சிறப்புக் கட்டுரை: உள்ளடக்கமற்ற உள்ளடங்கிய கல்வி: சிறப்புக் கல்வியைப் புறக்கணிக்கும் புதிய கல்விக் கொள்கை _2020 - முனைவர் கு. முருகானந்தன்.

graphic இந்திய அரசின் முத்திரை இடம் பெற்ற புதிய கல்விக்கொள்கை - 2020 வெளியீட்டின் முகப்பு படம்

             கல்வி குடிமக்கள் அனைவரின் உரிமை என்றும், சமூக நீதி, சமவாய்ப்பு, சமத்துவமான வளர்ச்சி எனப் பண்பட்ட கூட்டுத்துவ வாழ்க்கைக்கு இன்றியமையாத சமூகப் பொருளாதாரக் கூறுகளைக் கொண்டது என்றும் பன்னாட்டு, இந்நாட்டு சட்டங்கள், கொள்கைகள், பிரகடனங்கள் அனைத்திலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், மின்னணுத் தொழிநுட்பக் காலத்திற்குத் தேவையான மனிதவளத்தை உருவாக்க முனைவதாகச் சொல்லப்படும் புதிய கல்விக்கொள்கை-2020 மேற்சொன்ன சமூகநீதிக் கூறுகளைப் புடைத்துச் சலித்துப் புறந்தள்ளி, தனியார்மயத்தையும், காவி மயத்தையும் இந்தியக் கல்வி முறையின் இருபெரும் இலக்குகளாககொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

      பொருளாதாரம், சாதி, பாலினம் எனப் பல்வேறு வகையிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விசார் லட்சியங்களையும், கல்வியின் மீது கட்டமைக்கப்பட்டுள்ள எதிர்கால முன்னேற்றம் குறித்த நம்பிக்கைகளையும் அடியோடு வேரிலேயே கலைந்தெறியும் பல்வேறு அம்சங்கள் புதிய கல்விக்கொள்கை_2020-தில் நிறைந்திருப்பதைக் கல்வியாளர்களும், சமூகவியலாளர்களும் மிகப் பரவலாகவே எடுத்துக் காட்டியுள்ளனர். ஒடுக்கப்பட்ட பிரிவினருள் பிரதிநிதித்துவம் அற்றவர்களாகவும், கவனப்படுத்தப் படாதவர்களாகவும் உள்ள ஊனமுற்றோரின், அதிலும் குறிப்பாக பார்வையற்றோரின், கல்வி வாய்ப்புகளிலும், கற்றல் கற்பித்தல் முறைகளிலும், கல்விக்கான கட்டமைப்பிலும் இந்தப் புதிய கல்விக்கொள்கை எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும் என்பதை இந்தக் கட்டுரை சுருக்கமாக விவாதிக்கிறது.

ஒரு சுருக்கமான நினைவூட்டல்

graphic இந்திய அரசின் முத்திரை இடம் பெற்ற புதிய கல்விக்கொள்கை வரைவு - 2019 வெளியீட்டின் முகப்பு படம்
 

       சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர் 2019 மத்தியில் நடுவண் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கஸ்தூரிரங்கன் தலைமையிலான கல்விக்குழு தயாரித்த புதிய கல்விக்கொள்கைக்கான வரைவினை வெளியிட்டு, அதன் மீது தனிநபர்களும், அமைப்புகளும் தமது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்ற அறிவிப்பினையும் கொடுத்தது. நாடு முழுவதிலும் ஊனமுற்றோரின் உரிமைக்காகப் போராடும் அமைப்புகளும், செயல்பாட்டாளர்களும் தமது கருத்துகளை அரசுக்கு அனுப்பியபோது, தமிழகத்திலுள்ள பல்வேறு பார்வையற்றோரின் அமைப்புகளும், செயல்பாட்டாளர்களும் ஒருமித்த கருத்தோடு அந்தக் கல்விக்கொள்கையை நிராகரித்தும், அதில் காணப்பட்ட பல்வேறு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியும் கூட்டாகத் தயாரித்த 15 அம்சங்கள் கொண்டதொரு விரிவான எதிர்வினையை நடுவண் அரசுக்கு அனுப்பினர். இந்தக் கூட்டு முயற்சியில் நமது விரல்மொழியர் மின்னிதழும் பங்கேற்றது என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

      நமது தமிழக பார்வையற்றோர் அமைப்புகளும், செயல்பாட்டாளர்களும் அவ்வாறு சுட்டிக்காட்டிய சில முக்கியமான குறைபாடுகள் பின்வருமாறு:

*2016-இல் நடைமுறைக்கு வந்த ஊனமுற்றோர் உரிமைச் சட்டத்திற்குப் (Rights of Persons with Disabilities Act) பதிலாக, புதிய கல்விக்கொள்கை வரைவு 1995 ஊனமுற்றோர் சமவாய்ப்பு, சம பங்கேற்பு மற்றும் சம உரிமைச் சட்டத்தையே குறிப்பிட்டுள்ளது, அதுவும் அச்சட்டத்தின் ஆண்டை 1995 என்பதற்கு பதிலாக 2005 என்று குறிப்பிட்டிருந்தது.

*ஊனமுற்றோரில் அதிக தடைகளையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்ளும் பாலின, சமூகப் பொருளாதார, சாதிய, வசிப்பிடச் சூழல் அடிப்படையில் பின்தங்கிய ஊனமுற்றோர் குறித்துப் புதிய கல்விக்கொள்கை வரைவு எதுவும் பேசவில்லை.

*புதிய கல்விக்கொள்கை வரைவு சிறப்புக் கல்வி என்ற சொல்லையே அடியோடு தவிர்த்துவிட்டு உள்ளடங்கிய கல்வியையும், அதற்கு மாற்றாக வீட்டிலிருந்து கல்விபெறுவதையும் மட்டுமே ஊனமுற்ற குழந்தைகளுக்கான வாய்ப்புகளாக முன்வைக்கிறது.

*உள்ளடங்கிய கல்விமுறை எத்தகைய நிலைக்கு ஊனமுற்ற, குறிப்பாக பார்வையற்ற, குழந்தைகளைத் தள்ளியுள்ளது என்பது குறித்த எந்த ஒரு முறையான ஆய்வினையும் மேற்கொள்ளாமல், புதிய கல்விக்கொள்கை வரைவு உள்ளடங்கிய கல்வியை வலிந்து திணிக்கிறது.

*புதிய கல்விக்கொள்கை வரைவினைத் தயாரிக்கும்போது ஊனமுற்றோரின் பிரதிநிதிகளையோ, செயல்பாட்டாளர்களையோ, அமைப்புகளையோ முறையாகக் கலந்தாலோசிக்கவில்லை. 

      மேற்குறிப்பிட்டுள்ள இதுபோன்ற குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியதோடு மட்டுமின்றி, சிறப்புக்கல்விக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும், நடுநிலைக் கல்வி வரையில் சிறப்புக்கல்வியும், மேல்நிலைக் கல்வி ஒருங்கிணைந்த கல்வி முறையிலும் மட்டுமே பார்வையற்ற, காதுகேளாத, தீவிர கற்றல் திறன் குறைபாடுகள் உடைய குழந்தைகளுக்கு வழங்கப்படவேண்டும், ஊனமுற்றோருக்கு பள்ளி மற்றும் உயர் கல்வியில் 5 விழுக்காடு ஒதுக்கீடு உறுதிசெய்யப்பட வேண்டும், பாடத்திட்டம், விடுதி, கல்வி நிறுவன வளாகங்கள் எனக் கல்விசார் உட்கட்டமைப்புகளில் ஊனமுற்றோரின் சிறப்புத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதற்கான உறுதியான செயல்த்திட்டம் வேண்டும், ஊனமுற்றோர் கல்விக்கு உரிய நிதி ஒதுக்கீடு உறுதிசெய்யப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளையும், முக்கியமாக ஊனமுற்றோருக்கென பிரத்தியேகமானதொரு சிறப்புக் கல்விக்கொள்கை வெளியிடப்பட வேண்டும் என்ற பரிந்துரையும் முன்வைக்கப்பட்டன.

      அவ்வாறு முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில், ஊனமுற்றோர் உரிமைச் சட்டம் சேர்க்கப்பட்டது, சிறப்புக் குழந்தைகள்’, ‘ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தைகள் போன்ற பிரயோகங்கள் குறைக்கப்பட்டு ஊனமுற்ற குழந்தைகள் (Children with Disabilities)’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது போன்ற மாற்றங்கள் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் புதிய கல்விக்கொள்கை_2020-இல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமன்றி, சிறப்புக்கல்வியை ஒரு தெரிவாக ஊனமுற்றோர் உரிமைச் சட்டத்தின்படி இந்தப் புதிய கல்விக்கொள்கை அங்கீகரிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் நாம் மகிழ்ச்சி அடையத்தான் வேண்டும், இந்தப் புதிய கல்விக்கொள்கையை வரவேற்கத்தான் வேண்டும்! நமக்கும் அப்படி வரவேற்கத்தக்கதொரு கல்விக்கொள்கை வெளியிடப்பட வேண்டும், அது அமல்படுத்தப்பட வேண்டும் என்றுதான் ஆசை.

    ஆனால், புதிய மொந்தையில் ஊற்றப்பட்டிருப்பது நாற்றமெடுத்த பழைய கள் தான் என்று நன்றாகத் தெரிந்த பின்னரும் வலிந்து சென்று எப்படி வரவேற்பது? அரசு, அதிலும் இந்த அரசு, எதைச்செய்தாலும் குறைசொல்ல அலைகின்ற கூட்டமடா இது என்றும், இவர்கள் நெகட்டிவ் வைபிரேசன் (Negative Vibration) கொண்ட கூட்டம், எந்த நல்ல விஷயம் கொண்டுவந்தாலும் அதில் உள்ள எதிர்மறையான  விஷயங்களை மட்டும்தான் பேசுவார்கள் என்றும், இன்னும் பலவாரும் வழக்கம்போல சிலர் வெகுண்டெழக் கூடும். ஆனால் அறிவு நேர்மையோடும், உண்மை நிலவரம் குறித்த தெளிவோடும், சமூக அக்கறையோடும் சிந்திக்கும் யாரும் இந்தப் புதிய கல்விக்கொள்கையில் வருங்காலத் தலைமுறை ஊனமுற்றோருக்கு இழைத்திருக்கும் புறக்கணிப்பையும் உரிமைகளை மறுக்கும் அநீதியையும் எளிதாகக் கடந்து சென்றுவிட முடியாது.

என்னதான் இருக்கிறது இந்தப் புதிய கல்விக் கொள்கை 2020-இல்?

      தற்போது நடுவண் அரசு வெளியிட்டுள்ள இறுதி செய்யப்பட்ட புதிய கல்விக்கொள்கை_2020 ஊனமுற்றோர் உரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி, இந்தக் கல்விக்கொள்கை அச்சட்டத்தினை முழுமையாக அங்கீகரிப்பதாகவும், அச்சட்டப்படியே ஊனமுற்ற குழந்தைகள் பள்ளிக்கல்வியினைப் பெறவேண்டும் என்பதை உறுதிசெய்வதாகவும் குறிப்பிடுகிறது: 

This Policy is in complete consonance with the provisions of the RPWD Act 2016 and endorses all its recommendations with regard to school education.”

நமது அமைப்புகளும் செயல்பாட்டாளர்களும் கொடுத்த பரிந்துரைகள் ஏற்கப் பட்டிருக்கின்றன. தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்த ஊனமுற்றோர் சமவாய்ப்புச் சட்டம் (PWD Act of 1995) மாற்றப்பட்டு தற்போது அமலில் இருக்கும் ஊனமுற்றோர் உரிமைச் சட்டம் புதிய கல்விக்கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ளது என்று நிம்மதி அடையலாம்தான். ஆனால்,ஊனமுற்றோர் உரிமைச் சட்டத்தை முழுமையாகப் பின்பற்றுவது என்பதன் பொருள், அச்சட்டத்தின் 16, 17, 18, 31, 32 ஆகிய பிரிவுகளை, அவற்றில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை எப்படி அமல்படுத்துவது, அவ்வாறு அமல்படுத்தும் பொருட்டு எத்தகைய வளர்ச்சிசார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை இந்தப் புதிய கல்விக்கொள்கை தெளிவாகவும் விரிவாகவும் கொண்டிருக்கவேண்டும் என்பதே. மாறாக, ஊனமுற்றோர் உரிமைச் சட்டம் உயர்கல்வி நிறுவனங்களில் வழங்கியுள்ள 5 விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்தோ, 5 ஆண்டுகள் வரை வயதுவரம்பில் தளர்வு வழங்குவது குறித்தோ கூட இந்தக் கல்விக்கொள்கை எதையும் குறிப்பிடவில்லை. இந்த உரிமைகள் வழங்கப்பட்டிருப்பதையே  இக்கல்விக்கொள்கை கணக்கில் எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை! அப்படியென்றால், இந்தக் கல்விக்கொள்கை ஊனமுற்றோர் கல்வி குறித்து என்னதான் சொல்கிறது? முதலில் அவற்றை ஒவ்வொன்றாக அறிவோம்:

*இளஞ்சிறார் கல்வி உட்பட பள்ளிக்கல்வியின் எல்லா நிலைகளிலும் ஊனமுற்ற குழந்தைகள் சம வாய்ப்புடன் முழுமையாகப் பங்கேற்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும்: Ensuring the inclusion and equal participation of children with disabilities in ECCE and the schooling system will also be accorded thehighest priority.”

*அடிப்படை அல்லது தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரை எல்லாப் பொதுவான கற்றல் நடைமுறைகளிலும் ஊனமுற்ற குழந்தைகள் முழுமையாகப் பங்கேற்க ஆவனசெய்யப்படும்: “Children with disabilities will be enabled to fully participate in the regular schooling process from the Foundational Stage to higher education.”

*பள்ளிக்கல்வி தொடர்பான ஊனமுற்றோர் உரிமைச் சட்டத்தின் பரிந்துரைகள் அனைத்தையும் முழுமையாகப் பின்பற்றும் இக்கல்விக்கொள்கையின்படி, புதிய பாடத்திட்டத்தை உருவாக்கும்போது ஊனமுற்றோருக்கான தேசிய நிறுவனங்களிடம் ஆலோசனை பெறப்படும்:

This Policy is in complete consonance with the provisions of the RPWD Act 2016 and endorses all its recommendations with regard to school education. While preparing the National Curriculum Framework, NCERT will ensure that consultations are held with expert bodies such as National Institutes of DEPwD.”

*இதனை உறுதிப்படுத்துவதற்காக, பள்ளிகள் மற்றும் பள்ளி வளாகங்களுக்கு பின்வரும் வசதிகளை மேற்கொள்ள ஆதாரங்கள் வழங்கப்படும்: ஊனமுற்ற குழந்தைகள் ஒருங்கிணைக்கப்படுவர். அனைத்துவகை ஊனமுற்றோருக்கும் சிறப்புக்கல்வி கற்பிக்கும் பயிற்சிபெற்ற சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுவர். எங்கெல்லாம் தேவையுள்ளதோ அந்த இடங்களில், குறிப்பாக கடுமையான மற்றும் பல்வகை ஊனமுற்ற குழந்தைகளுக்கு ஆதார மையங்கள் ஏற்படுத்தப்படும்.  “To this end, schools/school complexes will be provided resources for the integration of children with disabilities, recruitment of special educators with cross-disability training, and for the establishment of resource centres, wherever needed, especially for children with severe or multiple disabilities.”

*அனுகல் தன்மையில் தடையற்ற சூழல் ஊனமுற்றோர் உரிமைச் சட்டத்தைப் பின்பற்றி எல்லா ஊனமுற்ற குழந்தைகளுக்கும் உருவாக்கப்படும்:

Barrier free access for all children with disabilities will be enabled as per the RPWD Act.”

*மாறுபட்ட ஊனங்களை உடைய குழந்தைகள் வேறுபட்ட தேவைகளைக் கொண்டிருக்கின்றனர் என்பதால், எல்லாப் பள்ளிகள் மற்றும் பள்ளி வளாகங்களில் அவர்களின் தனித்துவமான தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட சூழல் மற்றும் உதவிகளை வழங்கி அவர்கள் வகுப்பறைகளில் முழுமையாக இணைந்து பங்கேற்பது உறுதிசெய்யப்படும்:

Different categories of children with disabilities have differing needs. Schools and school complexes will work and be supported for providing all children with disabilities accommodations and support mechanisms tailored to suit their needs and to ensure their full participation and inclusion in the classroom.”

*ஊனமுற்ற குழந்தைகள் வகுப்பறைகளில் சக மாணவர்களோடும், ஆசிரியர்களோடும் எளிதாக ஒருங்கிணைந்து கற்பதற்கென உதவு உபகரணங்கள் மற்றும் தகுந்த தொழில்நுட்பங்களை அடிப்படையாகக்கொண்ட கருவிகள், பெரிய எழுத்துக்கள் மற்றும் பிரெயில் புத்தகங்கள் போன்ற உரிய வழிகளிலான கற்றல் கற்பித்தல் வசதிகள் ஏற்படுத்தப்படும்:

In particular, assistive devices and appropriate technology-based tools, as well as adequate and language-appropriate teaching-learning materials (e.g., textbooks in accessible formats such as large print and Braille) will be made available to help children with disabilities integrate more easily into classrooms and engage with teachers and their peers.”

*இது விளையாட்டு, கலை, தொழில் கல்வி எனப் பள்ளிசார் செயல்பாடுகள் அனைத்திற்கும் பொருந்தும்:

This will apply to all school activities including arts, sports, and vocational education.”

*தேசிய திறந்தநிலைப் பள்ளிக்கல்வி நிறுவனம் (NIOS) சைகை மொழியைக் கற்பிக்கவும், சைகை மொழியில் அடிப்படைப் பாடங்களைக் கற்பிக்கவும் உயர்தர மாதிரிகளை உருவாக்கும்: “NIOS will develop high-quality modules to teach Indian Sign Language, and to teach other basic subjects using Indian Sign Language.”

*ஊனமுற்ற குழந்தைகளின் பாதுகாப்பிற்கு உரிய கவனம் செலுத்தப்படும்:

Adequate attention will be paid to the safety and security of children with disabilities.”

*ஊனமுற்றோர் உரிமைச் சட்டத்தின்படி முக்கியமான ஊனத்தை உடைய குழந்தைகள் பொதுப் பள்ளி முறையில் இணைந்து பயிலவோ, அல்லது சிறப்புக் கல்வி பெருவதற்கோ வாய்ப்புப் பெறுகின்றனர். அதன்படி, ஆதார மையங்கள் சிறப்பாசிரியர்களோடு இணைந்து கடுமையான மற்றும் பல்வகை ஊனமுற்ற குழந்தைகளின் மறுவாழ்விற்கும், கல்விக்கும் தேவையான உதவிகளை வழங்குவதோடு, அக்குழந்தைகள் வீட்டிலிருந்து கற்கும் முறையில் தரமான கல்வி மற்றும் திறன்களை அடைவதற்கு அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு உதவிகளை வழங்கும்:

Resource centres in conjunction with special educators will support the rehabilitation and educational needs of learners with severe or multiple disabilities and will assist parents/guardians in achieving high-quality home schooling and skilling for such students as needed.”

*பள்ளிகளுக்குச் செல்ல இயலாத கடுமையான மற்றும் தீவிரமான ஊனமுற்ற குழந்தைகளுக்கு வீட்டிலிருந்தே கல்வி கற்கும் வாய்ப்பு தொடர்ந்து வழங்கப்படும்:

Home-based education will continue to be a choice available for children with severe and profound disabilities who are unable to go to schools.”

