27.01.2018. இந்த நாள், இந்திய பார்வையற்றோரது வரலாற்றில். ஏன் உலக பார்வையற்றோரது வரலாற்றில் என்று கூட கூறலாம். பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய நாள்.
பார்வையற்றவர்களால் எதை முடியாது என்று கூறி இன்னும் அவர்களை இந்தச் சமுகம் புறக்கணித்துக்கொண்டிருக்கிறதோ, அதை உடைத்தெறிவதற்காக எழுத்து என்னும் அறிவுசார் ஆயுதம் கொண்டு, அறுவர் அடங்கிய பார்வையற்றோர் குழு புதுக்கோட்டை பார்வையற்றோருக்கான அரசுப் பள்ளியில் ஒன்றாக கூடிப் புறப்பட்ட தினம் தான் இந்த 27.01.2018.
பொதுவாக எல்லையற்ற படைப்பு வெளியை இந்த தமிழ்ச் சமூகம் கொண்டுள்ளது. இங்கு எல்லாத் தரப்பினருக்கும் தங்களது உணர்ச்சிகள், கற்பனைகள், வரலாறு உள்ளிட்டவற்றைப் பதிவு செய்யும் வாய்ப்புகள் மிக எளிதாக வழங்கப்படுகின்றன. ஆனால் பார்வையற்றவர்களுக்கு மட்டும் இத்தகைய வாய்ப்புகள் அவ்வளவு எளிதாக வாய்ப்பதில்லை என்பது நிதர்சனம். காரணம், இந்தச் சமூகம் கொண்டுள்ள பார்வையற்றோர் மீதான கற்பிதங்கள்.
என்னதான் பார்வையற்றவர்கள் பெரும்பாலும் மொழிப் பாடங்களையே பயின்று, அவர்கள் தம் படைப்புகளை மிகச் சிறந்த படைப்புகளாக வழங்கினாலும், அவர்களுக்கான அங்கிகாரம் இங்கு வழங்கப்படுகின்றதா, என்றால், அதற்கான பதில் அழுத்தமாய் வருகிறது இல்லை என்று. இத்தகைய தடைகளை உடைத்தெறிந்து எழுத்துலகிலும் பார்வையற்றவர்களால் மிக எளிதாகச் சாதிக்கமுடியும் என்பதனை உணர்த்தவும், அவர்களின் வாழ்வியல்களை அவர்களால் மட்டுமே மிக எதார்த்தமாகத் தரமுடியும் என்பதனை இந்தச் சமூகத்திற்குக் காட்டுவதற்காகவும்.ஒரு மின்னிதழ் உதயமான தினம்.
விரல்களை வைத்தே பார்வையற்றவர்கள் தங்களது எல்லா வெற்றிகளையும் சாத்தியமாக்குகிறார்கள் என்பதால் ‘விரல்மொழியர்’ என்னும் நாமத்தைத் தாங்கி,
பார்வையற்றவர்களின் அறிவின் அடயாளமாய்!
எண்ணங்களின் அணிவகுப்பாய்!
உணர்ச்சிகளின் ஊற்றுக்கண்ணாய்!
கற்பனையின் எழுதுதாளாய்!
இந்தியப் பார்வையற்றோரின் சமகால வரலாற்றுப் பெட்டகமாய்!
பார்வையற்றவர்களின் பன்பாட்டுக் கருவூலமாய்!
மாதந்தோரும் வெளிவருகிறது இந்த மின்னிதழ்.
புரட்சிப் பயணத்தில் ஒரு மைல் கல்
‘உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு’ என்னும் வரியை வழிகாட்டுதலாய்க் கொண்டு, முழுக்க முழுக்க பார்வையற்றவர்களால் மட்டுமே நடத்தப்படும் இந்த இதழ் இப்போது தனது புரட்சிப் பயணத்தில் முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. எத்தனையோ இலக்கிய அமைப்புகளும், சிற்றிதழ்களும் துவங்கிய மாத்திரத்தில் காணாமல் போய்விடுகின்ற சூழலில், இந்த விரல்மொழியர் தனது 25-ஆம் மாத இதழை வெற்றிகரமாய் வெளியிட்டுள்ளது. இந்த இதழும் விளையாட்டுச் சிறப்பு இதழாய் வெளிவந்து பார்வையற்றோரை இன்னொரு கோணத்தில் உலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இந்தப் புரட்சிகரமான வெற்றிப் பயணத்தை விழாவாக நடத்தத் திட்டமிட்டு, அதிலும் பல புதுமைகளைப் புகுத்தி வெற்றி கண்டிருக்கிறது இந்த இதழின் ஆசிரியர் குழு.
ஆம். இந்த பேரிடர் காலத்தில்தான் மிக பிரமாண்டமாய் பெரும் கூட்டத்தைக் கூட்டி தனது 25-ஆம் இதழ் வெளியீட்டு விழாவை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்கள். ஒரு விழாவை நடத்துவதென்ன அவ்வளவு பெரிய சாதனையா என்று கேட்கலாம். ஆம். இத்தகைய சூழலில் இது மிகப்பெரிய சாதனைதான். இப்போது இருக்கும் வீடியோ கான்பரன்ஸிங் தொழில்நுட்பத்தைக் கார்ப்பரேட் நிருவனக் கூட்டத்திற்கும், இணையவழிக் கருத்தரங்கங்கள் நடத்துவதற்கும் மட்டுமே பயன்படுத்திக்
கொண்டிருப்பவர்கள் மத்தியில் புதுமையாய் யோசித்து, தங்களது வெற்றிவிழாவை நடத்த மிகச் சிறப்பாய் திட்டமிட்டு, அதனை நடத்தியும் காட்டியுள்ளார்கள். வழக்கம்போல்
இருக்கும் எல்லா விழாக்களை போன்று இல்லாமல், இதிலும் பல புதுமைகளைப் புகுத்தி அசத்தியிருந்தது விழாக்குழு.
முன்னதாய் வந்த முன்னோட்டம்
படத்திற்கோ, அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கோ ட்ரைலர் விட்டுப் பார்த்திருப்போம். அதுவும் அந்த நிகழ்ச்சியில் நடித்திருக்கும் நடிகர்களை வைத்தே இருக்கும். உலக வரலாற்றில் முதல் முறையாக, ஒரு மின்னிதழ் வெற்றிவிழாவிற்கான ட்ரைலரை, தமிழகத்தின் 3 முன்னாள் முதல்வர்களையும், முன்னாள் குடியரசுத் தலைவரையும்.கற்பனையால் தங்கள் குரல்வழி நடிக்கவைத்து 05.06.2020 அன்று மாலை 6 மணி அளவில் கோலாகலமான நிகழ்ச்சி ஒன்றை இணையவெளியில், ஜூம் செயலி வாயிலாய் வெளியிட்டார்கள்
அதன் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பும் புதுமையானது. திக்விஜயம், கலைக் களஞ்சியம், தோழமை உறவுகள், easy English by
charanya ஆகிய யூடியூப் சேனல்கள் சார்பாக இதழாசிரியரிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இதில் என்ன சிறப்பு என்றால், இவை பார்வை மாற்றுத்திறனாளிகளால் நடத்தப்படும் யூடியூப் சேனல்கள்.
விழா தொடங்கியது
இதனைத் தொடர்ந்து 12.07.2020 அன்று காலை விரல்மொழியர் மின்னிதழின் வெள்ளி விழா. குறித்த நேரத்தில் மிகச்சரியாகக் காலை 10 மணிக்கு ஜூம் இணைய அரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கப்பட்டது. ‘கேட்குதா? கேட்குதா?’ என்னும், எல்லா இணையவெளி கூட்டத்தின் ட்ரேட்மார்க் கேள்வியோடு, இதழின் இணையாசிரியர் திரு. பொன். சக்திவேல் அவர்கள் தனது வழக்கமான பாணியில் விழாவைப் புதுக்கோட்டையிலிருந்து வழிநடத்த, அருப்புக்கோட்டையிலிருந்து இதழின் ஆசிரியர் திரு. ரா. பாலகனேசன் அவர்கள் தொடக்க உரையாற்றினார்.
“இந்த இதழ் துவங்கப்பட்டதற்கான நோக்கம் இன்று கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறிக் கொண்டிருக்கின்றது. பார்வையற்றவர்களின் வாழ்வியலைப் பொது சமூகம் புரிந்துகொள்ள இந்த இதழ் சமகாலத்திற்கு மட்டுமின்றி வருங்காலத்திற்கும் அழிக்க இயலா ஆவணமாகத் திகழும் என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” என்றும், “பார்வையற்றவர்களால் உருவாக்கப்படும் இந்த இதழ் பார்வை உள்ளவர்களாலும் வாசிக்கும் வண்ணம் மிக கவனமாக வடிவமைக்கப்படுகிறது” என்றும், “எழுத்தின் ஊடான இந்தப் பாதையில்,வாசகர்களின் கரம் பற்றியே எப்போதும் நாங்கள் பயனிக்க விரும்புகிறோம். எங்களது பயணங்களில் சில தடுமாற்றங்கள் இருந்தாலும் எங்களின் கொள்கைகளிலிருந்து தடம் மாறமாட்டோம்” என்றும், “இந்த இதழ் விழியற்றவர்களின் வழித்தோழனாய் தனது பயணத்தை என்றென்றும் தொடர்ந்துகொண்டேயிருக்கும்” என்றும் கூறி தனது உரையை நிறைவுசெய்தார்.
அடுத்ததாகத் தஞ்சாவூரிலிருந்து, தஞ்சை பார்வை குறையுடையோருக்கான அரசுப் பள்ளி மானவி செல்வி. செந்தியா அவர்களின் மயக்கும் மக்களிசைப் பாடல். அனைவரையும் நாம் இனையவெளியிலா இணைந்திருக்கிறோம் என்கிற கேள்வியைத் தன்னைத்தானே கேட்டுக்கொள்ளும் அளவிற்கு அவரது இன்னிசை காந்தக் குரல் கட்டி இழுத்தது.
நிறுவனம் சாராத ஒரே இதழ்
அடுத்ததாக, கள்ளக்குறுச்சியில் இருந்து இனைந்த, கள்ளக்குறுச்சி அரசுக் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியரும், பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவையின் நிறுவனருமான முனைவர் கு. முருகானந்தன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்
இந்த இதழ் துவங்கிய நாள்முதல் தனது பயணமும் இந்த இதழோடு தொடர்கிறது என்று கூறிய அவர், “பார்வையற்றவர்களுக்காக உலகம் முழுக்க பல இதழ்கள் தொடர்ச்சியாக இயங்கிவருகின்றன. ஆனால் அந்த இதழ்கள் அனைத்தும் ஏதோ ஒரு நிருவனத்தின் குரலாகவே வெளிவருகின்றன. இந்த இதழ் மட்டும்தான் இதழியல் அறத்தோடு, பார்வையற்றவர்களின் வாழ்க்கை முறையினை எந்த மிகைப்படுத்தலும் இன்றி, தத்ரூபமாக வெளிக்கொணர்கிறது” என்றார். மேலும், தனக்குப் பிடித்த இதழாக அன்னையர் தின சிறப்பிதழைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், அந்த இதழில் வந்த பார்வையற்ற பெண்களின் குழந்தை வளர்ப்பு முறையைக் குறித்த கட்டுரையைப் படித்து.தான் வியந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், இதழியல் நேர்த்தியோடு அனைத்து அமைப்புகளையும் ஒருங்கினைத்துச் செல்லும் விரல்மொழியரின் வரலாறு, கருத்துத் தளத்தில் ஒட்டுமொத்த தமிழ் பார்வையற்ற சமூகத்தின் வரலாறு என்றுக் கூறி தனது வாழ்த்துறையை நிறைவு செய்தார்.
தொடர்ந்து புதுச்சேரியில்
இருந்து
இணைந்த புதுச்சேரி சமூகநலத்துறை ஊழியர் திரு. சத்தியமூர்த்தி அவர்கள் சிறுகதை வழங்கினார். ரஷ்ய மொழிப்பெயர்ப்புக் கதையென்று சொன்னதும் அனைவரும் சற்று விழி பிதிங்கிதான் போனார்கள். ஆனால் அவர் தனக்கே உரிய நடையில் நகைச்சுவையோடு கதையைத் துவங்கியதும் அனைவரது காதுகளும் தானாய் அவர் பக்கம் திரும்பிக்கொண்டன.
ஆவணப்படுத்தப்படும் பார்வையற்றோர் படைப்புகள்
அடுத்து சென்னையிலிருந்து இணைந்த செய்யாறு அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரி விரிவுரையாளரும், அந்தகக்கவிப் பேரவையின் தலைவருமான திரு. சே. பிரதீப் அவர்கள்,
ஊடகத்துறையிலும் புறக்கணிப்பை எதிர்கொண்டிருக்கும் பார்வையற்றவர்களுக்குப் பெரும் வரமாக அமைந்தது இந்த விரல்மொழியர் மின்னிதழ் என்றும், அந்தகக்கவிப் பேரவையும், விரல்மொழியர் மின்னிதழும் இணைந்து பார்வையற்றவர்களின் படைப்புகளின் பட்டியலை மொத்தமாகத் தொகுத்து விரல்மொழியர் மின்னிதழ் இணையப் பக்கத்தில் வெளியிட இருப்பதாகவும் கூறி தனது வாழ்த்துரையை முடித்தார்.
தொடர்ந்து
சேலத்தில் இருந்து இணைந்த சேலம் அரசுப் பள்ளி ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் திரு. மனோகரன் அவர்களின் பலகுரல் வித்தையால் பல்வேறு பிரபலங்களின் வாழ்த்துரைகள் விரல்மொழியர் 25 விழாவிற்கு வந்துசேர்ந்தன.
இவரைத் தொடர்ந்து திரு. கணேஷ் அவர்கள் விரல்மொழியர் 25-க்காக இணையவெளியில் நடத்தப்பட்ட போட்டிகளின் முடிவுகளைச் சென்னையிலிருந்து மிக அழகாக அறிவித்தார்.
தொடர்ந்து டைட்டானிக் இசையோடு, மதுரை சுந்தரராஜன் பட்டியில் இயங்கிவரும் I.A.B பார்வைக்குறையுடையோர் பள்ளி மாணவர்கள் 2009-இல் நிகழ்த்திய ‘இனிமேல் இப்படிச் செய்யவே மாட்டோம்’ என்கிற தலைப்பிலான நாடகம் புதுக்கோட்டையில் இருந்து ஒளிபரப்பப்பட்டது.
பரிசுகளை வழங்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி
அடுத்ததாக சேலத்திலிருந்து இணைந்த அகவிழி தர்மசேவை அறக்கட்டளையின் அறங்காவலரும், பார்வையற்ற ஆசிரியர்கள் சங்க மேற்கு மண்டலத் தலைவருமான திரு. யு. ரஜினிகாந்த் அவர்கள் விரல்மொழியர் 25-காக நடத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசிகளை வழங்கும்
வாய்ப்பினை வழங்கிய விரல்மொழியர் ஆசிரியர் குழுவிற்கு மிகுந்த நன்றிகளைத் தெரிவித்தார். எப்போதும் விரல்மொழியர் மின்னிதழுக்கு அகவிழி தர்மசேவை அறக்கட்டளை பக்கப்பலமாகத் துணைநிற்கும் என்று கூறி தனது வாழ்த்துரையை நிறைவு செய்தார்.
இவரைத் தொடர்ந்து பேச்சுப்போட்டியில் முதல் பரிசினை பெற்ற தஞ்சை பார்வைக் குறையுடையோருக்கான அரசுப் பள்ளி மாணவி செல்வி. கவிலட்சுமி அவர்களின் உரை ஒளிபரப்பப்பட்டது.
வன்மம் காட்டிடாத இதழ்
அடுத்ததாக மதுரையிலிருந்து பேசிய விளையாட்டு ஆசிரியரும், தமிழ்நாடு பார்வையற்றோர் விளையாட்டுச் சங்கத்தின் செயலாளருமான திரு. சரவனராம் அவர்கள்,
பார்வையற்றவர்களை இந்தச் சமூகம் எவ்வளவுதான் புறம் தள்ளினாலும், அதனை மறந்து இந்தச் சமூகத்தின் மீது வன்மத்தைக் காட்டாமல், பகடியாகக் கடந்துசெல்லும் பார்வையற்ற சகோதரர்களுக்கும், விரல்மொழியர் மின்னிதழுக்கும் வாழ்த்துக்கள் என்று கூறி தனது உரையைச் சுருக்கமாக நிறைவு செய்தார்.
தொடந்து திருச்சியிலிருந்து இணைந்த திரு. பிரகாஷ் அவர்களின் இதழிசை குயிலாக மாரி அனைவரது செவியுனுள்ளும் புகுந்து பரவசப்படுத்தியது.
பார்வையற்றவர்களில் பால் புதுமையினரைக் கண்டறியவேண்டும்
அடுத்து, மதுரையில் இருந்து இணைந்த ‘பால்மணம்’ என்ற பால் புதுமையினருக்கான இதழின் ஆசிரியர் திரு. அழகுஜெகன் அவர்கள், பார்வையற்றவர்களின் வரலாற்றுப் பெட்டகமான இந்த விரல்மொழியர் மின்னிதழ் இன்னும் காத்திரமான படைப்புகளைத் தனது இதழ்களில் கொண்டுவரவேண்டும் என்று கூறினார்.
மேலும், “பார்வையற்றவர்களிடயே இருக்கும் பால் புதுமையினர்களை தேடிக் கண்டறிந்து, அவர்களின் உணர்வுகளை இவ்வுலகிற்குத் துணிச்சலாக வெளிப்படுத்தச் செய்யவேண்டும். தனியார் I.T நிருவனங்களில் பார்வையற்றவர்களுக்கான வேலைவாய்ப்பினைப் பெற நாம் இந்த எழுத்தின் வாயிலாய் முயலவேண்டும். சமூகம் என்னும் உலைக்கலத்தில் பார்வையற்றவர்களாகிய நீங்கள் ஓய்வில்லாமல் உங்கள் குரலை ஒலிக்கச்செய்யவேண்டும்” என்று வலியுறுத்தித் தனது வாழ்த்துரையை முடித்தார்.
அடுத்து திருச்சியில் இருந்து இணைந்த சௌண்ட் எஃபெக்ட்
சிவசங்கர் அவர்கள் தனது அசாத்தியமான குரல் வளத்தால் பல்வேறு வாகனங்களைத் தனது வாயாலேயே இயக்கி அசத்தினார்.
புதிய கோணத்தில் பார்வையற்றவர்களை அறிமுகப்படுத்திய இதழ்
தொடர்ந்து புதுக்கோட்டையிலிருந்து இணைந்த துல்கல் நூலகத்தின் ஒருங்கினைப்பாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள்,
தன்னார்வலர்களின் உதவிகளோடு இதுவரை வெளிவந்த 24 மின்னிதழ்களும் மின் புத்தகங்களாக உருவாக்கப்பட்டுள்ளன என்றும், விரைவில் இந்தப் புத்தகங்கள் அனைத்தும் இணையப் புத்தக அங்காடிகளில் கிடைக்கப்பெறும் என்றும் தெரிவித்தார்.
மேலும், இதற்குப் பிறகு வெளிவரும் அனைத்து மின்னிதழ்களையும், அவர்களே மின் புத்தகங்களாக வடிவமைத்துத் தருவதாக உறுதியளித்தார். அத்தோடு இந்த இதழ்களை வாசித்த தங்களது தன்னார்வலர்களுக்கு பார்வையற்றவர்களைப் புதிய கோணத்தில் இந்த இதழ் அறிமுகம் செய்தது என்று கூறி தனது உரையை முடித்தார்.
தொடர்ந்து பெங்களூரிலிருந்து இணைந்த திருமதி. மெர்லின் கண்ணன் அவர்களின் பாடல் தொகுப்பு அனைவரையும் மெய் சிலிர்க்கச் செய்தது.
கலைஞர் சிறப்பிதழ் விரல்மொழியருக்கு ஒரு மகுடம்
அடுத்ததாகப் புதுக்கோட்டையிலிருந்து பேசிய பூவிருந்தவல்லி அரசு பார்வையற்றவர்களுக்கான ஆண்கள் மேல்நிலை பள்ளி தமிழ்ப் பட்டதாரி ஆசிரியரும், ‘சவால் முரசு’ மின்னிதழின் ஆசிரியருமான திரு. ப. சரவனமணிகண்டன் அவர்கள் விரல்மொழியர் மின்னிதழுடனான தனது அனுபவத்தினைப் பகிந்துகொண்டார்.
கலைஞர் சிரப்பிதழ் வெளிவந்த நினைவலைகளைப் பகிர்ந்துகொண்ட அவர், கலைஞர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் துறை உருவாக்கத்திற்காக எழுதிய கடிதத்தினைத் தான் பெற்று அந்த கலைஞர் சிறப்பிதழில் பதிப்பித்ததையும், அதனைத் தொடர்ந்து அந்தச் சிறப்பிதழ் 03.12.2018 அன்று ‘திராவிடம் 2.0’ மேடையில் அச்சிலும், பிரெயிலிலும் வெளியிடப்பட்டதையும் பெருமிதமாக நினைவுகூர்ந்தார். மேலும், தான் எழுதிய ராகரதம் தொடரைப் பற்றியும், திரு. கா. செல்வம் அவர்கள் எழுதிய ‘இருளைப் போக்குகிறதா திரை வெளிச்சம்’ என்னும் தொடரைப்பற்றியும் நினைவுக்கூர்ந்து தனது வாழ்த்துரையை முடித்தார்.
இதனைத்தொடர்ந்து டெல்லியிலிருந்து இணைந்த புதுடெல்லி, பகத்சிங் கல்லூரி ஆங்கிலத் துறை பேராசிரியர் முனைவர் எஸ். வரதராஜ் அவர்கள் தான் சென்னையில் படித்தபோது தனக்கு நேர்ந்த அனுபவங்களை நகைச்சுவை விருந்தாகப் படைத்தார்.
அடுத்து மதுரையிலிருந்து இணைந்த திரு. தியாகராஜன் அவர்கள் இந்த விழாவின் இடையிடையே நடத்தப்பட்ட கலைநிகழ்ச்சிகளில் சிறந்த 3 நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்து அறிவித்தார். அந்நிகழ்ச்சிகளை வழங்கியோருக்குத் தமிழ்நாடு பார்வையற்றோர் விளையாட்டுச் சங்கத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழா நிறைவடைந்தது
இறுதியாக நன்றியுரையினைத் தொகுப்பாளர் பொன். சக்திவேல் வழங்கினார். விழா முழுமையையும் தனது தொழில்நுட்பத் திறத்தால் மிகச் சிறப்பாக நெறிப்படுத்தினார் இதழின் தொழில்நுட்பப் பொறுப்பாளர் திரு. பொன். குமரவேல் அவர்கள். மிகச் சரியாக 12.55 மணிக்கு நிகழ்ச்சியானது நாட்டுப்பன்னுடன் முடிக்கப்பட்டது.
இந்தப் பிரபஞ்சமே தனது அன்றாடப் பணிகளிலிருந்து விலகி, என்ன செய்வதென்று அரியாமல் கைகளைப் பிசைந்து கொண்டிருக்கும் வேளையில், கண்ணிழந்த மக்கள், கணினி தொழில்நுட்பத்தை மிகச்சரியாகப் பயன்படுத்தி இவ்வுலகிற்கே முன்னோடியாய் கலை நிகழ்ச்சிகளோடு, ஒரு விழாவை எந்தக் குறையும் இன்றி நடத்திக் காட்டமுடியும் என்று நிறுவியிருக்கும் விரல்மொழியர் ஆசிரியர் குழுவிற்கும், இதற்காக உழைத்த அனைத்துப் பார்வையற்ற தொழில்நுட்ப அறிஞர்களுக்கும் நாம் வாழ்த்துகளைத் தவிர வழங்குவதற்கு ஒன்றுமில்லை.
இப்படியான பல்வேறு புதுமைகளைத் தொடர்ச்சியாக பார்வையற்றோர் சமுகத்திடையே அறிமுகம் செய்யும் விரல்மொழியர் மின்னிதழானது எழுத்துலகில், இமயத்தை தொடும் தூரம் வெகு தொலைவில் இல்லை!
அருமையான தொகுப்பு.
பதிலளிநீக்குகட்டுரையை வாசிக்கும்போது, வெள்ளிவிழா நிகழ்வில் மீண்டும் ஒருமுறை பங்கேற்றதுபோன்று தோன்றியது.
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதவர்கள் கூட அன்று என்னென்ன நிகழ்ச்சிகள் நடைபெற்றன என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது
பதிலளிநீக்குவிரல் மொழியரின் வெற்றி விழாவில் நான் கலந்து கொண்டு மகிழ்ந்தேன். ஆனால் அன்று கலந்து கொள்ளாதவர்கள் இந்த கட்டுரையை வாசிக்கும் பொழுது விழாவில் கலந்து கொண்ட உணர்வு ஏற்படும் என்று நான் நம்புகிறேன். வாழ்த்துக்கள். நன்றி!
பதிலளிநீக்குவிரல் மொழியரின் வெற்றி விழாவில் நான் கலந்து கொண்டு மகிழ்ந்தேன். ஆனால் அன்று கலந்து கொள்ளாதவர்கள் இந்த கட்டுரையை வாசிக்கும் பொழுது விழாவில் கலந்து கொண்ட உணர்வு ஏற்படும் என்று நான் நம்புகிறேன். வாழ்த்துக்கள். நன்றி!
பதிலளிநீக்குவிரல் மொழியரின் வெற்றி விழாவில் நான் கலந்து கொண்டு மகிழ்ந்தேன். ஆனால் அன்று கலந்து கொள்ளாதவர்கள் இந்த கட்டுரையை வாசிக்கும் பொழுது விழாவில் கலந்து கொண்ட உணர்வு ஏற்படும் என்று நான் நம்புகிறேன். வாழ்த்துக்கள். நன்றி!
பதிலளிநீக்குவிரல் மொழியரின் வெற்றி விழாவில் நான் கலந்து கொண்டு மகிழ்ந்தேன். ஆனால் அன்று கலந்து கொள்ளாதவர்கள் இந்த கட்டுரையை வாசிக்கும் பொழுது விழாவில் கலந்து கொண்ட உணர்வு ஏற்படும் என்று நான் நம்புகிறேன். வாழ்த்துக்கள். நன்றி!
பதிலளிநீக்கு