எனக்குப்பிடித்த பாடல்: நான் வேண்டிப் பெற்ற சிலுவை - ரா. பாலகணேசன்

      தமிழ்த் திரைப்படங்களில் இன்றியமையா அம்சம் பாடல்கள். திரைக்கதையின் கனத்தை அடர்த்தியாக்கவும் அல்லது இலகுவாக்கவும் பாடல்கள் திரைப்படங்களில் இடம்பெறுகின்றன.

      சில பாடல்கள் அழ வைக்கும்; சில பாடல்கள் மனதை இலகுவாக்கும்; சில பாடல்கள் தன்னம்பிக்கை அளிக்கும்; சில நம்மை உசுப்பேற்றும். இப்படி உணர்வுகளைப் பாடல்கள் கடத்திக் கொண்டிருக்கும்போது, வித்தியாசமாய் சில பாடல்கள் ஒரு கதையையே சொல்லிவிடும். அப்படி ஒரு பாடல்தான் இது.

பாடல்: பெண்ணே! பெண்ணே! என்னாச்சு?

திரைப்படம்: தென்றல்

வரிகள்: தாமரை

இசை: வித்யாசாகர்

குரல்: ஷ்ரேயாகோசல்

 

      ஆதிகால மனிதர்கள் பெண்களை உயர்வாக மதித்தனர். அக்காலத்தில் பெண்கள் இனக்குழுக்களின் தலைவர்களாகவும், இன அடையாளங்களாகவும், தெய்வங்களாகவும் வழிபடப்பட்டனர். அதற்கு முக்கியக் காரணம், அவர்களிடமிருந்த தாய்மை. அக்கால ஆண்கள் அதை அதிசயமாகவே பார்த்தனர். காலம் செல்லச் செல்ல அவர்களின் ஆபரணச் சங்கிலி அடிமைச் சங்கிலி ஆனது. சென்ற நூற்றாண்டில்உங்கள் அடிமைத்தனத்திற்கு உங்கள் கருப்பைகளே காரணம்என்று பெரியார்பெண் ஏன் அடிமையானாள்?’ நூலில் குறிப்பிட்டிருப்பதை அவ்வளவு எளிதாகப் புறந்தள்ளிவிடமுடியாது.

ஆனாலும், அன்று முதல் இன்று வரை பெண்மையின் உச்சமாக, பெரும் பேறாக  தாய்மையே கருதப்படுகிறது. அதுவே ஒரு பெண்ணின் வாழ்வின் முழுமை என்று நம்பப்படுகிறது. அப்படித் தாய்மை எனும் பேறு பெற்ற ஒருத்தி மகிழ்ச்சியில் திளைக்கிறாள் இப்பாடலில்.

            தான் அடைந்த தாய்மைக்காக மட்டுமல்ல; அது தன் ஆசை, காதல், ஏக்கம் என்று எல்லாமும் நிறைவேறியதன் சாட்சியான மகனைத் தந்தது என்பதற்காக. உலகமே பழித்துத் தூற்றினாலும் தன் மனதிற்கு மகிழ்வான ஒன்றை மேற்கொண்டதன் விளைவு அல்லவா இக்குழந்தை!

      இந்த மகிழ்ச்சி இவளைத் தவிர வேறு யாருக்கும் புரியாது; பிடிபடாது. என் மனதிற்குப் புரிந்தாலும் பகுத்தறிவிற்குப் பிடிக்காது; புரியாது. ஆனாலும் இவள் மகிழ்ச்சியாய் இருக்கிறாள் என்பதே உண்மை.

இப்படித் தொடங்குகிறாள்

பெண்ணே! பெண்ணே! என்னாச்சு?

ஏனிந்த உற்சாகப் பெருமூச்சு?” என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டு, அதற்கான விடை அவளுக்குத் தெரியுமென்றாலும், நமக்குப் புரியவைக்கிறாள்.

      இவள் மகிழ்ச்சியின் அளவைப் பாருங்கள்.

வெள்ளத்தில் மீனானேன்; வேகத்தில் மானானேன்; கவி பாடும் காற்றானேன்; கரையில்லா ஊற்றானேன்”.

      இந்த மகிழ்ச்சிக்குக் காரணம்தான் என்ன? முதல் சரணத்தில்தான் அவள் வாழ்வின் இருண்ட பக்கங்கள் விரிகின்றன.

