தொழில்நுட்பம்: இந்திய மொழிகளில் வாசிப்பு, தலையைச் சுற்றும் வொயர், 30000-க்கு ஒர்த்தானதா ஸ்மார்ட் விஷன்? ரா. பாலகணேசன், பொன். குமரவேல்

graphic SmartVision A dream for visually impaired என்ற வாசகத்துடன் ஒரு சிறுவன் அந்த SmartVision கண்ணாடியை அணிந்துள்ளப் படம்

       பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு வரமாய் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் சேர்க்கை நுன்னறிவு தொழினுட்பத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட் விஷன் ஸ்பெக்ட்டகல்ஸ் (Smart Vision Spectacles ) என்ற கருவி விற்பனைக்கு வந்திருப்பதாக அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் தொடர்ந்து முழங்கிவருகின்றன.   

            நீங்கள் இந்தக் கட்டுரையைப் படித்துக்கொண்டிருக்கும் நாளில் கூட ஏதோ ஓர் ஊடகத்தில் செய்திக் கட்டுரையாகவோ, செய்தித் தொகுப்பாகவோ இக்கருவி இடம்பெறக்கூடும்.  இந்த அளவில் பிரபலமாகியிருக்கும் ஸ்மார்ட் விஷன் கருவி குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் விரல்மொழியருக்கும் ஏற்பட்டது. அதனால் 28-08-2021 சனிக்கிழமை அன்று அரவிந்த் கண் மருத்துவமனைக்குச் சென்றது விரல்மொழியர் குழு.

graphic ரா. பாலகணேசன், பொன். சக்திவேல், பொன். குமரவேல் ஆகியோர் அடங்கிய படம்

       இதழாசிரியர் ரா. பாலகணேசன், இணையாசிரியர் பொன். சக்திவேல், தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளர் பொன். குமரவேல் ஆகியோர் அங்கு சென்றோம். எங்களோடு இணையத் தென்றல் அமைப்பின் சார்பாக சாம்கார்த்திக், திரு. கேசவராஜ், திருமிகு. விஜயலட்சுமி ஆகியோரும் அங்கு வந்து சேர்ந்தனர். எங்களோடு தமிழ்நாடு பார்வையற்றோர் விளையாட்டுச் சங்கத்தின் தலைவர் திரு. V. தியாகராஜன், கல்லூரி மாணவர் பிரசாந்த் ஆகியோரும் இணைந்து கொண்டனர். கேசவராஜ், விஜயலட்சுமி ஆகியோரின் தந்தையாரான திரு. ராமதாஸ் அவர்களும், சக்திவேல், குமரவேல் ஆகியோரின் தம்பியான அன்புக்கண்ணன் அவர்களும், குறைபார்வை உடையவரான விக்னேஷ் அவர்களும் வழிகாட்டிகளாக வந்தனர்.

      காலை 11 மணியளவில் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு நாங்கள் சென்று சேர்ந்தோம். இணையத் தென்றல் அமைப்பின் சாம்கார்த்திக் ஏற்கெனவே தொடர்புடையவர்களிடம் பேசியிருந்தாலும், சந்திப்பிற்கான நடைமுறைகள் தொடங்குவதற்குச் சற்று தாமதமாகத்தான் செய்தது. ஸ்மாட் விஷன் கண்ணாடியை மருத்துவமனையின் லோவிஷன் பிரிவில் செயல் விளக்கத்தோடு காட்சிப்படுத்தி இருந்தார்கள்.

            நீங்கள் முதல் முதலில் இப்பிரிவிர்க்குள் செல்ல வேண்டுமானால் 100 ரூபாய் உறுப்பினர் சேர்க்கை பதிவு கட்டனமாக செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொண்டு ஸுமாட் விஷனைப் பார்வையிடச் செல்லுங்கள்.

            மருத்துவமனையில் இருக்கும் லோவிஷன் பிரிவிற்கு நாங்கள் இரு குழுக்களாக தனித்தனியே அழைக்கப்பட்டோம். மருத்துவமனை ஊழியர்கள் இருவர் எங்களுக்கு ஸ்மார்ட் விஷன் குறித்த செயல்முறை விளக்கத்தை வழங்கினர். அவர்களில் ஒருவர் பார்வை மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி இயங்குகிறது இந்த ஸ்மார்ட் விஷன்?

      பாஸ்ட்டனைச் சேர்ந்த விஷன் எய்ட் (Vision-Aid) மற்றும் பெங்களூரைச் சேர்ந்த ஸ்மார்ட் ஹெல்த் டெக்னாலஜியும் (Smart Health Global Technologies) இணைந்து தயாரித்திருக்கும் கருவிதான் ஸ்மார்ட் விஷன்.

      வழக்கமாக நாம் அணியும் கண்ணாடியில் சில கருவிகளைப் பொறுத்தினால் அது ஸ்மார்ட் விஷன் ஆகிவிடுகிறது. கண்ணாடியில் நம் பார்வைக் கோணத்திற்கு நேராக ஒரு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. இடது கண் பகுதியிலிருந்து இடப்புறம் அமைந்திருக்கும் கண்ணாடிப் பட்டையில் முக்கியப் பொத்தான்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கண்ணாடிப் பட்டை என்று நான் சொல்வது கண்ணாடி அணிவதற்கு ஏதுவாக காதின் மேல் வைக்கப்படும் பொருள்.

      இடக் கண் பகுதியைத் தாண்டிக் கண்ணாடிப் பட்டை தொடங்கும் பகுதியில் சாதனத்தை இயக்குவதற்கும் அணைப்பதற்குமான (on, off) பொத்தான் இருக்கிறது. அதைத் தொடர்ந்து ஐந்து பொத்தான்கள் நமது இடது காது பகுதியில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் முதல் எழுத்துகள் பிரெயிலில் தரப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

      முதலாவதாக T-things around you. நம் கேமரா கோணத்திற்கு நேராக இருக்கும் பொருட்களை, நபர்களை அறிவிக்கும். ஏற்கெனவே பதிவு செயப்பட்ட நபர்களாக இருந்தால் அவர்களின் பெயரை அறிவிக்கும். இல்லையென்றால், அவரது தோற்றம் குறித்த தகவலை வழங்கும்.

      அடுத்தது R-reading. இந்தப் பொத்தானை இயக்குவதன் மூலம் தமிழ் உட்பட 73மொழிகளில் உள்ள அச்சிடப்பட்ட எழுத்துகளைப் படிக்கலாம்.

      அடுத்தது w-walking mode. இதை இயக்கி நாம் நடமாடும் போது இருக்கும் தடைகளை அறிந்து கொள்ளலாம்.

அடுத்துத F-face recognition. புதிதாக நாம் பார்க்கும் ஒருவரை இந்தப் பொத்தானை இயக்கி நாம் பதிவு செய்து கொள்ளலாம்.

      அடுத்தது V-volume. ஒலியளவை அதிகரிக்கவும், குறைக்கவும் இது உதவும்.

      இத்தனை பொத்தான்களுக்குப் பிறகு இடது காதின் பின்புறம் கண்ணாடிப் பட்டை முடியும் இடத்திலிருந்து ஒரு வயர் வலது காதில் அமர்ந்திருக்கும் கண்ணாடிப் பட்டையோடு இணைக்கப்பட்டிருக்கிறது. வலது காதின் அருகே ஒரு ஸ்பீக்கர் இருக்கிறது. அதுதான் மேற்கண்ட கட்டளைகளுக்குச் செயல் வடிவம் கொடுக்கிறது.

      நமது அலைபேசியில் இருக்கும் இணைய இணைப்பின் துணைகொண்டே இக்கருவியை இயக்கமுடியும்.

நிறைகளும் குறைகளும்

      *இக்கருவி முழுக்க முழுக்க செயற்கை நுன்னறிவை அடிப்படையாக கொண்டு இயங்குவது இதன் முதல் சிறப்பு எனலாம்.

      *தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் படிக்கும் வசதியை ஏற்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது.

      *இதேபோன்ற பிற கருவிகளைக் காட்டிலும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட இருப்பதாகத் தெரிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கதே.

      *ஸ்பீக்கர் மிகக் கச்சிதமாக அமைக்கப்பட்டிருக்கிறது. வெளி ஒலிகளும் கேட்கும் அளவிற்கு அமைக்கப்பட்டிருக்கிறது. தேவைப்பட்டால் ஒலியளவைக் கூட்டவும், குறைக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது.

      *அலைபேசி இணைய இணைப்பு இல்லாமல் இக்கருவி இயங்கினால் அது இனைய வேகம் குறைவாக உள்ள கிராம பகுதிகளில் வசிக்கு என்னைப் போன்ற பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குப் பேருதவியாக அமையும்.

      *ஒரு செயலைச் செய்து கொண்டிருக்கும் பயனர் வேறொன்றைச் செய்வதற்கு முன் ஏற்கெனவே இயக்கத்தில் இருக்கும் செயலை அணைப்பதற்கு அதே பொத்தானை மீண்டும் தொடவேண்டியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

      *தலைக்குப் பின்புறமாகச் செல்லும் வயர் ஆபத்தானது. பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு அது சிக்கலை ஏற்படுத்தலாம். ஏதேனும் ஒரு பொருளில் அது சிக்கிக் கொள்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.

      *செயல்பாட்டு வேகம் மிகக் குறைவாக இருக்கிறது; அதை அதிகரிக்கலாம்.

      *பேசும் வேகத்தைக் கூட்டவும், குறைக்கவும் ஒரு பொத்தான் வைக்கப்பட வேண்டும். ஏனென்றால், இது மிக மெதுவான வேகத்தில் பேசுகிறது. இது தொடக்க நிலைப் பயனருக்குப் பயன்படலாம். பல செயற்கை திரைவாசிப்புக் குரல்களில் கரை கண்ட பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த வேகம் ஆமை வேகம்தான்.

      *73 மொழிகளில் உள்ள அச்சு எழுத்துகளை இக்கருவி வாசிக்கிறது. அதேபோல, நபர்களை அடையாளம் காண்பது, தடைகளை எடுத்துரைப்பது முதலிய செயல்பாடுகளையும் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தருமாறு செய்தால் இன்னும் சிறப்பானதாய் அமையும்.

      *இரண்டு காதுபக்கத்திலும் அமைந்துள்ள கருவியின் எடையைச் சற்றே குறைத்தால் கொஞ்ஜம் மகிழ்ச்சியோடு உலாவலாம்.

      *மின்களம், கேமரா முதலியவற்றின் செயல்பாட்டுத்திறன் குறித்து நாங்கள் கேட்டபோது, உரிய பதில் நிர்வாக தரப்பில் இருந்து கிடைக்கபெறவில்லை.

      *அவ்வளவு ஏன், இக்கருவியை உருவாக்கிய இரண்டு நிறுவனங்களின் பிரத்தியேக இனையதளங்களில் இருந்துகூட கருவி குறித்த ஹார்டுவேர் தகவல்கள் இடம்பெறவில்லை என்பது சற்று ஏமாற்றமே.

      *நிறைய ஊடகங்கள் இந்த முக்கிய முன்னெடுப்பைப் பதிவு செய்துவருகின்றன. ஆயினும், இந்தக் கருவி குறித்து நாம் மேலும் அறிந்துகொள்ள. தொலைபேசி எண் கேட்டபோதும், அரவிந்த் மருத்துவமனை எண்ணிற்குத் தொடர்புகொண்டுலோவிஷன்பகுதிக்கு இணைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளுங்கள் என்று நமக்கு அறிவுறுத்தினார்கள்.

ஒரு முக்கிய முன்னெடுப்பு

      இப்படி சில குறைபாடுகள் இருந்தாலும், இது நல்ல தொடக்கமே. மேற்கண்ட குறைகளை நாம் சுட்டிக் காட்டியபோது, “இது சோதனை முயற்சிதான். ஓரிரு மாதங்களுக்குப் பிறகு கருவி செயல்பாட்டிற்கு வரும் என்று பதில் வந்தது. ஆனால் சில பயனர்களுக்குப் பிற அமைப்புகளின் துணையோடு இலவசமாக வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறது 08-09-2021 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழ். இன்னும் மேம்படுத்தப்பட்டுக் கருவி வெளியாகுமானால் நமக்கு அது பயனளிப்பதாக அமையும்.

      கருவிக்கான விலை ரூ. 30000- ஒட்டி இருக்கும் என்று தெரிவித்தார்கள். இதேபோன்ற கருவிகள் லட்சம் ரூபாய் மதிப்பில் விற்பனைக்கு வரும்போது, உள்நாட்டுத் தேவை அறிந்து, சூழல் அறிந்து விற்பனை செய்ய முயன்றிருக்கிறது அரவிந்த் கண்மருத்துவமனை.

graphic அரவிந்த் கண்மருத்துவமனை லோகோ

       தமிழகத்தில் கண் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் முதன்மையான அமைப்பு அரவிந்த் கண் மருத்துவமனை. மேலும், மதுரை பார்வை மாற்றுத்திறனாளிகளின் மையமாகத் திகழ்வதற்கான அடிப்படையை அமைத்துத் தந்தது அரவிந்த் கண் மருத்துவமனை. பயனர்கள் மீதான அக்கறையோடு தயாரிக்கப்படும் கருவிக்கு, பயனர்களின் பங்கேற்போடு மெருகேற்றப்படும் கருவிக்கு நிச்சயமாய் ஒருபோதும் மதிப்பு குறைய வாய்ப்பில்லை.

      இக்கருவியை வடிவமைத்த இரண்டு நிறுவங்களின் பிரத்தியேக இனையதளங்கள்:

Vision-Aid, https://visionaid.org/

Smart Health Global Technologies: https://shgtechnologies.com/

 

தொடர்புக்கு: balaganesan22885@gmail.com

3 கருத்துகள்:

  1. தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை வெளியிட்டமைக்கு நன்றி.
    நிறைகுறைகளை சிறப்பாக ஆராய்ந்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. தெளிவாக விளக்கி உள்ளீர்கள் விடை தெரியாத பல கேள்விகளுக்கு இதில் விடை கண்டிருக்கிறேன்... நன்றி நண்பர்களே

    பதிலளிநீக்கு
  3. ஆன் ஆஃப் பொத்தான் நான் பார்த்த கருவியில் வலப்ப்க்கம் இருந்தது.

    பதிலளிநீக்கு