ஓடுதளம்: தடைகளைத் தகர்க்கும் தடகளம் - டாக்டர். S. வரதராஜ்


graphic சரவணராம்

          அத்திமலைத்தேவன் என்ற நாவலில் மூழ்கியிருந்த எனக்கு திடீரென்று வந்த ஒரு வாட்ஸ் அப் அழைப்பு ஒருவிதமான சலிப்பை ஏற்படுத்த, அழைத்தது யார் என்று பார்த்தேன்.  சார் நான்தான் பாலகணேசன் பேசுறேன். நல்லாருக்கீங்களா என்று அவர் குரல் கணீரெனவும், ஒரு எதிர்பார்ப்புடனும் ஒலிக்க நல்லா இருக்கத்தான் விடுறீங்களா என்று ஒரு ஈனஸ்வரத்தில் நான் மறுமுனையில் கூறினேன். எதற்கும் அசராத அவர், கருமமே கண்ணாக என்ன சார் ரொம்ப டள்ளாபேசுறீங்க? விரல்மொழியர் 25-ஆவது இதழை வெளியிட இருக்கிறது, இந்த வேலையில்  நீங்க இவ்ளோ டல்லா இருக்கலாமாஎன்று கேட்டார். விரல்மொழியர் எங்கேயாவது,  எப்படியாவது போகட்டும், அதுக்கு என்னை ஏன் சார் தொந்தரவு பண்றீங்கஎன நான் கேட்க. ‘என்ன சார் இப்படிக் கேட்டுட்டீங்க? இந்த முக்கியமான நேரத்துல உங்க பேர நாங்க பெருமையோட சொல்ற மாதிரியும், நம்முடைய இதழை உலகமே திரும்பிப் பார்க்கிற மாதிரி ஒரு கட்டுரை கொடுங்க சார் என்று அவர் சொன்னதுதான் தாமதம், எனக்குள் ஒளிந்திருந்த வரலாறு மீதான வேட்கை எந்த விதமான வாக்குறுதியையும் இப்போது கொடுத்துவிடாதே.. உன்னுடைய ஒரே ஒரு வேலை இந்தப் புதினத்தில் பொதிந்து கிடக்கின்ற வரலாற்று உண்மைகளைச் சுவைத்து ஒரு காலப் பயணம் செய்வது மட்டுமே என்று என்னை எச்சரித்தது. தோழர் கணேசன் என்னிடம், சார் நீங்க என்ன புத்தகம் படிக்கிறதா சொன்னீங்க?’ என்று கேட்டார். அது ஒரு வரலாற்றுப் புதினம் சார் என்று சலிப்போடு நான் பதில் கூற. நம்மைப் போன்ற பார்வையற்றோருக்கான அத்லெடிக்சோட கதி என்ன? அதாவது தடகள போட்டிகளோட நிலைமை குறித்து வரலாற்று ஆய்வு நோக்கில் ஒரு கட்டுரை எழுதுங்க சார் என்று தான் பிடித்த முயலுக்கு மூனு கால் என்பதுபோல அழைத்ததன் நோக்கத்தை ஒருவழியாக போட்டுடைத்தார்.

            தோழர் என்னை அழைத்த நேரம் நான் சென்னையில் இருந்ததால், திடீரென எனக்குள் ஒரு எண்ணம் உதயமானது. விரல்மொழியரின் கட்டுரையைச் சாக்காக வைத்துக்கொண்டு, நான் மதுரைக்குச் சென்று எனது பள்ளித் தோழன் தியாகராஜனைச் சந்தித்துக் கலந்துரையாடி விட்டு வந்தால் என்ன?  என்பதுதான் அந்த எண்ணம்.  தற்போது கொரோனாவால்  நிலவும் அசாதாரண  நிலையை எண்ணியவாறு இ-பாஸ்  பெறுவதற்கான முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டேன். ஒருவழியாக இ-பாஸ் கிடைத்து மதுரையைச் சென்றடைந்த பொழுது, என்னை வரவேற்க என் வகுப்புத் தோழனும் என் நண்பனுமாகிய தியாகராஜன் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துவிட்டான். என்னடா மச்சான் இப்படி உடம்பு போட்டுட்டே என்று என் நண்பன் எடுத்த மாத்திரத்திலேயே கேட்க. அடப்பாவி பயலே 20 வருஷத்துக்கு அப்புறம் மீட் பண்றோம் ஆரம்பமே இப்படி ரணகளமா இருக்கு என்று நான் உள்ளுக்குள் புலம்பிக் கொள்ள. டேய் உன்ன கெஞ்சி கேட்டுக்குறேன். எதுவா இருந்தாலும் வீட்ல போய் பேசிக்கலாம் எனக்கூறி ஒருவழியாக சமாளித்து அவன் வாயை மூடினேன்.

      நண்பன் வீட்டை அடையும்வரை எதுவும் பேசாது இருந்தான். ஆட்டோவிலிருந்து இறங்கி வீட்டிற்குள் நுழைய முற்படும் பொழுது, வீட்டு வாயிலில் திறந்திருந்த ஒரு கதவின் வழியாக அவன் நுழைந்து விட்டான். ஆனால் என் பாடு தான் பெரும் திண்டாட்டமாக போனது. உள்ளேயும் நுழைய முடியாமல் வெளியே வரவும் முடியாமல் எனது சிறிய உடல் நடுவில் சிக்கிக் கொண்டது. இதுனாலதாண்டா வரதா ஸ்டேஷன்லேயே உனக்கு ஞாபகப்படுத்தினேன் எனச் சொல்லியபடி இன்னொரு கதவைத் திறந்துவிட்டான். காலை உணவோடு சேர்த்துக் குசல விசாரிப்புகளை முடித்துவிட்டோம். பார்வையற்றவர்களாகிய நாம்தான் ஓரிடத்தில் உட்கார்ந்தால் சும்மா இருக்க மாட்டோமே. பக்கத்தில் என்ன இருக்கிறதென தடவிப் பார்க்க, கையில் ஒரு சாக்கு மூட்டை தட்டுப்பட்டது. அந்தச் சாக்குப் பையினைத் தொட்டமாத்திரத்தில் நான் எனது சிறு வயது பள்ளி பருவத்தை நோக்கி காலப்பயணமோ அல்லது மனப் பயணமோ ஏதோ ஒன்றைச் செய்யத் தொடங்கிவிட்டேன். அப்பொழுது நான் மூன்றாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். எனது உடற்கல்வி ஆசிரியை சுப்பம்மா அவர்கள் என்னிடம் ஒரு சாக்குப் பையைக் கொடுத்து, இதற்குள் புகுந்து கொண்டு சாக்குப்பை ஓட்டப் பந்தயத்திற்கு தயாராக இரு என்று கூறுகிறார். விசில் சத்தம் பலமாக ஒலிக்கிறது. சாக்குப்பைக்குள் புகுந்திருந்த அனைவருமே ஒரு இலக்கை நோக்கி ஓடத் தொடங்குகிறோம். என்ன வரதா ஒரே யோசனையா இருக்க? பயணக்களைப்பில் தூக்கம் வருதா?’ எனத் தியாகு கேட்டவுடனே சுயநினைவுக்கு வந்துவிட்டேன். ஒன்னுமில்ல நண்பா, சின்ன வயசுல நாங்கள் ஆவலுடன் விளையாடிய sack race பத்தி நினைச்சு பார்த்தேன். அந்த மாதிரி sack race, frog race, crab race எல்லாம் நம்மைப்போன்ற ஊனமுற்றோருக்கு நடத்தப்படுகிற para Olympics போட்டிகளில் சேர்த்து நடத்த மாட்டாங்களா நண்பா?’ என்று நான் கேட்க, நீ சொல்ற விளையாட்டுப் போட்டிகள் எல்லாம் junior category பிரிவுகளுக்கு உட்பட்டவை. Para Olympics அமைப்பு பெரும்பாலும் பெரியவர்களுக்கான போட்டிகளை முன்னின்று நடத்துகிறது. என்றான் தியாகு.

            நானும் அவன் வாயைப் பிடுங்கும் நோக்கத்தில் படிக்கிற வரைக்கும் உன்னைப் போலவே நானும் பெரும்பாலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகிட்டேன். ஆனால் நீ மட்டும் இன்னைக்கு வரைக்கும் எல்லா போட்டிகளிலும் கலந்துக்கிற. ஒரு பக்கம் athletics, இன்னொரு பக்கம் indoor and outdoor tournaments என எல்லா பக்கமும் ஒரு கலக்கு  கலக்குற என்று கேட்டவுடனேயே. அதெல்லாம் ஒரு ஆர்வம்தான் வரதா. இப்ப எல்லாம்  விளையாட்டு போட்டிகள் எங்க நடந்தாலும் அதுல கலந்துக்க நான் உட்பட பல பார்வையற்றோர் தயாராக இருந்த போதிலும், போட்டி நடக்குமிடத்துக்குச் சென்று, போட்டிகளில் பங்கேற்று, வெற்றிபெற்றுப் பரிசுகள் வாங்கி, வீடு திரும்பும்வரை நாங்க பல சவால்களை எதிர்கொள்கிறோம் வரதா. உனக்கே தெரியும் எந்த விளையாட்டு போட்டிக்கும் practice ரொம்ப முக்கியம். அப்படி இருக்கிறப்ப என்னைப் போன்ற விளையாட்டு வீரர்கள் பயிற்சி எடுப்பதற்கு கூட ஒரு நிலையான ground இல்லை. அப்படியே எங்கேயாவது பயிற்சி எடுக்க இடம் கிடைச்சாலும், பார்வையற்ற விளையாட்டு வீரர்கள் அவங்க தங்கியிருக்கிற இடங்களிலிருந்து பயிற்சி நடக்குற இடத்துக்கு பயனிச்சு ஒவ்வொரு நாளும் வந்து போறதுக்கு ரொம்ப சிரமமா இருக்கு. போட்டியாளர்களிடம் கலந்துக்கணும் அப்படிங்கிற ஆர்வமும் வெறியும் இருக்கிற அளவுக்கு அவர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லஎன்றான் தியாகு. உடனே நான் இப்படிப்பட்ட தடைகள்  எல்லாத்தையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு எந்தவிதமான நம்பிக்கையோட ஒரு பெரிய விளையாட்டு பட்டாளத்தையே கூட்டிக்கிட்டு போன வருஷம் டெல்லி வரைக்கும் வந்த?’ என்று கேட்டேன். அதற்கு அவன், டெல்லிக்கு நாங்க வந்த கதையைச் சொல்லனுமுன்னா…’ என்று தியாகு இழுக்க என்ன திடீர்னு கேட்டுப் போடுற சும்மா சொல்லு என்றேன் நான். ‘Indian blind sports association இந்த பேர எங்கேயாவது கேள்விப்பட்டுருக்கியா வரதா? எனத் தியாகு கேட்க அப்படி எதுவும் நான் கேள்வி பட்டதில்லையே. என்று நான் சொன்னேன். அதைக் கேட்டுவிட்டு மேலே அவன் தொடர்ந்தான். ‘IBSA என்ற அமைப்புதான் தமிழ்நாட்டிலிருந்து எங்களையெல்லாம் அழைச்சு தடகளப் போட்டிகள் நடத்தினாங்க. எப்பயுமே போட்டியாளராகத்தான் செல்வேன். போன வருஷம் டெல்லிக்குப் பொறுப்பாளராக வந்தேன். என்ற அவனைத் தடுத்து இந்த IBSA  பத்தி கொஞ்சம் விரிவா சொல்லு நண்பாஎன்றேன். அதற்கு அவன், ஒரு காலத்துல நம்முடைய பார்வையற்ற விளையாட்டு வீரர்கள் பெரும்பாலானோர் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுன கதையா நம் மாநிலத்திற்குள் நடக்கும் மாநில அளவிலான போட்டிகளில் மட்டும் கலந்துவந்தோம். இந்த IBSA  அறிமுகம் கிடைச்ச அப்புறம்தான் நாங்க அகில இந்திய அளவில் போட்டிகளில் கலந்துகொள்ள ஆரம்பிச்சோம். இந்த நேரத்துல மதுரை VHN  பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் திரு சரவணராம் அவர்களைப் பற்றி கொஞ்சம் சொல்லியே ஆகணும்.
graphic பார்வை மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுடன் சரவணராம்

சுமார் 8 அல்லது ஒன்பது வருஷங்களுக்கு முன்னாடி நானும் எனது நண்பர்கள் சிலரும் I.A.B. வளாகத்தில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். அப்போ அங்க ஆசிரியர் சரவணராம் அவர்கள் நாட்டுநலப்பணித் திட்டத்தை எங்களுடைய கேம்பஸில் செயல்படுத்துவதற்காக சில மாணவர்களைக் கூட்டிக்கொண்டு வந்தார். எங்களுடைய பயிற்சியைப் பார்த்துட்டு எங்களிடம் ஆர்வமாக விசாரிக்க தொடங்கினார். நாங்கள் டெல்லியில் நடக்கவிருக்கிற விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக பயிற்சி செய்து கொண்டிருக்கிறோம் என்றோம். அதன் பிறகு எங்களோடு  நடந்த உரையாடலின் ஊடாக எங்களுக்கு முறையாக பயிற்சி அளிக்க ஒரு சரியான coach  இல்லை என்ற வருத்தத்தையும் பகிர்ந்துகொண்டோம். அதைக் கேட்ட மாத்திரத்திலேயே ஆசிரியர் சரவணராம் அவர்கள் உடனே போய் I.A.B. நிறுவனர் ஜின்னா சாரிடம் பேசிவிட்டு, இனி உங்களுக்கான பயிற்சிகளை நானே கொடுக்கிறேன் என்றார். தியாகு சொல்லியவற்றைக் கேட்ட எனக்குள் பொங்கியெழுந்த ஆர்வத்தை ஒரு பார்வையாக வீசி அவனை மேலும் தொடரச் சொன்னேன். வரதா, எங்களுக்குப் பயிற்சி கொடுத்ததோடு மட்டும் நிற்காமல் சுமார் 3 முறை எங்க team members எல்லாரையும் டெல்லி வரைக்கும் கூட்டிவந்து எல்லாப் போட்டிகளிலும் கலக்கச் செய்து எங்களுக்கு ஒரு பெரிய பக்கபலமாக இருந்தார். என்று அவன் மகிழ்ச்சி பொங்க கூறினான். அந்த மகிழச்சிக்கு நடுவில் நான் எனது அடுத்த கேள்வியை வீசினேன். அது சரி தியாகு, IBSA  விற்கும் தமிழ்நாட்டுக்குமான தொடர்பு  எப்படிப்பட்டது? அதற்கு அவன், பார்வையற்றோருக்கான விளையாட்டுக்களை அகில இந்திய அளவில் நடத்துவதோடு மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் நடக்கும் போட்டிகளில் நம்மைப் போன்றவர்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளையும் இந்த அமைப்பு செய்கிறது. இப்ப நம்முடைய முக்கிய பிரச்சனை என்னன்னா வரதா,  ரொம்ப காலமாகவே அகில இந்திய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகள் குறித்த வழிகாட்டுதலும் விழிப்புணர்வும் அதிகம் இல்லாததுனால நம்மவர்களால் சாதிக்க இயலவில்லை. நமக்காக குரல் கொடுக்கவேண்டிய பார்வையற்ற விளையாட்டு அமைப்புகள்கூட ஒரு திட்டமிட்ட மௌனத்தைக் கடைபிடிப்பதாகவே எனக்குத் தோணுது என்று என் நண்பன் கவலை தோய்ந்த முகத்தோடு சொல்லிக் கொண்டிருக்கும்போதே, தியாகுவின் மனைவி அருமையாக தயாரித்த தேனீரும், சிற்றுண்டியும் வந்து சேர்ந்தது.

