2021 சட்டமன்றத் தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டன. இத்தேர்தலை உற்றுநோக்கும் பலரும் கூறும் ஒரு செய்தி தமிழகத்தின் மூத்த ஆளுமைகளான கலைஞரும், ஜெயலலிதாவும் இல்லாத தேர்தல் இது என்பதுதான்.
ஆம். 1991 தொடங்கி 3 பத்தாண்டுகளாக நடைபெற்ற அந்த இருதுருவப் போட்டி கொஞ்சம் முடிவுக்கு வந்திருக்கிறது. இருந்தபோதிலும், இருவரும் வளர்த்தெடுத்த கட்சிகள்தான் இன்றும் வெற்றிக்கு நெருக்கமானவையாக உள்ளன என்பது ஊரறிந்த ரகசியம்.
கடந்த 2016-இல் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெ. ஜெயலலிதா அவர்கள் பொறுப்பேற்ற 6 மாதங்களில் காலமானார். 90 வயதிலும் அரசியல் பணியில் தீவிரமாக இருந்த கலைஞர் கருணாநிதி 2018-இல் காலமானார். தமிழகத்தின் இந்த இரு முக்கிய ஆளுமைகளும் இறந்த பிறகு பல கட்சிகள் தங்களைப் புதுப்பொலிவுக்குக் கொண்டுவர முயன்றன. சில புதியவர்களும் அரசியல் களமிறங்கத் தொடங்கினர். அவர்களில் பெரும்பாலோர் தங்கள் திட்டங்களை நிறுத்திக்கொண்டனர் அல்லது தள்ளிவைத்திருக்கின்றனர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் களத்திற்கு வந்தவர்களும், களம் காண முயன்றவர்களும் அடிக்கடி சொன்ன சொற்றொடர் “தமிழகத்தில் வெற்றிடங்கள் உருவாகியுள்ளன” என்பதுதான்.
கலைஞரின் மறைவுக்குப் பிறகு கட்சித் தலைமைப் பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலினும், அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி K. பழனிச்சாமி அவர்களும் இதை முழுமையாக மறுக்கின்றனர். இரு கட்சிகளும் அதே வலிமையோடு தேர்தலைச் சந்திக்கிறது என்பதையே இதற்கான ஆதாரமாக அவர்கள் கூறக்கூடும்.
இரு கட்சிகளுக்கும் புதிய தலைவர்களும், புதிய ஆளுமைகளும் வந்துவிட்டார்கள்தான் என்றாலும், மறைந்த கலைஞரும், ஜெயலலிதாவும் தமிழகத்தை இன்னும் சிலகாலம் பாதித்துக்கொண்டேதான் இருப்பார்கள். அவர்களின் இறப்புகள் சில வெற்றிடங்களை உருவாக்கியுள்ளது என்பதை மறுக்கமுடியாது. அந்த வெற்றிடங்கள் அவர்களைப் போலவே அல்லது அவர்களைக் காட்டிலும் சிறப்பாக நிரப்பப்படும்போது தமிழகம் இன்னும் செழுமையாகும்.
முதலில் கலைஞர் மறைவால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடங்களை ஆராய்வோம்.
மொழி ஆர்வம் மிக்க தலைவர்
தி.மு.க எழுத்தாலும், பேச்சாலும் வளர்ந்த கட்சி. இக்கட்சியின் முதல்வர்களாக இதுவரை இருந்த அண்ணாவும், கலைஞரும் சிறந்த பேச்சாளர்கள்; சிறந்த எழுத்தாளர்கள். இனிமேல் அந்தக் கட்சியிலும், தற்போதைய நிலையில் வேறு கட்சிகளிலும் இத்தகையவர்கள் தலைமைப் பொறுப்பில் இல்லை.
நல்ல நிர்வாகி சிறந்த பேச்சாளராகவோ, எழுத்தாளராகவோ இருக்கவேண்டிய அவசியமில்லைதான். இருந்தாலும், அது ஒரு கூடுதல் தகுதியாய் கலைஞரிடமிருந்தது.
பல இலக்கியவாதிகள் இயக்கத்தோடு நெருங்கி நிற்க அது காரணமாயிருந்தது. மொழி, இலக்கியம், பண்பாடு, வரலாறு எனப் பல துறைகளில் அரசு கூடுதல் அக்கறை செலுத்த இது காரணமாக இருந்தது என்பதை மறுக்கமுடியாது.
அக்ராசனர், காரியத்தர்சி, பொக்கிஷதாரர், அபியக்ஷதர் முதலிய சொற்களை தலைவர், செயலாளர், பொருளாளர், வேட்பாளர் என்றெல்லாம் மாற்றித்தந்த இயக்கம் இதுதானே! இதற்குக் காரணமாயிருந்தது தலைவர்களிடமிருந்த மொழிப்பற்றும், அது குறித்த கூடுதல் அறிவும்தானே!
தி.மு.க தனது திட்டத்திற்கான பெயர்களை நல்ல தமிழில் வைக்க முயன்றதற்கான காரணமென்ன? எதிர் தரப்பும் தனது திட்டத்திற்கு ‘அம்மா உணவகம்’, ‘அம்மா குடிநீர்’ என்று நல்ல தமிழில் வைக்கக் காரணம் இதுதானே!
சில மாதங்களுக்கு முன் தமிழக முதல்வர் தொடங்கிய திட்டத்தின் பெயர் ‘அம்மா மினி க்ளீனிக்’. அப்பெயரைப் படித்ததும் நான் கலைஞரின் இன்மையை உணர்ந்துவிட்டேன். தொடர்ந்து இரு கழகங்களும் தமிழிலேயே பெயர் வைக்கவேண்டும். அதற்குக் கலைஞர் போன்ற மொழி ஆளுமையுள்ள தலைவர்கள் இல்லாதது தடையாக இருந்துவிடுமோ என்ற அச்சம் பிறக்கத்தான் செய்கிறது.
திரை ஆளுமை
கலைஞர் பல திரைப்படங்களுக்கு உரையாடல்களை எழுதியவர். அதேநேரம், தொடர்ந்து திரைத்துறையினரோடு தொடர்பில் இருந்தவர். இதன் காரணமாக பல திரைத் துறை சார்ந்த பஞ்சாயத்துகளை இவரால் தீர்த்துவைக்கமுடிந்தது. அது மட்டுமின்றி, இவர் ஆதரிக்கும் அரசியலும், எதிர்க்கும் அரசியலும் திரைத் துறையிலும் கோலோச்சியது.
‘பாசத்தலைவனுக்குப் பாராட்டுவிழா’ போன்றவை அவருக்கான புகழ்மொழிகளாக மட்டுமே இருப்பதாகப் பொதுவாகப் பார்க்கப்பட்டாலும், அக்கலையை ரசிக்கத் தெரிந்த ஒரு முதல்வராக , தலைவராக இருந்ததால்தான் தொடர்ந்து பல திரை ஆளுமைகளைத் தனக்கு நெருக்கமானவர்களாக வைத்துக்கொள்ளவும், தனது கொள்கை முகங்களாக அவர்களைப் பயன்படுத்தவும் அவரால் முடிந்தது.
ஜெயலலிதாவும் திரைத்துறை சார்ந்தவர்தான என்றாலும், அவர் கலைஞரைப் போல் திரைத்துறையினரைத் தனக்கு நெருக்கமாக்கிக்கொண்டதாகத் தெரியவில்லை.
இனி வரும் காலங்களில் திரைப்படம் உள்ளிட்ட பல கலைகள் பெருவாரியாகப் பிற்போக்குச் சக்தியினரின் கைக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது என்றே தோன்றுகிறது.
இனி ஜெயலலிதா அவர்கள் விட்டுச்சென்ற வெற்றிடங்களைப் பார்ப்போம்.
பெண் ஆளுமை
தமிழகம் என்றாலே நினைவுக்கு வரும் ஒரு பெண் ஆளுமையை நாம் இழந்திருக்கிறோம். அவருக்குப் பிறகு இதுவரை ஆட்சி அதிகாரம் செலுத்தவல்லவராக எந்தப் பெண் தலைவரும் உருவாகவில்லை.
இந்தியா முழுமைக்கும் மம்தா மட்டும்தான் ஒற்றைப் பெண் தலைவராகச் சுழன்றுகொண்டிருக்கிறார். தமிழகம் அத்தகைய அடையாளத்தை இழந்துவிட்டது. தற்போதைய நிலையில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என்ற இரு பொறுப்புகளிலும் யாரோ ஒரு ஆண்தான் அமரப்போகிறார். பெண் இல்லை.
ஆங்கிலம் அறிந்தவர்
மாநிலக் கட்சிகள் தேசிய அளவில் கவனிக்கப்படாமைக்கு மொழிச் சிக்கலும் காரணமாக இருக்கலாம். தி.மு.கவின் நிறுவனரான அண்ணா மிகச்சிறப்பாக ஆங்கிலத்தில் உரையாற்றக்கூடியவர். அவரது நாடாளுமன்ற உரைகளை நாடெங்கும் இருக்கும் பல மொழிப் போராளிகள் இன்றும் மேற்கோள் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
அண்ணாவிற்குப் பிறகு தி.மு.க தலைவராகப் பொறுப்பேற்ற கலைஞர் அத்தனை சிறப்பாக ஆங்கிலத்தில் முழங்கிடவில்லை. முரசொலி மாறன், , T.R. பாலு, கனிமொழி முதலிய தளபதிகள் அவருக்கு தேவைப்பட்டனர். இருந்தபோதிலும், தி.மு.க கலைஞர் தலைமையில் தேசிய அரசியலை மிகச் சிறப்பாகவே கையாண்டது.
ஆனாலும், கட்சியின் தனிப்பெருந்தலைவர் ஆங்கிலத்தில் பேசுவது ஒரு முக்கியத் தனித்திறமைதான். அ.தி.மு.கவின் நிறுவனரான எம்.ஜி.ஆர் அந்த அளவு ஆங்கிலம் பேசவில்லை என்றாலும், அவருக்குப் பின் பொறுப்பேற்ற ஜெயலலிதா மிகச் சிறப்பாக ஆங்கிலத்தில் உரையாற்றக்கூடியவர்; உரையாடக்கூடியவர். ஒன்றிய அரசின் முதலமைச்சருக்கான கூட்டங்களிலும், தமிழகம் தாண்டிய பிற பகுதி ஊடகங்களிலும் இவர் குரலை நேரடியாகப் பதிவு செய்ய இந்த ஆங்கில அறிவு உதவியது என்பதை மறுக்கமுடியாது.
தற்போதைய நிலையில் வெற்றிபெறும் நிலையில் இருக்கும் இந்த இரு கட்சிகளின் தலைவர்களும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுபவர்கள் அல்லர்.
மேற்கூறிய நான்கும்தான் இருபெரும் தலைவர்களின் இறப்புக்குப் பிறகு இழந்தவை என நான் கருதுகிறேன். நல்ல தலைவரால் மேற்கூறிய நான்கும் இல்லாமல் கூட சிறந்த ஆட்சியை வழங்கமுடியும். ஆனாலும், மேற்கூறிய நான்கும் அரசியலுக்கு முக்கியமானவை என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.
கட்டுரையாளர் பாலகனேசன் |
தொடர்புக்கு: balaganesan2285@gmail.com
அரசியலில் ஏற்பட்டிருக்கின்ற வெற்றிடத்தை தன்னிடத்தில் தலைமைப் பொறுப்பில் வெற்றிடம் கொண்டிருக்கிற தலைவர்களைக் கொண்டு நிரப்ப போகிறோமா அல்லது மாற்று தலைமைகளை உருவாக்கி தமிழராய் மார்தட்டிக் கொள்ள போகிறோமா என்பதை எதிர்காலத்தில் காண்போம்! எதுவும் நிரந்தரமல்ல என்கிற பொழுது வெற்றிடமும் அப்படித்தான் என்கிற எண்ணத்தோடு காத்திருப்போம்! அவர்களிருவரும் ஆளுமைமிக்க தலைவர்களாய் திகழ்ந்தனர் என்பதில் எவ்வித ஐயமும் இருக்கவே முடியாது. கடந்த நான்கு ஆண்டு ஆட்சியை பார்த்த பிறகு ஏனோ அவர்கள் இருவரும் நம் மனதில் இருந்ததை விட பேர் ஆளுமைமிக்க தலைவர்களாக தென்பட தொடங்கிவிட்டனர்! அப்படிப் பார்த்தால் அந்த வெற்றிடம் பூதாகரமாக தெரிவது தவிர்க்க இயலாதது. உங்கள் சிந்தனைக்கு வாழ்த்துக்கள்!.
பதிலளிநீக்கு