சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள்தான் ஆகின்றன. அதற்குள் மீண்டும் ஒரு வணிக கம்பெனியின் ஆட்சிக்குள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே நம்மை கழுத்தைப் பிடித்துத் தள்ளுகிறது. ரயில்வே துறை தனியார்மயமாக்கப்படும் என்ற அறிவிப்பு பார்வையற்றோர் சமூகத்தில் பேரிடியாக இறங்கியுள்ளது. ரயில் பெட்டிகள் தூய்மையாக இருக்கும், உரிய நேரத்தில் ரயில்கள் வந்துசேரும் போன்றவை தனியார்மயமாக்கத்தால் ஏற்படும் சாதகங்களாக நம் முன் பரப்பப்படுகிறது. இவற்றை அரசுத் துறைக்கு உரிய அழுத்தங்களைக் கொடுத்து நம்மால் செயல்படுத்த இயலும். அரசுத்துறை என்பது சகல தரப்பினரையும் தன்னுள் ஏற்றுக்கொள்ளும். அதன் விளைவுதான் பார்வை மாற்றுத்திறனாளிகள் ரயிலில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுவது, அவர்களுக்கான பயணச் சலுகை வழங்கப்படுவது, சமூக நீதியின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டில் பணி வாய்ப்பை வழங்குவது போன்றவை.
தனியார்மயமாக்கலால் மேலே குறிப்பிட்ட
மக்கள் நலன்கள் பின்தள்ளப்பட்டு வணிக நலனே முன்னிறுத்தப்படும். இதனால் ரயிலில்
வணிகம் செய்ய பார்வை மாற்றுத்திறனாளிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்களுக்கான
பயணச் சலுகைகள் ரத்து செய்யப்படும். மேலும் ரயில்வே துறையில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான
பணி வாய்ப்பு மறுக்கப்படும் அல்லது குறைக்கப்படும். ரயில்வே துறையில் பார்வை
மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் போன்ற விளம்பர உத்திகளின்
வழி, அதிக பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குப்
பணிவாய்ப்பு அளித்ததாக அவர்களால்
பிம்பங்களைக் கட்டமைக்க முடியும். சட்டரீதியாக பணிவாய்ப்பு உரிமைகளைப் பெறுவதற்கான
வழிகளையும் நம் உரிமை சட்டங்களை நீர்த்துப்போகச் செய்து கதவுகளை அடைக்க முடியும்.
அதற்கு ஒரு சான்றுதான் ஜூலை மாதத்தில் மாற்றுத்திறனாளிகள் நலச் சட்டத்தில் கொண்டு
வர முயன்ற சிறு திருத்தம்.
அனைத்துத் துறைகளிலும் பணி வாய்ப்பில் 4 சதவீதம் வழங்கவேண்டுமெனச் சட்டம் சொல்கிறது. ஆனால் இன்னும் அநேக
துறைகளில் அது நடைமுறை படுத்தப்படாமலேயே இருக்கிறது. அதன் விளைவுதான்
பட்டப்படிப்புப் படித்த பார்வை மாற்றுத்திறனாளிகளும் தங்கள் வயிற்றுப் பாட்டிற்காக ரயிலில்
வணிகம் செய்கின்றனர். அந்தக் கதவையும்
ரயில்வே துறை தனியார் மயமாக்கம் என்ற
அறிவிப்பு அடைத்து விடுகிறது.
கொரோனா பேரிடர் காலத்தில் இயக்கப்படும்
சிறப்பு ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பயணச் சலுகையை ரத்து செய்து அரசு அறிவித்திருக்கிறது.
ஏற்கனவே அதிநவீன வசதிகள் கொண்ட சிறப்பு ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான
கட்டனச் சலுகைகள் ஏதும் வழங்குவதில்லை. தனியார்மயமாக்கத்தால் கட்டனச் சலுகைகள்
ஏதும் இருக்காது. கட்டனச் சலுகைகள் ஏன் அவசியமெனில்,
ஒரு சாதாரண நபர் எங்கேனும் பயணிக்க
வேண்டுமென்றால், அவர் தனக்காக மட்டுமே செலவு செய்தால் போதும். ஆனால், ஒரு பார்வை
மாற்றுத்திறனாளி ஒரு இடத்திற்கு ரயிலிலோ
பேருந்திலோ செல்லும் பொழுது, உடன் ஒருவரை அழைத்துச் செல்ல வேண்டிய தேவை இருக்கிறது. அப்படி உடன்
அழைத்துச் செல்பவருக்கான பயணச் செலவு, உண்டு உறைவிடச் செலவு அனைத்தையுமே ஒரு பார்வை
மாற்றுத்திறனாளி செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கான நிவாரணமாகத்தான் அரசு பார்வை
மாற்றுத் திறனாளிகளுக்கான பயணத்தில் கட்டணச் சலுகை அளிக்கிறது.
இந்தக் கொரோனா பேரிடர் காலத்தில் ஒருவரது துணையுடனேயேதான் பொதுவெளியில் பார்வை மாற்றுத்திறனாளிகள் பயணிக்க முடிகிறது. அப்போதுதான் பொருட்களைத் தொடாமலும், சமூக இடைவெளியுடன் பயணம் செய்தல் போன்றவற்றை சாத்தியமாக்க முடியும். ஆனால், இத்தகைய இக்கட்டான காலத்தில்தான் அரசு பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணச் சலுகையை ரத்து செய்திருக்கிறது.
மாற்றுத்திறனாளிகளும் இத்தேசத்தின் மக்கள். அவர்கள் இச்சமூகத்தில் சமமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான உரிமைகளை
உறுதிப்படுத்துவது அரசின் பொறுப்பு. அதன் அடிப்படையில்தான் உடற்குறைகளுக்கு
ஏற்றவாறு சிறப்புத் தேவைகளை ஓரளவு நிவர்த்தி செய்யும் வகையில், மாற்றுத்திறனாளிகள்
போராடி அரசிடம் சில சலுகைகளைப் பெற்றிருக்கின்றனர்.
இங்கே சாமானியர்களின் சலுகைகளுக்கு எதிராகவும், இட ஒதுக்கீட்டிற்கு எதிராகவும் திட்டமிட்டு கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றைக் கேட்டு புளகாங்கிதமடைந்து நம்மவர்களும் பரப்புகின்றனர். இந்தச் செயல் நம் விரல்களைக் கொண்டே நம் கண்களைக் குத்துவதற்கு ஒப்பானது. இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் எதற்காக வழங்கப்படுகின்றன என்ற அடிப்படையை நாம் அறிந்திருப்பது அவசியம். இல்லாவிடில் நம் சமூகமே ஆட்டங்கண்டுவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக