அலசல்: பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களின் கணினி வழித் தேர்வுக் கனவு பலிக்குமா? - X. செலின்மேரி


graphic கணினியில் தட்டச்சு செய்வது போன்ற படம்
      சாதனை படைக்கும் அனைவருக்கும் சரித்திரப் பக்கங்கள் இடம் கொடுக்கத் தவறுவதில்லை. சாதிக்கத் துடிக்கும் எவருக்கும், குறிப்பாக பார்வையற்றோருக்கு வரப்பிரசாதமாக அமைந்த தொழில்நுட்பக் கருவிகள் கரம் கொடுக்கத் தயங்குவதில்லை.
      பார்வைக் குறைபாடு உறுதி செய்யப்பட்டபின், கணிப்பொறியின் கரங்களைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டு, யாராலும் கணிக்க முடியாத அளப்பரிய சாதனையைப் படைத்து ஒரே நாளில் பலரது பேசுபொருளாக மாறியிருக்கிறார் நெய்வேலி ஜவஹர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் பயின்ற பார்வை மாற்றுத்திறனாளி மாணவி ஓவியா.
      பொதுவாக பதிலி எழுத்தர்களின் உதவியோடு தேர்வை எழுதும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குச் சுயமாக தங்கள் தேர்வுத் தாள்களை நிரப்பும் ஆசை ஏற்படுவது எதார்த்தம் தான். அந்த ஆசைக்கு இரண்டாம் முறையாக செயல்வடிவம் கொடுத்திருக்கும் மாணவியாகிய ஓவியா, பத்தாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வைக் கணிப்பொறியில் எழுதி 500-க்கு 447 மதிப்பெண்களைப் பெற்று சமூக ஊடகங்களைத் தன்பால் ஈர்த்து இருக்கிறார். அவர் கடந்து வந்த பாதை குறித்து அவரிடமும், அவரது பெற்றோரிடமும் விரல்மொழியரின் சார்பாக உரையாடினேன். இதோ! அவர்களது வார்த்தைகளிலேயே:
graphic ஓவியா
ஓவியா
      முதல் வகுப்புப் படிக்கும்போது பார்வை குறைய ஆரம்பித்தது. இரண்டாம் வகுப்பை மூன்று பள்ளிகளில் படித்தேன். மூன்றாம் வகுப்பில் டைப்பிங் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். ஏழாம் வகுப்பில் என்னுடைய தேர்வுத் தாள்களை திருத்துவதில் ஆசிரியர்களுக்குச் சிரமம் ஏற்பட்டதாலும், முழுப் பார்வை இழப்பு காரணமாகவும் கணினியில் தேர்வு எழுத வாய்ப்பைக் கேட்டுப் பெற்றுக் கொண்டேன். முதல் வாய்ப்பு வெற்றிகரமாக அமையவே அதையே வழக்கமாக்கிக் கொண்டேன். என்சிஇஆர்டி புத்தகங்களை கணினியில் தரவிறக்கம் செய்து படித்தேன். பள்ளிப் பாடங்களை லேப்டாப்பில் குறிப்பெடுத்துக் கொண்டேன். ஆசிரியர்கள் கரும்பலகையில் எனக்காகச் சொல்லிக்கொண்டே எழுதினார்கள். கணிதப் பாடங்களை அப்பா வீட்டில் சொல்லிக் கொடுத்தார். பத்தாம் வகுப்பு தேர்வு எழுத சிபிஎஸ்சி அனுமதி பள்ளியின் மூலம் பெறப்பட்டது. இப்போது சாதனைப் பெண்மணியாக உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன். இந்த வெற்றி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. எல்லாக் குழந்தைகளும் என்னைப்போல கொடுக்கப்படும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திச் சாதிக்கவேண்டும்என்று பெருமிதம் பொங்கக் கூறினார் ஓவியா.
      ஓவியாவின் திடீர் பார்வைக் குறைவு எங்களை நிலைகுலையச் செய்துவிட்டதுதிருச்சி பள்ளியில் கிடைத்த ஷேடோ டீச்சிங் முறை மற்றும் சங்கர் சார், ரகுராமன் சார்   போன்றோரின் வழிகாட்டுதல்கள் எங்களுக்கும் புது உற்சாகத்தையும் நம்பிக்கையையும் விதைத்தன. மூன்றாம் வகுப்பில் டைப்பிங் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தோம். பிரெயில் ஓரளவிற்கு பயிற்றுவித்திருக்கிறோம். அபாகஸ் பயிற்சியும் கொடுத்திருக்கிறோம். கல்வியின் தரம் குறைந்து விடக்கூடாது என்பதற்காக சிபிஎஸ்சி பள்ளியிலேயே படிக்க வைக்கிறோம்
graphic ஓவியாவின் அம்மா கோகிலா
ஓவியாவின் அம்மா கோகிலா
      வகுப்பறையில் கணினியைப் பயன்படுத்த பள்ளி நிர்வாகம் அனுமதி அளித்தது. இப்பொழுது இன்டர்நெட் கற்றுக்கொடுக்கத் தொடங்கியிருக்கிறோம். எங்கள் முயற்சிக்கும், கடின உழைப்பிற்கும் தகுந்த வெற்றி கிடைத்திருக்கிறது. நாங்கள் ஒன்று கொடுத்தால் ஓவியா பத்து கொடுப்பாள்" என்று  பூரிக்கும் அவரது தாயார், "எல்லாக் குழந்தைகளும் சாதிக்க வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். கல்விக்காக பார்வையற்றோரின் பெற்றோர் பிற இடங்களுக்குச் சென்று தங்குவது என்பது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை; ஆதலால் அவரவர் ஊருக்கு அருகாமையில் உள்ள பள்ளியில் படிக்க குழந்தைகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும். இத்தகைய குழந்தைகளுக்காகப் பாடுபடும் பெற்றோரை இகழ்ந்து பேசும் சமூகம் முற்றிலுமாக மாற வேண்டும். என்று கூறி முடித்தார்.
      கணினிக் கல்வி  கிராமப்புற பார்வையற்றோருக்கு எட்டாக்கனியாக இருந்த காலம் எல்லாம் மலையேறி விட்டது. இப்பொழுது பெரும்பாலான பள்ளிகளில் கணினி பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. எந்தெந்தப் பள்ளிகளில் எப்படிக் கணினி போதிக்கப்படுகிறது? அந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தற்போதைய நிலை என்ன? ஓவியாவைப்  போல  சாதனை படைக்க துடிக்கும் குழந்தைகளை எப்படி வழிநடத்தி அனைவருக்கும் கணினி மூலம் தேர்வு எழுதும் வாய்ப்பைப் பெற்றுத் தரமுடியும்? போன்ற கேள்விகளோடு சில சிறப்புப் பள்ளி ஆசிரியர்களையும், சமூக ஆர்வலர்களையும் விரல்மொழியர் சார்பாகச் சந்தித்துக் கருத்துகளைக் கேட்டேன்.
      கர்ணவித்யா பயிற்சிப் பட்டறையை நடத்தி வருபவரும், ஓவியாவின் வியத்தகு வெற்றிக்கு வழிகாட்டியவருமாகிய திரு ரகுராமன் அவர்களிடம் விரல்மொழியரின் சார்பாகக் கருத்து கேட்கப்பட்டது. அவருடைய கருத்துகள் இதோ!
graphic ரகுராமன்
ரகுராமன்
      திடீர் பார்வை இழப்பைச் சந்தித்த குழந்தையின் கலக்கமிகு பெற்றோராக ஓவியாவின் பெற்றோர் என்னைச் சந்தித்தனர். அவர்களுக்குக் குழந்தைக்குக் கற்பிக்கப்படவேண்டிய மோபிலிடி அண்ட் ஒரியண்டேஷன் பற்றியும், அப்போதைய பார்வையற்ற சாதனையாளர்கள், அவர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்தும் தெளிவான விளக்கம் அளித்தோம். குழந்தையின் கல்விக்காக எந்த எல்லைக்கும் செல்லும் துணிச்சல் பெற்ற அவர்கள் ஓவியாவின் கல்விக்காக லேப்டாப் வாங்கிக் கொடுத்துத் தட்டச்சு செய்யப் பழக்கினர். பிரெயில் வாசிப்பை மேம்படுத்த பிரெயில்மீ கருவியையும் பயன்படுத்திப் பயிற்சி அளிக்கத் தொடங்கினர். சென்னையிலிருந்து நெய்வேலிக்குப் பணிமாறுதல் பெற்ற பின்னரும் எங்களோடு தொடர்பில் இருந்தனர். அவ்வப்போது ஆலோசனைகளைக் கேட்டுப் பெறும் வழக்கத்தையும் கொண்டிருந்தனர். ஓவியாவும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பெற்றோர் காட்டிய வழியில் பயணித்ததால் இந்த வெற்றி சாத்தியப்பட்டது.
      மற்ற பார்வையற்ற குழந்தைகளுக்கு இதுபோன்ற சிறப்பான குடும்பப் பின்னணி அமைவது சிரமம்எனவே பார்வை மாற்றுத்திறன் குழந்தைகளைத் தேர்வெழுதப் பயிற்றுவிற்பதற்கென்றே தனிப் பாடம் (course)  உருவாக்கப்பட வேண்டும். ஆறாம் வகுப்பு முதலே பயிற்சியைத் தொடங்கும் பட்சத்தில் அவர்கள் தட்டச்சுத் திறனை மேம்படுத்தி தேர்வுக்கான வழிகாட்டுதலில் முனைப்புடன் செயல்பட முடியும். கற்பிக்கப்படும் பாடங்கள் மட்டுமே தேர்வு எழுதும் அளவுக்கு மாணவர்களைத் தயார் செய்யப் போதுமானதாக இருப்பதில்லை. இதுபோன்ற சிறப்புப் பயிற்சிகள் மூலம் ஓவியாவின் சாதனை தொடர முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம்என்றார்.
      இது குறித்து சென்னை சிறுமலர் பார்வையற்றோர் பள்ளியில் கணிப்பொறி அறிவியல் ஆசிரியரான திருமதி லதா அவர்களுடைய கருத்துக்களைக் கேட்போமா?

graphic ஆசிரியர் லதா
ஆசிரியர் லதா
       "எங்கள் பள்ளியில் மூன்றாம் வகுப்பிலிருந்தே கணினி கற்பிக்கிறோம். 3 முதல் 5 வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஃபிங்ஙரிங் பயிற்சி அதாவது கணினியில் விரல்களைப் பயன்படுத்தி எழுத்துக்களை மட்டும் தட்டச்சு செய்யும் முறையைக் கற்பிக்கிறோம்.  6 முதல் 9 வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை கணினி பாடவேளையை உருவாக்கிஅடிப்படைக் கணினியை மையமாகக்கொண்டு நாங்களே சுயமாகப் பாடத்திட்டத்தை வகுத்துப் பயிற்சி கொடுத்து பருவத் தேர்வுகளை நடத்திவருகிறோம்.
      11, 12-ஆம் வகுப்புகளில் கணினி அறிவியல் பாடம் நடைமுறையில் உள்ளது. எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் இந்தப் பாடத்தை அறிமுகப்படுத்திய முதல் பார்வையற்றோருக்கான பள்ளி எங்களுடையதுதான். பார்வையற்ற பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் தொழில்நுட்பச் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான அடிப்படைத் திறன்களைக் கற்பிக்கிறோம். மேல்நிலை வகுப்புக் குழந்தைகளுக்கு சிறு சிறு தேர்வுகளை ஆன்லைனில் நடத்துகிறோம்" என்று கூறிப் பெருமைப்படும் இவர், "எங்கள் பள்ளி நிர்வாகத்துக்கு மாணவர்களைக் கணினியில் தேர்வெழுதப் பயிற்றுவிக்கும் தீராத ஆசை சில காலமாகவே இருந்து வருகிறது.
      குழந்தைகளின் தட்டச்சு வேகத்தை அதிகப்படுத்த சிறப்புப் பயிற்சிகள் வழங்க வேண்டிய அவசியம் இருக்கிறது. பாட இணைச் செயல்பாடுகளோடு கணினியும் கற்பிக்கப் படுவதால் அதிக நேரம் செலவிட்டு பயிற்சி அளிக்க முடிவதில்லை. பருவத் தேர்வு விடுமுறைக்குப் பின் மீண்டும்  முதலிலிருந்து கற்பிக்க வேண்டியிருக்கிறது. சாதாரன குழந்தைகளை விட பார்வையற்ற குழந்தைகளுக்கு மெதுவாகவும், நிதானமாகவும் பயிற்றுவிக்க வேண்டியிருக்கிறது. இது தவிர அரசின் அனுமதியைப் பெற வேண்டிய தேவையும் இருக்கிறது.
      இது போன்ற நடைமுறைச் சிக்கல்கள் தீர்க்கப்படும் பட்சத்தில் நிச்சயமாக எங்கள் பள்ளி மாணவியர் கணினியில் சிறப்பாகத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வாய்ப்பிருக்கிறது. ஓவியாவின் சாதனையை முறியடிக்க சிறுமலர் பள்ளி மாணவியர் தயாராகி வருகின்றனர்." என்றார்.
      கணினி அறிவியலைப் பற்றி உரையாடியதும் எனக்கு மேல்நிலைக் கல்வியில் கணினி அறிவியல் பாடத்தைப் பயிற்றுவித்த மதுரை இந்தியப் பார்வையற்றோர் சங்க மேல்நிலை பள்ளியின் நினைவு வரவே, இப்போது அங்கு கணினி பயிற்றுநராகச் செயல்பட்டு வருபவரும்,, ஊரடங்கு காலகட்டத்தில் பல்வேறு சூம் வகுப்புகள் மூலம் தனக்கென்று ஒரு  தனி முத்திரையைப் பதித்துக் கொண்டவருமாகிய திரு. மோகன்ராஜ் அவர்களை அணுகி கருத்துகளைக் கேட்டேன்.
graphic மோகன்ராஜ்
மோகன்ராஜ்
      இப்போது 6 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாரம் ஒரு பாட வேளையாக கணக்கிட்டு கணினி பயிற்றுவிக்கிறோம். டைப்பிங் தொடங்கி அவரவர் திறமைக்கேற்ப மெயிலிங் வரை கற்றுக் கொள்கிறார்கள். குறை பார்வை உடையோரை விட முழுப் பார்வையற்றோர் அதிக கவனத்தோடும் ஈடுபாட்டோடும் கணினியைப் பயில்கிறார்கள். இங்கு தமிழில் தட்டச்சு செய்யும் முறையையும் பயிற்றுவிக்கிறோம்.
      தமிழில் இயல்பாகப் பேசிப் பழகத் தெரிந்த பார்வையற்றோர் பெரும்பாலோருக்கு ஆங்கிலம் கொஞ்சம் சிரமமாகவே இருக்கிறது. கணினியை இயக்குவதற்கும், நாம் தட்டச்சு செய்ததைத் திரை வாசிப்பான்கள் (Screen readers) துணையுடன் வாசிக்கும்போது கவனித்துத் திருத்துவதற்கும் ஓரளவு மொழியறிவு அவசியமாகிறது. கல்லூரி மாணவர்களால் கூட பிழையில்லாமல் 5 வாக்கியங்கள் எழுத முடிவதில்லை. எனவே ஆங்கிலமும், தொடர் கணினிப் பயிற்சியும் கொடுத்தாலும் கூட 100% வெற்றி பெற பல ஆண்டுகள் ஆகலாம்என்றார்.
      தஞ்சை அரசுப் பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் திறன் குறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பு வகிக்கும் திருமதி சோஃபியா அவர்களிடம் கேட்டேன்.    
graphic திருமதி சோஃபியா
திருமதி சோஃபியா
        "போதிய பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் இருப்பவர்களை மட்டும் பயன்படுத்தி மேல்நிலைக் கல்வி மாணவர்களுக்குக் கணினி டைப்பிங், மேய்லிங் உள்ளிட்டவற்றைப் பயிற்றுவிக்கிறோம். இது விடுதியுடன் கூடிய பள்ளி. மாணவர்கள்  இங்கேயே தங்கிப் பயில்வதால் பள்ளிப் பாடங்களோடு வாழ்வியல் பாடங்களையும் நாங்கள் பயிற்றுவிக்கிறோம். பெரும்பாலும் பெற்றோரின் தலையீட்டை எதிர்பார்ப்பதில்லை. இருக்கின்ற வளங்களைப் பயன்படுத்தித் தம் திறமைகளைப் பெருக்கிக் கொள்ளும் எல்லா மாணவர்களுமே சாதனையாளர்களே! என்றார்.
      மாணவர்களின் கணினித் திறன் குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு சிறப்புப் பள்ளி ஆசிரியர் தம்முடைய கருத்துகளை இவ்வாறு பகிர்ந்துகொள்கிறார்.
      "பள்ளிப் பாட வேளைகளில் மட்டும் கணினி பயிற்றுவிப்பது போதுமானதாக இருக்கமுடியாது. கிராமப்புறங்களிலிருந்து வரும் மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. இதுபோன்ற சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டுமாயின் சிறப்புப் பள்ளி குழந்தைகளுக்கு அரசு லேப்டாப்களை வழங்கி, பயிற்றுவிக்கத் தேவையான அளவிற்கு சிறப்புப் பயிற்சி பெற்ற கணிப்பொறி ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும். மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் பெற்றோர் தலையீடும் இருத்தல் அவசியமாகிறது”. 
      ஒரு சிறப்புப் பள்ளி மாணவர்களின் கணினி திறன் பற்றி அறிந்துகொள்ள அப்பள்ளியின் தலைமை ஆசிரியரைத் தொடர்புகொண்டபோது, "உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை ஒரு கடிதம் ஆகவோ அல்லது மெயில் வழியாகவோ எங்களுக்குத் தெரிவியுங்கள்; பதில் தருகிறோம்" என்று கூறியதாய் அந்த முயற்சியை அப்போதே கைவிட்டு விட்டோம். இன்னும் சிலரைத் தொடர்பு கொள்வதிலும் சில சிரமங்கள் இருந்தன.
      அலைபேசியில் உரையாடி பெற்ற தகவல்களைக் கோர்த்து கட்டுரையாக்கும்பொழுது, தமிழ் எழுத்து நடைக்கென்றே தனிப் பெயர் பெற்ற ஒரு சகோதரரின் பெயர் நினைவுக்கு வந்தது. ஆம், உங்கள் கணிப்பு சரிதான். சமூக  வலைதளங்களில் இடைவிடாது இயங்கிக் கொண்டிருப்பவரும், சவால்முரசு, ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் சங்கம் உள்ளிட்ட அடையாளங்களைப் பெற்றவருமாகிய திரு. சரவண மணிகண்டன் அவர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது.
graphic திரு. சரவண மணிகண்டன்
திரு. சரவண மணிகண்டன்
      புதுக்கோட்டை அரசு பார்வையற்றோர் பள்ளியில் இருந்து பூவிருந்தவல்லி அரசு பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளிக்கு பணி மாறுதல் பெற்ற பிறகு, தம் பழைய பள்ளி மாணவர்கள் தமக்குத் தமிழில் மெயில் அனுப்பும் அழகைச் சொல்லிச் சிலாகித்த இவர், "பார்வையற்ற மாணவர்களுக்குக் கணினி பயிற்றுவிக்க பார்வையற்ற சிறப்பாசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுவது பொருத்தமாக இருக்கும். படித்த, கணினியை இயக்கத் தெரிந்த பார்வையற்றவர் ஆசிரியராக நியமிக்கப்படலாம். கணினி பாடத்தையும் கணினி அறிவியல் பாடத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்வது தவறு.
      கணினி பயிற்றுவிப்பதற்கென்று அரசு சில கல்வி தகுதிகளை வரையறுத்து  இருக்கிறது. அந்தத் தகுதியை நம்மவர் எவரும் பெற்றிருக்க வாய்ப்பில்லைபல சமயங்களில் பணமும் விளையாடி விடுகிறது. இன்றைய காலகட்டத்தில், கணினிகளை வாங்கித் தரும் அளவிற்கு நன்கொடையாளர்கள் இருக்கிறார்கள். மாணவர்களிடமும் அறுதியிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு ஆர்வமும், வேகமும் இருக்கிறது. இரண்டையும் இணைக்கும் அல்லது வளர்க்கும் பாலமாக பார்வையற்ற, பயிற்சி பெற்ற சிறப்பாசிரியர்கள் மட்டுமே இயங்க முடியும்" என்றார்.
      இன்னும் பல சமூக செயல்பாட்டாளர்களிடம் கேட்டபோது, சுதந்திரமாக கணினியில் தட்டச்சு செய்யப் பழக்குதல், தொடர் பயிற்சி அளித்தல், நேர மேலாண்மையைக் கற்பித்தல், பயிற்சிபெற்ற சிறப்பாசிரியர்களை நியமித்தல், ஆங்கிலத்தில் பிழைகளின்றி எழுதப் பழக்குதல், அடிப்படைக் கணினி வசதிகளை ஏற்படுத்தித் தருதல், பெற்றோரின் பங்களிப்பை உறுதிப்படுத்துதல், சிறுவயதிலிருந்தே கணினி மற்றும் அலைபேசிகளை இயக்க வாய்ப்பளித்தல் போன்ற பொதுவான கருத்துகள் பெறப்பட்டன. 
      இன்றைய இளம் தலைமுறை பார்வையற்றோரிடையே கணினிக் கல்வி குறித்த தெளிவான புரிதலும், அதீத ஆர்வமும் இருப்பதாகவே நான் கருதுகிறேன். ஓரிரு ஆண்டுகளுக்கு முன் சிறப்புப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தன் பார்வையற்ற மாணவனை வைத்து, ‘பார்வையற்றோர் சமூகத்தைத் தொடர்புகொள்ள கணினியே மிகச் சிறந்த வழிஎன்று கூறுவதாக ஒரு காணொலியை உருவாக்கி, உலக மாற்றுத்திறனாளிகள்  தினத்தன்று அதை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்திருந்தார். அந்தச் செய்தியைக் கடந்துவரும்போது, தற்போதைய பார்வையற்ற சமூகம் முறையான வழிகாட்டுதலின்படி சரியான வழியில் பயணித்துக்கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
      இந்த ஊரடங்கு காலகட்டத்திலும் கூட, புதுக்கோட்டை வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இணையவெளி கருத்தரங்கில் கலந்து கொண்ட ஒரு பார்வையற்ற மாணவனின் தாயார், "பையன் ஏழாம் வகுப்பு படிக்கிறான்; அவனுக்கு லேப்டாப்பில் என்.வி.டி.ஏ போட்டுக் கொடுத்திருக்கிறேன்; அவனுக்கு கம்ப்யூட்டர் கோர்ஸ் இருந்தால் சிறப்பாக இருக்கும்" என்று கேட்டதும், அவன் பயிலும் புதுக்கோட்டை அரசுப் பார்வையற்றோர் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தாமே முன்வந்து அந்த மாணவனுக்குப் பயிற்றுவிக்க ஒப்புக்கொண்டதுமான நிகழ்வைக் கடந்து வரும்பொழுது, நமது இளம் தலைமுறையினரின் தொழில்நுட்பம் சார்ந்த முன்னேற்றத்திற்கு பெற்றோரும் பங்களிக்கத் தொடங்கி விட்டனர் என்ற புது உற்சாகமும் ஏற்பட்டது. 
      ஓவியாவின் சாதனைகள் குறித்து அவரது வெற்றிக்குக் காரணமான முக்கிய ஆலோசகராகிய திரு. சங்கர் அவர்களிடம் கேட்டபோது
graphic திரு. சங்கர்
திரு. சங்கர்
        “பிரெயில் தெரியாத, முறையாகக் கையாளும் வகையறியாத ஆசிரியர்களைக் கொண்ட, பார்வையற்ற மூன்றாம் வகுப்பு மாணவியாக ஓவியாவைச் சந்தித்தேன். எல்லாக் குழந்தைகளைப் போலவே அவருக்கும் ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகளைக் கொடுத்தேன். தடையில்லாத உழைப்பை நல்கிய பெற்றோர், பள்ளிப் பாடச் செயல்பாடுகளில் பாகுபாடு காட்டாத ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், கணினியில் தேர்வு எழுதுவதை ஊக்குவித்த பள்ளி நிர்வாகம், எல்லாவற்றுக்கும் மேலாக அந்த மாணவியின் ஈடுபாடு மற்றும் கடின உழைப்பு போன்ற பல்வேறு காரணங்கள் அவரது உயர்வுக்கு வித்திட்டனஎன்றார்.
      பார்வையற்றோருக்கான தொழில்நுட்பங்களில் தீவிர ஈடுபாடு கொண்ட திரு. சங்கர், அது தொடர்பாக பல தரப்பினருக்கும் தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கிவருகிறார்அரசுப் பள்ளியில் பயிலும் பார்வையற்ற மாணவர்கள் கணினி வழியே தேர்வு எழுதுவதைச் சாத்தியப் படுத்த அவர் கூறிய வழிமுறைகள் வியப்பிற்குரியவை;  நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவை.   அவற்றை முடிந்தவரை சுருக்கமாகத் தருகிறேன். 
1. எல்லா மத்திய அரசுப் பள்ளிகளிலும் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவ்வாறு செய்யாத பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது. இதே நிலை மாநில அரசின் பள்ளிகளுக்கும் இருக்க வேண்டும். மாநில அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், ஒரு பள்ளிக்கு ஒரு சிறப்பு ஆசிரியர் நியமிக்கப் படலாம்; அல்லது ஒரு ஒன்றியத்திற்கு ஒரு சிறப்பாசிரியராவது நியமிக்கப்படலாம்.
2. உள்ளடங்கிய கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு அவரவர் பள்ளிகளிலேயே கணினி வசதிகள் என்.வி.டி.ஏ போன்ற மென்பொருள்களுடன் அமைத்துத் தரப்படவேண்டும் 
3. பார்வைக் குறையுடைய மாணவர்களுக்கு எட்டாம் வகுப்பிலேயே மடிக்கணினிகள் வழங்க அரசுக்குப் பரிந்துரை செய்வதோடு, சிறு சிறு தேர்வுகளைக் கணினியில் எழுதப் பயிற்சி அளிக்கப்படவேண்டும்.  
4. பெற்றோரும் தம் குழந்தையின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும்; தேவைப்பட்டால் போராட்டங்கள் நடத்தவும் தயாராக இருக்க வேண்டும்.
5. மத்திய அரசுப் பள்ளிகளில் பார்வையற்றோர் கணினியைப் பயன்படுத்தி தேர்வு எழுதுவதை அனுமதிக்கும் அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. மாநில அரசுகளும் இது போன்ற முயற்சிகளை முன்னெடுக்கும்போது, தேர்வு எழுதுவோர்க்கு கணினி வசதியுடன் கூடிய தனி அறை, சிறப்பாசிரியர், கூடுதல் நேரம், இடர்பாடுகள் அற்ற சூழல் உள்ளிட்டவை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.  
6. சிபிஎஸ்இ பள்ளிகளில் கணிதப் பாடத்துக்குரிய வினாத்தாள்கள் படிமுறையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுவது போல, மாநில அளவிலும்  செய்யப்படவேண்டும்.
7. வினாத்தாள்களைப் பார்வையற்றோர் அனுகும் வண்ணம் வடிவமைக்க இயலாத காரணத்தால், அவற்றைத் தட்டச்சு செய்வதற்கென்று கூடுதல் நேரம் வழங்கப்பட வேண்டும்.  
8. பார்வையின்மையோடு செவித்திறன் செயல்பாட்டிலும் குறைபாடு உடையவர்கள் "Refreshable Braille Display (RBD)" எனப்படும்  கணினியில் இருப்பதை பிரெயில் முறையில் தொட்டுப் பார்த்து உணர்ந்துகொள்ளும் முறையைப் பயன்படுத்தி கணினிப் பயிற்சி பெறுவதோடு, தேர்வு எழுதவும் முயற்சிக்கலாம்.
      இவ்வாறு தம் கருத்துகளை எடுத்துரைத்த திரு. சங்கர் அவர்கள் இறுதியில், "ஓவியாவின் சாதனையைப் பாராட்ட மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சருக்கு நேரம் இருக்கிறது; தமிழகத்தில் கல்வியோடு தொடர்புடைய எந்த அமைச்சருக்கும் நேரமில்லை" என்ற தமது ஆதங்கத்தையும் பதிவிடத் தவறவில்லை. 
      இனி வரும் காலங்களில், தமிழ் PDF எழுத்துக்களைப் படிக்க, இமேஜ் உருவில் இருப்பவற்றை டெக்ஸ்ட் ஆக  மாற்ற, குரல்வழி தட்டச்சு செய்யதேவையான  செய்திகளைப் படிக்க, பதிலி எழுத்தர்களைக்  கண்டுபிடிக்க என பல்வேறு செயலிகள் முக்கியமாக பார்வையற்றோர்க்கென்றே உருவாக்கப்பட்டிருப்பது போல, கணினியில் தேர்வெழுதுவதை ஊக்குவிப்பதற்கும் சிறப்புச் செயலிகள் தயாரிக்கப் படலாம்யாருக்குத் தெரியும்? திடீர் பார்வை இழப்பைச் சந்திக்கும் ஒருவருக்கு உதவியாளராக முழுப் பார்வையற்றவர் நியமிக்கப்பட்டு, கணினியில் தேர்வு எழுதுவதாகக்கூட செய்திகள் வெளிவரலாம்அதுபோன்ற சம்பவங்கள் நிகழப் போவது அடுத்த சில ஆண்டுகளிலா? அடுத்த தலைமுறையிலா? அல்லது அடுத்த நூற்றாண்டிலா? என்ற கேள்விக்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
வாய்ப்புகளை வசப்படுத்துவோம்!
சாதனைகளை நமதாக்கிக்கொள்வோம்!

(கட்டுரையாளர் புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாள விடுதி அரசு நடுநிலைப் பள்ளியின் ஆங்கில ஆசிரியர்).
தொடர்புக்கு: celinmaryx@gmail.com 

8 கருத்துகள்:

  1. அனைவரது கருத்துக்களையும் அருமையாக தொகுத்துள்ளீர்கள்.
    ஒரு தனிப்பட்ட பெற்றோரால் செய்யமுடிந்த இச்செயலை கணினி மையத்தை செயல்படுத்திவரும் சிறப்பு பள்ளிகள் இவ்வாறான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவேண்டும் என்பதே நம்மவர்களின் எதிர்பார்ப்பு .போட்டித்தேர்வுகளிலும் இவ்வாறான தேர்வு முறைகள் அறிமுகப்படுத்தவேண்டும்
    வங்கி தேர்வுகள் கணினியில் அமைந்திருந்தாலும், அது பதில எழுத்தர்களை கொண்டு இயக்குவதுபோன்றே உள்ளது. நாம் அணுகுவதற்கு எளிதாக அமைந்திருந்தால் தேர்வர்கள் தன்னிறைவோடு தேர்வினை சந்திக்க இயலும்.

    பதிலளிநீக்கு
  2. ஓவியாவை முன்னிருத்தி ஓடத் தொடங்கிய தொடர்வண்டி தடம் மாறாமல் பயணத்தை இனிதே முடித்திருக்கிறது. ஓட்டுநருக்கு வாழ்த்துக்கள். நன்றி!

    பதிலளிநீக்கு
  3. ஓவியாவை முன்னிருத்தி ஓடத் தொடங்கிய தொடர்வண்டி தடம் மாறாமல் பயணத்தை இனிதே முடித்திருக்கிறது. ஓட்டுநருக்கு வாழ்த்துக்கள். நன்றி!

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள்... சிறப்பான தொகுப்பு...

    பதிலளிநீக்கு
  5. ஜெயராமன் தஞ்சாவூர்18 ஆகஸ்ட், 2020 அன்று 6:59 AM

    கண் பார்வைக்கு மாற்றான,

    வர பிரசாதமாக கிடைத்துள்ள கணினியைப்

    பயிற்றுவித்தால்,

    பார்வை மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு

    அனைத்தும் சாத்தியமே;

    என்பதை உணர்த்தும் கருத்துக்களைத் தொகுத்து கொடுத்துள்ள,

    கட்டுரை ஆசிரியரின் முயற்சிக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  6. அருமையான பதிவு..ஆசிரியர் செலின் மேரிக்கு நன்றி..தங்கள் mobile number தந்து உதவ முடியுமா..--ஓவியா அப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் மருமொழிக்கு நன்றிகள் சார். திருமதி. செலின்மேரியின் நம்பரை பொதுவெளியில் பகிரமுடியாததால் விரல்மொழியர் ஆசிரியர் பாலகணேசன் அவர்களை 9894335053 என்ற அலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

      நீக்கு
  7. வாழ்த்துக்கள் மேடம். அனைவரும் இந்த குழந்தைதான் முதல் சாதனையாலர் என்று குரிப்பிட்டுக்கொண்டிருக்கும் வேலையில். மிகச்சரியாக 2ாவது என்று குரிப்பிட்டுல்ல உங்கள் தெலிவிற்கு வாழ்த்துக்கள்.
    கனிப்பொரி தேர்விற்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் பிரெய்ல் முரையை இழக்க நேரிடுமோ என்ற ஐயம் எழாமல் இல்லை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிரேன் மேடம்.

    பதிலளிநீக்கு