கிரிக்கெட். இந்தியர்களின்
ரத்த நாளங்களில் உயிராகவும், உணர்வாகவும் கலந்துவிட்ட ஒரு விளையாட்டு. எல்லைகளில்
அண்டை நாடுகளிடம் சண்டையிட்டுத் தோற்றால் கூட வருத்தப்படாத நம் மக்கள் கிரிக்கெட்டில்
நமது நாடு தோற்றுவிட்டால். தங்கள் உயிரையும் மாய்த்துக்கொள்ள முனைகிறார்கள். இதில் இருந்தே
நம் மக்களின் கிரிக்கெட் மீதான காதலைப் புரிந்துகொள்ளலாம். இத்தகைய கிரிக்கெட் காதல் நம் பார்வையற்ற
மக்களைமட்டும் பிடித்து உலுக்காமல் விட்டுவிடுமா என்ன!
விளையாட்டாய். இல்லை இல்லை தெரியாமல்
எதையாவது இடித்து தள்ளிவிட்டால் கூட. நம்மவர்கள் வாயில் இருந்து வரும் வார்த்தை. வாவ் ச்சாற்
ரென் கெலியே என்பதாகதான் இருக்கும். வலியிலும் கிரிக்கெட் காதல் வழிந்தொழுகச்செய்யும் நம்மவர்கள், காதோரம்
ரேடியோக்களை அழுத்திப் பிடித்துக்கொண்டு, கிரிக்கெட் கேட்கும்
ரகமெல்லாம் வேர லெவல். அவ்வளவு ஏன்! இன்று என்னற்ற பார்வையற்றவர்கள்
ஹிந்தி பேசுகிறார்கள் என்றால், அது கிரிக்கெட்டின்
உபயம் என்பதை யாரேனும் மறுப்போமா? சரி. இப்படி அனுஅனுவாக
ரசித்த ஒரு விளையாட்டைப் பார்வையற்ற நம்மவர்கள் விளையாடாமல்தான் விட்டிருப்பார்களா?
பொதுவாக பெரும்பாலான விளையாட்டுகள்
பார்வையற்றவர்களுக்கு உகந்ததாக இருப்பதில்லை. சில விளையாட்டுகள்
மட்டும் காலப்போக்கில் அதன் விதிமுறைகள் சின்னச் சின்ன மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு பார்வையற்றவர்களுக்கென உருமாற்றப்படுகின்றன. அதுவும் அந்த விளையாட்டுகள் துவங்கி பல நூற்றாண்டுகள் கடந்த பிறகே.
இப்படி பல நூற்றாண்டுகளைக் கடந்து நம்மவர்களிடம் வந்து சேர்ந்த விளையாட்டுகளில்
ஒன்று கிரிக்கெட். இந்தக்
கிரிக்கெட்டும் உடனடியாக எல்லா இடங்களில் இருக்கும் பார்வையற்ற வீரர்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டதா
என்றால் அதுவும் இல்லை. இப்படி
கிரிக்கெட் நம்மவர்களிடம் வந்து சேர்வதற்கு முன்னரே. கிரிக்கெட் மீது
இருந்த அளவு கடந்த காதலின் விளைவால். நான் படித்த பூவிருந்தவல்லி பார்வைக் குறையுடையோருக்கான அரசுப் பள்ளியில். எங்களது சீனியர் அண்ணன்களால் உருவாக்கப்பட்டதுதான்
வராண்டா கிரிக்கெட். என்னடா இது கிரிக்கெட்டுக்கு வந்த புது சோதனை
என்று புது யுகத்து, பார்வையற்ற தோனிகளும், கோலிகளும் புலம்புவது எனக்குக் கேட்கிறது.
எப்படி வசதியும், வாய்ப்பும் வாய்க்காதவர்களுக்கு. ஸ்ட்ரீட்
கிரிக்கெட்டும், பீச் கிரிக்கெட்டும் இருக்கின்றதோ. அதே போன்று பார்வையற்ற நம்மவர்களுக்கு
வாய்த்ததுதான் இந்த வராண்டா கிரிக்கெட். இந்த வராண்டா கிரிக்கெட்டின் விதிகள் எளிதுதான்
என்றாலும். இதனை விளையாடுவது
என்பது. சில்றை கிரிக்கெட் வீரன். தெருவில் விளையாடும்
சிறுவர்களிடம் சீன் போடுவதைப்போன்று அவ்வளவு எளிதில்லை.
6 ரன் எடுக்க
நினைத்து, ‘ஓங்கி அடிச்சா
ஒன்ரை டன் வெயிட்டுடா' என்ற தொனியில் பந்தை உயரே பரக்கவிட்டா. மேலே இருக்கும்
ஓடோ. ‘திருப்பி அடிச்சா, பத்தறை டன்
வெய்ட்டுடா’,என்கிற தொனியில்
பந்தை உங்கள் பக்கமே திருப்பிவிடும். மிகவும் லாவகமாக விளையாடினால் மட்டுமே இந்த
ஃபீல்டில் நிலைத்து நிற்க முடியும்.
சரி, விளையாட்டுக்குத் தேவையான பொருட்கள் சொல்றேன். கவனமா எடுத்துக்கோங்க.
காஸ்ட்லியான கிரிக்கெட் மட்டையெல்லாம் நமக்கு வேண்டாம். அதற்குப் பதிலாக. வல்லவனுக்கு
வாச்சதெல்லாம் ஆயுதம் என்னும் எதார்த்த வரிகளுக்கு ஏற்றவாறு. நமக்குப் பரிட்சை அட்டை
போதும்.
மண்டையைப் புடைக்கவைச்சி காண்டேத்தும், கிரிக்கெட்
பந்தோட சகவாசமே நமக்கு வேண்டாம் சாமி.
அதற்கு பதில் பத்துரூபாய் மதிப்பிலான பிளாஸ்ட்டிக் பந்தும், அதன் உள்ளே
சத்தத்திற்காக போட 3 குட்டி குட்டி பால்ஸ் குண்டுகளும் போதும்.
சித்துவை சிறைக்கு
அனுப்பிய ஸ்டம்ப்புக்குப் பதில், நிற்கவைக்க 3 ஸ்ட்டீல் பௌடர்
டப்பாக்கள் மட்டும் போதும். சரி எல்லாம்
கிடைச்சாச்சு வாங்க இப்ப களத்துக்கு போவோம்.
சின்னப் பசங்க படிக்கும் வகுப்பறைகளின் நீண்ட வராண்டாதான் நம்ம கிரிக்கெட்டின் ஸ்டேடியம். இங்கு ஆன் சைடு, ஆஃப் சைடு
எல்லாம் கிடையாது. நமக்கு எப்பவுமே ஸ்ட்ரைட் மட்டுந்தான். கணக்குல வீக்கான நமக்கு, அளவெடுக்கும்
அலப்பரைகள் எல்லாம் எதுக்கு. அதனால் 3ஆம் வகுப்பு
வாசலுக்கும், 4ஆம் வகுப்பு வாசலுக்கும் நடுவில் இருக்கும் 8 அடி நீலம் கொண்ட
சுவர் ஓரம்தான் நம்மலோட பிச்.
அணிக்கு 11 பேர்தான். இங்கு
சப்ஸ்டியூட் என்னும் வெட்டிச் சோத்துக்கெல்லாம் இடம் கிடையாது. அதே போன்று பார்ஷலி, டோட்டலி என்கிற பிரிவைத்
தாண்டி B1,
B2, B3 என்கிற வேறுபாடுகளெல்லாம்
இங்கு கிடையாது. அதனால் எப்போதுமே நானெல்லாம் டோட்டலி பிளைண்டு
தான். ஓக்கேவா? இங்கு ஸ்டம்ப்பு
பேட்டிங் சைடு மட்டுமே வைக்கப்படும். எனவே கீப்பிங் என்பதெல்லாம் பந்து பொருக்கி போட மட்டுமே.
இப்படிக்
கடுமையான ரூல்சைக் கொண்ட வராண்டா கிரிக்கெட்டை எப்படி விளையாடுவது?
நான் மேலே சொன்னவாறு பிச்சின் ஒரு முனையில்
அட்டையை... அட சாரிங்க நம்ம
கிரிக்கெட்டுக்கான பிரத்யேக பேட்டை, சுவர் ஓரமாகக் குனிந்தவாறு பிடிக்கவேண்டும். பிச்சின்
மற்றோரு முனையில் பாவப்பட்ட ஒருவர் சுவர் ஓரமாக குனிந்து
முன்னால் கையை ஏந்தியவாரு நிற்க, அவருக்குப் பின்னால் மற்றொருவர் கையை உயர்த்தி
நிற்கவேண்டும். மற்றவர்கள் அவருக்கு வலது பக்கம், வரிசையாக சுவர் போலவே நிற்க
வேண்டும், எஞ்சியவர்கள்
வராண்டாவில் இவர்களுக்குப் பின்புறம் ஆங்காங்கே நிற்கவேண்டும். எந்த விதத்திலும்
பந்து இவர்களைக் கடந்து போய்விடாதபடிக்கு ஃபீல்டிங் மிகக் கடுமையாக செட் செய்யப்படும்.
பேட்டைப் பிடிப்பவர் முற்றிலும் பார்வையற்றவராக
இருப்பின் அவர் தனது இரண்டு கால்களையும் ஒட்டி, பேட்டுக்குப் பின்னால் வைத்துக்கொள்வது LPW ஆகாமல் தன்னை காத்துக்கொள்ளும்
வழி முறைகளுள் ஒன்று. ஏனென்றால், காலை அகட்டி வைத்து, பந்தை கவட்டைக்குள்விட்டு
டப்பாவை டரியல் ஆக்கியவர்களெல்லாம் இங்கு ஏராளம்.
பௌலிங் சைடில் இருந்து வரும்
பந்தைப், பேட்டைப் பிடிப்பவர்
மிகவும் லாவகமாக வாரி அடிக்கவேண்டும். அது ஒருவேளை எதிரில்
நிற்பவர்களின் மீது பட்டுவிட்டால் பெரும்பாலும் கேட்ச்தான். ஏன்னா அங்க ஒருத்தர்
கீழ குனிஞ்சு நிக்கிராருனு சொன்னேன்ல. அவரின் வேலையே, அவருக்குப் பின்னால்
நிற்பவர்களின் மீது பட்டு விழும் பந்தை அப்படியே கேட்சாக மாற்றுவதுதான். அங்கு குனிந்து
நிற்பவருக்கு ஒரு ஆபத்தும் உண்டு. பேட்டிங் செய்பவர் கொஞ்சம் ஏறி அடித்தால்
போதும். இவரின் முகறை எகுறிவிடும்... குனிஞ்சு நிக்கிறது
குத்தமாயா?
பந்து மேலே இருக்கும் ஓட்டிலும்
படாமல். கிழே இருக்கும் மனிதச்
சுவர்களின் மீதும் படாமல். இடையிடையில்
இருக்கும் சின்ன கேப்பில் அடிக்கவேண்டும். இவர்களைக் கடந்து
ஒவ்வொரு வகுப்பு ஜன்னலையும், வாசலையும் பந்து
தாண்டும்போது 1, 2, 3, 4, என ரன்கள்
கணக்கிடப்படும். 6 ரன் மட்டும் பந்து
நேராகப் பறந்து சென்று துனை முதல்வரின் அறை வாசலைத் தொட்டால்
வழங்கப்படும்.
ஒருவேளை வராண்டாவை விட்டு
எங்குமே படாமல் பந்தை வெளியே அடித்துவிட்டாலோ, அடித்த பந்து பிச்சின்
நடுவில் இருக்கும் ஜன்னல் கம்பிகளில் பட்டுவிட்டாலோ, வீசும் பந்து உங்கள்
கால்களில் பட்டுவிட்டாலோ, நீங்கள்
நிச்சயம் ஔட்டுதான். இங்கு போல்டு
ஆவதெல்லாம் பொறுப்பில்லாதவனுக்கு மட்டுமே நடக்கும் செயல்.
இந்த விளையாட்டில் வீசும் பந்துகள் எல்லாம் வேற மாதிரி செய்கைதான்.
களமிறங்கிக்
கலக்கலாம் என்ற
எண்ணத்தில், நீங்கள் களம்
புகுந்தால். நோ பால் நேராக டொப்பென்று
உங்கள் பேட்டில் வந்து குத்தும். சத்தத்தில் மெரண்ட நீங்கள் சுதாரிப்பதற்குள், அடுத்து வீசும் வேகப் பந்து
உங்களின் பேட்டுக்கு வேலையில்லாமல் செய்து, உங்களின் மண்டையைச் சூடேற்றும். சரி ஸ்பின் பாலில்
பாத்துக்களாம் என்று நீங்கள் முடிவு செய்து காத்திருந்தால். நம்ம பார்வையற்ற
ரவிந்திரஜடெஜாவிடம் இருந்து வரும் சுழல் பந்து உங்கள் பேட்டில் ஏறிய வேகத்தில்
இன்னொரு பக்கம் இறங்கி ஓடிவிடும்... ஸ்பின்னா
இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா பாஸ்? என்கிற ரீதியில் நீங்கள் கடுப்பாவீர்கள்.
அந்தக் கடுப்பில் அடுத்துவரும் பந்தை வாரி அடித்தால். அங்கு
தனது சட்டையைத் தூக்கிப்
பிடித்திருக்கும் டோட்டலி ப்லைண்டிடம்
பந்தைப் பறிகொடுத்துவிட்டு
ஆன்றுசனை போன்று பரிதாபமாய் வெளியேறுவீர்கள்.
டோட்டலி ப்லைண்டு கேட்ச் பிடிப்பதெல்லாம்
இங்குமட்டுமே நடக்கும் இன்னொரு அதிசயம்.
சரி போகட்டும் என்று என்னி, பொறுப்பா விளையாடச் சொல்லி அடுத்து ஒருத்தரை
உள்ள அனுப்பினா அவர் குனிஞ்சி பேட்ட புடிச்சா. கொஞ்சம் பார்வை
தெரிந்த ஒருவன் பந்தை அவரோட காலை நோக்கி எறிவான். தன்
காலைக் கவ்வ வருகிறது என்று பயந்த அவரோ, சடாரென தாவுவார். அதுவோ, நேராக டங் என்று ஸ்டம்பில்
அடித்து, டப்பா தெறித்துவிடும். லாங் ஜம்ப் தாவி தன் கால்களைக் காப்பாற்றிக்கொண்ட
அவர், விக்கெட்டைப் பறிகொடுத்துவிட்டு
பரிதாபமாக வருவார். என்னடா இது
என்று எண்ணிய நீங்கள், அடுத்து
வருபவரை வச்சி நாம பைஸ் ஓடி பாத்துக்களாம் என்று முடிவு செய்யக்கூடாது. ஏன்னா தோணியைப் போல் ஓடி ரன் எடுப்பதெல்லாம், இங்கு இருக்கும் எண்ணற்ற
தூன்களின் நலன் கருதி, துடைத்து எறியப்பட்டுவிட்டன.
கடைசியில் ஃபீல் பன்னும் நீங்கள்
ஃபீல்டிங்கிள் பார்த்துக்கொள்ளலாம் என்று ஆறுதல் அடைந்தால். நீலமான வராண்டாவில், நீட்டாய் விளையாடும்
இந்த கிரிக்கெட்டின் ஃபீல்டிங்கில், ரைனாவைப்போல் பந்தை பாய்ந்து பிடிக்க முயன்று பாடியைப்
பஞ்சராக்கிக் கொண்டு, இதெல்லாம் வீரணுக்கு
ஜகஜமப்பா! என்கிற ரீதியில்
அசால்ட்டாய் நகர்ந்து செல்லும் நிலை உங்களுக்கு வரலாம்... வலியா அது வேற
டிப்பாட்மண்ட்.
இப்படி அடுத்தடுத்த அடிகளை
வாங்கி சோர்ந்துபோன நீங்கள், `இதுக்குமேல தாங்க முடியாது குருநாதாஆஆஆ...' என்கிற ரீதியில். தோல்வியைத் தவிர்த்து ஆட்டயைக்
கலைக்க நினைத்தால் அடிதடி என்னும் கதையெல்லாம் வேண்டாம். ரிஸ்க்கே இல்லாமல்
லேசாக பேட்டை வெளிப்புறமாய் கொஞ்சம் சாய்த்தவாறு பிடித்து, அடுத்து வரும் பந்தை
பக்கவாட்டில் பறக்கவிட்டால் போதும். அது வராண்டா பக்கம் இருக்கும் புற்களுக்குள் பதுசாய்
சென்று பதுங்கிவிடும். அவ்வளவுதான், உங்கள் தோல்வியை உலகம்
மறந்து. அடுத்த சில
நாட்களுக்கு உங்கள் பெருமையைதான் பேசும். பந்தில்லாக் கிரிக்கெட்
பரலோகத்துல கூடக் கிடையாது பாஸு... ஸாரு அக்கௌண்டுல 10ரூபாய்
போட்டுக்கோங்கப்பா.
ஆனால் டோர்னமெண்ட்
மேச்சில், இந்த டுபாக்கூர்
வேலையெல்லாம் நடக்காது. பந்தைப் பறக்கவிட்டால், பள பளவென புத்தம்புது
பந்து தயாராகவே இருக்கும். என்னாது! டோர்னமெண்ட்
மேச்சா... என்று ஏலனப் பார்வை வேண்டாம் சகோ. அப்பளம் சுடுவதெல்லாம்
ஆல்வேல்டு மேட்சா நடத்தும் போது, இங்குமட்டும் நடத்தக்கூடாதா என்ன!
எங்கெங்கோ இருக்கும்
அண்ணன்மார்கள் எல்லாம், வருடத்தில் ஒருநாள்
இங்கு வந்து. பெரும் பொருட்செலவில் B.P.L. மேட்ச்
நடத்துவதெல்லாம், அந்தமாரி கொண்டாட்டம்தான்
போங்க! B.P.L. மேட்சா? என்னடா இது புதுசா
இருக்கே என்று நீங்கள் கேட்டால் அது உங்கள் அறியாமை. இந்த பிளைண்டு
பிரீமியர் லீக்கில் ப்ரகாசித்தவர்கள்தான், பிந்நாளில் பெரிய பெரிய கிரிக்கெட்
பிளேயர்களாய் உயர்ந்தார்கள் என்பதெல்லாம் வேறு கதை.
இப்படி எண்ணற்ற வீரர்களை
உருவாக்கிவிட்ட இந்த கிரிக்கெட்டின் இன்றைய நிலையோ, இத்துப்போன பொம்பலய. பெத்தெடுத்த பிள்ளைகள். புத்தம்புது பொம்பலைய
பாத்ததுமே. தத்தலிக்க விட்டதைப் போல். தத்தளிப்பில் இருக்கின்றது. இரவு பகல் பாராமல், நம்மை வளர்த்தெடுத்த நமது
வராண்டா ஸ்டேடியமோ, இன்று விளையாட ஆட்கள் இன்றி வெறிச்சோடி. தனது நீண்ட மடியை
விரித்தவாறு வேதனையோடு காத்திருக்கின்றது. நம்மை முட்டி முட்டி
முத்தம் கொடுத்த வளிமையான தூண்களோ, இன்று வலிகள்
நிறைந்து, தன் வலிமை இழந்து தன்னைக்
கட்டி அனைத்த காளையர்களின் ஸ்பரிசத்துக்காய் காத்திருக்கின்றது. இரவு நேர கிரிக்கெட்
விளையாட ஆட்கள் இன்றி நமது ஆடியன்ஸான பேய்களோ, பித்து பிடித்து
நமக்காக காத்துக்கொண்டிருக்கின்றன. எனவே, மின்னலை
விழிங்கி. மின்சாரத்தைக் கக்கும் பூவை
வாரியர்சே. வாருங்கள். புதுப்பொலிவோடு நமது
வராண்டா கிரிக்கெட்டை வார்த்தெடுப்போம். உலக அரங்கில் நமது
கிரிக்கெட்டை உயர்த்திப் பிடிக்க ஒன்றினைவோம்
வாருங்கள்.
அருமை
பதிலளிநீக்கு