A.K. மிட்டல் |
இவரது குடும்பமானது உலகம் முழுவதும் பறந்து விரிந்தது. பார்வையற்ற சமூகத்தையும், சமத்துவச் சமுதாயத்தை உருவாக்க உழைக்கின்ற, அதற்காகத் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்ற பல செயல்பாட்டாளர்களையும் உள்ளடக்கியது. உலகப் பார்வையற்றோர் அமைப்பின் (World Blind Union-WBU) பொருளாளராகவும், தற்போதைய பொதுச் செயலாளராகவும் பணியாற்றிய இவர், பலதரப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் உயர வழிவகுத்திருக்கின்றார். அப்படிப் பார்த்தால், இந்த வகையில் பயனடைந்த அனைவருமே இவருடைய குடும்பத்தவர் என்று சொன்னால் அது மிகையாகாது. இவர் விரும்பிய சிறப்பான மேதைமையை எய்துவதற்குப் பார்வையின்மை ஒருபோதும் தடையாக இருந்ததில்லை.
ஏ. கே. மிட்டல் அவர்கள் 2007 முதல் தலைவராகப் பணியாற்றிய அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பின் (All India confederation of the blind-AICB) பொதுச்செயலாளராகிய திரு ஜெ.எல். கௌல் அவர்கள் தமது இரங்கல் பதிவில், "எமது கூட்டமைப்பின் தலைவரும், நீண்ட நாள் நண்பரும், நலவிரும்பியுமாகிய மிட்டல் அவர்கள் இப்போது எம்முடன் இல்லை. நமது நாடு ஒரு சிறந்த மனிதரை இழந்துவிட்டது என்பதும், தேசிய அளவில் மட்டுமல்ல; சர்வதேச அளவிலும் இவரது இழப்பு ஈடுகட்ட முடியாதது என்பதும் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவரைப் போன்ற அறிவுக் கூர்மையுள்ள மனிதரை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை" என்று கனத்த மனதுடன் குறிப்பிடுகின்றார்.
"கல்வி என்பது திறன் மேம்பாட்டின் திறவுகோல்" என்பது அவர் அதிகம் பயன்படுத்திய சொல்லாடல். புதுடில்லியில் உள்ள பார்வையற்றோர் துயர் துடைக்கும் சங்கம் (Blaind Relief Association-BRA) நடத்திவருகின்ற ஜே.வி.எம் மேல்நிலைப் பள்ளீயில் JVM Senior Secondary School முதல்வராகப் பொறுப்பேற்ற இவர், நெறிபிறழ் நடத்தை உடைய நூற்றுக்கணக்கான மாணவர்களைத் திருத்தி,, மிகச் சிறந்த வழிகாட்டியாக விளங்கியிருக்கிறார். அவருடைய மாணவர்களில் பலர் வங்கிப் பணியாளர்களாகவும், ஆசிரியர்களாகவும், குடிமைப் பணி அலுவலர்களாகவும், இன்னும் சில குறிப்பிடத்தகுந்த சிறந்த பதவிகளையும் வகித்து வருகின்றனர்.
இவரது திறமையைப் பாராட்டி மத்திய அரசு முதலில் டேராடூனிலும் பின்னர் சென்னையிலும் உருவாக்கப்பட்ட தேசியப் பார்வையற்றோர் நிறுவனத்திற்குத் (National institute for the Visually handicapped-NIVH) தலைமைப் பொறுப்பை வழங்கிப் பெருமைப் படுத்தியது. இந்நிறுவனத்தில், ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக பார்வையற்றோர் நலன் தொடர்பான சிறப்பான சமூக நடவடிக்கைகளை முன்னெடுத்து அரும்பணி ஆற்றியிருக்கிறார்.
இதற்கிடையில்,, கல்வியியல் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் இவர் பெற்ற இரண்டு முதுகலைப் பட்டங்கள் கல்வியின் மீது இவர்க்கிருந்த தணியாத தாகத்தை இன்றளவும் பறைசாற்றுகின்றன. மேலும் அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ்பெற்ற பெர்கின்ஸ் பார்வையற்றோர் பள்ளியில் கல்வியியலுக்குரிய பட்டயப் படிப்பையும் முடித்து கல்வித் தகுதியைப் பெருக்கிக் கொண்டார் .
இவர் எழுதிய, திருத்தம் செய்த மற்றும் எழுதப் பணித்த அத்தனை புத்தகங்களிலும் சமூக ஒருங்கமைவு, சிறப்புக் கல்வி மற்றும் உத்வேகம் தரக்கூடிய சாதனையாளர்களின் வாழ்க்கை குறிப்புகள் ஆகியவற்றை அதிகம் இடம் பெறச் செய்தார். இந்தச் சாதனையாளர்கள் பட்டியலில் பெரும்பாலோர் இவருடைய முன்னாள் மாணவர்களே.
அரசின் பல்வேறு ஆலோசனைக் குழுக்களில் குறிப்பாக, சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறையின் சமூக நலம் சார்ந்த சட்டங்களின் அணிவகுப்ப்பில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை நல்கிய இவருக்கு நன்றி செலுத்த நமது நாடு எப்போதும் கடமைப் பட்டிருக்கிறது. சில சர்வதேச அமைப்புகள் அவரை அணுகி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை மேம்பாட்டு அடைவுகள் மற்றும் ஐக்கிய நாடு ஊனமுற்றோர் உரிமைகள் பிரகடனம் ஆகியவற்றின் படிப்படியான வளர்ச்சி மற்றும் அமலாக்கத்திற்கு அவரது கருத்துருவை பதிப்பிக்கக் கேட்டுப் பெற்றுக்கொண்டன. இன்னும் நிறைய தலைமைப் பொறுப்புகள் இவரைத் தேடி வந்தன. இவரால் தொழில், கல்வி மற்றும் சமூகச் செயல்பாடுகளில் சமமாக கவனம் செலுத்த முடிந்திருக்கிறது என்பதே பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
இவற்றோடு பார்வையுள்ள மனைவி மீரா மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் அமைதியான குடும்ப வாழ்க்கையிலும் ஈடுபட்டிருக்கிறார். இவரது இளைய மகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இவரை விட்டு நிரந்தரமாகப் பிரிந்திருக்கிறார்.
இவருடைய இழப்பு என்பது ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடக்கிவிட முடியாதது. இவருடைய வாழ்க்கைக்கும் சேவைக்கும் நாம் செலுத்த வேண்டிய மிகச்சிறந்த அஞ்சலி யாதெனில், நாம் இரண்டு வகைகளில் நம்மை அர்ப்பணிக்க வேண்டும்.
1. பார்வையின்மையைத் தடையாகக் கருதாமல் முழு மேதைமையை அடைதல்
2. உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட ஒருங்கிணைந்த சமூகத்தை உருவாக்குதல் ஆகியவையே அவை.
இவரைப் போல இன்னொருவர் இந்த பூமியில் பிறப்பது எப்போதும் சாத்தியம் இல்லைதான்!!!
(நன்றி: Braille digest பிரெயில் இதழ் செப்டம்பர்-அக்டோபர் 2020)
தமிழாக்கம்: X. செலின்மேரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக