கடந்த மே மாதம் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியானது. வெளியான உடனே எல்லோரையும் போல என்னாலும் பார்க்க முடிந்தது. என் வாழ்நாளிலேயே முதல் முறையாக ஒரு திரைப்படம் வெளியான முதல் நாளே பார்க்கும் வாய்ப்பை அமேசான் பிரைம் உருவாக்கிக் கொடுத்தது. ஒரு பார்வையற்றவனாய் அப்போது அடைந்த பரவசத்தை வார்த்தைகளால் வர்னிக்க இயலாது. அதைச் சாத்தியமாக்கிய OTT தளங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
பூங்காக்கள், திரையரங்குகள் போன்றவை இன்னும் பார்வையற்றோருக்கு உகந்த வகையில் வடிவமைக்கப்படவில்லை. பொழுது போக்கில் கூட பார்வை மாற்றுத்திறனாளிகள் சமத்துவமின்மையை எதிர்கொள்கின்றனர். “இங்கே வந்தால் பாடம் நடத்துறீங்க. வீட்டுல சும்மாவே உட்கார்ந்திருப்பீங்கல்ல? உங்களுக்கு போரடிக்குமே சார்” என ஒரு ஆசிரியை என்னிடம் கேட்டார். பார்வை மாற்றுத்திறனாளிகள் பாடுதல், ஆடுதல், திரைப்படம் பார்த்தல், விளையாடுதல் போன்ற கேளிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்ற சிந்தனை பொது சமூகத்திற்கு அறவே இருப்பதில்லை. அதன் விளைவுதான் இது போன்ற வினாக்களும், திரையரங்கம் போன்ற இடங்களில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படாமல் இருப்பதும்.
யானை பெருங்கவளங்களை உண்ணும்போது சிதறும் பருக்கைகள் எறும்புக்கு விருந்தாவதைப் போல, OTT தளங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் வேறாக இருக்கலாம். ஆனால் அவை பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பொழுதுபோக்குச் சமத்துவத்தை உருவாக்கித்தந்திருக்கின்றன. அமேசான் பிரைம், நெட்ப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார், zee5, எம்எக்ஸ் பிளேயர் இப்படி பல OTT செயலிகளும் தளங்களும் இருக்கின்றன. இவற்றில் நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் பார்வையற்றோரும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஐபிஎல் போட்டிகளை பார்வை மாற்றுத்திறனாளிகளும் பார்க்கும் வகையில் ஹாட்ஸ்டார் செயலியில் அக்ஸஸபிலிடி வசதிகளைச் செய்து தரவேண்டும் என நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. அதற்கு ஹாட்ஸ்டார் தரப்பிலிருந்து, “அக்ஸஸஸிபிலிடி என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது” என்று பதில் அளித்திருந்தார்கள். இதில் இருந்தே தெரிந்திருக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகள் ஹாட்ஸ்டார் ஆப்பை உபயோகிப்பதில் சில சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும் என. இருந்தாலும் ஹாட் ஸ்டார் ஆப்பை நாம் பயன்படுத்த முடியும்; சில அணுகல் தன்மை சிக்கல்கள் மட்டும் இருக்கின்றன. zee5 மற்றும் எம்எக்ஸ் பிளேயர் போன்றவற்றை பார்வையற்றவர்கள் கணினியில் மட்டுமே பயன்படுத்த இயலும்.
OTT செயலிகளில் திரைப்படங்கள், வலைத்தொடர்கள் (web series), ஆவணப்படங்கள், குறும்படங்கள், ஸ்டாண்டப் காமெடி ஷோ எனப் பலவற்றைப் பார்க்கமுடியும். அமேசான் பிரைம், நெட்ப்ளிக்ஸ் போன்றவற்றில் ஒரு திரைப்படத்தையோ வலைத்தொடரையோ இயக்கினால் திரை கிடைமட்டமாகச் சுழன்றுவிடும். எனவே உங்கள் அலைபேசியை நீங்கள் கிடைமட்டமாக வைத்துக்கொள்ள வேண்டும். தற்போது ஒரு விரலை வைத்து திரையின் மீது டபுள் டேப் செய்தீர்கள் என்றால் மொழி மற்றும் சப்டைட்டில் தேர்வு, கலைஞர்களின் விவரம், அமைப்புகளுக்கான பொத்தான்கள் இடமிருந்து வலமாகத் தோன்றும்.
OTT-யில் சர்வதேச வலைத் தொடர்களையும் திரைப்படங்களையும் நாம் தமிழ் மொழியில் பார்க்கலாம். அவற்றைத் தமிழ் மொழியில் டப் செய்திருப்பார்கள் அல்லது தமிழில் சப்டைட்டில் கொடுத்திருப்பார்கள். வேற்று மொழி திரைப்படங்கள் மற்றும் வலைத்தொடர்களில் சில மட்டுமே தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டுக் கிடைக்கிறது. ஆனால் பலவற்றிற்குத் தமிழ் சப்டைட்டில் வசதி இருக்கிறது. மொழி மற்றும் சப்டைட்டில் பகுதிக்குச் சென்று தமிழ் மொழியைத் தெரிவுசெய்து, உள்ளடக்கங்களை நீங்கள் தமிழ் மொழியிலேயே பார்க்கலாம்.
சப்டைட்டில் வசனங்களைப் படிக்க மேலிருந்து கீழாக ஒரு விரலால் ஸ்வைப் செய்யவேண்டும். இதில் இருக்கும் குறைபாடு என்னவென்றால், வசனத்தைப் படிக்க ஒவ்வொரு முறையும் இப்படி செய்துகொண்டே இருக்கவேண்டும் என்பதுதான். சப்டைட்டில் பகுதியில் சென்று பார்த்தீர்கள் என்றால் ஆடியோ டிஸ்கிரிக்ஷன் என்ற ஒன்றும் இருக்கும்.இதன்மூலம் நீங்கள் ஒலி விவரிப்புடன் திரைப்படங்களை பார்க்கலாம். ஆனால், அந்த வசதி பெரும்பாலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி உள்ளடக்கங்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் சென்னை, மதுரை போன்ற பெரு நகரங்களில், ஒலி விவரிப்புடன் தமிழ் திரைப்படங்களைப் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புக் காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு திரையிடப்படுகின்றன. அப்படங்கள் OTT-யிலும் கிடைக்க வேண்டும். இதன் மூலம் நிறைய பார்வை மாற்றுத்திறனாளிகள் பயனடைவர்.
எங்கள் விடுதியிலிருந்து ஒலி விவரிப்புடன் கூடிய தாண்டவம் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அழைத்துச் சென்றிருந்தனர். காதல் வசனங்கள் மற்றும் சண்டை காட்சிகளின் போது நான் உள்ளிட்ட நண்பர் குழு விசிலடித்தும், கை தட்டியும்,, சத்தம் போட்டும் ஆரவாரம் செய்துகொண்டிருந்தோம். அடுத்த நாள் நான் உள்ளிட்ட நண்பர் குழுவை விடுதி காப்பாளர் அழைத்தார். “உங்களுக்கெல்லாம் அறிவு இருக்கா? தியேட்டரில் போய் விசிலடித்து, கைதட்டி சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்”. இதைக் கேட்டதுமே எங்களுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. நாங்கள் ரகசியமாகச் சிரித்துக்கொண்டு நின்றோம். ஆனால் அவர் கடுமையாகக் கால் மணி நேரத்திற்கும் மேலாகத் திட்டிக்கொண்டிருந்தார்.
சிறப்புக் காட்சிகளை பெரும்பாலும் ஏதேனும் ஒரு அமைப்புதான் ஏற்பாடு செய்கிறது. இப்படி ஒரு அமைப்பு திரையரங்கிற்கு அழைத்துச் செல்லும்பொழுது,பார்வையற்றவர்களின் கொண்டாட்ட மனநிலையைக்கூட அவர்கள் ஒடுக்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஒலி விவரிப்புடன் திரைப்படங்களைத் திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகள் மூலம் மட்டுமே ஒளிபரப்ப இயலும். அதனை OTT-யில் ஒரு வசதியாகக் கொடுத்தால், விருப்பப்பட்டவர்கள் இயக்கிக் கொள்ள முடியும்.
டப்பிங்குகள் சில நேரங்களில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குச் சிக்கலைத் தருகின்றன. ஏனெனில், வலைத்தொடர்களிலும், திரைப்படங்களிலும் ஒருவரே பல கதாபாத்திரங்களுக்குப் பின்னணிக் குரல் கொடுக்கிறார். அது பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குக் குழப்பத்தைத் தருகிறது.
அடுத்து முக்கியமானதைச் சொல்லப்போகிறேன். நோட் பன்னுங்கப்பா! பெண் குரல்கள் படுக்கையறை காட்சியில் முனகுவதற்கும் சோகக் காட்சிகளில் அழுவதற்கும் எவ்வித வேறுபாடும் தெரிவதில்லை. இவற்றை தமிழ் டப்பிங் கலைஞர்கள் சரிசெய்ய வேண்டும். பாதாள உலகம், மிர்சாப்பூர் போன்ற வலைத்தொடர்கள் தமிழ் டப்பிங்கால் மேலும் மெருகேறியது என்பதையும் மறுக்க இயலாது.
குடும்பத்துடன் ஒரு திரைப்படத்திற்குச் செல்லும்போது ஆகும் செலவைவிட OTT-யில் ஒரு செயலிக்கான ஆண்டுச் சந்தா குறைவாகவே இருக்கிறது. OTT செயலிகள் பல இருக்கின்றன. அதனால் ஒவ்வொரு செயலிக்கும் நாம் தனித்தனியாக பணம் கட்டவேண்டும். தற்போது ஆண்டுச் சந்தா செலுத்தினால் அனைத்து உள்ளடக்கங்களையும் அணுக முடிகிறது. எதிர்காலத்தில் சில உள்ளடக்கங்களுக்கு மட்டும் தனியாகப் பணம் செலுத்தும் சூழல் வரலாம். உதாரணத்திற்கு க.பே ரணசிங்கம் திரைப்படத்தைப் பார்க்க zee5-இல் ஆண்டுச் சந்தா செலுத்தி இருந்தாலும், தனியாக 199 ரூபாய் கட்டி குறிப்பிட்ட மணி நேரத்திற்குள் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் அப்படம் நீக்கப்பட்டுவிடும். மீண்டும் பார்க்கவேண்டுமென்றால் 199 ரூபாய் கட்ட வேண்டும். இனி பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் OTT-யில் இந்த முறையில் வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
இந்த இடத்தில் சின்னதாய் ஒரு பிளாஷ்பேக். அன்று என் சொந்தக்கார அக்காக்கள் திரைப்படம் பார்க்கத் தியேட்டருக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். நானும் வருவேன் என அழுது அடம்பிடித்ததால், “கூட்டிச் செல்கிறேன்” என ஒரு அக்கா சொன்னது. அவர்கள் வீட்டிற்குள் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். நான் திண்ணையில் அமர்ந்து தாளம் போட்டுக்கொண்டிருந்தேன். “”அவன ஏண்டி கூட்டிக்கிட்டு போறமுன்னு சொன்ன? எங்க போனாலும் அவன கையில புடிச்சிக்கிட்டே திரியணும். எதையாச்சும் சொல்லி வீட்டுல விட்டுட்டு வந்துரு” என ஒரு அக்கா மெதுவான குரலில் வீட்டுக்குள் சொல்லியது என் காதில் விழுந்தது. அதைக் கேட்டதுமே எனக்கு சுருக்கென்று தைத்தது. தூக்கம் வருவதால் நான் வரவில்லை எனச் சொல்லிவிட்டு, அவர்கள் போனதும் தனியாக பாயில் படுத்து அழுதேன். எட்டு வயதில் என் இதயத்தில் தைத்த முள்ளை எந்த ஊக்கை கொண்டு எடுக்க முடியும். எனக்கு இது ஒரு உறவினர் வீட்டில் நடந்தது. சில பார்வையற்றவர்களுக்குச் சொந்த வீட்டிலேயே நடந்திருக்கலாம்.
பார்வை மாற்றுத்திறனாளிகளாகிய நமக்குச் சுயமாக, சுதந்திரமாக, ஒரு படம் வெளியானதுமே சுடச்சுட பார்த்து ரசிப்பதன்மூலம் கிடைக்கும் கொண்டாட்ட மனநிலைக்கு விலை மதிப்பில்லை. முன்பு எவ்வளவு விலை கொடுத்திருந்தாலும் இந்த வாய்ப்பு நமக்கு கிட்டி இருக்காது. இன்று அதற்கு OTT நிறுவனங்கள் குறிப்பிட்ட விலை கேட்கிறார்கள். அதற்கென்ன, கொடுப்போம் கொண்டாடுவோம்!
கட்டுரையாளர் பார்வையற்றவன் |
தொடர்புக்கு: paarvaiyatravan@gmail.com
உங்கள் அனுபவம் பிறருக்கு வழிகாட்டுதலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை பின்னணிக்குரல் தொல்லை தொலைக்காட்சி தொடர்களையும் விட்டுவைக்கவில்லை அதற்கும் ஒரு ஏற்பாடு செய்தால்
பதிலளிநீக்குநாடகங்களையும் அனுபவிக்க முடியும் கட்டுரையாளருக்கு
மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்