புகழஞ்சலி: வலது கண்ணோட்டத்தில் ஒரு மார்க்கிசிய உரையாடல் - முனைவர் மு. ரமேஷ்

graphic கோவை ஞானி
கோவை ஞானி
தோற்றம்: சூலை 1, 1935
மறைவு: சூலை 21 2020
      இவ்வுலகை மனிதமயப் படுத்தியதன் மூலமே உலகம் வரலாற்றுக் கதையாடலுக்குள் வந்தது. மனிதர்கள் தங்களுடைய மெய்யாலும், கையாலும் புனைந்து ஏற்றியதுதான் உலகம்அதாவது இவ்வுலகைப் பருண்மையாகவும், நுன்மையாகவும் வடிவமைத்ததோடு, தேவைகளுக்கேற்ப அன்றாடம் மாற்றியமைத்துக் கொண்டிருப்போரும் மனிதர்கள்தான். இவ்வகைச் செயல்களில் தடைகளோ, குறைகளோ ஏற்பட்டால் அவற்றைச் சரிசெய்ய முயற்சிப்போர், இக்குறைகள் விதியால் அல்லது கடவுள்ளுக்கு விருப்பம் இல்லாததனால் நிகழுகிறது என்று நம்புவோர் என இருவகையினரை மாந்தர் வரலாற்றில் நம்மால் நேர்கொள்ளமுடியும். இடதுசாரிகள்அவைதீகவாதிகள், இறை மறுப்பாளர்கள், பொருள்முதல்வாதிகள், எனப்படுவோர் முதல்வகையினர் ஆவர். கருத்துமுதல்வாதிகள், வலதுசாரிகள், வைதீகவாதிகள், இறை ஏற்பாளர்கள் எனப்படுவோர் இரண்டாம் வகையினர் ஆவர்.
      உலகசமுதாயத்தை மாற்றியமைப்பது குறித்த காரல்மார்க்சின் மகத்தான முன்மொழிபுகள் ஹெகலை அடிப்படையாகக் கொண்டு தொடங்கியது என்றாலும்  அவரை மறுத்து உருவானது என்பதை நினைவில் கொள்ளுவது நல்லது. பெரியாரியம், அம்பேத்கரியம், இலெனினியம், மாவோயியம் போன்ற கொள்கைகள் அனைத்தும் மனிதர்களின் இடர்பாடுகளான சமத்துவமின்மை, சகோதரத்துவமின்மை, சுதந்திரமின்மை, பொருளின்மை, சுயமரியாதையின்மைசமூக நீதியின்மை, மனிதமதிப்பின்மை போன்றவற்றை மாற்றியமைப்பதற்கான கருதுகோள்களை உள்ளடக்கமாகக் கொண்டவை. தவிரவும் மார்க்கிசியம் மண்ணுக்கேற்றவகையில் வடிவமைக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது. சோவியத்தைக் கட்டமைத்த இலெனினியம், சீனாவைக் கட்டமைத்த மாவோயியம் இவை மார்க்கிசியத்தின் அலகுகளை உள்வாங்கிக் கொண்டவைகியூபா, இலத்தின் அமரிக்கா நாடுகள் பலவற்றுள்ளும் மார்க்கிசியம் இன்றும் நடைமுறையில் உள்ளது 
      இந்தியத் துணைக் கண்டத்தைப் பொருத்தவரை 1920 களின் ஆரம்பத்தில் தொழிற்சங்க வடிவில் சிங்காரவேலனார் மூலமாக தமிழகத்தில்தான் மார்க்கிசியம் கால்கொண்டது. தமிழகத்தின் வழியாகத்தான் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் மார்க்கிசியம் சென்றது. இதற்கு முந்திய 1800 களின் பிற்பகுதியில் மறுமலர்ச்சி இயக்கங்கள் என்னும் பெயரில் ஆரிய சமாஜம் உள்ளிட்ட சில இயக்கங்கள் தோன்றி இந்து சமயக் கொள்கைகளைக் கட்டமைத்தல், அவற்றைப் பரப்பி இந்தியத் துணைக் கண்டத்தின் மக்களை சுதந்திரத்திற்காக அணிசேர்த்தல் என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்ப்பட்ட நிலையில் தமிழகம் இவற்றிலிருந்து வேறுபட்டு தாத்தா, இரட்டைமலைசீனிவாசன், பண்டிதர்,கா. அயோத்திதாசர் போன்றோரின் அரசியல் பண்பாட்டுக் குறுக்கீடுகளால் சமூகநீதிக்கான கோரிக்கைகளாகத் தனது களநிலவரத்தை மாற்றியமைத்துக் கொண்டது. மார்க்கிசிய முன்னோடியான சிங்காரவேலனாரும் பண்டிதர், கா. அயோத்திதாசரும்  சமூகநீதிக் களத்தில் ஒன்றாகவே செயலாற்றினர். பண்டிதரின் மறைவிற்குப் பிறகு சிங்காரவேலனார் முழு மார்க்கிசியவாதியாக செயலாற்றினார்.
      வருக்கநலனை முன்னிறுத்திய மார்க்கிசியம் இந்தியத் துணைக் கண்டத்தின் பண்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இத்தாக்கம் அந்த அந்த மாநிலங்களுக்கேற்ப வடிவமைக்கவும் பட்டது 
      இக்காலத்தில் தந்தை பெரியாரின் வழியாக களத்திலும் அண்ணல் அம்பேத்கரின் வழியாக சிந்தனைமட்டத்திலும் சமூகநீதிக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
           1950, 60-களில் ஹிந்தி எதிர்ப்புப் போரைப் பெரியாரியத்தின்  அரசியல் அமைப்பான தி.மு.. தலைமையேற்று நடத்தியது. இக்காலகட்டத்தில் தமிழகத்தில் இருந்த பெரும்பாலான இளைஞர்கள் பெரியாரிய வாதிகளாகவோ அல்லது திராவிட இயக்க ஆதரவாளர்களாகவோ மாறினர். 1965 இல் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தான் படித்துக்கொண்டிருந்தபோது பெரியாரியவாதியாக மாறினார் கோவை ஞானி.
      கோவையில் எஸ்,வி,ஆர். என்பவரும் அவருடைய நண்பர்களும் இக்காலப் பகுதியில் தீவிரமான மார்க்கிசிய வாதிகளாக கட்சிசார்ந்தும் இயங்கிக்கொண்டு, இதன் ஒரு பகுதியான சிந்தனையாளர் மன்றம் என்கிற அமைப்பையும் நடத்திவந்தனர். இவ்வமைப்புடனான தொடர்பில் ஞானி மார்க்கிசியராக மாறினார். 1970-களில் வானம்பாடி குழு கோவையைத் தலைமையிடமாக கொண்டு இயங்குவதற்கு ஞானி பெரிதாகத் துணை புரிந்தார். திராவிடமும், மார்க்கிசியமும் இடதுசாரி தன்மைக் கொண்ட நட்புறவு கொள்கைகள்தான். வானம்பாடி இயக்கத்தில் இவ்விரு கருத்தியலாளர்களும் இனைந்து இருந்தனர் என்கிற போதிலும் மார்க்கிசியர்கள் முழுமையான அரசியல் திறனாய்வாளர்களாக செயலாற்றுவதையே விரும்பினர். திராவிட இயக்கப் பற்றாளர்கள் அரசியலோடு சேர்த்து தமிழ் மொழி, நிலம் எனப்படுகிற கலை இலக்கிய பண்பாட்டு வெளிகளில் ஊடாடித் தங்களுக்கேற்ப அரசியல் பண்பாட்டுச் சொல்லாடல்களை உருவாக்கி வைத்திருந்தனர்இந்தவகையில் திராவிட இயக்கவாதிகள் கவிஞர்களாகவும், மார்க்கிசியவாதிகள் திறனாய்வாளர்களாகவும் வானம்பாடிக் குழுவில் இயங்கினர். இவ்விருநெறிகளும் சமூக மாற்றத்திற்காக உழைக்கக்கூடியவை எனினும் காலப்போக்கில் இவர்கள் எதிர் எதிராக நின்றதனால் வானம்பாடி குழு முடிவிற்கு வந்தது. வானம்பாடி குழு நின்றுவிட்ட 1974 க்கு பிறகு  இவ்வியக்கத்தினர் தனித்தனியாகச் செயல்பட்டனர்.  
      அந்தவகையில் கோவை ஞானியும் தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருந்தார். இவருடைய ஆசானான எஸ்.வி.ஆர். ஹெகலின் சமய அன்னியமாதலையும், சார்த்தரின் இருத்தலியத்தையும் {1974-1976} மார்க்கிசியத்தின் இடதுசாரிய நோக்கில் விளக்கியிருந்தார்.
      அடுத்தநிலையில் தமிழவனின் அமைப்பியலும் {1982 இல்} வந்தபோதும்  அவற்றை ஆர்வத்துடனும் கற்றுவிட்டு மார்க்கிசியத்தின் போதாமை என்னும் தனது கருதுகோளைக் கோவை ஞானி உறுதிப்படுத்திக் கொண்டார். தமிழின் ஆழமான மரபிலக்கியங்களை மார்க்கிசியவாதிகள் கற்காமல் போனது மார்க்கிசியத்தின் பெருங்குறை என்று வெளிப்படையாகச் சொன்னதோடு மண்ணுக்கேற்ற மார்க்கிசியம், தமிழ் மார்க்கிசியம், மார்க்கிசிய ஆண்மீகம் அல்லது மெய்யியல் என்றெல்லாம் சிந்தித்து எழுதத் தொடங்கினார்.
      1983-இல் தமிழ் ஈழத்தில் ஏற்பட்ட கலவரம் இடதுசாரி மார்க்கிசியரை தவிர அனைத்து எதிரும் புதிருமான கொள்கையை உடையவர்களையும் தமிழ்த் தேசியம் என்கிற ஒற்றைப் புள்ளியில் இனைத்தது. கோவை ஞானியும் தமிழ்மார்க்கிசியம் என்கிற தனது கருதுகோளின் வழிநின்று ஈழதேசியத்தை ஆதரித்தார். 1988-இல் ஏற்பட்ட சோவியத் கூட்டமைப்பின் பிரிவும், 1989-இல் ஈழத்திற்கு ஆளும் இந்திய ஒன்றிய அரசால் அனுப்பப்பட்ட அமைதிப் படையின் செயல்பாடுகளும் தமிழ்த் தேசியத்தின் தேவை குறித்த உரையாடலை வளர்த்தெடுப்பதற்கு பேருதவியாக இருந்தன.  
      இவருடைய தமிழ்மார்க்கிசியம் சங்க இலக்கியத்தை முதல் படைப்பு இயக்கமாகக் கண்டுரைத்தது. இவருடைய மார்க்கிசிய மெய்யியல் ஆதிசங்கரரின் அதுவைதம்மத்துவரின் துவைதம் இராமானுஜரின் விசிஷ்ட்டாஅதுவைதம் போன்ற இந்தியத் தத்துவங்களை மார்க்கிசியர்களும் கற்கவேண்டும் என்று வற்புருத்தியது. பாரதியின் கண்ணன் பாட்டு குறித்து எழுதும் கோவை ஞானி, பாரதி ஏன் பாடுவதற்கு கண்ணனைத் தேர்ந்தெடுத்தான் என்றால் கண்ணன் ஆசியாவின் குறியீடு என துணிந்து எழுதுகிறார். கீழைத் தேயவியல் தத்துவத்தை முன்மொழிந்த முன்னோடிகளுள் ஒருவரான எட்வாட் சயது இதனைப் படித்திருந்தால் என்ன சொல்லியிருப்பாரோ தெரியவில்லை. சிவனும், திருமாலும், காளியும் கொலைக் கருவிகளைத் தாங்குவதை இந்தியப் பண்பாட்டின் பெருமிதமாக இனங்காணுகிறார் கோவை ஞானி. ஜயமோகனையும், பெங்களூர் குணாவையும், இன்னும் பிற இந்திய, தமிழிய அடிப்படைவாதிகளை ஆதரிக்கும் நிலைப்பாடு இக்கண்ணோட்டத்தின் வழியாகப் பெறமுடிகிறது. எஸ்,எண். நாகராஜனின் தீய செல்வாக்கினால் வளர்ந்துவிட்டார் ஞானிஎன்று 26-07-2020 அன்று சூம் அரங்கத்தில் நடைபெற்ற கோவை ஞானியின் நினைவேந்தல் கூட்டத்தில் எஸ்,வி.ஆர். கூறியது இங்கு இனைத்து நோக்கத்தக்கது.
