தத்துவங்கள் ஏன் தோன்றுகின்றன? இந்தக் கேள்விக்கு பலதரப்பட்ட விடைகள் கிடைக்கின்றனவே தவிர, நேரடியான தெளிவான விடை கிடைப்பது அரிது. தத்துவத்தின் மீதான விளக்கம், ஆய்வு போன்ற பாரங்களால் அச்சு முறிகிறதோ! இறுக்கமான, அதிகப்படியான அடர்த்தியின் காரணமாக தத்துவமே மூச்சுத்தினறலில் தள்ளாடுகிறதோ! இப்படி பலபட யோசிக்கமுடியும்
ஒரு தத்துவத்தைப் பற்றி வரலாற்று மாணவர்கள் அடிக்கடி விவாதிக்கும் ஒரு விடயம், இந்தியாவில் தோன்றிய பௌத்தம் ஏன் இந்தியாவில் நிலைபெறவில்லை? சீனம், தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான், இலங்கை போன்ற நாடுகளில் எப்படி அது நிலைத்தது?
இதற்கான விடை மேற்கூறப்பட்ட நாடுகளில் அவை எளிமைப்படுத்தப்பட்டிருக்கின்றன. வேறு வகையில் சொன்னால் இந்தியாவில் அதன் இறுக்கம் நேரடியாக உணரப்பட்டது. அது இதுதான். சொல்வது எளிது செய்வது கடினம். ஆசையை ஒழிக்க வேண்டும் என்று புத்தர் சொன்ன போது அது ஒரு புதிய விடயமாக தோன்றிற்று. ஆனால், வாழ்வின் எதார்த்தத்தில் ஆசையை ஒழிப்பது என்பது சாத்தியமானதல்ல.
இந்தச் சித்தாந்த அடிப்படையில் காந்தியத்தையும், அதை வைத்து பின்னப்பட்ட இந்த நாவலையும் பார்க்கலாம். எளிமை மிகச் சிலருக்கே சாத்தியம் ஆனது. பலருக்கு அபிலாசைகளைக் கொன்று எளிமையைக் கடைபிடிப்பது என்பது சாத்தியம் அற்றது. தான் வளர்த்தெடுக்கப்பட்ட விதத்தில் அப்படியே காந்தியத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று யமுனா நினைக்கிறாள். ஆனால் கணவன் துரைக்கோ எதார்த்தத்திற்குள் நுழைந்து காந்தியத்தை முதுகில் சுமந்தபடி எதிர்நீச்சல் போடுவது கஷ்டமாக இருக்கிறது. இல்லாமையில் எளிமை வரும். இருக்கும்போது இருப்பதை ருசிக்க சராசரி மனிதனுக்கு ஆசை வரும். இதைப் புரிந்துகொள்ள முடியாததாலேயே யமுனா கஷ்டப்படுகிறாள்.
பாட்னா, கல்கத்தா, சென்னை என்று இந்தியாவின் பரந்துபட்டு சுற்றி, திரட்டிய காந்தியைப் பற்றிய கருத்துக்களையும், சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவின் சூழலையும் நாவல் என்னும் சரடு கொண்டு இணைத்திருக்கிறார் ராஜம் கிருஷ்ணன்.
வாயில் சோசியலிசத்தையும், செயலில் முதலாளித்துவத்தையும் கைச் சரக்காக வைத்துக்கொண்டு காந்தியைப் பற்றிய கூட்டங்களில் பேசித்திரியும் ‘மாதாஜி’ போன்றவர்களையும், அரசியல்வாதிகளைக் குற்றம் சொல்லிக்கொண்டு அனைத்து விதமான கெடுதல்களையும் தன் கை வசப்படுத்தி இருக்கிற ‘இந்துநாத்’ போன்ற கேடிகளையும், பிராமணனாக இருந்தும் மலைஜாதி பெண்ணை மணந்து, தன் மகளுக்கும் ஒரு மலைஜாதிப் பையனை மணம் முடித்து வைக்கும் ராம்ஜி - ருக்மணி போன்ற அசலான காந்தியவாதியையும் தன் நாவலில் உலவ விட்டிருக்கிறார்.
கதை நிகழ்வதாகக் காட்டப்படும் காலம் 1969 அன்றைய இந்தியச் சூழலில் கல்கத்தா போன்ற பகுதிகளில் நடந்த வன்முறை வெறியாட்டங்களைப் படம்பிடித்துக் காட்டும் ராஜம்கிருஷ்ணன் திராவிட இயக்கங்களின் மீதான தனது லேசான ஆதங்கங்களையும் நாவலின் ஊடாக ஓடவிடுகிறார்.
காந்தியத்தில் உள்ள நடைமுறைச் சாத்தியக்கூறுகளைக் கையில் எடுத்துக்கொண்டு, அதன் வழியே எதார்த்தத்தை உணர்ந்தவராக ஒருவர், தன் அரசியல் வாழ்க்கையை அல்லது சொந்த வாழ்க்கையை நடத்த முடியுமா? என்று சிந்திக்க காந்தியின் 150வது ஆண்டு விழா கொண்டாடும் இந்நேரத்தில் இந்நாவலை ஒரு மீள் வாசிப்புக்கு உட்படுத்திப் பார்க்கலாம்.
துரை அவ்வப்போது தன் ஜாதியையும், யமுனாவின் ஜாதியையும் சுட்டிப் பேசுவது ‘தலித்துக்கள் தாழ்வு மனப்பான்மையின் காரணமாக எதார்த்தத்தில் சமன்படுதலை ஏற்க மாட்டார்கள்’ என்கிற வாதத்தை முன் வைப்பது போல் உள்ளது தான் சற்று நெருடலாக இருக்கிறது.
சம்பா தன் கணவனுக்கு இரண்டாவது மனைவியாக வந்து பல பிள்ளைகளைப் பெற்ற பழங்குடி பெண். பாட்னாவில் யமுனாவுக்கு அறிமுகமாகி உதவி செய்யும் பெண்ணாக நிற்கிறாள். பதிலுக்கு யமுனாவோ சம்பாவின் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித் தருகிறாள். கர்ப்பவதியான யமுனா கணவனிடம் மகிழ்ச்சியை எதிர்பார்த்து ஏமாறுகிறாள்.
கல்கத்தாவிலிருந்து தன் கணவன் திரும்பி வந்திருப்பதாகக் கூறி, ஊறுகாய் போன்ற புளிப்பான பண்டம் ஒன்றை கொண்டுவந்து தரும் போது அதைத் தொட்டு நாக்கில் வைத்த யமுனா, கர்பத்தைக் கலைக்கச் சொன்ன கணவனையும், தன் பக்கத்தில் தன் தாய் இல்லாத ஏக்கத்தையும் ஒருசேர நினைத்து உருகும் நிலையாக ‘மாஜி’ என்றழைக்கும் சம்பாவைப் பார்த்து ‘சம்பா! இனி என்னை மாஜி என்று அழைக்காதே! பேட்டி என்று அழை’ என்று கூறும்போது அந்த நிகழ்வு நம்மையும் தொடத்தான் செய்கிறது.
தான் தூக்கி வளர்த்த குழந்தை யமுனா கண்ணத்தில் சரமாரியாக அடி வாங்குவதைப் பார்த்த பிறகும் ‘மோளே பொறுத்துக் கொள்’ என்று கூறி தான் வழிவந்த காந்தியத்தை நிலைநாட்ட பார்க்கும் ஜோசப் அம்மாவன் (பாபா) சத்தியத்தின் மீதும், காந்தியத்தின் மீதும் இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கும் மிகச் சிலரில் ஒருவர். சத்தியம் வெல்லும் என்பது உண்மையாக இருக்குமோ என்னவோ! ஆனால் எதார்த்தத்தில் அதன் தோல்வியைத் தரிசிக்க வேண்டியுள்ளது.
எது எவ்வாறாக இருப்பினும் இந்நாவலின் மூலம் இன்றைய கேள்விகளுக்கும் விடை தேட முயலலாம். சகிப்புத்தன்மை இன்மை, ஆடம்பரம், பலதரப்பட்ட மக்களிடையே இணக்கமான சூழல் போன்ற கேள்விகள் இன்று நம் முன்னே நின்று நம்மை பயமுறுத்தும் எதார்த்தங்கள் என்பது உண்மை தானே!
வேருக்கு நீர் - இந்திய அரசின் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நாவல் - ராஜம் கிருஷ்ணன் - நாம் தமிழர் பதிப்பகம்.
(கட்டுரையாளர்: ஓய்வுபெற்ற வரலாற்றுத் துறை பேராசிரியர். கோயம்புத்தூரில் வசித்துவரும் இவர், ‘காத்திருப்பு’, ‘நெருப்பு நிஜங்கள்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர். பல சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர்).
தொடர்புக்கு: sukumaran97@gmail.com
அருமையான பதிவு
பதிலளிநீக்குஓய்விற்கு பிறகும் ஓய்வில்லாமல் எழுதும் ஐயாவிற்கு வாழ்த்துகள்
வேருக்கு நீர் என்ற நூல் அறிமுகத்தின் மூலம்
பதிலளிநீக்குபுத்தக தாகத்திற்கு நீர் ஊற்றிய
உங்களுக்கு
நன்றி.