அரசியலில் நாம்-14: பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவை - ரா. பாலகணேசன்

வணக்கம் வாசகர்களே!

      சென்ற இதழில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான சிந்தனை அமைப்பாகத் திகழ்ந்துவரும் பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவை பற்றி அறிந்துகொண்டோம்.

முந்தய பகுதியைப் படிக்க 

இந்த இணைப்பைச் சொடுக்குங்கள்.

 இந்த இதழில் இப்பேரவையின் நிர்வாகக் குழுவினரான முனைவர் கு. முருகானந்தன், முனைவர் . பூபதி, முனைவர் U. மகேந்திரன், G. கார்த்திக் ஆகியோரோடு நடத்தப்பட்ட உரையாடலைச் சுருக்கமாக அறிந்துகொள்வோம்; இவர்களது அரசியல் பார்வையைத் தெரிந்துகொள்வோம்.

நான்: அது என்ன பேரவை (forum)? சங்கம், கழகம் முதலிய சொற்களிலிருந்து அது எப்படி மாறுபடுகிறது?

graphic முனைவர் கு. முருகானந்தன் அவர்களின் படம்
முனைவர் கு. முருகானந்தன்

முருகானந்தன்: பேரவை என்பது சிந்தனையாளர் அமைப்பு. சங்கத்திலிருந்து சற்று வேறுபட்டது. ஆனாலும், பேரவையைப் பதிவுசெய்யும்போது, அதற்கு சங்கம் மாதிரியான கட்டமைப்புகள் தேவை.

நான்: பார்வைக் குறையுடையோரைப் பற்றி மட்டுமே சிந்திக்கவேண்டும் என்று ஓர் அமைப்பைத் தொடங்கியிருக்கிறீர்கள். இத்தகைய அமைப்பு இந்திய அளவில் வேறெங்கும் இருக்கிறதா?

பூபதி: எனக்குத் தெரிந்தவரையில் எதுவும் இல்லை. பொதுவாக மாற்றுத்திறனாளிகளுக்கு என்று பார்த்தால், national platform for the rights of disabilities (NPERD) என்ற அமைப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான சிந்தனையைத் தொடர்ந்து முன்வைத்துவருகிறது. 

நான்: அந்த அமைப்பில் நம்மவர்களின் பங்களிப்பு இருக்கிறதா?

முருகானந்தன்: அவர்கள் பார்வைக் குறையுடையோரைப் பற்றியும் பேசுகின்றனர். ஆனால், அதில் பார்வைக் குறையுடையோரின் பங்களிப்பு இருக்கிறதா என்பது குறித்துத் தெரியவில்லை.

நான்: உங்கள் பார்வையில் ஊனமுற்றோர் இயல் (disability studies) குறித்த அறிவை வளர்த்துக்கொண்டவர்கள்தான் முற்போக்காளர்கள் என்கிறீர்களா? அல்லது இது வழக்கமாகப் பயன்படுத்தப்படும் அரசியல் சொல்லாடலா?

பூபதி: ‘முற்போக்குஎன்ற சொல்லாடலே பொதுவுடைமைச் சிந்தனையைச் சார்ந்தது. எங்களைப் பொறுத்தவரை பெரியாரியம், அம்பேத்கரியம், மாக்ஸியம் ஆகியவற்றோடு ஊனமுற்றோர் இயல் குறித்த தெளிவும் பெறுவதுதான் முற்போக்குச் சிந்தனை.

மகேந்திரன்: மற்ற மாற்றுத்திறனாளிகளோடு இணைந்து பணி செய்யும் சாத்தியங்களை உருவாக்குவதும் இந்தச் சொல்லாடலுக்குள் இருக்கிறது.

முருகானந்தன்: முற்போக்கு இயக்கங்களுக்கும், நமக்கான இயக்கங்களுக்குமிடையிலான பாலமாகத் திகழ விரும்புகிறோம். நாம் பொது விவகாரங்கள் குறித்துப் பேசுவதும், முற்போக்கு அமைப்புகள் நம்மைப் பற்றி பேசுவதும் முக்கியம் என்று நினைக்கிறேன். 

நான்: ‘முற்போக்குச் சிந்தனையாளர்என்ற தொடரைப் பயன்படுத்தும் போது நீங்கள் திராவிட இயக்க ஆதரவாளர் என்று தமிழகத்தில் அறியப்பட வாய்ப்புகள் அதிகம். அது போலவே, அகில இந்திய அளவில் கம்யூனிஸ்டாக அல்லது ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பாளராக அறியப்படுவீர்கள். இந்த அடையாளங்கள் உங்கள் மீது சுமத்தப்பட்ட அனுபவம் இருக்கிறதா?

முருகானந்தன்: அப்படி எதுவும் இல்லை. தமிழகத்தில் பெரியாரைக் கொண்டு சேர்ப்பதில் எங்களுக்கு எந்தத் தடையும் இல்லை; வேறு அடையாளம் எதுவும் தரப்படவில்லை. தேசிய அளவில் நாங்கள் இன்னும் காத்திறமாகப் பணியாற்றவில்லை என்றே நினைக்கிறேன்.

அதே நேரம், ஒரு சிலர்  முற்போக்குச் சிந்தனையாளர்என்று பெயர் இருப்பதால் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் மட்டும்தான் இந்த அமைப்பில் சேரமுடியுமா என்று கேட்டிருக்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை என்று நாங்கள் தெளிவுபடுத்தி இருக்கிறோம்.

நான்: மத இயக்கங்கள் பார்வைக் குறையுடையோரை அணுகும் அளவிற்கு முற்போக்கு இயக்கங்கள் நம்மை நெருங்குவதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே!

graphic பேரா. பூபதி அவர்களின் படம்
பேரா. பூபதி

பூபதி: அப்படியெல்லாம் சொல்லிவிடமுடியாது. 2015-இல் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் & பட்டதாரிகள் சங்கம் (CSGAB) நடத்திய போராட்டத்திற்கு பல முற்போக்கு இயக்கங்கள் ஆதரவளித்தன. குறிப்பாக, விரல்மொழியர் கலைஞர் சிறப்பிதழ் நூலாக வெளியிடப்பட்டபோது, பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள், “உங்களை நாங்கள் இன்னும் நிறைய புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. உங்களைப் பற்றிய அறியாமை எங்களிடம் உள்ளதுஎன்று கூறியிருந்தார்.

Graphic சுப. வீரபாண்டியன் அவர்களின் படம்
 

நம்மவர்களும் முற்போக்கு இயக்கங்களில் களமாடுபவர்களாக மிகச் சிலர்தான் இருக்கிறார்கள். S.S. கண்ணன் என்ற கம்யூனிஸ்ட் தானே CSGAB என்ற தமிழகத்தின் வலிமையான அமைப்பை உருவாக்கி வளர்த்தெடுத்தார். அதோடு, தமிழகத்தில் இருக்கும் முற்போக்காளர்களால்தானே நாம் வளர்ச்சி அடைந்திருக்கிறோம். இந்தியாவிலேயே தமிழகம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் ஊனமுற்றோருக்கான இட ஒதுக்கீடு சமூகநீதி அடிப்படையில் வழங்கப்படுவதில்லையே! ஊனமுற்றோர் இயலின் துணை கொண்டு பார்க்கும்போது இதில் சில சிக்கல்கள் இருந்தாலும், இது முக்கியமான முற்போக்குச் சிந்தனைதான்.

 

முருகானந்தன்: முற்போக்கு இயக்கங்கள் நம்மிடையே நேரடியாகத் தாக்கம் செலுத்தவில்லை என்றாலும், மறைமுகமாக மிகப்பெரிய உந்துதலை ஏற்படுத்தியிருக்கின்றன. தமிழகத்தின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமே நம்மை ஆண்ட ஆட்சியாளர்கள்அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிஎன்பதில் கவனமாய் இருந்ததுதான். அந்த வகையில் நாம் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் நல்ல வளர்ச்சியடைந்திருக்கிறோம் என்றே சொல்லவேண்டும். நம்முடைய பொருளாதார வளர்ச்சியில் ஆட்சியில் இருந்த, இருக்கும் திராவிட இயக்கங்களின் பங்கு இருக்கிறது. சங்கங்கள் அமைப்பது, உரிமைக் குரல் எழுப்புவது முதலியவற்றில் இங்கு வளர்ந்த பொதுவுடைமை இயக்கங்களின் பங்கு இருக்கிறது.

நான்: இளைய தலைமுறை பார்வையற்றவர்கள் முற்போக்குச் சிந்தனை குறித்த அறிவுடையவர்களாக இருக்கிறார்களா? அது தொடர்பாகப் படித்தறிந்துகொள்ள விரும்புகிறார்களா?

கார்த்திக்: மிகச் சிலர்தான் விரும்புகிறார்கள். முன்பெல்லாம் நமக்கு ஏற்றாற்போல இத்தகைய புத்தகங்கள் கிடைக்காது.  இப்போது பல புத்தகங்களை, இதழ்களை மின்நூல்களாக நம்மால் படிக்கமுடிகிறது. ஆனாலும், மிகச் சில பார்வையற்றவர்கள்தான் தங்கள் பாடப் புத்தகங்களையும் தாண்டி படிக்க விரும்புகிறார்கள்.

graphic அகிலன் அவர்களின் படம்
அகிலன்

மகேந்திரன்: மாணவர்களைப் பொறுத்தவரை கல்லூரிப் பாடங்களையே எவ்வளவு தூரம் சுருக்கிப் படிக்கமுடியும் என்றுதான் நினைக்கிறார்கள். வாசிப்பு மையங்களில் அவர்களால் முற்போக்குப் புத்தகங்களைப் படிப்பதில் ஒரு சின்ன தடை இருக்கத்தான் செய்கிறது. இருந்தபோதிலும், அத்தி பூத்தாற்போல் சிலர் கொள்கைப் பிடிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள். சான்றாக, நாமக்கல்லைச் சேர்ந்த அகிலன் என்ற பார்வை மாற்றுத்திறனாளி மாணவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தலைமையில் இயங்கும் திராவிட இயக்கத் தமிழர் பேரவையில் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறார்.

நான்: உங்கள் செயல்பாட்டிற்கான எதிர்வினை எப்படி இருக்கிறது?

graphic G. கார்த்திக் அவர்களின் படம்
G. கார்த்திக்

கார்த்திக்: நாங்கள்பெரியார் இன்றும் என்றும்நூல் வெளியிட்டபோது அதைப் படித்த வாசிப்பாளர்கள் பலர் பெரியாரைப் புரிந்துகொண்டதாகத் தெரிவித்தனர். நாங்கள் இணையவழியில் நடத்தும் மாதாந்திரக் கருத்தரங்கில் பார்வையற்றவர்கள் மட்டுமின்றி பிற தன்னார்வலர்களும் கலந்துகொள்கிறார்கள். அவர்கள் மிக முக்கியமான விழிப்புணர்வைப் பெறுவதாக எங்களிடம் தெரிவிக்கிறார்கள்.

முருகானந்தன்: பார்வைக் குறையுடையோர் சமூகத்திலிருந்தும் எங்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. எங்கள்பெரியார் இன்றும் என்றும்நூல் வெளியீட்டுவிழாவில் கலந்துகொண்டு, அது குறித்த முக்கியமான கட்டுரையை விரல்மொழியரில் வழங்கியிருந்தார் . சரவணமணிகண்டன் அவர்கள்

அக்கட்டுரையைப்படிக்க இந்த 

இணைப்பைச் சொடுக்குங்கள். 

 அது எங்களைப் பலதரப்பட்ட பார்வைக் குறையுடையோரிடையே சென்றுசேர்த்தது. மேலும், புதிய கல்விக் கொள்கை, மாற்றுத்திறனாளிகள் நலச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் முயற்சி ஆகியவற்றில் தமிழகத்தின் பல முக்கிய அமைப்புகளோடு பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக மிகக் குறைந்த அனுபவமே உள்ள எங்களை முக்கிய அமைப்புகள் தங்கள் சக அமைப்பாக, மரியாதைக்குரிய அமைப்பாக நடத்திவருகின்றன.

நான்: உங்கள் கூட்டங்களுக்குப் பல சிறப்பு விருந்தினர்களை அழைத்து வந்திருக்கிறீர்கள். அவர்களில் முக்கியமானவர்கள் என்று நான் சிலரைக் கருதுகிறேன். தொடக்க நாள்விழாவில் கலந்துகொண்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் விடுதலை ராஜேந்திரன் அவர்கள். தமிழகத்தில் அனைவராலும் அறியப்பட்ட டிசம்பர் 3 இயக்கத்தின் பேரா. தீபக் அவர்கள். அகில இந்தியப் பார்வையற்றோர் கூட்டமைப்பில் (All India Confederation of the Blind-AICB) இயங்கிவரும் அனில் அனேஜா அவர்கள். graphic அனில் அனேஜா

 இவர்கள் உங்கள் அமைப்பு குறித்து என்ன கருத்து தெரிவித்தார்கள்?

முருகானந்தன்: விடுதலை ராஜேந்திரன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். “இது நாங்களே செய்திருக்கவேண்டிய வேலைஎன்றார். பெரியாரைப் பார்வையற்றவர்களிடையே சென்றுசேர்க்கிறோம் என்பதில் அவருக்கு மகிழ்ச்சி.

Graphic விடுதலை ராஜேந்திரன் அவர்களின் படம்
விடுதலை ராஜேந்திரன் 

பூபதி: அனில் அனேஜா அறிவுத் தளத்தில் இயங்குவதற்கென்றே ஒரு அமைப்பு இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். பேரா. தீபக்கும் எங்கள் முன்னெடுப்பை வரவேற்றார். 

பேராதீபக்

நான்: 2021 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பா.மு.சி பேரவை தனது நிலைப்பாட்டை அறிவிக்குமா?

முருகானந்தன்: இவர்களுக்கு நீங்கள் வாக்களியுங்கள் என்று நாங்கள் பார்வையற்றவர்களை வலியுறுத்தப்போவதிலை. ஒவ்வொரு கட்சியும் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் நமக்குத் தேவையான நல்ல அம்சங்களை எடுத்துரைப்போம். நம்மவர்கள் விருப்பமானவர்களுக்கு வாக்களிக்கட்டும். அதோடு, நமக்குத் தேவையான விஷயங்களைக் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறவைக்க முயல்வோம். சான்றாக ஒன்றைக் கூறவேண்டுமானால், தி.மு. தலைவராக மு.. ஸ்டாலின் பொறுப்பேற்றதும்மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் முதலியோரின் நலன்கள் பாதுகாக்கப்படும்என்று கூறினார். இக்கருத்தை நாங்கள் வரவேற்றோம். அதற்காக முழுக்க முழுக்க தி.மு.கவிற்கு ஆதரவளித்துவிட்டோம் என்று கூறிவிடமுடியாது.

நான்: நீங்கள் கூறிய சான்றின் அடிப்படையில் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன். நாமும் ஒரு முக்கிய வாக்கு வங்கிதான் என்று அரசியலர்கள் உணரத்தொடங்கிவிட்டார்கள் என்று கருதுகிறீர்களா?

முருகானந்தன்: இருக்கலாம். ஆனாலும், மிகவும் சிறுபான்மையினராக இருக்கும் நமக்கு வாக்குவங்கி என்பதற்கான இயல்புகள் பொருந்தவில்லை என்றே கருதுகிறேன். நம்மால் எந்தவொரு தொகுதியிலும் தேர்தல் முடிவை மாற்றிவிடமுடியாது. மேலும், வாக்கு வங்கி என்ற அடிப்படையில் மட்டும் பாராமல், கருத்தியல் ரீதியாக மாற்றுத்திறனாளிகளுக்கு என்னென்ன செய்யவேண்டுமோ அவற்றைக் கட்டாயம் அரசியல் கட்சிகளிடம் எடுத்துச்செல்லவேண்டும்.

பூபதி: ஸ்டாலின் அவர்கள் வாக்கு வங்கி அடிப்படையில்தான் இக்கருத்தைச் சொல்லியிருப்பார் என்று கருதிவிடமுடியாது. ஏனென்றால்,  இங்கு இன்னும் நிறைய திருநங்கைகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை்யே இல்லை.

graphic பேரா. U. மகேந்திரன் அவர்களின் படம்
பேரா. U. மகேந்திரன்

மகேந்திரன்: இன்னொரு கோணமும் இருக்கிறது.  இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சியும் நமக்கான பிரதிநிதித்துவத்தைத் தரவில்லை. நமக்கென்று சொல்லிக்கொள்ளும்படியாக துணை அணிகளும் அரசியல் கட்சிகளில் இல்லை. காரணம், நாம் பல இடங்களில் சிதறிக்கிடக்கிறோம். வலிமை வாய்ந்த வாக்குவங்கியாக இல்லை.

முருகானந்தன்: எப்படி இருந்தாலும், நாம் ஒரு முக்கிய வாக்கு வங்கி என்ற அடிப்படையில் இல்லாமல், நம் குறித்த விழிப்புணர்வையும், நமக்கான தேவைகளையும் எடுத்துச் செல்லவேண்டும் என்பதே என் தனிப்பட்ட கருத்து.

நான்: நீங்கள் எல்லோருமே வெவ்வேறு பணிகளில் இருக்கிறீர்கள். பணிகளுக்கு மத்தியில் இத்தகைய வேலையைச் செய்வது சிரமமாக இல்லையா?

முருகானந்தன்: அப்படிக் கூறுவதற்கில்லை. நாங்கள் எங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப திட்டமிட்டு மிகக் குறைவான பணிகளையே மேற்கொள்கிறோம். 

நான்: பார்வை மாற்றுத்திறனாளிகள் பெரும்பாலும் அரசு ஊழியர்களாக இருக்க நேர்வதால், அவர்களால் பொது வாழ்க்கையில் ஈடுபடமுடிவதில்லை என்ற கருத்து சரிதானா?

மகேந்திரன்: அரசு ஊழியர்களாக இருப்பதால்  பொது வாழ்வில் ஈடுபடமுடிவதில்லை என்பதை விட, நமக்கான பொருளாதார பலம் குறைவாக இருப்பதால், குடும்பப் பின்புலம் பெரிய அளவில் இல்லாததால் பொது வாழ்வில் ஈடுபடுவதில் சிக்கல் இருக்கிறது என்று கூறலாம்.

முருகானந்தன்: தேர்தல் அரசியலுக்கு இது சரிதான். கொள்கை அரசியல் ஈடுபாட்டை இந்தக் காரணிகள் தடுக்கப்போவதிலை. ஆனாலும், தீவிரமாக நாம் செயல்படுபோது நமக்கிருக்கும் அகத் தடைகள் நம்மைப் பாதிக்கக்கூடும். நம் பொருளாதார வளர்ச்சி, வேலை, குடும்பச் சூழல் முதலியவற்றைத் தான் அகத்தடைகள் என்கிறேன்.

நான்: உங்களுக்குக் கிடைத்த உயர்ந்த பாராட்டுகள்?

முருகானந்தன்: அது குறித்து நாம் நிறைய பேசிவிட்டோம். இருந்தாலும், எதிர்பாரா நேரங்களில், எதிர்பாரா இடங்களிலிருந்து வந்த பாராட்டுகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

திராவிடம் 2.0’ என்ற அமைப்பு கூட்டம் நடத்திக்கொண்டிருந்தது. அதே இடத்தில் நடைபெற்ற வேறொரு கூட்டத்திற்குச் சென்ற என்னை அழைத்த திரு. சுபகுணராஜன் அவர்கள், என்னை அறிமுகப்படுத்தி, ‘பெரியார் இன்றும் என்றும்நூலை ஒலி வடிவில் தயாரித்தது குறித்துப் பேசச் சொன்னார். கால்மணி நேரம் உரையாற்றினேன். திரு. ஞா. அலோஷியஸ் அவர்களும், கூட்டத்தில் இருந்த மற்றவர்களும் நெகிழ்ந்து பாராட்டினர்.

சென்னை பல்கலைக் கழகப் பேராசிரியர் அழகரசன் அவர்கள், சினிமாவில் பார்வையற்றோர் சித்திரிக்கப்படும் விதம் குறித்து நாங்கள் நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டு பாராட்டினார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, பார்வையற்றோருக்கான அமைப்புகள் எங்களுக்கு மிகுந்த மதிப்பளிப்பதே எங்களுக்குக் கிடைத்திருக்கும் பெரிய மரியாதை என்று கருதுகிறேன். மிகக் குறைந்த செயல்பாட்டாளர்களைக் கொண்ட இந்த அமைப்பை மிகப்பெரிய அமைப்புகள் அனைத்தும் ஆதரிக்கின்றன; சமமாக நடத்துகின்றன.

நான்: உங்கள் எதிர்காலத் திட்டம்?

மகேந்திரன்: பின்நவீனத்துவம், பெண்ணியம் முதலியவற்றைப் போல உலக அளவில் வளர்ந்துவரும் துறை ஊனமுற்றோர் இயல் (disability studies). தமிழகத்தில் இவ்வியலைக் கல்விப் புலங்களிலும், நம்மவர்கள் மத்தியிலும் வளர்த்தெடுக்கவேண்டும். வாரந்தோறும் அது குறித்த கூட்டத்தை நடத்தவேண்டும் என்று நினைக்கிறோம். விருப்பமுள்ள 20 பேர் வந்து கலந்துகொண்டால் கூட இத்தகைய கூட்டம் மிகப்பெரிய வெற்றியைத் தரும். ஊனமுற்றோர் இயல் தொடர்பான சிந்தனைகள் வரும் காலங்களில் அரசின் கொள்கை முடிவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

பெரியாரியம், அம்பேத்கரியம், மாக்ஸியம் தொடர்பான புத்தகங்களை நாம் படிக்கும் வகையில் மாற்றி அமைத்து, அவற்றை வெளியிட்டு, அவை தொடர்பான உரையாடல்களை நிகழ்த்தவேண்டும். தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஒரு மின்னிதழைத் தொடங்கி, பார்வையற்றோரி்டையே முற்போக்குக் கருத்துகளை வளர்க்கவேண்டும்.

முருகானந்தன்: தமிழிலும், ஆங்கிலத்திலும் எங்கள் நால்வராலும் இயங்கமுடிகிறது. அதுவே எங்களுடைய மிகப் பெரிய பலம் என்று நான் கருதுகிறேன். அதைக் கவனத்தில் கொண்டு, வெளியில் இருக்கும் செல்வங்களை இங்கு கொண்டு வந்து சேர்ப்பதும், நம்முடைய வரலாற்றுத் தரவுகளை வெளியில் சென்று சேர்ப்பதும் எங்கள் முக்கியப் பணியாக இருக்கும்.

பூபதி: நம்முடைய வரலாற்றுத் தரவுகளை வெளியில் சென்று சேர்ப்பதோடு, அவற்றை மறு சிந்தனைக்கு உட்படுத்தவேண்டும் என்று நினைக்கிறேன். அது குறித்தும் நாங்கள் செயல்பட வேண்டியிருக்கிறது. 

நான்: ஊனமுற்றோர் இயல் என்பது வெளிநாட்டிலிருந்து வந்த படிப்புதான் என்றாலும், அதை உள்ளூர் சரக்குகளைக் கொண்டு புரிந்துகொள்வதற்கு நீங்கள் வகை செய்யவேண்டும் என்பது என் அன்பு வேண்டுகோள்.

கார்த்திக்: உண்மைதான். Disability studies of India என்று பார்த்தால், அதில் தென்னிந்தியா புறக்கணிக்கப்படுவதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. இங்கும் தமிழில் இருப்பவற்றை இன்னும் நாம் ஊனமுற்றோர் இயலின் துணை கொண்டு அளவிடவேண்டியுள்ளது.

முருகானந்தன்: உள்ளூர்ச் சரக்குகளை நாம் கையாளாவிட்டால் ஊனமுற்றோர் இயல் குறித்துப் பேசுவதில் பயனில்லையே! ஏற்கெனவே மதுரைவீரன் கதை, நொண்டி நாடகம் ஆகியவை குறித்து ஊனமுற்றோர் இயல் பார்வையில் ஆய்வுசெய்திருக்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷில்பா மிஸ்ரா. தமிழ் இலக்கியம் படிப்பவர்கள், நாட்டுப்புறவியல் முதலிய படிப்புகளில் ஆர்வமுடையவர்கள் இத்தகைய ஆய்வுகளில் ஈடுபடவேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை.

நான்:  உங்கள் பணிகள் தொடர இதழின் வாழ்த்துகள். 

பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவையில் இணைய நீங்களும் விரும்புகிறீர்களா? அப்படியென்றால், அவர்களைத் தொடர்புகொள்ள: ptfb.tn@gmail.com

 

(குறிப்பு: ‘disability studies’ என்ற தொடருக்கானஊனமுற்றோர் இயல்என்ற மொழிபெயர்ப்புக் கட்டுரையாளருடையதே. அதிகாரப்பூர்வமானதல்ல).

பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவையின் பொறுப்பாளர்களிடம் நடத்தப்பட்ட உரையாடல் விரைவில் எமது யூடியூப் தளத்தில் பதிவேற்றப்படும்.

 

வாசகர்களே!

      உங்களுக்குத் தெரிந்த பார்வை மாற்றுத்திறனாளி அரசியலாளர்களை எங்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். அவர்கள் தேர்தல் அரசியலிலோ, கொள்கை அரசியலிலோ ஈடுபாடு கொண்டவராக இருக்கவேண்டும். களப்பணி ஆற்றியவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் உங்களுக்குத் தெரியும் என்றால், 9894335053 என்ற எனது தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொள்ளுங்கள். ஆவணப்படுத்துவோம்.

 

தொடர்புக்கு: balaganesan2285@gmail.com

 

5 கருத்துகள்:

  1. மதங்கள் அதிலும் கிறித்தவமே நம்முடைய இன்றைய ஓரளவு நல்ல நிலைக்கும் அரும்பணியாற்றியது என்று சொல்லலாம். திராவிடம் பேசும் முற்போக்காளர்கள் இப்போதுதான் நம்மை நோக்கி ஓரிரு அடிகள் எடுத்து வைத்திருக்கிறார்கள். ரரக்கள்கூட நம்மிடம் சகஜமாகப் பேச முற்படுவார்கள். இந்த உபிகளில் பெரும்பான்மை தங்களைத் தாங்களே உயர்வாகக் கருதிக்கொள்ளும் மனோபாவம். நம்மிடம் பெருத்த ஒவ்வாமை கடைபிடிப்பார்கள். வெளிப்படையாகச் சொன்னால், ஐயா கலைஞருக்கும், திருமதி. கனிமொழிக்கும் தவிர பிறருக்கு நம் மீது எத்தகைய பார்வை இருக்கிறது? இது பற்றி நிறையப் பேசிக்கொண்டே போகலாம். இந்த இடைவெளியைக் குறைக்க வந்த இயக்கமாகத்தான் நான் இந்த அமைப்பைப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. மிகச் சிறப்பான உரையாடல்
    பேரவையினருக்கும் ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. வலரட்டும் பேரவை. அதைக் கொண்டு சிந்திக்கட்டும் பார்வையற்ற சமூகம்.
    நமக்கு அடுத்து வருபவர்களை இந்த களங்களில் அழைத்துவருவது நமது கடமை. அதை பேரவை செய்யும் என எதிற்பாற்கிரேன்.

    பதிலளிநீக்கு
  4. ஜெயராமன் தஞ்சாவூரி1 டிசம்பர், 2020 அன்று 10:09 PM

    இந்த உரையாடல் பார்வை மாற்றுத்திறனாளர் சமுதாயம் முன்னேற வேண்டும் என்பதற்காக செய்யப்படும் உழைப்பும் அரசியல் விழிப்புணர்வை கொடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் வெளிப்படுத்துகிறது வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு