18+: கணவர்களின் கணிவான கவனத்திற்கு - மது

        graphic ஒரு பெண் இன்னொரு பெண்ணின் காதில் இரகசியம் சொல்வது போல் அமைந்த படம்

             பெண்களின் அந்தரங்கங்களைப் பற்றிய பதிவு என்பதால் தயவுசெய்து ஆண்கள்  இதை வாசிப்பதைத் தவிர்த்துவிடலாம் பெண்களே, நீங்களும் வாய்விட்டு வாசிச்சிராதீங்க”.

      இந்தமாதிரியான பின்னூட்டங்களை  இந்தப் பதிவிற்கு வாசகர்களாகிய நீங்கள் அளிக்கமாட்டீர்கள் என்கிற நம்பிக்கையோடு எனது அனுபவங்களையும்  நான் தெரிந்துகொண்ட விஷயங்களையும்  பதிவுசெய்கிறேன்.

      மாதவிடாய் காலச் சிறமங்கள் எல்லாப் பெண்களுக்கும் பொதுவானது.  அதிலும் பார்வையற்ற பெண்கள் கொஞ்சம் கூடுதலாகவே  சிறமங்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது.

நாப்கின் பயன்படுத்தும்போது  ஆடையில் கறை படியாமல் பார்த்துக்கொள்வது,   பயணம் அல்லது பணிச் சூழல் காரணமாக நீண்ட நேரம் பேட் மாற்ற முடியாத சூழலில் பிறப்புறுப்பில் நோய்  தொற்று ஏற்படுவது.

      பேட்களின் உறாய்வு காரணமாக தொடை இடுக்குகளில் புண் ஏற்படுவது... இதுபோன்ற பிரச்சனைகள் எல்லாப் பெண்களுக்கும் பொதுவானது.

      கடைக்குச்சென்று நாப்கின்களை வாங்குவது, பயன்படுத்தும்போது ஆடையில் கறை படிந்தால் அதனைத் தெரிந்துகொள்வது, சுத்தமாகத் துவைப்பது, பயன்படுத்திய நாப்கின்களை முறையாக குப்பையில் கொண்டு சேர்ப்பது / எறிப்பது  போன்ற விஷயங்களில் மற்றவர்களைவிட பார்வையற்ற பெண்கள் கொஞ்சம் கூடுதலான சிறமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பணி வாய்ப்பில்லாமல் செலவிற்கு மற்றவர்களைச் சார்ந்திருக்கும் பெண்களுக்கு தரமான நாப்கின்களை ஒவ்வொரு மாதமும் விலைகொடுத்து வாங்குவதென்பது இயலாத காரியம்.

      மேலே சொல்லப்பட்ட எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொண்டிருந்த எனக்கு வரமாக கிடைத்ததுதான் இந்த [Menstrual  cup] மென்ஸுரல் கப்.

graphic மென்ஸுரல் கப் படம்

       நெகிழும் தன்மை கொண்ட சிரிய மணி வடிவிலான அமைப்பில் இருக்கும் இந்த மென்ஸுரல்  கப்பை நமது பிறப்புறுப்புத் துளைக்குள் சரியாகப்  பொறுத்திக்கொண்டால் வெளியேற்றப்படும் உதிரம் அந்த கப்பில் சேகரமாகும்.

      ஒவ்வொருவரின் உதிரப்போக்கின் அளவைப் பொறுத்து சீரான கால இடைவெளியில் கப்பை வெளியே எடுத்து, சேகரமான உதிரத்தை வெளியே கொட்டிவிட்டு, நீரில் கழுவி சுத்தம் செய்து, மீண்டும் பிறப்புறுப்பிற்குள் பொருத்திக்கொள்ள வேண்டும்.

      குறைவான உதிரப்போக்கு உள்ளவர்கள் அதிகபட்சம் 12 மணி நேரத்திற்கொருமுறை கப்பை வெளியே எடுத்துச்  சுத்தம் செய்து மீண்டும் பொருத்திக்கொள்ளலாம்.

      ஒவ்வொரு மாதவிடாய் கால முடிவிலும் முறையாகச் சுத்தம் செய்து பாதுகாப்பாக வைத்தால் ஒரு கப்பை சராசரியாக 12 வருடங்கள் பயன்படுத்தலாம்.

      ஆரம்பத்தில் இதுகுறித்து கேள்விப்பட்டபோது இதனால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படுமா? பிறப்புறுப்புக்குள் இதுமாதிரியான பொருளைப் பொறுத்தலாமா? உள்ளே வைக்கும்போது அதிகம் வலிக்குமா? பிறப்புறுப்புக்குள் எப்படிப் பொருத்துவது?  திருமணத்திற்கு முன்பாகவே இதனை பயன்படுத்தலாமா? போன்ற பல கேள்விகளும் தயக்கங்களும் எனக்கு இருந்தன.

      எதையும் முயற்சி செய்யாமல் நாப்கினுக்காக மாதம் 50 முதல் 60 ரூபாய் செலவு செய்வதைவிட 2 வருடம் நாப்கினுக்கு ஆகும் செலவில் 12 வருடம் பயன்படக்கூடிய  இந்த மென்ஸுரல்  கப்பை வாங்கிப் பயன்படுத்தி பார்த்துவிடுவதென முடிவுசெய்தேன்.

      இது சரியாக செட் ஆனால் நாப்கின் வாங்குவதற்காக 10 வருடத்திற்கு ஆகும்  செலவு மிச்சம் செட் ஆகவில்லையென்றால் 2 வருடத்திற்கு ஆகும் செலவு நட்டம் என்கிற புரிதலோடு மென்ஸுரல் கப்பை ஆர்டர் செய்தேன்.

      ஒரே பொருள் பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்பில் வெவ்வேறு விலையில் கிடைப்பதுபோல இந்த மென்ஸுரல் கப்பும் பல பிராண்ட்களில் பல விலையில் கிடைக்கிறது.

      கப்களின் தரம்,  பயன்பாட்டுக் காலம், கப் தயாரிக்கப்பட்ட  பொருள்  போன்றவற்றின் அடிப்படையில் இதன் விலை மாறுபடுகிறது.

       மென்ஸுரல் கப்கள்   வெவ்வேறு அளவுகளில்  வெவ்வேறு விலையில்  கிடைக்கிறது.  உதிரப்போக்கின் அளவு மற்றும் பிறப்புறுப்பின் ஆழம் இந்த இரண்டின் அடிப்படையில் நமக்கான கப்பின் அளவை தேர்வு செய்துகொள்ளலாம்.

      உதிரப்போக்கின் அளவைத் தெரிந்துகொள்வது சரி பிறப்புறுப்பின் ஆழத்தை எவ்வாறு தெரிந்துகொள்வதென்கிற சந்தேகம் உங்கள் எல்லோரைப்போலவே எனக்கும் ஏற்பட்டது.

      அதுகுறித்து நான் தேடித் தெரிந்துகொண்டதை என்னால் முடிந்தளவுக்கு எளிமையாக  விளக்குகிறேன் நீங்கள்  முழுமையாகப்  புரிந்துகொள்வீர்கள் என்கிற நம்பிக்கையோடு.

      குத்துக்காலிட்டு அல்லது கால்களைத் தொங்கவிட்டபடி உங்களின் பிறப்புறுப்பு துளையை முழுமையாகக் கைகளால்  அனுகும் வகையில் வசதியாக அமர்ந்துகொள்ளுங்கள். கால்களைத் தொங்கவிட்ட நிலையில் உட்காரும்போது  பொருளின் நுனிப்பகுதியில் அமரவேண்டும்.

      உதாரணமாக நீங்கள் ஒரு கட்டிலில் அல்லது வெஸ்டன் பாத்ரூமில் அமர்கிறீர்கள் என்றால் பெண்ணுறுப்பின் துளை அதன்மீது படாமல் கொஞ்சம் முன்னே  தள்ளி இருக்குமாறு அமர்ந்துகொள்ள வேண்டும். பின்னர் மெதுவாக நடுவிரலைப் பெண்ணுறுப்பிற்குள் செலுத்துங்கள்.

