தொழில்நுட்பம்: மனி ரூபாய்நோட்டுக்களைக் கண்டறிய உதவும் புதிய செயலி - சிதம்பரம் இரவிச்சந்திரன்

graphic MANI செயலியின் துவக்கப் படம்
 

     பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்காக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு புதிய செயலியை 2019 டிசம்பரில் அறிமுகப்படுத்தி உள்ளது. நல்ல பார்வைத்திறன் உள்ளவர்களே ரூபாய்நோட்டுக்களின் மதிப்பை எளிதாகக் கண்டுபிடிக்கக் சில நேரங்களில் கஷ்டப்படுகிறார்கள். இந்நிலையில் விழித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்காக ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தி உள்ள இந்தப் புதிய செயலி அவர்களுக்குப் பேருதவியாக அமையும் என்று நம்பப்படுகிறது.

     மனி - Mobile aided note identifier- MANI என்பதே இந்தப் புதிய செயலியின் பெயர். இது ஆண்ட்ராய்டு போனிலும், ..எஸ் வகை போனிலும் செயல்படும்வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆஃப்லைனாகவும் இந்தச் செயலியைப் பயன்படுத்தமுடியும். ரூபாய்நோட்டுக்களின் மதிப்பை ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் இந்தச் செயலியின் உதவியுடன் ஒருவர் கேட்டு  அறிந்துகொள்ளலாம். ஒலி வடிவில் விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

    நவம்பர் 2016ல் காந்தி வரிசை (new Gandhi series) என்ற பெயரில் ரூபாய்நோட்டுகள் புதிய வடிவத்திலும், அளவிலும் வெளியிடப்பட்டன. இதன்படி, புதிய நோட்டுகள் ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ.2000 ஆகிய மதிப்புகளுடன் வெளிவந்தன. அன்றாடம் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் இந்தப் புதிய நோட்டுகளை அடையாளம் காண்பதில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி இந்தச் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.

graphic MANI செயலியின் செயல் விளக்கப் படம்
 

      இதைப் பயன்படுத்திப் பார்வையற்றவர்கள் பழையவரிசை காந்தி நோட்டுகளையும், புதிய வரிசை காந்தி நோட்டுகளையும் எளிதில் கண்டுபிடிக்கலாம். மொபைல் காமராவிற்கு முன்னால் நோட்டுகளை சிறிது இடைவெளி விட்டு வைக்கும்போது, இந்தச் செயலி நோட்டுகளின் மதிப்பை எடுத்துச்சொல்லும். இதனை முற்றிலும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

     இந்தச் செயலியின் செயல்திறன் இதனைப் பயன்படுத்தும் இடத்தில் உள்ள ஒளியின் அளவு, நோட்டுகளின் ஈரமற்ற தன்மை, சுற்றிலும் உள்ள பொருள்களால் பாதிக்கப்படாத தன்மை ஆகியவற்றைப் பொறுத்து உள்ளது. இது கடந்த 2019 டிசம்பர் 13 அன்று ரிசர்வ் வங்கியால் மேம்படுத்தப்பட்டு, டிசம்பர் 19 அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச் செயலியைப் பயன்படுத்தி போலி நோட்டுகளைக் கண்டுபிடிக்கமுடியாது

graphic MANI செயலியின் வழி 50 ரூபாய் தாளை ஸ்கேன் செய்யும் படம்

     மனி செயலியைப் பதிவிறக்கம் செய்து போனில் உள்ள காமராவின் உதவியுடன் ரூபாய்நோட்டுக்களை ஸ்கேன் செய்து அவற்றின் மதிப்பை அறியலாம். இதன் மூலம் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் அன்றாடம் பணப் பரிவர்த்தனையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வு ஏற்பட்டுள்ளது. இந்தச் செயலியைப் பலரும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. பார்வையற்றவர்கள் மட்டும் இல்லாமல், வயது முதிர்வினால் பார்வைக்கோளாறு ஏற்பட்டவர்களும் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

      அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் நல்லவற்றிற்காகப் பயன்படுத்துவோம். இன்றையநிலையில், நம்மில் பெரும்பாலோரின் வாழ்வில், உடலின் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட ஆண்ட்ராய்டு போனிலும் எத்தனையோ நல்ல விஷயங்கள் உள்ளன. மனி போன்ற இத்தகைய நல்ல செய்திகளை நமக்குத் தெரிந்த நான்கு பேரிடம் சொல்வோம்.

இந்த MANI செயலியை போனில் பதிவிரக்கம் செய்ய இந்த இணைப்பைப் பயன்படுத்தலாம். https://play.google.com/store/apps/details?id=com.rbi.mani 

 

(கட்டுரையாளர் ஓய்வுபெற்ற அறிவியல் ஆசிரியர். பல மலையாளச் சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர். அறிவியல் இதழ்களில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்).

தொடர்புக்கு: nrvikram19@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக