குறிப்பு
(இக்கட்டுரை உடலின் கதைகள் (Skin Stories) என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் ஊனமுற்ற பெண்கள் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான இப்புத்தகம் Bookshare இணையதளத்தில் கிடைக்கிறது. இக்கட்டுரையில் பார்வையற்ற செயல்பாட்டாளரான நித்தி கோயல் பார்வையற்ற சமூகத்தின் அங்கமாக இருப்பதன் நன்மைகள் குறித்துப் பதிவுசெய்துள்ளார்.இங்கு ‘சமூகம்’ என்ற சொல் பார்வையற்ற சமுதாயத்தைக் குறிக்கும் ‘Blind Community’ என்ற பதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. )
என்னுடைய வேலை நிமித்தமாக ஜெனிவாவிற்கு மாலை 2 மணி அளவில் சென்று இறங்கிய நான் மூன்று மணிக்குள் உள்நுழைவதற்கான பரிசோதனையை முடித்துவிட்டேன். அவசரமாக சில மெயில்கள் அனுப்ப வேண்டி இருந்ததால், என்னுடைய கணினியில் இணைய இணைப்பைச் சொடுக்கினேன். எதிர்பாராமல் தோன்றிய மெசேஜ் எரிச்சலை ஊட்டியது. உடனே என்னுடைய நண்பரை வாட்ஸப்பில் அழைத்தேன். எல்லாம் சரிதானே என்று என் அழைப்பை ஏற்ற அவர், கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் என்னுடன் இணைப்பில் இருந்து என் பிரச்சனைக்கான சரியான தீர்வையும் கண்டுபிடிக்க உதவினார். உடனே குறிப்பெடுத்தல் படித்தல் மெயிலிங்க் மற்றும் பல செயல்களுக்கு ஆதாரமாக விளங்கிய என்னுடைய கணினியின் திரைவாசிப்பானோடு கணினியும் முறையாகச் செயல்பட தொடங்கிவிட்டது. என்னுடைய பிரச்சனையின் தீவிரத்தை நான் சொல்லாமலேயே அவர் புரிந்து கொண்டதற்குக் காரணம் அவரும் என்னைப் போன்று பார்வையற்றவர் என்பதே.
இந்தச் சமூகம் பார்வையற்றோரைக் குறைபாடு உடையவர்களாகவும், பாதிக்கப்பட்டவர்களாகவும், பிறர் அன்பை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களாகவும் சித்தரித்திருப்பது எனக்கு மிகுந்த வியப்பைத் தருகிறது.
அதிலும் பார்வையற்றவரைப் பொறுத்தவரைத் தெருவின் ஒரு மூளையில் கையில் வெண்கோளுடனும் பெரிய கருப்புக் கண்ணாடியுடனும் கவனிப்பாரற்று நின்று கொண்டிருக்கும் உருவமாக உருவகம் செய்து கொண்டுள்ளது சமூகத்தின் ஊனமுற்றோர் குறித்த பொதுபுத்தி.
ஒரு பார்வையற்றவர் இன்னொரு பார்வையற்றோரை வழிநடத்தும்போது இருவரும் சென்று படுகுழியில் விழுவதாகச் சொல்லப்படும் பிரபலமான முதுமொழி என்னை மிகுந்த சீற்றத்திற்கு உள்ளாக்குகிறது. பொதுவாக இந்தியாவையும் குறிப்பாக மும்பையையும் வசிப்பிடமாகக் கொண்ட நான் சார்ந்துள்ள பெரிய, அழகான, உணர்வலைகளை ஈர்க்கக்கூடிய, அரவணைப்பு மிகுந்த பார்வையற்றோர் மற்றும் குறைபார்வையுடையோரை உள்ளடக்கிய சமூகம் பற்றி அறியாதவர்கள்தான் மேற்சொன்ன கூற்று உண்மை என நம்பக்கூடும்.
என்னுடைய 22வது வயதில் முதல்முறையாக பார்வையற்றோர் மற்றும் குறைபார்வையுடையோரை உள்ளடக்கிய சமூகத்துடன் தொடர்பு கொள்ளும்போது, நான் உண்மையில் இந்தச் சமூகத்தைச் சார்ந்தவர்தானா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அந்தக் குழுவில் வலிமையான, மென்மையான, அதிகம் பேசுகின்ற, அமைதியான, தயக்கம் கொள்கின்ற பல்வேறு இயல்புகளைப் பெற்றவர்கள் இடம்பெற்றிருந்தனர்.
அவர்களில் பெரும்பாலோரோடு ஏற்பட்ட நட்பை அப்பொழுதே முடிவுக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று கருதினேன். ஆனால் அந்தச் சமூகம் எனக்கு எவ்வளவு கற்பித்து இருக்கிறது என்பதை சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் நான் புரிந்துகொண்டேன்.
ஆழமான புரிதலையும் அக்கறையும் மாறுபட்ட தன்மைகளை ஏற்றுக் கொள்ளவும் கற்பித்த இச்சமூகம் நான் பார்வையற்றவராக இல்லாமல் இருந்தால் பயணிக்க முடிந்திருக்காத நண்பர்களின் அறிமுகத்தையும் கொடுத்தது. இச்சமூகத்தில் ஒன்றிணைந்த பின்னர் நம்மைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்டுள்ள தவறான கருத்துக்கள் எனக்குச் சிரிப்பை வரவழைப்பது உண்டு.
ஒருமுறை என்னுடைய நண்பர் ஒருவர் ஒரு உணவகத்தில் எனக்காகக் காத்திருந்தார். என்னை அழைத்து, அவர் அமர்ந்திருக்கும் இடத்தைச் சொல்ல முனைந்தபோது, நான் அந்த உணவகத்தில் நுழைந்ததும் அங்குள்ள பணியாளர்கள் என்னை நேராக அழைத்துவந்து உன் மடியிலேயே உட்கார வைத்துவிடுவார்கள், நீ ஒன்றும் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்றேன். நான் சொன்னபடியே பார்வையற்ற பெண் பார்வையற்ற ஆணைத்தான் சந்திப்பார்கள் என்று எண்ணியதாலோ என்னவோ அந்தப் பணியாளர் என்னிடம் எதுவுமே கேட்காமல் என்னை அழைத்துச் சென்று என் நண்பரிடம் சேர்த்தார். இதை நான் வலுக் கட்டாயச் சந்திப்பு (Forced Dating) என்று அழைப்பதுண்டு.
நித்திகோயல் |
இந்தச் சமூகத்தின் சிறப்பு யாதெனில் பார்வையற்றோர் தனிப்பட்ட வகையில் மட்டுமல்லாமல் தமக்கு உதவுபவர்களையும் பிற பார்வையற்றோருக்கான உதவிப் பணிகளில் ஈடுபடச் செய்வதே ஆகும்.
என்னுடைய உதவியாளர் உங்களது மனுக்களை நிரப்புவதற்கு உதவி செய்வார்; என்னுடைய சகோதரர் அவரது காரில் அழைத்துச் சென்று உரிய இடத்தில் உங்களைச் சேர்ப்பார்; உங்களது படங்களை எனக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பினால் என்னுடைய சகோதரி அதற்கான விளக்கம் கொடுப்பார் போன்றவை எங்களுக்குள் நடைபெறும் பொதுவான உரையாடல்கள்.
இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாலின பாகுபாடுகளைக் கருத்தில் கொள்வதில்லை. ஓர் ஆண் ஒரு பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றோ அல்லது ஓர் ஆண்தான் இன்னொரு பெண்ணை விருந்துக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்றோ எந்த அவசியமும் இருப்பதில்லை. சரியான மொபிலிட்டி பயிற்சியோடு, பொது இடங்களைக் கையாளத் தெரிந்த ஆளாக இருக்கவேண்டும், அது ஒன்று மட்டுமே முக்கியம். நாங்கள் பெரிய கடைகளிலோ அல்லது தெருவிலோ ஒரு பார்வையுள்ளவரைச் சார்ந்து நடந்து செல்லும் பொழுது எங்களில் வழிநடத்தும் நம்பிக்கையுள்ள ஒருவரை முன்நிறுத்துவோம். சில சமயங்களில் எங்கள் குழுவில் தனியாகச் சமாளிப்பதில் பயிற்சி இல்லாத ஒருவரை முன்னிறுத்தி அவர்களுக்குள் நம்பிக்கை ஏற்பட வழிவகுப்போம்.
நாங்கள் டாக்ஸிபுக் செய்து தனித்தனியாக வீட்டுக்குச் சென்றபிறகு, ஒருவர் மற்றவருக்கு அழைப்பை ஏற்படுத்துவதுண்டு. அவ்வாறு செய்வது அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மட்டுமன்றி பெற்றோரை எதிர்பார்க்கும் நிலையை படிப்படியாக மாற்ற வேண்டும் என்பதற்காகவும்தான். கவலைப்படாதே. முதல்முறை நீ தனியாக பயணம் செய்யும்பொழுது உன்னுடைய பெற்றோர் கவலைப்படுவர். அடுத்தடுத்து இதேநிலை தொடரும் பொழுது பெற்றோர் உன்னை தனியாகப் பயணிக்க அனுமதிப்பதோடு தாமதம் பற்றிய கவலையையும் குறைத்துக் கொள்வர். இது நாங்கள் ஒருவருக்கொருவர் கொடுக்கும் பொதுவான அறிவுரை.
நாங்கள் ஒருவரையொருவர் கவனிக்கத் தவறுவதில்லை. அடிக்கடி என்னுடைய அலைபேசியில் நண்பரை அழைத்து இவரைத் தெரியுமா? இவர் புதிய தொழில்நுட்பங்களை விற்பனை செய்கிறார். இவற்றைப் பயன்படுத்துவோரைச் சந்திக்க விரும்புகிறார் என்று சொல்வதுண்டு. இதுபோன்ற கேள்விகளுக்கு நான் பெறும் நேர்மையான மற்றும் தயக்கமற்ற பதில்கள் என்னை வியப்பில் ஆழ்த்துவதுண்டு.
எங்களது தொடர்ச்சியான மற்றும் வெளிப்படையான உரையாடல்கள் பலரை தவறான தொழில்களில் இறங்கவிடாமல் தடுத்திருக்கிறது. சமூகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கின்ற தவறான சீண்டல்கள் செய்வோரின் பெயர்கள் குறித்து ஒருவரோடொருவர் பகிர்ந்து கொள்வதால் எந்தத் துன்புறுத்தலுக்கும் ஆளாகாமல் பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடிகிறது. நாங்கள் ஒருவருக்கொருவர் நல்ல செயல்களில் ஈடுபட ஊக்குவிப்பதோடு அவர்களது பாதுகாப்பு வளையங்களிலிருந்து வெளிவருமாறு அறிவுறுத்துவதும் உண்டு. இப்படித்தான் புதுப்புது செயலிகளின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும் போது, அவற்றைப் பயன்படுத்துவதில் எழும் சிக்கல்களை என் நண்பர்களிடம் கேட்பதுண்டு. அவர்கள் சிரித்த முகத்துடன் கேட்டுக்கொண்டு அதற்கான தீர்வுகளைக் கூறி, மீண்டும் நான் பயன்படுத்திப் பழக வலியுறுத்துவார்கள்.
நான் என்னுடைய பார்வையற்ற நண்பர்கள் மேற்கொள்ளும் தனிமையான ரிக்ஷா பயணங்களையும் தேனீர் தயாரிக்கும் அனுபவங்களையும் கொண்டாடியிருக்கிறேன். பார்வையின்மையின் காரணமாக எழும் சவால்களைச் சமாளிப்பதற்காக நாங்கள் ஒருவருக்கொருவர் உருவாக்கிக் கொள்ளும் பாதுகாப்பு வளையங்கள் உண்மையில் மிகவும் அழகானவை. நாங்கள் எந்த ஒரு செயலையும் சுலபம் என்று சொல்வதில்லை. கொஞ்சம் கஷ்டம்தான்; ஆனால் அதை நீயே செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்றுதான் அறிவுரை கூறுவதுண்டு. இப்படிச் செய்வது எங்களுடைய ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உதவுகிறது.
ஒருமுறை என்னுடைய வேலைக்காக லண்டன் சென்றபோது நண்பர்களை அழைத்து என்னுடைய சகோதரர் அறிமுகப்படுத்திய ஊன்றுகோளை உனக்கும் வாங்கித் தருகிறேன். நீ இதைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று நான் சொன்னது நினைவிருக்கிறது. நீ அதற்காக பணம் செலுத்தாவிட்டாலும் பரவாயில்லை; உன்னுடைய உயரத்தைச் சொல் அதற்கு சரியான அளவுள்ள ஊன்றுகோளை வாங்கித் தருகிறேன் என்று சொன்னேன், இப்படித்தான் நான் தாய் உள்ளத்தை வெளிப்படுத்தி உணர்ந்திருக்கிறேன்.
இந்தச் சமூகத்தைப் புனிதமானது என்றோ, முழுவதும் நன்மைகளால் சூழப்பட்டது என்றோ சொல்லிவிட முடியாது. ஒருவருக்கொருவர் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் சில வதந்திகளும், சில விரும்பத்தகாத நிகழ்வுகளும் ஏற்படுவதுண்டு. பல சமயங்களில் தவறான வதந்திகள் என்னிடம் வருவதும் உண்டு; நான் அவற்றை எனது கண்களை உருட்டித் தவிற்பதும் உண்டு. பல சமயங்களில் விரும்பத்தகாத சூழல்களைச் சிலர் ஏற்படுத்துவதும் உண்டு, சிலர் அவ்வாறு பாதிப்புக்கு உள்ளானோருக்குத் துணையாக நிற்பதும் உண்டு. பார்வையற்றோராக வாழும் ஒவ்வொருவரின் மோசமான மற்றும் நம்பிக்கை மிகுந்த சூழல்களிலும் அவர்களை ஏற்றுக் கொள்கிற, மன்னிக்கிற, அவர்களுக்காக குரல் கொடுக்கின்ற முக்கியமான பணியை இந்தச் சமூகம் செய்கிறது என்பதே உண்மையிலும் உண்மை.
இந்தச் சமூகத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால் நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்பதை அவர்களுக்கு விளக்கத் தேவையில்லை. நீங்கள் தெருவில் தொலைந்து விட்டதற்காகவோ, ரூபாய் நோட்டுகளைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படுவதற்காகவோ, கழிவறைக்கு இன்னொருவர் உதவியைக் கோருவதற்காகவோ, உணவகத்தில் மெனுக்களை வாசிக்கச் சொல்லிக் கேட்பதற்காகவோ வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை. தேர்வு நேரத்தில் பதிலி எழுத்தர்கள் கிடைக்காத வருத்தத்தை விளக்க வேண்டியதில்லை. பணி சூழலில் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் மற்றும் கண்டு கொள்ளாமை குறித்த கவலைகளை விளக்கத் தேவையில்லை. சமூகத்தில் சமாளிக்க வேண்டிய பிரச்சனைகள் குறித்த விளக்கமும் தேவையில்லை. உள்ளார்ந்த புரிதலோடு, இந்தச் சமூகம் எப்பொழுதும் உங்களுக்காக உங்களோடு இருக்கும்.
பார்வையற்ற சமூகத்தைச் சார்ந்தவராக இருப்பதில் நான் தனிப்பட்ட முறையில் மிகவும் ரசிக்கும் இன்னொரு முக்கியமான விஷயம் ஊனமுற்றவராக இல்லாத பிறரால் புரிந்துகொள்ளவோ, அனுபவிக்கவோ முடியாத பார்வையற்றோர் நகைச்சுவைகள்தாம். ஒருமுறை என்னுடைய வீட்டில் நான் ஏற்பாடு செய்திருந்த ஒன்றுகூடல் நிகழ்வில் சிலர் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து பேசிக்கொண்டிருந்தார்கள். அந்தப் பேச்சுக்களின் முடிவில் ஒருவர் மற்றொருவரின் பக்கமாகத் திரும்பி, ”ஏய்! நீ அதிகம் பேசாத சாதாரணமான ஆள் நு நெனச்சேன், இன்னைக்கு உன் சுயரூபத்த நான் நல்லாப் பாத்துட்டேன்!” என்று சொன்னார். அந்த மற்றொருவர் இவரிடம் திரும்பி, “பரவாயில்ல விடுடா, நான் கலாய்ச்ச கலாய் ல நீ கூடப் பாக்க முடியுதே!” என்று மறுமொழி சொன்னதுதான் தாமதம், அங்கு எழுந்த சிரிப்பு வெடி மொத்த வீட்டையும் அதிரச்செய்தது.
நான் ஒட்டுமொத்தமாகச் சிந்தித்துப் பார்க்கும்போது, இந்தச் சமூகம் நட்பு, மனம்விட்டுச் சிரிக்கும் சூழல், பரஸ்பர அக்கறை கொண்டிருப்பதோடு, ஒன்றாகச் சேர்ந்து வளர்ச்சியடைவதற்கு மட்டுமின்றி தன்னியல்பில் வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்பதற்கும் வாய்ப்புக் கொடுக்கிறது.
மொழிபெயர்ப்பாளர் செலின் மேரி |
மொழிபெயர்ப்பாளரைத் தொடர்புகொள்ள: celinmaryx@gmail.com
மிகத்தரமான கட்டுரை. பொருத்தமான மொழிபெயர்ப்பு. ஏதோ ஃபாண்ட் பிரச்சனை. வாசிப்பைத் தொந்தரவு செய்கிறது. கவனிக்கவும்.
பதிலளிநீக்குபார்வையற்ற சமூகத்தோடு இணைந்து வாழ்வதில் உள்ள சிறப்புகள் குறித்து படித்தபோது நான் எதையோ இழந்துவிட்டேன் என்ற உணர்வு எனக்குள் பிறந்தது. கையில் இருந்த சந்தரபத்தை இழந்துவிட்டேன்.
பதிலளிநீக்குநம் உணர்வை புரிந்து கொள்பவரோடு இருக்கும்போதுதான் நமது உணர்வுக்கு முழு மதிப்பு கிடைக்கும். அதில் இருக்கும் தீருப்தி விவரிக்க முடியாத சந்தோஷம். இவற்றை எல்லாம் சிந்திக்கும் அளவு மன பக்குவம் எனக்கு படிக்கும்போது இல்லை. இந்த கட்டுரையை படித்தபோது நான் இழந்தது என்ன என்பது எனக்கு உணர்த்தப்பட்டது. மொழி பெயர்ப்பு அற்புதம். வாழ்த்துக்கள் செலின் அவர்களே.
செலின் அருமையான பெயர். பல ஆண்டுகளாக நான் தேடும் என் அன்புத் தோழியின் பெயரும் #செலின்_எலிசபெத். வாழ்க. சிறப்பான மொழி பெயர்ப்பு வாழ்த்துகிறேன்.
பதிலளிநீக்கு