5 மாதம் ஊரடங்கில் பெரும்பாலான மக்கள் தங்கள் உடல் வலிமையையும், மன வலிமையையும் இழந்துள்ளார்கள் என்பதை நம்மால் மறுக்கமுடியாது. எல்லா நிறுவனங்களும் எதிர்வரும் காலத்தில் புத்துணர்ச்சி விழாக்களைத் தங்களது பணியாளர்களுக்கும் சரி, பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் சரி நடத்தியாக வேண்டும் என்பது தவிர்க்க முடியாதது. அந்த அளவிற்கு கொரோனா காரணமாக மன உளைச்சளுக்கு ஆளாகியிருக்கிறோம். என்னப்பா! யானைகளுக்கு நடத்தும் புத்துணர்வு முகாம்களைப் போல நமக்கும் நடத்தச் சொல்கிறாயா? என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. இருந்தாலும் என்ன செய்வது? நாம் தானே நமது மனதைப் புத்துணர்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.
அதிலும், பார்வையுள்ளவர்கள் எப்போதாவது வெளியில் சென்று தங்களை ரிலாக்ஸ் செய்துகொள்கிறார்கள். ஆனால், பார்வையற்றவர்கள்? ரொம்ப கஷ்டம்தான்.
பார்வையற்றவர்கள் தங்களைப் போன்ற நண்பர்களைச் சந்திப்பது ஏதாச்சும் ஒரு விழா, தேர்வு அரங்கம், விளையாட்டுப் போட்டி முதலிய இடங்களாகத் தான் இருக்கும். அதற்கும் இந்தக் கொரோனா வந்து முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. இணையம், தொலைபேசி போன்றவை என்னதான் தீர்வைக் கொடுத்தாலும், நேரில் சந்தித்துப் பேசுவது போலவோ, விளையாடுவது போலவோ இல்லை. ஆனாலும், இணையம் மூலம் எனது சக நண்பர்களோடு விளையாடியது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.
|
ஆம், தமிழ்நாடு பிரெயில் சதுரங்கச் சங்கம் (Tamilnadu Braille chess association-TNBCA) இந்த ஊரடங்கின்போது இந்தியாவிலேயே முதல்முறையாக இணையவழி சதுரங்கப் போட்டியினை நடத்தியுள்ளது. இதனை ‘Chess Moves” என்ற ஆண்டிராய்டு செயலி மூலம் நடத்தியிருக்கிறார்கள். இதைத் தூண்டுகோளாக வைத்து அனைத்திந்திய பார்வையற்றோருக்கான சதுரங்க கூட்டமைப்பு (all India chess federation for the blind-AICFB) இந்த ஆகஸ்ட் 15 முதல் 21 வரை “Lichess” வலைதளம் மூலம் தேசிய அளவிலான போட்டியினை நடத்தியுள்ளார்கள்.
இந்தப் போட்டி குறித்துப் பார்ப்பதற்கு முன்பு லீசெஸ் [lichess] இணையதளம் குறித்துப் பார்த்துவிட்டு வருவோம்.
லீ செஸ் [lichess]
‘lichess” என்பது இலவசமாக சதுரங்கம் விளையாடுவதற்கான இணையதளம். இதில் உலகெங்கிலும் உள்ள பல சதுரங்க வீரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள் என பலர் உறுப்பினராக உள்ளார்கள்.
சதுரங்கம் குறித்து கற்றுக்கொள்ள விரும்புவோர் இத்தளத்தை அனுகலாம். மேலும், சதுரங்கம் விளையாடிவருபவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கான சிறந்த தளமாகவும் இந்த இணையதளம் உள்ளது. இங்கு, கணினியோடும் பிற வீரர்களோடும் விளையாடலாம். மேலும், உங்களுக்குப் பிடித்தவர்கள் விளையாடிய கேம்களையும் நீங்கள் பார்க்கலாம். நீங்கள் விளையாடிய பிறகு உங்களது விளையாட்டின் தன்மை குறித்தும், நீங்கள் செய்த தவறுகள் குறித்தும் நீங்களே உங்களைப் பரிசீலனை செய்துகொள்ளலாம். விரல்மொழியர் இதழிற்கு நான் எழுதிய முதல் கட்டுரையிலேயே கூறியுள்ளேன், சதுரங்கம் மட்டும்தான் மாற்றுத்திறனாளி அல்லாதவர்கள் விளையாடுவது போலவே எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே நம்மால் விளையாட முடியும் என்று. அதையே இந்த ”லீ சேஸ்” இணையதளம் வழங்கியுள்ளது.
சரி, இந்த இணையதளம் பார்வையற்றவர்களுக்கு அனுகல் தன்மையோடு உள்ளதா? என்றால் பரவாயில்லை என்றுதான் கூறமுடியும். “LiChess” ஆண்டிராய்டு செயலி முழுமையாக பார்வையற்றோர்க்கு அனுகல்தன்மையோடு இல்லை. ஆனால், அதன் இணையதளம் நமக்கு ஏற்றாற்போல் இருக்கிறது. அதில் ‘enable Blind mode” பட்டனைத் தட்டினால் போதும் வலைதளம் நமக்கு ஏற்றார்போல வந்துவிடும். அதன்பிறகு நாம் சாதாரணமாக இதனை பயன்படுத்தலாம்.
தேசிய அளவிலான முதல் இணைய வழி சதுரங்கப் போட்டி
|
தேசிய அளவிலான இணையவழி சதுரங்கப் போட்டியினைப் பார்வையற்றோருக்கான அனைத்து இந்திய சதுரங்கக் கூட்டமைப்பு ஏற்பாடுசெய்து நடத்தியது. இதில் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 105 சதுரங்க வீரர்கள் கலந்து கொண்டார்கள். இதில் தமிழகத்திலிருந்து 19 வீரர்கள் கலந்து கொண்டிருந்தோம். தமிழ்நாட்டிலிருந்துதான் அதிக அளவிலான நபர்கள் கலந்துகொண்டோம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நாளுக்கு ஒரு சுற்று வீதம் ஆகஸ்ட் 15 முதல் 21 வரை 7 சுற்றுகள் நடந்தன. இரவு 8.30 மணிக்குத் தொடங்கிய இப்போட்டி ஸ்விஸ் முறையில் 40 + 30 என்ற நேர விகிதத்தில் நடத்தப்பட்டது. அதாவது ஒரு நபருக்கு 40 நிமிடமும், 30 விணாடிக்குள் மூவை நகர்த்தினால் 30 விணாடிகள் அவருக்கு வழங்கப்படும்.
இதன்படி நடந்த 7 சுற்றுகளிலும் வெற்றி பெற்று தேசிய இணையவழி சதுரங்கப் போட்டியின் நாயகனாக வரலாறு படைத்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த மாரிமுத்து. தமிழகத்திலிருந்து இவரோடு விக்னேஷ், சாய்கிருஷ்ணன் முறையே 6 மற்றும் 9ஆவது இடங்களையும், கோபி, ஜெயபிரகாஷ் முதல் 25 இடங்களுக்குள் வந்துள்ளார்கள்.
அனுபவம் புதுமை
மாரிமுத்து |
இந்த இணையவழிப் போட்டி எப்படி இருந்தது? சொல்கிறார் முதல் பரிசு பெற்ற மாரிமுத்து. இவர் சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை வரலாறு மூன்றாம் ஆண்டு பயின்றுவருகிறார்.
“இந்த ஊரடங்குக் காலத்தில் இம்மாதிரியான இணையவழிப் போட்டிகள் நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது. என்னைப் போன்ற நண்பர்களுக்குப் பயிற்சியளித்து இந்த வரலாறு படைக்க வைத்தது. ஆனால், நேரடியாக செஸ் போர்டில் விளையாடுவது போன்ற ஃபீலிங்கை இது தரவில்லை” என்று கூறினார்.
Lichess தளத்தில் நமக்குப் பிடித்த எந்தப் பெயரில் வேண்டுமானாலும் விளையாடிக்
கொள்ளலாம். அதன்படி முதல் பரிசு பெற்ற மாரிமுத்து Saisriram2003 என்ற
பெயரில் விளையாடி இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த லீசெஸ் தளத்தைப் பயன்படுத்துவதில் முழு பார்வையற்றவர்களுக்குச் சில பிரச்சனைகள் இருந்தன. அது குறித்து செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்துவரும் திரு. ஜலால் அலி அவர்கள் கூறியதாவது:
“இந்தப் போட்டி மிகவும் புதியது. கொரோனா நமக்குத் தொழில்நுட்பம் குறித்த அறிவை வளர்த்துக்கொள்ள நிறையவே உதவியிருக்கு. உலகமே உள்ளங்கையினுள் அடங்கிய இவ்வேளையில், லீசெஸ் ஆண்டிராய்டு செயலி பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு அனுகல் தன்மையோடு இருக்கும் பட்சத்தில் நாமும் மாற்றுத்திறனாளி அல்லாதோரோடு சரிசமமாக விளையாட முடியும் என்பதில் ஐயமில்லை” என்றார்.
இந்தப் போட்டியில் பெண்களின் பங்களிப்புக் கணிசமான முறையில் அதிகரித்திருக்கிறது என்றே கூறவேண்டும். நம் தமிழகத்திலிருந்து ஒரு பள்ளி மாணவி உட்பட 3 பெண்கள் போட்டியில் கலந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நீலகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிவரும் அன்பரசி நம்மிடம் இது குறித்து கூறியதாவது:
“ என்னைப் போன்ற பெண்களுக்கு இம்மாதிரியான இணையவழிப் போட்டிகள் ஒரு வரப் பிரசாதம். குறைபார்வையுடையவரான எனக்குச் சில அனுகல் பிரச்சனை இருந்தது. குறிப்பாக, தொடுதிரையைப் பயன்படுத்தும்பொழுது தெரியாமல் விரல் பட்டு தோல்வியைத் தழுவிய அனுபவமும் எனக்கு உண்டு. இருந்தாலும், என்னைப் போன்ற பெண்கள் இம்மாதிரியான இணையவழிப் போட்டிகளில் கலந்துகொள்வது நல்லது” என்றார்.
தமிழகத்திலிருந்து அதிக பங்கேற்பாளர்கள் கலந்துகொள்ளக் காரணம்:
தேசிய அளவிலான இணையவழிப் போட்டி அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாடு பிரெயில் சதுரங்கச் சங்கம் தமிழகத்திலிருந்து கலந்துகொள்வோருக்குப் பயிற்சி கொடுக்கத் தொடங்கிவிட்டது. சாய்கிருஷ்ணன், மாரிமுத்து, விக்னேஷ் முதலிய முன்னணி வீரர்கள் மற்ற வீரர்களுக்கு சூம் (Zoom) செயலி மூலம் பயிற்சி கொடுத்து எங்களை இப்போட்டிக்குத் தயார் செய்தார்கள். இதற்காக, ட்றாகன் செஸ் அகடமியோடு இணைந்து லீசெஸ் தளத்தில் ஒரு பயிற்சி ஆட்டமும் கிரியேட் செய்து வீரர்களைத் தயார்செய்தார்கள்.
மேலும், போட்டி நிறைவடைந்த பிறகு TNBCA தலைவர் திருமதி. யசோதா அவர்கள், போட்டியில் கலந்துகொண்ட 19 வீரர்களுக்கும் ஊக்கத்தொகையாக ரூ 300 வழங்கி ஊக்கப்படுத்தினார். இது எங்களுக்கு பிரியானி ட்றீட்!
இது போன்ற ஊரடங்கின்போது இம்மாதிரியான இணையவழிப் போட்டிகள் பங்கேற்பாளர்களை உற்சாகப்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களை மென்மேலும் அந்தத் துறையில் வளரச் செய்யும் என்பதில் ஐயமில்லை.
நடந்த இந்தப் போட்டிக்குப் பரிசாக குறிப்பிட்ட தொகை தரப்பட்டிருந்தால் விளையாடி வெற்றிபெற்ற வீரர்களுக்கு உதவியாக இருந்திருக்கும்.
இணையவழிப் போட்டி என்பதால் சில தவறுகள் இருக்கும்தான். இருந்தாலும், நமக்குத் தேவையான நேர்மறை விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
இதே நேரத்தில் தான் [online chess olimpia] நடந்து முடிந்தது. இதிலும் இந்தியாவும் ரஷ்யாவும் முதல் இடத்தைப் பங்குபோட்டுக்கொண்டார்கள். அதுபோலவே நடந்து முடிந்த பார்வையற்றோர்க்கு இடையிலான இந்தப் போட்டியிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் முதல் இடம் பெற்றார் என்பது வரலாறு. இந்த இரு வரலாறும் மாறப்போவது இல்லை. இவை இரண்டிலுமே தமிழ்நாட்டின் பங்கு இருந்தது என்பது நமக்குப் பெருமை.
போட்டி நடந்த இனையதளம் : www.lichess.org
((கட்டுரையாளர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டம் பெற்றவர்().
தொடர்புக்கு: m.bala10991@gmail.com
இப்படியும் விளையாடலாம் என்பதை எனக்கு அறிமுகப் படுத்தியதற்கு நன்றி
பதிலளிநீக்கு