விரல்மொழியர் ஆசிரியர் அழைத்து, மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம், இதில் பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவை எங்களோடு இணைந்து செயல்பட முடியுமா? என்று கேட்டார். உடனடியாக மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டோம். ஒப்புக்கொண்ட வேகத்தில் பணிகளை நாங்கள் முடித்துக் கொடுக்க இயலவில்லை என்பதும் உண்மைதான். இதழ் வெளியாக ஏற்பட்ட தாமதத்தில் எங்களுக்கும் பெரும்பங்கு உண்டு!
பார்வையற்றோர் குறித்து ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் வெளியாகியுள்ள பல்வகைப்பட்ட பதிவுகளுள் வாசகர்களுக்கு அணுக்கமாக இருக்கும் என்று நாங்கள் கருதியவற்றைத் தெரிவுசெய்திருக்கிறோம். அவற்றுள் ஓரிரு மொழிபெயர்ப்புகள் இந்த இதழில் இடம்பெறாமல் போனாலும், மொழிபெயர்க்கப்பட்டுள்ள கதைகள், கவிதைகள், கட்டுரைகள், தன்வரலாற்றுப் பகுதி அனைத்தும் ஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்தை வழங்கும் என உறுதியாக நம்புகிறோம்.
இது ஊனமுற்றோர் வாழ்வியலைப் புரிந்துகொள்ளவும் பொருத்திப் பார்த்துக்கொள்ளவும் தமிழில் மேற்கொள்ளப்படும் முதல் முன்னெடுப்பு. சிறுசிறு முயற்சிகள் தவிர ஊனமுற்றோரின் எழுத்துப் பதிவுகளை மொழிபெயர்க்கும் முயற்சி தமிழில் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் விரல்மொழியர் ஒரு புதிய வாசிப்பு வெளிக்கான திறவுகோளைக் கையில் அளித்திருக்கிறது.
பார்வையற்றோர் வாழ்க்கை இடம், மொழி, இன வரையறைகளைத் தாண்டி பல சந்தர்ப்பங்களில் ஒன்றிப் போவதை இப்பதிவுகள் தெளிவாக்குகின்றன. கூடவே பாலினம், வசிப்பிடச் சூழல், குடும்ப வாழ்க்கை எனத் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள் ஏற்படுத்தும் வேறுபட்ட பிரச்சனைகளும் அனுகூலங்களும் நம்மைக் குறித்து நாம் கொண்டிருக்கும் புரிதலை இன்னும் ஆழப்படுத்துபவையாகவும் உள்ளன.
இந்த மொழிபெயர்ப்புகளில் இந்தியப் பார்வையற்ற பெண்கள் நித்தி கோயல், பயல் கபூர் எழுதியுள்ள தம் வாழ்க்கை அனுபவங்கள் குறித்த கட்டுரைகளும், அமெரிக்க பார்வையற்ற பெண் ஜெரி டெக்கென்ஸ் எழுதியுள்ள தன்வரலாற்றில் இருந்து ஒரு பகுதியும், புகழ்பெற்ற ஃபிரெஞ்சு படைப்பாளர் மாபாசாந்த் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதிய ஒரு பார்வையற்றவனின் அவல வாழ்க்கை குறித்த சிறுகதையும், ஹசீம் எழுதிய மலையாள மொழிச் சிறுகதையும், பார்வையின்மையை புதிய கோணங்களிலிருந்து நம்மை அவதானிக்க அழைக்கும் மூன்று கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.
பார்வையற்ற பெண்களின் எழுத்துப் பதிவுகள் பெரும்பான்மையாக இடம்பெற்றிருப்பது இந்தச் சிறப்பிதழுக்குக் கூடுதல் சிறப்பு!
பெரும் தேடல்களின் வழி மொழிபெயர்ப்பு மூலங்களைத் தெரிவுசெய்து தந்த பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவையின் பூபதி, பணிகளை ஒருங்கிணைத்த கார்த்திக் இருவருக்கும் நன்றி. மிகவும் கடினமானதும் நுட்பமானதுமான மொழிபெயர்ப்புப் பணியைச் செவ்வனே செய்து தந்துள்ள மொழிபெயர்ப்பாளர்களுக்கும் நன்றி. இணைந்து பணியாற்ற வாய்ப்பளித்த விரல்மொழியர் மின்னிதழுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!
சிறப்பிதழாகத் தொடங்கும் விரல்மொழியரின் இந்த முன்னெடுப்பு பல்கிப் பெருகி விரிவடைந்து, பார்வையற்றோர் உள்ளிட்ட பல்வகை ஊனமுற்றோரின் பதிவுகள் பலவும் நூல்களாகவும், தொடர்களாகவும், இன்னும் பிற வகைகளிலும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படவேண்டும். இத்தகைய மொழிபெயர்ப்புகள் தமிழ் மொழிக்கு புதிய இலக்கிய புலத்தை அறிமுகம் செய்யும். கூடவே, பொதுச் சமூகம் ஊனமுற்றோர் குறித்துக் கட்டமைத்து வைத்திருக்கும் புரிதல்களைக் கேள்விக்குள்ளாக்கி பொருள் பொதிந்த உரையாடலுக்கு பாலமாகத் திகழும்.
தொடர்புக்கு: ptfb.tn@gmail.com
போற்றுதலுக்குரிய முயற்சி வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇது ஒரு நல்ல முன்னெடுப்பு. நிர்வாக குழுவிற்கு எனது மனம் திறந்த பாராட்டுக்கள். மேலும் பல புதிய முயற்சிகளை செய்ய நாங்கள் ஊக்குவிக்கிறோம். தொடரட்டும் உங்கள் பணி.
பதிலளிநீக்கு