தமிழ் பேசும் பார்வை மாற்றுத்திறனாளிகளின் வரலாற்றில் முதல்முறையாக 25 மின்னிதழ்களை வெளியிட்டுச் சாதனை படைத்திருக்கிறது விரல்மொழியர். இதையொட்டி, வாசகர்களை மகிழ்விக்க இதழின் சார்பில் சில போட்டிகள் அறிவிக்கப்பட்டன. போட்டிகளில் வாசகர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஜூன் 14 தொடங்கி மாத இறுதி வரை வாரம் ஒரு போட்டியாக நடத்தப்பட்டு, ஜூலை 1-ஆம் நாள் உரியவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
அவை குறித்த தகவல்களை இங்கு விரிவாகக் காண்போம்.
1. பேச்சுப் போட்டி
இப்போட்டியில் பார்வையுள்ளவர்களும் ஆர்வமாய் பங்கேற்றனர். கொடுக்கப்பட்ட தலைப்புகளில் போட்டியாளர்கள் 3 நிமிடங்களுக்குள் பேசி, புலனம் (whatsapp) வழியாக அனுப்பிவைக்கவேண்டும் என்பதே விதிமுறை.
கொடுக்கப்பட்ட தலைப்புகள் இவைதான்.
1. நான் தமிழக முதல்வரானால் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு
என்ன
செய்வேன்? (இத்தலைப்பு பொதுவானது)
2. என்னைச் செதுக்கிய பார்வையுள்ளவர் (இத்தலைப்பு பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கானது)
3. என்னைச் செதுக்கிய பார்வை மாற்றுத்திறனாளி (இத்தலைப்பு பார்வையுள்ளோருக்கானது)
இத்தலைப்புகளில் பேசி 18 பேர் தங்கள் பங்களிப்பை நல்கினர். அவர்களில் 8
பேர்
பார்வை
மாற்றுத்திறனாளிகள். 10 பேர் பார்வை மாற்றுத்திறனாளி அல்லாதவர்கள். போட்டியில் கலந்துகொண்டவர்களில் 8
பேர்
ஆண்கள். 10 பேர் பெண்கள். அதிலும், கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் பள்ளி, கல்லூரிகளில் படித்துக்கொண்டிருக்கும்
மாணவர்கள்.
போட்டிக்கான நடுவர்கள் தங்கள் இல்லத்திலிருந்தே பேச்சுகளைக் கேட்டு மதிப்பெண் வழங்கி பரிசுக்குரியோரைத் தேர்ந்தெடுத்தனர். போட்டியின் நடுவர்களாக பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டுப்புறவியல் துறையில் கௌரவ விரிவுரையாளராகப் பணியாற்றும் முனைவர் R. பெரியதுரை, ராமநாதபுரம் மாவட்டம் ரகுநாதபுரம் அரசுப் பள்ளித் தமிழாசிரியர் திரு. T. முத்துசாமி, சென்னை பக்தவச்சலம் நினைவு மகளிர் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் திரு. அரங்க. ராஜா ஆகியோர் பொறுப்பேற்றனர்.
இவர்கள் தந்த முடிவின்படி, சிறப்புப் பரிசு பெற்றார் 9-ஆம் வகுப்பு மாணவரான p.s.
பிரசன்னா. நடுவர்கள் மூவரும் முடிவுசெய்து நான்காம் பரிசினை ஒருவருக்கு வழங்கினர். அதைப் பெற்றவர் பொன்னமராவதி கணேசர் கலை & அறிவியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்
க. புவனேஸ்வரி. இவர்கள் இருவரும் பார்வையுள்ளவர்கள்.
மூன்றாம் பரிசு தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் வசித்துவரும் முத்துலட்சுமி என்ற பார்வையுள்ளவருக்குக் கிடைத்தது. இவர் சக்தி என்ற பார்வை மாற்றுத்திறனாளி இசையாசிரியரின் மனைவியார்.
‘என்னைக் கவர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி’ என்ற தலைப்பில் பேசி, இரண்டாம் பரிசைப் பெற்றுச் சென்றார் +2 மாணவி கா. பவித்ரா. இவர் பேச்சில் இடம்பெற்ற பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியையான திவ்யா டீச்சரை அறிந்து பலரும் வியப்பில் ஆழ்ந்தனர்.
சா. கவிலட்சுமி |
முதல் பரிசு சா. கவிலட்சுமி அவர்களுக்குக் கிடைத்தது. இவர் தஞ்சை பார்வைக் குறையுடையோருக்கான அரசுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்
மாணவி.
போட்டியில் பார்வையுள்ளவர்களே அதிகம் பரிசுகளைப் பெற்றனர் என்பதும், பங்கேற்பாளர்கள் பலர் பள்ளி, கல்லூரிகளில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் என்பதும் இதழின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி.
போட்டியை இதழின் இணையாசிரியர் பொன். சக்திவேல், வடிவமைப்பாளர் ரா. சரவணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
பேச்சுப்போட்டியில் பேசியவர்களின் காணொளிகள் விரல்மொழியரின் யூட்யூப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டு வருகின்றன.
2. மெட்டுக்குப் பாட்டு
இப்போட்டி பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமானது. திரைப்படப் பாடல் மெட்டில் சரியாகப் பொருந்தும் வண்ணம் பாடல்களை எழுதி, அவற்றை ஒலி வடிவிலோ, வரி வடிவிலோ புலனம் அல்லது மின்னஞ்சல் வழியாக இதழுக்கு அனுப்பவேண்டும் என்பது விதி. இந்த அடிப்படையில் 18 பேர் போட்டியில் பங்கேற்றனர். அவர்களில் 12
பேர்
ஆண்கள். 6 பேர் பெண்கள்.
இப்போட்டிக்கு நடுவர்களாக நமது இதழில் ‘ராகரதம்’ தொடர் எழுதிய பூவிருந்தவல்லி பார்வைக் குறையுடையோருக்கான அரசுப் பள்ளித் தமிழாசிரியர் திரு. ப. சரவணமணிகண்டன், பல மெட்டுகளுக்குப் பாட்டெழுதிப் பழக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாள விடுதி அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியர் X. செலின்மேரி, பகுதி நேர இசையாசிரியரும், பலரும் அறிந்த இசையமைப்பாளருமான திரு. D. ராஜதுரை ஆகியோர் பொறுப்பேற்றனர்.
இவர்களின் தீர்ப்பின்படி, திருநெல்வேலி அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் இசையாசிரியர் சங்கரநாராயணன் சிறப்புப் பரிசு பெற்றார். இவர் சாரதா திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மணமகளே மருமகளே வா வா’ என்ற பாடல் மெட்டிற்குப் பாட்டெழு்தியவர். மூன்றாம் பரிசு சூரியவம்சம் படத்தில் இடம்பெற்ற ‘ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ’ மெட்டில் பாடல் எழுதிய சென்னையைச் சேர்ந்த p. ஆசைத்தம்பி அவர்களுக்குக் கிடைத்தது.
இரண்டாம் பரிசு பெற்றார் வேலூரைச் சேர்ந்த ஆசிரியையான தாஹிரா ஷஃபியுல்லா. இவர் சமுத்திரம் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அழகான சின்ன தேவதை’ மெட்டில் பாடல் எழுதியவர்.
வெங்கடேசன் |
முதல் பரிசு சென்னை பல்கலைக் கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பயின்றுவரும் வெங்கடேசனுக்குக் கிடைத்தது. இவர் ஜோடி திரைப்படத்தில் இடம்பெற்ற ‘காதல் கடிதம் தீட்டவே’ மெட்டில் பாடல் இயற்றித் தந்திருக்கிறார்.
போட்டியில் இடம்பெற்ற பெரும்பாலான பாடல்கள் காலச் சூழலுக்கு ஏற்ற வகையில் கொரோனா விழிப்புணர்வுப் பாடல்களாக அமைந்ததில் வியப்பில்லை. வெற்றியாளர்களின் பாடல்கள் அடுத்தடுத்த இதழ்களை அலங்கரிக்க இருக்கின்றன.
போட்டியை ஒருங்கிணைத்தார் இதழின் உதவியாசிரியர் ஜோ. யோகேஷ்.
3. வினாடிவினா
விரல்மொழியர் நடத்திய பெருமிதத்திற்குரிய போட்டி இது. சூம் அரங்கில் கருத்தரங்குகள் மட்டுமின்றி, போட்டிகளையும் நடத்தலாம் என்ற புதிய முயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது.
ஜூன் 28 ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு தமிழ்ப் போட்டிகள் வரலாற்றிலேயே முதல்முறையாக சூம் அரங்கில் நடைபெற்றது விரல்மொழியரின் வினாடிவினாப் போட்டி. பார்வையுள்ளவர்களும் போட்டியில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் , அப்படி யாரும் பங்கேற்றிடவில்லை.
7 பார்வையற்ற வாசகர்கள் போட்டியில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். அதுவரை வெளியான நமது 24 இதழ்களிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டன.
இதழின் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளர் பொன். குமரவேல் சூம் அரங்கை நிர்வகித்ததோடு, போட்டியையும் ஒருங்கிணைத்தார்.
புதுக்கோட்டை பார்வைக் குறையுடையோருக்கான அரசுப் பள்ளியின் விடுதிக் காப்பாளர் திரு. பாஸ்கர் அவர்கள் போட்டியைத் தொடங்கிவைத்தார். இவர் 27-01-2018-இல் நடைபெற்ற விரல்மொழியர் தொடக்கவிழாவில் மிகத் தீவிரமாகக் களப்பணி ஆற்றியவர்.
போட்டியைத் தொடங்கிவைக்க இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட விதம் சுவாரஸ்யமானது. விரல்மொழியர் மின்னிதழ் புலனக் குழுவில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு இவர் சரியான பதிலை முதல் நபராக வழங்கியிருந்தார். அதற்கு இவருக்கு வழங்கப்பட்ட இன்ப அதிர்ச்சியான பரிசு இது. மிகப் பொருத்தமான ஒருவர் போட்டியைத் தொடங்கிவைத்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி.
இதழின் தொகுப்பாசிரியர் ம. தமிழ்மணி கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார். மொத்தமுள்ள 5 சுற்றுகளில் முதல் 4 சுற்றுகளுக்கான கேள்விகளை இவர் கேட்டுப் பதில்களைப் பெற்றார்.
வழக்கத்திற்கு மாறாக, இறுதிச் சுற்று ஜாலியாக நகர்ந்தது. வழக்கமாக போட்டியாளர்களிடம் இருக்கவேண்டிய இறுக்கம் மறைந்து சிரிப்பொலி பரவியது. இதழின் இணையாசிரியர் பொன். சக்திவேல் இதழின் சுவாரஸ்யமான பகுதிகளிலிருந்து கேள்விகளை உருவாக்கி இப்பகுதியில் வழங்கியிருந்தார். இது போட்டியைக் கேட்டுக்கொண்டிருந்த நேயர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது.
போட்டிக்கு மதிப்பெண் கணக்கிடுபவராகப் பொறுப்பேற்றார் மதுரை இந்தியப் பார்வையற்றோர் சங்கத்தின் கணினி பயிற்றுநர் திரு. J. மோகன்ராஜ். சூம் செயலியில் உள்ள திரைப் பரிமாற்ற (Screen sharing) வசதியின் மூலம் இவர் மதிப்பெண் விவரங்களை உடனுக்குடன் திரை வாசிப்பான் (screen reader) வழியாகத் தந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
போட்டியில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த வங்கி ஊழியர் பால்பாண்டி, திருச்சி அரசுப் பள்ளி ஆசிரியர் பிரகாஷ் ஆகியோர் சிறப்புப் பரிசுகளைப் பெற்றனர்.
மூன்றாம் பரிசு பெற்றார் புதுக்கோட்டையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்.
இரண்டாம் பரிசு புதுக்கோட்டை அரசுப் பள்ளி ஆசிரியை X. செலின்மேரிக்குக் கிடைத்தது.
S. சந்தோஷ்குமார் |
முதல் பரிசு பெற்றார் S.
சந்தோஷ்குமார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் முதுகலை
ஆங்கிலம் பயின்றுவருகிறார் இவர்.
வினாடிவினா போட்டியை முழுமையாய்க் கண்டு ரசிக்க இந்த இணைப்பைச் சொடுக்குங்கள்.
வினாடிவினா போட்டியை முழுமையாய்க் கண்டு ரசிக்க இந்த இணைப்பைச் சொடுக்குங்கள்.
பரிசு விவரம்
அனைத்துப் போட்டிகளுக்குமான பரிசுகளையும் அகவிழி தர்மசேவை அறக்கட்டளை வழங்கியது. சேலத்தில் இயங்கிவரும் இவ்வறக்கட்டளை பார்வையற்றோர் உள்ளிட்ட நலிவடைந்த பலருக்கும் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான பல பணிகளை முன்னெடுத்துவருகிறது.
திரு. U. ரஜினிகாந்த் |
இவ்வறக்கட்டளையின் அறங்காவலர் திரு. U. ரஜினிகாந்த் அவர்களுக்கு விரல்மொழியரின் நன்றிகள்.
பரிசுகளை உரியவர்களுக்குச் சேர்ப்பிக்கும் பணியை இதழின் உதவியாசிரியரான ஜோ. யோகேஷ் மேற்கொண்டார்.
பேச்சுப் போட்டியில் பங்கேற்ற பார்வையுள்ளவர்களைத் தவிர, போட்டிகளில் பங்கேற்றவர்கள், நடுவர்கள், போட்டிகளை ஒருங்கிணைத்தவர்கள், பிற உதவிகளை வழங்கியவர்கள், பரிசளித்தவர்கள் என அனைத்துச் செயல்பாடுகளையும் பார்வை மாற்றுத்திறனாளிகளே மேற்கொண்டனர் என்பதை இங்கு குறிப்பிட்டாகவேண்டும்.
மொத்தத்தில் போட்டிகள் அனைத்தும் சிறப்பாக நடந்து முடிந்தன. அவை புதிதாகப் பலரோடு இணைந்து பணியாற்ற விரல்மொழியருக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தன. அதோடு, புதிய பல வாசகர்களையும் உருவாக்கித் தந்துள்ளன. இந்த ஊரடங்கு காலகட்டத்தில் விரல்மொழியர் மேற்கொண்ட மிகப் பயனுள்ள பணி இது என்று சொல்லிக்கொள்வதில் தவறில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக