பதிவு: பாடுநிலாவும் பார்வை மாற்றுத்திறனாளிகளும் - பரிபூரணி

         

graphic S.P. பாலசுப்ரமணியம் அவர்களின் படம்

            இசையால் மனிதன் வாழ்ந்துகொண்டிருக்கிறான்; மனிதனால் இசை வாழ்ந்துகொண்டிருக்கிறது.  மனித வாழ்வில் பின்னிப் பிணைந்து, வளர்ந்து, நம்மையும் வசீகரித்து வாழவைத்துக் கொண்டிருக்கிறது இசை. தனிமையில் துணையாய், வருந்தும் மனதிற்கு மருந்தாய்,  பரிதவிப்பில் பங்கேற்பாளராய், எல்லாருக்கும், எல்லா நிலைகளிலும், எல்லா உணர்வுகளிலும், உடனிருந்து, எல்லையற்ற இன்பத்தை  வழங்குவது இசை. அதிலும் குறிப்பாக பார்வையற்றவர்களுக்கு அடிப்படைத் தேவைக்கும், பொழுதுபோக்கிற்கும் இடையிலான இன்றியமையாத இடத்தைப் பெற்றிருக்கிறது இசை. அத்தகைய கணக்கிட இயலா எண்ணற்ற  கானங்களின்வழி காதுகளில் நுழைந்து கனம்கனம் நம்மைக் கவர்ந்தவர்களுள் முதன்மையானவரும், முக்கியமானவருமான ஆளுமை அமரர் ஸ்ரீபதி பண்டிதராதியுலா பாலசுப்ரமண்யம் அவர்கள்.

       ஐம்பத்துநான்கு ஆண்டுகால இசைப் பயணம், ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள், நான்கு மொழிகளில் நாற்பத்தைந்து திரைப்படங்களுக்கு மேல் இசையமைப்பு, தென்னிந்திய மொழிகளில் 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிப்பு, பல முன்னணி நடிகர்களுக்குப் பின்னணிக் குரல்,

        பக்திப் பாடல்களுக்கான அரிவராசனம்" விருது, ஆறு தேசிய விருதுகள், பத்மபூஷன், பத்மஸ்ரீ, கலைமாமணி, இருபத்தைந்து முறை நந்தி விருது, கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடிப்பு, மாநில அரசுகளின் பல விருதுகள், 11 மணிநேரத்தில் 21 கன்னடப் பாடல்களையும், ஒரே நாளில் தமிழ் மொழியில் 19 பாடல்களையும், ஆறு மணி நேரத்திற்குள் இந்தி மொழியில் 16 பாடல்களையும் பாடி பதிவுசெய்த சாதனை, தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஆந்திர மாநிலத்தின் தூதர், பாரத ரத்ணா விருதுக்கு பரிந்துரைப்பு  என்று சாதனைகளின் வரிசை நீண்டுகொண்டே செல்லும் பன்முகத்திறன் வித்தகர். 

      இவர் இந்தியத் திரையிசையில் செழுமையான வாழ்க்கையை மிகக் கடின உழைப்பால் உருவாக்கிக் கொண்ட தனிப்பெரும் சகாப்தம் என்றால் மிகையல்ல.

      திரையில் தோன்றும் நடிகர்களது அசைவுகளைத் தமது தேன்மதுரக் குரலால்  வெளிப்படுத்தியவர். ஏற்ற இறக்கம், வெட்கம், சிரிப்பு,  சோகம், இன்பம் உள்ளிட்ட நவரசங்களையும்  கண்களை மூடிக் கேட்டாலும் உணரும்வண்ணம் பாடுவதில் ஈடு இணையற்றவர்.  தமிழ்மொழி உச்சரிப்பு சரியில்லை என்ற காரணத்திற்காக முதன்முதலில் புறக்கணிக்கப்பட்டவர்; பின்பு, மொழி நுணுக்கங்களை முறையாகக் கற்று, தமிழில் டண்ணகர வும், றன்னகரவும்கூட வேறுபடுத்தி அறியக்கூடிய அளவிற்கு நுணுக்கமாகப்  பாடி, அரை நூற்றாண்டு காலத்திற்குமேல் தமிழகத்தில் தனது குரலால் ஆட்சிசெய்த மாட்சிமை பொருந்திய  முடிசூடா மன்னன்.

   இவரது பாடல்களுக்கிணையாய் பண்புகளாலும், கானங்களுக்கிணையாய் குணங்களாலும் மக்களது உள்ளத்தில் நீங்காது  நிலைகொண்டிருக்கிறார்; பன்மொழிகளில் பன்முகத்திறன் பெற்றிருந்தபோதும், பிறர் திறன் பாராட்டும் பண்பிற்கு, பாங்கிற்கு, பக்குவத்திற்கு  இவருக்கு நிகர் இவரே; இளைய, ஏனைய, இணை பாடகர்களை எளிமையாக அணுகி, தயக்கமற்ற தகுந்த இன்பமான சூழலை உருவாக்கும் தகைமை; திரைப்பட இயக்குநரது கதை, கவிஞர்களின் வரிகள், இசையமைப்பாளர்களின் வாத்தியங்கள், பாடகர்களின் குரல், பாடும் திறன், ரசிகர்களின் ரசனை  இவையனைத்தும் இணைந்தே ஒரு பாடலுக்கான வெற்றியை நிர்ணயிக்கின்றன எனவே எந்த பாடலுக்கும் எவரும் சொந்தம் கொள்ள இயலாது என்பதை ஒவ்வொருமுறை விருது பெறும்போதும் தவறாது, தீர்க்கமாக எடுத்தியம்பி எந்த விருதையும் தன்னுடையதாக்கிக் கொள்ளாத தகைமை; விமர்சனமற்ற பிரபலம்; தனது ரசிகர்மன்றத் தொண்டு நிறுவனத்தின் வழியாக தொடர்ந்து சமூகத்தில் நலிவுற்ற மக்களுக்கு உதவுதல்.

https://spbindia.com/charitable-foundation/about-the-foundation/

இப்படியெல்லாம் அடுக்கிக்கொண்டே போகலாம் அவரது குணநலன்களை.      

      இந்த வரிசையில் பாடும் நிலா பாலு அவர்கள் பார்வையற்றவர்களுடனும் தனது பாசத்தைப் பகிர்ந்திருக்கிறார். மேடைக் கச்சேரிகளிலும், தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளிலும் பங்குபெறும் பார்வையற்றவர்களுடன் தயக்கமற இணைந்து பாடுவார்; ஆத்மார்த்தமாகப் பாராட்டுவார். அத்தகைய பாக்கியம் பெற்றவர்களில் சிலரது பகிர்வுகளைத் தொகுத்தளித்துள்ளேன்.

       1980-களில், வார இறுதி நாட்களில் சென்னை சிறுமலர் பார்வையற்றோர் பள்ளி மாணவர்களுக்கு உணவளித்து வயிற்றுக்கு விருந்தும், பாடல்கள் பாடி செவிக்கு  விருந்தும் வழங்கி தனது ஓய்வு நேரத்தைச் செலவிட்டு, மகிழ்வித்து, மகிழ்வடைந்துள்ளார் . தோழரைப் போல் பழகும் பண்புடைய பிரபலத்தைப் பார்த்ததில் மிகுந்த பெருமையடைவதாக அந்தக் காலத்தில் அப்பள்ளியில் பயின்றவர்கள் பெருமிதம் கொள்கிறார்கள்.

      இசை உலக சிரஞ்சீவியான அவர்   இசையமைத்து, கதாநாயகராக நடித்த சிகரம் என்னும் திரைப்படத்தின் இறுதிப்பகுதியில், கதாநாயகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது போலவும், சிறுமலர் பார்வையற்றோர் பள்ளி பாலகிகள் மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்த்து, பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து, ‘வண்ணம் கொண்ட வெண்ணிலவே’ என்னும் பாடலைக் குழுவாக இணைந்து பாடுவது போலவும் காட்சியை அமைத்திருப்பார். படப்பிடிப்பின்போதும் மிக எளிமையாக அனைவரிடமும் அன்போடு அரவணைத்து, வரிகளைக் கற்றுத்தந்ததாக அவர்களது நினைவுகளை மகிழ்ச்சியாகப் பகிர்கிறார்கள் திருமதி ஈஸ்வரி ராமு அவர்களும் செல்வி சியானா அவர்களும்.  

      1993-ஆம் ஆண்டு  சிறுமலர் பார்வையற்றோர் பள்ளியில் ஒவ்வொரு விழாவிற்கும் ஒவ்வொரு பாடல் என்ற விதத்தில் சிறுமலர்களின் கல்விச் சோலையிலே என்னும் ஆல்பம்  வெளியிடப்பட்டது.  இதில், ஆசிரியர் தினவிழா பாடலை ஸ்வர்ணலதா அவர்களும், பெற்றோர் தின விழா பாடலை வாணி ஜெயராம் அவர்களும், ஆண்டுவிழா பாடலை மனோ அவர்களும், சுதந்திர தினவிழா பாடலை மலேசியா வாசுதேவன் அவர்களும் பாடியிருந்தார்கள். பிரியாவிடை நிகழ்விற்கான மலர்களே மலர்களே நட்பில் மலர்ந்த மலர்கள் நாம் மனதிலே அன்பைச் சுமந்து பிரிகின்றோம்  என்ற பாடலைத் தனது காந்தக் குரலால் பாடியிருப்பார் நமது பாட்டுத் தலைவர். பெரும்பாலும் பிரியாவிடையென்றால் முஸ்தபா முஸ்தபாவும் பசுமை நிறைந்த நினைவுகளேஎன்கிற  பாடலுமே மனதில் ஒலிக்கும். ஆனால், சிறுமலர் பள்ளி மாணவர்களுக்கு  மட்டும் மாசி மாதம் வந்துவிட்டால் நினைவிற்கு வருவது இந்தப் பாடல்தான். ‘தான் சிறுவயதில் பள்ளியிலும், விடுதியிலும் சேர்ந்த காலத்தில் தனக்கு  வழிகாட்டிய தமயன், தமக்கைகளின் பிரிவை எண்ணி  மனதுருகும் இளையவர்களுக்கும், பள்ளி நினைவுகளை மட்டும் தாங்கி, பயின்ற பள்ளியை விட்டு பிரிந்து செல்லவிருப்பவர்களின் உணர்விற்கும், தனது குரளால் உயிர்கொடுத்திருப்பார் எஸ்பிபி.

      “மலர்களே! நட்பில் மலர்ந்த மலர்கள்  நாம்;

      மனதிலே அன்பைச் சுமந்து பிரிகின்றோம்;

      இறுதி ஆண்டு இனிது முடிந்தது மலர்களே!

      இனியும் அந்த வசந்தம் வருமோ மலர்களே!

      கல்விப் பாடங்களை நாம் சேர்ந்து படித்துவந்தோம்,

      பாடல்கள் ஆடல்களில்  நாம் கலந்து மகிழ்ந்துவந்தோம்.

      எச்சில் என்பதே நம் உணவில் இருந்ததில்லை;

      ஏற்றத் தாழ்வுகளை நம் உள்ளம் அறிந்ததில்லை;

      வாழ்க்கை சோகங்களைச் சுவைத்துப் பார்த்ததுண்டா!

      கல்விச் சாலையிலே கவலை தெரிந்ததுண்டா!

      இதயம் பழைய நினைவில் கரையுது மலர்களே!

 

      கல்விக்கண் திறந்த அழகு கோவில் இது.

      பறந்து நாம் திரிந்த வண்ணச் சோலையிது.

      அள்ளி  அரவணைத்த அன்னை தந்தையரின்

      கனவை நனவாக்க நாம் தொடரும் பயனமிது.

      கைகள் நாம் குவித்தே, விழியில் நீர் துடைத்து,

      வாழும் காலமெல்லாம்  நன்றி கூறிடுவோம்”.

       என்ற திரு. அருள்ராஜ் ஜானி அவர்களின் இசையமைப்பிற்கும், வரிகளுக்கும் உரு கொடுத்து, உணர்வளித்து, உளம் உருகும்படி, தனது தேன்மதுரக் குரலால் இசைத்திருப்பார்.

பாடலைக் கேட்க இந்த  இணைப்பைச் சொடுக்குங்கள். 

       1997- ஆம் ஆண்டு  சென்னை எழும்பூரில் அமைந்துள்ள நற்பணிக் கழகத்தில் நடைபெற்ற இசைப்போட்டியின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த இந்த இசை இமையோண் பரிசு பெற்றவர்களைப் பாராட்டி, புனித லூயி பார்வையற்ற பள்ளி மாணவர்கள் இசைக் கருவிகள் வாசிக்க, அவர்களுடன் இணைந்து பாடல்கள் பல பாடி, மனம் நெகிழ்ந்து வாழ்த்தியுள்ளார்.

graphic ப்ரவீனா அவர்களின் படம்
ப்ரவீனா

       சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கிடையிலான இசைப்போட்டியில் முதல் பரிசு பெற்ற ப்ரவீனா என்னும் பார்வையற்றவரை வாழ்த்தி, அவருக்காக நலம் வாழ என்னும் பாடலைப் பாடி, மகிழ்வித்திருக்கிறார்.

graphic திரு இளங்கோ அவர்களின் படம்
திரு இளங்கோ

       ஜாய் ஆலுக்காஸ் மற்றும் ரேமண்ட் ஷூஸ் விளம்பரங்களுக்குப் பின்னணிக் குரல் வழங்கியுள்ள திரு. இளங்கோ  என்னும் பார்வையற்றவர் எஸ். பி. பி அவர்களது குரலில் பாடும் திறன்கொண்டவர். தொடர்ந்து பதினாறு மணி நேரம் நடைபெற்ற லிம்கா புக் ஆப் ரெகார்ட் என்னும் இசை நிகழ்ச்சியில் அதிக பாடல்களை திரு இளங்கோ அவர்கள் பாடினார். அந்நிகழ்ச்சிக்கு வாழ்த்துரை வழங்க சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த எஸ்.பி.பி. அவர்கள் ஒரு பாடலுக்கு ஆடியோ சரியாக அமையாததினால், அவரே அந்த ஒலிக் கருவியை இயக்கியிருக்கிறார். மேலும், நல்லவேளை  நீங்கள் திரைத்துறைக்கு வரவில்லை என்று புகழ்ந்து,  உச்சிகுளிர மெச்சியுள்ளார். சிவா  Foundation விருதினை இருவரும் ஒரே மேடையில் பெற்றதையே தனது வாழ்நாள் சாதனையாகக் கூறி பெருமிதம் கொள்கிறார் திரு இளங்கோ அவர்கள்.

graphic திருமதி. ஈஸ்வரி அவர்களின் படம்
திருமதி. ஈஸ்வரி

        கோமகன் என்ற பார்வை மாற்றுத்திறனாளி  இசைஞரின் ‘ராக பிரியா’ என்னும் இசைக்குழுவால் காமராஜர் நினைவரங்கத்தில் நடத்தப்பெற்ற ஐம்பது மணிநேர தொடர் இசை  கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சிக்கு வருகைபுரிந்திருந்த எஸ். பி பி அவர்கள் பார்வையற்ற பாடகர்களைப் பாராட்டி,  எந்த ஒரு குறிப்பும் கையில் இல்லாமலே, இவ்வளவு அழகாகப் பாடுகிறீர்கள். நீங்கள் எல்லாம் இன்னும் அதிக பாடல்களைப் பாடவேண்டும் என்று மனம் குளிர வாழ்த்தினார்.

       அந்த இசைக் குழுவின் தலைவர் திரு ஜெ.சி. கோமகன் அவர்களது கோரிக்கைக்கிணங்க, 2000 ஆம் ஆண்டு காமராஜர் நினைவரங்கத்தில் நடைபெற்ற இன்னொரு இசைக் கச்சேரியில் எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்கள் சுத்தி சுத்தி வந்தீக என்னும் பாடலை திருமதி. ஈஸ்வரி அவர்களுடனும், காதலென்னும் தேர்வெழுதிஎன்னும் பாடலை திருமதி சுசீலாவுடனும், அந்திமழை பொழிகிறது என்னும் பாடலை திருமதி. பிரவினாவுடணும்  இணைந்து பாடி, தனது மேடையைப் பகிர்ந்திருக்கிறார்.

       இடையில் ஒரு விபத்தில் தனது பார்வையை இழந்த  இலங்கையைச் சேர்ந்த ரசிகரை நேரில் சென்று பார்த்து, இன்ப அதிர்ச்சி அளித்து, பாடல்கள் பாடி, அவரையும் இணைந்து பாடவைத்துள்ளார். அஞ்சலி அஞ்சலி என்னும் பாடலை பாடி, “நண்பா! உனக்கு நண்பாஞ்சலி” என்று கூறி அவரை மகிழ்வித்துள்ளார்.

graphic சகானா அவர்கள் கீபோர்டுடன் அமர்ந்திருக்கும் படம்
சகானா

      ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘சரிகமபா லிட்டில் ச்சாம்ப்ஸ் ஜூனியர் சீசன் 2’ நிகழ்ச்சியில் பங்கேற்ற சகானா என்னும் பார்வையற்ற சிறுமி ‘தென்மதுரை வைகை நதி’ என்னும் பாடலைப் பாடும்போதும், ஆறு பாடல்களின் மெட்லியை கீ போர்டில் வாசித்தபோதும், அவரைக் கொஞ்சிப் பாராட்டியிருக்கிறார். சிறுமியைக் கீ போர்டில் ‘என் காதலே என் காதலே’ என்னும் பாடலை வாசிக்கச்சொல்லி, உடன் பாடினார். “இசை ஜாம்பவான் திரு எஸ். பி. பி. அவர்களிடமிருந்து கி போர்டினை பரிசாக பெற்றதில் பெருமகிழ்ச்சி” என்கிறார் சிறுமி சஹானா.

graphic அமர்நாத் அவர்களின் படம்
அமர்நாத்

       ஜெயா தொலைக்காட்சியில் ‘என்னோடு பாட்டுப் பாடுங்கள்’ நிகழ்ச்சியை நடத்திய எஸ்.பி.பி அவர்கள் எல்லாப் போட்டியாளர்களையும்  தலையசைத்து வரவேற்ற வேளையில் அமர்நாத் என்ற பார்வை மாற்றுத்திறனாளியை நலம் விசாரித்து, தோள்மீது கைபோட்டு வரவேற்று ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். மேலும், அவரது திறமையைக் கண்டு வியந்த பாடும்நிலா அவருக்குச் சிறந்த பாடகராக, இசையமைப்பாளராக உயர்வதற்கென பல ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். 2 முறை எஸ்.பி.பி அவர்களின் ஒலிப்பதிவுக் கூடத்திற்குச் சென்றதாகவும், அப்போதும் அவர் தன்னை மனம் குளிர வரவேற்றதாகவும் நினைவுகூர்ந்து நெகிழ்கிறார் அமர்நாத்.

graphic திருமதி சுசீலா அவர்களின் படம்
திருமதி சுசீலா

      இதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திருமதி. சுசீலா என்ற பார்வை மாற்றுத்திறனாளியைத் தாமே  இனங்கண்டு, இவர்கள் மிக அழகாகப் பாடுவார்கள்’ என்று கூறி, அனைவருக்கும் அறிமுகப்படுத்தி, அவர்களுடன் இணைந்து பல பாடல்கள் பாடியிருக்கிறார்.

graphic திரு. ஜலால் அவர்களின் படம்
திரு. ஜலால்

       2019-ஆம் ஆண்டு ஹெல்ப் தி பிலைண்ட் நிறுவனமும், மௌனராகம் முரளி இசை குழுவும் இணைந்து, நடத்திய ‘கமலும் நானும்’ என்னும் இசை நிகழ்ச்சியில் பார்வையற்ற பிரபல பாடகி திருமதி.  ஈஸ்வரி ராமு அவர்களும்  திரு. ஜலால் அவர்களும் இணைந்து “ஒரே நாள் உனை நான்” என்னும் பாடலைப் பாடியதைக் கேட்டு, ரசித்துப்  பாராட்டினார். “மிக அழகான குரலைப் பெற்றிருக்கிறீர்கள். இன்னும் அதிக பாடல்களைப் பாட வேண்டும் என்று ஜலால் அவர்களை வாழ்த்தினார். பாடும்பொது ஈஸ்வரி அவர்களது மெருகேற்றல்களை (improvisations)  கேட்டு, நான் கற்பனைசெய்யாத சில உயர்வுகளைத் தங்களின் பாடலில் வழங்கியுள்ளீர்கள் என்று ஆத்மார்த்தமாக வாழ்த்தினார்.

       இந்த ஆண்டு நடைபெற்ற பாரத் கலாச்சார் நிகழ்ச்சியில் பார்வை மற்றும் கற்றல் திறன் குறையுடைய ஜோதி என்னும் பாடகரைப் பார்த்து, தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

       பார்வையற்றவர்களின் மீது பாடும் வானம்பாடி பாலு அவர்கள் கொண்டிருந்த பிரியத்திற்கும் பேரன்பிற்கும் சாட்சிகளாக இக்கட்டுரையில் வழங்கியிருக்கிற நீங்காத நினைவுகள் மிகச் சிலவே.

       பழகுவதில் மென்மையும், குணத்தில் மேன்மையும் பொருந்திய மனிதநேயமிக்க மாண்பினரான எஸ்.பி.பி  அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, திரைத்துறை பிரபலங்கள் இணையவழியில் மன்றாட்டு நிகழ்ச்சி நடத்தியதைப் போல, பாட்டுக்கொரு தலைவன் பாலு அவர்களின் பாசத்திற்குரிய பார்வையற்றவர்கள் ஒன்றிணைந்து 21.08.2020  அன்று சவால்முரசு ஊடகத்தின் முன்னெடுப்பில் ஜூம் அரங்கில் ‘என் நாதமே எழுந்து வா’ என்னும் பொருண்மையில்  ஐந்து தலைமுறைகளாக ஒப்பற்ற தீபமாக விளங்கி தன் இசையால் வசப்படுத்திய எஸ்.பி.பி அவர்கள் நலம்பெற்று வரவேண்டுமென்று வேண்டி, மன்றாட்டு நிகழ்வினை நடத்தினர்.

      09.09.2020 அன்று  இசை என் ஜீவன் புலனக்குழு, புதிய பார்வை ஆன்லைன் மியூசிக்கல் ட்ரூப், இனையத் தென்றல் அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இணைந்து இசை சிரஞ்சீவி அவர்களுக்கு மன்றாட்டு நிகழ்ச்சி  நிகழ்த்தி, அவரது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

       பாடிப் பரந்த கிளி பாதை மறந்து சிகிச்சை பலனின்றி பறந்து சென்ற போது, 25.09.2020 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான செய்தி ஊடகமான சவால்முரசு     அவரது பாடல்களை, பண்புகளை எண்ணி, ‘பரிதவிக்கவிட்டுச் சென்றது ஏன்? பாடுநிலாவே’  என்று இணையவழியில் அஞ்சலி நிகழ்வினை நிகழ்த்தியது.

      26.09.2020 அன்று best Friends என்னும் புலனக்குழு நண்பர்களும், எஸ்.பி.பி அவர்களிடம் நேரடி ஆசீபெற்று நீங்காத நினைவுகளை நெஞ்சில் சுமந்த திரு. ராமு அவர்களும் திருமதி. ஈஸ்வரி அவர்களும் கலந்துகொண்ட  நினைவேந்தல்  நிகழ்ச்சியை  நடத்தியது.

      27.09.2020 அன்று அந்தகக் கவிப் பேரவை என்னும் பார்வையற்றோர் நடத்தும் இலக்கிய  அமைப்பின் மாதாந்திரக் கூட்டத்தில்  இசை ஜாம்பவான் திரு. எஸ்.பி.பி. அவர்களது நேரடி நல்லாசி பெற்ற திரு ஜலால் மற்றும் திருமதி ஈஸ்வரி ராமு ஆகியோர் எஸ்.பி.பி.யுடனான தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

       எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக, 26-09-2020 அன்று நியூஸ் 7 தமிழ்  தொலைக்காட்சியில், எஸ்.பி.பி அவர்களுக்கான இறுதி நிகழ்வுகளின் நேரலை ஒளிபரப்பில் பார்வை மாற்றுத்திறனாளி இசைஞர்களான ஜெ.சி. கோமகன், ராபர்ட், ராமு, ஈஸ்வரி ராமு ஆகியோர் கலந்துகொண்டு அவர் பாடிய பாடல்களைப் பாடி, அவருடனான தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

       தன் வாழ்நாளில் எவரையும் காயப்படுத்தாமல், எவர்மீதும் காழ்ப்புணர்ச்சி கொள்ளாமல், நற்பண்புகளாலும், பன்முகத் திறனாலும் கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் பிறிதொரு பிரபலத்தை காணுதல் கடினம்.

சாமானியனின் செயல்களையும், முயற்சிகளையும் மதித்துப் போற்றும் இவரைப் போன்ற மனமுடைய பலர் இருந்தால் பார்வையற்றவர்களின் திறன்களும் அகிலம் அறியும்.

 

(தொடர்புக்கு: Paripoorani2410@gmail.com)

6 கருத்துகள்:

  1. நல்ல கவர் ஸ்டோரி. எழுத்தாளர் பரிபூரணியின் புதிய அவதாரத்திற்கு வாழ்த்துகள். ஒரு முக்கியத் திருத்தம், எஸ்பிபிக்கான இரண்டு கூட்டங்களையும் ஒருங்கிணைத்தது, சங்கம் அல்ல, சவால்முரசு. நன்றி.

    பதிலளிநீக்கு
  2. பாடும் நிலாவுடனான பார்வையற்றோரின் நினைவுகளையும் அனுபவங்களையும் அழகுபட எடுத்துரைத்திருக்கும் கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. திரு எஸ் பி பி அவர்கள் மறைந்துவிட்டார் என்பதையே ஏற்க இன்னும் மனம் மருக்கத்தான் செய்கிறது. சிறு சிறு காரியங்கள் செய்தால் கூட அதை விளம்பரப்படுத்தி கொள்கிற மக்கள் வாழ்கின்ற இந்த காலகட்டத்தில் அளப்பரிய சாதனைகள் செய்தும் தன்னடக்கத்தோடு வாழ்ந்து மறைந்த மகான் திரு பாலு ஐயா அவர்கள். நீங்கள் குறிப்பிட்டது போல திறமைகளை தேடிச்சென்று பாராட்டி புளகாங்கிதம் அடைந்த மாமனிதர் அவர். நல்ல முறையில் தொகுக்கப்பட்ட உங்கள் கட்டுரைக்கு எனது பாராட்டுக்கள். உங்களின் எழுத்துப் பரிபூரணமாக தொடரட்டும் இனிவரும் நாட்களிலும்!

    பதிலளிநீக்கு