      விரல் முழுமையாக உள்ளே செல்வதற்கு முன்பாகவே கருப்பை வாயை அடைந்துவிட்டால்  உங்களின் பெண்ணுறுப்பு சிறியது எனவும் விரல் முழுமையாக உள்ளே சென்றுவிட்டால் கொஞ்சம் பெரியது எனவும் நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

      கருப்பை வாய் எப்படியிருக்கும் என சிலருக்கு சந்தேகம் ஏற்படலாம் அவர்களுக்காக. பெண்ணுறுப்பு முடியும் இடத்தில் கொஞ்சம் உப்பிய அதாவது நமது மூக்கின் நுனி போன்ற அமைப்புதான் கருப்பை வாய். இது சரியாக நமது தொப்புள் பகுதிக்கு உட்புறம் இருக்கும். நடுவிரலை கருப்பை வாயில் வைத்துக்கொண்டு அதே கையின்  கட்டை விரலை தொப்புளில் வைத்தால் இரண்டும் ஒரே  நேர்கோட்டில் இருப்பதை நம்மால் பார்க்கமுடியும்.

      பெரும்பாலும் முப்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும்,  சுகப்பிரசவமான குழந்தை பிறப்பிற்கு பிந்தைய காலகட்டத்தில் இருப்பவர்களுக்கும் தான்  பெரிய கப் தேவைப்படும். மற்றவர்கள் சாதாரண கப்பையே பயன்படுத்தலாம்.

      மேற்சொன்னவைகள் மென்ஸுரல் கப் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய  பொதுவான விஷயங்கள்.

      இந்தியாவைப் பொறுத்தவரை இறக்குமதி செய்யப்பட்ட பல மென்ஸுரல் கப்கள் வெவ்வேறு அளவுகளில்  கிடைக்கிறது.

    விலை குறைவாக விற்கப்படும்  சில கப்கள் கிடைக்கின்றன. ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு அளவில் கப் என விற்கிறார்கள்.

     எனவே நமக்கு எது சரியாக செட் ஆகும் என இணையத்தில் தேடி பார்த்ததில் இந்தியாவில்   ஷீகப் ]she cup] நிறுவனத்தின் மென்ஸுரல் கப்தான் பலரால் பயன்படுத்தப்பட்டுவருவதாக தெரிந்துகொண்டேன். பயன்படுத்தும் பெறும்பாலானோர் நேர்மறையான ரேட்டிங்குகளையே அளித்திருந்தார்கள். எல்லா வயதினரும் தங்களுக்கு இது நன்றாக பொறுந்தியிருப்பதாக சொல்லியிருந்தார்கள்.

      எனவே குழப்பங்களைக் களைந்து நானும் இந்த ஷீகப்பை பயன்படுத்தலாம் என முடிவுசெய்தேன்.

      இது ரெகுலர் மற்றும் லார்ஜ் என இரண்டு அளவுகளில் சிரிய விலை வேறுபாட்டில்  கிடைக்கிறது. இரண்டிலும் சேகரமாகும் உதிரத்தின் அளவு 28 மில்லி தான் வடிவ அமைப்பில் மட்டும் சிறிய வேறுபாடு இருக்கிறது.

      அளவில் பெரியது [large],  சிறியது [regular]  என இரண்டு அளவுகளையும் நான் பயன்படுத்திப் பார்த்துவிட்டேன் இரண்டுமே எனக்கு சரியாக பொருந்தியது.

      இரண்டிற்குமுள்ள ஒரே வேறுபாடு லார்ஜ் சைஸ் கப்பில்  அதன் நுனிப்பகுதியில் அதாவது உள்ளே வைக்கும்போது நமது பிறப்புறுப்பின் கீழ் பகுதியில் வெளியே கப்பை எடுப்பதற்காக ஒரு சிறிய காம்புபோன்ற அமைப்பு இருக்கும். இதன் தற்போதைய விலை ரூபாய்  1185.

