சிறுகதை: மூங்கில் காதல் - முகிலன்

graphic ஓரு நிழல் உருவம் புல்லாங்குழல் வாசிக்கும் படம்

      அவள் தன்னுடைய கைக் கடிகாரத்தைத் திருப்பிப் பார்க்கிறாள். மணி மாலை 5.30. தான் பார்த்துக்கொண்டிருந்த கோப்புகளை அப்படியே மூடி வைத்துவிட்டு வெளியில் வந்து குழாயில் முகத்தை அளம்புகிறாள். தன் தோல் பையிலிருந்து சீப்பை எடுத்துத் தலையைச் சீவி ஒப்பனை செய்துகொள்கிறாள். அவசர அவசரமாக தனது தோல் பையை மாட்டிக்கொண்டு 8-வது மாடியிலிருந்து லிப்டில் இறங்குகிறாள். தரைத் தளத்திற்கு வந்ததும் நேராக கோட்டை இரயில்வே ஸ்டேசனுக்கு மனம் போக எண்ணியது. ஆனால் திடீரென்று வந்த அந்த எண்ணம் அவளை வீட்டிற்குச் சற்று தாமதமாகப் போகலாமே என்று சொன்னது. ஆம். இன்று காலை தேதித் தாளைக் கிழித்ததிலிருந்து அவள் இப்படித்தான் இருக்கிறாள். இன்று ஆகஸ்ட் 5. அவள் மனம் கலவையான உணர்ச்சிகளால் அலை பாயத் தொடங்கியது.
      குழப்பமான எண்ணத்துடன் அவள் சற்று காலாற தலைமைச் செயலகத்திற்குள்ளேயே சுற்றி வந்துகொண்டிருக்கிறாள். கடற்கரைக் காற்று சில்லென்று அவளது உடலைத் தழுவிக்கொண்டிருக்கிறது. அவள் ஆடையில் பூசிய வாசனை திரவியம் அவள் மூக்கை மீண்டும் மீண்டும் தொட்டுக்கொண்டிருக்கிறது .
      சாலையைக் கடந்து நேராக அண்ணா சமாதி நோக்கி நடக்கிறாள். தான் எங்கே போகிறோம் என்ற சிந்தனை இல்லாமல் அவள் கால்கள் மட்டும் போகின்றன. கால்களுக்கு ஒத்துழைத்துக் கண்கள் வழி பார்த்து நடக்கின்றன. ஆனால் மனம் மட்டும் அந்தத் தொடர்வண்டிக்குள் கேட்ட புல்லாங்குழல் இசையில் லயித்துக்கொண்டிருக்கிறது.
      எதிரில் ஒருவன் அவளை உரசிவிட்டுச் சென்றபோது தன் நிலைக்கு வந்தாள். தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டது போல தான் வந்து நின்ற இடத்தை விழித்துப் பார்த்தாள். கடற்கரை மணலில் தான் நின்றுகொண்டிருப்பதை உணர்ந்தாள். இவ்வளவு நேரம் தன்னை அறியாமலே நெடுந்தொலைவு வந்துவிட்டதை நினைத்துத் தனக்குள்ளே சிரித்துக்கொண்டாள்.

      13 வயது சிறுமி ஒருத்தி, தனியாக இருந்த அவளிடம், “அக்கா! ஒரு முழம் பூ வாங்கிக்கோ!” என்று சதா கேட்டுக்கொண்டே இருந்தாள். அவள் வேண்டாம்என்று மறுத்தாள். . ஆனால் அந்த பெண்ணுக்கோ எப்படியாவது அவளிடம் ஒரு முழம் பூவைக் கொடுத்துவிட வேண்டும் என்ற எண்ணம். அவள் 15 முறையாவது கேட்டிருப்பாள். ஒரு மீனுக்காகக் காத்திருக்கும் கொக்கைப்போல அவள் ஒரு முழம் பூவை விற்கக் காத்துக்கொண்டிருந்தாள். வேறு வழியே இல்லாமல் 20 ரூ நோட்டை எடுத்து அவள் கையில் திணித்து விட்டு 2 முழம் பூவை வாங்கிக் கொண்டாள். 2 முழம் பூவை விற்றுவிட்டோம் என்ற சந்தோஷத்தில் அவள் புன்னகை வீசிவிட்டுச் சென்றாள்.

      எல்லா மனிதர்களுக்கும் மகிழ்ச்சி என்பது வெவ்வேறு விதமாக அமைகிறது. இந்தப் பூக்காரிக்கோ தன் தட்டிலிருந்த கடைசி பூ காலியானதும் அவள் முகத்தில் அளவில்லாத மகிழ்ச்சி பொங்கியது. அந்த இசைஞனுக்கோ, இந்த உலகை அவனால் பார்க்கமுடியவில்லை என்றாலும், தன் இசையால் தன்னைச் சுற்றி உள்ளவர்களைச் சந்தோஷப்படுத்த முடிகிறது.

      அன்று இரவு மட்டும் அந்தச் சம்பவம் நடக்கவில்லை என்றால் இந்நேரம் அவள் கோடம்பாக்கம் தாண்டி மாம்பலத்தில் இறங்கிக்கொண்டிருப்பாள். அந்தப் பாடகனோ தனது மூங்கில் குழலில் விதவிதமாய் இசை எழுப்பிக்கொண்டே வருவான். விருப்பமுள்ளவர்கள் அந்த இசைக்கு அன்பளிப்பாகத் தனது கையில் உள்ளதைக் கொடுப்பார்கள். அவன் தெரியாமல் யார் மீதாவது மோதி விட்டால் சிலர் தனது முகத்தைச் சுழித்துக்கொள்வார்கள்.
       சிலபேர் கோபமாக, “அப்படிதான் தள்ளிப்போயேன்! ” கண்ணுதான் தெரியலேயே! எதாவது ஓர் இடத்தில் உட்கார்ந்து பாட்டு பாடலாம் அல்லவா? ” எடுப்பதோ பிச்சை. அதை ஓரிடத்திலிருந்து எடுத்தால் என்ன?” என்று கேட்பார்கள்.
graphic பார்வையற்ற ஓருவர் புல்லாங்குழல் வாசிக்கும் படம்

      அந்த இசைஞன் எதைப்பற்றியும் சற்றும் கவலைப்படாமல் தனது மூங்கில் இசையை இசைத்துக்கொண்டிருப்பான்.
கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?’ என்று அவன் பாடிய பாடல் மனதிற்குள் ரீங்காரமிட்டது. வெட்கப்பட்டுக் கொண்டாள். கொஞ்சம் புன்னகையும் சிந்தினாள்.

      ஒரு ஹார்மோனியப் பெட்டி சத்தம் கேட்டது. யாரோ ஒரு பாடகன் அந்தப் பெட்டிக்குள் தனது இதயத்தைத் தொலைத்து விட்டதுபோல இனிய இசையை பரப்பிக்கொண்டிருக்கிறான். கடல் அலைகளும், கடற்கரைக் காற்றும் அவன் இசைக்கு வசப்பட்டன. அலையோசை மெதுவாய் ஒலித்துக்கொண்டிருந்தது. அந்தப் பாடகனைச் சுற்றி பலர் வட்டமாய் நிற்கிறார்கள். அவனோ, எதையும்  கண்டுகொளாமல் மேலும் மேலும் பாடிக்கொண்டிருக்கிறான்.

      மீண்டும் அவள் மனதில் அந்த மூங்கில் இசை ஒலிக்கத் தொடங்கியது. இருந்த இடத்தை விட்டு எழுந்து, அந்தப் பாடல் வந்த வழி நோக்கி அவள் மனமும், உடலும் சென்றது. கூட்டத்திற்கு நடுவே சற்று எட்டிப்பார்த்தாள். இவன் அந்த இசைஞன் இல்லை. ஆனால் அந்த இசைஞனைப் போலவே அவனும் ஒரு பார்வையற்றவன். அவனோடு ஒரு பெண்ணும்  பாடிக்கொண்டிருந்தாள்.

      கடவுள் கண் தெரியாதவர்களுக்கு மட்டும் எப்படி ? இப்படி ஒரு இசை ஞானத்தைக் கொடுத்தார் என்று தனக்குள் பொறாமைப்பட்டுக்கொண்டாள்.

      சூரியன் மறைந்தது. அப்பொழுதுதான் கடலில் குளித்துவிட்டு எழுந்தது போல தகதகவென தன் குளிர்ந்த வெளிச்சத்தோடு அந்த இரவுப் பொழுதைத் தனக்கானதாக ஆக்கிரமிப்பு செய்துகொண்டிருந்தது நிலவின் ஒளி. வீட்டில் மாடியில் நின்று பார்க்கின்ற நிலவின் அழகைவிட கடற்கரையில் பார்க்கும் நிலவின் அழகு அழகுதான். கடலலைகள் ஒரு நாட்டிய மங்கை போல மேலும் கீழும் எழுந்து நின்று ஆட, அந்த ஆட்டத்தில் அபிநயம் சற்றும் பிசகிவிடாமல் இருக்க அந்த மங்கைக்கு விளக்கு பிடித்துக்கொண்டிருந்தது நிலவு.

      நான் குழந்தையாக இருக்கும்பொழுது , அம்மா நிலாவைக் காட்டி சோறூட்டுவாள். . நிலாவில் பாட்டி வடை சுடுவது போலவும், நெல் குத்திக்கொண்டிருப்பது போலவும் கதை சொல்வாள். அப்பொழுதெல்லாம் வானத்தில் இருக்கும் நிலாவை எட்டிப்பிடிப்பது போல் ஆசை வரும். என் வயது ஒத்தப் பெண்களோடு அந்த நிலாவின் வெளிச்சத்தில் கோலாட்டம் அடித்து விளையாடிக் கொண்டிருப்பேன். அப்போது எங்கள் ஊரில் ஒரே ஒரு தெரு விளக்கு கூட கிடையாது. எங்கள் வீட்டில் மட்டும்தான் மின்சார விளக்கு; மற்ற வீடுகளில் எல்லாம் மண்ணெண்ணெய் விளக்குதான் எரிந்துகொண்டிருக்கும்

      எங்கள் ஊரின் தெருவிளக்கு இந்த நிலவொளிதான். ஆனால் , இப்பொழுது ஊரெல்லாம் மின்விளக்கு வந்த பிறகு நிலவின் ஒளியை யாரும் ரசிப்பதில்லை”. இப்படித் தனக்குத் தானே பேசிக்கொண்டாள் அவள். தொடர்ந்து அவளே பேச விரும்புகிறாள். பேசட்டும்.

      யாரோ இரண்டு சிறுவர்கள் கடலில் குளித்துவிட்டு வந்து என் பக்கத்தில் வந்து தனது உடலைக் குருக்கினார்கள். . அவர்களின் உடலில் இருந்து தண்ணீர் என் மீது பட்டதும், என்னை யாரோ கிள்ளிவிட்டது போல இருந்தது. திரும்பிப் பார்த்தேன். கடலிலே மிதந்த நிலவு கடலுக்கு மேலே வந்துவிட்டது. கைக் கடிகாரத்தைப் பார்த்தேன். மணி 7.40 ஆகிவிட்டது. பிரிய மனமின்றி அந்தக் கடற்கரையை விட்டுப் பிரிந்து சென்றேன்.

      எழிலகத்தின் வழியாக நடந்து செல்லும்பொழுது இரண்டொரு ஆண்கள் என்னை முறைத்துப் பார்த்தார்கள். என் இதயம் திக் திக் என்று அடித்துக்கொண்டது. இதற்குதான் நான் மாலையிலேயே வீடு சென்றிருக்க வேண்டுமென்று என் மனம் எண்ணியது. அந்த நேரத்தில் என்னைக் கடந்து போகும் ஆண்களெல்லாம் என்னையே வெறித்து பார்ப்பதுபோல் எனக்கொரு பிரம்மை தட்டியது. இப்பொழுதே வீட்டிற்குப் போகவேண்டும் என்று என் மனம் விரும்பியது.

      பீச் ஸ்டேசன் போகும் தொடர்வண்டி வந்தது. அந்தத் தொடர்வண்டியில் ஏறி ஒரு இருக்கையில் அமர்ந்துகொண்டேன். சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒன்றிரண்டு காதல் ஜோடிகள்; கொஞ்ச தூரத்தில் ஒரே ஒரு ஆண் மட்டும் தனியாக இருந்தான். அவன் என்பக்கத்தில் நெருங்கியது போல் தோன்றியது. இல்லை. அதுவும் பிரம்மைதான். அறன்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல் எந்த ஆணைப் பார்த்தாலும் எனக்குத் தவறாகவே தோன்றியது.

      கோட்டை ஸ்டேசன் வந்ததும் இறங்கி தாம்பரம் போகும் தொடர்வண்டியைப் பிடிக்கச் சென்றேன். 5 நிமிடத்திற்குள் தொடர்வண்டி வந்தது. அப்பொழுது கூட்டம் இல்லாமையால் தொடர் வண்டியில் எனக்கொரு இடம் கிடைத்தது மீண்டும் அந்த எண்ணம் மேலெழுந்தது. ஆம். இதே ஆகஸ்ட் 5-இல்தான் அந்த சம்பவமும் நடந்தது.

      நான் சின்ன வயதிலே தப்பு செய்தால் கூட அப்பா என்னை அடித்தது கிடையாது. அம்மா எப்போதாவது அதிக கோபத்தில் இரண்டு அடி மட்டும் அடிப்பாள். அதுகூட கையால் மட்டும்தான். இதுவரை நான் யாரையும் கடுமையான வார்த்தைகளால் திட்டியது இல்லை. என்னையும் யாரும் அப்படித் திட்டியது இல்லை. அன்று இரவு என் உடலில் பட்ட சிகிரெட் சூடைவிட என்  உள்ளத்தில் பட்ட நெருப்பு இன்னும் அனையவேயில்லை.

      ராஜேஷ் மிகவும் நல்லவன் தான் ஊருக்கெல்லாம். என் அம்மாவைப் பார்த்தாள் இரண்டு கைகளைக் கூப்பி வணக்கம் செய்வான். அந்த அளவிற்கு ஒழுக்கமான, நேர்மையான பையன்.
திருமணத்திற்கு முன்பும் நான் கூட அப்படிதான் நம்பினேன். என் வீட்டிற்குப் பக்கத்தில் ஒன்றிரண்டு ஆண்கள் குடித்துவிட்டு தங்கள் மனைவிகளை அடிக்கும்பொழுது ஆண்கள் வர்க்கமே மோசமானவர்கள்என்று எண்ணினேன். ஆனால் ராஜேஷைப் பார்க்கும் பொழுது அப்படி எண்ண என்மனம் கூசியது .

      நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து, ஐயர் வைத்துதான் திருமணம் நிச்சயித்தார்கள். எங்கள் ஊரில் யாருக்கும் செய்யாத வகையில் எனக்கும் ராஜேஷுக்கும் திருமணத்தை நடத்திவைத்தார்கள். நான் மட்டும் 50 பவுன் நகை போட்டு திருமணம் செய்துகொண்டேன். பதிலுக்கு ராஜேஷ் வீட்டாரும் 25 பவுன் நகை போட்டார்கள். தலைமைச் செயலகத்தில் எனக்கு நல்ல சம்பளத்தில் வேலை. ராஜேஷும் ஒரு அரசுக் கல்லூரியில் பேராசிரியர்தான். எந்தக் குறையும் இல்லாமல் எனது வாழ்க்கை தொடங்கியது.

      ஊரில் நல்ல பாம்பிற்குத் தான் பாலும் முட்டையும் வைத்து பூசிப்பார்கள். அந்தப் பாம்பிற்குதான் விசத்தன்மை அதிகம் என்று யாரும் உணருவதில்லை. அப்படி உணர்ந்தால் கூட அதை பெரிதுபடுத்துவதும் இல்லை. அதுபோலதான் ராஜேஷும். திருமணம் செய்துகொண்ட புதிதில் எனது கண்ணில் கண்ணீரைப் பார்த்து வீட்டிற்கு ஒரு வேலைக்காரியை நியமித்தார். ஆஹா , என் மீது இவ்வளவு அக்கறையும் அர்ப்பணிப்பும் வைத்துள்ளாரே என்று என் உள்ளமும், உடலும் பூரிப்பு அடைந்தது. இத்தகைய பூரிப்பும் மகிழ்ச்சியும் வெறும் மூன்று மாதங்களுக்குள் முடிந்துவிட்டது. நல்ல பாம்பு விஷம் கக்கத் தொடங்கியது. வீட்டு வேலைக்காரியாக வந்தவள் வீட்டின் சொந்தக்காரியாக மாறத்தொடங்கினாள்.

      அன்றிரவு நான் தூங்கிவிட்டேன் என்று நினைத்துக் கொண்டு ராஜேஷ் கைபேசிக்கு அவள் போன் செய்தாள். அவள் எண்ணைப் பார்த்ததும் ராஜேஷ் பக்கத்து அறைக்கு ஓசைபடாமல் எழுந்து சென்றான். இருவரும் பேசியது என் காதில் தெளிவாக விழுந்தது.
எத்தனை நாளைக்கு நான் இப்படி வேலைக்காரியாக வேசம் போடுவது?” என்று அவள் கேட்க, இன்னும் கொஞ்ச நாட்கள் பொருத்துக்கொள் அம்பிகாஎன்றான். ஆனால் அவள் ஒத்துக்கொள்ளவில்லை. “மெதுவாகப் பேசு. தேவி விழித்துக்கொள்வாள்என்று சொன்னான். “இல்லை, நாளைக்கே என்னை நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும்என்று சொன்னாள் அவள். கன்னத்தில் பளிர் பளிர் என்று அடி விழும் சத்தம் கேட்டது. எழுந்துபோய் தடுக்கலாம் என்று நினைத்தேன். அவர்கள் செய்த துரோகம் என்னை அந்த நல்ல செயலைச் செய்வதற்கு விடவில்லை.

      பொழுது விடிந்ததும் நான் அம்பிகாவைப் பார்த்து கையில் ஒரு மூவாயிரம் திணித்து விட்டு, “உன் பெட்டிபடுக்கை எடுத்துக் கொண்டு நீ இன்றோடு காலி செய்என்று சொன்னேன்.
அவள் படுக்கையறையிலிருந்து வெளிவந்த ராஜேஷ், , “அவள் என்ன தவறு செய்தாள் இன்றே அவளை அனுப்புவதற்கு?” என்றான்.
இல்லை. அவள் நமக்குச் சரிப்படமாட்டாள். வேறொரு வேலைக்காரியைப் பார்த்துக்கொள்ளலாம்என்றேன் .
அதெல்லாம் கூடாது. அவள்தான் இங்கு இருப்பாள்என்று சொன்னார்.  நான் வேண்டாம் என்று பிடிவாதமாய் மறுத்தேன்.
எனக்கும் அவருக்கும் சண்டை அதிகமானது. அம்பிகா இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டே சோபாவில் அமர்ந்துகொண்டிருந்தாள். இவர் வாயை எப்படி அடக்குவது என்று முடிவுசெய்து, “நேற்றிரவு நடந்த சம்பவமெல்லாம் எனக்குத் தெரியும்என்றேன்.

      இப்போது அவருக்குப் பதிலாக அம்பிகாதான் வாய் திறந்தாள். “இதையெல்லாம் அவர் உன்னிடம் கூறவில்லையா?” என்றாள்.
ராஜேஷ் சொன்னார், “இதையெல்லாம் அவளிடம் கூற அவசியமில்லை”. தற்கொலை செய்வதாக மிரட்டினேன். வேறு வழியில்லாமல் அம்பிகாவை அப்பொழுது வீட்டை விட்டு அனுப்பிவிட்டான். அதற்குப் பிறகு ஒருவாரம் இருவரும் சரியாகப் பேசிக்கொள்ளவில்லை.

      இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அந்தச் சம்பவம். அப்பப்பா என் வாழ்நாளில் நான் மறக்கவே முடியாது. நாளைக் காலை விடிந்ததும் அம்பிகாவை வீட்டிற்கு கூட்டிட்டு வருவேன்என்றான். அதுவரை வாய்திறக்காமல் இருந்த நான், “அவள் வந்தாள் நான் வீட்டை விட்டு வெளியேறிவிடுவேன்என்று சொன்னேன்.“ இது ஒன்றும் உன் அம்மா வீடல்ல நீ சொல்வதற்கெல்லாம் ஆடிக்கொண்டிருப்பதற்குஎன்றான்.
        என்ன செய்வது என்று புரியவில்லை.  அவனுடைய அப்பாவிற்கு போன் செய்ய நினைத்தேன். என் கையிலிருந்த போனைப் பிடிங்கி எரிந்து விட்டு என் கன்னத்தில் மாறிமாறி அடித்தான். மிகுந்த போதையில் இருந்ததால் தான் என்ன செய்கிறோம் என்று அவனுக்கே தெரியவில்லை. பக்கத்தில் இருந்த பிராந்தி பாட்டிலை எடுத்து என் கண்ணில் ஊற்றினான். சிகிரெட் துண்டால் என் தொடையிலும், மார்பகத்திலும் சூடு வைத்தான். இனி இவனோடு வாழக்கூடாது என்று எண்ணி அன்றிரவே வீட்டை விட்டு வெளியில் வந்தேன்.

      சென்னையில் எனக்கு வேறு யாரையும் தெரியாது. என்னோடு வேலை செய்யும் சினேகிதி வீட்டிற்குப் போகலாம்தான். அவள் திருவல்லிக்கேணியில் தங்கியிருக்கிறாள். இந்த இரவு நேரத்தில் அங்கு போகமுடியாது. நான் அழுதுகொண்டே தாம்பரம் இரயில்வே ஸ்டேசன் நோக்கி நடந்துவந்தேன். இரவு 12.30 மணி இருக்கும். அந்தக் கடைசி வண்டி போய்விட்டது. பீச்சிலிருந்து தாம்பரத்திற்கு வரும் இரயிலும் வந்து நின்றது.

      அந்த இசைஞன் கையில் கோலை ஊன்றி மெதுவாக இறங்கி நடைமேடையில் நடந்துவந்தான். முகம் மட்டும் அவன்தான் என்று உறுதிப்படுத்தியது. அவன் உடுத்தியிருந்த உடையும் , அவன் தோளில் மாட்டியிருந்த பையும் புதிதாக இருந்தன. அவன் என் பக்கத்தில் வந்ததும், “ஏங்க! நான் படிக்கட்டுக்குப் போகனும். எப்படிப் போகனும்னு சொல்றிங்களா?” என்று கேட்டான்.
        நான் அப்போதிருந்த நிலைக்கு அந்தப் பாடகனுக்கு உதவி செய்ய முடியாது என்றுதான் நினைத்தேன். ஆனால் ஏனோ தெரியவில்லை. என் மனம் அவனுக்கு உதவி செய்ய எண்ணியது. இரண்டொரு முறை அவனைப் பார்த்து நான் பேசியிருக்கிறேன். அவன் பாடல் நன்றாக இருக்கிறது என்று பாராட்டியிருக்கிறேன். இப்பொழுது நான் குரல் கொடுத்தாள் என்னை கண்டுபிடித்து விடுவானே என்று சற்று அச்சமாக இருந்தது. ஆனால், “ஒரு நல்ல பாடகன் வழி கேட்கிறான். உதவுவது என் கடமை அல்லவா? என்று என் மனம் எண்ணியது .

      படிக்கட்டில் இறங்கி எங்கு போகனும்?” என்று கேட்டதுதான் தாமதம், பளீரென்று என் பெயரைச் சொன்னான். “தேவி மேடம். எங்கே இந்தப் பக்கம்? இவ்வளவு நேரமா வீட்டிற்கு போகலையா?” என்று அடுத்தடுத்து வார்த்தைகளைத்  தொடுத்தான். நான் என்ன சொல்லவேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் பச்சையாகப் பொய் சொல்ல நினைத்தேன், என் வீட்டு காரருக்காக காத்துக்கொண்டிருப்பதாக. ஆனால் இந்த பாழாய்ப் போன மனம் பொய் சொல்ல விடவில்லை. வேறு வழியில்லாமல் மனதில் இருக்கும் எண்ணங்களை அடக்கிக்கொண்டு, “சும்மாதான் இங்கு வந்தேன்என்று சொன்னேன். அவன் என்னைச் சும்மா விடவில்லை. “நீங்கள் 7 மணிக்கு மேல் இங்கு வரமாட்டீர்களே என்றான். இவனிடம் பேசியது தவரோ என்று என்மனம் எண்ணியது.

      உங்கள் பேச்சில் கூட ஏதோ தடுமாற்றம் இருக்கிறதுஎன்றான். அப்பப்பா! பொல்லாத ஆளாய் இருப்பான் போல. எல்லோரும் முகத்தைத் தான் பார்த்துக் கேட்பார்கள். ஆனால் இவனோ என் குரலை வைத்துக் கேட்டுவிட்டானே! சரிங்க மேடம். அதெல்லாம் இருக்கட்டும். இன்றைக்கு ஒரு மகிழ்ச்சியான விஷயம் சொல்லணும். வாங்க. நாயர் டீ கடையில் டீ குடித்துக்கொண்டே பேசுவோம்என்றான்.

      அப்போதைக்கு எனக்கு வேறுவழி தெரியவில்லை. அவனோடு இருப்பதுதான் எனக்குப் பாதுகாப்பு என்று நினைத்தேன்.

இனி நான் ரயிலில் பாட்டு பாடப்போவதில்லை”.

ஏன்என்று கேட்டேன்.

இனி நான் அப்படிப் பாடினாலும் என் ரசிகர்களிடமிருந்து காசு வாங்கப்போவதில்லை. அவர்களாக வற்புறுத்திக் கொடுத்தால், அந்தக் காசை என் போன்ற பார்வையற்றவர்களுக்குக்  கொடுத்துவிடுவேன். எனக்கு கனரா வங்கியில் வேலை கிடைத்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. இன்றைக்குதான் முதல் சம்பளம் வாங்கினேன்”.

அதனால்தான் இந்த இரண்டு மாதமா பாட்டு பாட வரலையோ?” என்று கேட்டேன்.

ஆமாம்என்று சொல்லிவிட்டு, “என் வங்கியில் என்னைப் பார்க்க வருவோரெல்லாம் இவருக்கென்ன தெரியும் என்று முதலில் தயக்கம் காட்டுகிறார்கள். பிறகு நான் கணிப்பொறியில் தட்டச்சு செய்றதைப் பார்த்து எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள். அவர்களுக்குத் தெரியல மேம், இதுதான் என் தொழில் என்று.
     முதன்முதலில் எனது வங்கி மேலாளர் கூட என்னை ஒரு அலட்சியமாகத்தான் பார்த்தார். வங்கியில் ஏதேனும் கடிதம் தட்டச்சு செய்யவேண்டுமென்றால் வேறொரு ஆளிடம் கொடுப்பார். நானே அவரிடம் வலியச் சென்று, ‘ஐயா , எந்தக் கடிதம் தட்டச்சு செய்யவேண்டும்?’ என்று கேட்டேன். அவர் சற்று தயங்கினார். நான் வற்புறுத்திக் கேட்டதன் விளைவாக, அவர் சொல்லச் சொல்ல ஒரு கடிதத்தைத் தட்டச்சு செய்தேன். நான் தட்டச்சு செய்வதைப் பார்த்த அவர் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும் . அன்றிருந்து இன்று வரை நான்தான் தட்டச்சு செய்கிறேன்”.

அவன் சொல்வதைக் கேட்டு எனக்குப் பிரமிப்பாக இருந்தது.
நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்?”என்று கேட்டேன். .

நான் M.A, M.Phil” என்று சொன்னான். என் இதயம் ஒரு நொடி நின்று இயங்கியது.

இவ்வளவு படித்துவிட்டு எதற்காக இந்த இரயிலில் பாட்டுப் பாடி பிச்சை எடுத்தீர்கள்?” என்றேன்.

வயிறு என்று ஒன்று இருக்கிறத அல்லவா! ? அதற்காக எனக்குத் தெரிந்த கலையைத் தான் விற்றேன்என்று என் முகத்தில் அறைந்தவாறு அந்த பதிலைக் கூறினான்.

நீங்கள் இப்பொழுது ஏதோ குழப்பத்தில் இருக்கிறீர்கள் போல உள்ளது. நீங்கள் விரும்பினால் எனது வீட்டில் தங்கிக்கொள்ளலாம்என்றான்.

      நான் வேண்டாம்என்று சொல்ல நினைத்தேன். இப்போதைக்கு வேறு வழியில்லை. இந்த நள்ளிரவில் வேறு எங்கு செல்வது? அவன் அழைப்பிற்கு என்னால் மறுப்பு சொல்ல இயலவில்லை. ஒரு ஆட்டோவைப் பிடித்து அவன் வீட்டிற்குச் சென்றேன்.

      இதையெல்லாம் நினைத்துக் கொண்டிருந்த போது தாம்பரம் தொடர்வண்டி நிலையம் வந்துவிட்டது. வண்டி விட்டு இறங்கி நேராக அவன் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றேன். அங்கு அவன் இல்லை. அவன்தான்  பணி மாறுதலாகி வேறொரு ஊருக்குச் சென்றுவிட்டானே! இரண்டு ஆண்டுகள் இப்படியே உருண்டோடிவிட்டன. அவன் இசைத்த மூங்கில் புல்லாங்குழல் மட்டுமே அவன் வீட்டில் எனக்கு ஆறுதலாக, பாதுகாப்பாக இருந்தது. எப்பொழுதெல்லாம் நான் துயரப்படுகிறேனோ அப்பொழுதெல்லாம் அந்த இசைஞனின் புல்லாங்குழல் இசை என் காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.

எனக்காக அவனா? அவனுக்காக நானா? இல்லை, அவன் இசைக்காக என் காதலா? யாரறிவார்?”
அவள் காதுகளில் இந்தப் பாடல் அவன் குழலிசையாய் ஒலித்தது. அவளும் பாடலை முணுமுணுத்தபடி படுக்கையில் சாய்ந்தாள்
நானே நானா? யாரோ தானா?
 மெல்ல மெல்ல மாறினேனா?”

தொடர்புக்கு: dvtamilmugil@gmail.com
  

5 கருத்துகள்:

  1. ஜெயராமன் தஞ்சாவூர் எப்படி18 ஆகஸ்ட், 2020 அன்று 9:27 AM

    கதையின் கருத்தும், கற்பனையும் அருமை.

    பதிலளிநீக்கு
  2. இது பார்வையற்றவர் எழுதிய கதைதானா?
    ஒப்பனையும், கற்பனையும் அருமை.
    கதைக்களம் சிறப்பு.
    ஆனால் அந்த பென்னை வாழ்வை இழந்தவலாக காட்டியிருக்கவேண்டாமோ என்னும் கருத்து மட்டும் எனது மனதில் எதிரொலித்தது.
    ஆனால் கதை ஆசிரியர் சென்னையில் பலகாலம் முன்பு வாழ்ந்தவர் போலும். பரக்கும் ரையில் இப்போதெல்லாம் ஆட்கல் நிற்க இடமின்றி செல்கிரது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகச்சரியாகச்சொன்னீர்கள் ராஜா! இதனை எழுதியவர் ஒரு பார்வையற்றவர்தான்.

      நீக்கு