அரசியலில் நாம்-15 S. வெங்கலமூர்த்தி - ரா. பாலகணேசன்

graphic வெங்கலமூர்த்தி
வெங்கலமூர்த்தி

      வணக்கம் வாசகர்களே! இந்த இதழில் நாம் சந்திக்கவிருக்கும் அரசியலாளர்நாம் தமிழர்கட்சியைச் சார்ந்த S. வெங்கலமூர்த்தி. ‘நாம் தமிழர்கட்சியின் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றியத்தின் செய்தித் தொடர்பாளராகவும், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி கட்டமைப்புக் குழு உறுப்பினராகவும் இவர் பணியாற்றிவருகிறார். அதோடு, கட்சியின் மாநில மாற்றுத்திறனாளிகள் பாசறையின் மாநிலக் கட்டமைப்புக் குழுவின் பொறுப்பாளர்களுள் ஒருவராகவும் இவர் செயல்பட்டுவருகிறார்.

      வேலை நாடுநராகப் பல போட்டித் தேர்வுகளை எழுதிவரும் இவர், தமிழ்நாடு பார்வையற்றோர் விளையாட்டுச் சங்கத்தின் இணைச் செயலாளராகவும் செயலாற்றிவருகிறார். தனிப்பட்ட முறையில் பலருக்கும் தன்னால், தன் நண்பர்களால் இயன்ற உதவிகளைச் செய்துவருகிறார்.

அறிமுகம்

     மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தனக்கன்குளம் என்ற சிற்றூரில் வசித்துவருகிறார் வெங்கலமூர்த்தி.

     பிறவியிலேயே பார்வைக் குறைபாட்டோடு பிறந்தவர் இவர். வளர வளர தெரிந்த பார்வை விகிதம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியதாகத் தெரிவிக்கிறார். இவருக்கு வயது 29.

     இவரது தந்தை செங்கல் சூளை நடத்திவந்தார். தற்போது இவர் தாயார் செங்கல் சூளையில்தான் வேலை செய்கிறார்.

     இவருக்கு உடன்பிறந்தோர் 3 பேர். ஒரு அக்கா; இரு அண்ணன்கள். அண்ணன்களில் மூத்தவர் மன வளர்ச்சி குன்றியவர். அடுத்தவர் வாய் பேச இயலாதவர். இந்தச் சாமானியக் குடும்பத்திலிருந்துதான் அரசியல் களம் கண்டிருக்கிறார் வெங்கலமூர்த்தி.

அரசியல் ஆர்வம்

     இவரது அப்பா ...தி.மு.கவில் தீவிர ஈடுபாடு உடையவர். அது மட்டுமின்றி, சிறுவயதில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டிருக்கிறார் வெங்கலமூர்த்தி.

     தன் பெற்றோர், உறவினர்கள் என எல்லோரையும் விட்டுவிட்டுத் தங்கள் ஊருக்குப் பயிற்சியளிக்க வரும் ஜீக்களைப் பார்த்தபோது அப்போது ஒரு பிரம்மிப்பு இருந்தது என்கிறார் இவர்.

மாற்றம் தந்த IAB

            8-ஆம் வகுப்புவரை உள்ளூர் பள்ளியில் படித்த வெங்கலமூர்த்தி, மதுரை மாவட்டம் சுந்தரராஜன்பட்டியில் உள்ள IAB பார்வையற்றோர்க்கான பள்ளியில் 9-ஆம் வகுப்பில் சேர்ந்தார். அங்கேயே +2 வரை படித்தார். அங்கு உடன் படித்தவர்களும், விடுதியில் தங்கி கல்லூரிகளில் படிக்கும் மூத்தவர்களும் வானொலிச் செய்திகளைக் கேட்டு, அவை குறித்து விவாதித்தது தனக்குப் புதிய அனுபவமாக இருந்ததாகக் கூறும் இவர், அவர்களோடு இணைந்து BBC தமிழோசை முதலிய வானொலிச் செய்திகளைக் கேட்ட பிறகே ஈழம் குறித்துக் கொஞ்சம் கொஞ்சமாக அறியத் தொடங்கியதாகக் குறிப்பிடுகிறார்.

      மேலும், அங்கு விடுதியில் தங்கி கல்லூரிகளில் படித்துவந்த மூத்தவர்கள் இரவு நேரங்களில் தன்னார்வமாக நடத்திய நன்னெறி வகுப்புகள் தனது சமூக சிந்தனையை மாற்றியமைத்ததாகவும், ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளிலிருந்து அப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்ததாகவும் குறிப்பிடுகிறார். இம்மாற்றத்தில் கட்டுரையாளரின் பங்கும் இருக்கிறது என்கிறார்.

      அங்கேயே தங்கி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்த இவர், ஈழம் தொடர்பான போராட்டங்களில் நேரடியாகக் கலந்துகொண்டார். குறிப்பாக, 2013-இல் தமிழகத்தில் தீவிரமாக நடைபெற்ற ஜெனீவா போராட்டத்தில்தான் கலந்துகொண்ட அனுபவத்தை விவரிக்கிறார்.

     தமுக்கம் மைதானம் தொடங்கி, பெரியார் நிலையம் வரை நடத்தப்பட்ட நடைப் பயணத்தில் கலந்துகொண்ட இவர், தன் சக பார்வை மாற்றுத்திறனாளி நண்பர்களிடம் போராட்டத்திற்கான நிதியாகக் குறிப்பிட்ட தொகையைப் பெற்றுத்தந்திருக்கிறார்.

நாம் தமிழரில் சேர்ந்தது எப்போது?

graphic  கர்ஜிக்கும் சிங்கத்தின் படத்தைக் கொண்ட நாம் தமிழர் கட்சியின் படம்

       2009-இல்நாம் தமிழர்இயக்கம் தொடங்கப்படுவதற்கு முன்பே, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை நன்கு அறிந்திருக்கிறார் இவர். திராவிட இயக்க மேடைகளில் அவர் பேசிய உரை வீச்சுகளைக் கேட்டு ரசித்திருக்கிறார். 2011-இல் மதுரை அரசலடியில் நடைபெற்ற நாட்டுப்புற கலை இலக்கிய மீட்பு தொடர்பான கட்சியின் கூட்டத்தில் இவர் கலந்துகொண்டிருக்கிறார். இதுவே இவர் கலந்துகொண்ட முதல்நாம் தமிழர்கூட்டம்.

      2016-இல் நாம் தமிழர் கட்சியில் உறுப்பினரானார் வெங்கலமூர்த்தி. நாம் தமிழர் கட்சியில் மாற்றுத்திறனாளிகள் பாசறை என்ற புதிய அணி உருவாக முக்கியக் காரணமானவர்களுள் ஒருவர் இவர்.

கட்சிப் பணியில் வெங்கலமூர்த்தி

      இவர் ஒன்றிய செய்தித் தொடர்பாளராகக் கட்சிக் கூட்டங்கள் பலவற்றில் கலந்துகொள்கிறார். கட்சியில் நடக்கும் பல கூட்டங்களில் உரையாற்றுகிறார்.

      தொகுதிக் கட்டமைப்புக் குழு உறுப்பினராக இவர் பணி அலாதியானது. ஒவ்வொரு சிற்றூரிலும் கட்சிக் கிளைகளைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்.       ஆர்வமுடையவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமும், ஊரில் உள்ள கட்சியின் மற்ற உறுப்பினர்களிடமும் பேசி, அவர்களைப் பொறுப்பாளர்கள் ஆக்குவது வரை தனது பணி இருக்கும் என்கிறார்.

பார்வையற்றோர் அரசியல் பணிக்கு உதவும் தொழில்நுட்பம்

      யார் யாருக்கெல்லாம் கிளைகளில் பொறுப்புகளை வழங்கலாம் என்று ஆராய அவர்களின் செயல்பாடுகளை அறிந்திருத்தல் அவசியம். அவற்றை அறிய நாம் தமிழர்கட்சியில்செயற்களம்என்ற பெயரில்  ஒவ்வொரு உறுப்பினரின் செயல்பாடுகளும் இணையத்தில் பதிவேற்றப்படுகின்றன. இவற்றைத் தொடர்ந்து கண்காணித்துத் தொடர்புடையவரின் செயல்பாடுகளின் அடிப்படையில் அவருக்குப் பொறுப்பு வழங்கப்படுகிறது.

