பார்வையற்றோர் சமூகம் விழித்தெழுவதற்கான பள்ளி எழுச்சிக் கூட்டம்
பார்வையற்ற ஆசிரியர்கள் சங்க மதுரை கிளை, 27.08.2020 அன்று புதிய கல்விக் கொள்கை குறித்த இணைய வழிக் கருத்தரங்கினை நடத்தியது. இக்கருத்தரங்கில்:
‘புதிய கல்விக் கொள்கையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள்’ என்ற தலைப்பில் முனைவர் கு. முருகானந்தன் அவர்களும்,
‘புதிய கல்விக் கொள்கையில் பார்வையற்ற ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்’ என்ற தலைப்பில் முனைவர் S. பாலாஜி அவர்களும்,
‘புதிய கல்விக் கொள்கையால் தமிழகம் எதிர்கொள்ளும் சவால்கள்’ என்ற பொருளில் முனைவர் ம. சிவக்குமார் அவர்களும்
உரையாற்றினர். தொடர்ந்து விழாவில் கலந்துகொண்ட பார்வையற்ற ஆசிரியர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அவை தீர்மானமாகத் தொகுக்கப்பட்டு ஒன்றிய கல்வி அமைச்சகத்திற்குப் பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தின் மதுரை கிளையின் சார்பில் மின்னஞ்சல் வழியே அனுப்பிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் ஊடகப் பங்காளராய் விரல்மொழியர் மின்னிதழ் கைகோர்த்திருந்தது.
இந்நிகழ்வைக்காண இந்த இணைப்பைச் சொடுக்குங்கள்.
வெளிச்சம் பாய்ச்சிய கலந்துரையாடல்
விரல்மொழியர் மின்னிதழ் 29/08/2020 அன்று, தமிழ் கணிமை செயல்பாட்டாளர் நீச்சல்காரனுடன் பார்வை மாற்றுத்திறனாளிகளின் கணினி பயன்பாடு தொடர்பான ஒரு உரையாடலை ஏற்பாடு செய்திருந்தது. இவ்வுரையாடலில் நமது மின்னிதழின் ஆசிரியர் குழுவினரோடு, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான மற்றொரு மின்னிதழான ‘சவால்முரசு’ மின்னிதழின் ஆசிரியர் ப. சரவணமணிகண்டன் அவர்களும் கலந்து கொண்டார். பார்வை மாற்றுத் திறனாளிகள் எவ்வாறு கணினியைப் பயன்படுத்துகின்றனர், தமிழ் கணிமை பயன்பாட்டில் பார்வை மாற்றுத்திறனாளிகள் எத்தகைய இடர்களை எதிர்கொள்கின்றனர், அதை களைவதற்கான ஆலோசனைகள் எவை போன்றவை குறித்து நம்மிடம் நீச்சல்காரன் அவர்கள் கேட்டறிந்தார்.
இந்த உரையாடல் தமிழ் மென்பொருள் வடிவமைக்கும் வல்லுநர்கள் இடையே புதிய வெளிச்சம் பாய்ச்ச உதவும் என விரல்மொழியர் நம்புகிறது. இந்தக் கலந்துரையாடலுக்குத் தமிழ்நாடு பார்வையற்றோர் விளையாட்டுச் சங்கம் ஜூம் அரங்கினை வழங்கியிருந்தது.
உரையாடலைக்காண இந்த இணைப்பைச் சொடுக்குங்கள்.
சங்கங்களின் சங்கமம்
தமிழ்நாடு பார்வையற்றோர் விளையாட்டுச் சங்கம் (Tamilnadu blind sports association-TABSA) நடத்திய பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான உடற்பயிற்சி சவால் போட்டிக்கான பரிசளிப்பு விழா 30/08-2020 மாலை 5 மணி அளவில் இணையவெளியில் நடைபெற்றது.
இந்தியப் பார்வையற்றோர் விளையாட்டுச் சங்கச் (Indian blind sports association-IBSA) செயலர் டேவிட் அவர்கள் சிறப்பு விருந்தினராகச் சிறப்பிக்க, தேசிய மற்றும் மாநில பார்வையற்றோருக்கான விளையாட்டுச் சங்கங்கள் சங்கமிக்கும் விழாவாக நடைபெற்றது. இந்நிகழ்வின் ஊடகப் பங்காளராக விரல்மொழியர் மின்னிதழ் செயல்பட்டதோடு, நம் இதழின் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளர் பொன். குமரவேல் இவ்விழாவிற்கான தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு உதவிகளைச் செய்தார். விழாவைக் காண இந்த இணைப்பைச் சொடுக்குங்கள்.
கடைவிரித்தோம்
இணையத்தில் தவழ்ந்த விரல்மொழியர் மின்னிதழ் இனி கிண்டிலிலும் கிடைக்கும்.
முதலில் இரு இதழ்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. இரு இதழ்களையும் படிக்க கீழே உள்ள இணைப்புகளைச் சொடுக்குங்கள்...
இதழ்-1: https://www.amazon.in/dp/B08J1LN4QP/ref=cm_sw_em_r_mt_dp_tlIyFbHFDMKPN
இதழ்-2: https://www.amazon.in/dp/B08J1MK21Z/ref=cm_sw_em_r_mt_dp_BnXyFbP94RE88
வருங்காலங்களில் எஞ்சிய இதழ்களும் ஒவ்வொன்றாய் பதிவேற்றப்படும்.
மின்னூலாக உருவாக்கிக் கொடுத்த துல்கல் நூலகத்தினருக்கும், அட்டைப்படம் உருவாக்கிக்கொடுத்த r. வசந்த் அவர்களுக்கும் விரல்மொழியர் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
தொகுப்பு: பொன்.சக்திவேல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக