிமானே- மேகம் கருத்திருக்கு,
சம்சாரம் அது மின்சாரம் — சம்சாரம் அது
மின்சாரம்,
விடுகதையா இந்த வாழ்க்கை- முத்து,
சிங்க நடைபோட்டு, ஓ கிக்கு ஏறுதே- படையப்பா,
எட்டு எட்டா மனுஷ வாழ்வப் பிரிச்சுக்கோ- பாட்ஷா போன்ற தத்துவம், சோகம் உள்ளிட்ட மெய்ப்பாடுகளைக் கவிஞர்
வைரமுத்துவின் பாடல்களில் காணலாம்.
‘காதல் ஓவியம்’ திரைப்படம் வணிக ரீதியாகல் தோல்வியுற்றாலும் இளையராஜா, வைரமுத்து கூட்டணியில் அனைத்துப் பாடல்களுமே வெற்றிப் பாடல்களாக அமைந்தன. ‘பூவில் வண்டு கூடும்’ என்ற பாடலில் ‘காற்றின் தேசம் எங்கும் எந்தன் கானம் சென்று
தங்கும்’ என்று வைரமுத்து எழுதிய வரிகள் அவர்கள்
இருவருக்குமே பொருந்தியது மிகவும் வியப்பிற்குரியதாகும்.
‘பொத்தி வச்ச மல்லிக மொட்டு’ பாடலின் முதல்
சரணம் ‘மாலையிடக் காத்து அல்லியிருக்கு,தாலி செய்ய நேத்து
சொல்லியிருக்கு’ என்று தொடங்கும் இந்த வரிகளுக்கு முன் வரும் இடை இசையில் நாதஸ்வர மேளம் அதாவது
கல்யாண மேளத்தை ஒலிக்க விட்டிருப்பார் இளயராஜா! இதில் வியப்பு என்னவென்றால் கவிஞர்
எழுதப்போகும் வரிகளை இசையமைப்பாளரும், இசையமைப்பாளர் உருவாக்கிய மங்கல இசையைக்
கவிஞரும் முன்னரே அறிந்திருக்கவில்லை என்பதுதான்!
‘புன்னகை மன்னன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்’ என்ற பாடலின்
பல்லவி முதலில் ‘நீ சொன்னால் நிலா வருமே, ஊரெல்லாம் உலா வருமே, நீதானே புன்னகை மன்னன், என்றுதான் எழுதப்பட்டது. பின்னர் பல்லவி
மாற்றப்பட்டதாக கவிஞர் வைரமுத்து குறிப்பிடுகிறார். அதே திரைப்படத்தில் என்ன
சத்தம் இந்த நேரம் என்ற பாடலில் ‘கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே’ என்று வைரமுத்து எழுதியிருப்பார். ஆனால் கழுத்தைப் பார்த்த பிறகுதானே அவள்
கன்னியா அல்லது மணப்பெண்ணா என்று அறிந்து கொள்ள முடியும்? ஆனால் கழுத்தைக் காண்பதற்கு முன்னரே கன்னியின் கழுத்தை என்று எழுதிவிட்டார்?
இதனை இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் எவ்வாறு கவனிக்கத் தவறினார் என்பது ஐயத்திற்குரியதாகவே உள்ளது.
‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திற்காக ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ என்ற பாடலை
சென்னையில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் அமர்ந்து எழுதிக் கொண்டுபோய்
இளையராஜாவிடம் கொடுக்க, அதனை வாங்கி ஓரத்தில் வைத்துவிட்டு கவிஞரை அருகில்
வரச்சொல்லி அவரது தலையில் நெளிந்துகொண்டிருந்த புழு ஒன்றைத் தனது கையால்
எடுத்துச்சென்று கழிவறையில் போட்டுவிட்டு வந்து பிறகு பாடலை எடுத்துப் பார்த்திருக்கின்றார். இசை ஞானி.
இளையராஜா
அவர்கள் புதிதாக ஒரு மகிழ்வுந்து வாங்கியபோது அவரின் குடும்பத்துடன் தானும்
கடற்கரைக்குச் சென்று வந்த நினைவுகளை எல்லாம் அண்மையில் பகிர்ந்துகொண்டார்
வைரமுத்து. தான் மகிழ்வுந்து வாங்கும் வரை தனது மகிழ்வுந்தில் இளையராஜா தினமும் அழைத்துச் சென்றதும், ராஜாவிற்கென வீட்டிலிருந்து வரும் காய்ச்சிய
பாலை இருவரும் பகிர்ந்து கொண்டதும் கவிஞரின்
நீங்காத நினைவுகளாகும்
பாடகர்
ஏசுதாஸ் அவர்களின் தமிழ் உச்சரிப்பில் மலையாளச் சாயல் தென்படுவதைப் பல நேரங்களில் நாம் உணர்ந்திருக்கிறோம், அவருடனான பாடல்
பதிவுகளின்போது இருவருக்குமிடையே சின்ன சின்ன சண்டைகள் வருவது இயல்பாகும். ஆனால்
ஒருவர்மீது ஒருவர் கொண்ட அன்பு
அலாதியானது.
கவிஞர்
கண்ணதாசன் வரிகளில் திருமதி. சுசிலா அம்மையாரின் அமுதக்குரலில் ‘நாளை இந்த வேளை பார்த்து ஓடிவா நிலா இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா’ என்ற பாடலை நம்மில் கேட்காதவர் எவரும் இருக்கவியலாது. அதே பாணியில் தலைவன் பாடுவது
போன்ற பாடல் ஒன்றை ரோஜா படத்திற்காக இயற்றியுள்ளார் வைரமுத்து. ‘காதல் ரோஜாவே’ என்ற பாடலின் இரண்டாம் சரணத்தில்
‘வீசுகின்ற தென்றலே வேலையில்லை இன்று போ
பேசுகின்ற
வெண்ணிலா பெண்மையில்லை ஓய்ந்து போ
பூ
வளர்த்த தோட்டமே கூந்தலில்லை தீர்ந்து போ
பூமி
பார்க்கும் வானமே புள்ளியாகத் தேய்ந்து போ’
என்று பிரிவின் சோகத்தையும், வலியையும்
ரசிகனுக்குக் கடத்துகிறார் கவிஞர்.
இசைஞானி
இளையராஜா அவர்களை விட்டுப் பிரிந்த பிறகு சற்றொப்ப 27 இசையமைப்பாளர்களுடன்
பணியாற்றியுள்ளார் கவிஞர் வைரமுத்து. 1992ஆம் ஆண்டு திரைத்துறையில் வைரமுத்து
அவர்களின் இரண்டாவது அத்தியாயம் தொடங்கியது என்றுதான் சொல்லவேண்டும். அந்த ஆண்டில்
பாலச்சந்தர் 3 திரைப்படங்களைத் தயாரித்தார்.
முதலில் மணிரத்னம் இயக்க ரகுமான் இசையமைக்க வெளிவந்த திரைப்படம் ரோஜா, அடுத்ததாக
பாலச்சந்தர் இயக்கி மரகதமணி இசையமைக்க வெளிவந்த படம் வானமே எல்லை, சுரேஷ்கிருஷ்ணா
இயக்கி தேவா இசையமைக்க வெளிவந்தான் அண்ணாமலை. திரு பாலச்சந்தர் தயாரித்த இம்மூன்று படங்களுக்கும் வைரமுத்து
பாடல்கள் எழுத படங்களும், பாடல்களும் மாபெரும் வெற்றி பெற்றன.
அதன்
பின்னர் ரகுமானுடன் தொடர்ந்து 28 ஆண்டுகளாக
இணைந்து பணியாற்றி வருவதுடன் எம்.எஸ். விஸ்வநாதன் தொடங்கி இன்றைய இசையமைப்பாளர்கள் வரை 5 தலைமுறை
இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றி வருகிறார்.
40
ஆண்டுகளில் 8000 பாடல்களின் எல்லையைத் தொட இந்த ஒரு கட்டுரையால் இயலாதென்பதே
உண்மை. 1972 இல் வைகறை மேகங்கள் தொடங்கி 2019இல் தமிழாற்றுப்படை வரையில்
பேசுவதென்றால் அதற்கெனத் தனி நூல்தான் எழுதவேண்டும்.
இரு
மடங்கு உழைத்து, நிமிர்ந்த நன்னடையாலும், நேர்கொண்ட தனது பார்வையாலும் அறிவை
விரிவு செய்து திரைத்துறையிலும், இலக்கியத் துறையிலும் செம்மாந்து நடைபோடும்
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வெற்றிப்பயணம் தொடரும்,,,,,
மேலே குறிப்பிட்டுள்ளவாறு கவிஞர் வைரமுத்து முதுகலைத் தமிழ்
இலக்கியம் பயின்றதுடன் இலக்கிய இலக்கணங்களில் தேர்ந்து தெளிந்தவர். அதனால் தனக்கு
வாய்ப்புக் கிட்டும்போதெல்லாம் தனது திரைப்பாடல்களில் இலக்கிய இலக்கணங்களைச் சாறு
பிழிந்து கொடுக்க மறப்பதே இல்லை. அப்படி அவர் பிழிந்தளித்த சாற்றின் சுவை நயத்தை அடுத்த இதழில் காண்போம்.
(கட்டுரையாளர் கரூர் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்)
வடுகப்பட்டியில் தொடங்கி வானை எட்டிய வளர்ச்சியை வசப்படுத்திக்கொண்டு இன்றும் எழுத்துக்களை இறுகப் பற்றியபடி வலம்வரும் வைரமுத்து அவர்களை அலசிய விதம் சிறப்பாக இருந்தது. உங்களின் அடுத்த பதிவையும் வாசிக்க ஆவலோடு இருக்கிறேன் ஐயா!
பதிலளிநீக்குஅருமையான தொகுப்பு. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநான் ரசித்த நான் அதிகம் தேடிப் படித்த ஒரு கவிஞரைப் பற்றிய பதிவு மிகவும் அருமை நீங்கள் அதில் கூறியுள்ள அனைத்தையும் வைரமுத்து தனது 200 பாடல்கள் என்ற தொகுப்பில் தனக்கு நேர்ந்த அனுபவங்கள் தன்னுடைய பாடல் எப்படி மாற்றப்பட்டது தன்னுடைய பாடல் எங்கிருந்து நிராகரிக்கப்பட்டது தன்னுடைய பாடலை யார் யார் காப்பாற்றி கொடுத்தார்கள் என்பது போன்ற அவருடைய அந்த நினைவுகளை பகிர்ந்திருக்கிறார். நிச்சயமாக உங்களின் அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன் அதை படிப்பதற்காக.
பதிலளிநீக்குசரவணன்,
பதிலளிநீக்குஅருமையான கட்டுரை.
வைரமுத்து அவர்களின் கவிதை வரிகளைப் போலவே கட்டுரையில் உள்ள ஒவ்வொரு வரிகளும் ஆழமும் அர்த்தமும் நிறைந்தவை.ஓர் ஆய்வு கட்டுரை போல் உள்ளது.
தொடர்ந்து எழுதவும்.வாழ்த்துக்கள்
Editing, கவிஞர் வைரமுத்து அவர்களை
பதிலளிநீக்குகுறித்த செய்திகளை திரட்டி,
அழகான கட்டுரையின் மூலம்
எல்லோரையும் அறிந்துகொள்ள செய்த
கட்டுரையாளரின் முயற்சி பாராட்டிற்கு உரியது
வாழ்த்துக்கள்! , Edit box, உங்கள் கருத்தை உள்ளிடுக...
கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதை வரிகளைப் போலவே கட்டுரையில் உள்ள ஒவ்வொரு வரிகளும் ஆழமும் அர்த்தமும் நிறைந்தவை. ஐயா நன்றிங்க ஐயா மேலும் வைரமுத்து அவர்களின் பாடல்களில் அறிவியல் சிந்தனைகள் பற்றிய கருத்து அடுத்த கட்டுரையில் எழுத முடியுமா? நன்றிங்க ஐயா
பதிலளிநீக்கு