வாசகர் கட்டுரை: ஆங்கிலமும் நானும் - ஜா. பெலிக்ஸ்

graphic English என்ற வார்த்தை அமைந்த படம்

      பிடிக்காத உணவு என்றாலும் பசிக்கும்போது அதைச் சாப்பிடுவோம். பிடிக்காத உடை என்றாலும், நாம் அதைக் கட்டாயத்தின் பேரில் உடுத்துவோம். பிடிக்காத ஆசிரியர் என்றாலும் நாம் அவர் வகுப்பில் அமர்ந்திருப்போம். ‘கழுதைக்கு வாக்கப்பட்டால் உதை பட்டுதான் ஆகணும்என்று என் தாத்தா, பாட்டி பலர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். வாழ்க்கையில் நடந்த அப்படிப்பட்ட ஒரு சில அனுபவங்களை நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

      மேலே குறிப்பிட்டது போல கட்டாயத்தின் பேரில் பல விஷயங்களை நாம் செய்திருப்போம். நாம் பள்ளி படிக்கும் காலத்தில் 5 அல்லது 6 பாடங்கள் ஒவ்வொரு வகுப்பிலும் இருக்கும். அவற்றை மொழி தெரிந்தும் புரியாமல் மணப்பாடம் செய்திருப்போம். ஒரு சில பாடங்களை மொழியும் தெரியாமலும், ஒன்றும் புரியாமலும் மனப்பாடம் செய்து, அத்தகைய பாடத்தைக் கடந்து வந்திருக்கிறோம். அப்படிப்பட்ட ஒன்றுதான் ஆங்கிலம்

      நான் கூறவிருக்கும் நிகழ்வுகள் பலரின் வாழ்க்கையில் நடந்திருக்கலாம். குறிப்பாக, நம் பார்வைமாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு இத்தகைய அனுபவம் கிடைத்திருக்கலாம்.

 எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. 3 ஆம் வகுப்பு ஆங்கில ஆசிரியர் RABBIT, RAT, cat என்று ஒவ்வொரு ஆங்கில வார்த்தையையும் எழுத்துக் கூட்டி கற்பித்தார். இது 10 அல்லது 12 நாட்கள் வரை சென்றது. ஆங்கிலம் இப்படித்தான் என்னை முதல் முறையாக வந்தடைந்தது.

      நான் சிறப்புப் பள்ளியில் படிக்கவில்லை. மாறாக, பார்வையுள்ள மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் பயின்றேன். சிறப்பு ஆசிரியர் ஒருவர் அப்பள்ளியில் இருப்பார். அவர் ஆங்கிலக் கவிதைகளையும், மற்ற பாடங்களையும் பிரெயிலில் எழுதிக்கொடுப்பார். அவர் சில மாதங்களுக்குப் பிறகு திருமணம் செய்துகொண்டு அப்பள்ளியில் இருந்து சென்றுவிட்டார். அதன் பிறகு என்ன? பார்வையுள்ள மாணவர்கள் வாசிக்க, நானும் எனது சக பார்வையற்ற மாணவர்களும் மனப்பாடம் செய்துகொள்வது வழக்கமானது. இப்படியாக எட்டாம் வகுப்பு வரை எனது ஆங்கிலப் பாடம் சென்றது.

       9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை நான் மற்றொரு பள்ளியில் பயிலத் தொடங்கினேன்.  9 ஆம் வகுப்பில் முதல் நாள் ஆங்கில ஆசிரியர் மாணவர்கள் அனைவரையும் அறிமுகம் செய்யக் கேட்டுக்கொண்டார். நான் முதல் ஆளாக எழுந்து, “my name is Felix” என்று கூறியவுடன், எனது ஆங்கில ஆசிரியர் இவ்வாறு கூறினார்.

"இதெல்லாம் பழைய ஆங்கிலம். I am Felix என்பதுதான் புதிய ஆங்கிலம்”.

      அவர் கூறியவுடன் அந்த வடிவிலேயே நானும் எனது சக  மாணவர்களும் சொல்லிமுடித்தோம். அந்த உரையாடல்தான் பள்ளி காலத்தில் ஆங்கிலத்தில் நான் பேசிய முதலும் கடைசியுமான முயற்சி. அதன்பிறகு மற்ற ஆங்கில ஆசிரியர்கள் வருவார்கள். ஆங்கிலப் பாட வினாக்களையும், மனப்பாடப் பகுதி கவிதைகளையும் மனப்பாடம் செய்யச் சொல்வார்கள். நாங்களும் அவ்வாறு செய்தோம்.

       அப்போதெல்லாம் பாடத்தில் உள்ள ஆங்கில வார்த்தைகளை எளிதில் நினைவில் கொள்ள, அவற்றைத்  தமிழ் வார்த்தைகளோடு தொடர்புபடுத்தி வைத்துக்கொள்வேன். உதாரணமாக, ‘At the’  என்ற சொற்களைஅத்தைஎன்று நினைவில் கொள்வேன். இவ்வாறாக ஆங்கிலத்தை நான் மனப்பாடம் செய்து தேர்வில் எழுதிவந்தேன்.

       12 ஆம் வகுப்பு வரையிலும் ஆங்கிலத்தின் மீது எந்த ஒரு அக்கறையும் கவலையும் கொண்டதில்லை. அதன் பிறகு கல்லூரிக்குச் செல்லவேண்டிய சூழ்நிலையில், நானும் எனது சக நண்பர்களும் ஆங்கில இலக்கியம் எடுத்துப் படிக்கலாம் என்று முடிவுசெய்தோம். காரணம், அப்போதுதான் ஆங்கிலம் கற்றுக்கொள்ள முடியும் என்று எங்கள் மனதில் நினைத்துக்கொண்டோம்.  எனக்கு ஆங்கில இலக்கியத் துறை கிடைத்துவிட்டது. மற்ற நண்பர்களுக்கு வரலாறு துறை கிடைத்தது.

      நான் முதல் நாள் கல்லூரிக்குச் சென்றபோது வகுப்பில் இருந்த அனைத்து மாணவர்களும், பேராசிரியர்களும் ஆங்கிலத்திலேயே உரையாடினர். ‘கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலஎன்ற தொடரை அனுபவப்பூர்வமாகப் புரிந்துகொள்ளத் தொடங்கினேன். 

முதல் தேர்வும் வந்தது. 5-இல் 4 தாள்களை நான் எழுதினேன். வழக்கம் போலவே மனப்பாடம் செய்துதான் எழுதினேன்; எல்லாத் தாள்களிலும் ஒரு சில கேள்விகளைத் தான் எழுத முடிந்தது.

      விடைத்தாள் கொடுக்கும்போது ஒரு பேராசிரியர் இப்படிச் சொன்னார். “Felix this is not enough for you. you have to work hard”. அந்த வாக்கியத்தின் அர்த்தத்தை என் மதிப்பெண்ணைப் பார்த்துத்  தெரிந்துகொண்டேன். 60 கு 5 மதிப்பெண் கிடைத்திருந்தது.

நான் பள்ளிக் காலத்தில் ஒரு நாளும் இப்படி மதிப்பெண் பெற்றதில்லை. அவமானமாக இருந்தது. என்ன காரணம் என்று சிந்திக்கத் தொடங்கினேன். ஆங்கில அறிவு இல்லாமை தான் காரணம் என்று புரிந்துகொண்டேன்.

      ஒருவழியாக மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு எனது பேராசிரியரிடம் சென்று ஆங்கிலம் கற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டேன். அவரைத் தனியாகச் சந்தித்துதான் இக்கோரிக்கையை நான் முன்வைத்தேன். ஆனால் அவரோ, வகுப்பில் வந்து அதற்கு பதிலளித்தார். ஒருமுறை வகுப்பில் பாடம் எடுத்துக்கொண்டிருந்தபோது, “நீங்க இங்க வந்திருப்பது ஆங்கில இலக்கியம் படிக்கத்தானே தவிர, ஆங்கிலம் படிக்க அல்ல. ஆங்கிலம் படிக்கவேண்டுமென்றால் அதற்கு நீங்கள் spoken English வகுப்பிற்குத் தான் செல்லவேண்டும்என்றார். எனக்கு மூளையில் சுருக்கென்றது.

      அதே கல்லூரியில் ஜான் போஸ்கோ என்ற ஒரு பேராசிரியர் இருந்தார். அவரிடம் இதே கோரிக்கையை நான் முன்வைத்தபோது, “ஆங்கிலத்தை யாரும் சொல்லித்தர முடியாது. நீயாகதான் கற்றுக்கொள்ளவேண்டும்என்றார். அதற்கு அவர் ஒரு வழியும் செய்துகொடுத்தார். என் வகுப்பில் இருந்த தமிழ் தெரியாத மாணவர்களுக்கிடையில் என்னை அமரவைத்தார். அவர்களுடன் நான் கட்டாயமாக ஆங்கிலத்தில் உரையாட நேர்ந்தது. மெல்ல மெல்ல எனது ஆங்கில அறிவு வளரத் தொடங்கியது.

      தொடக்கத்தில் அதுவும் கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. நண்பர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடும்போது, சில சொற்களுக்கான spelling- அவர்கள் கேட்க, நான் தடுமாறுவேன். அப்போது அவர்கள் கிண்டல் செய்வார்கள். நானும் சிரித்துகொண்டே அவற்றைக் கடந்துவிடுவேன். கொஞ்சம் கொஞ்சமாகச் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டேன்.

      ஏறக்குறைய 10 ஆண்டுகள் பள்ளிக்கூட ஆங்கில ஆசிரியர்களின் நேரடிப் பார்வை இருந்தும் என்னால்  ஆங்கிலம் கற்றுக்கொள்ள முடியவில்லை. முழுக்க நான் ஆங்கிலப் பாட வினாக்களை மனப்பாடம் செய்யப் பழக்கப்பட்டேன் என்பதுதான் அதற்குக் காரணமாக இருக்கமுடியும்.  மொழி குறித்த அறிவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல், மதிப்பெண்ணுக்கு மதிப்பளிக்கப்பட்டதால் ஆங்கிலம் குறித்த அடிப்படை அறிவே என்னைப் போன்ற பலருக்கும் பள்ளிக் காலத்தில் இல்லாமல் போய்விடுகிறது.

      உதாரணமாக, வாகனம் ஓட்ட விரும்பும் நபர் தகுந்த நபரிடம் வாகனம் ஓட்டக் கற்றுக்கொள்ளவேண்டும். மாறாக, வாகனம் ஓட்டச் சொல்லிக்கொடுப்போர் இதுதான் என்ஜின்; இது சக்கரம்என்று சொல்லிக்கொடுத்துவிட்டு, வாகனம் ஓட்டக் கற்றுதராவிட்டால்  எப்படி அவர் வாகனம் ஓட்டமுடியும்? அத்தகைய சூழ்நிலைதான் என்னைப் போன்ற மாணவர்களுக்கும்.

      இதற்குத் தற்பொழுது உள்ள கல்வி முறையைக் குறை கூறுவதா? அல்லது ஆங்கில ஆசிரியர்களைக் குறை கூறுவதா? அல்லது என்னைப் போல் உள்ள மாணவர்களைக்  குறை கூறுவதா? இப்படியெல்லாம் கேட்டுக்கொண்டே இருந்தால் கேள்விகள் மீண்டும் மீண்டும் ஒரு வட்டத்திற்குள்ளேயே சுற்றிக்கொண்டுதான் இருக்கும்.

    இத்தகைய நிலை மாறவேண்டும்; மாறியே ஆகவேண்டும்; இதற்கான தீர்வுகள் காணப்படவேண்டும். அப்படி இல்லையென்றால், என்னைப் போன்ற பல பெலிக்ஸ்கள் இருந்தார்கள்; இருக்கின்றார்கள்; இருப்பார்கள்.

 

(கட்டுரையாளர் திருச்சி சரஸ்வதி கல்வியியல் கல்லூரியில் இளநிலை கல்வியியல் (B.Ed) படித்துவருகிறார்)).

தொடர்புக்கு: 1993felixgeorge@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக