மெய்நிகர் : விரல்களை இனைத்து, காதுகளின் வழியே காம்போ அட்டாக் செய்யலாமா? - பொன். குமரவேல்


Graphik: ஒரு குதிரை அதை ஒரு வீரர் பிடித்துக் கொண்டிருக்கிறார் மற்றும் a blind legend. என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

      இன்று உலக அளவில் கனினி மற்றும் திறன் பேசிகளுக்கான விளையாட்டு மென்பொருள் துறை மெய்நிகர் வரை மேம்பட்டு நிற்கிறது. இந்த விளையாட்டு மெய்நிகர் துறையில் பார்வை மாற்றுத்திறனாளிகளும் விளையாடும் வகயில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எண்ணற்ற ஒலி விளையாட்டுகள் உதயமாகிவிட்டன. சாதாரன எழுத்து விளையாட்டுத் துவங்கி, சாகச விளையாட்டுகள் வரை பார்வை மாற்றுத்திறனாளிகள் கனினிகளிலும், திறன்பேசிகளிலும் தங்களது மாயாஜாலத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படி, ஒலி விளையாட்டுக்களின் வளர்ச்சியையும், பார்வை மாற்றுத்திறனாளிகளின் ஒலி விளையாட்டு சாகசங்களையும் இன்னும் பேசிக்கொண்டே போகலாம்தான். அவற்றை எல்லாம் பிரிதொரு கட்டுரையில் பார்த்துக்கொள்வோம்.

      இன்றைய சாகச விளையாட்டுக்கெல்லாம் முன்னோடியான ஒலி விளையாட்டு ஒன்றை பற்றி அலசவிருக்கிறோம். ஆன்ட்ராய்ட் என்னும் தொழில் நுட்ப அண்ட வெளியில் பல லட்சம் கேலக்ஸிகளாய் கேம்கள். அந்த கேம்கள் எனும் கேலக்ஸி உலகத்திற்குள் நுழைவது கனவிலும் நடவாது போல என நினைத்துக்கொண்டிருந்தது ஒரு சிறு கூட்டம். அந்த கூட்டத்தின் கனவுகளை நிஜமாக்கியது பிரான்ஸைச் சேர்ந்த ஒரு நிறுவனம்.  ஆம்! பார்வையற்றவர்களும் பார்வை உள்ளவர்களைப் போல விரல்களைச் சுழற்றி விளையாட ஒரு சாகச விளையாட்டு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உதயமாகி இருக்கிறது.

      அந்த விளையாட்டு (A Blind Legend) எனும் ஒலி விளையாட்டு. பெயரைக் கேட்டதும் எனக்குள் உற்சாகம் தொற்றிக்கொள்ள, விளையாட்டைத் தரவிறக்கம் செய்து விளையாடினேன். அட்டகாசமாய் இருக்கிறது!. பார்வை உள்ளவர்கள் விரல்கள் துணையுடன் விளையாட்டில் செய்யும் அனைத்து வித்தைகளையும் பார்வையற்றோரும் இனி செய்யலாம். அனாயாசமாக சண்டை போடலாம்; காம்போ அட்டாக் செய்யலாம். இன்னும் பல வித்தைகளை விரல் சுழற்றிச் செய்து பட்டையைக் கிளப்பலாம்.
 ‘A Blind Legend’ - என்னும் ஒலிவிளையாட்டு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பே ஆன்ட்ராய்ட் உலகிற்குள் பிரவேசித்து விட்டது. ஆனால் இது பிரபல்யம் ஆகச் சில காலம் எடுத்துக்கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். பிரான்ஸைச் சேர்ந்த Dowino நிறுவனம் மேலும் சில நிறுவனங்களுடன் இணைந்து கூட்டுநிதிப் பங்களிப்பு (Crowd Funding) முறையில் நிதி சேகரித்து இந்தச் சாகச விளையாட்டை உருவாக்கி இருக்கிறார்கள். இவர்களது முக்கிய நோக்கமே பார்வையற்றவர்களும் ஒரு வீடியோ கேமின் அனுபவத்தைச் செவியின் வாயிலாக உணர்ந்து விளையாடி மகிழ வேண்டும் என்பதுதான்!