      கோவை ஞானி கருதுவதைப் போல மார்க்கிசியவாதிகள் கலை இலக்கியப் பண்பாட்டுத் துறைகளில் செயலாற்றவில்லை. ஆனாலும் தொ.மு.சி, ரகுநாதன், . வானமாமலை போன்றோர் கலை இலக்கியப் பண்பாட்டுத் துறைகளில் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொ.மு.சி. புனைகதையாளராகவும் திறனாய்வாளராகவும்களப் பணியாளராகவும் இயங்கினார். இவருடைய இளங்கோவடிகள் யார் என்கிற நூலைத் தமிழ் மார்க்கிசியத்தின் முன்னோடி நூலாகக் கருதமுடியும். ஷெல்லியும்-பாரதியும் என்கிற நூல் இவருக்குள்ளிருந்த கவித்துவ அறிதலை வெளிக்காட்டி நிற்பவை. இவருடைய பஞ்சும் பசியும் முதல் மார்க்கிசியப் புனைகதையாகும்.
      மார்க்கிசியத்தின் களப் பணி அனுபவம் மிகச் சிறந்த பண்பாட்டுக் கதை சொல்லியாக கீ.ராஜநாராயணனை நிலைப்படுத்தியிருக்கிறது. மார்க்கிசிய மெய்யியலின் தேவையை . வானமாமலை இடதுசாரிய மற்றும் பகுத்தறிவு, இறைமறுப்புக் கண்ணோட்டத்தோடே இந்தியமரபு என்கிற நூல் வழி முன்வைத்துள்ளார். பண்டைய இந்தியாவின் பகுத்தறிவுத் தத்துவங்களான உலகாயிதம், புத்தம், சமணம், சாங்கியம் போன்றவற்றை இடது கண்ணோட்டத்திலிருந்து விளக்குவது மட்டுமல்ல தமிழ் மொழிக் காப்பியங்களான மணிமேகலை, நீலகேசி போன்றவற்றின் வழியாக விளக்கியுள்ளார். சோவியத்தின் விஞ்ஞான தருக்கங்களைக் கொண்டு இவற்றை விளக்குகிறார்.
      அடுத்த நிலையில் எஸ். ராமகிருஷ்ணனின் கம்பனும்-மில்ட்டனும் தமிழ் மெய்யியலை இடது கண்ணோட்டத்தில் விளக்கியுள்ளது. மார்க்கிசிய நெறிநின்ற தமிழ்தேசியத்தை இடது கண்ணோட்டத்தில் எடுத்துரைத்த தமிழ் ஒலியை மறக்கமுடியாது. இது போன்ற இன்னும் சிலரைச் சொல்லமுடியும். சுருக்கத்திற்காக நிறுத்திவிடுகிறேன். இவர்கள் யாரும் நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகள் என்றோ, என் கடவுள் என்றோ, இந்திய வாழ்க்கை என்றோ வலது அடிப்படைகளை நோக்கி நகரவில்லை. இத்தகைய புரிதலோடு நான் எனது நண்பர் தமிழாசானுடன் கோவை ஞானி அவர்களோடு உரையாடுவதற்கு 2010-இல் அவருடைய வீட்டிற்குச் சென்றோம்.  
      வெவ்வேறு துறைசார்ந்த 20 ஆளுமைகளை நேர்காணல் செய்து நூலாக வெளியிடுவது என்கிற எங்களுடைய பட்டியலில் கோவை ஞானியையும் குறித்துவைத்திருந்தோம். புதுப்புணல் இரவிச்சந்திரன் அவர்கள் வழியாக சந்திப்பதற்கான அனுமதியைப் பெற்றுக்கொண்டு கோவை துடியலூரில் உள்ள வெள்ளிக்கிணறு பிரிவில் இருக்கும் அவர் வீட்டிற்குச் சுமார் காலை 10 மணியளவில் சென்றடைந்தோம். நான் அப்போது சேலத்தில் இருந்ததனால் கோவை எனக்குப் பக்கமாக இருந்தது.
      சென்றவுடன் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டோம். ரொம்பநாள் பழகியவரைப் போல உட்காருங்க. பேசலாம்என்றார். ஒலிப் பதிவு செய்வதற்கு  அனுமதி கேட்டோம். இப்போது வேண்டாம். சும்மா உரையாடலாம்என்றார். நான் தமிழ் மார்க்கிசியம் குறித்தும், மார்க்கிசிய மெய்யியல் குறித்தும் கேட்டேன். இதுகுறித்து சுமார் 3 மணிநேரம் பேசினார். இரண்டு மணிக்கு உணவு தந்து உபசரித்து எங்களை வழியனுப்பிவைத்தார் 
      எனது நண்பர் ஜவகர் அவர்கள் சிலகாலம் கோவை ஞானி அவர்களுக்கு உதவியாளராக, குறிப்பாக வாசிப்பாளராக இருந்தார். 2001-இல் தேசியப் பார்வையற்றோர் இணையம் (national federation for the blind-NFB) மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட பார்வையற்றோருக்கான மாநாட்டிற்குக் கோவை ஞானி அவர்கள்  மாநாட்டுச் சிறப்புரையாளராக அழைக்கப்பட்டிருந்தார். அங்கு வந்திருந்த நிலையில், பேராசிரியர் தருமபுரி கோ.கண்ணன் அவர்களின் மூலமாக தனக்கு அவருடனான அறிமுகம் கிடைத்தது என நண்பர் ஜவகர் நினைவுகூர்கிறார்.

      மார்க்கிசியவாதியும் பேராசிரியருமான கோவை சுகுமாரன் அவர்கள்தான் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுள் கோவை ஞானி அவர்களோடு நீண்டகாலமாக நட்பில் இருந்தவர்.
      சர்க்கரை நோயால் பார்வை பரிபோன பின்னும் தனது தீரா வேட்கையால் வாசித்தும், சிந்தித்தும் எழுதியதோடு, பலரையும் ஆதரித்து ஊக்கப்படுத்திய காமரேட் கோவை ஞானி அவர்களுக்கு விரல்மொழியர் வழியாகச் செவ்வணக்கத்தைச் செலுத்துகிறேன்.  

(கட்டுரையாளர் சென்னை நந்தனம் அரசு ஆடவர் கல்லூரில் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்)
தொடர்புக்கு: arampozhila@gmail.com
  

2 கருத்துகள்:

  1. கட்டுரை முழுவதும் மார்க்சிய மழை பொழிந்து இருக்கிறது ‌திரு ஞானி அவர்கள் பார்வை மாற்றுத்திறனாளி களுக்கு ஒரு தனி அடையாளம் என்று நான் கருதுகிறேன். வாழ்த்துக்கள். நன்றி!

    பதிலளிநீக்கு
  2. கட்டுரை முழுவதும் மார்க்சிய மழை பொழிந்து இருக்கிறது ‌திரு ஞானி அவர்கள் பார்வை மாற்றுத்திறனாளி களுக்கு ஒரு தனி அடையாளம் என்று நான் கருதுகிறேன். வாழ்த்துக்கள். நன்றி!

    பதிலளிநீக்கு