திரு. முத்துசாமி |
(பார்வையற்ற கல்லூரி மாணவர் - பட்டதாரிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் முத்துசாமி குறித்த இரங்கல் பதிவுகள்)
“வருவாண்டா பிரபாகரன் மறுபடியும்
அவன் வரும்போது சிங்கலவன் கத முடியும்
ஐயம் இருந்தா நீவிட்டுத் தள்ளுடா!”
அண்ணன் படையில் சேர்ந்து சுட்டுத்தள்ளுடா”
என்று முழங்கிக் கொண்டிருந்த அண்ணனின் அலைபேசி ஒலி காற்றில் கலந்து கரைந்துவிட்டது. நம் சமுதாயப் பற்றிலும் இன உணர்விலும் ஒரு வெற்றிடம் உருவாகிவிட்டது. நம் கூட்டு நினைவின் வழியாக அந்த வெற்றிடத்தின் அளவீட்டை அறிய வேண்டியது அவசியம்.
அண்ணனின் பள்ளி வாழ்க்கை 1979இல் சேலத்தில் தொடங்கியது. அவரின் சிறுவயது இயல்புகள் குறித்து அவருடைய வகுப்புத் தோழர் மாது அண்ணனிடம் பேசினேன். நான் அண்ணனின் பெயரைச் சொன்ன உடன் அவருடைய குரலில் இழப்பின் துயரம் தொற்றிக் கொண்டது.
“முத்துசாமியின் தோற்றம், உற்சாகம், அணுகுமுறை, நட்பு எல்லாம் மாறி மாறி நினைவுக்கு வருகின்றன. அந்தப் பருவத்திலேயே அவரிடம் பொறுப்புணர்வும், ஈடுபாடும், பங்கேற்பும் உரிமை உணர்வும் மிகுந்திருந்தன. நான் மாணவத் தலைவராக இருந்தேன். அவர் துணைத் தலைவராக இருந்தார். சில நேரங்களில் நான் மாணவர்களின் தேவைகளைக் கேட்கத் தயங்குவேன். ஆனால், அவர் துணிச்சலாகக் கேட்பார். அவரிடம் எதையும் அடைய வேண்டும் என்ற பிடிவாதம் இருக்கும். சூழ்நிலையை எடுத்துச் சொன்னால் உடனே புரிந்து கொள்வார். மார்கழி மாத பஜனைக்கு மாணவர்களை ஒழுங்குபடுத்தும் விதம் அவரின் செயல் திறனுக்குச் சான்று” என்று தொடர்ந்தது அவரின் பகிர்வு.
அண்ணன் பால்ராஜ், முத்துசாமி அண்ணனைவிட ஓராண்டு மூத்தவர். அவர் இரங்கல் கூட்டத்தில் பேசிய போது தன் கண்ணீரையும், குரல் கம்மலையும் கட்டுப்படுத்த முடியவில்லை.
“முத்துசாமிக்கும் எனக்கும் நாற்பத்தோராண்டு நட்பு. இந்த நட்பை நான் அளப்பறியதாகக் கருதுகிறேன். அவருடைய மறைவு எனக்குமட்டுமானதல்ல. என் குடும்பமே வருத்தத்தில் மூழ்கியுள்ளது.
சேலம் பள்ளியில் நாங்கள் இருவரும் ஒன்றாகத்தான் இருப்போம். இது உங்களுக்கே தெரியும். காலப்போக்கில் வட்டங்கள் பெருகியதால் எங்கள் நெருக்கம் கொஞ்சம் குறைந்திருக்கலாம். ஆனால் நட்பு அப்படியேதான் மலர்ந்தது. தேவைப்படும்போது அந்த நட்பின் விளைவை நாங்கள் இருவருமே பயன்படுத்திக்கொண்டோம்.தண்டையார் பேட்டையில் அவரும் அவருடைய இணையரும் எங்களோடு சேர்ந்து வாழ்ந்த நாள்களை மறக்க முடியாது.
அவரைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது. அவர் பிறருக்காகப் பணி செய்து தன்னையே இழந்துவிட்டார் என்பதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும். அவர் எதையும் கடமைக்காகச் சொல்பவரோ, செய்பவரோ அல்ல. நம் பள்ளியில் வழிபாட்டுக் கூட்டம் நடக்கும்போது விநாயகர் தொடங்கி ஒவ்வொரு சாமி பாடலையும் பாடிக்கொண்டே வருவோம். திடீரென அவர் உணர்வில் மூழ்கிச் சிலையாகிவிடுவார். அவர் பக்தியில் காட்டிய அதே ஈடுபாட்டைத்தான் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் செலுத்தினார்” என்று பால்ராஜ் அண்ணன் நினைவு கூர்ந்தார்.
பூவை விடுதியில் கிரிக்கெட் விளையாட்டும் சீட்டாட்டமும் பரவலான பொழுதுபோக்குகள். அண்ணன் இந்த இரண்டிலுமே ஆர்வத்துடன் பங்கேற்பார். அவரின் சீட்டாடும் திறன் தனித்துவமானது. நாங்களெல்லாம் ஆட்டத்தின் போக்கில் ஏதோ ஒரு சீட்டைப் போடுவோம். அவர் ஆட்டத்தை உன்னிப்பாகக் கவனிப்பார். எந்தெந்தச் சீட்டுகள் இரக்கப்பட்டுள்ளன? எந்தச் சீட்டு யாரால் இரக்கப்பட்டுள்ளது.? வெட்டை எப்படித் தவிர்ப்பது? குறைவான சீட்டுகளே இருந்தாலும் எப்படி வெற்றி பெறுவது? என்பதெல்லாம் அவருக்குத் தெரியும்.
பார்வையற்றோர் விளையாடுவதற்கென்றே சிறப்பாக உருவாக்கப்பட்ட ஒரு சீட்டு விளையாட்டு “904” இந்த விளையாட்டையும் அண்ணன் சிரத்தையாகவும் நுட்பமாகவும் விளையாடுவார். கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் அவருடன் இணைந்து “904 விளையாடத் திட்டமிட்டோம். அதை நிறைவேற்றவே முடியவில்லை. இனியாவது அண்ணன் பெயரில் நினைவுப் போட்டி நடத்தப்பட வேண்டும் என்பது எங்களின் விருப்பம்.
நாங்கள் சிறு வயதிலேயே வீட்டைவிட்டு விலகி விடுதியில் தங்குவதால் எங்களுக்குள் ஒரு உள்ளார்ந்த தோழமை உணர்வு இருக்கும். சிலருக்கிடையிலான உறவு மேலிட்டு உடன் பிறப்பு நிலைக்கு உயர்வதுண்டு. அப்படிப் பழகுபவர்கள் ஒரே விடுதியில் இருந்தாலும் பக்கம் பக்கமாகக் கடிதம் எழுதித் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வார்கள். நானும் அண்ணனின் தம்பியாகக் கடிதங்கள் எழுதியிருக்கிறேன்.
அண்ணன், நேரிலோ தொலைபேசியிலோ யாரையும் பெயரை மட்டும் சொல்லி அழைப்பதில்லை. தம்பி முருகேசன், தம்பி தனக்கோட்டி, தங்கை கமலா, சாந்தலிங்கம் அண்ணன் என்று உறவையும் சுட்டிதான் அழைப்பார்.
அண்ணனுக்குச் சமூகம் மற்றும் அரசியல் குறித்தான ஈடுபாடு அதிகம். கோடம்பாக்கம் விடுதியில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தை அறிமுகப்படுத்தியவரே அவர்தான். அக்கழகத்தால் வெளியிடப்பட்ட பாடல்களின் ஒலி நாடாக்களை அறையில் ஒலிக்கச் செய்வார். பலரும் அப்பாடல்களை மனப்பாடம் செய்து பாடிக்கொண்டு திரிந்தார்கள்.
பார்வையற்றோர் குறித்துப் பொதுமக்களுக்கு முழுமையான புரிதல் கிடையாது. எல்லா இடங்களிலும் தப்பான கற்பிதங்களே வெளிப்படும். மக்களின் தவறான எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் உரிய முறையில் அண்ணன் எதிர்வினையாற்றினார். அவர் எப்போதுமே பார்வை உள்ளவர்களிடம் ஒரு எள்ளல் தொனியிலேதான் நடந்துகொள்வார்.
அக்டோபர் நான்காம் நாள் ஞாயிறு அன்று சங்கம் அண்ணனுக்கு இரங்கல் கூட்டம் நடத்தியது. அதில் பேசியவர்களிலேயே அதிக நேரம் அழுதவர் கோபால்தான். ஐந்து நாள்களுக்குப் பிறகு அவரை அலைபேசியில் அழைத்தபோதும் அதே உணர்வில்தான் பேசினார்.
“நாங்க அஞ்சி சகோதரர்கள். அதில் மூத்த சகோதரர்தான் முத்துசாமி. நான் ஆறாம் வகுப்பில் சென்னையில் சேர்ந்தேன். அப்போது அண்ணன் பன்னிரண்டாம் வகுப்புப் படித்தார். எனக்கு முதலில் சேகருடன்தான் நட்பு ஏற்பட்டது. பிறகு ஏழுமலையுடனும் ரவீந்தருடனும் பழகினேன். தி.மு.கழகச்சார்பும், டி.ராஜேந்தர் பாடல்களின் ரசனையும், விஜயகாந்த் ரசிகர் மன்றமும் என்னையும் நண்பர்களையும் அண்ணனுடன் இணைத்தன. அவரின் பேச்சும் கொள்கைகளும் என்னைக் கவர்ந்தன. அந்த ஆண்டின் இறுதிக்குள் நாங்கள் ஐவரும் ஒன்னுக்குள் ஒன்னாகிவிட்டோம்.
எனக்குப் பதினோறாம் வகுப்பில் சேர்க்கை மறுக்கப்பட்டபோது நான் ராமகிருஷ்ணாவில் சேர அவர்தான் வழிகாட்டினார். என்னிடம் அவர் நடந்துகொண்ட அணுகுமுறையை நினைத்தால் மனம் பதறுகிறது. என் தேவைகளை நான் சொல்லாமலே தெரிந்து கொண்டார். அவற்றை நான் கேட்காமலே நிறைவு செய்தார். என்னிடம் அதிகம் பேசமாட்டார். ஓரிரு வார்த்தைகளிலேயே எனக்கான வழியை உணர்த்திவிடுவார். எப்போதும் என் மீது கோபப்பட்டதில்லை. எங்கள் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவர்தான் செய்தார். என் இணையருக்கும் பல உதவிகளைச் செய்திருக்கிறார். எங்களுக்கு வேலை கிடைத்து நாங்கள் ஊருக்கு வரும் வரை அவர் வீட்டில்தான் தங்குவோம்.
அவர் படிப்பில் திறமையானவர். முழுமையாகப் படித்திருந்தால் பெரிய இடத்திற்குச் சென்றிருப்பார். இப்படி எவ்வளவோ சொல்லலாம்” என்று நிறுத்தினார் கோபால்.
கோபாலின் இணையர் உசாவிடம் கேட்டேன். அவர் உருக்கமாகப்பேசினார். அவர் அண்ணனைப் பற்றி ஒவ்வொன்றாகச் சொல்லச்சொல்ல அண்ணன் மீதான மதிப்பு கூடியது. ஒரு கட்டத்தில் நானே கண் கலங்கிவிட்டேன்.
“முத்துசாமி அண்ணன் என்னைச் சொந்த தங்கையாக நடத்தினார். உடன் பிறந்த அண்ணனால் கூட அவர் அளவிற்குச் செய்ய முடியாது. நான் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த போது என் காதல் வீட்டுக்குத் தெரிந்துவிட்டதால் என்னைக் கல்லூரியில் சேர்க்க முடியாது என்று உறுதிபடச் சொல்லிவிட்டார்கள். அண்ணனின் விடா முயற்சியாலும் துணிச்சலாலும்தான் நான் கல்லூரியில் படித்தேன். அவர் என்னைத் தேடிக்கொண்டு ஊருக்கு வந்த நாளை என்னால் மறக்க முடியாது. ஒரு பெண்ணைப் பார்க்க வருபவரைப் பற்றி ஊர் மக்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் அவர் கவலைப்படவில்லை. என் குடும்பத்தார் திட்டியதை எல்லாம் அவர் பொருட்படுத்தவில்லை. என் அம்மா எவ்வளவோ மறுத்தும் அவர் விண்ணப்பத்தில் கையொப்பம் வாங்கினார்.
நான் கல்லூரியில் சேரும் நாளில் எனக்கு முன்னதாகவே ராணிமேரி கல்லூரிக்கு வந்துவிட்டார். என் அம்மாவும் மாமாவும் “என் பெயர் கெட்டால் அதற்கு நீதான் பொறுப்பு” என்று அண்ணனிடம் சொன்னார்கள். அண்ணன் தயங்காமல் உறுதியளித்தார். அவருடைய நிழலில்தான் நான் படித்தேன். எதைச் செய்தாலும் எங்கு சென்றாலும் அவர் அனுமதியைப் பெறுவேன். விடுதி இல்லாத நாள்களில் அவர் வீட்டில்தான் தங்கினேன்.
அவருடைய வியாபாரத்தில்தான் அவர் குடும்பம் நடந்தது. எத்தகைய வறுமையான நிலையிலும் அவருடைய உதவி மனப்பான்மை மாறவில்லை. அவர் தன்மீது சிறிது அன்பு வைத்தவர்களிடமும் ஆழமான அன்பு காட்டினார்.
அண்ணனின் இணையர் சுகுனா அக்காவும் அண்ணனைப் போலவேதான் நடந்து கொண்டார். அண்ணன் யாரையெல்லாம் நேசித்தாரோ அவரையெல்லாம் அக்காவும் நேசித்தார். அவர் வீட்டில் எத்தனை நாள் தங்கினாலும் அவர் முகம் சுழிக்கமாட்டார்.
அவருடைய உள்முகமான சொந்த விஷயங்களைக்கூட என்னிடம் பகிர்ந்து கொண்டார். அப்பொழுதுதான் அவர் என் மீது கொண்டுள்ள அன்பின் ஆழம் தெரிந்தது. அவருக்கு அடி பட்டதை என் உள்ளுணர்வு கனவாய் உணர்த்தியது.” என்று உசா அண்ணனைக் குறித்த தன் மனச் சித்திரத்தை வரைந்தார்.
நண்பர் ரவீந்தர், அண்ணனுடன் நெருக்கமான உறவைப் பேணியவர். அண்ணனின் வாழ்வியல் மதிப்பீடுகள் குறித்து அவர்சொன்னார்.
“தன் நலம், தன் வளர்ச்சி என்பதற்கு அவர் எப்போதும் முதன்மை அளித்ததில்லை. அவர் மற்றவர்களுக்காகச் செய்தவற்றில் நூறில் ஒரு பங்கு வேலையைத் தனக்காகச் செய்திருந்தால் கூட பெரிதாக முன்னேற்றம் அடைந்திருப்பார். அவருடைய விழுமியங்கள் வித்தியாசமானவை. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால்,நாமெல்லாம் படிக்காவிட்டாலும் எப்படியாவது தேர்ச்சியடைந்துவிட மாட்டோமா? என்றுதான் நினைப்போம். ஆனால் அவர், படிக்கவில்லை அதனால் தேர்வெழுதக்கூடாது என்று முடிவாய் சொல்லிவிடுவார். இப்படிப் பலவற்றைச் சொல்லலாம்.” என்று கூறினார்.
அண்ணன் சமயதுரை, முத்துசாமி அண்ணன் மீது உயிர் நேயம் கொண்டவர். அவரைச் சொந்த தம்பியைவிட அக்கறையாகக் கவனித்துக்கொண்டார். அண்ணனின் மறைவுச் செய்தி வந்த இருமுறையும் மானாமதுரையிலிருந்து சென்னை சென்று தன் அன்பை வெளிப்படுத்தினார்.
“அவன் படிப்பைவிட மற்ற விசயங்களில்தான் அதிக ஆர்வம் காட்டினான். பாட்டுக் கேட்பது, மன்றம் நடத்துவது, கட்சிக் கூட்டங்களுக்குச் செல்வது, விளையாடுவது இப்படித்தான் அவன் போக்கு இருந்தது. ஆனால், பழகுவதற்கு ஏற்றவன். அவன் காட்டிய பாசத்தில் நான் மயங்கிப் போனேன். அடிக்கடி அவனுக்குப் படிப்பின் அவசியத்தை உணர்த்துவேன். அவன் சொல்லும்போது சரி சரி என்று கேட்டுக் கொள்வான். அப்புறம் நினைப்பதைத்தான் செய்வான். மற்றவர்களுக்காக உதவி செய்வது அவன் ரத்தத்தில் ஊறிய உணர்வாகிவிட்டது. தன்னைப் பற்றிக் கவலைப்படாமல், கல்லூரி செல்லாமல், படிக்காமல் பெண் மாணவர்களுக்காகப் பல பணிகளைச் செய்திருக்கிறான். அவர்கள் கல்லூரியில் சேர, விடுதியில் சேர, கல்வி உதவித்தொகை பெற, பேருந்து பயண அட்டை பெற என்று அவர்களுக்குத் தேவையானவற்றையெல்லாம் செய்வான்.
அவனை நினைக்க எனக்கு வேதனையாக இருந்தது. நான் தளரவில்லை. மீண்டும் மீண்டும் “உன் படிப்பைப் பார்” என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் எனக்கு வேலை கிடைத்து நான் ஊருக்கு வந்துவிட்டேன். அப்புறம் ஐந்தாறு ஆண்டுகளுக்குத் தொடர்பே இல்லை. பிறகு பேசினான். அடிக்கடி தொடர்பு கொண்டு தகவல்களைப் பரிமாறிக் கொள்வோம்.
அவனைப் பார்ப்பதற்காகவே அவ்வப்போது சென்னை செல்வேன். சில நாட்கள் அவன் வீட்டில் தங்குவேன். அவன் மனைவியும் அன்பானவர். நேற்று பேசும்போதுகூட உங்க தம்பி இருந்தபோது பேசியதைப் போலவே எங்களிடமும் பேசுங்கள். தேவையான ஆலோசனைகளைக் கூறுங்கள் என்று சொன்னார்.” என்று சொல்லி பெருமூச்சு விட்டார்.
அண்ணன் கொழிஞ்சிநாதன் பூவையிலும் கோடையிலும் அண்ணனுடன் பழகியவர். எதைப் பற்றியும் சுவாரசியமாக விவரிக்கும் இயல்புடையவர். அண்ணனின் நினைவுகளைச் சிலாகிப்புடன் பகிர்ந்து கொண்டார்.
“பிறர் மீது அன்பு பாராட்டுவதிலும் மற்றவர்களுக்கு மரியாதை தருவதிலும் முத்துவுக்கு நிகர் அவர்தான். அவருடைய முதல் மரண அறிவிப்பு மாற்றப்பட்டு இன்னும் உயிர் இருக்கிறது என்ற செய்தி வந்த போது இந்த உண்மை நிலைத்துவிட வேண்டும் என்று விரும்பினேன்.
ஒரு கருத்தை அல்லது செய்தியை நகைச்சுவையாகச் சொல்வதிலும் பிறர் சொல்லும் நகைச்சுவையை ரசிப்பதிலும் அவர் முத்திரை பதித்தவர். “பட்டினியைத் தவிர்ப்போம். சமுதாயப் பற்றை வளர்ப்போம்” என்பதுதான் அவரின் தாரக மந்திரம். அவர் சில நேரங்களில் தவிர்க்கத்தக்க செயல்களில் ஈடுபடும் சூழல் நேரும். அப்பொழுது அவருடைய மனத்திற்குப் பிடித்த ஒருவர் அறிவுரை கூறினால் தன் தீவிரத்தை மெல்ல மெல்ல தனித்து இறுதியில் அந்தச் செயலையே கைவிட்டுவிடுவார்” என்று அவருடைய பண்புகளைச் சுட்டிக்காட்டினார். தனக்கும் அவருக்கும் இடையே நடந்த பல நகைச்சுவையான நிகழ்ச்சிகளையும் கடிதப் பரிமாற்றங்களையும் குறிப்பிட்டார்.
அண்ணனால் ஃபாதர் என்று அன்பாகவும் மதிப்பாகவும் அழைக்கப்பட்ட பேரா. பசுபதி, அண்ணனின் இழப்பால் பெருந்துயரடைந்தார். அது அவரின் உடல் நிலையையே பாதித்தது.
“முத்துசாமி முடிந்த வரை உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்க முற்படுவார். அதைவிட முதன்மையானது அவரின் துணிச்சல். இந்தப் பண்பு தற்போது மிகவும் அருகி வருகிறது. இது இருந்தால் நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும். முத்துசாமி எப்போதுமே துணிச்சலாகத்தான் இருப்பார். போராட்ட காலங்களில் பலருக்கும் காவல் துறையினர் தாக்கிவிடுவார்களோ என்ற அச்சம் இருக்கும். அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் முன் வரிசையில் நின்று போராடுவார். காவல் துறையினர் சிறிது அத்து மீறினாலும் உடனே அவர்களிடம் வாக்கு வாதம் செய்யவும் அவர்களின் தடி, தொப்பி முதலியவற்றைச் சேதப்படுத்தவும் தொடங்கிவிடுவார்.
அவரிடம் குறிப்பிடத்தக்க வகையில் எந்தத் திறமையும் வெளிப்படாவிட்டாலும் பல திறமைகள் இருந்தன. குறிப்பாக, அவர் பல கவிதைகளை எழுதி என்னிடம் காட்டியிருக்கிறார். அவர் லொயோலாவில் தொடர்ந்து படித்திருந்தால் நல்ல கவிஞராகியிருக்கலாம்.” என்று தன் உடனடியான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
நண்பர் நாகராஜன், அண்ணனுடன் நெருங்கிப் பழகியவர். “உதவும் மனப்பான்மை” என்ற பெயரில் பதிவு பெறாத அமைப்பில் அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களை நினைவுப்படுத்தினார்.
“பார்வையற்ற பெண்களுக்கு உதவி செய்வதுதான் அந்த அமைப்பின் நோக்கம். முத்துசாமி அண்ணனின் வழிகாட்டலில் நாங்கள் செயல்பட்டோம். சகாயராஜ் அண்ணன் தலைவராக இருந்தார். நான் அண்ணன் அழைக்கும் இடங்களுக்கெல்லாம் செல்வேன். அவர் சொல்லும் வேலைகளைச் செய்வேன். அதுவெல்லாம் ஒரு சுவையான அனுபவம். அண்ணனால் பலர் பயனடைந்திருக்கிறார்கள். சில வீடுகளில் பெண்களைக் கல்லூரியில் சேர்க்கமாட்டார்கள். அவர்களின் பெற்றோரிடம் பேசிக் கல்லூரியில் சேர்த்துவிடுவார். யார் யாருக்கு என்னென்ன தேவைகள் உள்ளனவோ எல்லாவற்றையும் செய்வார். எந்தப் பணியையும் நேரம் தவறாமல் செய்வார். நான் பலமுறை அவர் வீட்டிற்குச் சென்றிருக்கிறேன். அவரும் அண்ணியும் யாருடைய உதவியும் இல்லாமல் குழந்தைகளை வளர்த்த விதத்தைப் பார்த்து புலங்காகிதம் அடைந்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டார். அண்ணனின் வழிகாட்டலையும், உதவியையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்களின் பெயர்களை ஒவ்வொன்றாக நினைவுபடுத்தினார்.
அண்ணனின் தங்கையருள் ஒருவர் தன் நினைவுகளைச் சுருக்கமாகக் கூறினார். “என்னை மிகவும் பாதுகாப்பாகப் பார்த்துக்கொண்டார். என் குடும்பத்திற்கும் அவர் மிகவும் வேண்டியவர். என் தந்தை அவரை முதல் மகன் என்றுதான் சொல்வார். என்னுடைய வேலைகளையெல்லாம் அவரே செய்ததால் என் கல்லூரி வாழ்விலும் எனக்கு வெளி உலகமே தெரியாமல் ஆகிவிட்டது” என்றார்.
அண்ணனின் போராட்ட வாழ்க்கைத் தனித்துவமானது. எல்லாப் போராட்டங்களிலும் பங்கேற்பார். முதல் நபராக வந்துவிடுவார். முன் வரிசையில் நின்று போராடுவார். சோர்வின்றி இடைவிடாமல் முழக்கமிடுவார். சமரசம் ஏதுமின்றி, கேட்டதை எல்லாம் உடனே பெற வேண்டும் என்ற வேகம் இருக்கும். 1995இல் பேருந்து பயண அட்டை உரிமைக்காக நடந்த நீண்ட போராட்டத்தில் 86 பேர் சிறை சென்றோம். எங்களில் அண்ணனும் ஒருவர்.
அண்ணனின் பணிப் பரப்பில் முத்தாய்ப்பாக அமைந்ததும் எல்லோரையும் அவர் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வைத்ததும் அவர் ஏற்றிருந்த பார்வையற்ற கல்லூரி மாணவர்-பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் பொறுப்புதான். ஒரு வகையில் அவருடைய முடிவுக்கும் அதுவே காரணமாகிவிட்டது. அவரின் தலைமைத்துவத்தில் அனைவரும் அறிந்த சிறப்பு அவர் பின்பற்றிய சனநாயகப் பண்பு. தன் தலைமையை ஒரு அதிகாரமாகக் கருதாமல் ஆர்வமும் திறமையும் உள்ளவர்களைப் பணியாற்ற வைத்து அழகுபார்த்தார். கருத்தரங்குகளை நடத்துவது, வழக்குத் தொடுப்பது என்று பல புதிய முயற்சிகள் அவர் நிர்வாகத்தில் நடைபெற்றன.
சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் மகேந்திரன் இரங்கல் கூட்டத்தில் அவருடனான இறுதி உரையாடலைக் கண்ணீர் மல்க நினைவு கூர்ந்தார்.
“இந்த மாதச் செயற்குழு கூட்டத்தில் சங்கச் செயல்பாடுகள் தொடர்பாக எனக்கும் அவருக்கும் கடுமையான வாக்கு வாதம் நடந்தது. அதன் தாக்கம் என் மனத்திலிருந்து மறையவே இல்லை. அவர் கூட்டம் நடந்த இரண்டாவது நாளில் என்னை அழைத்தார். அவர் குரலில் அப்படி ஒரு வாதம் நடந்ததற்கான துளி அடையாளமும் இல்லை. “தம்பி உங்க பயண அட்டைய குடுங்க நான் புதுப்பித்துத் தருகிறேன்” என்றார். நான் வியப்படைந்தேன். என்னை நினைத்து வெட்கிப்போனேன். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அது அவருடைய பொதுப் பண்பு. எல்லோரிடமுமே அவர் அப்படித்தான் நடந்து கொள்வார்.” என்றார்.
மகேந்திரனிடம் சங்கத் தலைவர் என்ற முறையிலான அண்ணனின் அணுகுமுறை குறித்துக் கேட்டேன்.
“அவர் முதல் செயற்குழுக் கூட்டத்திலேயே தனக்கு எல்லாம் தெரியும் என்ற அதிகாரத் தோரணை இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். அவருக்கும் எங்களுக்கும் இடையில் தலைமுறை இடைவெளி, கூட்டணி பாகுபாடு எல்லாம் இருந்தன. அவற்றையெல்லாம் வெகு இயல்பாகக் கடந்துவிட்டார். எங்களுக்கிடையில் ஏற்படும் மாறுபாடுகளைக் கலைந்து அமைப்பு ரீதியாக ஒத்த கருத்தையும் செயல்பாட்டையும் வளர்த்தார். தனக்குத் தெரியாததையும் தன்னால் இயலாததையும் மற்றவர்களிடம் கேட்கத் தயங்கமாட்டார். தலைவர் என்றால், இதைத்தான் செய்ய வேண்டும். இதையெல்லாம் செய்யக்கூடாது என்றெல்லாம் பார்க்கமாட்டார். மேசை துடைப்பது உட்பட எல்லா வேலைகளையும் கூசாமல் செய்வார்.
எங்கள் நலனில் மட்டுமின்றி எங்கள் குடும்பத்தார் நலனிலும் அக்கறை காட்டினார். எங்கள் குடும்பத்தாரிடம் அலைபேசியில் பேசுவார். அந்த அணுகுமுறை நாங்கள் அதிக நேரம் வேலை பார்த்தாலும் எங்கள் வீட்டில் உள்ளவர்கள் சலிப்படையாமல் இருக்கப் பயன்பட்டது.
அவரிடம் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு உண்டு. எப்போதாவது கொதிப்பான சூழல் ஏற்பட்டால் உடனே ஒரு நகைச்சுவை சொல்லி அந்த நிலையைத் தணிப்பார். அவரை என் வாய்மொழித் தேர்வுக்கு வரவேண்டுமென்று ஒருமுறைதான் அழைப்பு விடுத்தேன். அவர் பல்வேறு சிரமங்களுக்கிடையே நண்பர்களுடன் காலையிலேயே வந்துவிட்டார். அடுத்த நாள் செயற்குழு கூட்டத்தில் என்னைப் பாராட்டி ஒரு தீர்மானமே நிறைவேற்றினார். அதை என்னால் மறக்க முடியாது.
அவர் சில நேரங்களில் எல்லை கடந்து சினமடைந்துவிடுவார். அதைக்கட்டுப்படுத்தி இருக்கலாம். அந்த சினமேதான் அவருடைய இறுதிக்கும் காரணமாகிவிட்டதோ என நினைக்க வேண்டியுள்ளது” என்று நீண்டன மகேந்திரனின் நினைவுகள்.
அண்ணன் தலைமையிலான செயற்குழுவில் ஈடுபாட்டுடன் பணியாற்றியவர் பாண்டியராஜன். அண்ணனின் தலைமைப் பண்புகளை அவர் உணர்ச்சிகரமாகப் பகிர்ந்து கொண்டார். “நான் பார்த்த வகையில் நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு நல்ல தலைவர் அவர்தான். அவரின் முதன்மையான பண்பு, கருத்து வேறு; நட்பு வேறு என்ற நிலைப்பாடு. அதனால்தான் அவரால் ஒருவரிடம் கடுமையான வாத எதிர்வாதங்கள் நடந்தாலும் உடனே இயல்பாகப் பேசவும், பழகவும் முடிந்தது. அவர் மற்றவர்களிடம் பணிகளை ஏவுபவராக ஒரு போதும் இருந்ததில்லை. எத்தகைய பணியானாலும் அவரே முன்னின்று செய்வார். பணிகளைத் தள்ளிப்போடாமல் குறித்த நேரத்தில் உரிய இடங்களுக்குச் சென்று செய்து முடிப்பார்.
யார் எந்தப் பணியைச் செய்தாலும் அவரின் பெயரைக் குறிப்பிட்டுப் பாராட்டுவார். கடுமையாகப் பணி செய்பவர்களின் உழைப்பை அங்கீகரிப்பார். வேலை கடுமையாகிவிட்டதா? இரவு நீண்ட நேரமாகிவிட்டதா? நான் எதாவதுசெய்யட்டுமா? யாரையாவது உதவிக்கு அனுப்பட்டுமா? முடியாவிட்டால் நிறுத்திவிடுங்கள் பார்த்துக் கொள்ளலாம் என்பது போல் அவருடைய பேச்சு இருக்கும். இத்தகைய பேச்சு நெருக்கடியான நேரத்திலும் ஒரு ஆறுதலையும், ஆசுவாசத்தையும் அளிக்கும்.
ஒரு முறை நானும் அவரும் வழக்குரைஞரைச் சந்திப்பதாகத் திட்டமிருந்தது. நான் மாலையில் சங்கத்திற்குச் சென்றதும் அவருடைய இணையருக்கு உடல் நலமில்லை என்று அறிந்தேன். நீங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டியதுதானே என்று கேட்டேன். “இல்லை, ஒப்புக் கொண்ட பணியை முடித்துவிடலாம் என்றார். நான் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தேன். அப்போது அவரின் பொறுப்புணர்ச்சி புரிந்தது.
ராமன் வீட்டு மனை புகு விழாவில் இரு குடும்பத்தினரும் சந்தித்துக் கொண்டோம். எங்களை அவர் வீட்டிற்கு அழைத்தார். நான் விளையாட்டாக உங்கள் மகன் திருமணத்திற்கு வருகிறேன் என்றேன். அவரின் இறுதிச்சடங்கிற்குச் சென்றபோது சொன்னதற்கு மாறாக நடந்துவிட்டதே என்று வருந்தினேன்.
அவர் ஒரு முறைதான் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார். குடும்பத்தார் எல்லோரின் மனத்திலும் இடம்பிடித்துவிட்டார். அவரைப் பொதுவாகப் போர்க் குணம் கொண்டவர். முரட்டுத்தனமானவர். தடாலடியானவர். என்றெல்லாம் சொல்கிறார்கள். அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், அதையெல்லாம் தாண்டி மற்றவர்கள் மீது அவரிடம் ஒரு நேயமும், அன்பும், பரிவும், இரக்கமும் ஊற்றெடுப்பதைப் பல நேரங்களில் பார்த்திருக்கிறேன்” என்று விவரித்தார்.
சங்கத்தின் துணைத் தலைவர் அரங்க ராஜாவிடம் அண்ணன் உங்கள் மனத்தில் எப்படி பதிந்துள்ளார்? என்று கேட்டேன். “போராட்டம், போராட்டம், போராட்டம் என்பதுதான் அவரின் குறிக்கோள். வலுவான போராட்டங்களால் கோரிக்கைகளை வென்றெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர் தலைவராகவே வந்தார். அவர் கல்லூரியில் சேர்ந்த நாள் முதல் எல்லாப் போராட்டங்களிலும் தீவிரமாகப் பங்கேற்றார். போராட்டங்களால் தனக்கு எந்தப் பயனும் கிடைக்காது என்பது அவருக்குத் தெரியும்.
அவரிடம் காட்டு மிராண்டித்தனம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.அது உண்மைதான். பார்வையற்றோருக்கு துரோகம் செய்பவர்களையும் அவர்களை ஏமாற்றுபவர்களையும் சும்மா விடக்கூடாது. அவர்களின் கண்களைக் குருடாக்க வேண்டும். அது அரசு அதிகாரியாக இருந்தாலும் சரி என்பதுதான் அவரின் செயல் துடிப்பாக இருந்தது. அவர் அரசு அலுவலகங்களில் நடந்துகொள்ளும் விதத்தை மேலோட்டமாகப் பார்த்தால் தப்பாகத்தான் தெரியும். ஆனால் என்னுடைய அனுபவத்தில் அத்தகைய செயல்பாடுகள் தேவையாகத்தான் இருக்கின்றன என்பதை உணர்ந்திருக்கிறேன். பொறுமை வழி அணுகுமுறையைவிட அது பயன் மிக்கதாக இருந்ததை நேரில் அறிந்திருக்கிறேன்.
மனிதர்களை மரியாதையாக நடத்துவது அவருடைய தனித்தன்மை. சான்றாக ஒருவர் மீது எவ்வளவு சினம் ஏற்பட்டாலும் தம்பி என்பது போன்ற உறவுச் சொல்லின் உச்சரிப்பில்தான் அதை வெளிப்படுத்துவாரே தவிர வேறு வார்த்தையைப் பயன்படுத்தமாட்டார்.
அவருடைய மரணம்கூட சமுதாயத்திற்குப் பாதுகாப்பற்ற பயணத்தை மேற்கொள்ளக்கூடாது என்ற அறிவை உணர்த்தி விட்டுதான் நிகழ்ந்திருக்கிறது.” என்றார் அரங்க ராஜா.
அண்ணனின் இறுதிச் செயல்பாட்டை உடனிருந்து அறிந்தவர் அவரின் பாசத்திற்குரிய தம்பி பழனிவேலு. அவரிடம் கட்டுரை எழுதுகிற செய்தியைச் சொன்னேன். உடனே அவரைக் குறித்த நினைவுகளில் மூழ்கிப் போனார்.
“எனக்கு அவரை இரண்டாண்டுகளாகத்தான் தெரியும். ஆனால், அவருடன் பத்தாண்டுகளுக்கு மேல் பழகிய நிறைவு இருக்கிறது. நான் அவரின் குடும்பத்தில் ஒருவனாகிவிட்டேன். நினைத்தபோதெல்லாம் அவர் வீட்டிற்குச் சென்றுவிடுவேன். அந்த அக்காவும் பாசமாக இருப்பார். அண்ணன் தன் குடும்ப நிகழ்வுகளையெல்லாம் என்னிடம் பகிர்ந்துகொள்வார். அவர் வாங்க இருந்த வீட்டைக்கூட என்னை அழைத்துச் சென்று காட்டினார். புது வீட்டுக்குப் போவதாகச் சொன்னவர் ஆறடி மண்ணுக்குப் போய்விட்டாரே” என்று வருந்தினார். தான் இதுவரை யாருடைய இழப்பிற்கும் இப்படி வருந்தியதில்லை என்று கூறி மேலும் தொடர்ந்தார்.
“அண்ணன் பிறரைக் கவனிப்பதில் எந்தக் குறையும் இருக்காது. கவுரவம் பார்க்கமாட்டார். வயது வேறுபாடின்றி எல்லோரிடமும் பழகுவார். எளிதில் பிறரைக் கவர்ந்துவிடுவார். அவர் யாரிடம் அறிமுகமாகிறாரோ அவர் நினைவில் நீங்காமல் இடம்பிடித்து விடுவார். தன்னுடைய பொருளையும், நேரத்தையும் மற்றவர்களுக்காகச் செலவிடுவார்”என்று கூறினார்.
இறுதி நாளன்று நீங்கள் பேருந்தில் சென்றபோது என்ன நடந்தது? என்று பழனிவேலிடம் கேட்டேன்.
“நான் சங்கத்திற்கு வரும் நாட்களில் மாலையில் நாங்கள் சங்கத்திலிருந்து கிளம்பும்போதெல்லாம் தம்பி இன்னக்கி எங்க? என்று கேட்பார். நான் அவர் வீட்டுக்கு வரவேண்டுமென்ற எதிர்பார்ப்பு அந்தக் கேள்வியில் இருக்கும். அன்றும் அப்படித்தான் தம்பி, இன்னக்கி எங்க? செவ்வாப்பேட்டையா? சிவந்தாங்கலா? என்று கேட்டார். எனக்கு வேலை இருந்ததால் வேறொரு நாளில் செவ்வாப்பேட்டை வருவதாகச் சொன்னேன். அவருடன் சென்றிருந்தால் இது நடந்திருக்காதோ என்ற எண்ணம் என்னை அரிக்கிறது.
நான் இறங்க வேண்டிய குமணன்சாவடியைத் தாண்டிதான் அவர் செல்ல வேண்டும் என்பதால் நாங்கள் இருவரும் சின்னமலையிலிருந்து பூவை செல்லும் பேருந்தில் ஏறினோம். நடத்துநரிடம் பேருந்து பயண அட்டையைக் காட்டினோம். அவர் அட்டை புதுப்பிக்கப்படாததால் பயணச்சீட்டு வாங்க வேண்டும்;அல்லது இறங்க வேண்டும் என்றார்.
அண்ணன் கொரோனா காரணமாகப் புதுப்பிப்புத் தேதி நீட்டிக்கப்பட்டிருப்பதைத் தெரிவித்தார். அதற்கான அரசின் கடிதத்தையும் காட்டினார். நடத்துநர் தான் சொன்னதையே திரும்பவும் சொன்னார். நாங்கள் பயணச் சீட்டு வாங்கிவிட்டோம். பயணச்சீட்டுப் பரிசோதகர் வந்தால் அவரிடம் முறையிடலாம் என்று நினைத்தோம். அவர் வந்தபோது நடத்துநர் எங்களை முந்திக்கொண்டு ஏதோ சொன்னார். நாங்கள் சொன்னதைப் பரிசோதகர் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
அண்ணன் ஆணையர் அலுவலகத்திற்கும், மாநகரப் போக்குவரத்து அலுவலகத்திற்கும் தொடர்பு கொண்டு பலரிடம் பேசினார். போக்குவரத்துத் துறை அலுவலகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி நடத்துநரிடம் பேசிப் பார்ப்பதாகச் சொன்னார். அண்ணன் அலைபேசியை நடத்துநரிடம் கொடுத்தார். நடத்துநர் அவரிடமும் தான் செய்தது சரியே என்பது போலப் பேசினார்.
அண்ணன் வழக்கு தொடுப்பதாகச் சொன்னார். சங்கத் தலைவருக்கே இந்த நிலை என்றால் மற்றவர்களின் நிலை என்னவாகும் என்று பேசிக்கொண்டோம். மக்கள் தொடர்பு அதிகாரியின் ஆலோசனைப் படி நாங்கள் பூவை பேருந்துப் பணிமனையில் புகார் செய்தோம். கிளை மேலாளரும் புகாரை உரிய நடவடிக்கைக்காகத் தலைமை அலுவலகம் அனுப்புவதாகச் சொன்னார்.
பிறகு அண்ணன் திருநின்ற ஊருக்கும் நான் சிவன்தாங்கலுக்கும் பேருந்து ஏறிவிட்டோம். விடைபெறும்போது அவர் குரலில் வழக்கத்திற்கு மாறான ஒரு சோர்வு தெரிந்தது” என்றார். அண்ணன் தனது இறுதிப் பணியையும் ஒரு போராட்டமாக அமைத்துச் சமுதாயத்திற்குப் பயன்பட்டுள்ளார்.
அவர் தன் சங்கத் தலைவர் பணி முடிந்ததும் செவ்வாப்பேட்டையில் ஒரு அறக்கட்டளை தொடங்கி மக்களுக்காகப் பணியாற்ற வேண்டுமென்ற திட்டம் வைத்திருந்தார்.
ஊரடங்கால் வியாபாரமும், தொழிலும் பாதிக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு அடிப்படைத் தேவைகள் கிடைக்க வழி செய்தார்.
செவ்வாப்பேட்டையில் உள்ள கண்ணன், அண்ணனுடன் பதினேழு ஆண்டுகளுக்கு மேலாகப் பழகினார். அவருடன் இணைந்து வியாபாரம் செய்துள்ளார். அவர் மேற்கொண்ட பல பணிகளுக்குத் துணையாக இருந்துள்ளார். அண்ணனின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
“அவர் வாழ்வின் முடிவில் என் வாழ்வில் ஒளி ஏற்றியுள்ளார். அவர் ஏற்பாட்டால் எனக்குக் கடை வைப்பதற்கான வண்டி லயன்ஸ்கிளப் மூலமாகக் கிடைத்துள்ளது. நானும் அண்ணனும் எங்கனாலும் ஒன்றாகவே செல்வோம். ஒன்றாகவே வியாபாரம் செய்வோம். எப்போதாவது நான் வர இரண்டு மணி நேரம் ஆகும் என்று சொன்னாலும் வரும் வரை காத்திருப்பார். சேவை மனப்பான்மை அதிகம். எதற்காக இருந்தாலும் முன்னால் நிற்பார். மக்களுக்கு எதாவது செய்ய வேண்டுமென்று சதா முயற்சித்துக் கொண்டே இருப்பார். மற்றவர்களுக்கான வேலை என்று வந்தால் தன் வேலையை அப்படியே ஒதுக்கி வைத்துவிட்டுச் சென்றுவிடுவார்” என்று குறிப்பிட்டார்.
செங்கல்பட்டு மாவட்ட மறுவாழ்வு மண்டல அலுவலகத்தில் பணியாற்றும் திரு குமார், அண்ணனின் மறைவை அறிந்து மிகவும் வேதனையடைந்தார். அவர் கடைசியாக என்னிடம் ஒரு மாணவரின் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் தொடர்பாகக் கடுமையாக வாதம் புரிந்தார். அதில் எனக்கு வருத்தமில்லை. அவர் ஒரு போராளி. அவருடைய மறைவு குடும்பத்திற்கு எத்தகைய இழப்போ அதே அளவு இழப்பு சமுதாயத்திற்கும் உண்டு” என்றார்.
சங்கம் நடத்திய இரங்கல் கூட்டத்தில் அண்ணனின் அக்காள் மகன் ரகுநாதன் பேசினார். “நான் மாமாவை முப்பது ஆண்டுகளாக அறிவேன். அவரால் நான் பல பயன்களை அடைந்திருக்கிறேன். சுருக்கமாகச் சொன்னால் என் முன்மாதிரியே அவர்தான். அவர் என்னிடம் பல உதவிகளைக் கேட்டிருக்கிறார். அவையெல்லாம் அவருக்கானவையல்ல. அவருடைய பார்வையற்ற சமுதாயத்திற்காகத்தான். அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க நான் பல நண்பர்களுக்குத் தேர்வெழுதுவது உட்பட பல பணிகளைச் செய்திருக்கிறேன். அவரின் நினைவாய் என் பணிகள் தொடரும்” என்றார்.
அண்ணனுக்குத் தமிழினப் பற்று மிகுதி. தனித் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்பது பெருவிருப்பம். பிரபாகரன் உயிருடன் இருப்பார் என்றும் அவர் மீண்டும் போருக்கு வருவார் என்றும் அவர் நம்பினார். தான் சார்ந்த அரசியல் கட்சி, தமிழின விடுதலையில் உரிய முறையில் நடந்துகொள்ளாததால் அதிலிருந்து வெளியேறி இன உணர்வு உள்ள வேறொரு அமைப்பில் இணைந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் என்னிடம் நேதாஜியின் வாழ்க்கை வரலாற்றை ஒலிப்பதிவு செய்து கொடுக்கச் சொன்னார். அதை நான் செய்யவில்லை.
சேலம் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இணைந்து உருவாக்கிய தாய் பள்ளி அமைப்பின் உருவாக்கத்திற்கும் பள்ளித் தரம் உயர்த்தப்படுவதற்கும் அண்ணன் தனக்கான பங்கை ஆற்றியிருக்கிறார். தாய் பள்ளி அமைப்பின் நிகழ்ச்சியில் அண்ணன் தன்னை அறிமுகப்படுத்தும்போது “செவ்வாப்பேட்டையில் படித்தேன்; செவ்வாப்பேட்டையில் இருக்கிறேன்” என்று சொன்னார். அதுவெல்லாம் இப்போது நினைவுக்கு வருகிறது.
அண்ணனின் குடும்ப ஈடுபாடு குறித்துப் பலரும் சொன்னார்கள். அவருடைய சமுதாய ஆர்வத்தால் குடும்பப் பணிகள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொண்டார். சமையல் உட்பட குடும்பத்தின் அன்றாடப் பணிகளைக் கவனித்தார். அனைத்து முடிவுகளையும் அவர்தான் எடுத்தார். அவரின் மறைவை அவருடைய இணையரால் தாங்க முடியவில்லை. அடிக்கடி மயக்கமடைந்தார். தற்கொலைக்குக்கூட முயன்றார்.
சில நேரங்களில் ஒரு மனிதனின் மரணத்தைவிட அந்த மரணம் நிகழ்ந்த சூழல் முதன்மை பெற்றுவிடுவதுண்டு. அண்ணனின் மரணத்திற்கான காரணம் இயற்கையாகவோ தொற்றாகவோ இருந்திருந்தால் எங்கள் துயரத்தின் தன்மை வேறுபட்டிருக்கும். அவர் மரணம், அறிய முடியாத விபத்தால் நிகழ்ந்துவிட்டது என்பதுதான் எங்கள் வேதனையை மிகுவிக்கிறது. வழக்கு விசாரணை முழுமையாக நடத்தப்பட்டு உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் ஒவ்வொருவரின் ஆதங்கம்.
அண்ணனின் மானுட நேயம் தன்னைத்தாண்டி, குடும்பத்தைத் தாண்டி, உறவினர்களைத் தாண்டி, நம் சமுதாயத்தைத் தாண்டி, தமிழினத்தைத் தாண்டி, மனித குலத்தை அளாவி நிற்கிறது. அவரின் மனப் பார்வையால் நாமும் மானுடத்தை நோக்குவோம்.
(கட்டுரையாளர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார்)
தொடர்புக்கு: salaitamil2014@gmail.com
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் நடத்திய இரங்கல் கூட்டத்தை மீண்டும் கேட்ட உணர்வு. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் நடத்திய இரங்கல் கூட்டத்தை மீண்டும் கேட்ட உணர்வு. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் நடத்திய இரங்கல் கூட்டத்தை மீண்டும் கேட்ட உணர்வு. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமறைந்த பிறகு மறக்கமுடியாத இழப்புகள் ஏராளம் உண்டு அதில் இவரது இழப்பு மன பிம்பத்தில் இருந்து அழிக்க முடியாத ஒன்று. ஏனோ அவரது மரணம் நிகழாமல் இருந்திருக்கலாம் என்றுதான் இந்த நொடி வரை எண்ணிக் கொண்டே இருக்கிறேன் தவிப்போடு. காரணம் அவரின் இணையர் ஆக இருக்கலாம், அவர்தம் பிள்ளைகள் இனி என்ன செய்வார்கள் என்பதை எண்ணியதாக இருக்கலாம், இந்த சமூகத்தின் மீது தீராப் பற்றுக் கொண்ட ஒருவர் மறைந்துவிட்டார் என்பதனாலும் இருக்கலாம், எல்லோரும் அழுத்தமாக பதிவு செய்தது போல இதுபோன்ற ஒரு போராளியை பலதரப்பட்ட நட்புகளையும் உறவுகளையும் பேணிய ஒரு மனிதரை இனி காண முடியாது என்பதாலும் இருக்கலாம். இரண்டு ஆண்டுகள் அவருடன் அவரின் தலைமையின் கீழ் பணியாற்றிய நாட்கள் ஒருபோதும் என்னால் மறக்கவே இயலாது. எத்தனை மனிதர்களை தவிக்க விட்டுவிட்டு அவர் சென்று இருக்கிறார் என்பதை உணர்த்திய நல்ல தொகுப்பு இங்கே பதிவேற்றம் பட்டிருக்கிறது அண்ணன் முருகேசன் அவர்களால். அவர் எழுத காரணமாக இருந்த ஆசிரியர் குழுவிற்கும் எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன். அவரின் வாழ்வும் மரணமும் உணர்த்திய செய்திகள் ஏராளம் இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. இனி சங்கம் முன்னெடுக்கும் ஒவ்வொரு போராட்டத்திலும் முயற்சியிலும் அண்ணன் நினைவு கூறப்படுவார் மதிக்கப்படுவான்.
பதிலளிநீக்குஅண்ணன் அவர்களின் மறைவை மனம் ஏற்க மருக்கிறது
பதிலளிநீக்குவேதனை அதிகரிக்கிறது
அவரது மறைவிற்கு நீதி கிடைக்க வேண்டும்
அண்ணனின் மறைந்த நாள் அக்டோபர் 21 என்பதாக இங்கு குறிப்பிடப் பட்டிருக்கிறது அதை அக்டோபர் 1 என்று மாற்றி பதிவிட இயலுமா என்று ஆசிரியர் குழு முயல கேட்டுக்கொள்கிறேன்
பதிலளிநீக்கு