            சுவைமிகு தேனீரை அருந்திய படியே மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளை நடத்தும் பாரா அமைப்பு ஒன்று இருப்பதாக கேள்விப்பட்டேனே? என்று நான் சொன்னதும், தொண்டையில் ஏதோ சிக்கிக்கொண்டதுபோல் திடீரென ஒரு ஜெர்க் கொடுத்த தியாகு, அமைப்பு இருக்குது,, ஆனால் அதுல பார்வையற்றோருக்கான குறைந்தபட்ச முன்னுரிமைகூட வழங்கப்படுவதில்லை என்றான். அவன் இப்படி பட்டும் படாமல் சொன்னதின் பின்னனி அறிய கொஞ்சம் விவரமா சொல்லுப்பா என்றேன். அவனும், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளை நடத்தும் போது, பார்வையற்றோருக்கான போட்டிகள் பெரும்பாலும் மிகவும் தாமதமாகவே நடத்தப்படுகின்றன.  அதாவது காலையில் நாம் சென்று காத்திருப்போம், பிற ஊனமுற்றோருக்கான போட்டிகளை முடித்துவிட்டு, பார்வையற்றோர் பக்கம் அவர்கள் பார்வை திரும்பும் பொழுது,  சூரியனின் பார்வை மங்கத் தொடங்கி  கிட்டத்தட்ட மாலை நெருங்கி விடுகிறது.  அதுகூட பரவாயில்லை, பேருக்கு ஒரு போட்டிதான்  நடத்துவார்கள்.அதையும் சீக்கிரம் முடிச்சாகணுமே என்ற முனைப்போடு நடத்தப்படுவதாக என் மனசுக்குப் படுது. இந்த அமைப்பு மாநில அளவிலான athletics போட்டிகளை மட்டுமே பெரும்பாலும் நடத்துகிறது. தேசிய அளவிலான போட்டிகளில் நாம் பங்கு பெற விரும்பினால், விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறுவதற்கான மொத்த செலவையும் நாமே ஏற்க வேண்டும்.  அதாவது போக்குவரத்து செலவு, அங்கே தங்குவதற்கான தங்குமிடச் செலவு, வழிச்செலவு என எல்லா செலவுகளையும் நாமே பார்த்துக்கொள்ள வேண்டும் என்று வருத்தத்துடன் கூறினான். நானும் அவனை ஆறுதல் படுத்தும் விதமாக, பாரா போட்டிகளுக்கான அகில இந்திய அமைப்பு ஒன்று ஹைதராபாத் நகரில் இருப்பதாக நான் கேள்விப்பட்டேனே என்று சொன்னவுடன். அது இருக்குதான் வரதா யார் இல்லைன்னு சொன்னது. வெறும் போட்டிகளை நடத்துவது மட்டும்தான் அதனுடைய வேலை. எப்படிப் போட்டியில் கலந்துகொள்வதற்கான ஆர்வம் நமக்குளிருந்து புறப்படுகிறதோ,  அதற்கான செலவினங்களும் நம்முடைய பாக்கெட்டிலிருந்துதான் புறப்பட வேண்டும் என்றான். அதாவது டப்பு இருந்தா ரா.  டப்பு இல்லேன்னா ஏமி லேது இது தான் இன்றைய நிலைமை?  என்று நான் கேட்டதை ஆமோதித்த தியாகு இதுபோன்ற சிக்கல்களைத் தடுக்கத்தான் TABSA  என்ற ஓர் அமைப்பைத் தமிழக அளவில் உருவாக்கி எங்களால முடிஞ்ச வரைக்கும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு இருக்கிற தடைகளை நீக்க முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று ஒரு சிறிய பெருமிதத்தோடு கூறினான் தியாகு.
graphic தமிழ்நாடு பார்வையற்றோர் விளையாட்டுச் சங்கத்தின் சின்னம்

            நான் TABSA பற்றி அறியும் ஆர்வத்தில் அது என்னப்பா புது அமைப்பு? என்று கேட்க, அதற்கு அவன்  அதுதான் பா Tamil Nadu blind sports association. நம்ம விரல்மொழியரோட இணை ஆசிரியர் பொன்.சக்திவேல்கூட இச்சங்கத்துல தொழில்நுட்பப் பிரிவு பொருப்புல இருக்காம்பா!இந்த அமைப்போட முக்கிய நோக்கமே பார்வை உள்ளவர்களுக்கும், பார்வையற்றவர்களுக்கும் இடையில் ஒரு இணைப்புப் பாலமாக செயல்பட்டு விளையாட்டுச் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான். அதுமட்டுமில்லாமல்,  ஆர்வமும், ஊக்கமும் இருக்கிற பார்வையற்ற விளையாட்டு வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்வதற்கு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம். என்றான் தியாகு. மேலும் அறிய ஆர்வம் கொண்ட நான், சரி இப்போதைக்கு இந்த அமைப்புடைய பெரிய சவாலா நீ எதைப் பார்க்கிற தியாகு?’ என்று நான் கேட்க, அவன் தொடர்ந்தான் நான் மேலே சொன்னமாதிரி அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது, போட்டிகளுக்குத் தேவையான நிதி ஆதாரங்களைத் திரட்டுவதும்தான் எங்களோட அமைப்புடைய இரு பெரும் சவால்களாக இருக்கின்றன. என்று கவலை தோய்ந்த முகத்துடன், அதே சமயத்தில் நம்பிக்கை இழக்காத குரலுடனும் பேசினான் என் நண்பன். தொடர்ந்து பேசிய அவன், இத பத்தி பேசும்போது எனக்கு Robert Frost என்ற கவிஞனின் வார்த்தைகள்தான் ஞாபகத்துக்கு வருது வரதா. என்றான். நானும் அவன் எண்ணியதைப் புரிந்துகொண்டவனாய் நீ எந்த வரிகளைச் சொல்ற?
"the woods are lovely dark and deep
I have promises to keep
miles to go before I sleep? -
இந்த வரிகள் தானே?’  என நான் கேட்டதற்கு,  அதேதான் வரதா. இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம் இருக்கு. நம்பிக்கையோடு முயற்சி செய்வோம் என்று தியாகு கூற, நான் அவனை இடைமறித்து. உனக்கு இந்த நேரத்தில் பொருத்தமான சீனப் பழமொழியை நினைவுபடுத்த விரும்புகிறேன். "even a journey of thousand miles, begins with a single step"  இந்தப் பழமொழிக்கு ஏத்தமாதிரியே நீங்க TABSA  என்ற அமைப்பின் மூலம் ஒரு பெரும் பயணத்தின் முதலடியை எடுத்து வச்சுட்டீங்க.  இனிமேல் எல்லாம் நல்லபடியா நடக்கும் என்று கூறியவாறு நான் புறப்பட தயாரானேன்.

            railway station சென்று சேர்ந்ததும் நான் தியாகு கையைப்
பிடித்துக்கொண்டு பார்வையற்ற வீரர்களை முன்னேற்ற நீங்கள் தொடங்கி இருக்கும் பயணம் கண்டிப்பாக வெற்றிபெறும் எனக்கூறி நான் என் இருக்கையில் அமர, தொடர்வண்டி மெல்ல நகரத் தொடங்கியது. வரலாற்றுப் புதினத்தைப் படித்துக்கொண்டிருந்த எனக்கு,  நம்முடைய பார்வையற்ற விளையாட்டு வீரர்களுடைய சவால்கள் நிறைந்த வரலாற்றை இந்தச் சந்திப்பு எனக்கு உணர்த்தியது. வண்டி திண்டுக்கல்லை நோக்கி வேகமெடுக்கத் தொடங்கியவுடன் எங்களது கலந்துரையாடல் எனக்குள் ஏற்படுத்திய மனக்குமுறலை ஆற்றுப்படுத்துவதற்காக மீண்டும் அத்திமலைத்தேவன் புதினத்திற்குள் தஞ்சம் புகுந்தேன்.

(கட்டுரையாளர் டில்லி பல்கலைக் கழகத்தின் பகத்சிங் கல்லூரியில் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார்).
தொடர்புக்கு: varadhu.gift@gmail.com


1 கருத்து:

  1. உங்கள் கட்டுரை எனது மூத்த அண்ணன் தியாகராஜனை மானசீகமாய் சந்திக்கிற வாய்ப்பை ஏற்படுத்தியது. நன்றிகள்.

    பதிலளிநீக்கு