      ரெகுலர் சைஸ் கப்பில் இந்த காம்பு போன்ற அமைப்பு இருக்காது. இதன் தற்போதைய  விலை ரூபாய்  996.

      ஆர்டர் செய்யும்போதே பணம் செலுத்தினால்தான் மேற்சொன்ன விலை. கேஷ் ஆன் டெலிவரி மூலம் வாங்கினால் கொஞ்சம் எக்ஸ்ட்ரா சார்ஜ் வாங்குகிறார்கள்.  டெலிவரி கட்டணம் கிடையாது.

    பிறப்புறுப்பு கொஞ்சம் ஆழமாக இருப்பதாக உணர்பவர்களும் கப்பை வெளியே எடுக்கும்போது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் என நினைப்பவர்களும் இந்த லார்ஜ் சைஸ் அதாவது பெரிய சைஸ் கப்பை வாங்கி பயன்படுத்தலாம்.

      நமக்கான மென்ஸுரல் கப்பை தேர்வுசெய்தாகிவிட்டது எங்கே? எப்படி வாங்குவது?

      ஷீ கப் அமேசான் வலைதலத்திலும் shycart.com என்கிற இணையதளத்திலும் கிடைக்கிறது.

      இரண்டிலும் ஒரே விலைதான் என்றாலும் shycart.com என்கிற இந்த தளத்தில் ஆர்டர் செய்த மறுநாளே பொருள் நம் கையில் வந்துசேர்ந்துவிடுமாறு புரஃபஷனல் கூரியரில் அனுப்பிவைத்து விடுகிறார்கள். கூரியர் சர்வீஸ் இல்லாத ஊர்களுக்கு தபால்துறைமூலம் அனுப்புகிறார்கள். பார்ஸல் அனுப்பும்போது கவரில் உள்ளே என்ன இருக்கிறது என்பதை குறிப்பிடுவதில்லை என்பதால் நமது ப்ரைவசி முழுமையாக பாதுகாக்கப்படுகிறது. அமேசான் தளத்தில் இப்படி இருக்குமா எனத் தெரியவில்லை.

    தவிர இந்த ஷைக்கார்ட் தளம் நமது சென்னையைத் தலைமையிடமாக கொண்டு செயல்படுவதால் இணையத்தில் நேரடியாக சென்று ஆர்டர் செய்யமுடியாதவர்கள் ஃபோனில் இவர்களை அழைத்து ஆர்டர் செய்யலாம். சென்னையில் இருப்பவர்கள் நேரடியாகவே சென்றும் வாங்கிக்கொள்ளலாம்.

எப்படிப் பயன்படுத்துவது?

      இந்த கப் அனுப்பிவைக்கப்படும் பார்சலில் ஒரு கப், அதனை சுத்தம் செய்யும் வைப் எனப்படும் காகித வடிவிலான 10 சோப்புகள் அடங்கிய ஒரு பாக்கெட், மாதவிடாய் இல்லாத நாட்களில்  கப்பை பாதுகாப்பாக வைக்க துணியாலான  சிறிய சுருக்குப்பை மற்றும் கப்பை பெண்ணுறுப்பிற்குள் எவ்வாறு பொருத்துவது, வெளியே எடுப்பது, சுத்தம் செய்வது போன்றவற்றைத் தெளிவாகப்  படங்கள்  மற்றும் எழுத்துகள் மூலம் விளக்கும் ஒரு கையேடு போன்றவை தரப்பட்டிருக்கும்.

graphic இணையத்தில் ஆர்டர் செய்த மென்ஸுரல் கப்பும் அதனோடு தொடர்புடைய பொருள்களும் அடங்கிய படம்

       முழுப்பார்வை அல்லது குறைபார்வையுள்ளவர்கள்  இந்த கையேட்டின் உதவியுடன் எப்படி கப்பை பயன்படுத்துவது எனத் தெரிந்துகொள்ளலாம். மற்றவர்கள் தொடர்ந்து இந்த பதிவை வாசிப்பதன்மூலம் தெரிந்துகொள்ளலாம்.

      சீரியஸா பேசும்போது உங்க கவனம் சிதராம இருக்க  கொஞ்சம்  இப்படி மொக்க போடவேண்டியிருக்கு. தயவுசெஞ்சு பொருத்துக்கோங்க ப்லீஸ்!

      கப்பை உள்ளே வைப்பதற்குமுன் கைகளையும் கப்பையும் அதிகம் காரத்தன்மை இல்லாத சோப்பில் நன்றாக கழுவி சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

      நிற்பது, குத்துக்காலிட்டு அமர்வது, கால்களை தொங்கவிட்டநிலையில் நுனியில் அமர்வது, படுத்துக்கொள்வது இதில் உங்களுக்கு மிக வசதியான நிலையில் இருந்துகொள்ளுங்கள்.

சிறிய மணி வடிவத்தில் இருக்கும் இந்தக் கப்பை வாய்ப் பகுதி மேல் நோக்கியும்,  கூம்பு போன்ற பகுதி நமது உள்ளங்கையில் குத்துவதுபோல  இருக்கும்படியும்  ஒரு கையில் பிடித்துக்கொண்டு, அதன் ஒரு பகுதியை மற்றொரு கையின்  கட்டைவிரலால் அழுத்துங்கள். அழுத்தும்போது கப்பின் வாய்ப் பகுதியின் நுனி அதன் எதிர் பக்கத்தில் உள்ள கப்பின் வாய்ப் பகுதியின் நுனியோடு ஒட்டும் அளவிற்கு மடித்துப் பிடித்துக்கொள்ளுங்கள். கட்டைவிரலால் அழுத்திப் பிடித்திருக்கும் பகுதிக்கு இருபுறமும் இருக்கும் இரண்டு நுனிப் பகுதிகளையும் ஒன்றோடொன்று ஒட்டும் வகையில் மடித்துக்கொள்ளுங்கள். இவ்வாறு மடிக்கும்போது மற்றொரு கையின் கட்டைவிரலை எடுத்துவிடலாம்.

      இப்போது பெரியதாக இருந்த கப் பிறப்புறுப்பிற்குள் செல்லுமளவிற்கு சிரியதாக இருக்கும். இவ்வாறு மடிக்கப்பட்ட கப்பை பிறப்புறுப்பின் வாய்ப் பகுதியைக் கொஞ்சம் நெகிழ்த்தி  மெதுவாக உள்ளே தள்ளுங்கள்.

      பிறப்புறுப்பு உளர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு கப் உள்ளே செல்லும்போது வலி ஏற்படும். அத்தகையவர்கள் எண்ணெய் அல்லது இந்த ஷைகார்ட் தளத்திலேயே  விற்கப்படும் லூப்ரிகெண்ட் ஏதாவது வாங்கி அதனை அந்தக் கப்பில் தடவி உள்ளே வைக்கலாம்.

      மடிக்கப்பட்ட கப் பிறப்புறுப்பிற்குள் சென்றபிறகு விரிந்துவிடவேண்டும். அவ்வாறு விரியாமல் அதே நிலையில் இருந்தால் சரியாக நீங்கள் மடிக்கவில்லை எனப் புரிந்துகொண்டு மீண்டும் முயற்சிக்கவும்.

      இந்தப் பிரச்சனை முதல் சில நாட்களுக்கு மட்டுமே இருக்கும். அதனால் பயப்படத் தேவையில்லை.

      கப் உள்ளே சென்று விரிந்தபிறகு  ஒரு விரலை விட்டு எங்கேனும் நெளிந்திருக்கிறதா என்பதைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள் எங்கேனும் நெளிந்திருந்தால்  அந்த இடத்தில் மெதுவாக அழுத்தி, கப்பைக் கொஞ்சம் சுழற்றினால் சரியாகிவிடும்.

      ஒருமுறை கப் சரியாக உள்ளே பொறுந்திவிட்டால் நமது பிறப்புறுப்பின் உட்சுவருக்கும் கப்பிற்கும் இடையே காற்று புகமுடியாத ஒரு பிணைப்பு உண்டாகிவிடும். அதனால் மாதவிடாய் வெளியில் லீக் ஆகிவிடுமோ, வாடை அடிக்குமோ என்கிற அச்சமெல்லாம் தேவையில்லை.

      ஒருவேளை சிறு தயக்கம் இருந்தால் கப் பயன்படுத்தும் சில நாட்களுக்கு பேட்களையும் சேர்த்தே பயன்படுத்துங்கள்.

எப்படி வெளியே எடுப்பது?

      கப்பை உள்ளே வைக்கும்போது உங்களுக்கு வசதியான அதே நிலையில் இருந்துகொண்டு ஒரு விரலை மெதுவாகப் பிறப்புறுப்பிற்குள் விட்டு கப்பை ஆங்காங்கே மெதுவாக அழுத்திவிடவும். அப்போதுதான் பிறப்புறுப்பிற்கும் கப்பிற்கும் இடையே உள்ள காற்று புகமுடியாத பிணைப்பு கொஞ்சம் இலகுவாகும்.

      பிறகு மெதுவாக கப்பை வெளியே இழுக்கவும். இழுக்கும்போது கீழே கொட்டிவிடாதவாறு கவனமாக இருங்கள்.

      வெளியே எடுத்ததும் இந்தியன் டாய்லட் எனில் தண்ணீர் உள்ளே செல்லும்  துளையில் சரியாக ஊற்றவும். வெஸ்டன் டாய்லட் எனில் சுற்றியுள்ள கண்ணாடிப் பறப்பில் பட்டுவிடாதபடி சரியாகத் தண்ணீர் உள்ளே செல்லும் குழாய்க்கு மிக அருகில் ஊற்றவும். பிறகு நன்றாக தண்ணீர் ஊற்றி கழிவரையை  ஒருமுறை சுத்தம் செய்துவிடுங்கள். மாதவிடாய் காலம் முழுமையாக  முடிந்ததும் ஃபினாயில் ஊற்றி கழிவரையைச் சுத்தம் செய்துகொள்ளலாம்.

      உதிரத்தைக் கொட்டியதும் கப்பை தண்ணீரில் ஒருமுறை அலசி கப் வாங்கும்போது அதனோடு கொடுத்த வைப்ஸ் எனப்படும் காகித வடிவிலான சோப் அல்லது காரத்தன்மை அதிகம் இல்லாத எதாவது ஒரு சோப் கொண்டு கப்பை நன்றாக சுத்தம் செய்து மீண்டும் உள்ளே வைக்கவேண்டும்.

      மாதவிடாய் காலம் முடிந்ததும் நன்றாகக் கொதிக்கவைத்த நீரில் கொஞ்சம் டெட்டால் அல்லது ஏதாவதொரு கிருமி நாசினி ஊற்றி, அதில் 5 முதல் 10 நிமிடங்களுக்கு  கப்பை போட்டுவிடவும். கப்பை வெந்நீரில் போடுவதற்கென்றே எதாவதொரு டம்லர் அல்லது சிறிய பாத்திரத்தைத் தனியாக ஒதுக்கி வைத்துக்கொண்டால் நல்லது.

வெந்நீரில் போட்டுச் சுத்தம் செய்த கப் நன்றாகக் காய்ந்ததும், அதோடு கொடுக்கப்பட்ட சிறிய சுருக்குப்பை அல்லது உங்களிடம் உள்ள எதேனும் காட்டன் துணியில் சுற்றிக் கப்பை பாதுகாப்பாக வைக்கவும்.

வேறு என்னவெல்லாம் வாங்கலாம் இந்த ஷைகார்ட் தளத்தில்?

      பார்வையற்றவர்களுக்கு இந்தத் தளம் ஒரு வரம். நம் அந்தரங்கம் சார்ந்த, இதுவரை நமக்கு தெரிந்த, தெரியாத பல [sexual wellness] பொருட்கள் இங்கு கிடைக்கிறது.

      உதாரணமாக நாம் கருத்தடைக்காக ஆண்களுக்கான காண்டம் [condom] வாங்கி பயன்படுத்தியிருப்போம். இங்கு பெண்களுக்கான காண்டமும் கிடைக்கிறது.

      பெண்கள் நாப்கின் வாங்குவது எவ்வளவு கடினமோ அதேபோல  கடைக்குச் சென்று என்னென்ன ஃப்லேவர்களில் என்னென்ன ப்ராண்ட் காண்டம் இருக்கிறது, அதன் விலை எல்லாம் தெரிந்துகொண்டு அதில் ஒன்றைத் தெரிவுசெய்து வாங்குவதெல்லாம் எல்லாப் பார்வையற்ற ஆண்களுக்கும் சாத்தியமாவதில்லை.  இங்கு பல விதமான காண்டங்கள் அதன் விவரனைகளோடு தரம் பிரித்துப் பட்டியலிடப்பட்டிருக்கும்.

      அதேபோல வித்தியாசமான செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்பும் ஜோடிகளுக்கு ஆண்களுக்கான வைப்ரேட்டர்கள், உளர்ந்த பெண்ணுறுப்பு உடையவர்களுக்காக ஈரத்தன்மையை அதிகரிப்பதற்கான லூப்ரிகெண்ட்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கென்று பிரத்தியேகமாக அந்தரங்கப் பகுதியில்  முடி நீக்கும் க்ரீம்கள், பெண்ணுறுப்பில் நெகிழ்வுத்தன்மை, திறப்பதில் உள்ள சிக்கல் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்களுக்காக Vaginal Dilator எனப்படும் மருத்துவ சாதனங்கள், விரைப்புத் தன்மை பிரச்சனையுள்ள ஆண்களுக்கான Penis Pump எனப்படும் மருத்துவ சாதனங்கள், பெண்களுக்கான மாதவிடாய்கால டையப்பர்கள் மற்றும் நாப்கின்கள்,  இருபாலருக்கான ஜட்டிகள், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலியை குறைப்பதற்காக தடவிக்கொள்ளும் வகையிலான மருந்துகள்  மற்றும் Period Pain Relief Patches,  கர்ப்பத்தை உறுதி செய்யும் சாதனங்கள், குழந்தைப்பேற்றுக்கு பிறகு குழந்தைகளுக்கு பாலூட்ட வசதியான நைட்டிகள் மற்றும் ப்ரா, வெளியிடங்களுக்கு செல்லும்போது கழிவரையைப் பயன்படுத்துவதில் அசவுகரியங்களை எதிர்கொள்ளும் பெண்களுக்காக நின்றுகொண்டே சிறுநீர் கழிக்க உதவும்    ஒருமுறை மட்டும் பயன்படுவது மற்றும் சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்துவது போன்றவகையிலான  சாதனங்கள்

      இதுமாதிரி ஏராளமான பொருட்கள் ஒவ்வொரு பொருளுக்கும் ஒன்றிற்கும் மேற்பட்ட ப்ராண்ட்கள்  அதன் விவரனைகளுடன் பட்டியலிடப்பட்டிருக்கும். இந்த விவரனைகளைப் படித்து விருப்பமானவற்றைத் தேர்வுசெய்து வாங்கிக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யமுடியாதவர்கள் விவரனைகளை இணையதளத்தில்  படித்துவிட்டு தொலைபேசியில் பேசி ஆர்டர் செய்து இணைய பணப் பரிமாற்றம் செய்துவிட்டால் மறுநாள் பொருள் நம் கையில் வந்து சேர்ந்துவிடும்.

      கடந்த 4 ஆண்டுகளாக இந்தத் தளத்தைப் பயன்படுத்தி வருகிறேன். இதுவரை எந்தச் சிக்கலும் ஏற்பட்டதில்லை. இவர்கள் பார்ஸல் அனுப்பும்போது உள்ளே இருக்கும் பொருளை மேலே குறிப்பிடமாட்டார்கள் என்பதால் நாம் என்ன வாங்குகிறோம் என்கிற தகவல் மற்றவர்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை.

      கடந்த 4 வருடங்களாக திருமணத்திற்கு முன்பிருந்தே நான் இந்த ஷீ கப்பை பயன்படுத்தி வருகிறேன். பெண்ணுறுப்பு சார்ந்த எந்த பிரச்சனையும் இதுவரை எனக்கு ஏற்பட்டதில்லை. கலவியிலும் எந்த சிக்கலும் இல்லை. இப்போது எனக்கொரு குழந்தை இருக்கிறது. குழந்தை பேற்றிற்குப் பிறகும் முன்பு பயன்படுத்திய அதே கப்பைத்தான் எந்தவித சிக்கலும் இல்லாமல்  தொடர்ந்து  பயன்படுத்தி வருகிறேன்.

      என்னுடைய அனுபவங்களையும், இணையத்தின் வாயிலாகத் தெரிந்துகொண்டவற்றையும் தொகுத்தே இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன். இந்த மென்ஸுரல் கப்பை எனக்குத் தேர்ந்தெடுத்துத் தந்தவர் என் கணவர்தான். அதனால்தான் சொல்கிறேன் இதனை வாசிக்கும் ஆண்களும் உங்கள் காதலி / மனைவிக்கு இதனை நீங்கள் அறிமுகப் படுத்தலாம். அவர்கள் விரும்பினால் வாங்கியும் கொடுக்கலாம். பெண்களின் பிரச்சனையைப் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் புரிந்து கொள்ளாம்.

      குறிப்பிட்ட நிறுவனத்திற்கான விளம்பரமாக நீங்கள் இதைக் கருதிவிடவேண்டாம். நான் பயன்படுத்தியதன் அடிப்படையில் என்னுடைய ஆலோசனைகளை உங்களுக்கு வழங்கியிருக்கிறேன்.. அவ்வளவுதான். இந்த கப்பை வாங்குவதும், வாங்காமல் விடுவதும் உங்கள் சுய விருப்பம் சார்ந்தது.

      மென்ஸுரல் கப் பயன்படுத்த ஆர்வமாக உள்ளவர்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் viralmozhiyar@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு உங்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை  அனுப்பி வையுங்கள். நான் உங்களைத் தொடர்புகொள்கிறேன்.

      நம் போன்ற பார்வையற்ற பெண்களுக்குத் தொழில்நுட்பம் தந்த பரிசு இந்த மென்ஸுரல் கப் என்றால் அது மிகையில்லை. நிச்சயம் முயற்சித்துப் பாருங்கள் மென்ஸுரல் கப்பையும் www.shycart.com என்கிற அருமையான இந்த இணையதளத்தையும்.


தொடர்புக்கு:

viralmozhiyar@gmail.com

1 கருத்து:

  1. சற்றும் நினைத்துக்கூட பார்த்திராத ஒன்று. padக்கு alternative குறித்த கட்டுரை அருமை. எனினும், இதை பயன்படுத்துவதை குறித்த தயக்கம் விரைவில் திராரது என்பது நிச்சயம். எனினும், நல்லறிமுகத்திற்கு நன்றி.
    sports, exam போன்ற நேரங்களில் பயன்படுத்த பல பெயரிலான பேட்கள் குறித்த விளம்பரங்கள் ஒளிபரப்பப்படும் நிலையில், இதுகுறித்தெல்லாம் பொதுசமூகமே பேசத்தயங்கும் சூழலில், பார்வையற்ற பெண்களை educate பண்ண முயன்றுள்ளமைக்கு வியப்பு.

    பதிலளிநீக்கு