திரு. முத்துப் பழனியப்பன் |
பார்வை இருந்தபோது மோட்டார் வாகனங்களுக்கான பழுது நீக்கம் கடை வைத்து, 25 பேருக்கு வேலை கொடுத்த புதுக்கோட்டை பொன்னமராவதியைச் சேர்ந்த திரு. முத்துப் பழனியப்பன் அவர்கள், பார்வை இழப்பிற்குப் பின்னரும் அதே தொழிலை அதே வேலையாட்களுடன் முன்பிருந்ததை விடத் திறமையாகச் செய்ய முடிவதாகச் சொல்கிறார். அவரைத் தான் இந்த இதழில் சந்திக்கவிருக்கிறோம். இதழுக்காக அவரைச் சந்திக்கிறார்கள் L. நசுருதீன், X. செலின்மேரி, கோபால்.
இனி பேட்டி கேள்வி பதில் வடிவில்.
கேள்வி: விரல் மொழியர் வாசகர்களுக்கு உங்களைப் பற்றிய சிறியதொரு அறிமுகம் தாருங்கள்.
பதில்: வணக்கம். என்னுடைய பெயர் முத்து பழனியப்பன். என் மனைவி பெயர் ஜெயமதி. எனக்கு 3 குழந்தைகள். 2 ஆண்கள். 1 பெண் குழந்தை. அனைவரும் பார்வை உடையவர்கள். நான் பொன்னமராவதியில் சிறுதொழில் செய்து வருகிறேன். இரு சக்கர வாகனங்களுக்கான சர்விஸ் செண்டர், பழுது பார்க்கும் கடை, பஞ்சர் போடும் கடை, சில குறிப்பிட்ட வகை இரு சக்கர வாகனங்களுக்கு மட்டும் உதிரி பாகங்கள் விற்கும் கடை ஆகியவற்றை நடத்தி வருகிறேன்.
கே: உங்களது இளமைக் காலம் குறித்துச் சொல்லுங்கள்.
ப: பிறந்தது 1966. சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் ராங்கியம். எங்கள் ஊரில் உள்ள பள்ளியிலேயே ஒன்பதாம் வகுப்பு வரை படித்தேன்.
கே: எப்படி இந்தத் தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வந்தது?
ப: முதலில் சென்னையில் உள்ள எம். ஆர். எல் என்ற எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பணியில் சேர்ந்தேன். ஒருமுறை ஸ்வீட் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டு உயிருக்குப் பயந்து ஊருக்கே திரும்பிவிட்டேன். அதற்குப் பிறகு மீண்டும் சென்னைக்குச் சென்று தொழில் கற்றுக் கொண்டேன்.
கே: சரி. இந்தத் தொழிலைச் சென்னையில் எங்கு யாரிடம் எப்படிக் கற்றுக் கொண்டீர்கள்?
ப: நான் 1983 இல் சென்னையில் ஜாம்பஜாரில் செல்லப் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் புல்லட் ஹௌஸ் என்ற இடத்தில் கணேசன் என்ற குருநாதரிடம் 5 ஆண்டுகள் இந்தத் தொழிலைப் பயின்றேன். அப்பொழுது எனக்கு நல்ல பார்வை இருந்தது. பிறகு, 1988 இல் பொன்னமராவதியில் work shop வைத்தேன். அந்த ஊரில் இரண்டாவதாகக் கடை வைத்தது நான்தான். ராங்கியத்திலிருந்து பொன்னமராவதிக்கு 12 கிலோமீட்டர்தான். பார்வை உடையவராக இருந்ததால் அப்போது அது பெரியதாகத் தெரியவில்லை. 1998 இல் நடந்த எதிர்பாராத விபத்தில் என்னுடைய பார்வையைப் பறிகொடுத்து விட்டேன். நெற்றியில் அடிபட்டு சர்ஜரி செய்யும்போது, மருத்துவர்கள் கொடுத்த ஹெவிடோஸ் மாத்திரை மருந்துகளால் என்னுடைய பார்வை பாதிக்கப் பட்டு விட்டது. ஆரம்பக் கால கட்டத்தில் என்னிடம் 25 பேர் வேலை பார்த்தார்கள். இப்பொழுது 11 பேர் மட்டுமே வேலை பார்க்கிறார்கள். அவர்களில் 9 பேர் ஆண்கள். கொரோனா காலகட்டம் என்பதால் 6 பேர் மட்டுமே வேலைக்கு வருகிறார்கள். மேலும் 2 பெண்களும் என்னிடம் வேலை பார்க்கிறார்கள். இன்று விடுமுறை என்பதால் உங்களுடன் பேச முடிகிறது. கடந்த 6 ஆண்டுகளாக என்னுடைய தொழில் மிகவும் பாதிக்கப் பட்டிருக்கிறது. புதிதாகப் பேருந்து நிலையம் கட்டப்பட்டுவிட்டதால், தோன்றிய புதிய கடைகளால் என்னுடைய தொழில் 50% தான் நடைபெறுகிறது. அதனால்தான் வேலையாட்களின் எண்ணிக்கை 25-இலிருந்து 11 ஆகக் குறைந்துவிட்டது. எனினும் பழக்கவழக்கத்தின் அடிப்படையில் தொழில் நடைபெறுகிறது.
கே: திடீர் பார்வை இழப்பைச் சந்திப்பவர்களுக்கு நடமாடுவதே சிரமமாகும் போது, இரு சக்கர வாகனங்களில் உள்ள குறைபாடுகளை எப்படிக் கண்டு பிடிப்பீர்கள்? நீங்களாகவா அல்லது மற்றவர்களைக் கண்டுபிடிக்கச் சொல்வீர்களா?
ப: ஒரு 100 அடி சுற்றளவிற்குள்தான் என்னுடைய கடைகள் அமைந்திருக்கும். பொதுவாகக் கடைகளின் வாசற்படியில் அமர்ந்திருப்பேன். வண்டிகள் வரும்போது அதன் சத்தத்தைக் கொண்டே என்ன குறைபாடு என்பதைக் கண்டுபிடித்து விடுவேன். ஒரு சிலரிடம் காசு இருக்கும். சிலர் இப்போதைக்குச் சரி செய்தால் போதும் என்பார்கள். அவரவர் தேவைக்கேற்பச் சரி செய்து கொடுக்கிறேன். சிலருக்கு டயர் மாற்ற வேண்டியிருக்கும். சிலர் செயின் பேட் மாற்றச் சொல்வார்கள். சில சமயங்களில் இன்ஜின் கழட்டிப் பார்க்க வேண்டியிருக்கும். அதற்குத் தேவையான பொருட்களை இறக்கச் சொல்லிப் பயிற்றுவிப்பேன். என்னளவில் 3 பேரைத் தயார் செய்திருக்கிறேன். அவர்கள் இல்லாத சமயங்களில் எல்லா வேலைகளையும் நானே செய்துவிடுகிறேன். எல்லாருக்கும் எல்லாம் தெரிந்திருக்கப்போவதில்லை அல்லவா? ஒரு வண்டிக்கும் இன்னொரு வண்டிக்கும் பாகங்கள் வேறுபடுமே தவிர அமைப்பு ஒன்றுதான். ஹேண்டில் பார் என்றால் கொஞ்சம் பெரியதாக இருக்கும் அல்லது குட்டையாக இருக்கும். அவ்வளவுதான். இன்ஜின் என்றால், 100 c,c 125 cc, 135 cc, 150 cc, 180 cc, 200 cc, 350 cc, 500 cc போன்ற அளவுகளில் இருக்கும். வண்டியின் சுற்றளவு கூடக்கூட இன்ஜின் பேரல்களின் கொள்ளளவுகளும் கூடிக்கொண்டே செல்கிறது. கிராம் சாட்வாவும் அப்படித்தான். இன்ஜின் அளவு கூடும்போது கிராம் சாட்வாவின் அமைப்புப் பெரிதாகும். இன்ஜினுடைய விஸ்தரிப்பு கொஞ்சம் பெரிதாகும். அவ்வளவுதான்.
கே: திடீர்ப் பார்வை இழப்பு உங்கள் தொழிலில் பாதிப்பை ஏற்படுத்தியதா?
ப: இல்லை. ஏற்கெனவே செய்துவந்த தொழில் தானே? இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், அதற்குப் பிறகுதான் தொழிலும் திறமையும் அதிகமாகியது. நம்முடைய சிந்தனை சிதற வாய்ப்பில்லை. கவனம் முழுவதும் வண்டியில் மட்டும் தான் இருக்கும். விரைவாக மற்றும் குறைவில்லாமல் சரி செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கும். "பார்வையற்றவரிடம் சரிசெய்யக் கொடுத்தவண்டி என்பதால் பாதியிலேயே நின்றுவிட்டது." என்று யாரும் சொல்லாத அளவுக்குச் சிறப்பாகச் செய்து விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருக்கும்.
கே: முழுப் பார்வையற்றவராக இந்தத் தொழிலைச் செய்யத் தொடங்கும்போது உங்களுடைய மன நிலை என்னவாக இருந்தது?
ப: பார்வை இழப்புக்குப் பிறகுதான் இந்தத் தொழிலைச் சுத்தமாகச் செய்ய முடிவதாக உணர்கிறேன். oil leakage இருக்கும் பட்சத்தில் என் பையன்களிடம் பார்க்கச் சொல்லிச் சரி செய்து விடுகிறேன். மைலேஜ் பிரச்சனை வரும்போதும் என்ன காரணம் என்பதைக் கண்டுபிடித்துச் சரி செய்து கொடுக்கிறேன்.
கே: நீங்கள் கண்டுபிடிக்க முடியாத அல்லது சிரமப் படும் சிக்கல் என்று எதாவது இருக்கிறதா?
ப: கடந்த 2 ஆண்டுகளாக புதுப்புது வண்டிகள் இறங்கிக் கொண்டிருக்கின்றன. டிஜிட்டல் போர்ட்கள் பயன்படுத்தப்படும் வண்டிகளில் உள்ள கண்டுபிடிக்க முடியாத பழுதுகளுக்கு அதேபோல் இன்னொரு வண்டியை இறக்கி, அதிலுள்ள டிஜிட்டல் போர்டைக் கழட்டி இதில் மாட்டிக் குறைகளை கண்டுபிடிப்போம். கம்பேனிக்குச் சென்று 2, 3 நாட்கள் தாமதமாவதைத் தவிர்க்க இன்னொரு வண்டியைச் சோதனை முறையில் பயன்படுத்தி சரி செய்து விடுகிறோம். முடியாது என்று திருப்பி அனுப்புவதில்லை. எவ்வளவு புதிய எலெக்ட்றானிக் முறை வந்தாலும் இதே முறையில் பழுதுகளைக் கண்டுபிடித்துச் சரி செய்து விடுவோம். ஒரு வண்டிக்குக் கரண்ட் வரவில்லை என்றால் அதற்கு மேலிருக்கும் CDI யூனிட் போயிருக்கும் அல்லது starting coil போயிருக்கும். pick up இல்லையென்றால் pick up coil போயிருக்கும். இந்த மாதிரி ஒவ்வொரு வண்டிக்கும் ஒவ்வொரு அமைப்பு failure ஆக இருக்கும். இப்பொழுது வருகின்ற வண்டிகளில் லைட் ச்விட்ச்களுக்கென்று தனி எலெக்ட்றானிக் போர்ட், காயில் அசெம்புல் செய்வதற்கென்று தனித் தனி போர்ட்கள் பயன்படுத்தப் படுகின்றன. அதற்கு வேறொரு வண்டியை இறக்கி அதைக் கழட்டிப் பார்த்துச் சரி செய்து விடுகிறோம்.
கே: இப்பொழுது செல்போன்களில் சொல்வதைப் போன்றே வண்டிகளிலும் 3ஜி, 4ஜி, 5ஜி என்றெல்லாம் சொல்கிறார்களே. அது என்ன?
ப: வண்டிகளின் வெளிப்புற அமைப்புகளில் சில மாற்றந்களைச் செய்திருப்பார்கள். ஹெட் லைட் மாஸில் மாற்றம், டயர்களில் 90 100 10 என்பதை 90 90 10 என்று மாற்றி இருப்பார்கள். இன்ஜின் கொள்ளளவுகளில் 10 cc கூட்டுவார்கள். இப்படி எதாவது மாறுதல்களைச் செய்திருப்பார்கள். ஆனால் தொழில் நுட்பத்தில் எந்த ஒரு வகை மாற்றமும் இருக்காது.
கே: 5ஜி வண்டிகளில் லைட் எப்பொழுதும் எரிந்துகொண்டே இருக்கிறது. முன்பெல்லாம் கை காட்டினால் லைட் அணைக்கப்படும். இப்பொழுது அதற்கு வாய்ப்பில்லை. அல்லவா?
ப: இரு சக்கர வாகனம் என்றால் லைட் எப்பொழுதும் எரிய வேடும் என்பது அரசின் கட்டுப்பாடு. ஒரு ஸ்விட்ச் கொடுத்து தேவைப்படும் பொழுது மட்டும் போட்டுக் கொள்ளும்படி அமைக்கப் பட்டால் சிறப்பாக இருக்கும். அது சட்ட விரோதமான செயல். சிலர் அது போன்ற ஆப்ஷன்களையும் கேட்கிறார்கள். லைட் தொடர்ந்து எரியும்போது பேட்டரிக்கு சார்ஜ் ஏறும் வேகம் குறைந்து விடும். ஒரு ஸ்விட்ச் வைத்து தேவைக்குப் பயன்படுத்துவதே சிறந்தது. மேலும் self start உள்ள வண்டிகளில் 12 வோல்டு ஏற வேண்டிய இடத்தில் 6 வோல்டு மட்டுமே ஏறி இருக்கும். 3 ஆண்டுகள் வரை உழைக்க வேண்டிய பேட்டரி ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே உழைக்கும்.
ஹெட் லைட் எரிய அதிக வோல்டேஜ் தேவைப்படுகிறது. பேட்டரிக்குச் செல்ல வேண்டிய வோல்டேஜ் ஹெட்லைட்டுக்குச் சென்றுவிடுகிறது. எனவே ஹெட் லைட் எரிந்தால் எப்படி பேட்டரி சார்ஜ் ஏறும்? எனவே பேட்டரியின் ஆயுள் குறையும்.
கே: அப்படி என்றால் லைட் எரிவது தேவையில்லை என்கிறீர்கள்.
ப: ஆம். லைட் எரிவது வண்டியின் பேட்டரி, காயில் போன்றவைகளை அதிகம் பாதிக்கிறது. பகலில் லைட் எரிவதில் யாருக்கு என்ன பயன் இருக்கப் போகிறது? இண்டிகேட்டரில் ஒரு ஸ்விட்ச் வைத்து தேவைக்குப் பயன்படுத்தலாம். இது குறித்து அரசு பரிசீலிக்கவேண்டும் என்பது என் கருத்து.
கே: சரி. புதிய தொழில் நுட்பங்களை எவ்வாறு கற்றுக் கொள்கிறீர்கள்?
ப: வண்டியின் அமைப்பு ஒரே மாதிரிதான் இருக்கிறது. நான் இந்த தொழிலைப் பழகிய காலகட்டத்தில் புல்லட், ஷெநாக், ராஜ்யுத், லாம்டி, லாம்பரட்டா, எஸ்டி, ஜாவா எனப் பல வண்டிகள் இருந்தன. இன்றைய கணினி யுகத்தில் பல வண்டிகள் அறிமுகமாகின்றன. பல்சர் என்று எடுத்துக் கொண்டால் அதிலேயே 10 வகை வண்டிகள் வருகின்றன. பல்சர் 100, 135, 150, 160, 180, 200, 220 எனப் பல வகைகள் இருக்கின்றன. பஜார்ஜிலும் அப்படித்தான். டிஸ்கவரி 100, 110, 125, 135, 150 எனப் பல வகைகள் இருக்கின்றன. இன்ஜின் கொள்ளளவு மட்டும் மாறிக் கொண்டே செல்கிறது. மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. உயரம், உடல் பருமன், நிறம் உள்ளிட்ட பலவற்றில் வேறுபடுகின்றனர். அதே போலவேதான் வண்டிகளும் அமைப்பு மாறுவதில்லை. பாகங்கள் மட்டுமே மாறுபடுகின்றன. ஹெட் லைட்டைப் பொறுத்தவரை, வட்டம், சதுரம், முக்கோனம் உள்ளிட்ட ஒரு சில அமைப்புகள் மட்டுமே மாறுபடுகின்றன.
கே: ரிமோட் கண்ட்ரோல்களைச் சரி பார்த்து விடுவீர்களா?
ப: முடியும். 4 மேக்நட்களைக் கொடுத்திருப்பார்கள். வண்டியின் 4 இடங்களில் பொருத்த வேண்டும். அதை பேட்டரியுடன் கனெக்ட் செய்ய வேண்டும். குறிப்பிட்ட தூர இடைவெளியிலிருந்து இயக்கும்போது வண்டி இயங்கும்.
கே: நீங்கள் தனியாகக் கடையில் இருக்கிறீர்கள். உதவிக்கு யாரும் இல்லை என்று வைத்துக் கொள்வோம். ஒருவர் வண்டியைக் கொண்டுவந்து அவசரமாகச் சரிசெய்து தரும்படி கேட்கிறார். அந்தச் சூழலை உங்களால் சமாளிக்க முடியுமா?
ப: பையன்களோடு இருக்கும்போது 10 நிமிடத்தில் முடியும். வேலைக்குத் தனியாக இருக்கும்போது 20 நிமிடம் வரைத் தேவைப் படுகிறது. கருவிகளைப் பொறுமையாகத் தடவித் தேடி எடுப்பதற்கே 5 நிமிடம் வரை ஆகலாம். வலையங்களில் விரல்களை விட்டு அதன் அளவுகளைக் கணித்து விடுவேன். அவற்றைக் கழட்டி மாட்டுவதற்கு அதிக நேரம் தேவைப்படுவதில்லை. ஹோண்டா, ஸ்டார்சிட்டி போன்ற வண்டிகளில் இன்ஜின் அரை கண்டிஷனில் இருக்கும்போது பிளக் போயிருக்கும். தொட்டுப்பார்த்தாலே தெரிந்துவிடும். சரிசெய்து விடுவோம். இன்ஜின் வால்வில் எதாவது பிசிர் அடைத்திருந்தால் புல்லிங்க் பவர் குறைந்துவிடும். அப்பொழுது அதைச் சரிசெய்வதற்காக 4 சொட்டு ஆயில் உள்ளே விடுவோம். அல்லது கொஞ்சம் பெட்ரோல் விடுவோம். அப்பொழுது டஸ்ட் ரிலீஸ் ஆகி மிதிப்பதற்கு இலகுவாக இருக்கும். பிறகு பிளக் மாட்டிக் கொடுத்து விடுவோம்.
கே: எல்லா வேலைகளையும் நீங்களே செய்து விடுவீர்கள். ஆனால் கொஞ்சம் தாமதமாகும் அவ்வளவுதானே.
ப: ஆம். ஒரு செயின்பேட் மாற்றுவதாக வைத்துக் கொண்டால், டூல்ட், ஸ்டே நட் இரண்டும் தேவை. கழட்டி மாட்டுவது பெரிய வேலை இல்லை. பையன்கள் இருந்தால் உடனடியாக எடுத்துக் கொடுத்து விடுவார்கள். அததற்குத் தனியாக புல்லர் மற்றும் ஸ்பாநர்கள் இருக்கும். எளிதில் மாட்டிவிடலாம். பையன்களைவிட நான் பார்க்கும் வேலையைத் தான் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகிறார்கள். காரணம் என்னுடைய அனுபவம். ஏறக்குறைய 37 ஆண்டுகளாக இந்தப் பணியைச் செய்து வருகிறேன். எத்தனை திறமையான பையன்கள் வேலை பார்த்தாலும் " நீங்க ஸ்டார்ட் பண்ணிட்டுக் குடுங்க" என்று கேட்கிறார்கள்.
கே: பஞ்சர் இருப்பதை சோப்பு நுரையைக் கொண்டு தானே கண்டுபிடிக்கிறீர்கள்?
ப: இல்லை. டியூபைக் கழட்டி ஏர் விட்டு தொட்டி நீரில் வைத்தால், பிசிர் தெரியும். கண்டுபிடித்துவிடலாம்.
கே: டியூப் இல்லாத வண்டிகளில்?
ப: கழட்ட வேண்டியதில்லை. வண்டியை நிறுத்தி நீரை ஊற்றி கட்டையையும் தேரையும் பயன்படுத்தும் போது, பஞ்சர் உள்ள இடத்தில் காற்று வெளிப்படும். வெளியே எடுக்க வேண்டி இருந்தால் எடுத்து விடுவோம். இல்லையென்றால் உள்ளே தள்ளி மூடி விடுவோம்.
கே: எல்லா வேலைகளையும் நீங்களே செய்து விடுவீர்களா?
ப: என்னால் முடியும். பையன்களை வைத்து வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்து செய்து வருகிறேன். இல்லாதபட்சத்தில் என்னால் செய்ய முடியும். டியூப் வண்டிகளைவிட இதற்கு வேலை குறைவுதான்.
கே: உதிரி பாகங்களில் லோக்கல் ஒரிஜினல் என்று எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்?
ப: கம்பெனி முத்திரையுடன் வருபவை ஒரிஜினல் பாகங்கள். அதிக லைப் கொடுக்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் ஒரிஜினல் பொருட்களையே அதிகம் விரும்புகின்றனர். சாதாப் பொருட்கள் நன்றாக இருக்கும் . அதிக லைப் கொடுக்காது.
கே: புதிதாக வரும் வண்டிகளில் ஒயர்களின் அமைப்பு எப்படி இருக்கிறது? கண்டு பிடிப்பதற்குச் சிரமமாக இருக்கிறதா?
ப: ஒயர் பிரச்சனைகள் இப்போது குறைவு. ஒரே ஜாக்கெட்டில் 5, 7, 9, 12, 24 வரை ஒரே அமைப்பாகக் கொடுத்திருக்கிறார்கள். ஒரு ஸ்விட்சைக் கழட்டி மாட்டிப் பார்த்தால் சரி செய்து விடலாம். எங்களால் முடியாது என்று தூக்கிப் போட்ட ஒன்றை வேறு எவராலும் சரி செய்ய முடியாது.
இன்ஜின்களில் குறைபாடு என்றால் அதிகம் செலவாகும். வாடிக்கையாளர்களிடம் சொல்லி விடுவோம். அவர்கள் விரும்பினால் மட்டுமே அதைப் பிரித்துப் பார்த்துக் கொடுப்போம். எங்களுக்கு வாடிக்கையாளர்கள் விருப்பமே முக்கியம்.
கே: இதுவரை உங்கள் தொழில் பற்றிப் பேசினோம். இனி உங்களுடைய தனிப்பட்ட விஷயங்கள் குறித்துப் பேசுவோம். உங்களுடைய திருமணம் எப்போது நடைபெற்றது?
ப: எனக்கு 1996 இல் திருமணம் நடைபெற்று ஒரு பெண் குழந்தையோடு வாழ்ந்துகொண்டிருந்தேன். அப்போது ஏற்பட்ட விபத்தில் பார்வையைப் பறிகொடுத்தேன். என் முதல் திருமண வாழ்வும் அதோடு முடிந்துவிட்டது. பிறகு கொஞ்ச காலம் வீட்டில்தான் இருந்தேன். பார்வை இழப்பைப் பொருட்படுத்தாமல், என்னைத் திருமணம் செய்ய ஒத்துக் கொண்டு எனக்கு பக்க பலமாகவும், என் குழந்தைகளுக்கு இன்றுவரை ஆதரவாகவும் இருப்பவள் தான் என் பார்வையுள்ள மனைவி ஜெயமதி. எங்களுக்கு 3 குழந்தைகள்.
கே: அவர்களுக்குப் பாராட்டுகள். அவர்கள் உங்களுக்குப் பணியில் உதவி செய்கிறார்களா?
ப: ஆம். கடையில் ஆள் இல்லாதபோது அவர்களை அழைத்துச் செல்கிறேன். காலையில் வீட்டு வேலைகளை முடித்து விட்டு, சமைத்து எடுத்துக்கொண்டு என்னுடன் கடைக்கு வந்து விடுவார்கள். இரவு 7 மணிக்கு வீட்டிற்கு வந்து மற்ற வேலைகளையும் கவனித்துக் கொள்கிறார்கள்.
கே: உங்கள் குழந்தைகள்...
ப: பெண் குழந்தை இப்பொழுதுதான் 10ம் வகுப்புப் படித்து முடித்திருக்கிறாள். ஒரு பையன் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கிறான். மூத்தவன் சென்னையில் வேலை பார்க்கிறான். கொரோனா என்பதால் இப்பொழுது என்னுடைய கடையில் எனக்கு உதவியாக இருக்கிறான்.
கே: அடுத்து உங்கள் மனைவியிடம் சில கேள்விகளைக் கேட்டுப் பார்க்கலாமா?.
ப: சரி.
கே: பார்வையுள்ள நீங்கள் பார்வையற்ற இவரைக் கணவராக எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?
மனைவியின் பதில்: எனக்கு முதலில் திருமணமாகி ஆண் குழந்தையோடு வாழ்ந்து கொண்டிருந்த போது ஒரு விபத்தில் என் கணவரை இழந்துவிட்டேன். 5 ஆண்டுகள் வீட்டிலேயே இருந்தேன். பிறகு இவருக்குப் பெண் பார்க்கும் செய்தி கேள்விப் பட்டேன். பார்வை இல்லாத அவருக்கு வாழ்க்கை கொடுத்து ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்கலாம் என்று எண்ணி திருமணத்திற்கு ஒத்துக்கொண்டேன். இன்றுவரை மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
கே: அவரது தொழிலைப் பார்த்து நீங்கள் எப்போதாவது வியந்திருக்கிறீர்களா?
ப: கண்டிப்பாக. பார்வை இல்லாவிட்டாலும் இப்படி ஒரு கடை வைத்து பலருக்கு வேலை கொடுக்கிறார் என்று பெருமைப் பட்டிருக்கிறேன்.
கே: நீங்கள் கேட்பவை அனைத்தையும் செய்து கொடுத்திருக்கிறாரா?
ப: ஆம். கொடுத்திருக்கிறார்.
கே: நீங்கள் ஒரு வீரமான பெண்மணி. மனதில் பட்டதைப் பேசுவீர்கள், பைக் ஓட்டுவீர்கள் என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறேன். நீங்கள் எவ்வளவு பெரிய பைக் கொடுத்தாலும் ஓட்டுவீர்களா?
ப: முடியும். என்னால் எவ்வளவு பெரிய பைக் கொடுத்தாலும் ஓட்ட முடியும். அவருக்கு என்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்வேன்.
கே: உங்களுக்கு அண்ணன் எந்தக் குறையும் வைக்கவில்லை. உங்கள் குழந்தைகளையும் நீங்கள் சிறப்பாக வளர்த்து விட்டீர்கள். எதிர்காலத்தில் உங்களுடைய குழந்தைகள் என்னவாக வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள்?
ப: பிள்ளைகளைப் படிக்க வைத்து நல்ல நிலைக்குக் கொண்டுவர வேண்டுமென்று ஆசைப் பட்டேன். பெரியவன் படிக்க விரும்பவில்லை. 2வது பையன் கல்லூரி செல்கிறான். பெண் 10வது முடித்திருக்கிறாள்.இருவரையும் நன்றாகப் படிக்க வைத்து நல்ல நிலைக்குக் கொண்டுவர வேண்டும். அந்த நம்பிக்கையும் இருக்கிறது. என் இரு மகன்களில் யாராவது ஒருவர் அவர்களது அப்பா தொழிலை நடத்த வேண்டும்.
கே: நீங்கள் இவரைத் திருமணம் செய்ய ஒத்துக்கொண்டபோது உங்கள் வீட்டில் எதிர்ப்பு இருந்திருக்கும் அல்லவா? எப்படிச் சமாளித்தீர்கள்?
ப: முதல் எதிர்ப்பைத் தெரிவித்தவர் என்னுடைய அம்மா. "கண்ணுதெரியாதவர் என் மகளை மகிழ்ச்சியாக வைத்திருக்க மாட்டார்" என்று சொன்னார்கள். என் இரு தம்பிகளுக்கும் விருப்பமில்லை. எங்கள் திருமணத்திற்கு வரவில்லை. இப்பொழுது என் அம்மாவிற்கு 3 மருமகன்களில் இவரைத்தான் பிடித்திருக்கிறது. எங்கள் வீட்டிற்குத்தான் அடிக்கடி வரப் போக இருக்கிறார்கள்.
கே: பார்வையுள்ளவர்கள் பார்வையற்றவர்களைத் திருமணம் செய்து கொள்வது நல்லதா?
ப: நல்லது தான். புரியாதவர்களுக்குப் புரியாது. புரிந்தவர்களுக்கு எல்லாம் புரியும். பழகியவர்களுக்குப் புரியும்.
கே: அண்ணனிடம் இன்னும் சில கேள்விகளைக் கேட்கவேண்டியிருக்கிறது.
ப: தாராளமாய்க் கேளுங்கள்.
கே: உங்களுடைய இத்தனை வருட அனுபவத்தில் எத்தனைத் தொழிலாளர்களை உருவாக்கி இருக்கிறீர்கள்?
ப: என்னிடம் 10000 க்கு மேற்பட்டவர்கள் தொழில் கற்று வெளியேறி இருக்கிறார்கள். சிலர் 40 கி.மீ. தூரத்திற்குள்ளும், வெளி மாவட்டங்களிலும், வெளி மாநிலங்களிலும், சிலர் வெளி நாடுகளிலும் பணியாற்றுகின்றனர்.
கே: அவர்களில் உங்களைப் பெருமைப் படுத்தியவர் என்று யாரையாவது குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறீர்களா?
ப: என்னிடம் தொழில் கற்றவர்கள் 2, 3 பேர் தினமும் கடைக்கு வந்து செல்கின்றனர். 10 நாட்களுக்கு முன் என்னிடம் தொழில் கற்று வெளி நாடு சென்று குடும்பப் பொறுப்புகளை எல்லாம் முடித்துவிட்டு சர்விஸ் செண்டர், வொர்க்ஷாப் வைத்திருக்கும் மதுரைப் பையன் என்னைச் சந்திக்க வருவதாகக் கூறினான். வந்தவன் என்னுடைய கண்ணாடியை வாங்கிவிட்டு புதுக் கண்ணாடியை அணிவித்து, “20 ஆண்டுகளாக ஒரே கண்ணாடியை அணிந்திருக்கிறீர்கள், இந்தக் கண்ணாடிதான் உங்களுக்கு நன்றாக இருக்கிறது” என்று சொன்னான். அவன் இன்றுவரை தொழில் சார்ந்த எந்தச்செயலையும் பகிர்ந்து கொள்ளத் தவறுவதில்லை. அவன் ஒரு சிஷ்யன். இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள். என்னிடம் வேலை செய்தவர்கள் எல்லாருமே விசுவாசமானவர்கள்.
கே: உங்கள் தொழிலை விரிவு படுத்தும் எண்ணம் இருக்கிறதா?
ப: பல கடைகளை வைக்கவும், பல்லாயிரக் கணக்கானோர்க்கு வேலை கொடுக்கவும் விருப்பமும், திறமையும் இருக்கிறது. அதற்கான வசதிகள்தான் என்னிடம் இல்லை. பொன்னமராவதியில் உள்ள இந்தியன் வங்கியில் 4 முறை லோன் வாங்கி ஒரு வருடத்திற்குள் கட்டி முடித்திருக்கிறேன். வங்கியில் உள்ள அனைவரும் எனக்கு நல்ல பழக்கம். கேட்டு ஒரு மணி நேரத்திற்குள் கிடைத்துவிடும். என் மனைவியின் பெயரில் தான் ஒவ்வொரு முறையும் லோன் வாங்கிக் கட்டி இருக்கிறேன். இப்பொழுது இருக்கும் மேனேஜரிடம் 3 முறைக் கேட்டுப் பார்த்தும் கிடைக்கவில்லை.
கே: உங்களிடம் ஒரு பெரிய தொகையை லோனாகக் கொடுத்துத் தொழில் நடத்திக் கட்டச் சொன்னால் உங்களால் முடியுமா?
ப: நிச்சயமாக முடியும். தொழிலை மேம்படுத்த முடியும். என்னால் இன்னும் பலருக்கு வேலை கொடுக்க முடியும். என்னுடைய வாழ்க்கைத் தரமும் உயரும்.
கே: உங்களை ஹீரோ ஹோண்டா, டிவிஎஸ் உள்ளிட்ட கம்பெனிகள் எப்போதாவது பிரபலப்படுத்த முயற்சிகள் எடுத்து இருக்கின்றனவா?
ப: நான் பார்வை உள்ளவராக இருந்த பொழுது காரைக்குடி மீனாட்சி ஏஜென்சியில் இருந்து என்னை அணுகி இருந்தார்கள் பஜாஜ் கம்பெனியில் மட்டும் நான் சர்வீஸ் பார்த்த 600 வண்டிகளுக்கு மேல் இருந்தன. எனவே எனக்காக ஒரு பாராட்டு விழா நடத்தி பரிசு வழங்கப்பட்டது. இன்னும் சில சங்கங்கள் என்னை அழைத்து பாராட்டி கேடயங்கள், விருதுகள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றைக் கொடுத்து பெருமைப்படுத்தி வருகின்றன. அத்தனை விருதுகளையும் வீட்டில் பத்திரமாக வைத்திருக்கிறேன். இந்தத் தொழிலை வைத்து ஊனமுற்றோர் மறுவாழ்வு மையத்திடம் 2 விருதுகள் வாங்கியிருக்கிறேன். பல இடங்களில் விருதுகள் மற்றும் கேடயங்களைப் பெற்றிருக்கிறேன்.
கே: கொரோனா காலகட்டத்தில் உங்களுடைய தொழில் எப்படிச் செல்கிறது?
ப: 50% பாதிப்பைக் கண்டிருக்கிறது. பொன்னமராவதியில் கொரோனா பீதி அதிகம் இருக்கிறது. ஏறக்குறைய 100 பேரை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். எங்கள் கடைக்கு அருகில் இருந்தும் 7 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அத்தனையும் வெளியூரிலிருந்து இங்கு வரும் மக்களால் உருவானதே. கிராமத்து ஜனங்கள் பயத்தினால் கடைப்பக்கம் வருவதில்லை.
கே: பார்வையற்ற சமூகத்திற்கு எதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
ப: பார்வையற்றவர்கள் அனைவருமே திறமைசாலிகள். எவரிடமும் எளிதில் ஏமாற மாட்டார்கள். சில சமயங்களில் எதிர்பாராமல் ஏமாறுவதும் உண்டு. தொழில் என்று வரும்போது, நாணயமும் நம்பிக்கையும் மட்டுமே அவர்கள் உயர்வுக்கு வழிவகுக்கும்.
நசுருதீன், செலின்மேரி, கோபால்: உங்களுடைய பொன்னான நேரத்தை எங்களுடன் செலவிட்டமைக்கு நன்றி.
முத்து பழனியப்பன், ஜெயமதி: மிக்க நன்றி.
முத்து பழனியப்பன் அவர்களைத் தொடர்புகொள்ள: 8903131420
தொகுப்பு: X. செலின்மேரி.
முத்து பழனியப்பன் அவர்களின் ஒவ்வொரு அனுபவத்தையும் கேள்வி மூலம் நன்கு வெளிப்படுத்திய விதம் மிக அருமை.நேர்காணல் மிகவும் அருமை
பதிலளிநீக்குதங்களது பின்னூட்டத்திற்கு நன்றி
நீக்குஅற்புதமான ஒரு சந்திப்பு கட்டுரை மிக நேர்த்தியாக அமைந்திருந்தது.
பதிலளிநீக்குதங்களது பாராட்டுக்களுக்கு நன்றி
பதிலளிநீக்குஉங்களுடைய இந்த அசாத்திய திறமையை நான் பாராட்டுகிறேன். மேலும் உங்களை இவ்வுலகம் அறிய செய்த விரல் மொழியருக்கும் இந்த கட்டுரையின் ஆசிரியருக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஉங்களுடைய இந்த அசாத்திய திறமையை நான் பாராட்டுகிறேன். மேலும் உங்களை இவ்வுலகம் அறிய செய்த விரல் மொழியருக்கும் இந்த கட்டுரையின் ஆசிரியருக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஉங்களுடைய இந்த அசாத்திய திறமையை நான் பாராட்டுகிறேன். மேலும் உங்களை இவ்வுலகம் அறிய செய்த விரல் மொழியருக்கும் இந்த கட்டுரையின் ஆசிரியருக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஉங்களுடைய இந்த அசாத்திய திறமையை நான் பாராட்டுகிறேன். மேலும் உங்களை இவ்வுலகம் அறிய செய்த விரல் மொழியருக்கும் இந்த கட்டுரையின் ஆசிரியருக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஉங்களுடைய இந்த அசாத்திய திறமையை நான் பாராட்டுகிறேன். மேலும் உங்களை இவ்வுலகம் அறிய செய்த விரல் மொழியருக்கும் இந்த கட்டுரையின் ஆசிரியருக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஉங்களுடைய இந்த அசாத்திய திறமையை நான் பாராட்டுகிறேன். மேலும் உங்களை இவ்வுலகம் அறிய செய்த விரல் மொழியருக்கும் இந்த கட்டுரையின் ஆசிரியருக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஉங்களுடைய இந்த அசாத்திய திறமையை நான் பாராட்டுகிறேன். மேலும் உங்களை இவ்வுலகம் அறிய செய்த விரல் மொழியருக்கும் இந்த கட்டுரையின் ஆசிரியருக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஉங்களுடைய இந்த அசாத்திய திறமையை நான் பாராட்டுகிறேன். மேலும் உங்களை இவ்வுலகம் அறிய செய்த விரல் மொழியருக்கும் இந்த கட்டுரையின் ஆசிரியருக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஉங்களுடைய இந்த அசாத்திய திறமையை நான் பாராட்டுகிறேன். மேலும் உங்களை இவ்வுலகம் அறிய செய்த விரல் மொழியருக்கும் இந்த கட்டுரையின் ஆசிரியருக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஉங்களுடைய இந்த அசாத்திய திறமையை நான் பாராட்டுகிறேன். மேலும் உங்களை இவ்வுலகம் அறிய செய்த விரல் மொழியருக்கும் இந்த கட்டுரையின் ஆசிரியருக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு