வணக்கம் வாசகர்களே!
அண்மையில் நிகழ்ந்த பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கும், அரசியலுக்கும் நெருக்கமான மூன்று முக்கியச் செய்திகளை இங்கு பேசலாம் எனக் கருதுகிறேன்.
1. கொரோனாவில் பலியான திரு. அருணாச்சலம்.
திரு. அருணாச்சலம் |
அகில இந்தியப் பார்வையற்றோர் முற்போக்குச் சங்கத்தின் நிறுவனர் திரு. அருணாச்சலம் அவர்கள் கடந்த ஜூன் 30-ஆம் நாள் காலமானார். கொரோனா ஊரடங்கின் தொடக்க காலகட்டத்தில் பம்பரமாய்ச் சுழன்று பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இவர் உதவியிருக்கிறார். நாற்காலி பின்னுதல், வணிகம் செய்தல் முதலிய பணிகளை மேற்கொண்டிருக்கும் சாதாரண பார்வையற்றவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கான அமைப்பாகத் தனது அமைப்பை வளர்த்தெடுத்தவர்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீவிர ஆதரவாளரான இவர், முன்னாள் அமைச்சர் வளர்மதி அவர்களுக்கு நெருக்கமானவர்.
இவரையும், இவரது மனைவியையும் கொடூரமான கொரோனா காவுகொண்டுவிட்டது. இவருக்கு 30 வயது மதிக்கத்தக்க மன வளர்ச்சி குன்றிய மகன் இருக்கிறார்.
இவரை இழந்து வாடும் இவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், உடன் பயணித்த அரசியலாளர்களுக்கும் விரல்மொழியரின் ஆழ்ந்த இரங்கல்கள்.
2. மாற்றுத்திறனாளிகளுக்கெனத் தனிப் பாசறை அமைக்கும் ‘நாம் தமிழர்’
‘நாம் தமிழர்’ பல்வேறு விதவிதமான அணிகளை ‘பாசறை’ என்ற பெயரில் உருவாக்கிவருகிறது. அந்த வரிசையில் மாற்றுத் திறனாளிகள் பாசறை அமைப்பதற்கு அண்ணன் ஒப்புதல் வழங்கியிருப்பதாக மகிழ்ச்சி பொங்கத் தெரிவிக்கின்றனர் சீமானின் தம்பிகள். முகம்மது கடாஃபி என்ற உடல் சவால் மாற்றுத்திறனாளி்யை இப்பாசறையின் மாநிலச் செயலாளராக நியமித்திருக்கிறது இராவணன் குடில்.
இம்முயற்சியில் மதுரையைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி இளைஞரான வெங்கலமூர்த்தி அவர்களின் பங்கு முக்கியமானது.
வெங்கலமூர்த்தி |
தமிழக அரசியல் வரலாற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கென அங்கீகரிக்கப்பட்ட, தனி அடையாளத்துடன் கூடிய அணி அமைக்கப்பட்டிருப்பது இங்குதான் என்று பூரிக்கிறார் இவர். தற்போது திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியின் மேற்கு ஒன்றியத்தின் செய்தித் தொடர்பாளராக கட்சியால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார் வெங்கலமூர்த்தி.
பிற கட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் இயங்கினாலும், அவர்களுக்கென அணி அளவிலான மரியாதை உரிய அளவில் தரப்பட்டதாகத் தெரியவில்லை. நாம் தமிழர் மாற்றுத்திறனாளிகள் பாசறை அந்த வகையில் இல்லாமல் திறம்படச் செயலாற்ற இதழின் வாழ்த்துகள்.
பாசறையில் சேர விரும்புவோர் 9600221586
என்ற
இவரது
எண்ணைத்
தொடர்புகொள்ளலாம்.
3. மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சிப் பொறுப்புகளில் இட ஒதுக்கீடு வேண்டும்-சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டைத் தமிழக உள்ளாட்சித் தேர்தல் மூலம் நிரப்பும் பொறுப்புகளுக்கு உறுதிப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்துத் தமிழக அரசின் கருத்தைக் கேட்டிருக்கிறது உயர்நீதிமன்றம். தமிழக அரசு என்ன சொல்கிறது எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.
அடுத்த இதழில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலக்கிய அணியில் செயல்பட்டுவரும் ஒரு பார்வை மாற்றுத்திறனாளியை உங்களுக்கு அறியத்தருகிறேன். தொடர்ந்து அரசியல் விழிப்புணர்வோடு இருப்போம்.
வாசகர்களே!
உங்களுக்குத் தெரிந்த பார்வை மாற்றுத்திறனாளி அரசியலாளர்களை எங்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். அவர்கள் தேர்தல் அரசியலிலோ, கொள்கை அரசியலிலோ ஈடுபாடு கொண்டவராக இருக்கவேண்டும். களப்பணி ஆற்றியவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் உங்களுக்குத் தெரியும் என்றால், 9894335053 என்ற எனது தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொள்ளுங்கள். ஆவணப்படுத்துவோம்.
பாட்டாலி மக்கள் கட்சியிலும், தேசிய முற்ப்போக்கு திராவிட கட்சியிலும் மாற்றுத்திரனாளிகளுக்கான பிரிவு அதிகாரப் பூர்வமாகஇருக்கிரது.
பதிலளிநீக்குதங்களின் தகவலுக்கு மிக்க நன்றிகள் திரு அரங்கராஜா!
நீக்கு