வரலாற்று நோக்கில் பார்வை மாற்றுத்திறனாளிகளின் வாழ்வைப் பார்த்தால், 21-ஆம் நூற்றாண்டு நமக்கு மிகவும் வசதியான, மகிழ்ச்சியான நூற்றாண்டுதான்.
ஒரு காலகட்டத்தில் நாம் கண்டுகொள்ளப்படாதவர்களாக இருந்தோம். வேறு வழியின்றி குடும்பத்தாரால் பராமரிக்கப்பட வேண்டியவர்களாகவும், நல்லெண்ணம் கொண்ட அமைப்புகளின் கருணைக்கு உட்பட்டவர்களாகவும் இருந்தோம்.அடுத்த கட்டமாக, மதங்கள் நம்மைக் கருணைக் கண் கொண்டு பார்த்தன. ஐரோப்பியக் காலனி நாடுகளில், குறிப்பாக நம் இந்தியாவில் கிறிஸ்தவ மிஷனரிகள்தான் பார்வையற்றோரால் குறைந்த அளவிலேனும் தற்சார்போடு இயங்கமுடியும் என நிறுவ முயன்றன.
இப்படி நம்மைப் பராமரித்து, வளர்த்தெடுத்த அனைவருக்கும் நாம் நன்றிக்குரியவர்களாகிறோம்.
ஆனாலும், தற்போது நம் வாழ்வில் நிகழ்ந்திருக்கும் பெரும் பாய்ச்சல் குறித்து இளைய தலைமுறையினர் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பில்லை. காரணம், அது குறித்த வரலாற்றுத் தெளிவை அவர்கள் பெறவில்லை. மூத்தவர்கள் அப்பணியை மேற்கொள்ளவேண்டும்.
தொழில்நுட்பம்தான் அந்தப் பெரும் பாய்ச்சல். நம்மைநாமே இயக்கிக் கொள்ள, இயங்கிக்கொள்ள நமக்குக் கிடைத்திருக்கும் பெருவாய்ப்பு இந்த அறிவியல் தொழில்நுட்பம்.
நம் மீது அக்கறை கொண்டவர்களும், கருணை காட்டியவர்களும் நமக்குத் தராத, தர இயலாத ஒரு உயர்ந்த படிநிலையைத் தற்போது தொழில்நுட்பம் தந்துகொண்டிருக்கிறது. பார்வையற்றோரைப் பார்வையுள்ளோரோடு சமமாக்கமுடியும் என அது நிறுவிக்கொண்டிருக்கிறது.
ஒருவேளை கால எந்திரத்தில் சென்று 100 ஆண்டுகளுக்கு முன் இருந்த பார்வை மாற்றுத்திறனாளிகளிடம் இது குறித்து கருத்து கேட்டிருந்தால், அவர்கள் இந்த வளர்ச்சிக்கு ஆசைப்பட்டிருப்பார்கள்; ஆனால், நடக்க வாய்ப்பில்லை என்றே கருதியிருப்பார்கள். அப்படி நடக்க வாய்ப்பில்லாததையெல்லாம் நடத்திக்காட்டியிருக்கிறது இந்த அறிவியல் தொழில்நுட்பம்.
நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்த விரல்மொழியர் மின்னிதழ் உங்களை வந்தடையக் காரணமாக இருப்பதும் இந்தத் தொழில்நுட்பம்தானே! இதழ் வெளியீடும், இதழ் வெளியீட்டிற்குக் காரணமான படைப்பாளிகளின் சிந்தனைக் கோர்ப்பும் தொழில்நுட்பத்தின் வாயிலாகத்தானே இப்படி பரவமுடிகிறது.
வாசகர்களே! விரல்மொழியர் உங்கள் பேராதரவுடன் தனது 30-ஆவது இதழை வெளியிடுகிறது. எங்களுக்கு ஒத்துழைப்பும், உதவியும் நல்கிக்கொண்டிருக்கும் படைப்பாளிகள், வாசகர்கள், தமிழகத்தில் உள்ள முக்கியமான பார்வைக் குறையுடையோருக்கான அமைப்புகள் என அனைவருக்கும் இத்தருணத்தில் எங்கள் அடிமனதிலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இத்தனைக்கும் காரணமான தொழில்நுட்பத்திற்கும் நன்றி தெரிவிப்பது எங்கள் கடமைதானே! ஆம். விரல்மொழியரின் 30-ஆவது இதழ் தொழில்நுட்பச் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. படித்துப் பயன் பெறுவீர்.
வாசகர்கள் அனைவருக்கும் தாமதமான சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துகள். முன்கூட்டிய சர்வதேச பிரெயில் தின வாழ்த்துகள்.
தொழில்நுட்ப இதழாக வெளியிட்டுள்ள முயற்சிக்கு பாராட்டுக்கள்
பதிலளிநீக்கு