      இதனை மையமாகக் கொண்டுதான், இந்த விளையாட்டு முழுக்க முழுக்க பார்வையற்றோருக்கு எனப் பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. இதன் முதல் பதிப்பு 2014 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அதில் சில குறைகள் இருந்தன. அடுத்த கட்டமாக அக்குறைகளைக் களைந்து 2015 ஆம் ஆண்டில் இரண்டாவது பதிப்பையும், மேலும் மேம்படுத்தப்பட்டு 2016 ஆம் ஆண்டு ஜூனில் தங்களது மூன்றாம் பதிப்பையும்,  இன்னும் சில குறைகளைக் களைந்து 2018ஆம் ஆண்டு தங்களது இறுதிப் பதிப்பையும் படு நேர்த்தியாக வடிவமைத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

      தற்பொழுது இந்த விளையாட்டு ஆன்ட்ராய்ட், ஐஓஎஸ் போன்ற இயங்குதளங்களில் திறன்பேசிகள் செயல்படும் விதத்தில் எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான்  கணினியிலும் இயங்கும் வகையில் இந்த விளையாட்டை வெளியிட்டிருக்கிறார்கள்.

      எப்படிச் செயல்படுகிறது இந்தச் சாகச விளையாட்டு?
சுருக்கமாக இந்த விளையாட்டின் தொழில் நுட்பச் செயல்பாட்டைத் தெரிந்துகொள்வோம்.

      இந்த விளையாட்டு முப்பரிமாண ஒலி முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது HRTF (Head-related transfer function) என்கிற தொழில் நுட்பத்தின் வாயிலாக, ஒலிகள் அனைத்தும் இரு வழி ஒலி சார் (Binaural) மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நவீன தொழில் நுட்பம் மூலம் ஒலியைப் பதிவு செய்வதால், அனைத்து நிகழ்வுகளும் / சத்தங்களும் நம்மைச் சுற்றி ரியலாக நடப்பது போன்ற உணர்வை நம் காதுகளுக்குள் ஒலிக்கும் ஒலி ஏற்படுத்துகிறது.  பிரான்சைச் சேர்ந்த வானொலி நிலையமும் இந்த விளையாட்டு வடிவமைப்பாளர்களுடன் கைகோர்த்து அவர்களுக்குத் தேவையான ஒலிகளைத் தங்களது ஒலிக் களஞ்சியத்திலிருந்து வழங்கி இருக்கிறார்கள்.

விளையாட்டின் கதைச் சுருக்கம்”
      டோக் என்னும் நாட்டில் சிறு பார்வையற்ற குடும்பம் ஒன்று வாழ்ந்து வருகிறது.  இக்குடும்பத் தலைவனின் பெயர் எட்வர்ட் ப்ளேக். இவருக்கு முழு பார்வையும் கிடையாது. குடும்பத் தலைவி ஒரு பேரழகி. இந்தத் தம்பதியருக்கு லூயிஸ் என்னும் அழகான குரல் அமையப் பெற்ற ஒரு மகள் இருக்கிறாள். திட்டமிட்ட குடும்பம், திகட்டாத இன்பம் என வாழ்ந்து வரும் இக்குடும்பத்தில் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. டோக்கை அரசாளும் மன்னர், எட்வர்ட் ப்ளேக்கின் மனைவியைக் கவர்ந்து சென்று விடுகிறார். இப்பொழுது விளங்கி இருக்கும் நான் மேலே பேரழகி என்று அவரை ஏன் குறிப்பிட்டேன் என்று. பேரழகிகள் என்றாலே மன்னர் காலத்தில் இருந்து இன்று வரை பிரச்சனைதானே! மனைவியை மீட்டெடுக்க மகளுடன் சேர்ந்து களமிறங்குகிறார் அப்பா எட்வர்ட் ப்ளேக். மகள் வழி காட்ட, அப்பா குதிரையில் தன் பயணத்தைத் துவங்குகிறார். பயணிக்கும் வழியெங்கும் சினிமாக்களில் கதா நாயகனுக்கு வரும் சிக்கல்கள் போலவே ப்ளேக் நிறைய ஆபத்துகளை எதிர்கொள்கிறார். இதை எல்லாம் மகள் லூயிஸின் வழிகாட்டலின் மூலம் கடந்து தன் மனைவியை மன்னரிடமிருந்து மீட்டாரா இல்லையா என்பதே மீதிக் கதை.
பி.கு : அரசரிடமிருந்து ப்ளேக்கின் மனைவியை மீட்பதும், மீட்காததும் நமது கைகளில்தான் உள்ளது..

எப்படித் தரவிறக்கம் செய்து விளையாடுவது?
      வழக்கம் போலவே கூகுளின் ஆன்ட்ராய்ட் மென் பொருள் கடலான பிளே ஸ்டோருக்குச் சென்று A Blind Legend எனத் தட்டச்சு செய்தோ, குரல் வாயிலாக தேடியோ இந்த விளையாட்டை உங்கள் திறன்பேசிகளில் நிறுவிக்கொள்ளுங்கள்.

      தரவிறக்கம் செய்யும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியது : 
உங்கள் ஃபோன் 3GB க்கும் மேற்பட்ட ரேம் (RAM) கொள்ளளவுடையதாக இருத்தல் அவசியம். திரையின் அளவு 5 அங்குலத்துக்கும் கூடுதலாக இருந்தால் நல்லது.
இந்த விளையாட்டைத் தரவிறக்க 300  MB களுக்குள் செலவாகும்.
கனினிகளுக்குத் தரவிரக்க விரும்புவோர்  இவ்விளையாட்டு வடிவமைப்பாளர்களின் பிரத்தியேக இனையதளத்தைப் பார்வையிட்டு தரவிறக்கிக் கொள்ளலாம்.

எப்படி விளையாடுவது
      முதலில் விளையாட்டைத் திறந்ததும் உங்கள் திரை வாசிப்பானைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துக்கொள்ளுங்கள்.
அப்பொழுதுதான் விளையாட்டின் முழுப் பயனையும் நீங்கள் அனுபவிக்க முடியும்.

      இந்த விளையாட்டை விளையாட உங்கள் திறன்பேசியுடன் தரமான ஒரு ஹெட் செட் இருந்தால் போதுமானது. ஹெட் செட்டை இனைத்து விளையாட்டில் வரும் குரல் வழிகாட்டலை கவனமாகக் கேட்டுப் பின்பற்றினாலே நீங்கள் இந்த விளையாட்டில் மன்னாதி மன்னராகத் திகழலாம்.

      இந்த விளையாட்டில் நீங்கள் மொத்தம் 27 கட்டங்களைக் கடக்க (விளையாட) வேண்டும்.
எப்படி விளையாடுவது என்பது குறித்த ஒரு கானொளி 
இனைப்பு. பி.கு : சாம்சங், JBL, சோனி போன்ற தரமான ஹெட் செட்களை பயன்படுத்தி விளையாடினால் இந்த விளையாட்டின் முழு பலனையும் அனுபவிக்கலாம் என்பது அனுபவரீதியாக நான் உணர்ந்தது.

      , இன்னொருத்தன் மனைவியை மீட்க்க நாம்தான் பாடுபட வேண்டுமா என்று வாசகர்கள் மனதிற்குள் பொங்குவது நன்றாகவே கேட்கிறது எனக்கு. இருந்துவிட்டு போகட்டுமே வாசகர்களே! ப்ளேக்கும் நம்மை போன்ற பார்வையற்றவர் தானே வாருங்கள் நாமும் அவருடன் இனைந்து அவரது மனைவியை மீட்டு அந்த மனுஷனைப் பெருமூச்சு விடவைப்போமே!

      இறுதியாக ஒரு விஷயம், இந்த விளையாட்டுக்கான வழிகாட்டியின் குரல் தேர்வு என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது.

ஆன்ட்ராய்டுக்கான பிளே ஸ்டோர் இனைப்பு :

கனினிக்கான தரவிறக்க பிரத்தியேக இனையதள இனைப்பு:


தொடர்புக்கு: kumaravel.p95@gmail.com

5 கருத்துகள்: