கார்த்திக் உதயகுமார் |
“உழவே அறிவியல்களிலெல்லாம் உயர்ந்த அறிவியல்” என்று விஞ்ஞானி டாக்டர். ஜான்சன் கூறி உள்ளார். உழவு, உலகத்தின் தலைசிறந்த பணி. அதனால்தான், ஐயன் வள்ளுவனும்
“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. குறள் 1031”
என்று இந்தப் பணியைக் குறிப்பிட்டுள்ளார். மனிதன் நாகரிகத்தை அடைய முதல் படியாக அமைந்தது இந்த உயிரூட்டும் உழவுதான் என்பதில் மாற்றம் இல்லை. “எப்படி அனைவருக்கும் சாப்பிடத் தெரியுமோ, அதே போன்று அனைவருக்கும் உழவு தெரியவேண்டும்” என்பார் ஐயா நம்மாழ்வார். இந்தப் பணியை நாம் அனைவரும் எந்த அளவிற்கு அறிந்திருக்கிறோம் என்று தெரியாது. ஆனால் அறிந்தவர்களே ஐயம் கொள்ளும் இந்த உழவுப் பனியை, மதுரை மாவட்டம், கல்லிக்குடி வட்டம், செங்கப்படை கிராமத்தைச் சார்ந்த ஒரு பார்வையற்ற இளைஞன் செல்வன். கார்த்திக் உதயகுமார் அவர்கள் செய்கிறார். அந்த 23 வயது உழவருடன் நமது விரல்மொழியர் சந்திப்பு.
ரப்பர் வாயன்: ஐயா வணக்கம். விரல்மொழியர் மின்னிதழுக்காக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். நமது வாசகர்களுக்காக உங்களைப் பற்றிய சிறு அறிமுகம்.
கார்த்திக்: முதலில் நீங்க ஐயான்னு சொல்லும் அளவிற்கு, நான் பெரிய மனுசன் இல்லை சார். நான் சாதாரன விவசாயக் கூலி. என் பேரு கார்த்திக் உதயகுமார். நான் மதுரை, கல்லிக்குடி வட்டம் செங்கப்படை கிராமத்தில், எனது அம்மா மற்றும் 2 சகோதரிகளோடு வாழ்ந்துவர்றேன். என்னோட அக்கா இருவரும் பார்வையற்றோர்தான். மூத்த அக்கா விமலா, M.A, B.Ed முடிச்சிட்டு, இப்போ, இங்கனதான் சிம்மக்கல்லுல இருக்குர, பேங்க் ஒஃப் பரோடாவில் வேல செஞ்சிக்கிட்டு இருக்காங்க. சின்ன அக்கா திவ்யா சென்னை சட்டக்கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படிக்கிராங்க. என்னோட அப்பா நான் பொறந்ததும் எங்கள விட்டுட்டுப் போயிட்டாரு.
ர: உங்கள் சகோதரிகள் எல்லாம் நல்லா படிச்சிருக்காங்க. நீங்க படிக்கலயா?
கா: நான் 8-ஆம் வகுப்புவரைக்கும் மதுரை பரவை புனித ஜோசப் ஸ்கூலுலதான் படிச்சேன். அதுவரைக்கும்தான் அந்த ஸ்கூலுல அப்போதைக்கு இருந்துச்சி. அதுக்கப்பரம் நான் படிக்கலை. எங்க வீட்ல அப்போ நெரய செம்மரி ஆடுக இருந்துச்சி. அதுகலோட இருந்து, இருந்து அப்படியே போயிட்டேன். அதே போல, நான் சின்ன வயசுல இருந்து, இந்த ஆடு, மாடுன்னா கொஞ்சம் கிருக்கு பிடிச்சுத் திரிவேன். அதுனாலயோ என்னவோ தெரியல. எனக்கு அதுக்கு மேல படிக்கவும் பிடிக்கல.
ர: சரி. இந்த விவசாயம் மீது எப்போதுல இருந்து உங்களுக்கு ஈர்ப்பு வந்துச்சு?
கா: நான் முன்னாடியே சொன்னேன்ல? எனக்கு இந்த ஆடு, மாடுனா ரொம்பப் பிடிக்கும்னு. அப்போதுல இருந்தே எனக்கு இந்த காட்டுவேலையில ஆர்வம்தான். நான் 8-ஆம் வகுப்பு முடிச்சதும், ரெண்டு வருசம் வீட்ல சும்மாதான் இருந்தேன். பிறகு ஆடு, மாடுகள மேச்சிக்கிட்டு, அதுக்கு புல்லெடுத்து போட்டுக்கிட்டு இருந்தேன். அதுக்கப்பரம்தான் கொஞ்சம் கொஞ்சமா, காட்டுவேலைக்குக் கூலிக்குப் போக ஆரம்பிச்சேன். அப்ப இருந்துதான் நான் எல்லா வேலைகளையும் கத்துக்கிட்டேன். அதுக்கப்பரம்தான் காட்டுவேலையைக் கான்ட்ரக்ட் எடுத்து செய்ய ஆரம்பிச்சேன். அதுல கொஞ்சம் லாபம் வந்துச்சு. அதுல இருந்து நான் அப்படியே போயிட்டேன்.
கார்த்திக் உதயகுமார் |
ர: காட்டுவேலையில கான்ட்ரக்டா! அப்படினா? கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்களேன்?
கா: அது ஒன்னும் இல்லைங்க சார். கட்டட வேலையெல்லாம் எப்படி இப்ப கூலி கான்ட்ரக்ட் விடுராங்களோ, அதேமாரிதான் இதுவும். காட்டுவேலைகளை மொத்தமாப் பேசி எடுத்து, நாம 10 பேர வச்சி முடிச்சுக் கொடுத்துருவோம்; அவ்வளவுதான்.
ர: இதுல நீங்க பார்வையற்றவரா இருக்கரதுனால, யாராவது ஒங்கள ஏமாத்தமாட்டாங்களா?
கா: ஏச்சுப் பொழைக்கனும்னு நெனச்சாங்கனா யார வேணும்னாலும் ஏச்சுப்புடுவாங்க சார். போக, நமக்குக் கொஞ்சம் கொர பார்வை உண்டுங்கிரதால நான் மேப்பார்வையப் பாத்துக்கிருவேன்.
ர: உங்களுக்குச் சொந்தமாக் காடு இருக்கா?
கா: இல்லை. ஆனா நான் காட்ட ஒத்திக்கு எடுத்துப் பயிர் செய்யுறேன்.
ர: அருமை சார். இப்போ எவ்வளவு ஏக்கர் எடுத்து என்ன பயிர் வச்சிருக்கிங்க?
கா: இப்போ நான் 6 ஏக்கர் காட்டை எடுத்து, வரகு, சோளம் போட்டிருக்கேன். அது வர்ற தை மாசம் அறுப்புக்குத் தயாராயிரும்.
ர: பார்வையற்றவர்களுக்கு நம்பி காடுகளை ஒத்திக்கு தர்ராங்களா?
கா: சார். இதுல கண்ணு தெரியிது தெரியலங்குறது முக்கியம் இல்லை சார். அவுங்க ஏக்கருக்கு இவ்வளவுன்னு சொல்லுவாங்க. அத நாம கொடுத்துட்டோமுனா, நம்ம பேர நோட்டுல போட்டு இவுகளுக்கு இந்தக் காடுன்னு ஒதுக்கித் தந்துருவாங்க.
ர: விவசாய நுணுக்கங்களையெல்லாம் நீங்களே பாத்துப்பிங்களா?
கா: சார் மனுசனால முடியாதுனு எதாச்சும் இருக்கா சார்? நாமலாப் பாத்து பன்றதுதான சார். என்னால முடியாதது எதுவும் இல்லைனு நான் நம்புறேன் சார். அதுனால எல்லா வேலையும் நானே செய்யுவேன் சார்.
ர: நீங்க மத்தவுங்களுக்கு விவசாய நுணுக்கங்களைச் சொல்லித்தருவதுண்டா?
கா: கண்டிப்பா சார். எங்க ஊருல நெறய பேர் எங்கிட்ட வந்து ஐடியா கேப்பாங்க. அவுங்களுக்கு நான் சொல்லுரதோட ,போயி, செஞ்சு தந்துட்டும் வருவேன். இப்பொ கூட பக்கத்துல, மில்ட்ரில இருந்து வந்த அண்ணெ ஒருத்தர் வந்து, “தம்பி என்ன செய்யலாம்”னு கேட்டாரு. அவருக்கு ஊருக்குள்ளயே ஒரு ஏக்கர் காடு இருக்கு. அதுல அவருக்கு கல்லு ஊண்டி வலையப்போட்டு, கோழிப்பன்னையும், பக்கத்துலேயே மீண்பன்னையும் வச்சுக்கொடுத்தேன்.
கார்த்திக் உதயகுமார் |
ர: இன்றைய சூழலில் உழவுத் தொழில் எப்படி இருக்கிறது?
கா: மதுரையைப் பொருத்தவரை பெருசா பிரச்சனை எதுவும் இல்லை. வைகையும், வானமும் நமக்கு ஓரளவுக்குக் கருனை காட்டுது. ஆனா இந்த தொழில் லாபகரமா இருக்குதான்னா? அதுதான் கொஞ்சம் கஸ்டம்.
ர: ஏன் லாபத்தில் என்ன பிரச்சனை?
கா: எல்லாருக்கும் அவங்க உற்பத்தி செய்யுர பொருளுக்கான விலையை வைக்கிர உரிமை அவங்கக்கிட்டயே இருக்கும். ஆனால் உழவன் மட்டும்தான் அவன் உற்பத்தி செய்யும் பொருளுக்கு விலையை அவன் வைக்க முடிவதில்லை. வியாபாரிதான் எங்கள் பொருளுக்கு வெலய வைக்கிறான். எங்க பொருளுக்கு நாங்களே வெலை வைக்கிற காலம் எப்போ வருதோ, அப்போதான் ஒரு விவசாயி லாபத்தைப் பார்க்க முடியும்.
ர: உண்மைதான். சீக்கிரம் காலம் கணியட்டும். சரி நீங்கள் பார்வையற்றவர் என்பதற்காக அரசு கொல்முதல் மையத்தில் ஏதேனும் முன்னுரிமை வழங்கப்படுகின்றதா?
கா: அப்படி எந்த ஊரிலும் நமக்கு எந்த முன்னுரிமைகளும் கெடையாது. போக, அவங்க நம்மல ஏமாத்தாம இருந்தா போதும்.
ர: ஏன்? அங்கு உங்களை ஏமாற்றுகிரார்களா?
கா: ஊம்ஹும். என்னை மட்டும் இல்ல. கண்ணு தெரிஞ்சாலும் எட நிருக்கும்போது ஏச்சிப்புடுவாங்கே. நம்மல அவைங்கெ நெரயா ஏமாத்திடாம உசாரா இருக்கணும்.
ர: மாற்றுத்திரனாளி உழவர்களுக்கு ஏதேனும் அரசுச் சலுகைகள் உண்டா? அதைப்பற்றி ஏதேனும் தெரிந்தால் சொல்லுங்களேன்?
கா: எந்தச் சலுகையும் எனக்குத் தெரிஞ்சு இல்லை என்பதைவிட, நான் எந்தச் சலுகையையும் பெறவில்லை; O.A.P உதவித் தொகை 1000 ரூபாயைத் தவிர. அப்படி ஏதேனும் இருந்துச்சுனா எனக்குக் காட்டிவிடுங்க. நானும் அதைப் பயன்படுத்திக்கிறேன்.
ர: வழி இருந்தால் நமது வாசகர்கள் உங்களை நிச்சயம் தொடர்பு கொள்வார்கள். அரசு உங்களுக்கு என்ன செய்யனுமுனு நீங்க எதிர்பாக்குறீங்க?
கா: சார் நான் மாட்டுப்பன்னை, கோழிப்பன்னை இப்படி எதாவது ஒன்ன வச்சுப்புடலாமுனு பல முறை லோனுக்காக அலைஞ்சிட்டேன் சார். இதுவரைக்கும் ஒரு சின்ன உதவி கூட கெடைக்கலை. நாம லோனுன்னு போயி நிண்டாலே எதாவது காரணத்தச் சொல்லி நம்மல அலையவிடுராங்க. நமக்கு எதுவும் சும்மா குடுக்கவேண்டாம். நாம யாரோட காசுக்கும் ஆசைப்படல. நமக்கு லோனாக் குடுத்தாலே போதும். அதைவச்சி நாம பொழச்சிக்கிடுவோம். அதோட நாம லோனையும் திரும்பி கட்டிருவோம்.
ர: இந்தத் தொழில் எந்த அளவிற்கு உங்களுக்கு மதிப்பைப் பெற்றுத்தருகிறது?
கா: அடுத்தவனோட மரியாதையை எவன் சார் இங்க எதிர்பாக்கிறது. நம்மல யாரும் மதிக்கவேண்டாம். நான் ஒழைச்சாதான் சோறு. என்னையப் பத்தியோ, எனது ஊனத்தைப் பத்தியோ யாரு என்ன பேசினாலும் நான் கவலைப்படமாட்டேன் சார். நான் பொறந்ததுல இருந்தே எங்க அப்பா கிட்டயே போயி ஒரு உதவின்னு நிண்டதில்லை சார். அப்பறம் யாருக்கிட்ட நான் போய் நிக்கப்போறேன்?
ர: சுயமரியாதையை ரொம்ப எதார்த்தமா சொல்ரிங்க. சரி இதல்லாம் விடுங்க. நாம முக்கியமான மேட்டருக்கு வருவோம். உங்களுக்கு எப்போ கல்யாணம்? விவசாயின்னாலே பொண்ணு கொடுக்கமாட்டாங்கன்னு சொல்லுவாங்கல்ல?
கா: ஹாஹாஹா, சார். கல்யாணங்கிரது நம்மகிட்ட இல்லை. அது கடவுளோட செயல் சார். எதுவுமே இல்லாதவனுக்கும் கல்யாணம் நடந்திருக்கு. பணம் வசதின்னு எந்தக் கொறையும் இல்லாதவனுக்கு கல்யாணம் நடக்காமையும் இருக்கு. நமக்குக் கடவுள் என்ன வச்சிருக்கானோ அது நிச்சயமா நடக்கும்.
ர: சார் நீங்க நல்ல கிராமத்துல இருக்கீங்க. அதுனால, காதல் கீதல் எதாவது?
கா: நம்மலோட காதல் சின்ன வயசுல இருந்து ஆடு, மாடு, கோழின்னே போச்சு. இப்பொ அதோட சேர்த்து பயிரும் வந்துருச்சு.
ர: சரி. மொதல்ல இருந்தே நீங்க ஆடு, மாடுன்னு சொல்ரீங்க. இப்பொ விவசாயம் தவிர வேறு என்னவெல்லாம் பன்றிங்க?
கா: நமக்கு ஒரு பால் மாடு, ஒரு செனமாடு, ஒரு கண்டுக்குட்டி நிக்கிது. அப்பறம் அஞ்சு ஆடு நிக்கிது. இப்போ கோழி வலக்கலாமுனு ஒரு 10 கோழி வாங்கி விட்டிருக்கேன். இதைத் தவிர, தெரிஞ்சவுங்க கம்பெனியில இருந்து உர மூட்டைகளை எடுத்துட்டுவந்து வியாபாரமும் செய்யுரேன்.
ர: செம்ம சார். பல சைடுலையும் பூந்து கலக்குரீங்க. உங்களோட லச்சியம்தான் என்ன?
கா: லச்சியம்னுலாம் ஒன்னும் பெருசா இல்லைங்க சார். நான் செய்யிறதயே சிறப்பாச் செய்யனும் சார். என்னோட குடும்பத்துக்குத் தேவையானத நான் தெனமும் சம்பாதிக்கனும். அதோட ஒரு 100 ரூபாய முடிஞ்சா சேக்கனும் அவ்வளவுதான்.
ர: ஓக்கே சார். நமது வாசகர்களுக்கு எதாவது சொல்லுங்களேன்?
கா: சார் நான் என்னத்த சொல்லப்போறேன், அதுவும் படிச்சவங்களுக்கு?
ர: சார் படிச்சவன்ல பாதிப்பேரு, இப்போ என்னயமாதிரி வேலையில்லாமதான் இருக்கான். நீங்க போற போக்க பாத்தா நாலு படிச்சவனுக்கே வேல குடுப்பிங்க. அதுனால எதாவது சொல்லுங்களேன்?
கா: நம்மால முடியாதுங்கிரத இந்த ஒலகத்துல எதோ ஒரு மூலையில எவனோ ஒருத்தன் செஞ்சிக்கிட்டுதான் இருப்பான். அதுனால எதையும் நம்மலால செய்ய முடியாதுன்னு சோந்து உக்காந்துராதிங்க. எல்லாத்தையும் நேசிச்சுச் செய்யுங்க. அது ஒங்களப் பாத்துக்கும். எல்லாமே நமக்கும் சாத்தியம்தான்.
ர: அருமை சார். இந்த விரல்மொழியர் மின்னிதழைப் பற்றி இதுக்கு முன்னாடி எப்பையாவது கேள்விப்பட்டதுண்டா?
கா: இல்லைங்க சார். இப்போ நீங்க சொல்லிதான் தெரியும்.
ர: நல்லது சார். இந்த விரல்மொழியர் மின்னிதழைப்பற்றி உங்களோட கருத்து?
கா: நமக்குன்னு எதாவது தனியா இருந்தா நல்லதுதானே! இதன் மூலமா நம்மலோட மக்கள நமக்கே அறிமுகம் செய்யும் வாய்ப்பு இருக்குல்ல. அதுனால இது இன்னும் நல்லா வளரட்டும். நான் இதுக்கப்பரம் என்னோட சகோதரிகளைவச்சுப் படிச்சுக்கிறேன்.
ர: மகிழ்ச்சி சார். எங்களோட இவ்வளவு நேரத்தைப் பகிர்ந்துக்கொண்டமைக்கு மிக்க நன்றிகள் சார்.
அன்பு வாசகர்களே. உங்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான விவசாயக் கடன் குறித்து தகவல் ஏதேனும் தெரியுமானால், நமது இளம் உழவரான கார்த்திக் உதயகுமாருக்கு வழிகாட்டுங்கள். நம் மக்களைக் கை தூக்கிவிடும் பொறுப்பு நம்முடையது அல்லவா?
கார்த்திக் உதையகுமார் அவர்களை தொடர்புகொள்ள: 8870985682.
தொடர்புக்கு: rubbervaayanchennai@gmail.com
வாழ்த்துக்கள் கார்த்திக் உதயகுமார்..
பதிலளிநீக்குஉங்கள் உயிரூட்டும் உறவு பணி வளர்க.
அருமையான பேட்டி. ரப்பர்வாயனின் களப்பணி சிறக்க வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபேட்டி தொகுப்பு அருமை.
பதிலளிநீக்குரப்பர்வாயன், ரொம்ப வெலயாட்டாவே தேவையான அளவு சீரியஸ்னஸ் டிக்காஷன் கலந்து ஸ்ட்ராங்கான டீப் போடற ஆளு, இந்தப் பேட்டியிலையும் அதே ஸ்ட்ராங்க் இருக்கு! விவசாயி கார்த்திக் சொன்னதை அவரது வட்டார வழக்கிலேயே பதிவுசெய்திருப்பது அருமை! NHFDC திட்டங்களில் கூட விவசாயத்திர்க்கென ஊனமுற்றோருக்கு சிறப்புக் கடனுதவித் திட்டங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ஷியுரிட்டி (Surety) இல்லாமல் கடன்பெறும் வழிகள் NHFDC திட்டங்கள் அல்லது பிற வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்படும் எல்லோருக்கும் பொதுவான திட்டங்களில் இருந்தால் விவரம் அறிந்தவர்கள் இவருக்குச் உதவலாம்.
பதிலளிநீக்குinterest free loans for PWD's 1 NHFDC PACB AND IF PWDbelongs to SC can apply for THATCO loans addisionally they get 30% subsidy.
நீக்கு