|
“என்ன தம்பி எப்பிடி இருக்க?”
“நான் ரொம்ப நல்லா இருக்கேனுதான் சொல்லணும்னு நெனைக்குறேன் நம்பி. ஆனா நல்லா இருக்கேன்னு சொல்லுற அளவுக்கு இங்க யாருமே நல்லா இல்லங்குரப்போ எப்பிடி நல்லா இருக்கேன்னு சொல்ல முடியும்?”
“உன்னைய யாரு நல்லா இருக்கேன்னு சொல்லச் சொன்னா? நல்லா இல்லன்னா நல்லா இல்லன்னே சொல்லிட வேண்டியதுதானே? இப்போ என்னைய நீ கேளேன்”
“சரி வேணாம் விடு.”
“சும்மா கேளு தம்பி.”
“வேணாம் நம்பி.”
“அட சும்மா கேளு தம்பி.”
“சரி போயி தொல” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்ட ஆசைத் தம்பி நம்பியைப் பார்த்து,
“எப்பிடி இருக்க?” என்றான்.
“நான் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கேன்.” என்று முடித்த அறிவுடை நம்பி “இதுக்கு நான் ஏடாகூடமா ஏதாச்சும் சொல்லுவேணுன்னுதானே நெனச்சே?” என்றான் தம்பியைப் பார்த்து.
“ஆமா.”
“நல்லா இல்லன்னாலும் நல்லா இருக்கேன்னு சொல்லுறதுதான் இந்த நம்பியோட பழக்கம்.”
“அது ரொம்ப நல்ல பழக்கம்தான் ஒத்துக்குறேன். ஆனா நல்லா இருந்தாலும்
நல்லா இல்லன்னு சொல்லுறதுதாண்டா இந்த ஆசைத் தம்பியோட அடிப்படை பழக்கம்.”“அதுசரி. பாசிடிவிடி இல்லாத கூட்டம்டா நீங்க எல்லாம். பார்வை இல்லாதவங்களைப் பாத்து பாசிடிவிடி அப்பிடினா என்னணு கத்துக்கோங்க. ”
“ஹஹஹஹ! இப்போவெல்லாம் கூட்டம், பாசிடிவ் இந்த வார்த்தைக்கெல்லாம்தான் மக்கள் அதிகமா பயப்படுறாங்க மிஸ்டர் அறிவுடைநம்பி. அதுசரி இதுல பார்வை இல்லாதவங்க எங்க வந்தாங்க?
“இல்ல தம்பி. பொதுவாவே பெரும்பாலானோருக்கு தனியாப் போறதுல ஒருசில சிரமங்கள் இருக்குறதப் பாத்திருக்கோம். ஆனா பார்வை இல்லாதவங்களும் இந்தச் சமூதாயத்துல தனியாப் பயணம் பண்ணுறத பாக்கும்போது வியப்பா இருக்கு. அதைத்தான் பாசிடிவிடினு சொன்னேன்.”
“ஆமாம் நம்பி. அவங்களுடைய ஒவ்வொரு பயணமும் எவ்வளவு ரிஸ்கா இருக்குல்ல? அவங்களோட தன்னிச்சையான பயணம், அது சம்மந்தமா அவங்களுக்கு கிடைச்ச வித்தியாசமான அனுபவங்களைப் பத்தின ஒரு கட்டுரைய நீ எழுதேன்! நல்லா இருக்கும்.”
“அதுக்குதாண்டா கதையெல்லாம் கேட்டுட்டு வந்தேன்.”
“அப்போ சொல்லு. ஆனா அதுக்கு முன்னாடி ஒரு கேள்வி.”
“கேளு.”
“பெரும்பாலான பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குக் குடும்பம் இருக்கும்.”
“ஆமாம் இருக்கும். அதுக்கென்ன இப்போ?”
“முழுசாக் கேளு.”
“நீ கேள்விய முழுசாக் கேளுடா.”
“அதுதான் கேக்கவறேன். அவங்க குடும்பத்துல யாராச்சும் கூட்டிட்டுப் போகலாம் இல்லையா? இந்த நாட்டுல பார்வை தெரிஞ்சவங்களே தனியா போறதுல ஏகப்பட்ட சிக்கல். பேருந்து நிறுத்தத்துல நிற்காது. ரயில் நடைமேடைக்குப் பக்கத்துல நிற்காது. பைக் காரங்களும் ஆட்டோ காரங்களும் இஷ்டத்துக்கு வண்டிய நிற்க வெச்சிருப்பாங்க. எவன் எங்க எச்சி துப்பிவெச்சிருக்கான்னு தெரியாது. எல்லாத்துக்கும் மேல எதுக்கு ஒடுரானுங்கனே தெரியாம ஒடுரானுங்க. யார இடிக்குராங்கனே தெரியாது. நம்மள இடிச்சுட்டு பத்து அடி தள்ளிப் போயி எவங்கிட்டையோ சாரி கேட்டுட்டு, அடுத்த ரயில் அஞ்சி நிமிஷத்துல வந்திடும்னு தெரிஞ்சும், அவசர அவசரமா ஓடி ஆளே இல்லாத பெட்டிக்குள்ள அஞ்சிரூபா கர்ச்சிப்ப போட்டு எடம் பிடிக்குரானுங்க. இன்னும் சொல்லனும்னா நிறையா சொல்லலாம். ஆனா இப்போதைக்கு இவ்வளவுதான் தோணுச்சி. அதனால இந்த மாதிரி இருக்கும்போது இவங்க எதுக்கு தனியாப் போயி கஷ்டப்படுறாங்கன்னுதான் கேக்குறேன்.”
“சரி. மூனு உதாரணம் சொல்லுறேன். அதுல முக்கியமானது மணிகண்டனுடையது. அவரு படிக்குற காலத்துல பாட்டி இறந்து போறாங்க. நீ சொன்னா மாதிரி குடும்பம் இருக்கு. வீட்டுல இருந்து தகவல் வருது. ஆனா தகவல் மட்டும்தான். பாட்டி பாசமானவங்க. போயிட்டாங்க. இப்போ என்ன பண்ண முடியும்னு நினைக்குற? தனியா கிளம்பி வீடு போயி சேந்தாறு மணிகண்டன். பார்வ இல்ல அப்படிங்குர ஒரே காரணத்துக்காக பாட்டியோட இறுதிச் சடங்குக்குப் போகக்கூடாதுன்னு ஏதாச்சும் இருக்கா என்ன?”
தம்பி எதுவும் பேசவில்லை.
“அடுத்த சம்பவம். நண்பன் வந்து சைக்கிளில கூட்டிட்டு போறேனு சொன்னத நம்பி பேருந்து நிலையத்துல உட்கார்ந்திருந்தாரு நம்ம ஜியா. ராமகிருஷ்ணா மிஷன் போகணும். நண்பன் வரல. ஜியாவுக்கு தெரிஞ்ச ஒரு டீச்சர் வந்து இவர பஸ்ஸேத்தி விட பள்ளி வந்து சேர்ந்திருக்காரு. பக்கத்துல பாத்தா ஜியாவோட நண்பன். தன்னைய கூட்டிட்டு போறதா சொன்ன நண்பன் பேருந்து நிலையத்துக்கு வராததுனால ஒருவேளை லீவு போட்டிருப்பானோனு நெனச்ச ஜியாவுக்கு ஏமாற்றம். அந்த பையன் சைக்கிளிலதான் வந்திருக்கான்னு எப்படியோ தெரிஞ்சிக்கிட்ட ஜியா அந்த பையன் கிட்ட ஏன் எதுக்குனு எதுவும் கேக்கல. பிரன்ஷிப் பிரேக்கப் ஆயிடிச்சு.”
“அந்த சம்பவம்தான் ஜியாவத் தனியாப் போகவேச்சிது. மணிகண்டனுக்கு குடும்பத்தால தனியா போற நிலைமை. ஜியாவுக்கு” என்று நம்பி சொல்லி முடிப்பதற்குள்,
“நன்பேன்டா! அடச்சே துரோகிடா! ஒத்தையில போறேன்! ஒத்தையில போறேன்! சத்தியமா நானும்...” என்று தம்பி மீண்டும் பாடத் துவங்க,
“சத்தியமா நானும் கிளம்பிடுவேண்டா. கொஞ்ச நேரம் கத்தாம இரு.”
“சரி விடு. ஏதோ ஒரு கட்டாயத்துல தனியாப் போகவேண்டியதா இருக்கு.”“ஆமா. நம்ம சங்கிலி கூட பஸ் பாஸ் வாங்கத் தடையில்லாச் சான்றிதழ வாங்கிட்டு அத உடனே சம்மந்தப்பட்ட அலுவலகத்துல சமர்ப்பிக்கனும்னு ஒரு நிலைமை வந்ததால முதல் முறையா தனியா போனாராம்.”
“அப்போ வேற வழி இல்லங்குர.”
“ஆமாம்.”
“சரி நம்ம வெங்கடேஷ் ஏதாச்சும் சொன்னாரா? சொல்லியிருந்தா அவருடைய கதையைச் சொல்லு கேப்போம்.”
“பொதுவா நம்ம ஜனங்களுக்குப் பார்வையில்லாதவங்களப் பாத்தா கொஞ்சம் இல்ல இல்ல ரொம்பவே அண்டர் எஸ்டீமேட் பன்னுற பழக்கம் இருக்கு. அதுவும் அவங்க தனியாப் பயணம் பன்னும்போது இவங்க பன்னுற கொடுமை இருக்கே!” என்று நம்பி முடிக்க,
“என்னாச்சு வெங்கடேஷுக்கு.”
“சொல்லுறேன். ஆனா வெங்கடேஷோட கதைய கட்டுரையில எழுதுறது ரொம்ப சவாலானது. அதுக்கே தனியா ஒரு கட்டுரை தேவைப்படும். இருந்தாலும் அவரு பதினைந்து நிமிஷத்துல சொன்னத சும்மா ரெண்டே நிமிஷத்துல சொல்லுறேன் கேளு.”
“சரி சொல்லு.”
“சித்தூரிலிருந்து சென்னைக்கு வர சிறப்புப் பேருந்து கூட கிடைக்காத நம்ம வெங்கடேஷ் ஏதோ ஒரு பஸ்ஸ பிடிச்சி ஏகாம்பரக் குப்பத்தில இறங்கி, திருப்பதியிலிருந்து சென்னைக்கு வந்த ரயிலப் பிடிச்சி, நைட்டு ஒரு ஒன்பது மணி போல சென்ட்ரல் வந்து சேர, ‘இது செண்டரல்தான்’ அப்படின்னு நம்ம வெங்கடேஷ் ஸ்டிராங்கா நெனச்சி இறங்க நினைக்க, ‘இது சென்ட்ரல் இல்ல. இன்னும் போகனும். இது செண்டரலோட புறநகர் ப்ராஞ்ச். வண்டி எங்கேயோ நிக்குது. உங்களுக்கு வேணும்னா இறங்கிக்கோங்க’ அப்பிடின்னு ஒருத்தரு ரான்கா அட்வைஸ் பன்ன, அவரும் ரூட்டுக்குப் புதுசு; வெங்கடேஷும் ரூட்டுக்குப் புதுசு; அந்தக் கம்பாட்மெண்டில இருந்த இன்னும் ஒரு 20 பேரும் ரூட்டுக்குப் புதுசு. நம்ம ஆளுங்கதான் பார்வை இல்லாதவங்க எது சொன்னாலும் நம்பமாட்டாங்களே! ரூட்டுக்குப் புதுசுன்னு வெங்கடேஷும் பத்துநிமிஷமா சத்தமில்லாம நின்ன ரயிலுக்குள்ள சத்தமில்லாம நிற்க, ஒரு சங்க ஊதி எடுத்தான் பாரு அரக்கோணத்துக்கு வண்டிய ரிவர்சுல”
|
“ஐயையோ!” என்று ஆசை அலற,
“உன்னைய மாதிரியே உள்ள இருந்த இருபது பேரும் அலற, ‘தம்பி அப்பவே சொன்னாரு இது சென்ட்ரல்னு. நீங்கதான் கேக்கல’ அப்படின்னு ரான்கா ஜட்ஜிமெண்டு குடுத்தவர லெஃப்ட் ரைட் வாங்கி மொத்தக் கூட்டமும் வெங்கடேஷ் பக்கம் நிற்க, பேசன் பிரிட்சிள ரயில் நிற்க, விஷயம் தெரியாத கூட்டம் வேகமா ரயில விட்டு எக்ஸித் ஆக, நம்ம டிக்கட் பரிசோதகர் என்ட்ரி.”
“ஓ மை காட்!”
“’என் சோகக் கதையக் கேளூ டீட்டீயாரே’ அப்பிடின்னு மொத்தக் கூட்டமும் பாட, இவுங்ககிட்ட இருந்து ஒத்த ரூபாகூட வாங்கமுடியாதுன்னு ஒத்த நொடியில புரிஞ்சிக்கிட்ட நம்ம பாவப்பட்ட பரிசோதகர், ‘அதோ வருது பாருங்க. அதுதான் கடைசி ரயில். இத விட்டா அவ்வளவுதான்.’ அப்பிடினு சொல்ல, டக்குன்னு வந்து டபார்னு காணாம போன நம்ம மக்கள் நலக் கூட்டணி மாதிரி, அதுவரைக்கும் வெங்கடேஷுக்காக நின்ன அத்தன பேரும் அடுத்த ரயிலப் பாத்ததும் எஸ்கேப்.”
“ஐயையோ! அப்புறம்?”
“அப்புறம் என்ன? நடுவுல வந்த ரயிலில இருந்து இறங்குன ஒருத்தரு இவருக்கு உதவ, சென்ட்ரல் போற ரயிலுக்கு கடகடனு ஓடி, ஓடுர ரயிலில இவர அந்த நல்ல மனுஷன் எப்படியோ ஏத்திவிட, ‘பரவாயில்லையே! வந்துட்டீங்களே!’ அப்படின்னு அந்த 20 பேரில ஒருத்தர் கேக்க, .” என்று நம்பி சொல்லிக்கொண்டிருக்கும்போதே,
“இவுங்க எல்லாம் மனுஷங்களா! விட்டுட்டு ஓடிப்போயிட்டு இப்போ மட்டும் நலம் விசாரிக்குரானுங்க.”
“ஏன்டா இவ்வளவு கோவப்படுர?”
“பின்ன என்னடா நம்பி. நைட்டு ஒன்பது மணிக்குமேலனு வேற சொல்லுற. கடைசி ரயில்னு வேற டி.டி.ஆர் சொன்னதா வேற சொல்லுற. கண்ணு தெரியாதவரு பழக்கமில்லாத இடத்துல என்ன பன்ன முடியும்? எப்படி ரயிலப் பிடிக்கமுடியும். கொஞ்சமாச்சும் மனசாட்சி வேணாம்?”
“அந்த நேரத்துல அதெல்லாம் அவங்க கிட்ட எதிர் பார்க்க முடியாது தம்பி. நாம எப்படியாச்சும் ரயிலப் பிடிச்சிடனும்னுதான் நெனப்பாங்க. அதையும் மீறி உதவி செய்யனும்னு நெனைக்குறவங்கதான் மனிதனுக்கும் ஒரு படி மேலனு தங்கள நிரூபிப்பாங்க. எல்லாத்துக்கும் மேல வெங்கடேஷுக்கு ரயில்வழி புதுசு. ஆனா இப்போவெல்லாம் ரயிலில பயணம் செய்யுறது ரொம்ப சுலபமாச்சுது. தொழில்நுட்பத்துல நாங்க மத்தவங்களுக்கு சலச்சவங்க இல்லன்னு நிரூபிச்சிட்டிருக்கிற பார்வை மாற்றுத்திறனாளிகள் அதை பயன்படுத்திக்கனும்.”
“எதைப் பயன்படுத்திக்கனும் நம்பி?”
“அப்ளிகேஷந்தான் தம்பி. செயலின்னு சொல்லுவாங்களே அதுதான். குறிப்பா (Where is my train) செயலிய ரயிலில போற எல்லா பார்வை மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தனும். அப்படிப் பன்னினா மத்தவங்களோட உதவிய 90% தவிர்க்கலாம். அது மட்டுமில்லாம, நாம இறங்க வேண்டிய ஊரு வரதுக்கு முன்னாடி அலாம் கூட அந்த செயலில செட் பண்ணி வெச்சிக்கலாம். நாம எந்த ரயிலில ஏறி இருக்கோம்னு மட்டும் தெரிஞ்சாப் போதும் அந்த (Where is my train) செயலிக்குள்ள போயி நாம இருக்க ரயில் பேர அடிச்சா நாம எங்க இருக்கோம்னும் எப்போ போயி சேருவோம்னும் அது கரெக்டா சொல்லிடும். இது நெறைய பேருக்குத் தெரிஞ்சிருந்தாலும், ரயிலுக்குப் புதுசா வர்றவங்களுக்கு ரொம்பப் பயனுள்ளதா இருக்கும்.”
“எப்பிடியோ ஊரு போயி சேர்ந்தாரா வெங்கடேஷ்?”
“ஒரு வழியா. சென்ட்ரல் ரயில் நிலையத்துல ஒரு குடிகாரரோட உதவியோட வெளில வந்து, அப்புறம் இன்னொருத்தரு கூட பூங்கா வந்து, அப்புறம் இன்னொரு ரயில் ஏறி போயி சேந்தாரு. இதுல முக்கியமான விஷயம் என்னன்னா வெங்கடேஷ் கையில ஸ்டிக் இல்ல.”
“ஸ்டிக்னா அந்த குச்சி தானே? எதுக்கு இல்ல?”
“இதையேதான் அந்த குடிமகனும் வெங்கடேச பாத்து கேட்டிருக்காரு. ‘கொம்பு எங்கடா!’ அப்படினு.”
“என்னதான் குடிச்சிருந்தாலும் கேள்வி கரெக்டு தானே?”
“ஆமா. ஆனா வெங்கடேஷ் வெச்சிருந்த வெண்கோல அவருடைய இன்னொரு பயணத்துல ஒரு திருநங்கை பிடிங்கி தூக்கி ரயிலுக்கு வெளில போட்டுட்டாங்கலாம்.”
“ஏன்?”
“அந்தத் திருநங்கை குடிச்சுட்டு இவருகிட்ட காசு கேக்க, இவரு இல்லன்னு சொல்ல, இவருடைய கையில வெச்சிருந்த கெயின (அதுதான் வாக்கிங் ஸ்டிக்) தூக்கி வெளில போட்டுட்டு உடனே இறங்கிப் போயிட்டாங்களாம்.”
“அடக் கொடுமையே! அந்த நிமிஷம் எப்படி இருந்திருக்கும்?” என்று தம்பி ஆதங்கப்பட,
“ஒரு கையே ஓடஞ்சமாதிரி இருந்திச்சுனு சொன்னாரு வெங்கடேஷ். அதுக்கப்புறம் கெயின் இல்லாமலும் பழகிட்டாராம்” என்றான் நம்பி.
நீ என்னதான் சொல்லு நம்பி. பார்வை இல்லாத யாரும் கெயின் இல்லாம வெளில போகக்கூடாது. அப்படிப் போனா அபராதம் விதிக்கணும்.”
“எது அபராதமா? இது கொஞ்சம் ஓவரா தெரியல?”
“எனக்குத் தெரியல நம்பி. நீயே சொன்னீயே அந்த திருநங்கை வெங்கடேஷோட கெயின தூக்கி எரிஞ்ச அந்த நிமிஷம் அவருக்கு ஒரு கை போனா மாதிரி இருந்துச்சுன்னு. என்னையப் பொருத்தவரைக்கும் தனியா பயணம் பன்னுற பார்வையற்ற நண்பர்களுக்கு அவங்களுடைய கெயிந்தான் கண், கை, உயிர் காக்கும் கருவி எல்லாமே” என்று ஆசைத் தம்பி ஆக்ரோஷமாக பேசி அடங்கினான். எப்போதுமே காமடியாகவே பேசிக்கொண்டிருக்கும் ஆசைத் தம்பி ஏன் திடீரென்று காட்டமாக பேச ஆரம்பிக்கிறான் என்று புரியாத நம்பி இவனை இன்னும் கொஞ்சம் கிளறுவோம் என்ற நினைப்பில்,
“இதுக்கு இவ்வளவு எமோஷன் தேவையா தம்பி?” என்று வினவி முடிக்கும் முன்னமே
“இங்க பாரு. இந்த ஏடாகூடமா கேள்வி கேக்குற வேலையெல்லாம் என்கிட்ட வெச்சிக்காத. என்ன கிளறிப் பாக்குறியா? ஏன் உனக்குத் தெரியாது, தனியா பயணம் பன்னுற பார்வையில்லாதவங்களுக்கு எதுக்கு கட்டாயமா கெயின் அவசியம் அப்பிடினு? கட்டுரை எழுதுறவந்தானே நீ. ஒரு பொறுப்பு கிடையாது? ஒரு ரெஸ்பான்சிபிலிட்டி கிடையாது?”
“பொறுப்பு, ரெஸ்பான்சிபிலிட்டி ரெண்டும் ஒன்னுதான் தம்பி” என்று மீண்டும் நம்பி தம்பியைக் கலாய்த்துக் கடுப்பாக்கிவிட, ஆத்திரத்தில் நிதானத்தை இழக்கிறோம் என்று உணர்ந்த ஆசைத் தம்பி ஆவேசம் தணிந்தவனாய் நம்பியைப் பார்த்து,
“எங்கேயாச்சும் நிலை தடுமாறி விழுந்தாங்கன்னா என்ன பன்ன முடியும் நம்பி? நீ போயி தூக்கிவிடுவியா?” என்று தம்பி கேட்க,
“ஆமாம். அங்கிருந்தா தூக்கிவிடுவேன்>? நீ இதைச் சொல்லும்போதுதான் ஒன்னு ஞாபகம் வருது.” என்று சொல்லிய நம்பி, தம்பியின் பதிலைக் கூட எதிர்பாராமல் மீண்டும் பேசத்தொடங்கினான்.
“கோபால கிருஷ்ணன்னு ஒருத்தரு சுமார் ஒரு ஏழு அடி பள்ளத்துல மல்லாக்க விழுந்து, அப்புறம் எழுந்து, அவருடைய பொருளெல்லாம் எடுத்துக்கிட்டு மேல கை தூக்கிக் காட்ட, ஒரு பெண் குரல் குடுக்க, மக்கள் வந்து அந்த இடத்துல கூட, ஒருத்தர் உள்ள குதிச்சி இன்னொருத்தர் கோபாலகிருஷ்ணன மேலிருந்து தூக்கிவிட, பின்னாடி பை மாட்டி இருந்ததால பெருசா அடி இல்ல கோபாலுக்கு. ஆனா கையில கெயின் இருந்தும் இடறிட்டாரு. அவ்வளவு பெரிய பள்ளத்துக்கு கெயின் கூட ஈடு கொடுக்க முடியல. விழுந்துட்டாரு. ” என்று நம்பி முடிக்க,
“உண்மையிலேயே பாவம்தான் நம்பி. கையில கெயின் இருந்தே இந்த நெலமன்னா பாத்துக்கோ.”
“இவன் இந்த கெயின் பிரச்சினைய விடமாட்டான் போலிருக்கே.”
“என்ன யோசிக்குற நம்பி?”
“இல்ல வை ஆர் யூ ஸ்டிக்கிங் ஆண் ஸ்டிக் மேன்? (Why are you sticking on stick man)?”
“உனக்குத் தெரியும் நம்பி. ஆனா நீ என்ன வேனும்னே கேக்குற. சரி எப்பவுமே முகநூல் பக்கத்துல தன்னுடைய பயணத்தைப் பத்தி எழுதுற நம்ம பொன் சக்திவேல் ஏதாச்சும் சொன்னாரா?”
“நிறைய சொன்னாரு. அதுல ஒன்னு சொல்லுறேன். இவரு பேருந்துல நின்னுட்டிருக்கும்போது, ஒரு வயசானவரு வந்து அவருடைய செல்போனக் காட்டி ஏதோ நம்பர் சொல்லச் சொல்லியிருக்காரு. இவரு பார்வை தெரியாதுனு சொல்லியிருக்காரு. அப்புறம் இவருடைய ஊரு வந்திச்சு. தொடர்ந்து வர்ற நாலு வேகத்தடைதான் இவர் வச்சிருக்கிற அடையாளம். நாலு வேகத்தடை வந்ததும் அடுத்த நிறுத்தத்துல நம்ம சக்திவேல் இறங்க,” என்று நம்பி சம்பவத்துக்கு காற்புள்ளி வைக்க,
“மிச்சத்த நான் சொல்லுறேன்” என்ற தம்பி,
“கண்ணு தெரியாதுன்னு பொய் சொல்லிட்டுப் போறான் பாருனு அந்த வயசானவரு பொன் சக்திவேல பொறிஞ்சி தள்ளியிருப்பாரு. கரெக்டா?”
“பா! அதேதான்! எப்பிடி தம்பி இப்பிடி? இந்த டேலெண்டயெல்லாம் எங்க ஒளிச்சு வெச்சிருந்த தம்பி?”
“ஹாஹாஹா! டேலெண்டெல்லாம் ஒன்னுமில்ல பிரதர்! கிருப கிருப எல்லாம் கிருபதான்.”
“வந்ததுலிருந்து ஒரு மார்க்கமாவே இருக்கானே இவன்” என்று மனதுக்குள் நினைத்துக்கொண்ட நம்பி,
“ஏன்! ஏன்! ஏன்!” என்று தம்பியைப் பார்த்து சிரித்தபடி கேட்டுவிட்டு,
“நீ கிருப கிருபனு சொன்னதும்தான் எனக்கு நம்ம மனோகர் சொன்னது நினைவுக்கு வருது. அவரு தனியாப் போகும்போது ஒருத்தருக்கிட்ட பேருந்து வந்தா சொல்லச் சொல்லியிருக்கார். அந்த மனுஷனும் சரினு சொல்லிட்டு ‘உங்களுக்குப் பார்வையில்ல. அதனால நீங்க ஆண்டவராகிய அந்தக் கர்த்தர கும்பிடுங்க. உங்களுக்குப் பார்வை வந்திடும்னு ஆரம்பிச்சிட்டாறு.”
“அவ்வளவு சீக்கிரத்துல விட்டிருக்க மாட்டாரே அந்த மனுஷன்?”
“கரெக்டு. அதுக்கு நம்ம மனோகர் ‘நம்ம நாட்டுல கிட்டத்தட்ட ஒரு கோடிக்குமேல் பார்வையில்லாதவங்க இருக்காங்க. உங்க கர்த்தர் எல்லாரையும் குணப்படுத்த ஐபேங்கா வெச்சிருக்காரு?’ அப்பிடின்னு கேக்க,”
“உடனே சொல்லாம கொல்லாம காணாம போயிருப்பாரே?”
“இன்னைக்கு நீ செம்ம பாமுல இருக்க போல தம்பி!” என்று ஆசைத் தம்பியை வியப்புடன் புகழ்ந்த அறிவுடை நம்பி,
“நீ காணாம போயிட்டாரா அப்பிடினு கேக்கும்போதுதான் இன்னொரு விஷயம் நினைவுக்கு வருது.”
“யாரு நம்ம அனாசீரா?” என்று தம்பி குத்துமதிப்பாய் கேட்க,
“எப்பிடிடா!” என்று நம்பி வியப்புடன் கேட்க,
“இல்ல. இது சும்மா அடிச்சுவிட்டதுதான். உண்மையிலேயே அவருடைய அனுபவம்தானா அடுத்து! சொல்லு சொல்லு.” என்று அதற்கு தம்பி ஆர்வமுடன் கேட்க,
“ஆமாம். பள்ளிப்படிப்ப முடிச்சுட்டு ஊருக்கு கிளம்பி பேருந்துல தன்னுடைய சூட்கேச வெச்சிட்டு ஸ்டாப்பிங்க் வந்ததும் எழுந்து சூட்கேச எடுக்கப் போனா,”
“சூட்கேசக் காணும் கரெக்டா!”
“அடேங்கப்பா! கூட பயணம் பன்னவன் மாதிரியே கரெக்டா கண்டுபிடிக்குற? உண்மையச் சொல்லு அன்னைக்கு அனாசிரோட சூட்கேச அடிச்சது நீதான?”
“பா! என்ன கலாய்ச்சிட்டாராமா! டே. நீ எடுக்குற லீட வெச்சே எதுக்குன்னு ரீட் பன்னுறவன்டா இந்த ஆசைத்தம்பி. அதிகம் பேசாம அடுத்து நடந்ததச் சொல்லு.”
“அடுத்து என்ன! அனாசிர் இறங்குனவுடனே அவர் கூடவே இறங்குன ஒருத்தரு அனாசீருக்கு உதவிக்கு வர, அந்த நேரம் பாத்து போலீஸ் ஸ்பாட்டுக்கு வர, கூட வந்தவரு அனாசிற போலிஸ்கிட்ட கூட்டிவர, விஷயம் போலீஸ் காதுக்கு வர, ‘ஒருத்தரு இப்போதானே ஒரு சூட்கேசோட போராறு!’ அப்பிடினு அங்கிருந்தவரு ஒருத்தர் மூலமா இவங்களுக்கு தகவல் வர, உடனே அந்த சூட்கேசக் கொண்டுபோனவற கூட்டிட்டு வர, ‘எப்பிடியாச்சும் என்னுடைய சூட்கேச வாங்கிக்கொடுத்திடுங்க’ அப்பிடினு அனாசிர் கேக்கும்போதே அவருக்கு கண்ணீர்வர, ‘இது என் சூட்கேசு நான் தரமாட்டேன்’ அப்பிடினு சொல்லி அந்த ஆலு அனாசிற அடிக்கவர, போலீஸ் தடுக்கவர ஒருவழியா சூட்கேச வாங்கி அனாசிர்கிட்ட இருந்து சாவிய வாங்கித் திறந்து பாத்தா.” என்று நம்பி நிறுத்த, உடனே ஆசைதம்பி தொடர்ந்தான்.
“சூட்கேசு அனாசீருடையது. கரெக்டா. இன்னொரு விஷயமும் சொல்லுறேன் கேளு நம்பி. அந்த ஆளு திருடிட்டு போயிருக்க மாட்டான். தெரியாம மாத்தி எடுத்துட்டு போயிருப்பான் கரெக்டா?”
அதற்கு நம்பி ஆச்சர்யத்துடன் “எப்படி!” என்று கேட்கும் முன்னமே,
“எப்பிடினு மட்டும் கேக்காத. திருடி இருந்தா ஓடி இருப்பான். அது மட்டுமில்லாம என்னுடைய சூட்கேசுன்னு வாதம் பன்னியிருக்க மாட்டான்” என்று அறிவுடன் பேசிய தம்பி அப்படியே தொடர்ந்தான்.
“ஆனா ஒன்னு மட்டும் சொல்லுறேன் நம்பி. தனியாப் பயணம் பன்னும்போது நமக்கே பொருள் காணாம போச்சுனா எப்பிடி இருக்கும். அவங்களப் பத்தி நெனச்சா ரொம்ப கஷ்டமாதான் இருக்கு. கொண்டுபோனவன் யாருன்னு கூடத் தெரியாம இருக்குறது எவ்வளவு கொடுமனு புரியுது. ஆனா பார்வையில்லாதவங்க தனியா போகும்போது அவங்களோட பொருளெல்லாம் அவங்களோட கைக்கு பக்கத்திலியே இருக்குறமாதிரி வெச்சிக்கனும். சில பேரு மேல வைங்க, அங்க வைங்கணு எல்லாம் சொல்லுவாங்க. அதெல்லாம் இவங்களுக்குச் சரிப்பட்டு வராது.”
“இந்த மாதிரி நெறைய பேருக்கு நடந்திருக்கு தம்பி. ஒருவாட்டி நம்ம ராஜாவோட பாக்கெட்டில இருந்து செல்போனத் திருட ஒருத்தன் முயற்சி பண்ணி, நல்லவேல ராஜா கண்டுபிடிச்சுட்டாறு.”
“யாரு நம்ம அரங்க ராஜாவா?”
“ஆமா அவருதான். அவருடைய அனுபவங்கள் இன்னும் கொடுமையானது. ரெண்டு முர ஜஸ்டு மிஸ்ல உயிர் தப்பிச்சிருக்காரு.”
“அதுவும் ஒருமுற சாலையோர நடைபாதையில கட்சி பேனர் வெச்சி இவருக்கு எப்பிடிப் போறதுன்னு தெரியாம கொஞ்சம் வலப்புறம் நகர, பின்னாடி வந்த பேருந்து லாஸ்டு மினிட்ல பிரேக் அடிக்கலன்னா போயி சேர்ந்திருப்பாரு. அப்பவும் வண்டி தட்டி கீழே விழுந்திட்டாறு ராஜா. முன் சக்கரம் மேல ஏறி இருந்தா மேலதான்.”
“பேனரெல்லாம் வெக்கக்கூடாதுனு ஐக்கோர்டே சொல்லியிருக்கே!” என்றான் ஆசைத் தம்பி.
“இப்போ இருக்குற அரசியல்வாதிங்களுக்கெல்லாம் ஐக்கோர்டாவது,”
“டே டே!”
“சுப்ரீன் கோர்ட்டாவதுனு சொல்லவந்தேன். காசிருந்தா போதும். காசு கொடுத்து எல்லாத்தையும் சாதிச்சிடலாம்னு நெனைக்குறாங்க” என்றான் நம்பி.
“காசு கொடுத்துன்னு சொல்லும்போதுதான் ஒரு விஷயம் கேக்கனும்னு தோனுது.” என்று தம்பி நிறுத்த,
“பார்வை இல்லாதவங்க தனியா போகும்போது யாராச்சும் காசு கொடுத்தாங்கலானு கேக்குற. அப்டிதான? நிறைய பேருக்கு அப்டி நடந்திருக்கு. நம்ம மனோகருக்கு ஒருத்தரு காசு கொடுக்க மேல ஒரு ரூபா வெச்சி திருப்பி கொடுத்துட்டாராம். நம்ம ராஜா திருப்பதியில தரிசனம் பாக்கப் போகும்போது ஒருத்தரு மின்னல் வேகத்துல வந்து ராஜா கையில ஒரு இருபது ரூபாய வெச்சிட்டு போயிட்டாராம்.”
“அப்புறம்?”
“இவரு கத்திக் கூட பயனில்ல. கொடுத்தவரு எங்கேயோ போயிட்டாறு.”
“அந்த இருபது ரூபா என்னாச்சு? வேற வழியில்லாம ராஜாவே வெச்சிக்கிட்டாரா?” என்று தம்பி கேட்க,
“அவரு ராஜா டா. உன்னைய மாதிரி பிச்சைக்காரன் இல்ல. கோயில் உண்டியலில போட்டுட்டாராம்.”
“அடுத்தவங்க பணத்த வெச்சிக்கனும்னு நினைக்குறது பெரிய பாவம். இருபது ரூபாதானே யாரு கேட்கப்போரா. அதுவும் இல்லாம ஒருத்தரு கொடுத்துட்டு போனதுதானேனு இல்லாம கோயில் உண்டியலில போட்டதுக்கு ராஜாவுக்கு வாழ்த்துகள்.”
“நீ பாவம்னு சொன்னதும் எனக்கு ஒரு விஷயம் ஞாபகம் வருது.”
“அதானே! வந்திருக்கனுமே!”
“ஆமாம் தம்பி. இருக்குறதிலேயே பெரிய பாவம் ஒருத்தருடைய அறியாமையப் பயன்படுத்தி அந்த நபருக்கு பாலியல் ரீதியான அசௌகரியங்களக் கொடுக்குறது.”
“இதுக்கும் இந்த தலைப்புக்கும்,”
“என்ன சம்மந்தம் அப்பிடினு கேக்குற. இருக்கு தம்பி. தனியா பயணம் பன்னுற நிறைய பார்வையற்ற ஆண்களுக்கு இந்த மாதிரியெல்லாம் நடந்திருக்காம். அவங்களோட அந்தரங்க உறுப்புல கை வைக்குறது, கிள்ளுறது அப்பிடினு சொல்லுறதுக்கே கஷ்டமா இருக்குற கஷ்டங்களை அனுபவிச்சதா பார்வையற்ற ஒருத்தரு பகிர்ந்துக்கிட்டாறு.”
“அடப்பாவிகளா! மனசாட்சி இல்லாத மனுஷ மிருகங்க. யாருடா உன்கிட்ட சொன்னது?”
“பெயர் வேணாமே.”
“என் கிட்ட கூடவா? சொல்லேன் டா.”
“வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல.”
“சரிவிடு.”
“அப்பிடி இல்ல. இந்த மாதிரியான பாலியல் தொந்தரவு எல்லாருக்கும்தான் நடக்குது. ஆனா துணிச்சலா முன்வந்து சொல்லுறவங்களப் பாத்து ஏதோ அவங்களுக்கு மட்டுமே இது நடந்ததா ஒரு பின்பத்த உருவாக்கிடுவாங்க. அதனாலேயே நிறைய பேரு இதையெல்லாம் பகிர்ந்துக்க மாட்டாங்க. இதுல இன்னொரு கொடுமையும் நடக்கும். பார்வை இல்லாதவங்க பயணத்தின்போது பெண்களைத் தெரியாம உரசினாலோ, மோதினாலோ திட்டு வாங்குறதுக்கான சூழலும் வந்திடுறதா சொள்ளுறாங்க பார்வையற்ற நண்பர்கள்” என்று நம்பி முடிக்க அதுவரை அமைதி காத்த தம்பி,
“எனக்கு ரெண்டு விஷயம் தோனுது. ஒன்னு இவங்க எப்பவுமே கெயின் கையில வெச்சிருக்கனும். அப்பிடி வெச்சிருந்தா தெரியாம யாரையாச்சும் இடிச்சா கூட கெயின் பாத்து புரிஞ்சிப்பாங்க. இன்னொன்னு அரசாங்கமே எல்லாப் பேருந்து நிலையத்திலையும், ரயில் நிலையத்திலையும், இதர முக்கியமான இடங்களிலேயும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்ய கொறஞ்சது ஒரு ரெண்டு பேரையாவது வேலைக்கு அமர்த்தி சம்பளம் கொடுக்கனும். இது இந்தியா முழுசும் நடைமுறைக்கு வரனும். அப்போ நிறைய பேருக்கு வேலையும் கிடைக்கும். மாற்றுத்திறனாளிகளுடைய சிரமமும் கொஞ்சம் குறையும்.” என்று ஆலோசனை சொன்ன தம்பியே தனது கடைசி வார்த்தைகளைப் பேசத் தொடங்கினான்.
“சரி நம்பி இதுல எந்த பார்வையற்ற பெண்ணுடைய அனுபவத்தையும் நீ சொல்லலயே. அப்பிடினா அவங்க யாரும் உன்கிட்ட இதைப்பத்தி சொல்ல முன்வரல அப்பிடிதானே.” என்று தம்பி கேட்க, நம்பி ஆமாம் என்றவாறு தலையசைக்க, ஏன் என்ற ரீதியில் தம்பி புருவத்தை உயர்த்தி நம்பியின் கடைசி பதிலுக்காய் காத்திருந்தான்.
“கண்டிப்பா பார்வையற்ற பெண்களும் தனியா பயணம் செய்யத்தான் செய்யுறாங்க. அப்படி இருக்கும்போது அவங்களுக்கும் மறக்கவே முடியாத வித்தியாசமான அனுபவமெல்லாம் கட்டாயமா இருக்கத்தான் செய்யும். ஆனா என்ன, ஒன்னு, சொல்லுற அளவுக்கு பெருசா எதுவும் இருந்திருக்காது. அப்படி இல்லன்னா எப்பவுமே எங்கையுமே சொல்ல முடியாத அளவுக்கு பெருசா ஏதோ இருந்திருக்கும்.”
(கட்டுரையாளர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றுகிறார். ).
slvinoth.blogspot.com என்ற தளத்தில் தொடர்ந்து எழுதிவருகிறார்)
தொடர்புக்கு: slvinoth91@gmail.com
ஆண்களுக்கு பாலியல் தொந்தரவு ஏற்பட்டதை மிக அழகாக உணர்த்தி இருக்கும் தாங்கள். இந்த நிலையை பார்வையற்ற பெண்களோடு ஒப்பிட்டு காட்டியிருக்கலாம். ஆண்களுக்கு இந்த நிலை என்றால்? பார்வையற்ற பெண்களின் நிலை?
பதிலளிநீக்கு"சொல்லுற அளவுக்கு பெருசா எதுவும் இருந்திருக்காது. அப்படி இல்லன்னா எப்பவுமே எங்கையுமே சொல்ல முடியாத அளவுக்கு பெருசா ஏதோ இருந்திருக்கும்.” எப்போதும் சுவாரசியமான உரைநடை. கண்ணி அறுந்துவிடாத தொகுப்பு. வாழ்த்துகள் தம்பி நம்பிக்கு.
பதிலளிநீக்கு