என் சோட்டுப் பெண்களெல்லாம் வாழ்க்கப்பட்டுப் போகையிலே

எட்டநின்று கண் விரிய சன்னல்வழி பார்த்திருந்தேன்என்று தன் கதையைச் சொல்லத்தொடங்குகிறாள்.

            கதையாய் ஆண்டாளை எல்லோரும் படித்தார்; அவளாய் வாழ்கின்ற பெரும் பேறு அளித்தார்என்று அங்கதத்தோடு பாடுகிறாள். இந்த வலியைத் திடீர் திடீரென்று கொக்கரிக்கும் போராளிகளால் ஒருபோதும் புரிந்துகொள்ளவே முடியாது.

      ஆம். இவள் ஆண்டாள்தான். நிறைவேறாது என்று தெரிந்தும் தனது ஆசையோடே வாழ்ந்தவள். ஆனாலும், ஆண்டாள் சோதியில் (நெருப்பில்) ஐக்கியமானதைப் போலெல்லாம்  இவளுக்கு நிகழவில்லை. தான் விரும்பியவனோடே உடல் கலந்தாள்.

      சிறுவயதிலிருந்தே நாயகனின் ஆளுமை மீது பெருமயக்கம் கொண்ட இவள் அவனை விரும்பத் தொடங்கினாள். அவனுக்குத் தான் அது புரியவேயில்லை. வயது ஏற ஏற அவன் தன் பாதையில் பயணிக்கத்தொடங்கிவிட்டான். இவளோ அவன் சுவடுகளையே பின்தொடர முயன்றாள்.

      ஒருவழியாக இவளுக்கு வெற்றி கிட்டியது; ஆனாலும் அது மாறுபட்ட வெற்றி.

      தனக்கு நம்பகமான ஒருவரிடம், தன் பாலியல் இச்சையைத் தீர்க்க ஒரு பெண்ணை அழைத்துவருமாறு கூறுகிறான் நாயகன். அது அவன் இயல்பு. அதே நேரம் அவனைச் சந்திக்கவேண்டும் என்ற வேட்கையில் அவன் வீட்டுக் கதவைத் தட்டுகிறாள் இவள். அவன் இச்சையும் தீர்ந்தது; இவள் பேரேக்கமும் நிறைவடைந்தது. அவன் பணம் தந்து அனுப்பிவிட்டான்; இவள் அன்றைய நிகழ்வின் ஆதாரத்தை, நினைவைத் தன் மனதோடு வயிற்றிலும் சுமக்கத் தொடங்குகிறாள்.

      ஊரார் ஏசினாலும், இழிபார்வை பார்த்தாலும், தன் ஞாபகச் சின்னத்தைப் பெருமையோடு பெற்றெடுக்கிறாள்; வளர்க்கிறாள்.

தற்செயலாய் தன் நாயகனை இன்னொருமுறை இவள் சந்திக்க நேரும்போதுதான் வருகிறது இந்தப் பாட்டு.

  நகரும் நிழலோடு போராடி நின்றேன்

  நதியின் துளியொன்றை மகனாக வென்றேன்”.

      மேலே நான் சொன்ன செய்திகளை இந்த இரு வரிகளில்  இவள் சொல்லிமுடித்துவிட்டாள்.

      இவள் ஓரிடத்தில் தன்னை இப்படி அடையாளப்படுத்திக் கொள்கிறாள்.  நான் தீயைத் தின்ற சீதைஎன்று.

      தான் பெற்றெடுத்த மகன் குறித்து இவள் குறிப்பிடும் வரிகள் மிகத் தெளிவானவை.

என் கை\யில் கொஞ்சும் மழலை

நான் வேண்டிப் பெற்ற சிலுவைஎன்கிறாள்.

      எது எப்படியோ, அவள் பெற்றெடுத்த குழந்தையும், முதல் சரணத்தில் அவள் பாடும் கீழ்க்கண்ட வரிகளும் அவளை இந்த நனவுலகிலிருந்த காப்பாற்றிக் கனவுலகில் தொடரவைத்து, ஆறுதல் போதையில் மூழ்கடிக்கும்; மகிழ்ச்சியோடு வாழவைக்கும் என்று நம்புகிறேன்.

என் ஆசை நினைவை அள்ளி அள்ளி மேலே ஊற்றிக்கொள்வேன்

இனி இன்னோர் ஜென்மம் என்றால் கூட இதேபோல் வாழ்வேன்”.

      இவளது வாழ்க்கையை இலக்கியவாதிகள்ஒருதலைக் காதல்என்பர்; ஆன்மீகவாதிகள்இவள் விதிஎன்பர்; அக்கறை கொண்டவர்கள்அறியாமைஎன்பர்; ஆதங்கம் கொண்டவர்கள்பைத்தியக்காரத்தனம்என்பர்; ஒருசில முற்போக்குவாதிகள்அது அவள் உரிமைஎனலாம். யார் இதனை எப்படிக் கூறினாலும், இவள் மகிழ்ச்சியாய் இருக்கிறாள் என்பதில் எந்த மாறுதலும் இல்லை. இவள் மகிழ்ச்சியைத் தொலைவிலிருந்து பார்க்கும் நான் கண்ணீர் உகுக்கிறேன்; அருகில் செல்ல நேர்ந்தால், இவளோடு சேர்ந்து நானும் புன்னகை பூக்கத்தான் செய்வேன்.

 

      வித்யாசாகர் இசையில் என்னால் மறக்கமுடியாத பாடல்களில் இதுவும் ஒன்று. நிச்சயமாக தாமரை இயற்றிய பாடல்களில் மிக முக்கியமான பாடல் இது.

graphic கவிஞர் காமரை அவர்களின் படம்
கவிஞர் காமரை

       இசை சிறிது பிசகினாலும் வரிகளில் சிக்கலை ஏற்படுத்தும் அடர்த்தியான மொழிநடை. ‘விண்ணைத் தாண்டி வருவாயாபடத்தில்ஏன் இதயம்”, ‘அச்சம் என்பது மடமையடாபடத்தில்ராசாளிமுதலிய பாடல்களையும் இவர் இப்படித்தான் எழுதியிருப்பார். இசையமைப்போடு மிகச் சரியாகப் பொருந்தி நிற்கின்றன வரிகள்.

      அதோடு, மனிதர்களின் அக உணர்வுகளை, உள் மன  உணர்வுகளைப் பாடலாக்கித் தருவதில் தாமரை வல்லவர். தமிழ்த் திரையின் வெற்றிகரமான முதல் பெண் பாடலாசிரியரான இவர், ஒரு பெண்ணின் ஆழ்மன உணர்வுகளை மிகக் கவனமாக, நமக்கு உறைக்கும் வகையில் வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

graphic பாடகி ஷ்ரேயாகோசல் அவர்களின் படம்
பாடகி ஷ்ரேயாகோசல்

       பாடகி ஷ்ரேயாகோசலைப் பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்கமுடியுமா? தமிழைச் சிதைக்கும் ஹிந்திப் பாடகர்கள் மீது கடும் கோபத்தில் இருப்பவர்கள்கூட ஷ்ரேயாகோசல் என்றால் கொஞ்சம் புன்முறுவல் பூக்கத்தான் செய்வார்கள். ஆனாலும் இப்பாடலில் கவிஞர் தாமரையின் அடர்த்தியான வரிகளைப் பாடுவதில் ஷ்ரேயா மிகவும் சிரமப்பட்டிருக்கிறார் என்று தெரிகிறது. ‘வாழ்க்கப்பட்டுஎன்ற வார்த்தை பாடாய்ப் படுகிறது.

படி தாண்டும் கரை தாண்டும் மடை தாண்டும் தடை தாண்டும் நதியாக நதியாக ஆனேனே!

கடலுக்கும் மணலுக்கும் ஓயாத தூதாக நடைபோடும் அலையாக ஆனேனே”.

இந்த வரியெல்லாம் ஷ்ரேயாவின் திறமைக்குச் சவாலாய் அமைந்திருக்கிறது.

      மொத்தத்தில் இனிய பாடல் இது

கேட்டுப்பாருங்கள்.

தமிழ் சினிமாவில் மாறுபட்ட படைப்புகளைத் தந்த தங்கர் பச்சான் இயக்கத்தில் 2004-இல் வெளியான திரைப்படம்தென்றல்’. நான் இன்னும் இந்தப் படத்தைப் பார்க்கவில்லை. படத்தில் இருக்கும் பாடல்களே படத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும். வாய்ப்பிருக்கும்போது இப்படத்தையும் பாருங்கள்.

graphic கட்டுரையாளர் பாலகனேசன் அவர்களின் படம்
கட்டுரையாளர் பாலகனேசன்

 தொடர்புக்கு: balahganesan2285@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக