சிறுகதை: பகையாய் மாறிய நகை - டாக்டர் U. மகேந்திரன்

       ஒரு ஆளை மறைக்கும் அளவிற்கு ஓங்கி ஒய்யாரமாய் வீற்றிருந்தது அந்த ஏரிக்கரை. அதன் இருபுறங்களிலும் மழை தன்னைத் தழுவ மறுத்ததால் ஏக்கம் கொண்ட தாவரங்கள் தனது உணர்வை வெய்யிலில் வாடி, வதங்கி வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. பத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள்  ஒன்றோடு ஒன்று உறவாடி அடர்ந்த நிழலை முன்பணமோ வாடகையோ பெறாமல் வாரி வழங்கிக்கொண்டிருந்தன. கரையின் சற்று தொலைவில் சில தலைமுறைகளின் வாழ்க்கை அனுபவத்தைப் பார்த்து அறிந்தவன் நான் மட்டுமே என்கிற அகங்காரத்தோடு படர்ந்து வீற்றிருந்தது ஒரு ஆலமரம். அங்கங்கே வான் தழுவ பனைமரங்கள் நின்று அந்தக் கரைக்குச் சுமை ஏற்றிக்கொண்டிருந்தன. என்னால் இவ்வளவு தான் வளர முடியும் என்பதை உணர்த்துவது போல் இந்த மரங்களைப் பின்னிப் படர்ந்திருந்தன கருவேல மரங்கள். ஏரிக்கு மட்டும் வாய்த்தவன் அல்ல எனப் பறைசாற்ற அந்த வயதான கரை அதன் மறுபுறம் ஆறுமுகத்தின் குடும்பத்தையும் அரணாய் இருந்து காத்தது.

     ஏறத்தாழ 70-க்கும் மேற்பட்ட குடும்பங்களைக் கொண்ட அந்தச் சிறிய கிராமத்தின் தெருப்பகுதி ஆறுமுகத்தின் வீட்டை முதலாகக் கொண்டு தொடங்குகிறது. அவரது சிதறிய வீட்டின் எதிர்புறம் பல வண்ணங்களில் தீட்டப்பட்ட கண்ணனின் உருவத்தைத் தனது மிதேற்றி காணப்பட்டது பெருமாள் கோவிலின் சுவர். இந்தப் பூமியும், குறிப்பாக அந்தக் கிராமமும் தனக்கு வஞ்சனை செய்துவிட்டது என்கிற விரக்தியோடு, வாங்கிய கடன் தொகை ஊதிப் பெருக்கிய வட்டியின் மலைப்பும், கடன் கொடுத்த கர்ண பிரபுக்களின் அர்ச்சனையால் பற்றிக்கொண்ட மன உளைச்சலும், ஆறுமுகத்தை 10 வருடங்களுக்குமுன் தனது உயிரை விடச்செய்திருந்தன.

      ஆறுமுகத்திற்கு, எதார்த்தமான வாழ்வை சிறுதும் கற்பனைக்கு உட்படுத்தாமல், எதிர்கொள்ள வேண்டும் என்கிற நிர்பந்தத்தையே பிறப்புரிமையாய் வாய்க்கப்பெற்ற, பஞ்ச பாண்டவர்கள் போல் ஐந்து ஆண்பிள்ளைகளும், அமாவாசை என ஊர்மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட வெண் ஒளி வீசும் பவுர்ணமி போல் ஒரு பெண் பிள்ளையும் இருக்கத்தான் செய்தனர்.

     கடைசி இருவரைத் தவிர, அந்தப் பெண்ணையும் சேர்த்து நால்வருக்கு குடும்ப பாரம் ஏற்றப்பட்டாகிவிட்டது. விவசாயமும் அதன் சார்ந்த வேலைவாய்ப்புகளும் கணிசமாகக் குறுகிவிட்டதால், கட்டாயக் கால்கட்டு போடப்பட்ட அந்த ஆண் பிள்ளைகள் அருகில் இருந்த தனியார் தொழிற்சாலைக்கு, அடிக்கடி துன்புறுத்தும் வயிற்றிற்குக் கட்டு போட வேண்டி, முதலாளி வர்க்கத்தின் மனத்தினைப்போல் வழங்கப்பட்ட, குறைந்த ஊதியப் பணிக்குத் தன்னை ஆட்படுத்திக்கொண்டனர்.

      முதல் இருவர் இத்தகைய கடினமான வாழ்விற்குத் தங்களையும், தங்கள் பெண்டு பிள்ளைகளையும் ஒரு விதமாய் பழக்கிக் கொண்டுவிட்டனர்.  ஆனால் இது சற்று சவாலாக இருந்தது மாதவனுக்கு.

      அவன் முறையே முன்றாவது வார்ப்பு. தந்தையால் மிகவும் செல்லம் கொடுக்கப்பட்டவன். அதற்குக் காரணம் அவன் பிறந்தபோது அவருக்குக் கிராமத்தில் ஒன்று மட்டுமே என்பதாக இருந்த அந்த பெரிய வீட்டிற்குச் சொந்தமான டிராக்டர் ஓட்டுநர் என்கிற பதவி கிடைத்ததுதான். மாதவனுக்குக் கடினமான உடல் வளம் இருந்தபோதிலும், அதற்குச் சற்றும் பொருந்தாத இளகிய மனம் இருந்ததாலோ என்னவோ அவன் வாழ்க்கை நடத்துவது சிரமமாக இருந்தது.

      கை, கால் மற்றும் உடல் ஆகியவற்றில் அவனை பிரதிபலித்த அவனது இரண்டு வயது ஆண் பிள்ளை, சில நேரங்களில் தளர்ந்து உதிரும் அவனை உயிரியல் சார்ந்த நம்பிக்கையை முழுவதும் நொடித்துப் போகாமல் காத்தது.  தனது மனைவியின் முகத்தை ஒத்த குழந்தையின் கன்னம், வாய் மற்றும் காது ஆகியவற்றைப் பார்க்கும்போதெல்லாம், அவளும் இந்தப் பிள்ளை போல் மாறிவிட்டால் என்ன எனச் சிந்திக்கத் தூண்டியது. அவள் கன்னம் போல் இருந்ததால் என்னவோ நித்தம் நித்தம் அந்தப் பிள்ளையின் கன்னத்தில்  முத்தம் பதிப்பது அவனுக்குப் பிடிக்கும்.

     உட்புறத்தில் சுவர் ஓங்கி இருந்தாலும், தாழ்ந்து இறக்கி நேர்த்தியுடன் அமைக்கப்பட்ட தங்க நிற ஜரிகை போர்த்ததுபோல் காட்சிதரும் குடிசை வீடுதான் ஆறுமுகத்துடையது. அப்பாவின் சொத்து ஒரு காக்கைக் கூடாகவே இருப்பினும், அதைப் பிள்ளைகளுக்குச் சமமாகத் துண்டு போடவேண்டும் என்கிற எழுதப்படாத சமத்துவச் சித்தாந்தம், அந்த வீட்டை நான்கு பாகங்களாக மாற்றம் பெற வைத்தது. ஆயா மற்றும் மாமியார் போன்ற உயர் படி நிலைகளுக்கு உயர்த்தப்பட்டிருந்த ஆறுமுகத்தின் மனைவி செண்பகம், தனக்கென கேட்டுப்பெற்றது அந்த வராண்டாவையும் அருகில் இருந்த சிறிய திண்ணையையும் தான். அது கணவனின் நினைவை அவ்வப்போது அவளுக்குள் செலுத்தியபடியே இருந்தன. அங்குதான் இருவரும் அமர்ந்து பேசுவதுண்டு. ஆறுமுகத்தின் பாசம் தோய்ந்த பகுதியை அத்தகைய தருணங்களில் அவள் கண்டு வியந்திருக்கிறாள்.       ஏற்றிவைக்கப்பட்ட அந்த விளக்கின் ஒளி அவரது படர்ந்த நெற்றியில் பட்டு அவள் முகத்திலும் கண்களிலும் தெறித்து எதிரொலிக்க இருவரும் அவர்களே அறியாமல் கணவன் மனைவியாய் பேசி வாழ்ந்த, அத்தகைய நினைவுகளால் கட்டப்பட்டு, எஞ்சி இருப்பது அந்தத் திண்ணையோடு பின்னித் தாழ்ந்திருக்கும் வராண்டாவுமே. அது இப்போது மாதவனின் குடும்பம் அடைக்கலம் கொண்டிருக்கும் பகுதிக்கு வெளியே வீற்றிருந்தது.

      மாதவனுக்கு ஒதுக்கப்பட்ட பாகம் மிகச் சிறியது. அவன் அயர்ந்து ஓய்வெடுக்க ஒரு அரை அவனது மனைவியின் சீலை கொண்டு கட்டமைக்கப்பட்டிருந்தது. அது ஒரு அரை; அது பெரும்பாலும் அவர்தம் நம்பிக்கையால் அரை எனும் சிறப்பு அந்தஸ்து பெற்று விளங்கியது. முன் பகுதியில் ஒரு சமையல் அரை. அங்குதான் திருமணத்தின் பொது கொடுக்கப்பட்ட பொருள் வடிவ சீதனங்களை வைத்திருக்க வேண்டியதாயிற்று.

     மாதவனின் மனைவி விமலா தன் கணவனைக் காட்டிலும் உற்ற துணையாய் கருதியது அவளது அர்த்தமற்ற கோபத்தைத் தான். பலருக்கு அப்படிதான் அனுமானிக்கத் தோன்றியது.

      அவளது கோபத்திலிருந்து, அவனை அடிக்கடி காத்தருளிய பெருமை, இவர்கள் சண்டையிட ஆயிரக்கணக்கான காரணங்களைப் புதுமையாகவும், நேர்த்தியாகவும் தாங்கியபடி வலம்வரும் நாடகங்கள் தோன்றி மறையும் அந்த சிறிய தொலைக்காட்சியே. அவள் எட்டுக்கட்டையில் திட்டும் போதெல்லாம் இந்தச் சிறிய காட்சிப்பெட்டியும் மாதவனால் சத்தம் வைக்கப்பட்டு சரிசமமாய் அலறும். அவளது  குரல் சில, பல நேரங்களில் வெற்றி முழக்கம் கொள்ளும். அதை தடுக்க அல்லது தப்பிக்க அவனுக்கு இருந்த அடுத்த ஆயுதம் அவனது உரம் ஊட்டப்பட்ட கைகள். அடித்து அவளை ஊரே திரளும்படி அழ வைத்துவிடும். பிறகு அந்தத் துக்கத்தை மனதில் இருந்து இறக்க, அவன் சில குவளைகளை அவனுக்குள் இறக்குவது தவிர்க்கமுடியாததாக இருந்தது.

      அவள் அவனிடம் மிகவும் ரசித்த அம்சம் அவன் அவளது பெயரை அழைக்கும் தொனியில் இருந்தது. அவன் விமுமா, விமுமா என்று கூப்பிடும்பொதெலாம் அவள் மிகவும் மகிழ்ச்சிகொள்வாள். உள்ளுக்குள் அமைதி நிரம்பி ஆட்கொண்டு அவளை அன்பின் பரிமாணத்தை உணரச் செய்யும். ஆனால் அந்த ஆயுதமும் சில நேரங்களில் பயனளிக்காமல் போவதை அவன் வியந்து யோசிப்பான்.

      அவள் அதிகம் ஆசைப்படுவது அவனுக்கு எரிச்சல் கொடுத்தது. எவ்வளவு எடுத்துச் சொல்லியும் திருமணமான இந்த நான்கு வருடங்களில் அவள் தன்னை இம்மி அளவிலும் மாற்றிக் கொள்ளாதது மாதவனுக்கு அவள்பால் வெறுப்பு அதிகரிக்கக் காரணமாய் அமைந்தது.

      தாலிக்குக் கூட நகை இல்லையாம். மாறி மாறி கட்டிக்கொள்ள நல்ல புடவை பக்கத்து வீட்டு மரகதத்திடம் இருப்பது போல் அவளுக்கு வேண்டுமாம். பட்டணத்துப் பெண்கள் மெருகேற்றுவது முறையிலான அலங்காரங்கள் தேவையாம். இவற்றிற்கு மேல். அவளது கல்யாணப் பரிசாக அளிக்கப்பட்ட நகை. அது இப்போது மாதவனின் அண்ணனால் அடகு வைக்கப்பட்டு சுங்குவார் சத்திரம் வங்கியில் கிடக்கிறதாம். உடனடியாக அதைப் பெற்றுத் தரவேண்டும் என்கிற அடிப்படையில் அவனிடம் தகாத முறையில் கடந்த சில வாரங்களாக வாக்குவாதம் செய்துகொண்டிருக்கிறாள். இவற்றை எல்லாம் யோசித்தபடி பிள்ளையைத் தோள் மீது போட்டபடி அந்தக் கரையில் நடந்துகொண்டிருக்கிறான் மாதவன்.

      இப்போது அவன் கால்கள் நடந்துகொண்டிருக்கும் அதே பாதைமேல் அவன் தந்தை ஆறுமுகம் அவனைத் தோளில் தாங்கியபடி நடந்த நினைவு அவனுக்கு ஆறுதலையும், பிடிப்பையும் கொடுத்தன. அந்த ஆறுதலும் சில கணங்களில் நிலையாமையை எடுத்துரைத்து, அவன் கண்கள் கலங்கி உடல் குலுங்க குலுங்க விசும்பி அழச்செய்தது. விமலா பேச்சுவாக்கில் கொடுத்த எச்சரிக்கை அவனை மேலும் நிலைகுலையச் செய்ததால், அந்தக் கரைமீது காணப்பட்ட ஒற்றைப் பாறைமேல் கால் பதித்து, இப்போது உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் பிள்ளையின் துயில் கலையவில்லை என்பதை உறுதி செய்து மெல்ல அமர்ந்தான்.

      கீழிருந்து அவனுக்கு மிகவும் நெருக்கமான சாரங்கி அண்ணன் அழைப்பதைக் கேட்டு சைகையில் காத்திருக்கச் சொல்லிவிட்டு கிழ் இறங்கி அவரை நோக்கி விரைந்தான். அவனை நன்கு புரிந்திருப்பவர் சாரங்கி அண்ணன் மட்டுமே என அவன் நம்பியது உண்மையே. அவனுக்கு அவ்வப்போது செலவிற்குப் பணம், வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்கிக் கொடுப்பது என அவர் அவனை தன் உடன்பிறப்பாகக் கருதி உதவியது அவனுக்கு அவர் மீதான மரியாதையை நாளுக்கு நாள் அதிகரிக்கச் செய்தது. அவனும் அவர் எந்தப் பணி இட்டாலும் இரவுபகல் பாராமல் செய்து முடிப்பான். அவரோடு பேசுவது அவனுக்குப் புத்துணர்வை ஊட்டியது.

      தனது மனைவியின் வசைச் சொற்களை அவரிடம் வழக்கம் போல் சொல்லி, “உதவ முடியுமா?” எனத் தயங்கித் தயங்கி வினவினான். அவர் தம்மிடம் இருந்த பணத்தைத் தொழிலாளர்களுக்குப் பகிர்ந்து அளித்துவிட்டதாகவும், அவனுக்குக் கொடுக்க வேண்டிய மாதச் சம்பளம் மட்டும் இப்போது வழங்க இயலும் எனவும், அந்த அடகு போன நகையைக் குறித்து அவன் அண்ணனிடம் கலந்து பேசுவதாகவும் சொல்லி மாதவனுக்கு ஆறுதல் கூறி தேற்றினார். எவ்வளவு எடுத்துச் சொல்லியும் மாதவனின் கலவரம் தோய்ந்த குரலும், செய்கையும் சாரங்கியைத் திடுக்கிடச் செய்தன. கழனிக் காட்டிற்கோ அல்லது மெயின்ரோட்டு அரசு மதுபான கடைக்கோ செல்லாமல், விரைந்து வீடு வந்துவிட வேண்டும் என அறிவுறுத்தினார். அவனை நாளை காலை வந்து பார்க்கும்படி நினைவூட்டி அவனிடமிருந்து விடைபெற்றுப் புறப்பட்டார்.

      சாரங்கியின் உள்ளுணர்வு எதோ விபரீதம் நடக்கப்போவதாக அவரை எச்சரித்தது. அவரும் அவனை அழைத்து, “வேறு ஏதாவது பிரச்சனையா?” என வினவி, மீண்டும் அவசிய தேவையோ அல்லது சிக்கலோ நேர்ந்தால், எந்த நேரமாக இருந்தாலும் தன்னைத் தயங்காமல் போனில் தொடர்புகொள்ளும்படி எடுத்துரைத்துப் புறப்பட்டார். மாதவன் மதியம் இரண்டு மணி அளவில் தனது வீட்டிற்குள் பிரவேசித்தான்.

      விமலா கிளி பிடித்ததுபோல் வாசலை வெறித்துப் பார்த்தபடி கால்களை நீட்டி தலைவிரி கோலத்தில் அமர்ந்திருந்தால். இதைப் பார்த்த மாதவன் அவளைத் தொட்டு, அவனை மன்னித்து விடும்படி கெஞ்சினான். அவள் பிடி கொடுக்காததால் பிள்ளையை அவளிடம் கொடுத்துவிட்டு தனது மாதிரி அறையில் சென்று உறங்கிப்போனான். அம்மா செண்பகம் தன்னை அழைத்த குரல் கேட்டு விழித்துப் பார்த்தபோது மணி ஏழு ஆகிவிட்டிருந்தது.

     விமலா அழுதுகொண்டே தரையில் விழுந்து கிடந்த காட்சி அவனுக்கு ஆத்திரத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது. அவளை அடித்து எழுப்பினான். “என்ன வேண்டும்?” என பிளிறிய குரலில் வினவினான். சிற்சில வாக்கிய அதட்டலுக்குப் பிறகு அவளது உதடு நகை என அசைந்தது.

      அவன் காலைமுதல் சாப்பிடாதது பற்றி அவள் கண்டுகொள்ளாமல் இருந்தது மேலும் அவனை மிருகமாக்கி, மீண்டும் மனிதனாக வேண்டும் என இரு எதிர்மறை எண்ணங்கள் அவனைப் பிடித்து உலுக்க, அதை அரங்கேற்றும் பொருட்டு அந்தக் கடையை நோக்கி புறப்பட்டான்.

      குழந்தை அழுததைக் கூட பொருட்படுத்தாமல் அவன் விரைந்து சென்றது செண்பகத்திற்கு அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் தோன்றியது. “ஏன் இப்படி அவனை வாட்டி எடுக்கிறாய்?” என மருமகளை நோக்கிக் கேட்டபடி, தன்னை அடித்துக்கொண்டு தனது இயலாமையை எண்ணி அழத்தொடங்கினால். அது மட்டுமே அவளால் இப்போதைக்கு இயன்ற ஒன்று. வேறென்ன செய்யமுடியும் தனது கண் பார்வையைச் சற்று இழந்து முதுமையில் தவிக்கும் அந்தக் கிழவிக்கு!  தனது பிள்ளைகளுக்கும் அவளது கணவனுக்கும் உழைத்து உழைத்து தனது வாழ்க்கை ரேகையை அழித்துக்கொண்ட அவளுக்கு இறப்பு மட்டுமே பிள்ளைகளைக் காட்டிலும் நிம்மதியானது என அவள் என்னிக்கொண்டிருப்பதில் எவரும் எந்தப் பிசகும் சொல்லமுடியாது.

      மணி 10 ஆயிற்று. மாதவன் சில மாதங்களுக்கு முன் புதிதாக மாதாந்திரத் தவணையில் வாங்கிய இருசக்கர வண்டியை நிறுத்திவிட்டு சுய நினைவுக்குச் சற்று ஓய்வளித்தவனாய் தள்ளாடித் தள்ளாடி வீட்டிற்குள் நுழைந்தான். “சாப்பிடுங்க என யாரையோ சொல்வதுபோல் அவன் மனைவி அழைத்ததைப் பொருட்படுத்தாமல் தனது சிறிய அறைக்குச் சென்றான். மீண்டும் அவர்களது வாய்ச் சண்டை மற்ற அண்ணன்களின் வீட்டையும் உலுக்கியது.

      இந்த முறை அவனது குரல் அவளைத் தோற்கடித்தது. அவள் அவனது ஆக்ரோஷம் கண்டு சற்று அதிர்ந்துதான் போக நேர்ந்தது. தகாத வார்த்தையில் ஒரு விவாதம் அரங்கேறியது. அக்கம் பக்கத்தாரும், மாதவனின் அண்ணன்களும் இது சற்று நேரத்தில் வழக்கம் போல் ஓய்ந்துவிடும் எனத் தீர்மானித்ததால் என்னவோ சமாதானம் செய்ய வரவில்லை. இப்போதும் அந்த அப்பாவித் தொலைக்காட்சி பெருத்த சத்தமிட்டு அவர்களது சண்டையை மனிதர்களுக்குப் பதிலாக தடுத்து நிறுத்தியது. அவள் சத்தமிட்டுச் சத்தமிட்டு, அந்தக் களைப்பினால் உறக்கத்தில் ஆழ்ந்து போனால். ‘ஜொலிஜொலிக்குதே என்கிற ஆட்கொல்லி நகை மாளிகையின் விளம்பரம் பெருத்த சத்தத்தில் அந்த வீட்டின் பிரச்சனையையும் வெளிப்படுத்துவதுபோல் காற்றில் கலந்து எக்காரமிட்டது.       மாதவனை எரிச்சலும், விரத்தியும், மனைவியின் மீதான கோபமும் கைகோர்த்து தங்களின் வசப்படுத்தி வைத்திருந்தன.  அவன் அழவில்லை. ஆனால் சீறி பெருக்கெடுத்து கன்னத்தில் பாய்ந்தோடிய கண்ணீர் அவனது அந்த எண்ணத்தைப் பொய்யாக்கியது.

      தனது தலைக்குமேல், அந்த மின்சாரத்துக்கு வாக்கப் பட்டதால், சுய சிந்தனையையும்  சுய மரியாதையையையும்  துறந்து சுழன்றுகொண்டிருக்கும் மின் விசிறியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அதன் சுழற்சியில் அவனது கால ஓட்டத்தைக் கண்டானோ என்னவோ? அல்லது மனிதர்களிடம் பெறாத எதோ ஒன்றை அது தந்துகொண்டிருக்கிறது என கருதுகிறானோ? மண்டைக்குள் இறங்கி, அவனது எதிர்மறை எண்ணங்களைத் தொகுத்து, அவனது உறவுகளை மறக்கச்செய்து, அந்த பிள்ளையின் பிஞ்சு விரல் பிடித்து வருடிக்கொடுத்து சுகம் காணும் நினைவை அவனிடம் இருந்து அப்புறப்படுத்தி, தனது மனைவியின், மஞ்சள் மறுதலித்து, அவனை நித்தம் நித்தம் கவர்ந்திழுத்து முத்தமிடச் செய்யும் முகத்தையும், அத்தகைய மகிழ்ச்சியான காலைநேர நிமிடத்தையும் அவனிடமிருந்து துண்டித்து... அந்த மதுவின் போதை அவனை என்னவோ செய்ய நிர்பந்தித்தது.

      அவன் மன நிம்மதிக்குக் காரணமாய் இருந்த அந்த லைலான் கயிறு அவன் கண்ணில் பட்டது. அது அவனை அவ்வப்போது தாங்கியபடி மரத்தில் கட்டப்பட்டு ஊஞ்சலாய் இருந்ததுண்டு. அதன் மடியில், ஒரு இள நெஞ்சம் தரித்த இனிய பருவப் பிள்ளையாய் அவன் வலம் வந்திருக்கிறான். அவன் தாய் மடிதந்த ஸ்பரிசம், அந்த ஊஞ்சலின் பிடிப்பிலும், அது முன்னும் பின்னும் அசைந்து வழங்கிய ஒரு வித வினோத மயக்கத்திலும் அவன் பெற்று அனுபவித்திருக்கிறான்.

      என்ன நினைத்தானோ, அவனை மறந்த அவன், வெடுக்கென்று எழுந்து மின் விசிறியை நிறுத்தினான். அவன் கரங்கள் அந்த ஊஞ்சலுக்கான காரணியை ஒரு நொடியில் விரைந்து பற்றியது. இப்போது முன்பு வெறித்துப் பார்த்த மின் விசிறிக்கும் அந்தக் கயிறுக்கும் ஒரு தொடர்பு ஏற்படுத்தப்பட்டாகிவிட்டது. அந்தத் தாய் மடி போன்ற கயிறு இப்போதும் அவனைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதில் அவனது ஜீவன் மட்டும் இல்லை. அது ஒருவேளை விடைபெற்று அவன் தந்தை ஆறுமுகத்தை தேடிக்கொண்டிருக்கிறதோ தெரியலையே?

      முதலில் அந்த அதிர்ச்சியைக் கண்டவள் விமலாதான். காலை ஆறு மணி ஆகியும் தொலைக்காட்சி ஒலித்துக் கொண்டிருப்பதைக் கேட்டு, திடுக்கிட்டுச் சென்று பார்த்தாள். இப்போது அவள் சண்டையிடும் அவன் விசித்திர ஒய்வு எடுத்துகொண்டிருக்கிறான். அவளது நற்கதி இழந்த அலறல் சத்தம், சேவலுக்கு ஓய்வளித்து அந்தச் சிறிய ஊரைத் துயிலெழுப்பும் பணியை ஆற்றியது.

     அந்தப் பிஞ்சுக் குழந்தையின் கரங்கள் தந்தையின் தோல் பற்றி தழுவத் துடித்தன. விமலா நொடித்துப்போய், தனக்குக் கிடைத்த இரக்கமற்ற தண்டனையை ஏற்க மறுத்தவளாய், மார்பிலும் தலையிலும் அடித்து அழுத கோலம், ஊர் மக்களை உறைந்து போகச்செய்தது. இந்த இளம் பருவத்தில் இப்படி ஒரு துயரா என விமலாவுக்காக அனுதாபத்தில் சில உதடுகள் முனு முணுத்தன. சில குரல்கள் அவளை அழுதபடி கரித்துக் கொட்டின. அவன் அனைவராலும் நேசிக்கப் பட்டவன். அன்று அழாத மனிதர்களும் கதறி அழுதது அந்த ஊரையே கண்ணீரில் ஆழ்த்தியது.

      அவர்கள் அழுவது மாதவனுக்காக மட்டும் அல்ல என்பது சொல்லாமல் தென்பட்ட எதார்த்தம்.   பணமும், நகையும், பொருளும், இடமும், நிலமும், நம்பிக்கைகளும் எத்தனை பேரை காவு வாங்க போகிறதோ என்கிற ஒருமித்த கனத்த இதயத்தோடு, அந்த ஊரும் இப்போது அழுகிறது.

 

(கதை ஆசிரியர் சென்னை சர். தியாகராயர் கல்லூரியின் ஆங்கிலத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார்).

தொடர்புக்கு: mahendranbefrank@gmail.com

4 கருத்துகள்: