வரதராஜன் |
உலகம் முழுவதும் கொரோனா தனது இரண்டாவது முகத்தைக் காட்டத் தொடங்கி நம்மை அச்சுருத்தி வறுகிறது. அது ஆல்ஃபா, பீட்டா, டெல்ட்டா, டெல்ட்டா பிலஸ் என நான்கு வகையான மாற்றங்களைக் கொண்டிருக்கிறதென வல்லுநர்கள் கூறுகின்றனர். இதில் இந்தியாவில் பரவும் வைரஸ் உருமாறிய டெல்ட்டா வகை எனத் தெரிவிக்கிறார்கள். உத்திரபிரதேசம், குஜராத், போன்ற மாநிலங்களில் இறந்தவர்களைப் புதைக்க இடமில்லாத நிலை முதலாம் அலையில் இத்தாலி நாட்டிற்கு ஏற்பட்ட நிலைமையை நமக்கு நினைவூட்டுகிறது.
மகாரஷ்ட்ரா, தமிழ்நாடு, குஜராத், உத்தரபிரதேசம் முதலியன இந்தியாவில் கொரோனாவின் ஹாட்ஸ்பாட் எனச் சொல்கின்றனர்.. இதை எழுதிக் கொண்டிருக்கும் வேலையில் தமிழகத்தின் ஒரு நாளைய பாதிப்பு 25000மாக இருக்கிறது. நிலமை இவ்வாறு இருக்க,ஏப்ரலில் மட்டும் பத்திற்கும் மேற்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் இறந்துள்ளார்கள். இதில் ஏப்ரல் 13-2021 அன்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நிருவனர்களுள் ஒருவரும், காரைக்குடி அழகப்பா கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியருமான திரு. வரதராஜன் கொரோனாவிற்குப் பலியானார்.
பிறப்பும் கல்வியும்:
மலைசாமி மற்றும் மயில் தம்பதியினருக்குக் கடைசி மகனாக பிறந்தவர்தான் இந்த வரதராஜன். அவரது தொடக்கக் கல்வியை மதுரை சிம்மக்கல்லில் உள்ள மங்கையர்க்கரசி பள்ளியில் முடித்தார். அதன் பிறகு அவருக்குப் பார்வைகுறையத் தொடங்கியதும் ஆறாம் வகுப்பு முதல் மதுரையில் உள்ள இந்தியப் பார்வையற்றோர் சங்கம் IABயில் படித்தார். தனது இளங்கலைப் பட்டத்தை அமெரிக்கன் கல்லூரியிலும், முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டங்களை மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திலும் முடித்தார். பேராசிரியருக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்விலும் தேர்ச்சிப் பெற்றுள்ளார். தனது கல்வியியல் பட்டயப்படிப்பைச் சென்னையில் உள்ள இந்திரா அறக்கட்டலையில் முடித்தார். பின்பு காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தற்காலிக பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார். பவுன் என்கின்ற பார்வைமாற்றுத்திறனாளியைத் திருமனம் முடித்தார். இவர்களுக்குப் புகழ்ராஜ் என்கின்ற அழகான ஆண்மகன் பிறந்து 17 மாதங்கள் இருக்கும் பொழுதே, திரு. வரதராஜன் கொரோனா காரணமாக மரணமடைந்திருக்கிறார்.
இந்திய பார்வையற்றோர் சங்கமும் வரதராஜனும்;
தனது ஆறாம் வகுப்பு முதலே திரு வரதராஜனின் பார்வையற்றோர்களுடனான வாழ்க்கைக் கணக்கு ஆரம்பித்தது. இங்கிருந்துதான் பார்வையற்றவர்களுக்கான இவரது சேவை பயணமும் தொடங்கியது. பள்ளிப் படிப்பின் போது அவருக்கு கணிதத்தின் மீதிருந்த காதல் அவர் சதுரங்கத்தின் மீது கவனம் குவிக்கக் காரணமாக இருந்தது. அன்று அவர் கற்றுக்கொண்ட கணிதம் அவரோடு கடைசிவரை பயணித்தது எனச் சொல்லலாம். IABயில் படிக்கும் பொழுதெ சதுரங்கம், கிரிக்கெட், கைப்பந்து போன்ற விளையாட்டுகளில் இவர் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். IAB விடுதியில் தங்கி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை படித்துக் கொண்டிருக்கும்போதே IAB Sports Club-இல் தலைவர், செயலாளர் போன்ற பதவிகளிலிருந்து சக மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிக்க தொடங்கிவிட்டார். இந்நிகழ்வுதான் அவர் நண்பர்களோடு இணைந்து பிற்காலத்தில் பார்வையற்றோருக்கான தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை நிறுவ காரணமாக அமைந்தது.
பார்வையற்றோரைப் பொருத்தமட்டில் அதிக நண்பர்களைச் சேர்த்துக் கொண்டவர்கள் தங்களது வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சியைக் காண்பார்கள் என்பது எழுதப்படாத விதி. இதுதான் திரு வரதராஜன் வாழ்க்கையிலும் நடந்தது. அவருடன் தங்கி கல்லூரியில் பயின்ற பெரும்பான்மையானோரின் காலை உணவு வரதராஜன் வீட்டில்தான் இருந்தது. காரணம், அவ்விடுதியில் காலை உணவை 6 மணிக்கே தந்து விடுவார்கள். அந்நேரத்தில் உணவைச் சாப்பிட முடியாது என்பதனால் அவர்களது காலை உணவு அங்கு அமைந்தது. அவர் வீட்டில் இருப்பவர்களும் அவர் நன்பர்களை ’மயனே’ என்றுதான் அழைப்பார்கள். சில நேரங்களில் அவரது வீடு நன்பர்களின் கூடாரமாகவும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் மீட்டிங் அரங்கமாகவும் இருந்தது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் வரதராஜனும்:
பள்ளி காலத்திலேயே இவர் விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அப்போதிலிருந்து மாநிலம், தேசிய அளவிலான சதுரங்கம், கிரிக்கெட் போன்ற போட்டிகளிலும், மாநில அளவிலான கைப்பந்து போட்டிகளிலும், தேசிய அளவிலான தடகள போட்டிகளிலும் கலந்துகொண்டு பல பரிசுகளைப் பெற்றார்.
இதன் நீட்சியாக தமிழ்நாட்டில் பார்வையற்றோர்களின் கிரிக்கெட் ஆர்வத்தை அதிகரிக்க பார்வையற்றோர்களுக்கான தமிழக கிரிக்கெட் சங்கத்தை வரதராஜன் தன் நண்பர்களோடு இனைந்து தொடங்கினார். இதுதான் இந்திய பார்வையற்றோருக்கான கிரிக்கெட் சங்கத்திற்கு முன்னோடியாக இருந்தது எனக் கூறலாம்.
அப்போது அச்சங்கத்தின் பொதுச்செயலாலராகப் பணியாற்றினார். அவ்வேலையில் இச்சங்கம் அசூர வளர்ச்சி பெற்றது. தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெங்கும் பார்வையற்றோருக்கான கிரிக்கெட் பரவியது எனச் சொல்லலாம். பழகுவதர்க்கு மிகவும் எலிமையானவரான இவருக்கு நண்பர்கள் அதிகம். இவர்கள் உதவியோடுதான் சங்க வேலைகளைச் செய்தார். இவர் பொதுச்செயலாலராக இருந்தபோது இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் இடையிலான சர்வதேச T20 போட்டியையும், 2 தென்மண்டல அளவிலான போட்டிகளையும் வெற்றிகரமாக நடத்தியுள்ளார். மேலும் இச்சங்கம் தொடங்கியதற்குப் பிரகுதான் தமிழ்நாட்டில் பார்வையற்றோர் கிரிக்கெட் அணி 16ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்புவரை பத்திற்கும் குறைவான அணிகளே தமிழகத்தில் இருந்தன.
அதன் பிறகு தனது பணிச்சுமை காரணமாக செயற்குழு உறுப்பினராக இருந்து வந்த இவர், கடைசி 3 ஆண்டுகளாக தேர்வுக்குழுவில் பணியாற்றி வந்தார். இத்தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட அணி தேசிய அளவில் நடைபெறும் பார்வையற்றோருக்கான நாகேஸ் கோப்பையில் இருமுறை காலிருதிக்குச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர ஒரு பயிற்சியாளராக பொறுப்பெடுத்துக் கொண்டு தமிழக வீரர்களைத் தமிழகம் தாண்டி மும்பை போன்ற நகரங்களுக்கும் அழைத்துச் சென்றிருக்கிறார்.
IAB பழைய மாணவர்கள் அமைப்பு:
இந்தியப் பார்வையற்றோர் சங்கத்தில் படித்தவர்களால் தங்கள் சக நண்பர்களின் நலனுக்காக சென்ற வருடம் சமூக ஊடகமான கட்செவியில் [Whatsapp] உருவாக்கப்பட்டது இந்தியப் பார்வையற்றோர் சங்க பழைய மாணவர்கள் அமைப்பு. இதன் தலைவராக திரு. வரதராஜன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த அமைப்புக் கொரோனா முதல் அலையின் போது அங்கு படித்த அரசு பதவியில் இருப்பவர்கள் தங்கள் சகநன்பர்களுக்கு உதவ முன்வந்தார்கள். அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களிடமும் நன்கொடை பெற்று வரதராஜனும் அவரது நன்பர் சரவணகுமாரும் மதுரையில் வசித்த பலரின் வீடுகளுக்குச் சென்று நிவாரன பொருட்களை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர வரதராஜன் தனியாகவும் அவரது நன்பர்களுக்கு சத்தமில்லாமல் உதவியிருக்கிறார்.
வரதராஜனுக்குப் புகழஞ்சளி:
இப்படி பலருக்கு உதவிய வரதராஜனுக்குத் தமிழ்நாடு பார்வையற்ற கிரிக்கெட் சங்கமும் IAB பழைய மாணவர்கள் குழுவும் இனைந்து கடந்த 19/04/2021 அன்று இறங்கல் கூட்டம் ஒன்றை சூம் அரங்கில் ஏற்பாடு செய்து நடத்தினார்கள். அங்கு அவரது நன்பர்கள், பணியாற்றிய பணியாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டு வரதராஜன் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்கள். இதில் நானும் கலந்து கொண்டேன்.
முனைவர் துரை |
பட்டப்படிப்பை முடித்ததும் அடுத்து என்ன செய்வது என்று குழம்பியவர்களுக்குக் கல்வியியல் கல்லூரியில் சேர்த்துக் கட்டனத்தையும் செலுத்தியிருக்கிறார். அவர்கள் எல்லோரும் இப்பொழுது அரசுப்பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார்கள். தான் பணியாற்றிய கல்லூரியில் தனக்கென்று ஒரு மாணவப்பட்டாளத்தையே கொண்டிருந்தார் என்பதை நான் ஒருமுறை அவரைக் காண அவர் பணியாற்றிய கல்லூரிக்குச் சென்றபோது தெரிந்துகொண்டேன்., அதையே அவரது துறைத்தலைவர் முனைவர் துரை அவர்கள் அக்கூட்டத்தில் கூறியிருந்தார்.
K. ரமேஷ் |
ஒருமுறை கிரிக்கெட் விளையாட மகாராஷ்ட்ரா சென்றிருந்தபொழுது அவருக்கு இருந்த குரட்டை பழக்கத்தால் எங்கே வீரர்களின் உறக்கம் கெட்டுவிடுமோ என அஞ்சி அன்று இரவு ரூமிற்கு வெளியே உறங்கினார் எனத் தமிழக பார்வையற்ற கிரிக்கெட் அணித்தலைவர் K. ரமேஷ் பகிர்ந்துகொண்டார். அந்த அளவிற்கு அவர் வீரர்களை நேசித்திருக்கிறார்.
தொழில் நுட்பம்தான் பார்வையற்றோர்களின் கண்ணாக இனி இருக்கப்போகிறது என்பதைப் புரிந்துகொண்ட வரதராஜன் அவர் இறக்கும்வரை அதைக் கற்றுக்கொண்டே இருந்தார். அவர் இறப்பதற்கு முன்புவரை போராடிக்கொண்டே இருந்தார். கடைசியாக கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் பல கோரிக்கைகளை முன்னிருத்தி நடத்திய போராட்டத்தில் 2 நாட்கள் கலந்துகொண்டார்.
என்னிடம் பேசும் பொழுது அவரின் அக்கா மகளை போட்டித்தேர்வுக்குப் படிக்கவைப்பதைப் பற்றி கூறிக்கொண்டே இருப்பார். ”நீ படிக்கும் முறையைச் சொல்லிக் கொடுடா” என்று என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். அவர் இறப்பதற்கு சரியாக 10 நாட்களுக்கு முன் எனக்குத் தொலைபேசி செய்து நான் படிக்கும் முறையை அப்பெண்ணைக் கேட்கவைத்து தன் நன்பர்களுக்கு எவ்வாறு ஒரு வழிகாட்டியாய் இருந்தாரோ அதுபோலவே அப்பெண்ணிற்கும் இருந்தார்.
இவ்வாறு வரதராஜன் தனது வாழ்க்கை முழுவதும் பார்வையற்றோர் சமூக முன்னேற்றத்திற்காக வாழ்ந்தார். இறுதியாக பிறருக்காக அரசை எதிர்த்துப் போராடத் தெரிந்த வரதராஜன் கொரோனாவை எதிர்க்க மறந்துவிட்டு 13 ஏப்ரல் 2021 அன்று மறைந்தார்.
இனி அவரது நன்பர்களுக்கு ஒரு மாஸ்டர், மருத்துவர், அண்ணன், என எல்லாமுமாக இருந்த அவர் இனி இல்லை என்பது வருத்தம். அவரது ஆன்மா அமைதியாக இளைப்பாரட்டும்.
கட்டுரையாளர் பாலகிருஷ்ணன் |
கட்டுரையாளர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டம் பெற்றவர்.
தொடர்புக்கு: m.bala10991@gmail.com
great content making bala, miss you varathana
பதிலளிநீக்குgreat content making bala, miss you varathana.
பதிலளிநீக்கு