உலக வர்த்தக அமைப்பு பலவீனமடையும் அல்லது ஏகாதிபத்தியங்களிடம்
இருந்தே எதிர்ப்புக் குரல்களைச் சந்திக்கும் இந்த நேரத்தில் ‘தற்சார்பு' கோஷத்தை முன் வைக்கிறார் மோதி. சுயசார்பு, தற்சார்பு என்பதெல்லாம் இந்தியாவுக்குப் புதிதான கோஷம் அல்ல,காந்தியின் கனவு அது, தற்சார்பு பொருளாதார அறிஞர் ஜே.சி.குமரப்பாவால் செயல்வடிவம் கொடுக்கப்பட்டகோஷம் அது.
ஆனால்,
அதே நேரம் தொடக்கத்திலிருந்தே காட்ஸ் (GATS) மற்றும் உலக வர்த்தக அமைப்பில் (WTO) ஓர் உறுப்பாக இருக்கிறது இந்தியா. சர்வதேச வணிகத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த அமைப்புகளில் வணிகம் சார்ந்த பல வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறது. அவை இந்திய இறையாண்மையில் தாக்கம் செலுத்துபவையும் கூட.
ஆனால் சர்வதேச வணிகத்தை ஒழுங்குபடுத்த இப்படியான அமைப்புகள் தேவை எனப் பேசப்பட்டு வந்த சூழலில், ஏகாதிபத்தியங்களிடம்
இருந்தே இப்போது உலக வர்த்தக அமைப்புக்கு எதிராக குரல்கள் எழுந்து வருகின்றன. அதுவும் குறிப்பாக யார் அதிலிருந்து அதிகம் பலன் அடைந்தார்களோ?
அவர்களிடமிருந்தே எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகின்றன.
அமெரிக்காவின் ரிபப்ளிக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் ஜோஷ் ஹாலே, நியூயார்க் டைம்ஸில் எழுதி உள்ள கட்டுரையில்,
“இப்போதுள்ள பொருளாதார அமைப்பானது ஒரு நினைவு சின்னமாக இருந்து வருகிறது. முடி முதல் அடி வரை அதில் சீர்திருத்தங்கள் தேவை.
இந்தச் சீர்த்திருத்தங்களை நாம் உலக வர்த்தக அமைப்பிடமிருந்து தொடங்க வேண்டும். அதனை முழுவதுமாக ஒழிக்க வேண்டும்,” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தப் பெருந்தொற்றுக்குப் பிறகு அமெரிக்க பொருளாதாரத்தைச் சீராக்க இதுதான் வழி என்கிறார் அவர்.
சீனாவின் ஏகாதிபத்தியத்தை முடிவுக்குக் கொண்டுவர,
பிற நாடுகளுடன் வர்த்தக பேச்சைப் புதுப்பிக்க உலக வர்த்தக அமைப்பை இல்லாமல் செய்வதுதான் வழி என்கிறார் அவர்.
எழுதியதோடு மட்டும் நிற்காமல், இதற்கான தீர்மானத்தையும், அதாவது உலக வர்த்தக அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறும் திட்டத்தையும் செனட்டில் கொண்டு வந்திருக்கிறார் ஜோஷ் ஹாலே.
உலக வர்த்தக அமைப்பை இல்லாமல் செய்துவிட முடியுமா ?
உலக வர்த்தக அமைப்பை ஒரு செனட்டரால் இல்லாமல் செய்துவிட முடியுமா? அல்லது அமெரிக்கா என்ற நாடு நினைத்தால் அதனை இல்லாமல் ஆக்கிவிட முடியுமா?. இதற்கான பதில்
‘சாத்தியமில்லை’ என்பதுதான்.
உலக வர்த்தக அமைப்பில் 168 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. ஏதோ ஒரு நாடு நினைப்பதால் அதனை முழுவதுமாக இல்லாமல் செய்துவிட முடியாது.
குறைந்தபட்சம் அதிலிருந்து வெளியேறுவது கூட அவ்வளவு எளிதானதல்ல.
ஆனால், ஹாலேயின் கருத்துக்கு அமெரிக்காவின் பலதரப்புகளிலிருந்தும் ஆதரவு பெருகி வருகின்றன.
உலக வர்த்தக அமைப்புக்கு எதிராக அமெரிக்கா கருத்து கூறுவது இது முதல்முறையல்ல,
2018 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூட, “உலக வர்த்தக அமைப்பு தன்னை சரியாக வடிவமைத்துக் கொள்ளவில்லை என்றால், அதிலிருந்து தாங்கள் வெளியேறுவோம்,” என்று கூறி இருக்கிறார். அமெரிக்காவைக் கட்டுப்படுத்த பிற உலக நாடுகளால் உருவாக்கப்பட்டதுதான் உலக வர்த்தக அமைப்பு என்றும் அவர் கூறி இருப்பதாக
Axios செய்தி வெளியிட்டிருக்கிறது.
ஏன் அமெரிக்கா வெளியேற விரும்புகிறது?
சோவியத்தின் வீழ்ச்சிக்கு பிறகு,
‘வரலாறு முடிந்துவிட்டது', ‘தத்துவங்கள் செத்துவிட்டன' ஆகிய கோஷங்கள் உரக்க ஒலித்தன. இனி இரு முனை அதிகாரம் கிடையாது,
ஒரு முனை அதிகாரம்தான்.
அது அமெரிக்காதான் எனப் பேசத் தொடங்கினர். இப்படியான சூழலில்தான் காட்ஸ்,
உருகுவேவில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பின் உலக வர்த்தக அமைப்பாக உருமாறுகிறது.
உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கரங்கள் ஓங்கி இருந்தன. ஆனால், சீனா உலக வர்த்தக அமைப்புக்குள் 2001 ஆம் ஆண்டு நுழைந்த பிறகு இந்த அதிகாரச் சமன்பாடு மாறுகிறது.
கருத்துகளை மட்டுமே உற்பத்தி செய்து பெளதீக உற்பத்தியை வெளிநாடுகளுக்கு அவுட்சோர்ஸ் செய்துவந்தது அமெரிக்கா.
அதாவது ஒரு நிறுவனத்தை, ஒரு பிராண்டை மட்டும்தான் அமெரிக்கா தொடங்கும், உற்பத்தியையும் சந்தையையும் வெளியே வைத்துக் கொள்ளும்.
உதாரணம் கோக் எனும் பிராண்ட் அமெரிக்காவுடையது,
சந்தை உலகம் தழுவியது.
நைக் எனும் பிராண்ட் அமெரிக்காவுடையது, உற்பத்தி வங்கதேசத்தில்… இப்படியாக லாபத்தை மட்டுமே அந்நாடு எடுத்துக் கொண்டிருந்தது.
ஆனால்,
இது இப்போதுள்ள சூழலில் நீடிக்க முடியவில்லை.
அமெரிக்காவிலேயே வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இந்தியா போல அமெரிக்கா இல்லை.இங்கு ஒருவருக்கு வேலை இல்லை என்றால் அது அந்தத் தனி நபர் பிரச்சனையாக இருக்கிறது. இதுவே அமெரிக்காவில் அது அரசின் பிரச்சனை. இந்தப் பெருந்தொற்று காலத்தில் மட்டும்
அமெரிக்காவில் 3.6 கோடி பேர் வேலை இல்லாதவர்களாக பதிந்திருக்கிறார்கள். இவர்களுக்கான சலுகையை அரசு தர வேண்டும்.
இது ஒரு பக்கம் என்றால், கடந்த ஐந்து ஆண்டுகளாக உலக வர்த்தக அமைப்பு வகுத்துக் கொடுத்துள்ள வரி விகிதங்களால் தாம் மிக மோசமாக பாதிக்கப்படுவதாக அமெரிக்கா கூறத் தொடங்கிவிட்டது . அதாவது குறைந்த அளவில் வரி விகிதங்கள் இருப்பதால் அந்நிய நாட்டு பொருட்கள் அமெரிக்க சந்தையை ஆக்கிரமிக்கின்றன. இதன் காரணமாக உள்ளூர் மக்கள் வேலை இழக்கிறார்கள். உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்கா ஒரு பலி ஆடாக இருக்கிறது என
அமெரிக்கா கூறத் தொடங்குகிறது.
உள்ளுர் வேலையின்மை, ‘மண்ணின் மக்களுக்கே வேலை,
அமெரிக்காவே முதன்மை’
எனும் கோஷம், சீனாவின் ஆதிக்கம் இவையெல்லாம்தான் அமெரிக்கா உலக வர்த்தக அமைப்பிலிருந்து வெளியேற முக்கிய காரணம். ஆனால், அதே நேரம் உலக வர்த்தக அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறினால், அதாவது உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு வெளியேறினால்,
சர்வதேச பொருளாதாரத்தில் ஒரு நிச்சயமற்றதன்மை உருவாகும் அதன் எதிரொலி அமெரிக்க பொருளாதாரத்திலும் இருக்கும் என்று எச்சரிக்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
அமெரிக்காவும், இந்தியாவும்
உலக வர்த்தக அமைப்பிலிருந்து வெளியேறப் போகிறோம் என அமெரிக்கா மிரட்டுவதற்கும் இந்தியாவுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. ஆம், அலுமினியம் மற்றும் ஸ்டீல் பொருட்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா அதிகரித்தது. அதாவது அலுமினியத்துக்கு 10 சதவீதமும், ஸ்டீலுக்கு
25 சதவீதமும் அமெரிக்கா அதிகரித்தது, இதனை அடுத்து உலக வர்த்தக அமைப்பின் கதவுகளை
2018 மே மாதம் தட்டியது இந்தியா. அமெரிக்காவின் இந்த வரி விதிப்பானது வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிரானது என்று கூறிய இந்தியா, வரி விதிப்பை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியது. இதனால், கோபமடைந்தது அமெரிக்கா.
இந்தியாவுக்கு எதிராக யாராவது உலக வர்த்தக அமைப்பை அணுகி இருக்கிறார்களா?
சமீபத்தில் நடந்ததைக் கூற வேண்டுமானால், ஐரோப்பிய ஒன்றியமும், துருக்கியும் இந்தியாவுக்கு எதிராக உலக வர்த்தக அமைப்பை அணுகி இருக்கிறது. அதாவது உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தை மீறி இந்தியா ஐ.டி பொருட்களுக்கு வரி விதித்து இருக்கிறது எனக் குற்றஞ்சாட்டி இருக்கிறது.
அதற்கு முன்னதாக, இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா உலக வர்த்தக அமைப்பிடம் முறையிட்டு இருக்கிறது.
ஒப்பந்தத்தை மீறி இந்திய உற்பத்தியாளர்களுக்கு ஏற்றுமதி மானியத்தை அளிக்கிறது இந்தியா என்பதுதான் அவர்களின் குற்றச்சாட்டு.
இந்தியா கரும்பு உற்பத்தியாளர்களுக்கு மானியம் அளிக்கிறது எனக் குற்றஞ்சாட்டி ஆஸ்திரேலியா, தாய்லாந்து, பாகிஸ்தான்,
கனடா உள்ளிட்ட நாடுகள் உலக வர்த்தக அமைப்பை அணுகின.
ஆக, பல நாடுகளிடையே பல காலமாக வர்த்தகப் பிரச்சனைகள் இருக்கின்றன.
குறிப்பாக, அண்மைக் காலமாக உள்ளூர் அரசியல் காரணங்களால், வர்த்தக கொள்கைகளால் தாங்கள் அதிகம் இழப்புகளைச் சந்திப்பதாக நினைப்பதால் பல நாடுகள் வர்த்தக அமைப்பிற்கு எதிராக பேசத் தொடங்கிவிட்டன. இன்னும் குறிப்பாக ‘மண்ணின் மக்களுக்கே வேலை’
எனும் கோஷம் திசை எங்கும் கேட்கத் தொடங்கிய இந்தத் தருணத்தில் தனது பொலிவை இழக்க தொடங்கிவிட்டது வர்த்தக அமைப்பு
மோதியின் தற்சாபு கோஷம்
இந்தச் சூழலில்தான் இந்தியா தற்சார்பு கோஷத்தை முன் வைக்கிறது.
பா.ஜ,க ஆட்சி எப்படித் தொடர்ந்து ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் வெவ்வேறு சொற்பொருளை வழங்கி வருகிறதோ, அப்படியாகத்தான் தற்சார்புக்கும் வழங்கியிருக்கிறது.
மோதி முன் வைக்கும் தற்சார்பானது காந்தி,
ஜே.சி. குமரப்பா முன் வைத்த தற்சார்பு அல்ல. அதற்கு எதிரானது.
ஒரு பக்கம் பெருநிறுவனங்களுக்குக் கடன்களை அள்ளிக் கொடுத்துக்கொண்டு, அந்தக் கடன்களையும் போக்கெழுதிக் கொண்டு (write - off), உலக வர்த்தக அமைப்பிலிருந்து விலக எந்த நடவடிக்கையும் எடுக்காமல்,
தற்சார்பு என மோதி பேசுகிறார். இது காந்தியின், குமரப்பாவின் தற்சார்பு அல்ல.
தற்சார்புக்கு அடிப்படை ‘சிறியதே அழகு'
என்ற கோட்பாடு, சர்வோதயா பொருளாதார முறை.
அதாவது பெரு நிறுவனங்கள் அல்லாமல் சிறிய நிறுவனங்களை ஊக்குவிப்பது,
கிராம பொருளாதாரத்தை முதன்மையாக்குவது.
உற்பத்தியும் சந்தையும் ஒரே இடத்தில் இருப்பது போல பார்த்து கொள்வது.
ஆனால்,
மோதி தனது உரையிலேயே தெளிவாகக் கூறிவிட்டார்.
"We do not, however, seek self-centered or isolationist arrangements when
we speak of self-reliance,” என்கிறார். அதாவது தற்சார்புதான் பேசுகிறோமே தவிர
‘தங்களை மையப்படுத்திய அல்லது தனிமைப்படுத்திக் கொள்ளும் ஏற்பாடுகளை’ பேசவில்லை என்கிறார்.
அதற்கான சீர்திருத்தங்களைச் செய்வோம் என்கிறார்;
வெவ்வேறுவிதமான ஆற்றலை உடைய மக்கள் இருக்கிறார்கள் என்கிறார்.
மோதி சீர்திருத்தம் எனச் சொல்வது நிலச் சீர்திருத்தம், சட்டச் சீர்திருத்தம், தொழிலாளர் நலச் சட்ட சீர்திருத்தம். அதாவது நிறுவனங்களுக்கு ஏற்றவாறு அனைத்தையும் மாற்றுவது.
பணி நேரத்தை 12 மணி நேரமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் முதலாளிகள் தரப்பிலிருந்து எழுந்தன அல்லவா, பல மாநிலங்கள் வேலை நேரத்தையும் அதிகரித்து இருக்கின்றன அல்லவா - இதைதான் சீர்திருத்தம் என்கிறார்.
எளிமையாகச் சொல்ல வேண்டுமானால்,
இந்தியாவை உற்பத்தி கேந்திரமாக மாற்றுவது.
‘எங்களிடம் ஆர்டர் கொடுங்கள், நாங்கள் செய்து தருகிறோம் என்பது.’
சூழலியல் முக்கியத்துவங்களைத் துச்சமாக மதித்து சர்வதேச நாடுகளுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்வது,
ஏற்றுமதி செய்வது. இதைத் தான் மோதி கூறுகிறார்.
உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தங்களால் இந்தியாவின் இறையாண்மை பாதிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை இடதுசாரி சிந்தனையாளர்களும்,
சில வேளாண் அறிஞர்களும்,
பொருளாதார வல்லுநர்களும்,
தேசிய இன விடுதலை பேசுவோரும் தொடர்ந்து கூறிவருகின்றனர்.
இன்னொரு பக்கம் ஏகாதிபத்திய நாடுகளே உலக வர்த்தக அமைப்பு எல்லாம் வேண்டாம், வணிகத்திற்கு ஏற்றவாறு ஒப்பந்தங்களை ஏற்படுத்தி கொள்வோம் எனக் கூற தொடங்கிவிட்டன. இந்தச் சூழலில்தான்
தற்சார்பு கோஷம் மூலம் உலகின் உற்பத்தி கேந்திரமாக இந்தியாவை மாற்ற விரும்புகிறார் மோதி.
இந்த கோஷம் செயல்வடிவம் பெற வேண்டுமானால்,
உலக வர்த்தக அமைப்பு வலுவாக இருக்க வேண்டும், அதில் இந்தியா ஆதிக்கம் செலுத்த வேண்டும், இல்லையென்றால் ஏகாதிபத்திய நாடுகளுடன் வணிகப் போருக்கு தயாராக இருக்க வேண்டும். கடந்தாண்டு அமெரிக்கா - சீனா வணிக யுத்தம் நடந்தது நினைவுக்கு வரலாம்.
இது எதுவும் இப்போது சாத்தியமாக இருப்பதாக தெரியவில்லை.
உழைக்கும் மக்களை ஆயிரம் கிலோமீட்டர்கள் பசியுடன் இந்தியாவின் எல்லாத் திசைகளிகலும் வீதியில் நடக்கவிட்டு, மாயமானை துரத்த தொடங்கிவிட்டார் மோதி.
(கட்டுரையாளர் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை தொல்லியல் முதலாம் ஆண்டு பயின்றுவருகிறார்).
தொடர்புக்கு: sivaprakashtgd@gmail.com
இந்தியா முன்வைக்கிற அபத்தமான சுயநலம் மிக்க தற்சார்பு நிலைப்பாட்டை உலக வர்த்தக மையத்தின் வீழ்ச்சியோடு இணைத்து நமது நாடு எதிர்கொள்ள இருக்கிற பொருளாதார சிக்கலை விளக்கி இருக்கிற பாங்கு கண்டிப்பாக பாராட்டுக்குரியது. மக்களின் சேவகன் என போலியாய் மார்தட்டிக் கொண்டு கார்ப்பரேட்டுகளின் காவலனாக வலம்வரும் இந்தியப் பிரதமரின் முகத்திரையை கிழித்து எரிந்து இருக்கிறது இந்த கட்டுரை. வாழ்த்துக்கள் சார்!
பதிலளிநீக்குஉங்களைப் போன்ற புதிய துறை வித்தகர்கள் இடையிடையே அதிகம் எழுதினால்தான் நமது உரிமை தொடர்பான எழுத்துகளையும் கொண்டுசேர்க்க முடியும். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஉலக பொருளாதார நிலை,
பதிலளிநீக்குஇந்திய பொருளாதாரத்தில் நிலவும் நெருக்கடி,
அமெரிக்காவின் ஆதிக்கப் போக்கு
மத்திய அரசாங்கத்தின் தவறான முன்னெடுப்பு ஆகியவற்றைஆகியவற்றை அலசி ஆராய்ந்து தன் கருத்தை
தெளிவாக இக்கட்டுரையின் மூலம்
வெளிப்படுத்தி இருக்கின்ற பாங்கு பாராட்டிற்கு உரியது
வாழ்த்துக்கள்!
an excellent article from a young dude!
பதிலளிநீக்குReally an in-depth piece of reading, congratulations!
Muruganandan