2016 தேர்தல் முடிவுகள் தமிழக வரலாற்றில் முக்கியமானதாக அமைந்தது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. ஆளும் அ.இ.அ.தி.மு.க 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு இவ்வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் வெற்றிபெற்றுக் கட்சியின் பொதுச்செயலரான ஜெ. ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற 6 மாதங்களில் உடல் நலிவுற்றுக் காலமானார் அவர். அவரைத் தொடர்ந்து O. பன்னீர்செல்வம் முதல்வரானார். ஓரிரு மாதங்களிலேயே அரசியல் காரணங்களால் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். பிறகு நடந்த சில அரசியல் ஆட்டங்களுக்குப் பிறகு எடப்பாடி K. பழனிச்சாமி அவர்கள் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். இவருடைய ஆட்சி ஓரிரு மாதங்களில் முடிந்துவிடும் எனப் பலரும் ஆரூடம் கூறிய நிலையில் சட்டமன்றத்தின் ஆயுள் முழுவதும் ஆண்டு முடித்திருக்கிறார் எடப்பாடியார். மேலும், வரும் தேர்தலில் கட்சியின் முதல்வர் வேட்பாளராகவும் முன்நிறுத்தப்பட்டிருக்கிறார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிகழ்ந்த நன்மைகள் என்னென்ன? தீமைகள் என்னென்ன? பார்வை மாற்றுத்திறனாளிகள் நலன் விரும்பிகளின் கருத்துகளின் அடிப்படையில் இவற்றை ஆராய்வோம்.
மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016
இந்திய ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நல உரிமைச் சட்டம் 2016 2018-லேயே தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2017-லேயே இதற்கான விதிகள் உருவாக்கப்பட்டுவிட்டன. இந்திய அரசின் ஊனமுற்றோர் நலச் சட்டம் 1995 2002-இல்தான் தமிழகத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டது என்ற தகவலிலிருந்து இச்சட்ட நடைமுறைப்படுத்தலில் காட்டப்பட்ட வேகத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.
மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016-இன்படி குறிக்கப்பட்டுள்ள ஊனமுற்றோர் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்திருப்பதும், கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு 4%-ஆக அதிகரிக்கப்பட்டிருப்பதும் நீங்கள் அறிந்ததே. இந்த இட ஒதுக்கீடு தமிழக அரசின் சமூகநீதிப் புரட்சியான 69% இட ஒதுகீட்டைத் தழுவிச் செல்வதற்கென 2017-இல் தமிழக அரசு தனிச் சட்டம் இயற்றியது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசுப் பணியிடங்களில் பிரிவு C, பிரிவு D ஆகியவற்றில் அனைத்து இடங்களும் மாற்றுத் திறனாளிகளுக்கு உரியவை என்று முடிவெடுக்கப்பட்டது. மேலும், பிரிவு A, பிரிவு B ஆகியவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டன.
கொரோனா பேரிடர் காலம்
விடைபெறும் தமிழக அரசு எதிர்கொண்ட மிக முக்கியமான சிக்கல் கொரோனா பெருந்தொற்று. மிகச் சில பார்வை மாற்றுத்திறனாளிகளே கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டார்கள் என்றாலும், கொரோனா காரணமாக ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கால் பல பார்வை மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரம் இழந்தனர். இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்ப இயலாமல் பல பார்வை மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்கள் பரிதவிக்கின்றன.
தமிழக அரசு கொரோனா பரவல் தீவிரமாக இருந்த காலகட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென ஒரு இலவச தொலைபேசி எண்ணை வழங்கி, அவர்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றித்தருவதாக அறிவித்தது. தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ரூ. 1000 நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.
ஆனாலும், இந்தத் திட்டங்கள் சரிவரச் செயல்படவில்லை எனப் பல பயனாளிகள் வருத்தத்தோடு தெரிவிக்கின்றனர். மேலும், கொரோனா ஊரடங்கு காரணமாகப் பணிக்குச் செல்லும் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்குப் பணி விலக்கு தமிழக அரசால் தொடக்கத்தில் வழங்கப்பட்டது. ஒவ்வொரு முறை ஊரடங்கு நீட்டிக்கப்படும்போதும் இந்தப் பணி விலக்கைப் பெறுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது என்கிறார்கள் நமக்கான சில அமைப்புகளின் தலைவர்கள். இதனால் பார்வை மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பலர் கடும் அவதிக்குள்ளாயினர்.
அதோடு, கொரோனா ஊரடங்கிற்குப் பிறகும் சிறப்புப் பள்ளிகள் இதுவரை நேரடி வகுப்புகளைத் தொடங்கவில்லை. இந்த ஆண்டு +2 தேர்வை எழுதும் சிறப்புப் பள்ளியில் படிக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகளின் நிலை கவலைக்குரி்யதாகவே இருக்கிறது.
இவர்கள் மட்டுமன்றி, பிற பெரும்பாலான பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களும் கொரோனா ஊரடங்கு காரணமாக நடத்தப்பட்ட இணையவழி வகுப்புகளில் கலந்துகொள்வதில் நிறைய சிக்கல்களை எதிர்கொண்டனர். விடுதிகளில் தங்கிப் படித்த இவர்கள், தற்போது வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர். இந்தப் பேரிடர்க் காலம் தொடங்கி இன்றுவரை இவர்கள் இரட்டை முடக்கத்தை அனுபவித்துவருகின்றனர். இவர்களின் நிலை குறித்துத் தமிழக அரசு தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.
மேலும், கல்லூரிகளில் படிக்கும் பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள் இணையம் வழியாகத் தேர்வு எழுதி அனுப்பும்போது மிகவும் சிரமப்படுகின்றனர். மற்றவர்களுக்கு எளிமையாக இருக்கும் இப்பணி, இவர்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது. எழுதுவதற்கான செய்திகளைத் தேடுவதோடு, பதிலி எழுத்தர்களைத் தேடுவதிலும் இவர்கள் அதிக நேரத்தைச் செலவிடவேண்டியுள்ளது. இது குறித்தும் தமிழக அரசிடம் தெளிவான நிலைப்பாடு இல்லை.
விலையில்லா அலைபேசி
18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கும், நிரந்தர வேலை வாய்ப்பைப் பெறாதவர்களுக்கும் என 5000 பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கும், 5000 காதுகேளாதோருக்கும் ரூ. 10000 மதிப்பிலான விலையில்லா அலைபேசிகளை வழங்கியிருக்கிறது தமிழக அரசு.
மேலும், புதுப்பிக்கத்தக்க பிரெயில் திரை கொண்ட Orbit reader என்ற கருவி வழங்கப்படுவதற்கான பணிகள் ஆட்சியின் இறுதி நிதியாண்டில் அறிவிக்கப்பட்டது. இதுவரை ஒரு பயனாளியும் இக்கருவியைப் பெற்றதில்லை. கொரோனா அதிர்வுகள் காரணமாகக்கூட இத்திட்டம் தள்ளிப்போடப் பட்டிருக்கலாம்.
விடைபெறும் இந்த ஆட்சியிலிருந்துதான் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒளிரும் வெண்கோல்கள் வழங்கப்படுகின்றன.
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் பின்னடைவுக் காலியிடங்கள் கணக்கிடப்பட்டு, மாற்றுத் திறனாளிகளுக்கெனச் சிறப்புத் தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால், இந்த அறிவிப்பில் எந்தக் காலக்கெடுவும் இல்லை, எந்தத் திட்டமிடலும் இல்லை என்கிறார்கள் பார்வை மாற்றுத்திறனாளிகள் மீது அக்கறை கொண்டோர்.
உயர்த்தப்பட்ட ஊர்திப்படி
மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கான ஊர்திப்படி 7-ஆவது ஊதியக் குழுவால் ரூ. 1000-த்திலிருந்து ரூ. 2500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. “இது தனித்துவமான உயர்வெல்லாம் இல்லை. ஊதிய விகிதங்கள் உயரும்போது இதுவும் உயர்ந்திருக்கிறது” என்றும் சிலர் தெரிவிக்கிறார்கள்.
அதேநேரம், பார்வை மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கு இடம் மாறுதலில் இருந்த முன்னுரிமையும், குறிப்பிட்ட ஆண்டுகள் ஓரிடத்திலேயே பணியாற்றிடவேண்டும் என்பதிலிருந்தான தளர்வும் நீக்கப்பட்டது பலருக்கும் வருத்தமளிப்பதாகவே உள்ளது.
2014-இல் நடத்தப்பட்ட சிறப்பு TET தொடங்கி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வை மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் பலர் வேலையின்றித் தவிக்கின்றனர்.
*ஏற்கெனவே தமிழக அரசு வாக்களித்தபடி, பார்வை மாற்றுத்திறனாளி இடைநிலை ஆசிரியர்களுக்கு இன்னும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
இந்த ஆட்சியில்தான் தமிழகத்தில் பள்ளிப் பாடப்புத்தகங்கள் மாற்றியமைக்கப்பட்டன. பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் மாற்றப்பட்ட புத்தகங்கள் பிரெயிலிலும், ஒலி வடிவிலும், பெரிய எழுத்துகளிலும் விரைவாகக் கிடைக்கும் என அரசு வாக்களித்திருந்த போதிலும், ஒவ்வொரு புத்தக மாற்றத்திலும் தங்களுக்கான புத்தகங்களின்றி பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர்களும், மாணவர்களும் கடும் அவதிக்குள்ளாயினர்.
மாற்றுத்திறனாளிகள் நல வாரியம்
2007-இல் அப்போதைய தமிழக அரசால் நிறுவப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் இன்னும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது பயனாளிகளான நமக்கே தெரியவில்லை. புதுச் செயல்பாடுகள் இல்லாமல் இயங்கிக்கொண்டிருக்கிறது இவ்வாரியம். இவ்வாரியத்தால் பயனர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவிகள் 2007-இல் இருந்த நிலையிலேயே இன்னும் இருக்கிறது. காலத்திற்கேற்ற மாறுதல்கள் இல்லை.
மந்தமான துறைச் செயல்பாடுகள்
மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கான ஆணையர், செயலர் ஆகிய பொறுப்புகளில் எந்த அதிகாரியும் அதிக காலம் இருக்கவில்லை. பொறுப்பில் இருப்பவர்கள் அடிக்கடி மாற்றப்பட்டனர் அல்லது மற்ற துறைகளைக் கவனித்துக் கொண்டிருந்தவர்களுக்குக் கூடுதல் பொறுப்பாகத் தரப்பட்டது. அப்படிப் பொறுப்பில் இருந்தவர்களும் பல நேரங்களில் நீண்ட விடுப்பில் செல்லவேண்டியிருந்தது துறைக்கான கெடுவாய்ப்பாகப் போய்விட்டது.
அமைச்சரின் செயல்பாடுகள்
சமூக நலத் துறை அமைச்சர் டாக்டர் சரோஜா அவர்கள் |
மாண்புமிகு சமூக நலத் துறை அமைச்சர் டாக்டர் சரோஜா அவர்கள்தான் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையையும் கவனித்துவருகிறார். இவருக்கு மாற்றுத்திறனாளிகள் குறித்த புரிதல் இல்லையே என்று வருத்தமாக இருப்பதாக பல அமைப்பினர் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான நேரங்களில் துறைப் பயனாளிகளான மாற்றுத்திறனாளிகளால் அமைச்சரைச் சந்திக்க இயலவில்லை. மேலும், இந்த ஆட்சிக் காலத்தில் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் நடத்திய இரு பெரும் போராட்டங்களிலும் அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை; அவரிடமும் நம்மவர்களால் பேசமுடியவில்லை. சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்த அமைச்சர் தன் அடையாளத்தைப் பதிக்கும் வகையில் இத்துறைக்கு எதுவும் செய்துவிடவில்லை என்கிறார்கள் செயல்பாட்டாளர்கள்.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்கென இந்திய ஒன்றிய அரசு ஒதுக்கும் நிதி அளவின் சராசரியைக் காட்டிலும் தமிழக அரசு ஒதுக்கும் நிதியின் சராசரி அதிகம். இத்தகு நிலையில் பொறுப்புடையோர் இன்னும் கவனமாக, கால மாறுதல்களுக்கு ஏற்பப் புதுப்புதுத் திட்டங்களைப் பயனாளிகளுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்தானே!
இப்படி இந்த ஆட்சியில் நமக்குச் செய்தவையும் இருக்கின்றன; சறுக்கியவையும் இருக்கின்றன. மீண்டும் எடப்பாடி K. பழனிச்சாமி அவர்கள் முதல்வராவாரா? மு.க. ஸ்டாலின் அவர்கள் முதல்வராவாரா? அல்லது வேறு யாரேனும் முதல்வராவார்களா? என்பது மே 2-ஆம் நாள் தெரிந்துவிடும். வரவிருக்கும் ஆட்சியாவது நமக்கிருக்கும் சிக்கல்களைப் போக்கட்டும். இதுவரை நம் ஆட்சியாளர்கள் நமக்களித்த அரும்பணிகளைத் தொடரட்டும்.
தகவல் உதவி: சே. பாண்டியராஜ், முனைவர் ம. சிவக்குமார், முனைவர் S. பாலாஜி.
கட்டுரையாளர் பாலகனேசன் |
தொடர்புக்கு: balaganesan2285@gmail.com
நல்ல அலசல் கண்டிப்பாக நம்முடைய உரிமைகள் நிறைவேறும் அரசு அமையும் என நம்புவோம்!
பதிலளிநீக்குvery nice sir
பதிலளிநீக்குit was very usefull for us sir. very thanks lot sir. and wishu all the best sir. realy your essay was wonderfull sir.