*வீட்டிலிருந்தே கல்வி கற்கும் குழந்தைகளும் பள்ளிகளில் பயிலும் பிற குழந்தைகளுக்கு இணையாக நடத்தப்பட வேண்டும். வீட்டிலிருந்தே கல்வி கற்கும் முறையின் செயல்திறன் குறித்து சமத்துவம் மற்றும் சமவாய்ப்பு ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் தணிக்கை மேற்கொள்ளப்படும். இத்தணிக்கையின் அடிப்படையில், ஊனமுற்றோர் உரிமைச் சட்டத்தைப் பின்பற்றி, வீட்டிலிருந்தே கல்வி கற்கும் முறைக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படும்:

The children under home-based education must be treated as equal to any other child in the general system. There shall be an audit of home-based education for its efficiency and effectiveness using the principle of equity and equality of opportunity. Guidelines and standards for home-based schooling shall be developed based on this audit in line with the RPWD Act 2016.”

*ஊனமுற்ற குழந்தைகள் அனைவருக்கும் கல்வி அளிப்பது அரசின் பொறுப்பு என்பது உண்மைதான் என்றாலும், அவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களைப் பயிற்றுவிப்பதற்கு உரிய தொழில்நுட்ப வழிகள் பயன்படுத்தப்படும். மேலும் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் தமது குழந்தைகளின் கற்றல் தேவைகளுக்கு முனைப்புடன் உதவும் வகையில் கற்றல் பொருட்கள் பரவலாக விநியோகிக்கப்படும்:

While it is clear that the education of all children with disabilities is the responsibility of the State, technology-based solutions will be used for the orientation of parents/caregivers along with wide-scale dissemination of learning materials to enable parents/caregivers to actively support their children’s learning needs will be accorded priority.”

*பெரும்பாலான வகுப்பறைகள் தொடர் ஆதரவு தேவைப்படும் கற்றல் திறன் குறைபாடு உடைய குழந்தைகளைக் கொண்டுள்ளன. எவ்வளவு விரைவாக அத்தகைய ஆதரவு தொடங்குகிறதோ, அந்த அளவுக்கு அவர்களின் முன்னேற்றம் இருக்குமென ஆய்வுகளில் தெளிவாகியுள்ளது. அத்தகைய கற்றல் குறைபாடுகளை விரைவாகக் கண்டறிந்து குறைக்கத் திட்டமிட ஆசிரியர்களுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டும். தொழில்நுட்பத்தின் பயன்பாடு, ஒவ்வொரு குழந்தையும் இயன்ற வேகத்தில் கற்க வாய்ப்பளிக்கும், ஒவ்வொரு குழந்தையின் திறமையையும் வெளிக்கொணரும் நெகிழ்வுத் தன்மை கொண்ட பாடத்திட்டம், மதிப்பீடு மற்றும் சான்றளிப்புக்கு உரிய பொருத்தமான சூழலை அடிப்படைக் கல்வி முதல் நுழைவுத் தேர்வு உள்ளிட்ட உயர்கல்வி நிலை வரை உருவாக்கி, கற்றல் திறன் குறைபாடுடைய குழந்தைகள் சமமான அணுகல்தன்மையும், வாய்ப்பும் பெறுவதை உறுதிசெய்தல் போன்ற குறிப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்:

Most classrooms have children with specific learning disabilities who need continuous support. Research is clear that the earlier such support begins, the better the chances of progress. Teachers must be helped to identify such learning disabilities early and plan specifically for their mitigation. Specific actions will include the use of appropriate technology allowing and enabling children to work at their own pace, with flexible curricula to leverage each child’s strengths, and creating an ecosystem for appropriate assessment and certification. Assessment and certification agencies, including the proposed new National Assessment Centre, PARAKH, will formulate guidelines and recommend appropriate tools for conducting such assessment, from the foundational stage to higher education (including for entrance exams), in order to ensure equitable access and opportunities for all students with learning disabilities.”

*பாலின வேறுபாடு உள்ளிட்ட பிற வரலாற்றில் ஒதுக்கப்பட்ட பிரிவினரோடு, கற்றல் குறைபாடுடைய குழந்தைகள் உள்ளிட்ட ஊனமுற்ற குழந்தைகளுக்குக் கற்பிக்கும் முறைகள் குறித்த விழிப்புணர்வு ஆசிரியர் பயிற்சிக் கல்வியின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும். இதன்மூலம் இப்பிரிவினரின் உரிய பிரதிநிதித்துவம் இல்லாத நிலை மாற்றப்படும்:

The awareness and knowledge of how to teach children with specific disabilities (including learning disabilities) will be an integral part of all teacher education programmes, along with gender sensitization and sensitization towards all underrepresented groups in order to reverse their underrepresentation.”

      மேற்குறிப்பிட்ட அனைத்தும் புதிய கல்விக்கொள்கையின் 6.10, 6.11, 6.12, 6.13, 6.14 ஆகிய பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன.       மேலும் இந்தக் கல்விக்கொள்கை பின்வரும் அம்ஸங்களையும் வெவ்வேறு இடங்களில் சொல்லிச் செல்கிறது: ஊனமுற்ற குழந்தைகளின் இடைநிற்றலைத் தடுக்க முயற்சிகள் (பிரிவு 3.3), இந்திய சைகை மொழியைச் செம்மைப்படுத்தி காதுகேளாத மானவர்களின் பயன்பாட்டிற்கென தேசிய-மாநில அளவில் பாடத் திட்டம் (4.22), ஊனமுற்ற குழந்தைகளுக்கு கழிப்பறை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் (பிரிவு 5.9), ஆசிரியர் பயிற்சியின் பகுதியாக ஊனமுற்ற குழந்தைகளுக்குக் கற்பிக்கும் முறைகள் (பிரிவு  6.24), ஊனமுற்றோருக்கான சிறப்பாசிரியராகப் பயிற்சிபெற விரும்புவோருக்குக் குறுகியகாலச் சான்றிதழ் படிப்புகள் (பிரிவு 5.26), ஊனமுற்றோர் அனுகத்தக்க உட்கட்டமைப்பு மற்றும் கற்றல் பொருட்களை அமைத்தல் (பிரிவு 9.3), கட்டடங்கள் ஊனமுற்றோர் அனுகத்தக்கதாக அமைத்தல் (14.4.2.:[H]).  கூடவே, வயதுவந்தோர் கல்வி குறித்துப் பேசும் பகுதியில், ஊனமுற்றோரின் தேவைகளுக்கு ஏற்ற புத்தகங்களைக் கொண்டிருக்கும் வகையில் சமுதாய, பொது மற்றும் கல்வி நிறுவனங்களின் நூலகங்கள் நவீனப்படுத்தப்பட வேண்டும் (பிரிவு 21.9) என்றும் பரிந்துரைக்கிறது இந்தப் புதிய கல்விக்கொள்கை. 

ஊனமுற்றோர் உரிமைச் சட்டத்தைப் பின்பற்றுகிறதா புதிய கல்விக்கொள்கை_2020?

      ஊனமுற்றோர் உரிமைச் சட்டத்தின் மூன்றாவது  இயலின் 16, 17, 18 ஆகிய பிரிவுகள் ஊனமுற்றோர் கல்வி குறித்தும், ஐந்தாவது இயலின் 31, 32 ஆகிய பிரிவுகள் இட ஒதுக்கீட்டிற்குத் தகுதிபெறும் ஊனமுற்றோருக்கு (Persons with Benchmark Disabilities) கல்வியில் வழங்கப்படவேண்டிய சிறப்பு உரிமைகள் குறித்தும் குறிப்பிடுகின்றன. அவற்றில் நமக்கு மிக முக்கியமானது, பிரிவு 31 ஊனமுற்ற குழந்தைகளுக்கு அருகாமைப் பள்ளிகளில் சேர்ந்து படிக்கவோ, அல்லது சிறப்புப் பள்ளிகளில் பயிலவோ வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என மிகத் தெளிவாகவே கூறுகிறது.

      ஆனால் புதிய கல்விக்கொள்கை_2020 உள்ளடங்கிய கல்விக்கு ஊனமுற்றோர் உரிமைச் சட்டம் கொடுத்திருக்கும் வரையறையை மட்டும் முழுமையாக எடுத்துக்கொண்டு, சிறப்புப் பள்ளிகள் குறித்து கிஞ்சித்தும் பேசவில்லை. ஊனமுற்றோர் உரிமைச் சட்டத்தின்படி சிறப்புக் கல்வி பெறுவதற்கு ஊனமுற்ற குழந்தைகளுக்கு உரிமை உண்டு எனப் புதிய கல்விக்கொள்கையின் பிரிவு 6.11 கூறுகிறது, இது ஒரு நல்ல மாற்றம் என சிலர் கருதக்கூடும். ஆனால், புதிய கல்விக்கொள்கை சிறப்புக் கல்வி (Special Education) பற்றி மட்டுமே பேசுகிறது, சிறப்புப் பள்ளிகள் (Special Schools) குறித்து எதுவும் கூறவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.       புதிய கல்விக்கொள்கை உள்ளடங்கிய கல்விக்கு மாற்றாக முன்வைப்பது கடுமையான மற்றும் பல்வகை ஊனமுற்ற குழந்தைகள் வீட்டிலிருந்தே கல்வி கற்கும் வீட்டுக் கல்வி முறையைத்தான். மேலும் ஊனமுற்றோர் உரிமைச் சட்டம் பிரிவு 16 கூறியுள்ளவாறு எல்லா அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் ஊனமுற்ற குழந்தைகளைப் பாகுபாடின்றி சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதும் புதிய கல்விக்கொள்கையில் கட்டாயமாக்கப்படவில்லை.

      முன்பே குறிப்பிட்டபடி, ஊனமுற்றோர் உரிமைச் சட்டம் பிரிவு 32 உறுதிசெய்யும் உயர்கல்வியில் 5 விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்தோ, 5 ஆண்டுகள் வயது உச்ச வரம்பில் தளர்வு அளிப்பது குறித்தோ புதிய கல்விக்கொள்கை எந்தப் பரிந்துரையோ உறுதியோ வழங்கவில்லை. ஈயம் பூசின மாதிரியும் இருக்கனும், பூசாத மாதிரியும் இருக்கனும் என்று ஒரு திரைப்படத்தில் நடிகர் கவுண்டமணி சொல்வதுபோல, ஊனமுற்றோர் உரிமைச் சட்டத்தைப் பேருக்குக் கூறிவிட்டு, புதிய கல்விக்கொள்கை 2019 வரைவில் முன்மொழிந்த பெரும்பாலான அம்சங்களையே மீண்டும் சட்டப்பூர்வமான புதிய மொழியில் மீண்டும் கொண்டுவந்துள்ளது தற்போது வெளியிடப்பட்டிருக்கும் புதிய கல்விக்கொள்கை_2020.

      மேலும் இக்கல்விக்கொள்கை, ஊனமுற்றோர் கல்வியில் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் மற்றும் தாக்கங்கள், உள்ளடங்கிய கல்வியின் தற்போதைய நிலை, சிறப்புப் பள்ளிகள் மற்றும் சிறப்பு ஆதார ஆசிரியர்களின் தேவை, நாம் முன்னெடுக்க வேண்டிய கோரிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் என மேலும் அலசுவோம்,  விவாதிப்போம், அடுத்த விரல்மொழியர் இதழில். உங்களது கருத்துக்களையும் பின்னூட்டத்தில் பகிருங்கள், நமது இளம் தலைமுறையின் கல்வி குறித்து விவாதிப்போம்.

       ஊனமுற்றோர் கோணத்திலிருந்து புதிய கல்விக்கொள்கையை அனுகும் கட்டுரைகள் சில வாசக நண்பர்களின் வாசிப்பிற்கும், புரிதலுக்கும் இதோ!

 

New Education Policy 2020 — high on rhetoric, short on disability rights | by ShampaSengupta: https://medium.com/@shampa.sgupta/new-education-policy-2020-high-on-rhetoric-short-on-disability-rights-fca018162706

அலசல்: வேண்டும் புதிய சிறப்பு தேசியக் கல்விக்கொள்கை: https://www.viralmozhiyar.com/2019/08/need-special-NEP.html

அறிவிப்பு: புதிய தேசியக் கல்விக் கொள்கை 2019 வரைவு: https://www.viralmozhiyar.com/2019/10/NEP-draft.html

 

 

கட்டுரையாளர் கள்ளக்குறிச்சியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

தொடர்புக்கு: send2kmn@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக