உலகில் பல நாடுகளிலும், குடிமக்கள் தேர்தலில் வாக்களிப்பது பிறப்புரிமை என்று கருதப்படுகிறது. இந்நிலையில் விண்வெளியில் இருந்தும் வாக்கு செலுத்தும் வசதியை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுக் கழகம் நாசா (National Aeromatics & Space Administration NASA) விண்வெளி வீரர்களுக்குச் செய்து தந்துள்ளது. கடந்த நவம்பர் 2020 அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station ISS) ஆய்வுகளை மேற்கொள்ளும் விண்வெளி வீராங்கனை கேட்டி ரூபின்ஸ் (Katee Rubins) தன் வாக்குரிமையை விண்ணில் இருந்து செலுத்தினார்.
சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக அங்கு செல்லும் வீரர்கள் குறைந்தது ஆறு மாதங்கள் கழித்தே ஆய்வுகளை முடித்துப் பூமிக்குத் திரும்பமுடியும். இந்நிலையில் அவர்கள் விண்ணில் இருந்தபடியே நேரில் வராமல் வாக்களிக்கும் வசதியை நாசா ஏற்படுத்தித் தந்திருக்கிறது. பூமியில் இருந்து சுமார் 200 மைல் உயரத்தில், மணிக்கு 17,000 மைல் வேகத்தில் பூமியைச் சுற்றிவரும் இந்த மையம் விண்வெளி ஆய்வுகளை கடந்த இருபது ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.
1997ல் டெக்சாஸ் மாகாண சபையில் இதற்கான சட்ட திருத்தம் முதல்முறையாகக் கொண்டுவரப்பட்டது. இம்முறையைப் பயன்படுத்தி 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில், விண்வெளி வீரர்கள் எட்வர்ட் மைக்கேல் பிங் (Edward Michael Finck) மற்றும் கிரெக் சாமிட்டோப் (Greg Chamitoff) ஆகியோர் விண்வெளியில் இருந்து தங்கள் வாக்குகளைச் செலுத்தினர். 1997ல் சோவியத் யூனியனின் மிர் ஆய்வு நிலையத்தில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்த டேவிட் உல்ப் (David Wolf) விண்ணில் இருந்து வாக்கு செலுத்திய முதல் மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.
பெடரல் போஸ்ட்கார்டு விண்ணப்பம் (Federal PostCard Application FPCA) என்ற முறையின் மூலம் வாக்களிக்க விரும்பும் தேர்தல்கள் குறித்தத் தகவல்கள் வீரர்களிடம் நாசா நிருவனத்தால் பெறப்படுகிறது. இந்த விண்ணப்பங்கள் அமெரிக்க உள்துறைச் செயலருக்கு அனுப்பப்படுகிறது. இதன் மூலம் விண்வெளியில் உள்ள வீரர்களுக்கு இரகசிய மின்னணு வாக்குச் சீட்டுகள் தயார் செய்யப்படுகிறது. வீரர்கள் விண்வெளிக்குச் செல்வதற்கு ஒரு வருடம் முன்பே நாசா இதற்கான நடவடிக்கைகளைத் தொடங்குகிறது.
தேர்தலுக்கு ஆறு மாதங்கள் முன்பு, வீரர்களுக்கு வாக்காளர் பதிவு மற்றும் நேரில் வராமல் வாக்களிப்பதற்கான வாக்குச்சீட்டு (Voter registration&absentee ballot request) என்ற நிலையான படிவம் அளிக்கப்படுகிறது. பூமியில், தேர்தல் நடைபெறும் நாள் அல்லது அதற்கு ஒரு நாள் முன், வாக்குச்சீட்டு விண்வெளியில் உள்ள வீரர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் மின் அஞ்சல் மூலம் பதிவேற்றம் செய்து அனுப்பப்படுகிறது.
இதனுடன் பிற தேவையான ஆவனங்களும் அனுப்பிவைக்கப்படுகிறது. விண்ணில் இருந்தபடி, இவற்றைப் பெற்றுக்கொள்ளும் வீரர்கள் வாக்களித்த பின், தங்கள் வாக்குச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்து நேரடியாக, அவரவர்களுக்கு உரிய வாக்குச்சாவடிக்கு (county clerk’s office) மின் அஞ்சல் மூலம் அனுப்பிவைக்கின்றனர். நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி விண்வெளியில் இருந்தும் வாக்களிக்கும் வசதியை நமக்கு ஏற்படுத்தித் தந்துள்ளது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி மனிதகுலத்திற்கு அளித்துள்ள எண்ணற்ற நன்மைகளுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
விண்ணில் இருந்தாலும், ஓட்டுப் போடவேண்டும் என்று விரும்பும் வாக்காளர்கள் இருக்கும் இந்த உலகில்,, தேர்தலின்போது, வீட்டிற்கு அருகிலேயே இருக்கும் வாக்குச்சாவடிக்குச் சென்று நாம் நம் வாக்கைச் செலுத்தவேண்டியது நம் கடமை அல்லவா?
** ** **
கட்டுரையாளர் சிதம்பரம் இரவிச்சந்திரன் |
(கட்டுரையாளர் ஓய்வுபெற்ற அறிவியல் ஆசிரியர். பல மலையாளச் சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர். அறிவியல் இதழ்களில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்).
தொடர்புக்கு: nrvikram19@gmail.com
தரைமட்டத்தில் இருந்து செலுத்தப்படும் தபால் ஓட்டுக்கலே முறையாக என்ன படாமல் அதற்கென கோதாவில் குதிக்க வேண்டிய நிலையில் இருக்கும் நமது நாட்டில், ஆகாயத்தில் இருந்து செலுத்தப்படும் ஓட்டலாம் பேர் ஆபத்தானது என்று தான் எண்ணத் தோன்றுகிறது! ஏனென்றால் இங்கு செலுத்துவதில் பிரச்சனை இல்லை எண்ணுவதில் தான் ஏடாகூடம் அதிகம்! கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள்! ,
பதிலளிநீக்கு