பிரசன்னகுமார் பின்ச்சா |
பிரசன்னகுமார் பின்ச்சா
தோற்றம்: அக்டோபர் 1 1952
மறைவு: 26 ஜூலை 2020
பிரசன்னகுமார் பின்ச்சா
தோற்றம்: அக்டோபர் 1 1952
மறைவு: 26 ஜூலை 2020
கௌஹாத்தி உயர்நீதிமன்றத்திலிருந்து வெளியில் வந்துகொண்டிருந்த அந்தப் பார்வையற்றவரைக் கண்டவுடன் அங்கிருந்த அனைவரும் அவரிடம் சென்று தங்களது வெற்றி வாழ்த்துகளைக் கூறி மகிழ்ந்தனர். அவற்றைக் கேட்ட அப்பார்வையற்றவர் அவர்களிடம், “நண்பர்களே, ஆம்! சண்டை முடிந்துவிட்டது. ஆனால், உண்மையில் இன்று தான் போர் தொடங்கியது” என்றார்.
இதைக் கேட்டவுடன் நான், வியப்படைந்தேன். அவரைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விழைந்தேன். ஐடிபிஐ வங்கி அவரது பார்வைக் குறைபாட்டைக் காரணம் காட்டி செக் புக் தர மறுத்ததோடு அல்லாமல், அந்த செக் புக் தருவதால் ஏற்படும் பாதகங்களுக்கும், குறைபாடுகளுக்கும் நானே பொறுப்பு என்ற ஒப்புதல் கடிதம் கொடுக்குமாறு கேட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த அந்தப் பார்வையற்றவர் தனது பார்வைக் குறைபாட்டைக் காரணம் காட்டி இழிவு படுத்தியதால் ஐடிபிஐ வங்கி மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார், உயர்நீதி மன்றமும் உடனே, சட்டத்தின் படி, அவருக்குரிய நீதியை வழங்கி ஐடிபிஐ வங்கியை அந்தப் பார்வையற்றவருக்கு செக் புக் உடனடியாக வழங்கிடுமாறு உத்தரவிட்டது. இந்த வெற்றியின் விளைவாகத் தான் அந்த மகிழ்ச்சிக் குரல் ஒலித்தது. இது நடந்த ஆண்டு 2006.
வேடிக்கை என்னவெனில், இதே 2006-இல் தான் இந்திய அரசாங்கம் ஊனமுற்றோருக்கான தேசீயக் கொள்கையை வெளியிட்டது. பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்ட அந்தக் கொள்கையில்,
ஊனமுற்றோருக்கான சமமான வாய்ப்பு வழங்கவும், சமத்துவ சமூகத்தை உருவாக்கவும், ஊனமுற்றோர் சுயமரியாதையுடன் வாழவும் அனைத்து வழிமுறைகளையும் மேற்கொள்ள வேண்டும் எண்று குறிப்பிட்டிருந்தது.
இத்தகைய அறச்சீற்றம் கொண்டு தனது உரிமையை நிலைநாட்டி சுயமரியாதையுடன் செம்மாந்து செல்லும் பார்வையற்றவரின் பயணத்தைப் பின்தொடர்ந்து செல்ல விழைந்தேன். அதற்குமுன் அவரது வாழ்க்கையைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் அங்கிருந்தவர்களிடம் உரையாடினேன்.
கொல்கத்தாவில் தனது பள்ளிப்படிப்பை முடித்து, அசாமில் முதுகலை ஆங்கிலத்தை முடித்த இவர், சட்டப் படிப்பையும் முடித்துள்ளார். அசாமில் பார்வையற்றோருக்கு கல்வி ஒளி ஏற்ற ஓர் சிறந்த பார்வையற்றோருக்கான பள்ளியை உருவாக்கி, அதன் முதல்வராகவும் பணியாற்றியவர். அப்பணிக்குப் பிறகு சமூகநலத்துறை இணை இயக்குனராக அசாம் அரசாங்கத்தில் பணியாற்றினார். அதன் பிறகு சர்வதேச அமைப்பான ஆக்ஷன் எய்ட் (action aid) முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி, வடகிழக்கு மாநிலங்களில் இருந்த ஊனமுற்றோர் மற்றும் சமூகத்தில் கீழ் நிலையில் இருந்த பல்வேறு மக்களுக்கு ஆரோக்கியமான பல சேவைகளைச் செய்தார். மேலும் ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட ஊனமுற்றோருக்கான உரிமை பிரகடனத்தில் (UNCRPD) ஆக்சன் ஏய்ட் சார்பாக தனது பங்களிப்பைத் தந்து மாற்றுத்திறனாளிகளின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் செயல்பட்டார். பிறகு மனித உரிமைகள் ஆணையத்தில் மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு ஆலோசகராகச் செயலாற்றி வந்துள்ளார்.
வருடங்கள் சில வருடிச் செல்ல 2011-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான முதன்மை ஆணையராக ஒரு ஊனமுற்றவர் பணியமர்த்தப்பட்டுள்ளார் என்னும் செய்தியைச் செய்தித்தாள்களில் படித்து மிகவும் மகிழ்ந்தேன்.
ஊனமுற்றோருக்கான, சமவாய்ப்பு, உரிமை பாதுகாப்பு மற்றும் சமூக பங்கேற்பு 1995 சட்டம் நிறைவேற்றப்பட்டு, 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் ஊனமுற்றோருக்கான ஆணையரகம், ஒரு ஊனமுற்றவர், அதிலும் ஒரு பார்வையற்றவரால் வழிநடத்தப்படப் போகிறது என்ற செய்தி மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது. தான் பதவியேற்ற தேதி (28
டிசம்பர்
2011) முதல்
திரு. பிரசன்ன குமார் பின்ச்சா அவர்கள் ஊனமுற்றோரின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும் வகையில் பணியாற்றினார் என்றால் அது மிகையாகாது. சமூகத்தில், ஊனமுற்றோருக்கான மாற்றத்தை உருவாக்கவும், அரசுத்துறைகள் அனைத்திலும் ஊனமுற்றோருக்கும் சம வாய்ப்பும், சம பங்கேற்பை வழிவகுக்கவும், திரு. பின்ச்சாஅவர்கள் அல்லும் பகலும் செயலாற்றினார்.
2012 ஜனவரி முதல், அவரது பணிக் காலம் முடியும் வரை எண்ணற்ற ஆணைகள் வழியாகவும், பரிந்துரைகள் வழியாகவும், ஆலோசனைகள் வழியாகவும், பல்வேறு சட்ட திருத்தங்கள் மற்றும் சமூக மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார். தனது முதன்மைப் பணியாக, இந்தியாவிலுள்ள அனைத்து முதன்மைச் செயலர்களுக்கும் கடிதம் எழுதி, அன்று வழக்கத்தில் இருந்த Handicap என்ற வார்த்தையை நீக்கச் சொல்லி, Persons With
Disabilities என்று அழைக்கும்படி வலியுறுத்தினார். அனைத்து நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் அனைத்து தொடர்பாடள்களிலும் Persns With Disabilities என மாற்றும்படி வலியுறுத்தினார். முழுமையாக இயலாத ஒருவர், தனது தொப்பியை நீட்டி பிச்சை எடுப்பது என்பது ஹாண்டிகேப் என்ற ஆங்கிள வார்த்தையின் பொருள். ஆனால், “persons with disabilities” என்று அழைப்பதன்மூலம், மனிதனுக்கு முக்கியத்துவமும், அவனது அடையாளத்திற்கு அடுத்த நிலையும் வழங்கப்படுகிறது. இதன்மூலம், மனிதத்தை நோக்கும் சமூகப் பார்வையை அனைத்து மனங்களில் விதைத்து, சமத்துவ சமூகத்திற்கு வழிவகுத்தார்.
ஊனமும், ஏழ்மையும் இரு பகுதிகளாக இந்திய சமூகக் கட்டமைப்பில் பிணைந்துள்ளன என்பதை உணர்ந்ததால், திரு பின்ச்சா அவர்கள், ஊனமுற்றோருக்கான சம வாய்ப்பு, உரிமை பாதுகாப்பு, மற்றும் சமூக பங்கேற்பு 1995 சட்டத்தில் உள்ள பிரிவு நாற்பதின்படி ஏழ்மையை நீக்க இந்திய அரசின் அனைத்துத் திட்டங்களிலும் மூன்று சதவிகிதத்தை ஒதுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், வறுமைக் கோட்டில் உள்ள குடும்பத்தில் ஊனமுற்ற ஒருவர் அரசுப் பணி புரிந்து வந்தாலும் அவரது குடும்பத்தை வறுமைக் கோட்டிற்கு உட்பட்டதாகக் கருதி, அவரது ஆண்டு வருமானத்தில் 50 சதவிகிதம் வரி விலக்கு அளிக்கப்படவேண்டும் என்று பரிந்துரைத்தார்.
மனித வாழ்வில், ஊனம் ஒரு தொந்தரவு, அவ்வளவே. . அதாவது, ஒவ்வொரு படைப்பும், இப்புவியில், ஒரு குறிப்பிட்ட பண்புநலன்களைக் கொண்ட வரையறைக்குள்தான் இயங்க முடியும். பட்டாம்பூச்சி முதல் பறக்கும் பறவை வரை இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஒரு சில கட்டுப்பாடுகள் இருப்பது இயல்பு. அது மனிதனுக்கும் பொருந்தும். அவ்வகையில் ஒருவருக்குப் பார்வைக் குறைபாடு, செவித்திறன் குறைபாடு போன்றவை படைப்பின் இயல்பான இயக்கநிலை என்று உணரவேண்டும். அவ்வகையில் அத்தகைய இயக்கநிலையில் உள்ளவருக்குத் தடையாக இருப்பது சமூகக் கட்டமைப்பே. இச்சமூகத்தில் உருவாக்கப்பட்ட வடிவங்கள், வாய்ப்புகள் மற்றும் அக, புறச் சூழல்கள்தான் தடையாக இருக்கின்றன. இதனை உணர்ந்த திரு. பின்ச்சா அவர்கள் மத்திய மற்றும் மாநிலச் செயலர்களை, அனுகுவதற்கு தடையற்ற சூழலை உருவாக்கும்படி பணித்தார். அத்தகைய சூழல் முழுமையாக இச்சமூகத்தில் மலரும்போது எத்தகைய இயங்கு நிலையில் இருந்தாலும் ஒரு மனிதன் மிகச் சிறப்பாக முன்னேற முடியும் என்பதை, இதன் மூலம் உணர்த்தினார்.
ஊனமுற்றோர் வாழ்வில் சுயமரியாதையுடன் செயல்படவும், தகுதி மற்றும் திறமையால், சமமாக முன்னேறவும், ஐக்கிய நாடுகள் சபை 2007-இல் ஊனமுற்றோருக்கான உரிமைப் பிரகடனத்தை (UNCRPD)
உலக நாடுகள் ஏற்கும் வகையில் வெளியிட்டது. அதில், இந்தியா உள்ளிட்ட, உலக நாடுகள் பலவும் கையெழுத்திட்டுத் தங்கள் ஒப்புதலைத் தெரிவித்தன. அதனை மேற்கோள் காட்டி திரு. பின்ச்சா அவர்கள் 2012-இல், சமூகநலத்துறை செயலருக்குத் தனது கடிதம் வாயிலாக, 2006-இல் இந்திய அரசால் நிறைவேற்றப்பட்ட, ஊனத்திற்கான தேசியக் கொள்கையை மாற்றி, ஊனமுற்றோருக்கான தேசியக் கொள்கையாக அறிவித்து ஐக்கிய நாடுகள் பிரகடனத்தில் இருக்கும் சாரத்துடன் இணைந்த ஒரு சட்டக் கொள்கையை வெளியிடும்படி கேட்டுக் கொண்டார். மேலும் அனைத்து மாநிலங்களிலுள்ள முதன்மைச் செயலர்களுக்கும் தனது கடிதத்தின் மூலமாக, அவரவர் மாநிலத்தில், ஊனமுற்றோரின் வாழ்க்கையை வளம் பெறச் செய்ய, ஊனமுற்றோருக்கான அனைத்துக் கொள்கைகளையும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தின் படி இணைந்து மாற்றும்படி அல்லது உருவாக்கும்படி கேட்டுக்கொண்டார்.
ரவிபிரகாஷ் என்ற பார்வையற்றவர் IAS தேர்வில் வெற்றி பெற்றார். இருந்தபோதிலும், பார்வையற்றவர்களுக்கென அடையாளம் காணப்பட்ட பணியிடங்களின் பட்டியலில் IAS பணிகள் இல்லை என்றும், அதனால் பணி வாய்ப்பு தரமுடியாது என்றும் UPSC தெரிவித்தது. இது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், I.A.S கண்டறியப்பட்ட பணியிடங்களின் பட்டியலில் இல்லை எனினும், அப்பதவியை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டது. இது பார்வையற்றோர் சமூகத்தில் ஒரு மாபெரும் மறுமலர்ச்சியைக் கொண்டுவந்தது.
திரு. ரவி பிரகாஷ் நீதிமன்ற தீர்ப்பினை முன்வைத்து, இந்திய ஆட்சிப் பணியில் அனைத்துப் பிரிவுகளிலும் பார்வையற்றோருக்கான பணியிடங்களைக் கண்டறிந்து, அதனை அடையாளம் காணப்பட்ட பணியிடங்களுக்கான பட்டியலில் சேர்க்கும்படி வலியுறுத்தினார் திரு. பின்ச்சா. இது பார்வையற்றோருக்கு பணி வாய்ப்புகளை அதிகப்படுத்தியது மட்டுமல்லாமல், ஐஏஎஸ், பார்வையற்றோருக்கு வசமாக உதவியது.
மேலும் அவர் தனது கடிதத்தில், “ஊனமுற்றோர் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கண்டறியப்பட்ட பணியிடங்களை இட ஒதுக்கீட்டுடன் பொறுத்திப் பார்க்கவேண்டும். கண்டறியப்பட்ட பணியிடங்களில் மட்டுமே ஊனமுற்றோரால் பணியாற்ற முடியும் என்பது அல்ல. அரசில் உள்ள அனைத்து நிலைகளிலும், அனைத்துப் பணியிடங்களிலும், பார்வையற்றோரால் பணியாற்ற முடியும். அதனால், கண்டறியப்பட்ட பணியிடங்கள் ஒரு வழிகாட்டுதலுக்கு மட்டுமே” என்ற முக்கியமான கருத்தினை வலியுறுத்தி, அதனை அனைத்து மாநிலங்களில் முறையாகத் தெளிவுபடுத்தி பின்பற்றும்படி கூறியது இவரின், மறுமளர்ச்சி சிந்தனைக்கு சான்று.
பார்வையற்றோர், தங்களின் தேவை மற்றும் சூழலுக்கு ஏற்றவகையில், தங்களின் தேர்வுகளை மேற்கொள்ள, எளிதான ஒருங்கிணைந்த தேர்வுக்கான வழிகாட்டுதலை வெளியிட்டது கல்வி வளர்ச்சியில் இவருக்கிருந்த அற்பனிப்பை வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு பல்வேறு ஆணைகள், கடிதங்கள் மற்றும் ஆலோசனைகள் வழியாக சட்டத்திலும், சட்டத்தைச் செயல்படுத்தும் துறைகளிலும், அரசு அமைப்புகளிலும், சமூகத்திலும் பல்வேறு மாற்றங்களைத் தனக்குக் கிடைத்த ஆணையர் பதவியின் வழியாகக் கொண்டுவந்தார் என்பதை மேலே குறிப்பிட்ட செயல்பாடுகள் மூலம் புரிந்துகொள்ளளாம்.
ஒவ்வொரு பயணத்திலும், தான் செல்லும் மாநிலங்களில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகளுக்குச் சென்று, அவர்களின் செயல்பாடுகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு வழிகாட்டுவதைக் கடமையாகச் செய்தார். இது சமூகத்தின் மாற்றத்திற்கு விதையாகும் என நம்பினார்.
பனியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னும், தனது இறுதி நாள் வரை, பார்வையற்றோருக்கு மட்டுமன்றி, அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும், அனைத்து விதமான சவால்களுக்கான தீர்வுகளைக் கண்டறிந்து ஒருங்கிணைந்த ஊனமுற்றோருக்கான சமூக முன்னெடுப்புகளை வழிநடத்தினார்.
இவ்வாறு, சவால்கள் முன் துணிவுடனும், உதவி கேட்பவரிடம் கணிவுடனும், தவறு செய்தவர்களுக்கு நல்வழிகாட்டி, தப்பு செய்தவர்களை கண்டித்து, சமூக மாற்றத்திற்காக அயறாது செயலாற்றிய உயர்ந்த மனிதர் திரு பிரசன்னகுமார் பின்ச்சாவின் வழி ‘ஒத்துப்போகவேண்டிய இடத்தில் ஒத்துப்போ! அத்துப்போகவேண்டிய இடத்தில் அத்துப்போ’ (Collaborate, where
you can, Resist, where you must.) என்பதாகவே இருந்தது.
அவரை பின் தொடர்ந்து வந்த நான், 26 ஜூலை 2020 அன்று, அவர் இயற்கை எய்தினார் என்று கேள்விப்பட்டவுடன், உள்ளம் உடைந்துபோனேன். இன்றும், அவரது குரல் ஒலி காற்றில் கலந்து, காதுகளில் ஒலித்து, மனதைத் துளைக்கிறது.
எங்கெங்கு காணினும், ஊனமுற்றோர் சமூகத்திற்காக, அவர் வழிநடத்திச் சென்ற சாதனைச் சுவடுகளே தெரிகின்றன. அந்தச் சாதனைச் சுவடுகளைப் பின்பற்றி நாமும் சரித்திரம் படைக்க முயல்வோம்.
அவர் கூறிய சில கவிதை வரிகளே இக்கட்டுரையின் இறுதி வரிகள் -
“give a little
live a little
(கட்டுரையாளர் சென்னை நந்தனம் அரசு ஆடவர் கல்லூரியில் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். ‘கர்ணவித்யா’ என்ற பார்வையற்றோருக்கான தொண்டு நிறுவனத்தின் கௌரவச் செயலாளர்).
தொடர்புக்கு: raghuram.mcc@gmail.com
மிகவும் அருமை
பதிலளிநீக்குசார் உங்கள் கட்டுரையின் மூலமாகவே இவரைப் பற்றி நான் நன்கு அறிந்து கொள்ள முடிந்தது கட்டுரை அற்புதம் சார்.
பதிலளிநீக்கு