      இப்படி தன் தொகுதிக்கு உட்பட்டவர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கிறார் வெங்கலமூர்த்தி. அதன் மூலம், இவரும், இவர் குழுவினரும் இணைந்து தொடர்புடையவர்களுக்குப் பதவி உயர்வு, பொறுப்புகள் முதலியவற்றை வழங்கக் கட்சித் தலைமைக்குப் பரிந்துரைக்கின்றனர்.

      உறுப்பினர் விவரங்கள் விரிதாளாக (excel sheet) தன்னிடம் இருப்பதாகவும், அதைக் கொண்டு, பல்வேறு விதங்களில் வகைப்படுத்தி, பிரித்தெடுத்துக் கிளைகளை உருவாக்கமுடிகிறது என்றும் தெரிவிக்கிறார் வெங்கலமூர்த்தி. இது குழுச் செயல்பாடுதான் என்றாலும், ஒரு பார்வை மாற்றுத்திறனாளி தொழில்நுட்பத்தின் துணை கொண்டு அரசியல் கட்சிப் பணிகளில் ஈடுபட முடியும் என்பதற்கான முக்கியமான சான்றாகிறது.

வெங்கலமூர்த்தியோடு ஸ்கைப் வழியே உரையாடினேன். அப்போது என் கேள்விகளுக்கு இவரிடமிருந்து வந்த பதில்கள் இவை.

கேள்வி: இக்கட்சியில் நீங்கள் இணைந்திருப்பது குறித்து உங்கள் வீட்டில், ஊரில் என்ன நினைக்கிறார்கள்?

பதில்: இங்கிருக்கும் பெரும்பாலானோர் தி.மு., .தி.முக ஆகிய கட்சிகளில்தான் இருக்கிறார்கள். அவர்கள் என்னைத் தொடக்கத்தில், “இந்தக் கட்சியில் போய் ஏன் சேர்ந்தாய்?” என்று கேட்கத்தான் செய்தார்கள். நான் தொடர்ந்து அளித்துவரும் விளக்கத்தைப் பார்த்து, “படிச்சவுங்க நீங்க. நல்ல எடத்துலதான் சேர்ந்திருக்கீங்கஎன்று பலரும் சொல்லத்தொடங்கியிருக்கிறார்கள். என் அப்பா தீவிர .தி.மு. ஆதரவாளர். ஆனாலும் அவர் என்னை சுதந்திரமாக இயங்க அனுமதித்திருக்கிறார். என்னைப் பல வேளைகளில், கூட்டங்களுக்கு அழைத்துச்சென்று, விட்டுவிட்டு, அங்குள்ள பொறுப்பாளர்களோடு பேசிவிட்டு அவர் சென்றிருக்கிறார்.

graphic இரு கரும்பும் முண்டாசு கட்டிய விவசாயியின் படமும் இடம்பெற்ற நாம் தமிழர் கட்சியின் சின்னம்

கே: பார்வையற்றவர்கள் அரசியலில் ஈடுபடுவதில் இருக்கும் சிக்கல்களாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

: பொருளாதாரச் சிக்கல்தான். கட்சிப் பணிக்குச் சென்றால் நேரம், காலம் பார்க்கமுடியாது. எப்போது பணி முடியும் எனத் தெரியாது. அத்தகைய சூழல்களில் பசியைப் போக்குவது முக்கியம்தானே! இது ஒரு சின்ன உதாரணம்தான்.

பார்வையற்றவர்கள் பெரும்பாலும் வறுமையில் இருப்பதால்தான் அவர்கள் அரசியலுக்குள் வரத் தயங்குகின்றனர். என்னோடு கட்சிப் பணியாற்றும் பலர் வார நாட்களில் ஏதாவது ஒரு வேலையைச் செய்துவிட்டு, விடுமுறை நாட்களில் களப்பணி ஆற்ற வருவார்கள். நமக்கு அப்படி என்ன வேலை கிடைக்கிறது? அதனால்தான் நாம் அரசுப் பணியை மட்டுமே எதிர்பார்க்கவேண்டியிருக்கிறது.

கே: உங்கள் கட்சியில் பெரும்பாலும் இளைஞர்கள்தான் இருக்கிறார்கள். ஒரு பார்வையற்றவராக அவர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள்?

: உங்கள் பார்வை தவறானது. எங்கள் கட்சியில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை இருக்கிறார்கள். உதாரணமாக, எங்கள் தொகுதியின் தலைவர் கூட வயது முதிர்ந்தவர்தான். அத்தகைய மூத்தவர்கள் கூட என்னை மனமார வரவேற்கிறார்கள். திலீபன் முதலிய மறக்கக்கூடாத போராட்ட ஆளுமைகள் குறித்து நான் பேசும்போதெல்லாம் அவர்கள் வியப்புடன் பார்க்கிறார்கள். அறிவு சார்ந்த விஷயங்களில் நம்மிடம் கூடுதல் தெளிவு இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.

என்னோடு இருக்கும் இளைஞர்கள் என்னை ஊக்கமூட்டுபவனாகப் பார்க்கிறார்கள். அதோடு, கூட்டத்திற்குச் சென்று திரும்பும் வரை நான் பார்வையற்றவன் என்ற உணர்வே வராதவாறு பார்த்துக் கொள்கிறார்கள்.

கே: கட்சியில் மாற்றுத்திறனாளிகள் பாசறை அமைப்பதில் உங்கள் பங்கு முக்கியமானது. அது குறித்து கூறுங்கள்.

: அண்ணனுக்கு வாட்ஸப் வழியாக சிறிய வேண்டுகோளாகதான் இதை வைத்திருந்தேன். அண்ணன் அதற்கு உடனே பதிலளித்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கட்சியினரிடம் கூறிவிட்டார். ஏற்கெனவே முகம்மது கடாஃபி அவர்களும் இது குறித்து அண்ணனிடம் பேசியிருக்கிறார். (முகம்மது கடாஃபி உடல் சவாலுடையவர். கட்சியின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர்.)

அதைத் தொடர்ந்து தற்போது பணிகள் போய்க்கொண்டிருக்கின்றன. சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் கட்சியில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை நான் கணினி வழியே சேகரித்துவருகிறேன். பல மாற்றுத்திறனாளிகள் கட்சியின் உயர்பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்பது வியப்பளிப்பதாக உள்ளது. எங்கள் தொகுதியிலேயே அவனியாபுரம் பகுதிப் பணியில் இருக்கிறார் ராஜதுரை என்ற பார்வை மாற்றுத்திறனாளி.

கே: இனி கட்சி தொடர்பான கேள்விகளுக்குள் செல்வோம். நாம் தமிழர் கட்சி இந்தியத் தமிழர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை; இலங்கைத் தமிழர்கள் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறது என்று கூறப்படுகிறதே!

: நாம் தமிழர் 316 பக்கங்களில் தேர்தல் வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதைப் படித்த யாரும் இந்த விமர்சனத்தை வைக்கமாட்டார்கள். தமிழகத்தின் எதிர்காலம் குறித்த பல திட்டங்கள் அதில் விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. மேலும், நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இயங்கும் மொழிவழி அமைப்புகளோடு இணைந்து நாங்கள் செயல்பட்டுவருகிறோம்.

graphic நாம் தமிழர் தேர்தல் வரைவு அறிக்கை 2016 யின் முகப்புப் படம்

கே: நீங்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் B அணியினர் என்று சொல்லப்படுகிறதே!

: இது தேர்தல் நோக்கில் சொல்லப்படும் பொய் குற்றச்சாட்டு. திராவிடக் கட்சிகளைக் காட்டிலும் நாங்கள்தான் பாஜகவை அதிகம் எதிர்க்கிறோம். அண்ணன் சீமான் அவர்கள், பாஜக என்பது மனிதகுலத்திற்கு எதிரான கட்சி என்கிறார். பிறகு எப்படி நாங்கள் அவர்களது B அணியாக இருக்கமுடியும்?

கே: நீங்கள் தி.மு.கவை எதிர்க்கும் அளவிற்கு .தி.மு.கவை எதிர்ப்பதில்லையே!

: எங்கள் கட்சி உருவாகக் காரணமாக இருந்ததே தி.மு. ஈழப் போரின் இறுதியில் நிகழ்த்திய துரோகங்கள்தான். 2009 வரை எங்கள் தலைவர் தி.மு.க விற்கு ஆதரவானவராகத்தானே இருந்தார்.

.தி.மு.கவை நாங்கள் விமர்சித்துக்கொண்டுதான் இருக்கிறோம். இருந்தாலும், தி.மு.கவை எதிர்க்கும் அளவிற்கு .தி.மு.கவை நாங்கள் எதிர்ப்பதில்லைதான். காரணம், .தி.மு. நாங்கள் எதிர்க்கும் அளவிற்கு வலிமை வாய்ந்ததாக இருக்கிறதா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும்.

கே: திராவிடத்தின் மீது அப்படி என்ன ஒவ்வாமை?

: தமிழ் தேசியம் பேசக்கூடிய அமைப்புகள் நிறைய இருக்கின்றன. அவற்றில் பல திராவிடத்தை முழுமையாக எதிர்க்கின்றன. நாங்கள் அப்படியில்லை. திராவிடக் கொள்கைகள் மீது எங்களுக்குக் கொஞ்சம் முரண் இருக்கிறது என்பது உண்மைதான். இருந்தாலும், நாங்கள் முழுமையாக எதிர்க்கவில்லை. பெரியாரை எங்கள் வழிகாட்டி என்றுதானே அண்ணன் சொல்லியிருக்கிறார்.

கே: திராவிட இயக்கத் தமிழர் பேரவை உங்களைக் கடுமையாக எதிர்க்கிறதே!

: தமிழகத்தில் ஈழம் குறித்து வேறு யாரைக் காட்டிலும் அதிகம் பேசியவர் பேரா. சுபவீ அவர்கள். அப்படிப்பட்டவரே தற்போது இதைக் கடந்து போய்விடுங்கள் என்று சொல்வது எப்படிச் சரியாக இருக்கமுடியும் என்று தெரியவில்லை.

graphic பேரா. சுபவீ அவர்களின் படம்

அதோடு, சீமான் அவர்கள் கட்சி தொடங்கக் காரணமானவர் சுபவீ. அவரும், கவிஞர் அறிவுமதி, கொளத்தூர் மணி, மறைந்த ஷாஹுல் ஹமீது ஆகியோர் இணைந்துதான் இவரை வற்புறுத்தி கட்சி தொடங்கவைத்திருக்கிறார்கள். அப்படி இங்கே இயக்கத்தை உருவாக்க உதவியவர் இப்போது ஏன் இப்படிப் பேசுகிறார் என்று தெரியவில்லை.

கே: சீமான் குறித்து தனிப்பட்ட முறையில் நிறைய விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. அவர் நிறைய கோபப்படுகிறார், மற்றவர்களை மோசமாகப் பேசுகிறார், நிறைய கதை விடுகிறார் என்றெல்லாம் கூறப்படுகிறதே!

: அப்படியெல்லாம் இல்லை. குறிப்பாக ஆமைக்கறி விஷயத்திற்கு வருவோம். ஈழத் தமிழர்கள் உண்ணும் உணவு வகைகளில் ஒன்று இது. அண்ணன் அங்கே சென்றபோது அவருக்கு ஆமைக் கறியைப் பரிமாறியவர் தற்போது திருச்சியில்தான் வசித்துவருகிறார். இது குறித்து நீங்கள் இணையத்தில் தேடிக்கொள்ளலாம்.

அவர் நிறைய கோபப்படுகிறார் என்று சொல்லப்படுவதாகச் சொன்னீர்கள். அப்படியெல்லாம் இல்லை. இயக்கத்தின் கடைக்கோடித் தொண்டன் வாட்ஸப் வழியாகக் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளிப்பவர் அவர். எனக்கே பலமுறை பதிலளித்திருக்கிறார். வேறு எந்தக் கட்சியில், இப்படி சாதாரணத் தொண்டனுக்கும் தலைவருக்குமான உறவு இருக்கிறது என்று நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்.

கே: நாம் தமிழர் மூலமாக தமிழக அரசியலில் ஏற்பட்ட மாற்றம் என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

: நிறைய சொல்லலாம். நாங்கள் பேசியபிறகுதான் பலர் தற்சார்புப் பொருளாதாரம், பண்பாட்டு மீட்பு முதலியவை குறித்தெல்லாம் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். முப்பாட்டன் முருகனுக்கு நாங்கள் விழா எடுத்துவந்தோம். சுப்பிரமணியன் என்று அந்தக் கடவுளை அழைத்தவர்களான பாஜகவினர் அதைத்தான் இன்று ஆயுதமாக்கியிருக்கிறார்கள்.

எங்களுக்குப் பிறகுதான் தற்போது தி.மு. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி என்ற ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். மாற்றுத்திறனாளிகள் பாசறையும் பிற அரசியல் கட்சிகளி்டையே நாங்கள் ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான தாக்கம்தான்.

இவை மட்டுமல்ல. தமிழகத்திற்கும் நாங்கள் நிறைய நன்மைகளைச் செய்திருக்கிறோம். முதன்முறையாக தஞ்சை பெரியகோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்திருக்கிறோம். அதைப் பின்பற்றி மற்ற  கோவில்களிலும் தற்போது தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்டுவருகிறது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் கார்ப்பரேட் கைகளுக்குச் செல்வதைத் தடுத்திருக்கிறோம்.

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக 50% பெண் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறோம். தாழ்த்தப்பட்டவர்களைப் பொதுத் தொகுதிகளில் நிறுத்தியிருக்கிறோம். மாற்றுத்திறனாளிகளையும், மாற்றுப் பாலினத்தவரையும் வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கிறோம்.

கே: உங்கள் கட்சியில் எல்லாச் சாதியினரும் பொறுப்பில் இருக்கிறார்களா?

: நிச்சயமாக. எல்லாச் சாதியினரும் இருக்கிறார்கள். தெலுங்கு பேசுவோரும், பிற மொழிகளைப் பேசுவோரும் கூட எங்கள் நிர்வாகிகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எங்கள் கொள்கைகள் நன்றாகப் புரிகிறது. வெளியில் இருப்பவர்கள்தான் குழப்புகிறார்கள்.

கே: வெளிநாடுகளிலிருந்து நிறைய பணம் வருகிறதாமே!

: ஆமாம் வருகிறது. இங்கிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்வோர் எங்களுக்குப் பணம் அனுப்புகிறார்கள். அவ்வளவுதான்.

கே: அரசியலுக்குள் வர விரும்பும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

: தைரியமாக உள்ளே வாருங்கள். எங்கள் கட்சி என்றில்லை. நீங்கள் விரும்பும் எந்தக் கட்சியிலாவது சேருங்கள். நம் வாழ்வாதாரங்களையும், உரிமைகளையும் அப்படித்தான் பெறமுடியும்.

எனக்கும் முதலில் தயக்கமாகத்தான் இருந்தது. உங்களைப் போன்றவர்கள்தான் ஊக்குவித்தீர்கள்.

கே: மற்ற பார்வை மாற்றுத்திறனாளிகளைக் கட்சியில் சேர்த்திருக்கிறீர்களா?

: நான் யாரையும் வற்புறுத்தியதில்லை. நான் கூறிய கொள்கைகளின் அடிப்படையில் சில பார்வை மாற்றுத்திறனாளி நண்பர்கள் கட்சியில் சேர்ந்திருக்கிறார்கள்.

graphic திரு. சீமான் அவர்களின் படம்

 கே: அண்ணனை நேரில் சந்தித்திருக்கிறீர்களா?

: இல்லை. ஆனால், ஒருநாள் எங்களைச் சந்திக்க வருமாறு அண்ணன் அழைத்திருக்கிறார். விரைவில் சந்திக்கவிருக்கிறேன்.

வெங்கலமூர்த்தி அவர்களைத் தொடர்புகொள்ள: 8072005506

வாசகர்களே!

      உங்களுக்குத் தெரிந்த பார்வை மாற்றுத்திறனாளி அரசியலாளர்களை எங்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். அவர்கள் தேர்தல் அரசியலிலோ, கொள்கை அரசியலிலோ ஈடுபாடு கொண்டவராக இருக்கவேண்டும். களப்பணி ஆற்றியவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் உங்களுக்குத் தெரியும் என்றால், 9894335053 என்ற எனது தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொள்ளுங்கள். ஆவணப்படுத்துவோம்.

graphic கட்டுரையாளர் பாலகனேசன் அவர்களின் படம்
கட்டுரையாளர் பாலகனேசன்

தொடர்புக்கு: balaganesan2285@gmail.com

2 கருத்துகள்: