சந்திப்பு: தங்கப் பதக்கம் வென்ற சிங்க மங்கையர்கள் மு. மகேஸ்வரி, ர. விஜயசாந்தி

graphic  பதக்கம் வழங்கும் நிகழ்வின் போது தனக்குரிய முதலிடத்தில் சிறப்பு விருந்தினர்களுடன் மு. மகேஸ்வரி அவர்கள் நிற்கும் படம்
மு. மகேஸ்வரி

       உடல்நலத்தையும், உளநலத்தையும் பேணவும், மேம்படுத்தவும் தோன்றிய கலைகளுள் மிக முக்கிய பங்காற்றுவது விளையாட்டு. பெரும்பாலான விளையாட்டுகள் உடற்பயிற்சிக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் மட்டுமே  அமைந்திருந்தாலும் சில தற்காப்புக்கலை சார்ந்த விளையாட்டுகளும் உண்டு.  எதிரியை நிலத்தில் வீழ்த்துவது, நகர முடியாமல் இருகப் பிடிப்பது, திணறவைத்துப் பணியவைப்பது எனப் பல்வேறு நுணுக்கங்களைக் கொண்ட விளையாட்டுதான் ஜூடோ. இத்தகைய விளையாட்டில் பங்கேற்று, தங்கப் பதக்கங்களை வென்றுள்ள பார்வையற்ற வீராங்கனைகளான  மு. மகேஸ்வரி,  ர. விஜயசாந்தி ஆகியோரது சாதனைகளை ஆவணப்படுத்தும் நோக்கில் செல்வி. பரிபூரணி அவர்களால் மேற்கொள்ளப்பட்ட பேட்டி.

பரிபூரணி:  தங்களைப் பற்றி சிறிய அறிமுகத்தை வழங்குங்கள்?

மகேஸ்வரி: நான், திருவள்ளூர் மாவட்டத்தில் பிறந்தேன். நானும் எனது பெற்றோரும், தங்கை இராஜேஸ்வரியும் பார்வையற்றவர்கள். எனது தந்தை மின்சார இரயிலில் வியாபாரம் செய்து, குடும்பத்தை நடத்துகிறார், தாய் வீட்டு வேலைகளைக் கவனித்துக்கொள்கிறார். பள்ளிப் படிப்பை சிறுமலர் பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளியிலும், பட்டப்படிப்பை இராணிமேரி கல்லூரியிலும் முடித்துவிட்டு,  தற்பொழுது முதுகலை கல்வியினைத் தொலைதூரக் கல்வி வழிப் பயின்றுகொண்டிருக்கிறேன்.

விஜயசாந்தி:   நான் திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்தேன். எனது பெற்றோரும், தமயனும் கூலித் தொழிலாளர்கள். நான் எனது ஆரம்பப் பள்ளிக் கல்வியினைத் திருவண்ணாமலை அரசுப் பள்ளியிலும், இடைநிலைப் பள்ளிக் கல்வியினை அமலராக்கினி பார்வையற்றோர் பள்ளியிலும், மேல்நிலைப் பள்ளிக் கல்வியினை நிர்மலமாதா மேல்நிலைப் பள்ளியிலும், இளங்கலை, முதுகலை கல்வியினை ராணிமெரி கல்லூரியிலும், இளங்கலை ஆசிரிய கல்வியினை எஸ் ஆர்  எம் கல்லூரியிலும் முடித்துள்ளேன்.

ப: ஜூடோ விளையாட்டின் மீது தங்களுக்கு எவ்வாறு ஆர்வம் ஏற்பட்டது?

வி: பள்ளிப் படிப்பின்போதே கராத்தே என்னும் தற்காப்பு கலையினைப் பயின்றிருக்கிறேன். கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் அதீத ஆர்வம் உண்டு. உடற்கல்வியியல் துறையில் உயர்கல்வி பயிலவேண்டுமென்ற ஆசையிருந்தது. எனினும்  வரலாற்்றுத் துறையைத் தெரிவுசெய்ய நேரிட்டது. எனக்கு  உடற்கல்வியியலின் மீதிருந்த  ஆர்வத்தினை எங்கள்  கல்லூரியின் உடற்கல்வி பேராசிரியரிடம் தெரிவித்தமையால், தமிழ்நாடு பார்வையற்றோர் ஜூடோ  அமைப்பின் நிறுவனர் உமாசங்கர் என்னும் ஜூடோ  விளையாட்டுப் பயிற்சியாளரை அறிமுகப்படுத்தினார்கள். அவர் அதுவரை பார்வையுள்ள பெண்களுக்கு மட்டுமே ஜூடோ பயிற்சியளித்துக் கொண்டிருந்தார். தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறையிடம் சிறப்பு அனுமதி பெற்று, எங்கள் கல்லூரியில் பயின்று கொண்டிருந்த பார்வையற்ற பெண்களுக்குப் பயிற்சியளித்து, அதில் சிறப்பாக விளையாடுபவர்களைத் தெரிவுசெய்து, தொடர் பயிற்சி வழங்கினார்.

graphic  மு. மகேஸ்வரி அவர்களுக்கு வெற்றிப் பதக்கம் வழங்கும்  படம்
 மு. மகேஸ்வரி

ப: ஜூடோ விளையாட்டு முறையைக்  குறித்து சற்று விளக்கமாகக் கூறுங்களேன்?

ம: இது ஒலிம்பிக் விளையாட்டு வரிசையில் இடம்பெற்ற தற்காப்புக் கலை தொடர்புடைய ஒரு உள்ளக  விளையாட்டு. எதிராளியை  கைகளால் பிடித்து, அவரது அசைவுகளை உணர்ந்து, கால்களைப் பயன்படுத்தி அவரைத் தாக்குவது தொடங்கி அவரை மயக்கநிலைக்கு உட்செலுத்துவது  உள்ளிட்ட பல நுணுக்கங்களைக் கொண்டது. வழங்கப்பட்ட நேரத்திற்குள் விளையாட்டின் விதிகளை மீறாமல் எதிராளியை தாக்குபவர்களே வெற்றிபெற்றவராவர்.

ப: தங்களின் பயிற்சி அனுபவங்களைச் சற்று பகிரலாமே?

வி:  எங்களுக்கு தினமும்  காலை ஏழுமணி முதல் பத்து மணிவரை சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் பார்வையுள்ளவர்களுடன் இணைத்துப் பயிற்சி வழங்கப்பட்டது.  ஆண் பயிற்சியாளர் என்பதால் அவரது வாய்  மொழி அறிவிப்புகளைக் கேட்டும், கடினமான நுணுக்கங்களை பார்வையுள்ளவர்களிடம் கற்றும் பயிற்சி பெற்றோம். பின்னர் எங்கள் கல்லூரி வளாகத்திலேயே பயிற்சி வழங்கப்பட்டது.

ப: ஜூடோ விளையாட்டுப் பயிற்சியில் தாங்கள் மிகுந்த சவாலாக  எண்ணியது ஏதேனும் உள்ளதா?

ம: காலைநேரப் பயிற்சி என்பதால் காலை உணவைப் பயிற்சிக்குப் பின்னரே  தாமதமாக எடுத்துக்கொள்வோம். உடல் நலமின்மை அல்லது உடல் அசோகரியங்களின்போது ஒருநாள் மட்டுமே விடுப்பெடுத்துக்கொள்ள அனுமதி  கிடைக்கும்.

ப: தாங்கள் பங்கேற்ற தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள், வென்ற பதக்கங்கள் பற்றி கூறுங்களேன்?

ம: ஹரியானாவில் நடைபெற்ற ஐந்தாவது தேசிய விளையாட்டுப் போட்டி மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்ற எட்டாவது தேசிய ஜூடோ  விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், லக்னோவில் நடைபெற்ற ஆறாவது தேசிய ஜூடோ விளையாட்டு மற்றும் கோரக்பூரில் நடைபெற்ற ஏழாவது ஜூடோ விளையாட்டில் தங்க பதக்கமும் வென்றுள்ளேன். சிறந்த  வீராங்கனை என்னும் பட்டமும் பெற்றுள்ளேன். மேலும், இரண்டு சர்வதேசப் போட்டிகளில் பங்குபெற்றுள்ளேன்.

வி: கோவாவில் நடைபெற்ற  இரண்டாவது தேசிய  விளையாட்டுப் போட்டியிலும், லக்னோவில் நடைபெற்ற மூன்றாவது தேசியப் போட்டியிலும், உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற நான்காவது  தேசியப் போட்டியிலும், ஹரியானாவில் நடைபெற்ற ஐந்தாவது தேசியப் போட்டியிலும், லக்னோவில் நடைபெற்ற ஆறாவது தேசிய விளையாட்டுப் போட்டியிலும் தங்கப்  பதக்கங்கள் வென்றுள்ளேன். மேலும், தென்கொரியாவில்  நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கமும்,  தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற சர்வதேசப் பொதுநலவாயப் போட்டியில் தங்கப் பதக்கமும், வியட்நாமில் நடைபெற்ற சர்வதேசப் போட்டியில் தங்கப் பதக்கமும் பெற்றுள்ளேன்டோக்கியோவில் நடைபெறவிருக்கும் பாரா ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிகாண் போட்டியில் தேர்வாகியுள்ளேன்.

ப: எந்த அமைப்பு இது போன்ற போட்டிகளை நடத்துகிறது?

ம: தேசிய அளவிலான போட்டிகளை இந்திய பார்வையற்றோர் பாராஜுடோ அமைப்பும்,  சர்வதேச போட்டிகளை சர்வதேச பார்வையற்றோ விளையாட்டுக் கூட்டமைப்பும் நடத்துகின்றன.

ப: தங்களைப் பற்றிய செய்திகள் ஏதேனும் செய்தித்தாள்களில்  வெளிவந்துள்ளதா?

வி - தினமலர் மற்றும் குங்குமம்  இதழில்  வெளிவந்துள்ளது.

graphic மு. மகேஷ்வரி அவர்கள்  குறித்து மாலைமலர் நாளிதழில் வெளிவந்த செய்தியின் படம்
 

- தெலுங்கு செய்தித்தாள் ஒன்றிலும், தோழி என்னும் வார இதழிலும், தினகரன் செய்தித்தாளிலும்  பிரசுரிக்கப்பட்டுள்ளது. காலச்சக்கரம் என்னும் எங்கள் மாவட்டத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=7023

 

ப: தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கத் தேவையான செலவினை உரிய அமைப்பே ஏற்றுக்கொள்ளுமா?  

வி: பெரும்பாலான நேரங்களில் எனது கல்வி உதவித்தொகையிலிருந்தும், பெற்றோரிடமிருந்து பெற்றும்  செலவினை மேற்கொள்வேன். பாரா ஒலிம்பிக் போட்டிக்கான   பயணச் செலவை மட்டும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பொதுநலவாயப்  போட்டியில் பங்கேற்க ‘லிட் தி லைட்’ என்னும் அமைப்பு உதவியது. 

ம: தேசியப் போட்டிகளுக்கான முழு  செலவினத்தை நாங்களே பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதால் எனது பெற்றோரிடமிருந்து பெற்றுக்கொள்வேன். பாரா ஆசிய போட்டிக்கான பயணச்  செலவை மட்டும் அரசு ஏற்றுக்கொண்டது. துருக்கியில் நடைபெற்ற வேர்ல்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள போதிய பணமின்மையால் எங்கள் மாவட்டஆட்சியருக்கு விண்ணப்பித்தேன். அவர்கள் அப்போட்டிக்கான  நிதி உதவியை வழங்கினார்கள்.

ப: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தங்களுக்கு வீடு கட்டித்தருவதாக தெரிவித்த செய்தி தினகரன்  செய்தித்தாளில் வெளியிடப்பட்டிருந்ததே? அதன் தற்போதைய நிலை என்ன?

graphic மு. மகேஷ்வரி அவர்களுக்கு வீடு கட்டித் தருவது குறித்து தினகரன் நாளிதழில் வெளிவந்த செய்தியின் படம்
 

ம: வீட்டிற்கான அடித்தளம் அமைத்துவிட்டு அணுகுமாறு ஆணை ஒன்றை வழங்கியுள்ளார்கள்., போதிய பணமின்மையால்  இன்னும் நாங்கள் அவர்களை அணுகவில்லை. ஊரடங்கு காலங்களில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கவந்திருந்த தன்னார்வலர்கள்  நாங்கள் வசித்துக்கொண்டிருந்த வீட்டின் மேல் தளம் உடைந்து  விழுந்துவிட்டிருந்ததைப் பார்த்து, பலர் இணைந்து தற்காலிகமாகக் குடிசை அமைத்துத் தந்துள்ளார்கள்.

 

ப: ஜூடோ விளையாட்டு தொடர்பில் தங்களது இலட்சியம் என்ன?

ம: சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தவறவிட்ட தங்க பதக்கங்களை பாரா ஒலிம்பிக் போட்டியில் வெல்லவேண்டும்.  இன்னும் பயிற்சிபெற்று, பல போட்டிகளில் பங்கேற்று, பதக்கம் வெல்லவேண்டும் என்பதற்காகவே நான் தொலைதூரக் கல்வியில் பயின்றுகொண்டிருக்கிறேன்.

வி: நடைபெறவிருக்கும் பாரா ஒலிம்பிக் போட்டியில் வெற்றிபெற வேண்டும். பார்வையற்ற மற்றும் பார்வையுள்ள பெண்களுக்குக் கற்பிக்க பெண் பயிற்றுநர் இன்மையால், நான் ஜூடோ பயிற்றுநராக உருவாக வேண்டுமென்பதே எனது ஆசை.

graphic மு. மகேஸ்வரி அவர்களின் படம்
மு. மகேஸ்வரி

ப: வாசகர்களுக்கு ஏதேனும் கூற விழைகிறீர்களா?

வி:  பார்வையற்ற பெண்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள கட்டாயம் ஏதேனும் ஒரு தற்காப்புக் கலையினைக் கற்றுக்கொள்ள முனையவேண்டும்.

ம: எங்களது வெற்றியை ஆவணப்படுத்தவும், உலகறியச் செய்யவும் முனைந்தமைக்காக நன்றி.

ப: உங்களைப் பற்றிய தகவலைப் பகிர்ந்தமைக்கு உங்கள் இருவருக்கும்   நன்றி. தங்களது தொடர் வெற்றிகளுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

 

விஜயசாந்தி அவர்களைத் தொடர்புகொள்ள vijayashanthijudo@gmail.com  

மகேஸ்வரி அவர்களைத்  தொடர்புகொள்ள mageshm1923@gmail.com

 

தொகுப்பு: பரிபூரணி

3 கருத்துகள்:

  1. தங்கப்பதக்கம் பெற்ற சிங்க மங்கயருக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. ஜெயராமன் தஞ்சாவூர்27 அக்டோபர், 2020 அன்று 9:09 PM

    புகழும் செல்வமும் வாழ்க்கையை அலங்கரிக்க

    இருவருக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு