நினைவுகள்: பார்வையற்றவனாய் கல்லூரிப் பருவத்தில் நான் அடைந்த கசப்புகள்… - மோசஸ்ராஜ்


graphic பார்வையுள்ள ஒரு பெண் பார்வையற்ற ஆணை கைபிடித்து அழைத்துச் செல்கிறார்.

               "நீ நட்சத்திரமாக ஜொலிக்க விரும்பினால், நீ யார் என்பது முக்கியமல்ல; உனது மனது எதை விரும்புகிறதோ, அது நிச்சயம் உன்னை வந்து சேரும்என்று பள்ளியில் ஆசிரியர்கள் கற்பித்த மந்திரச் சொல்லை வைத்து தொடங்கினேன் என் கல்லூரிப் படிப்பினை*

               12 ஆண்டுகள் சிறப்புப் பள்ளியில் படித்திருந்ததால் உலக மக்களோடு உறவாடத் தெரியவில்லை; அதற்குப் பள்ளி காரணம் இல்லை. சமூகத்தோடு பேச முயன்றாலும் சங்கடம் தீர வில்லை: நடை பயிற்சியும் இல்லை; ஸ்டிக்கை எடுத்தால் உடன் இருந்தோர் உதாசீனப்படுத்தினர். முற்றிலுமாய் ஒரு புதிய அனுபவத்தைப் பெறத் தொடங்கினேன்.

       பல சோதனைக்குப் பின் சொகுசாய் முதல் நாள் கல்லூரிக்குச் சென்றேன். அங்கிருந்த மாணவர்கள் எனக்குப் புதுமையாய் தெரிந்தனர்; அவர்களுக்கு நான் வியப்பாய் தெரிந்தேன். ஆம். நான் நடந்தால் வியப்பு. எழுந்து விடை சொன்னால் வியப்பு. என்னை எல்லா நேரங்களிலும் ஆச்சரியமாய் நோக்கினார்கள். எனக்குள்ளும் தாழ்வு மனப்பான்மை தோன்ற தொடங்கியது*

       கல்லூரி என்பது தகவல்களைச் சேகரிப்பதற்கான இடம் அல்ல; அது சிந்திப்பதற்காக மூளையைப் பயிற்றுவிக்கும் இடம் என்பதை காலப்போக்கில் உணரத் தொடங்கினேன். வகுப்பறையில் எங்களுக்கு முதல் இருக்கை. காரணம், நாங்கள் மாற்றுத்திறனாளிகள். ஆம். என்னோடு சேர்த்து 8 பேர் பார்வை மாற்றுத்திறனாளிகள். மிகவும் வருந்தக்கூடிய செய்தி என்னவென்றால், ஒரு பார்வை மாற்றுத்திறனாளி மாணவனுக்குக் கூட சக மாணவிகளிடம் பேசிப் பழகத் தெரியவில்லை. அதையும் மீறி பேசத் தொடங்கினால் நாங்கள் பார்வையற்றவர்கள் என்ற எண்ணம் எங்கள் மனதிற்குள்ளே ஓடிக்கொண்டிருந்தது.

       ஒரு  பார்வையற்றவர் செய்யும் தவறுக்கு அங்கு உள்ள அனைத்துப் பார்வையற்ற மாணவர்களையும் கூட்டாகக் குறை சொல்லத் தொடங்கினர். அப்போதுதான் சமூகத்தின் நிலையும் எனக்குச் சற்று புரியத் தொடங்கியது.
அங்கு கரும்பலகையில் எழுதப்படும் எழுத்துக்கள் தெரியாமல், அதனை வாசிக்க ஆட்கள் இல்லாமல் பல நேரங்களில் தவித்தது கூட உண்டு. அதனை ஆசிரியர்களிடம் கேட்டு அவர்கள் அலட்சியப்படுத்திய நாட்களும் உண்டு.
விழி அற்றவனுக்கு வழியெல்லாம் முட்கள்.

       சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றனஎன்னும் கலாம் வரிகளை நினைவு கொள்ள விரும்புகிறேன்‌. ஏழைக் குடும்பத்தில் பிறந்த நான் கல்லூரி சேர காசில்லாமல் பத்திப் பை சுமந்து பணம் கட்டியதை மறக்கமுடியுமா? தாங்கி நிற்கவேண்டிய நம் சமுதாயம் என்னைப் பார்த்து  ஏன் ஆழமாய் சிரித்தது?
அப்போதுதான் புரிந்துகொண்டேன் பல பார்வையற்ற மாணவர்கள் கல்லூரிப் படிப்பைத் தொடராமல் போனதற்கான காரணத்தினை. இதனை நான் குறிப்பிடுவதற்குக் காரணம், நம் சமுதாயத்தினரை நாம்தான் காக்கவேண்டும் என்பது மட்டுமே. ‌

       ஒருநாள் தேர்வுக்குத் தாமதமாகச் சென்று துறைத் தலைவரைச் சந்தித்தேன். மீண்டும் தேர்வு அறைக்குத் திரும்பும்போது,  பேராசிரியர்கள் என்னைவிட இரண்டு ஆண்டுகள் மூத்த மாணவியை என்னை அழைத்துச் செல்ல அனுப்பிவைத்தனர். வழியில் அந்த மாணவியைப் பார்த்த மற்ற பேராசிரியர்கள் இழிவாகப் பேசினர். மனதில் ஏற்பட்ட காயம் எனக்குக் கண்ணீராய் வெளிப்பட்டது. தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாது
நாவினால் சுட்ட வடு என்ற வள்ளுவரின் வார்த்தை எவ்வளவு உண்மையானது என்பதை உணர முடிந்தது.

       இந்த இடத்தில் ஒரு வினா எழுப்ப விரும்புகிறேன். அத்தகைய நிலைக்கு காரணமாய் இருந்தது பார்வையற்றவரைப் புரிந்துகொள்ளாத சமுதாயமா? இல்லை, சமுதாயம் இது என்று அறியாத நானா?

       துளித்துளியாய்க் கொட்டித்தான் குடம் நிரம்புகிறது. சிறுகச் சிறுக முயற்சி செய்.  உன்னால் எல்லாம்  முடியும்என்னும் நம்பிக்கை விதையை மனதிற்குள் விதைத்தேன். பிறகு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று சான்றிதழும் பெற்றேன். பாராட்டு எண்னவோ எனக்கு அல்ல. ‘பார்வையற்றவன்என்ற ஒற்றைச் சொல்லுக்கே.

       என் திறமைகளை நானே ஒளித்துக் கொள்ள தொடங்கினேன். எந்தவொரு போட்டியையும் வருத்தத்தோடு நிராகரித்துவிட்டேன். சிறு வீழ்ச்சி; சிறு தோல்வி;; சிறு சறுக்கல். எது வந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காதேஎன்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

       வெற்றிகளைச் சந்தித்தவன் இதயம் பூவைப் போல் மென்மையானது. தோல்வியை மட்டுமே சந்தித்தவன் இதயம் இரும்பை விட வலிமையானதுஎன்று விவேகானந்தர் சொன்ன வரிகளைக் கொண்டு எதிர் நீச்சல் போடத் தொடங்கினேன். பிறகு வெற்றி மீது வெற்றி. மூன்றாம் ஆண்டின் இறுதியில் பல பாராட்டுக்கள். எல்லாம் பரிசாய் மாறியது.

(கட்டுரையாளர் தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரியில் இளங்கலை இலக்கியம் (B.Lit) தமிழ், மூன்றாம் ஆண்டு பயின்றுவருகிறார்).
தொடர்புக்கு: umosesrajbabl2001@gmail.com

6 கருத்துகள்:

  1. ஒவ்வொரு பார்வையற்றவன் பட்டப்படிப்பு மேற்கொள்கையில் எதிர்கொள்கிற வலி நிறைந்த அனுபவங்களை சொல்லியிருக்கிறீர்கள். சாதித்தாளும் சிறிது சருக்கினாளும் நீ பார்வையற்றவன் என்பதைச் சொல்லி காயப்படுத்தும் சமுதாயத்தின் அரசியல் தனமான அணுகுமுறையை வெளிப்படுத்தியது முற்றிலும் உண்மை. கசப்பை கடந்து இனிப்பை புசிக்க தொடங்கி இருக்கிற உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கசப்பான வாழ்க்கையில்
      எதிர்நீச்சல் போடுவது கடினம் என்று தான் எண்ணினேன்!

      ஆனால் காலம் உணர்த்தியது
      கல்வி துணை இருந்தால் கல்லறைக்குப் உனக்கு வரும் பாமாலை என்று

      நீக்கு
  2. தலைமுறை எழுத்தாளனாய் பொழிவுபெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. ஜெயராமன் தஞ்சாவூர்7 ஜூன், 2020 அன்று 12:17 PM

    அவமானங்களை வெகுமானம் கலாய் மாற்ற தெரிந்தவனை எந்த ஊனமும் உதாசீன படுத்திவிட முடியாது;

    என்பதற்கு உதாரணமாக விளங்கும்

    நீ ஊக்கத்தோடு கற்று வரும் கல்வி,

    நிச்சயம் உனக்கு சமூக அந்தஸ்தையும்,
    மகிழ்ச்சியையும் கொடுக்கும் என்று நம்பிக்கை கொள் ‌

    அப்துல்கலாம் விவேகானந்தர் ஆகியோரின் மேற்கோள்களை

    கட்டுரையில் எடுத்தாண்டு இருப்பது சிறப்பு.

    கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி,

    வாழ்க்கையில் எல்லா சிறப்புகளையும் பெற்று உயர்ந்தோங்கி வளர

    என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் தம்பி!

    பதிலளிநீக்கு
  4. அவமானம் ஒருநாள் வெகுமானண் ஆனதை உணர்ந்தீர்கள் அல்லவா?
    செய்திகள் அருமை பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு