கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகமாய்கிட்டே வருது. பார்வையற்ற பெரியோர்களும் இளைஞர்களும் அதிகப்படியா பாதிக்கப்பட்டுக்கிட்டிருக்காங்க. பெருமளவு பாதிப்புக்குள்ளான சில பார்வையற்றோர் உயிரிழந்திருப்பது ஏற்க இயலாத துயரமா இருக்கு. இந்த நேரத்துல நாம எச்சரிக்கையா இருக்கனும்னு சொன்னா இவன் என்ன புதுசா சொல்லுறான் இதைத்தான எல்லாரும் சொல்லுறாங்கனு தோனும். நான் மிகவும் பணிவுடன் வேண்டிக் கேட்டுக்குறேன் தயவு செய்து எல்லோரும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டியது அவசியம். கொரோனா வராம இருக்க என்ன செய்யனும், வந்தா என்ன செய்யனும்னு தொலைக்காட்சி முதல் எல்லாத்துலயும் சொல்லுறாங்க, எல்லா பக்கமும் சொல்லுறாங்க. ஆனா நமக்கு அந்த நிலை வரும்போது எதுவும் மனசுல பெருசா நினைவுக்கு வருவதில்லங்குறதுதான் உண்மைனு நான் சொன்னா நம்புவிங்களானு தெரியல. அதுனால எனக்குக் கொரோனா வந்தது எப்படினும், அதற்கு நான் என்னவெல்லாம் பண்ணினேனும் சொல்லுறேன் கொஞ்சம் பொருமையா கேளுங்க கேட்டுட்டு திட்டாதிங்க.
கொரோனாங்குற நோய்த்தொற்று விரைவா பரவுதுனு கேள்விப்பட்ட நாள்முதலா ஒருவிதமான பதற்றமும், அதே நேரத்துல கொஞ்சம் அலட்சியமும் ஏற்பட்டுச்சி. மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு போட்டதும் பார்வையற்றோர் அமைப்புகள் அரசிடம் தங்களுக்கு இருக்கும் பாதிப்புகள் குறித்து எடுத்துச் சொல்லி சில வழிகாட்டு நெறிமுறைகள வெளியிட வச்சாங்க. பார்வையற்றோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் பணிக்கு வருவதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகமா இருக்குங்குறத எடுத்துச் சொல்லி, பணிக்கு வருவதுல இருந்து விலக்குப் பெற்றுத் தந்தாங்க.
மார்ச் 25ஆம் தேதியிலிருந்து நான் பணிக்குச் செல்லாம வீட்டிலேயே சகல சௌகரியத்துடன் பாதுகாப்பா இருந்தேன். நோய்த்தொற்று ஏற்படாம இருக்க என்னென்னலாம் செய்யனும்னு சொல்லப்பட்டதோ அத்தனையும் செஞ்சேன்னு சொன்னா நம்பமாட்டீங்க. வாரத்துக்கு இரண்டு முறை கபசுர குடிநீர் குடிச்சேன். தினமும் இஞ்சி எலுமிச்சை கொதிக்க வச்சி குடிச்சேன். தண்ணீர் எப்போதும் சூடாகவே குடிக்கனும்னு சொல்லப்பட்டதால இரண்டரை லிட்டர் மில்டன் ஃப்லாஸ்க் வாங்கி அதுல சுடுதண்ணி ஊத்தி வைக்கச்சொல்லி குடிச்சேன். அப்பறம் எதிர்ப்பு சக்தி ஏற்பட ஒரு ஹோமியோபதி மாத்திரைய சாப்பிடச் சொன்னாங்களே அந்த மாத்திர பேரு மறந்துபோச்சு அதையும் சாப்பிட்டேன். கடைக்கு போனா மாஸ்க் போட்டேன் திரும்பி வந்ததும் சானிட்டைசர் போட்டேன். வீட்டிலிருந்த காலத்துல என்ன செய்யுரதுனு தெரியாம மேல சொன்னதெல்லாம் கரைக்டா செஞ்சிக்கிட்டுவந்தேன். இப்படியே அஞ்சு மாசம் ஓடிடுச்சி ஊருக்குள்ள கொரோனாவும் படிப்படியா கூடிடுச்சி. ஊரடங்கு படிப்படியா தளர்த்தப்பட்டுச்சி. ஆகஸ்ட் மாத இறுதியில அனைத்து நிறுவனங்களும் நூறு விழுக்காடு பணியாளருடன் இயங்களாமுங்குற அறிவிப்பு வந்துச்சி. நாமும் எத்தன நாளுதான் வீட்டுலயே இருக்குறதுனு செப்டம்பர் ஒன்னாம் தேதியில இருந்து வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டேன்.
பணி இடத்துல எல்லோரையும் பார்த்து ரொம்ப சந்தோசமா இருந்துச்சி. பணி இடத்துல A.C பயன்படுத்தக்கூடாதுனு சொல்லப்பட்டதால ரொம்ப புழுக்கமா இருக்கும். அப்பப்ப மாஸ்க்க எடுத்துட்டு முகத்த கட்சிப்பால துடச்சிப்பேன். பழக்கப்பட்ட இடமா இருந்தாலும் கழிவறைக்குள் கொஞ்சம் சிரமமாதான் இருந்துச்சு. வாஷ் பண்ணுற பைப்ப தேட, ஃப்லெஷ்ஷ அழுத்த, ஹேண்ட் வாஷ் தேட என எல்லாத்துக்கும் வழக்கம்போல தடவிப் பாத்து பயன்படுத்த வேண்டியதா போச்சு.
இப்படி போய்க்கிட்டிருக்கும்போது பணிக்கு போயி பத்து நாள்தான் இருக்கும் அந்த நாள் காலையில இருந்தே ரொம்ப சோர்வா இருந்துச்சு. கூட்டம் அதிகம்ங்குறதால வேலையும் அதிகம் அதுனாலதான் உடல்சோர்வுனு எண்ணிக்கிட்டு வேலையத் தொடர்ந்தேன். மாலை மூன்று மணிக்கு மேல உட்கார முடியாத அளவுக்கு முதுகு வலியும், தலை வலியும் இருந்துச்சி. எனக்கு இதெல்லாம் நடந்த இரண்டு நாளுக்கு முன்னால கூட பணிசெய்யுற இரண்டு பேரு உடம்பு சரியில்லாம லீவு போட்டிருந்தாங்க. நான் மாலை வீட்டுக்கு வந்ததும் காய்ச்சலும் ஆரம்பிச்சுடுச்சு. ஸ்ட்ராங்கா ஒரு டீய குடிச்சிட்டு ஒரு டோலோ 650 மாத்திரையப் போட்டுக்கிட்டேன். கொஞ்ச நேரத்துல ஓரளவு சரியா ஆயிட்டதால வேல அதிகமா இருந்ததாலதான் நமக்கு இப்படி ஆயிருக்குனு நினச்சி இயல்பா இருந்தேன்.
இரவு தூங்கப் போறதுக்கு முன்னால அப்பா என்ன தொட்டுப் பாத்துட்டு லேசா காய்ச்சல் இருக்கு இன்னொரு மாத்திரைய போட்டுக்கிட்டு தூங்குனு சொன்னாரு. நானும் மாலையில் போட்ட அதே மாத்திரையப் போட்டுட்டு தூங்கிட்டேன். மறுபடியும் நைட்டு ஜுரம் அடிக்க ஆரம்பிச்சுடுச்சு. அதுக்கப்பரம், நான் என்னோட அறையிலேயே இருக்க ஆரம்பிச்சிட்டேன். என்னோட மணைவி சீனியர்களுக்கு அதாவது நோய்த்தொற்றை வெற்றிகரமாக வென்றுவந்த சங்கர் சார், மகேந்திரன் சார் ஆகியோருக்கு ஃபோன் செய்து விவரத்தச் சொல்லி விசாரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. பதினோரு மணி அளவுல அரசு ஏற்பாடு செஞ்சிருந்த ஆன்லைன் டாக்டர்கிட்ட ஆலோசன கேட்கலாம்னு eSanjeevaniopd என்ற செல்போன் செயலி மூலமா என்னோட மணைவி டோக்கன் போட்டாங்க. கொஞ்ச நேரத்துல டாக்டர் தொடர்பில் வந்து விவரத்த கேட்க, நான் எல்லாத்தையும் சொன்னேன். பொருமையா கேட்ட டாக்டர் அருமையா பேசுனாரு. உங்களுக்கு கோவிட் சிம்டம் மாதிரிதான் தெரியிது, நான் இரண்டு நாளைக்கு மாத்திரை எழுதுரேன் அத பக்கத்தில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் காண்பிச்சு வாங்கி போட்டுக்கோங்க. அதுக்கப்பரமும் தொந்தரவு இருந்தா உடனே கோவிட் டெஸ்ட் பண்ணிடுங்கனு சொல்லிட்டாரு. அவர் எழுதுன மருந்துச் சீட்டு அந்த செயலியிலேயே அப்டேட் ஆயிடுச்சு. என்னோட மணைவி ஃபோன கொண்டு போய் மெடிக்கலில் காண்பித்து மாத்திரை வாங்கிட்டு வந்து குடுத்தாங்க.
மறுநாள் என்னோட அப்பாவுக்கும் காய்ச்சல் வந்துடிச்சி. உடனே கோவிட் டெஸ்ட் எடுத்துடலாம்னு முடிவுபண்ணி, என்னோட அலுவலகத்துல லீவுல இருந்த அந்த இரண்டு பேருக்கும் கோவிட் பாசிட்டிவ் வந்துட்டதால அதுல ஒருத்தருக்கு ஃபோன் பண்ணி விசயத்த சொன்னேன். உடனே அவங்க அந்த ஏரியா சேனிட்டரி இன்ஸ்பெக்டர் நம்பர அனுப்பிட்டு அவருக்கும் என்னப்பத்தி சொல்லிட்டாங்க. நான் அவருக்கு ஃபோன் பண்ணி நான் ஒரு பார்வையற்றவன், இந்த இடத்தில் பணிபுரிகிறேன்னு சொன்னேன். உடனே அவர் கோவிட் பரிசோதனை செய்ய வீட்டுக்கு ஆள் அனுப்பினார். நான் என்னோட மணைவி, பெற்றோர் நான்கு பேரும் பரிசோதனை செஞ்சிக்கிட்டோம். மறுநாள் எனக்கும் என்னோட அப்பாவுக்கும் பாசிட்டிவ்னு கால் வந்துச்சு.
ஆம்புலன்சுல கூட்டிக்கிட்டு போனாங்க. நாங்க கொண்டுபோன துணிப்பைய வச்சிட்டு உள்ள வர சொன்னாங்க. எனக்கும் எங்க அப்பாவுக்கும் ப்லெட் டெஸ்ட், ஆக்சிஜன் டெஸ்ட், ஸ்கேன் என அனைத்து டெஸ்டும் பண்ணாங்க. கடைசியா மருத்துவர பார்க்க ஒவ்வொருத்தரா போனோம். நான் பார்வையற்றவன்ங்குறதால முகாமுல இருப்பது சிரமமா இருக்குமுங்குற என்னோட கோரிக்கைய ஏத்துக்கிட்டு, அதோட நோய்த் தொற்றின் தீவிரமும் கட்டுக்குள் இருந்ததால வீட்டிலயே தனியா இருக்கச்சொல்லி, சிங்கோவிட் மாத்திரைகள், கபசுர குடிநீர் பொடி, நிலவேம்புப் பொடி, இரண்டு மெடிமிக்ஸ் சேம்பில் சோப், ஐந்து மாஸ்க் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பையைக் கொடுத்து அனுப்பிட்டாங்க. இந்த இடத்துல ஒரு முக்கியமான விஷயத்தச் சொல்லனும். என்னோட அப்பாவுக்கு ஸ்கேன் செய்யும் போது என்ன ப்லெட் டெஸ்ட் பண்ண கூப்பிட்டாங்க. புது இடம்ங்குறதால இருந்த இடத்துல இருந்து எந்தப்பக்கம் போகனும்னு தெரியல. கொஞ்சம் முன்நோக்கிப் போனேன். எல்லாப் பக்கத்துல இருந்தும் இந்தப்பக்கம் அந்தப்பக்கம்னு சத்தம் வந்துச்சி. நான் எந்தப்பக்கம் போகனும்னு தெரியாம குழம்பிப்போய் அங்கேயே நின்னுட்டேன். ஒரு சிஸ்டர் கொஞ்சம் தூரம் கிட்ட வந்து நேரா வாங்கனு சொன்னாங்க. அவங்க கூப்பிட்ட திசைநோக்கி கொஞ்சம் வேகமாகவே போனேன். நேரா வாங்கனு சொன்னவங்க படி இருக்குனுச்சொல்ல மறந்துட்டாங்க அப்பரமென்ன வழக்கம்போல முதல்படியில இடுச்சி நான்காம் படியில் நின்னாச்சு. நோய்த் தொற்றால பாதிக்கப்பட்டு மருத்துவமணைகளிலும், முகாம்களிலும் சேர்க்கப்படுகிற பார்வையற்றவங்களோட நிலை குறித்தும், அரசு இது குறித்து சிறிதும் எண்ணிப் பார்க்காதத நினச்சும் வேதனையா இருந்துச்சு.
வீட்டுல என்னோட அம்மாவும், மணைவி முத்துச்செல்வியும் ரொம்ப நல்லா கவனிச்சிக்கிட்டாங்க. என்னோட சின்னத் தங்கையோட வீட்டுக்காரரு அசோக்குமார் இறைச்சி போன்ற தேவையான பொருட்கள சொன்னதும் உடனே வாங்கிட்டு வந்து கொடுத்து உதவுனாரு. அரசாங்கம் ஹோம் க்வாரண்டின்ல இருக்குறவங்களுக்கு உதவ வாலண்டியர்ஸ் நியமிச்சிருந்தாங்க. எங்களுக்காக நியமிக்கப்பட்ட வாலன்டியர் லோகேஷ் என்ற தம்பி ரொம்ப உதவியா இருந்தாரு. ஏறக்குறைய ஒரு வாரம் அதிகப்படியான தலைவலியும், உடம்புவலியும் இருந்துச்சு. வாசனையும் சுவையும் சுத்தமா இல்லாமப் போச்சு. நான் குடிப்பது காப்பியா கசாயமானு தெரியல. சாப்பிடுறது கஞ்சியா கரிக்குழம்பானும் சுத்தமா தெரியல. சுடுதண்ணியில உப்பு மஞ்சல் போட்டு வாய் கொப்பலிப்பது, ஆவிபிடிப்பது, கசாயம் குடிப்பது என இது மூன்றும் தினமும் இரண்டு வேளையும் செஞ்சேன். சுண்டல், முட்டை தினமும் சாப்பிட்டேன். அப்பப்ப மூச்சை நல்லா உள்ள இழுத்து மெதுவா வெளியேவிட்டு எனக்குத் தெரிஞ்ச மூச்சுப் பயிற்சியச் செஞ்சுவந்தேன். கழிவறைய பயன்படுத்தினதும் கொஞ்சம் பினாயில ஊத்திட்டு வந்தேன்.
எனக்குக் காய்ச்சல் வந்த மறுநாளே அப்பா தெர்மா மீட்டர் வாங்கிட்டு வந்துட்டாரு அத வச்சி காய்ச்சல் இருக்கானு சோதிச்சுப் பார்த்துக்குவோம். ஆக்சிஜன் லெவலையும் கண்கானிக்கனும்னு எல்லோரும் சொன்னாங்க. என்னோட மணைவி ஸ்ட்ரீமர் வாங்கிக்கிட்டா ஆவிபிடிக்க ஈசியா இருக்கும்னு சொன்னாங்க. உடனே தெரிஞ்ச ஐயப்பன் என்ற தம்பி அப்பல்லோ மெடிக்கல்ல வேல பாக்குரான் அவனுக்கு கூகுல் பே மூலமா பணத்த அனுப்பி ஸ்ட்ரீமர், ஆக்சி மீட்டர் உள்ளிட்ட சில பொருட்கள் வேணும்னு சொன்னேன். அவனும் உடனே கொண்டுவந்து வீட்டுக்கு வெளியே வச்சுட்டு போனான். அன்னையில இருந்து பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலமா எங்களோட ஆக்சிஜன் லெவலையும் கண்கானிச்சிக்கிட்டோம்.
என்னோட அப்பாவுக்குக் கொஞ்சம் அதிகமான சலியும், தலைவலியும் இருந்துச்சி அப்ப என்ன செய்யுரதுனு தெரியாம இருந்தேன். எங்க ஏரியாவுல அப்ப ஹோம் க்வாரன்டின்ல இருந்த தம்பி சாய்ராம் எப்படினா இருக்கிங்கனு ஃபோன் பண்ணினான். அவன்கிட்ட விசயத்த சொன்னதும் 044- 46122300 என்ற கோவிட் கண்ட்ரோல் ரூம் நம்பர் கொடுத்தான். நானும் உடனே கால் பண்ணி அவங்ககிட்ட சொன்னேன். உடனே அவங்க எண்ணோட செல்போன் நம்பர நோட்பண்ணிக்கிட்டு கொஞ்ச நேரத்துல டாக்டர் உங்கள கூப்பிடுவாங்கனு சொல்லிட்டு வச்சதும் அடுத்த பதினைந்து நிமிடத்துல டாக்டர் ஃபோன் பண்ணினாங்க. அப்பா அவங்கக்கிட்ட விஷயத்த சொன்னதும் நாளைக்கு காலையில வாலண்டியர்ஸ் மூலமா மாத்திரை கொடுத்துவிடுறதா சொன்னாங்க. அடுத்த நாள் காலையில ஏழு முப்பது மணி அளவுல டாக்டரே கூப்பிட்டு அப்பா எப்படி இருக்காருனு கேட்டாங்க. அவங்க அழைப்பக் கேட்டு எழுந்த எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. அவங்க அப்பாக்கிட்ட பேசிட்டு இன்னும் கொஞ்ச நேரத்துல வாலண்டியர் மூலமா மாத்திரை கொடுத்து அனுப்புறதா சொன்னாங்க. நான் அவங்கக்கிட்ட வேறு ஏதாவது அவசர உதவினா இந்த நம்பருக்கு கூப்பிடலாமா மேடம் என்று கேட்டேன். தாராளமா கூப்பிடுங்க என்னோட பெயர் டாக்டர் சத்யா DHO என்று சொன்னாங்க. எனக்கு வட்டார சுகாதார அலுவலரிடம் பேசியது மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையாகவும் இருந்துச்சு. கொஞ்ச நேரத்துல வாலண்டியர் வந்து மாத்திரை கொடுத்துட்டு போனாரு.
என்னோட மணைவி லக்னோவுல வசிக்கிற கௌரிங்குற அவங்களோட தோழிக்கிட்ட பேசிக்கிட்டிருந்தப்ப நான் நோய்த் தொற்றால பாதிக்கப்பட்டிருப்பத சொன்னாங்க. அந்த காலக்கட்டத்துல அவங்களோட கனவரும் கொரோனாவால பாதிக்கப்பட்டிருந்தாரு. நீங்க எப்படி டெம்பரேச்சர் செக் பண்ட்ரிங்கனு கேட்டு டாக்கிங் தெர்மா மீட்டர் குறித்து சொன்னாங்க. அதுமட்டுமில்லாம டாக்கிங் ஆக்சி மீட்டர் கூட இருப்பதாக தெரிவிச்சாங்க. இதெல்லாம் சக்ஷம் என்ற நிறுவனத்துல கிடைக்கும்னு சொன்னாங்க. என்னோட மணைவி உடனே ஆடர் செய்துடுறேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவிச்சாங்க. அதற்கு அவங்க என்கிட்ட டாக்கிங் தெர்மா மீட்டர் கூடுதலா ஒன்னு இருக்கு அதை நான் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேனு சொல்லி, எங்களோட முகவரியப் பெற்று உடனே அனுப்பி வச்சாங்க. அவங்களுக்கு இந்த நேரத்துல என்னோட நன்றியைத் தெரிவிச்சிக்கிறேன்.
என் மணைவியோட அக்கா மகன் சாய் நிஷாந்த் ஒவ்வொருத்தருக்கா கொரோனா வரத பாத்து, நாம எல்லாரும் LKG படத்துல வரமாதிரி நோயே நோயே ஓடிப்போ நாயேனு சொல்லி போராட்டம் பண்ணா கொரோனா ஓடிப்போயிடுமுலனு சொல்லியிருக்கான். எட்டு வயசு பையன் நோய்க்கு எதிரா போராடனும்னு சொன்னது எங்களுக்கெல்லாம் ரொம்ப மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் இருந்துச்சு.
நான் க்வாரண்டின்ல இருந்த காலக்கட்டத்துல பார்வையற்றோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே பணி செய்யலாம்னு மத்திய அரசு ஆணை வெளியிட்டிருந்தாங்க. நோய்த் தொற்றால பாதிக்கப்பட்ட எனக்கு மீண்டும் அலுவலகத்திற்குப் போக கொஞ்சம் அச்சமா இருந்ததால அந்த ஆணையைக் குறிப்பிட்டு வீட்டிலிருந்து பணிசெய்ய அனுமதி வேண்டி என்னோட மேனேஜருக்கு மின்னஞ்சல் அனுப்பிட்டு செல்போனிலும் கூப்பிட்டு சொன்னேன். அவரும் சரி நான் மேலதிகாரிக்கு ஃபார்வேட் செய்றேனு சொல்லிட்டாரு. இரண்டு நாள் கழிச்சி அவரே எனக்கு ஃபோன் பண்ணி, அலுவலகத்துல ஆளில்லாததால உங்கள பணிக்கு வரச்சொல்லிட்டதா சொன்னாரு. நானும் அக்டோபர் முதல் வாரத்துல இருந்து பணிக்கு போக ஆரம்பிச்சிட்டேன்.
அன்னையில இருந்து என்னோட டேபில்ல சேனிட்டைசர் எப்பவும் இருக்கும். கைக்கு க்லௌஸ் போட்டு பணி செய்ய முயற்சி பண்ணி பார்த்தேன். க்லௌஸ் விரலோட விரலா ஒட்டி கச்சுனு இருந்ததால ஓரளவுக்கு கீபோர்ட நல்லா பயன்படுத்த முடுஞ்சுச்சு. ஆனா கஸ்ட்டமரோட பாஸ்புக்க வாங்கி ப்ரிண்ட் போட்டுக்கொடுக்க இடஞ்சலா இருந்துச்சு. ஏனா, பாஸ்புக்குல ப்ரிண்ட் பண்ண பக்கம் எது ப்ரிண்ட் பண்ணாத பக்கம் எதுங்குறத தடவிப்பார்த்துதான் கண்டுபிடிக்கனும். அதுனால க்லௌஸ் போடுரதில்ல. அதுக்குப் பதிலா அப்பப்ப சேனிட்டைசர் போட்டுக்குறேன். கழிவரையைப் பயன்படுத்திட்டு கைகளை ஹாண்ட் வாஷ் போட்டு கழிவிடுரேன். தொடர்ச்சியா எப்பவும் சுடுதண்ணி குடிச்சுவரேன். வீட்டுக்கு வந்தவுடனே போட்டிருந்த ட்ரெஸ்ச கழட்டி தனியா ஒரு பக்கெட்டுல போட்டுட்டு, ஒரு குளியலையும் போட்டுட்டு, மாஸ்கையும் கையோட துவச்சிப் போட்டுடுறேன். அப்புறம் இயற்கையான காத்த சுவாசிக்கிறதற்காக இரவு தூங்குற வரைக்கும் பெரும்பாலும் பாள்கனியிலயோ மொட்டமாடியிலயோதான் இருப்பேன்.
ஒரு முக்கியமான விஷயத்த சொல்ல மறந்துட்டேன். சென்னை ஆவடில தீனதயாலன்ங்குற ஒரு அண்ணன் வீட்டிற்குத் தேவையான பொருட்களை தயாரித்து வியாபாரம் செஞ்சிக்கிட்டிருக்காரு. இவர் பார்வைக் குறைபாடுள்ளவருங்குறதைத் தெரிவிச்சிக்கிறேன். இவருடைய பொருட்களுல எங்களுக்கு எப்பவும் ரொம்ப உதவியா இருப்பது மூலிகைத் தேநீரும், தைலமும். இத கொரோனாவுக்கு முன்னாடி இருந்தே பயன்படுத்திக்கிட்டு இருக்கோம். 21 மூலிகைகளைக் கொண்டு மூலிகைத் தேநீர்ப் பொடியைத் தயாரித்திருக்கிறாரு. செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய், பச்சைக் கற்பூரம், ஓமம் போன்ற இயற்கைப் பொருட்களை வைத்து தைலம் செய்திருக்கிறாரு. இந்த இரண்டு பொருட்களும் சலி, தலைவலி, மூக்கடைப்பு, தொண்டைக் கரகரப்பு போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருந்துச்சு. கொரோனாவால பாதிக்கப்பட்டிருந்தப்ப இந்த இரண்டு பொருட்களும் ரொம்ப உதவியா இருந்துச்சு. இவரைப் பத்தி தனியாவே ஒரு நேர்காணல் செஞ்சி விரல்மொழியருக்கு கொடுக்கனும்னு நினச்சிருந்தேன். பணிச்சூழலுல மறந்துட்டேன். யாருக்காவது இந்தப் பொருட்கள் வேணும்னா 9444352282 என்ற எண்ணுல தீனா அண்ணனைத் தொடர்புகொள்ளுங்க.
ஒருவழியா கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுட்டேன். இந்த ஊசிய போட்டதும் ஒன்னும் தெரியலை. அன்று இரவுல இருந்து அதிகப்படியான குளிர்ஜுரம், உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பயங்கரமான வலி இருந்துச்சு. உடம்புல எத்தன ஜாயிண்ட் இருக்குனு அப்பதான் தெரிஞ்சிச்சு. தொடர்ந்து நாலு வேல மாத்திரை போட்டதும் சரியாப்போயிடுச்சு. மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடுறதுல முன்னுரிமைக் கொடுக்கனும்னு சென்னை உயர்நீதிமன்றமும் சொல்லிடுச்சு. மத்திய அரசும் ஆணைப் போட்டுடிச்சு. ஆனா ஊசிப்போடுற இடத்துலயும் போராடிதான் போடவேண்டியிருக்கு. 45 வயதுக்கு மேற்பட்டவங்களுக்கு மட்டுந்தான் போடச்சொல்லி உத்தரவு வந்திருக்கு. மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுக்கச் சொல்லியிருக்கே தவிர வயது வரம்பைக் குறைக்கலைனு ஊசிப்போட மறுக்குறாங்க. பணியிட அடையாள அட்டையைக் காட்டியும், அவங்க கொடுக்குற படிவத்துல மேனேஜரிடம் கையெழுத்து வாங்கிட்டு வந்து கொடுத்தும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டிய நிலை இருக்கு. அரசுப் பணியில் இருக்குறவங்க இதையெல்லாம் செய்யமுடியும். மற்ற பார்வையற்றோரோட பாதுகாப்பு நிலை இன்னைக்கும் கேள்விக்குறியாதான் இருக்கு.
இனியாவது தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளோட நிலையைக் கருத்தில்கொண்டு சில முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
கொரோனா பரிசோதனை செய்வதற்கு முன் பூர்த்தி செய்யப்படும் படிவத்தில் தாங்கள் மாற்றுத்திறனாளியா, எவ்வகை மாற்றுத்திறனாளி என்ற வினாக்கள் இடம்பெற வேண்டும். இந்த வினாக்கள் இடம்பெருவதன் மூலம் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் ஓரளவேனும் அவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த முடியும்.
கொரோனாவால் பாதிக்கப்படும் பார்வையற்றோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் நோய் தொற்றால் பாதிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு கொரோனா முகாம் மற்றும் மருத்துவ மணைகளில் அனைத்து அடிப்படை வசதிகளும் எளிதில் அனுகும் வகையிலான சிறப்பு வார்டுகளை ஏற்படுத்த வேண்டும்.
18 வயது பூர்த்தியான அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உடனடியாக தடுப்பூசி வழங்க உத்தரவிட வேண்டும்.
இதுபோன்ற அடிப்படைத் தேவைகளை அரசு உடனடியாக நிறைவேற்றினாலே நாம் பெருமளவு பாதுகாக்கப்படுவோம். அதே நேரத்தில் நாம் விழிப்புணர்வுடனும், மிகுந்த பாதுகாப்புடனும், முக்கியமாக நோய்த்தொற்று ஏற்பட்டால் சிறிதளவும் பயமில்லாமல் தைரியமாக நம்பிக்கையோடு சிகிச்சை மேற்கொண்டால் நோயிலிருந்து விரைவாக விடுபட்டுவிடலாம்.
கட்டுரையாளர் சேதுபாண்டி |
(கட்டுரையாளர் இந்தியன் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவரது வலைப்பக்கம்: www.sethupandi.blogspot.in
தொடர்புக்கு: pandiyaraj18@gmail.com
பாண்டியராஜ் சார் உங்கள் அனுபவத்தை தெளிவாக கூறியுள்ளீர்கள் இது பலருக்கு மன தைரியத்தை தரும் என்று நம்புகிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருப்போம்.
பதிலளிநீக்குகொரோனாவால் பாதிக்கப்பட்டால் எந்த நிலைமை ஏற்படும் எவ்வளவு கஷ்டம் இருக்கும் என்கிற விளக்கத்தை கொடுத்தார்கள் மிகவும் அருமையாக இருந்தது எப்படி காத்துக் கொள்வது எப்படி கூற அவரும் என்கிற சில பல கருத்துக்களையும் கூறினார்கள் அவருடைய அனுபவம் எங்களுக்கு பாடமாக இருக்கிறது நன்றி
பதிலளிநீக்குஅருமையான அனுபவப் பதிவு. நோய்த்தொற்று வராமல் இருக்கத் தேவையான விழிப்புணர்வு வேண்டும். வந்துவிட்டால் அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை உங்களின் பகிர்வு தெளிவாக உணர்த்துகிறது.
பதிலளிநீக்கு