அரசியலில் நாம்-16. மா. அகிலன் - ரா. பாலகணேசன்

 

 

வணக்கம் வாசகர்களே!

      இந்த இதழில் நாம் சந்திக்கவிருக்கும் அரசியலாளர் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் உறுப்பினராக இருக்கும் மா. அகிலன். இதுவரை நாம் சந்தித்தவர்களிலேயே மிகவும் இளையவர் இவர்.

graphic மா. அகிலன் அவர்கள் சுபவீ அவர்களுடன் இணைந்து எடுத்துக் கொண்ட படம்
மா. அகிலன்

       நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் ஆங்கிலத் துறையில் இளங்கலை மூன்றாம் ஆண்டு ஆங்கிலம் பயின்றுவருகிறார் அகிலன்.

      நாமக்கல்லில் வசித்துவரும் இவர், பிறவியிலேயே பார்வையை இழந்தவர். இவரது தந்தை அரசு நூலகராக இருந்தவர். தாயார் அஞ்சல் துறையில் பணியாற்றிவருகிறார். உடன்பிறந்தோர் இரண்டு அக்காக்கள்.

      தொடக்கக் கல்வியை சென்னை சிறுமலர் பார்வையற்றோர் பள்ளியில் படித்த அகிலன், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை கோவை ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா பள்ளியிலும், 9 & 10 வகுப்புகளைச் சென்னை நேத்ரோதயா பார்வையற்றோர் பள்ளியிலும், 11 & 12-ஆம் வகுப்புகளை சென்னை புனித லூயி பார்வையற்றோருக்கான பள்ளியிலும் படித்திருக்கிறார்.

      இவரது தந்தை மாமாறன் திராவிட இயக்க ஆர்வலராக இருந்ததோடு, அக்கொள்கைகளை இவரிடமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டு சேர்த்திருக்கிறார். மேலும், மாமாறன் ஓய்வு பெற்றபிறகு திராவிடர் கழகத்திலும் செயல்பட்டிருக்கிறார். அதன் காரணமாக திராவிடர் கழகத் தலைவர் கீ. வீரமணி அவர்களைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பை நெகிழ்வோடு நினைவுகூர்கிறார் அகிலன்.

graphic கீ. வீரமணி அவர்களின் படம்

       10-ஆம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வை அகிலன் எழுதிக் கொண்டிருந்தபோதுதான் அந்தப் பேரதிர்ச்சியான நிகழ்வு நடந்தது. அகிலனின் தந்தையார் காலமாகிவிட்டார்.

      12-ஆம் வகுப்பு படிக்கவேண்டிய காலம் முழுமையும் அகிலனால் பள்ளிக்கூடம் செல்ல இயலவில்லை. கடுமையான நோய் காரணமாக வீட்டிலிருந்தே படிக்கவேண்டிய சூழ்நிலை. அப்போதுதான் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும்ஒன்றே சொல்; நன்றே சொல்நிகழ்ச்சியைப் பார்க்கத்தொடங்கினார். அந்நிகழ்ச்சியில் உரையாற்றிவந்த பேரா. சுப. வீரபாண்டியன் அவர்களின் நடையும், கருத்துகளும் அகிலனுக்கு மிகவும் பிடித்துப்போனது. யூடியூபில் கொட்டிக்கிடக்கும் சுபவீ  அவர்களின் பேச்சுகளைக் கேட்கத்தொடங்கினார்; பின்பு அதிலேயே மூழ்கிப்போனார்.

graphic பேரா. சுபவீ அவர்களின் படம்

       சுபவீ அவர்களிடம் என்றாவது ஒருநாள் பேசியே ஆகவேண்டும் என்ற முனைப்பில், அவரது தொலைபேசி எண்ணைத் தேடி ஒருவழியாகக் கண்டறிந்துவிட்டார். நண்பர்களின் உதவியோடு, அவரோடு நேரடியாகத் தான் தொலைபேசியில் உரையாடிய நாளை மறக்கவே முடியாது என்கிறார் அகிலன்.

கொரோனா காலம் தந்த புத்தெழுச்சி

      கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு உலகெங்கிலும் பல மாறுதல்கள் நடந்திருக்கின்றன. அவை தொடர்ந்தும் நம்மைப் பாதித்துவருகின்றன. அந்த வகையில் அகிலனுக்கு இந்தக் கொரோனா ஊரடங்குக் காலம் நல்ல காலமாக அமைந்திருக்கிறது. திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் ஆதரவாளர்கள் பலரோடு தொலை்பேசியில் உரையாடியிருக்கிறார். அவர்களைத் தவிர, சமூக ஊடகங்களில் களமாடிவரும் திராவிட இயக்க ஆர்வலர்கள் பலரோடும், பிற மூத்த பத்திரிகையாளர்களோடும் தன்னிச்சையாக தொலைபேசி எண்களைத் தேடிப் பெற்று உரையாடி மகிழ்ந்திருக்கிறார்; கருத்துப் பரிமாற்றங்களைச் செய்திருக்கிறார்.

      திராவிட இயக்கத் தமிழர் பேரவையில் செயல்பட்டுவரும் உமா, கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் பணியாற்றிவரும் வரவணை செந்தில், பத்திரிகையாளர் மணி முதலியோர் இவர் உரையாடியவர்களில் முக்கியமானவர்கள்.

      ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு திராவிட இயக்கத் தமிழர் பேரவையில் உறுப்பினராகியிருக்கிறார் அகிலன்.

graphic திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பெயர் பதாகை

       நாமக்கல்லில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் அந்த இயக்கத்தின் பொதுச்செயலர் பேரா. சுபவீ அவர்களைச் சந்தித்து உறுப்பினராகியிருக்கிறார். இந்த அமைப்பு நடத்தும் கருத்தரங்குகளில் பங்கேற்றுத் தனது அறிவை மேம்படுத்திவருவதாகக் கூறும் அகிலன், இயக்கத்தின் கருத்துகளைச் சமூக ஊடகங்களில் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்.

இவரிடம் முன்வைக்கப்பட்ட சில கேள்விகளும் பதில்களும்.

 

கே: திராவிடர் கழகம் என்று ஒரு அமைப்பு இருக்கும்போது எதற்கு திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை?

: எங்களின் வேலைத் திட்டத்தில் சிற்சில மாறுதல்கள் இருக்கின்றன. அவ்வளவே. திராவிடர் கழகத்தின் அடியொற்றிதான் நாங்கள் செயல்படுகிறோம்.

graphic திராவிடர் கழகத்தின் கொடி

கே: சென்ற இதழில் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்தவரிடம் நடத்தப்பட்ட நேர்காணலில் கூறப்பட்ட ஒரு செய்திக்கு பதிலை எதிர்பார்க்கிறேன். நாம் தமிழர் கட்சி தொடங்குவதற்குக் காரணமாக இருந்தவரே சுபவீ தான் என்று அவர்கள் கூறுகிறார்களே!

: உண்மைதான். கட்சி தொடங்கும்போது சுபவீ அவர்களும் இருந்தது உண்மைதான். ஆனால் கட்சியின் நோக்கமாக அப்போது திராவிட இயக்க எதிர்ப்பு என்பது குறிப்பிடப்படவில்லை. ஆனால் நாம் தமிழர் திராவிட இயக்கத்தை, குறிப்பாக தி.மு.கவை எதிர்ப்பதையே முழுநேரப் பணியாகக் கொண்டிருக்கிறது என்பதை மறுக்கமுடியுமா? தி.மு.கவை எதிர்ப்பதுதான் நாம் தமிழரின் பணியாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்ஸின் பணியாகவும் அதுதானே இருக்கிறது. அதனால்தான் அவர்களை நாங்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் B டீம் என்கிறோம்..தி.மு. என்றால் மட்டும் சீமான் அவர்கள் மென்போக்கைக் கடைபிடிப்பது ஏன்? தி.மு.கவைத் தடியால் தாக்குவதும், .தி.முக உள்ளிட்ட மற்ற கட்சிகளை மயிலிறகால் வருடுவதுமான பணிகளைத்தான் அவர்கள் செய்கிறார்கள்.

கே: பேரவையில் உங்களுக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?

: நிச்சயமாக மிகவும் நன்றாக இருக்கிறது. நாமக்கல்லில் நடைபெற்றசுயயமரியாதைச் சூரியன்நூல் வெளியீட்டு விழாவில்தான் நான் பேரவையில் முறைப்படி இணைந்தேன். எனக்கு முதன்முதலில் சுபவீ ஐயாதான் தொலைபேசி மூலம் அறிமுகமானவர். அவர் கூறிய பிறகு இக்லாஸ் அவர்களோடு தொடர்பு ஏற்படுத்திக்கொண்டேன்.  இக்லாஸ் அண்ணனோடு, உமா அக்கா, புவனேஸ்வரி அக்கா ஆகியோரும் என்னைச் சிறப்பாக வழிநடத்துகின்றனர். பேரவையின் மாவட்டச் செயலாளர் சுந்தரவதனம் அவர்களும் என்னை மகிழ்வோடு வரவேற்றார். கார்த்திகேயன், உதயகுமார், துரைமுருகன் ஆகிய அண்ணன்கள் சமூக ஊடகங்களில் நான் செயல்படுவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கிவருகின்றனர். பேரவையினரிடம் பேசும்போது, என் வீட்டினரிடம் பேசும் உணர்வோடும், உரிமையோடும்தான் பேசுகிறேன்.

கே: தி.முக.விற்கு கொள்கை ஆலோசனை தரும் முக்கிய அமைப்பாகத்தான் உங்கள் பேரவையை நான் பார்க்கிறேன். தி.மு. இதைத் தவிர்த்துக் கொண்டால் நல்லது என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

: அப்படி எதுவும் கூறுவதற்கில்லை. தி.மு. மிகச் சிறப்பாகவே செயல்படுகிறது. வரும் தேர்தலில் தி.மு. அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பதில் துளியளவும் ஐயமில்லை.

கே: ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்த எதிர்ப்பை எப்படி சமாளிக்க இருக்கிறீர்கள்?

: சித்தாந்த எதிர்ப்பைச் சமாளித்துவிடலாம். அவர்கள் அதிகாரக் கூட்டணியோடு வருகிறார்கள். ஆனாலும் தமிழகம் இவர்களை நன்கு புரிந்துள்ளது. இங்கு அவர்களால் வெற்றிபெற இயலாது.

கே: திராவிட இயக்கத் தமிழர் பேரவை தேர்தல் அரசியலில் ஈடுபடும் அமைப்பு அல்ல. கொள்கை பரப்பு அமைப்பு. இதில் இணையும் உங்கள் முடிவு வித்தியாசமானது. அதற்கு என் வாழ்த்துகள். இந்த அமைப்பில் வளர்ச்சி அடைவதில் ஒரு பார்வை மாற்றுத்திறனாளியாக நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன?

: திராவிட இயக்கம் அறிவுசார் இயக்கம். அது குறித்த நிறைய நூல்களைப் படிக்கவேண்டும் என்று ஆசை. அவை அனைத்தும் ஒருங்குறி வடிவில் கணினியில் கிடைப்பதில்லை. பல புத்தகங்கள் அச்சில்தான் இருக்கின்றன. அவற்றைப் படிக்க இன்னொருவரை எதிர்பார்க்கவேண்டியிருக்கிறது. திராவிடம் சார்ந்த எல்லா நூல்களும் நாம் படிக்கும் வகையில் ஒருங்குறி (Unicode) வடிவில் மென்பதிப்பாக (soft copy) இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.

கே: கல்லூரி மாணவர் நீங்கள். உண்மையைச் சொல்லுங்கள். தற்போதைய நிலையில் மாணவர்களின் ஆதரவு யாருக்கு அதிகமாக உள்ளது? திராவிட இயக்கத்திற்கா? நாம் தமிழருக்கா? ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கா? இல்லை, சாதீய சக்திகளுக்கா?

: உணர்ச்சிவசப்படுபவர்கள் பக்கம்தான் மாணவர்கள் அதிகம் செல்கிறார்கள் என்பதை மறுக்கமுடியாது. சாதீய சக்திகளும், நாம் தமிழரும் அதி்க ஆதரவாளர்களைப் பெற்றிருக்கின்றனர். அத்தகைய மாணவர்களிடம் பொறுமையாகப் பேசி, அவர்களுக்கு நம் வரலாற்றையும், ஒவ்வொருவரின் முன்னேற்றத்திலும் திராவிட இயக்கம் ஆற்றியிருக்கும் பங்கினையும் எடுத்துரைத்து, அவர்களை நல்வழிக்குக் கொண்டுவரவேண்டும்.

கே: அப்படி உங்களால் யாரையும் மாற்றிவிட முடிந்ததா?

: மிகச் சிலர் கேட்டுக்கொள்கிறார்கள். நான் பரிந்துரைத்த காணொளிகளைக் கேட்கிறார்கள். புரிந்துகொள்கிறார்கள்.

கே: பார்வை மாற்றுத்திறனாளி இளைஞர்கள் திராவிட இயக்க ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கிறார்களா?

: நிச்சயமாக இருக்கிறார்கள். பிற இயக்கங்களின் ஆதரவாளர்களாக இருக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகளிடம் பேசினால், அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் திராவிட \யக்கத்தின் மேன்மையைப் புரிந்துகொள்ளத் தொடங்குகிறார்கள். பார்வையுள்ளவர்களை மாற்றுவதுதான் கடினமானதாக இருக்கிறது. சாதித் தலைவர்களின் பின்னால் மாணவர்கள் அணி திரள்வதைக் கவலையோடு அணுகுகிறேன்.

கே: அகிலனின் எதிர்காலத் திட்டம்?

: எனக்கென்று ஒரு நிலையான வருமானத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். பார்வை மாற்றுத்திறனாளிகளிடையே திராவிட இயக்கக் கொள்கைகளைப் பரப்பவேண்டும். திராவிட இயக்கத்தினரிடையே பார்வை மாற்றுத்திறனாளிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

கே: திராவிட இயக்கத்தினரிடையே பார்வை மாற்றுத்திறனாளிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறீர்களா?

: தொடர்ந்து ஏற்படுத்திகொண்டுதான் இருக்கிறேன். என்னால் முடிந்தவரை அப்பணியைச் செய்கிறேன். குறிப்பாக, புதிய கல்விக் கொள்கை குறித்த ஒரு கருத்தரங்கை தோழர் ஓவியா அவர்கள் ஒருங்கிணைத்தார். பேரா. சுபவீ அவர்கள் அக்கருத்தரங்கில் உரையாற்றினார். அந்தக் கருத்தரங்கில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்புக் கல்வி எவ்வளவு அவசியம் என்பது குறித்தும், அது இந்தப் புதிய கல்விக் கொள்கையில் புறக்கணிக்கப்பட்டிருப்பது குறித்தும் பேசினேன். தொடர்ந்து பேசிய ஓவியா, “உண்மையைச் சொல்வதென்றால், இதுவரை இப்படி ஒரு கோணத்தில் நாங்கள் இக்கல்விக் கொள்கையை அணுகியதில்லை. இது எங்கள் தவறுதான். இனி நாங்கள் எங்கள் செயல்பாடுகளில் மாற்றுத்திறனாளிகள் குறித்தும் கவனம் செலுத்துவோம்  என்றார்.

கே: சுபவீ அவர்களை நேராகச் சந்தித்த அனுபவம்?

: என் தந்தையின் நிலையில் நான் அவரைப் பார்க்கிறேன். என் அப்பா இப்போது இருந்திருந்தால் எனக்கு அவர் அரசியல் வழிகாட்டியாக இருந்திருப்பார். அத்தகைய உயர்நிலையில் நான் ஐயாவைப் பார்க்கிறேன். அவரை நான் நேரில் சந்தித்தபோது, விவரிக்கமுடியாத மகிழ்ச்சியில் இருந்தேன். அவர்அகிலன்என்று என் பெயரைச் சொன்னதும், மிகவும் பெருமிதமாக இருந்தது.

கே: வரும் 2021 தேர்தல் பரப்புரையில் அகிலனின் பங்கு இருக்குமா?

: அது பேரவையின் முடிவுக்கு உட்பட்டது.

அகிலனைத் தொடர்புகொள்ள:

8870262094

வாசகர்களே!

      உங்களுக்குத் தெரிந்த பார்வை மாற்றுத்திறனாளி அரசியலாளர்களை எங்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். அவர்கள் தேர்தல் அரசியலிலோ, கொள்கை அரசியலிலோ ஈடுபாடு கொண்டவராக இருக்கவேண்டும். களப்பணி ஆற்றியவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் உங்களுக்குத் தெரியும் என்றால், 9894335053 என்ற எனது தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொள்ளுங்கள். ஆவணப்படுத்துவோம்.

graphic கட்டுரையாளர் பாலகனேசன் அவர்களின் படம்
கட்டுரையாளர் பாலகனேசன்

தொடர்புக்கு: balaganesan2285@gmail.com

2 கருத்துகள்:

  1. வாழ்த்துகள் அகிலன். எதிர்வரும் 2021 தேர்தலுக்குப் பின்னான காலகட்டம் என்பது வெற்றிக் காலகட்டம் மட்டுமல்ல, அது சோதனைகள் தொடங்கும் காலகட்டமும் கூட. வாழ்த்துகள் உடன்பிறப்பே.

    பதிலளிநீக்கு
  2. அகிலன் அவர்களுக்கு என்னுடய வாழ்த்துக்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
    இவரை போன்று அனைத்து மாற்று திறனாளி நண்பர்களும்
    அரசியலில் தங்கள் பங்களிப்பை
    செலுத்தவேண்டும் என்பது எனது வேண்டுகோள்। வாழ்த்துக்கள் அகிலன் அவர்களே.

    பதிலளிநீக்கு