சிறுகதை: பார்வையற்றவன்: பிரெஞ்சு மொழியில் - கை டி மபசந்த், ஆங்கிலம் வழியாக தமிழில் - வினோத் சுப்ரமணியன்

 

(குறிப்பு:

      புகழ்பெற்ற ஃபிரெஞ்சு எழுத்தாளர் மபசந்த் 1882-இல் எழுதிய இந்தச் சிறுகதை பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பாவில் பார்வையற்றோர் பொதுவாக எப்படி நடத்தப்பட்டனர் என்பதைக் காட்டும் பதிவாக உள்ளது. இக்கதையின் விவரணை மற்றும் படைப்பிலக்கிய வரலாற்றில் இது பெற்றுள்ள முக்கியத்துவம் கருதி மொழிபெயர்ப்புக்குத் தெரிவுசெய்யப் பட்டுள்ளது).

       எப்படிப்பட்ட சந்தோஷத்தை இந்தக் கதிரவனின் ஒளி நமக்குத் தருகிறது. கதிரவனின் கதிர்கள் எவ்வளவு உற்சாகத்தைத் தருகின்றன இந்த மண்ணில் வந்து விழும்போது. வானம் முழுவதும் நீளம். வயல் முழுவதும் பச்சை. வீடுகள் எல்லாம் வெள்ளை. இவற்றையெல்லாம் உற்சாகத்துடன் உட்கிரகிக்கும் கண்கள் ஆன்மாவுக்கு அளவில்லா ஆனந்தத்தை வழங்குகின்றன. இந்த உணர்வுகள் இதயத்திற்குச் சென்று நம்மை ஆடவைக்கின்றன, பாடவைக்கின்றன, ஓடவைக்கின்றன. இறுதியில் அந்தக் கதிரவனைக் கட்டி அணைக்கவும் தோன்றுகிறது நமக்கு. ஆனால் இவையெல்லாம் நமக்குத்தான். ஒரு இருட்டில் இருந்து இருட்டை மட்டுமே உணரும் பார்வையற்றவர்களால் இவற்றில் எந்த இன்பத்தையும் உணரமுடியாது. அவர்களின் நாயின் விளையாட்டைத் தவிர இயற்கையின் எந்த இன்பமும் அவர்களை அணுகாது.

       எனக்கு ஒரு பார்வையற்றவனைத் தெரியும். மிகவும் சித்திரவதையானது அவனது வாழ்க்கை. அவன் ஒரு நார்மன் இன விவசாயியின் மகன். அவனது பெற்றோர் இருந்தவரை ஏதோ சுமாரான கவனிப்பு இருந்தது அவனுக்கு. சில நாட்களில் அவனது பெற்றோர் இறந்த பின் மோசமாகியது அவனது வாழ்நாட்கள். அவனது சகோதரியைச் சார்ந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டான். அவனை ஒரு பிச்சைக்காரனைப் போல் நடத்த ஆரம்பித்தனர். அவனுக்குக் கொடுக்கப்பட்ட ரொட்டித்துண்டுகளோடு வசவும் வந்து விழுந்தது. அவன் பல்வேறு வார்த்தைகளால் இகழப்பட்டான். அவனது சகோதரியின் கணவன் அவனது இருப்பிடத்தையும் அவனிடமிருந்து பறித்துக்கொண்டு பசியார வெறும் சூப் மட்டும் கொடுத்தான்.

       வருந்தி வாடிய முகத்தில் வெள்ளையாக இரண்டு விழிகள்தான் அவனது தோற்றம். அவன் பெரிதும் நகர்வற்றுக்கிடந்தான். அவன்மீது வீசப்படும் வன்கொடுமைகளுக்கும் இகழ்ச்சிகளுக்கும் எந்த எதிர்ப்பும் காட்டாத அவன் இதையெல்லாம் உணர்கிறானா என்ற ஐயம்  கூட அடுத்தவர்களுக்கு  எழும் அளவுக்கு இருந்தது அவனது நிலைமை. அரவணைப்பு என்றால் என்னவென்று கூட அவனுக்குத் தெரியாது. அவனது அன்னை கூட அதைச் செய்யவில்லை அவனுக்கு. அந்த நாட்டைப் பொருத்தவரையில் ஒன்றுக்கும் உதவாதவர்கள் தொந்தரவு கொடுக்கும் தேவையற்றவர்கள். வலிமையற்ற குட்டிகளை தாய்களே கொன்றுவிடும் உயிரினங்களைப் போல இவர்களும் கொல்லப்படுதலே நல்லது என்பது அந்த மக்களின் எண்ணம்.

       தனக்கான சூப்பைக் குடித்த அந்தக் கணமே அவன் வீட்டைவிட்டு வெளியே வந்துவிடுவான். கோடை காலத்தில் வெயில் படும்படியும், குளிர் காலத்தில் தீ மூட்ட பட்ட இடத்திற்கு அருகிலும் இருப்பானே தவிர காலையிலிருந்து மாலைவரை எதையும் பார்க்கமாட்டான். நரம்பியல் பிரச்சினைக் காரணமாக அவனது வெண்மையேறிய கருவிழிகள் மீது இமைகள் எப்போதாவது மூடுமே தவிர வேறு எந்த அசைவும் அவனிடம் இருக்காது. அவன் எதைப் பற்றியாவது சிந்திக்கிறானா, யாரைப் பற்றியாவது யோசிக்கிறானா, அவனது இருப்பையாவது அவன் உணர்ந்து கொள்கிறானா என்ற எந்தக் கவலையும் யாருக்கும் இருக்காது.

       இப்படியே சில வருடங்கள் கழிந்தன. அவனது இயலாமையின் வீரியம் அதிகமானது. இது அவனின் உறவினர்களின் பொறுமையை இழக்கச் செய்தது. அவனது பார்வையின்மை அக்கம்பக்கத்து மனிதர்களால் இகழப்பட்டது. அவன் அந்தக் காட்டுமிராண்டி கூட்டத்தின் இன்பத்திற்கு  இரையானான். அவனையும் அவனது பார்வையின்மையையும் நாம் எளிதில் கற்பனை செய்து பார்க்கும் அளவுக்கு பகடி செய்தனர் அவர்கள். அது அவனது உணவில் போய் முடிந்தது.

      அவனது உணவை வைத்து மணிக்கணக்கில் பகடி செய்து மகிழ்ந்தனர் அவர்கள். இது ஒரு பொழுதுபோக்காகிப் போனது அவர்களுக்கு. அதைப்பற்றி பேசியும், நகைத்தும் கூட வந்தனர் அவர்கள்.  இந்த வழக்கம் அனைத்து வீடுகளுக்கும் பரவியது.

        அவன் சாப்பிடும்போது அவனது தட்டின்முன் நாயையோ பூனையையோ கொண்டுவந்து நிறுத்திவிடுவார்கள் அவர்கள். அவை அந்த சூப்பைச் சத்தமில்லாமல் நக்கிக்குடிக்கும். எப்போதாவது அந்த மிருகங்கள் சத்தத்தோடு அவனது உணவை உண்பது தெரிந்தால் மட்டுமே அவன் கையில் இருக்கும் தனது தேக்கரண்டியை குத்துமதிப்பாக எறிவான். ஆனால் புத்திசாலி தனமாக அவை ஓடிவிடும். அதைக்கானும் பார்வையாளர்கள் வெடித்துச் சிரிப்பார்கள்; குதிப்பார்கள்; கொண்டாடுவார்கள். இது எதையும் கண்டுகொள்ளாத அவன் தனது வலது கையைச் சாப்பிடவும், இடது கையைத் தனது தட்டைப் பாதுகாத்துக்கொளவும்  பயன்படுத்திக் கொள்வான். சில நேரங்களில் உணவு அல்லாத பொருட்களையும் அவனுக்குக் கொடுத்து மகிழ்வர். அவனால் வேறுபாடு காண இயலாது என்பதைக் கண்டு மகிழ்வர்.

       இப்படி ஒருபுறம் பலரும் பகடி செய்து சோர்ந்து போன நிலையில் அவனது சகோதரியின் கணவன் அவனைத் துன்புறுத்த ஆரம்பித்தான். அவனை அடித்தான்; அவன் கைகளைக் கட்டினான்;  அந்தப் பார்வையற்றவனின் எதிர்க்க முடியாத இயலாமையைக் கண்டு நகைத்து மீண்டும் மீண்டும் தாக்குவான்;  பின் அவனின் முகத்தில் அறைந்து ஆனந்தம் அடைவான்.  இப்படி அவன்  துன்புறுத்த அங்கிருந்த மற்றவர்களும், வேலைக்காரர்களும், சிறுமிகளும், வருபவர்களும், போவவர்களும் அவனுக்கு ஊரு விளைவித்து மகிழ, அவனால் எதுவும் செய்ய இயலாமல் அதிகபட்சம் தனது கைகளை வைத்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே முயன்றான்.

       ஒருநாள் அவன் பிச்சை எடுக்க வற்புறுத்தப் பட்டான். ஒரு நெடுஞ்சாலையில் விடப்பட்ட அவன் மனிதர்களின் காலடிச் சத்தம் கேட்கும்போதும் வாகனங்களின் உருளும் ஓசைக் கேட்கும்போதும் அவர்களை நோக்கி நடந்து, உங்களால் முடிந்ததை கொடுங்கள்.” என்று யாசித்தான். யாரும் உதவவில்லை. வாரம் ஆகியும்  எதுவும் கிடைக்கவில்லை. அதனால் உறவினர்களால் உச்சக்கட்ட பாதிப்புக்கு உள்ளானான்.

      இதோ! இப்படித்தான் அவனது மரணம் நிகழ்ந்தது. பணி மூடிய நிலத்தில் அதிகாலை நேரத்தில் அவனது சகோதரியின் கணவனால் தொலை தூர நெடுஞ்சாலையில் பிச்சை எடுக்கவிடப்பட்டான் அந்தப் பார்வையற்றவன். அவன் நாள் முழுதும் அங்கேயே விடப்பட்டான். மாலை வீடு வந்த அந்தப் பார்வையற்றவனின் மாமங்காரன் அந்தக் கண் தெரியாதவனை காணவில்லை என்றதோடு, அவனைப் பற்றி யாரும் கவலை கொள்ள வேண்டாம். எங்கும் தொலைந்து போயிருக்க மாட்டான். குளிரில் நடுங்கியவனை யாராவது கூட்டிக்கொண்டு சென்றிருப்பார்கள். பயப்படவேண்டாம்.  சூப் குடிக்க நாளை வருவான்என்றான். அடுத்தநாள் அவன் வீடு திரும்பவில்லை.

      நீண்ட நேரக் காத்திருப்புக்குப்பின் அந்த பார்வையற்றவன் குளிரில் நடுங்கிச் செத்துக் கொண்டிருந்தான். பிறகு நடக்க ஆரம்பித்தான். பணி படர்ந்த சாலையில் பாதையைக் கண்டறிய இயலாத அந்தப் பார்வையற்றவன் ஆங்காங்கே விழுந்து எந்தவித சத்தமும் இல்லாமல் எழுந்து நடந்தான். ஏதாவது தங்குமிடம் கிடைக்குமா என்று அவனது உடலுக்குள் செத்துக்கொண்டிருந்த உயிர் தேடியது. ஆனால் வெப்பநிலை குறைந்து பனித்துளிகள் அவனது மேல் வந்து இறங்கி அவனை உறையவைத்தன. அதற்குமேல் சிறிதும் நகர முடியாமல் வெட்டவெளியில் ஏதோ ஒரு இடத்தில் அமர்ந்த அந்தப் பார்வையற்றவன் அதன்பின் எழுந்திருக்கவில்லை. விழுந்துகொண்டிருந்த வெண்பனி அவனை மொத்தமாய் புதைத்தது. இறுகிய அவனது உடல் கடினமான அந்த நில அமைப்பால் அவன் இருந்த இடம் தெரியாத அளவுக்கு மூடப்பட்டது.

      அவனது உறவினர்கள் தேடுவது போல நடித்தனர். நடிப்பின் உச்சமாக அழவும் செய்தனர்.

      குளிர் கடுமையாக இருந்ததால் பனிக்கட்டிகள் எளிதில் உருகவில்லை. ஒரு ஞாயிறன்று வழிபாட்டுக்குச் சென்ற விவசாயிகள் வழியில் கூட்டம் கூட்டமாகக் காக்கைகள் ஓரிடத்தில் வட்டமிடுவதையும், அங்கிருந்து அவை தொடர்ச்சியாக ஒரு கருமேகத்தைப் போல ஒரே இடத்தில் இறங்குவதையும், பின் மேலே செல்வதையும் கண்டனர்.

      அடுத்த வாரமும் அந்த கரும்பறவைகள் அங்கேயே இருப்பதைக் கண்டனர். ஒரு கூட்டமே அந்தக் காற்றில் மிதந்த வண்ணம் அணிவகுத்து நின்றுகொண்டிருந்தது. உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் கூடிய கூட்டமாக அந்த பறவைக் கூட்டம் இருந்தது. அந்தக் காக்கைகள் கரைந்த வண்ணம் கரையாமல் மின்னும் பணிபடலத்தில் கீழ்நோக்கி இறங்கிக் கொண்டிருந்தன. அந்த வெண்பனியை மூடிய கறுந்திரையாய் காக்கைகள் கீழிறங்கி எதையோ உறுதியாக கொத்தித் தின்றுகொண்டிருந்தன. அங்கிருந்த ஒரு இளைஞன் காக்கைகளின் செயலைக் காணச் சென்றபோது அந்தப் பார்வையற்றவனின் உடலைக் கண்டான். அவனது பாதி உடல் சிதைந்தும் காயங்களால் வதைந்தும் கிடந்தது. அவனது ஒரு கண் காணாமல் போயிருந்தது. அது ஒரு பெரிய பறவையின் மிகப்பெரிய அலகால் கொத்தி எடுக்கப்பட்டிருந்தது. இவ்வாறு தனது வாழ்க்கை முழுவதும் ஒதுக்கப்பட்ட, அவனது இறப்பு கூட அவனைத் தெரிந்திருந்த அனைவருக்கும் நிம்மதியைக் கொடுத்தது. அந்தப் பார்வையற்றவனைப் பற்றி நினைத்து வருந்தாமல் ஒருபோதும் என்னால் கதிரவனின் கதிர்வீச்சு ஒளியின் இனிமையை அனுபவிக்க முடிவதில்லை.

 

graphic கட்டுரையாளர் வினோத் சுப்பிரமணியன் அவர்களின் படம்
மொழிபெயர்ப்பாளர் வினோத் சுப்ரமணியன்

 மொழிபெயர்ப்பாளரைத் தொடர்புகொள்ள: slvinoth91@gmail.com

2 கருத்துகள்:

  1. சரவணமணிகண்டன்14 பிப்ரவரி, 2021 அன்று 2:40 AM

    மிக எளிமையான மொழிபெயர்ப்பு. இங்கே இன்றும் பல பார்வையற்றவர்களின் நிலை அப்படித்தான் உள்ளது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. இந்த சிறுகதையை படித்தபோது நல்லவேளை நான் அந்த காட்டுமிராண்டி கூட்டத்தில் பிறக்கவில்லை என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன். ஓரளவாவது மதிப்புடன் இன்று வாழ முடிகிறது. என்னுடைய வேதனை எல்லாம் ஒன்றுமே இல்லை என்ற மன ஆறுதல் கிடைத்தது. மிருகம் போல வாழ்ந்த அக்கால மனிதர்களிடம் இப்பண்பு இருந்ததில் வியப்பில்லை. survival of the fittest. மற்றும் ஒரு உட்காரணம்தான் இது.

    பதிலளிநீக்கு